Loading

பிறை -6

 

தைரியம் மனதிற்குள் இருந்தாலும், புதிய இடத்தில், புதிய சூழலில் அதை எப்படி கையாளுவது என தெரியாமல், வீட்டை நினைத்து ஒரு பக்கம் பயம் மனதை கவ்வ, இப்போது இவனுக்கும் என்ன பதில் கூறுவது என தெரியாமல் திணறிக் கொண்டிருந்தாள் பிறைநிலா.

 

” பதிலை காணோம்.. அப்போ நீதான் தற்கொலை பண்ண அவளை தூண்டிருக்க ரைட் ” மேற்கொண்டு அவன் பேசிய பேச்சில் அப்படியே மயங்கி சரிந்திருந்தாள் பிறை.

 

” ஷீட்… ” என எரிச்சல் அடைந்தவன்.. வெளியே வந்து அங்குள்ள ஒரு மகளிர் காவலரை அழைத்து விஷயத்தை கூறி விட்டு, ஜீப்பை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.

 

எங்கே போனான், எதற்கு போனான், எப்போது வருவான், இவள் எப்போது இங்கிருந்து போவாள் என எதுவும் தெரியாது. பெண் காவலர் வந்து அவளை தண்ணீர் தெளித்து எழுப்பி , அருகில் இருந்த கதிரையில் அமர வைத்தார்.

 

” என்ன மா இப்படி மயங்கி விழுந்திட்ட “

 

” மேடம் சத்தியமா எனக்கு எதுவுமே தெரியாது மேடம்.. நான் ஒரே ஊர் அதான் பேசினேன் . ஆனால் சார் நான் தான் அந்த பொண்ணை சாக தூண்டினேன்னு சொல்லுறாரு ” என கூறியவளுக்கு கண்ணீரே வந்து விட்டது அவளுக்கு.

 

” பயப்படாத மா.. சார் விசாரிக்காம அப்படியெல்லாம் சட்டுன்னு முடிவெடுக்கிற ஆள் இல்ல.. அவரு கேஸ் விசாரிக்கிறதே வேற மாதிரி இருக்கும். ஆனால் உங்களை இப்படி விசாரிக்கிறதே வித்தியாசமா இருக்கு. பொறுமையா இரு.. நீ தப்பு செய்யலைனா கண்டிப்பா இதுல இருந்து நீ தப்பிப்ப ” என தைரியம் கூறி அவளது நண்பர்களோடு அமர வைத்தார் அந்த பெண் காவலர்.

 

” என்ன டி என்னாச்சு உனக்கு.. ஏன் இப்போ அழகுற ” தைரியமாக இருந்த பிறைக்கு என்னவானது என்ற எண்ணம் அவர்களுக்கு.

 

உள்ளே நடந்த உரையாடல்களை எல்லாம் ஒன்று விடாமல் கூறினாள் பிறை. ” என்ன டி அந்த கமிஷனருக்கு … இப்படி உன்னைய போய் சந்தேகப்படுறாரு.. ” கீதா புகைந்தாள்.

 

” கடைசியா இவ கிட்ட தானே டி அந்த பொண்ணு பேசிட்டு போயிருக்கா.. இப்போதைக்கு இவ தான் எவிடென்ஸ் . அதான் இப்படி பேசி உண்மையை வர வைக்க பார்க்குறாங்க. ஆனால் நம்ம தான் தப்பே செய்யலையே ” சுஷ்மிதா விளக்கம் அளித்தாள்.

 

அப்போது ஒருவன் கமிஷனர் அழைத்ததாக கூறி ஸ்டேஷன் வந்திருந்தான். ” சார் வெளிய போயிருக்காரு.. நான் இம்பார்ம் பண்ணுறேன்.. நீங்க வந்து வெயிட் பண்ணுங்க ” என்றதும் அவன் காத்திருக்க.. அந்த பெண் காவலர் ஆதிக்கு அடித்து தகவலை கூறினார்.

 

” ஒரு அஞ்சு நிமிஷம் இருங்க.. சார் வந்துட்டு இருக்காரு ” என அவர் வேலையை பார்க்க சென்று விட.. ஐந்தே நிமிடத்தில் அந்த ஸ்டேஷன் உள்ளே வந்து விழுந்தான் ஒரு ஆடவன். கதவுகளை உடைத்து கொண்டு அவன் விழுந்ததில் அங்குள்ளவர்கள் எல்லாம் பதறி திரும்ப.. அவன் பின்னால் கூலரோடு உள்ளே வந்தவன்.. ” இவன உள்ள வைங்க ” என அறைக்குள் சென்றுவிட்டான்.

 

அதன் பின்பு அந்த ஆடவனை அடித்து செல்லுக்குள் அடைத்த பின், அந்த புதிய நபரை உள்ளே அனுப்பி வைத்தனர்.

 

வெளியே மூவரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். ஆதிதேவ் அடித்த அடியை நேரில் பார்த்தவர்களுக்கு உடலெங்கும் நடுங்கிப் போனது.

 

இதில் கீதா வீட்டில் இருந்து அவளது அண்ணனும், சுஷ்மிதா வீட்டில் இருந்து அவளது மாமனும் வந்து விட்டார்கள்.

 

” என்னாச்சு மேடம் எதுக்கு பொண்ணுங்களை வந்து ஸ்டேஷன்ல வச்சிருக்கீங்க ” என சுஷ்மிதாவின் மாமா சற்றே குரலை உயர்த்தினார். ஆளுங்கட்சியில் இருப்பதால் அவருக்கு செல்வாக்கு அதிகம்.

 

” சார் கமிஷனர் உள்ள தான் இருக்காரு.. எதுவா இருந்தாலும் பார்த்து பேசுங்க.. அப்பறம் பின் விளைவுகள் மோசமா இருக்கும் ” என்றதும் அவரே சற்று அமைதியாகி போனார். 

 

சென்னை கமிஷனர் ஆதிதேவ் பற்றி அந்த ஊரில் அறியாதவர்கள் பாவம் செய்தவர்கள். தினமும் ஏதேனும் ஒரு தலைப்பில் அவனை பற்றியான செய்திகள் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்கும். 

 

” கமிஷனர் சார் கிட்ட பேசலாமா ” கீதாவின் அண்ணன் கேட்டான்.

 

” இல்ல சார் ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்காங்க.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ” என இருவரையும் அமர வைக்க.. பெண்கள் மூவரும் அவர்களை தான் கடவுளாக பார்த்தார்கள்.

 

” மேடம் மூணு பேருமே ஊருக்கு புதுசு.. ஒன்னுமே தெரியாது.. என் மருமகள் சென்னை வந்து பழக்கம். ஆனால் மத்த ரெண்டு பேருக்கும் இந்த சென்னை புதுசு .. அவங்களுக்கு எதுவும் தெரியாது மேடம் ” என மற்ற பெண்களுக்காகவும் பேசினார் சுஷ்மிதாவின் மாமா.

 

” சார் முடிவு எடுக்க வேண்டியது நாங்க இல்ல.. உள்ளே கமிஷனர் சார் தான். அதுனால நீங்க எதுனாலும் அவர் கிட்ட பேசிக்கோங்க ” என அவர் தெளிவாக கூறி விட.. அனைவருமே ஆதிதேவ்வின் வரவிற்காக காத்திருந்தனர்.

 

வெகு நேரமாக உள்ளே பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது. அரை மணி நேரத்திற்கு பின் கமிஷனர் மற்றும் அந்த ஆடவனும் வெளியே வர, அனைவருமே அவர்களது பதிலுக்காக காத்திருந்தனர்.

 

” உங்க மூணு பேரோட ரிலேட்டிவ் எங்க ” என கேட்டவனுக்கு பதிலாக சுஷ்மிதாவின் மாமா மற்றும் கீதாவின் அண்ணன் இருவரும் வந்தனர்.

 

” நீங்க யாரு.. ” என அவன் கேள்வி கேட்டதும் இருவரும் அந்த பெண்களோடு உள்ள உறவை எடுத்துக் கூற..

 

” ரெண்டு பேரும் சைன் பண்ணிட்டு , அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போங்க ” என திரும்பி நடக்க போக..

 

” சார் அந்த பொண்ணு பிறை .. ” என இழுத்தார் சுஷ்மிதாவின் மாமா.

 

” உங்க பேரு.. “

 

” சிதம்பரம்..”

 

” அந்த பொண்ணுக்கு நீங்க என்ன வேணும் “

 

” உறவு எல்லாம் இல்ல.. என் மருமகளோட தோழி “

 

” அதுக்காக எல்லாம் அனுப்பிட முடியாது.. அவங்க  ரிலேட்டிவ் வந்தா தான் அனுப்ப முடியும் ” என்றதும் பிறைக்கு தன் மேல் எந்த தவறும் இல்லை என்பதை அவன் கண்டு கொண்டான் என்பது தெளிவாக தெரிந்தது.

 

” சார்… ” இம்முறை பிறையே அவனை அழைத்து வைக்க.. புருவத்தை சுருக்கி அவளை பார்த்து வைத்தான்  ஆதி.

 

” தப்பு என் மேல இல்லை தானே சார் ” அவள் கேட்டதும் ஆம் என தலையாட்டி வைத்தான் ஆதி.

 

” அப்போ என்ன வெளிய விட உங்களுக்கு என்ன பிரச்சனை.. கூட்டிட்டு வரும் போது சொந்தக்காரங்களை வச்சு தான் கூட்டிட்டு வந்தீங்களா.. இப்போ அனுப்ப மட்டும் அவங்க எதுக்கு ” அவளது நேரடியான கேள்வியில் ஸ்டேஷனில் உள்ள மொத்த ஆட்களும் நடுங்கிப் போனார்கள்.

 

” இந்த பொண்ணுக்கு நேரம் சரியில்ல போல.. வாய கொடுத்து பிரச்சனையை வாங்குது ” என அங்குள்ளவர்கள் பேசிக் கொண்டனர்.

 

” தப்பு செய்யலைன்னு தான் சொன்னேன்.. இப்போ கூட உன் மேலே கேஸ் போட்டு என்னால உள்ள தள்ள முடியும்.. செய்யட்டுமா ” நக்கலாக அவன் கேட்டதில் அதிர்ந்து போனவள்.. அதன் பின் வாயை திறக்கவில்லை.

 

” சார் அந்த பொண்ணுக்கு சென்னைல சொந்தம் இல்லை. அப்படியே வந்தாலும் திருநெல்வேலில இருந்து தான் வரனும், அவங்க வர வரைக்கும் ஸ்டேஷன்ல வயசு பொண்ணை எப்படி வச்சிருக்க முடியும் ” சுஷ்மிதா மாமா நியாயமாக பேசினார்.

 

சற்றே யோசித்தவன், ” கையெழுத்தை வாங்கிட்டு அனுப்பி விடுங்க ” என உள்ளே சென்றவன், போகும் பொழுது பிறையை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டே சென்றிருந்தான்.

 

” எதுக்கு டி அந்த கமிஷனர் உன்ன இப்படி பார்க்கிறாரு ” கீதா காதில் முனுமுனுத்து வைக்க.. ” தெரியலை ” என தோள்களை குலுக்கி கொண்டு ஸ்டேஷனில் இருந்து அனைவரும் வெளியேறி இருந்தனர்.

 

உண்மையில் சற்று நேரத்திற்கு முன்பு ஒரு ஆடவனை அடித்து இழுத்து வந்தான் இல்லையா.. அவன் தான் உண்மையான குற்றவாளி. 

 

இறந்து போன அந்த பெண் இளவரசியும் இவனும் காதலர்கள்.. ஒரு வருடமாக காதலித்து, அதற்கு மேல் தவறான செயல்களையும் செய்து சல்லாபித்து வந்தனர். 

 

ஒரு வருடம் ஆகி இருந்த நிலையில், வீட்டில் கூறி திருமணம் செய்து கொள்ளலாம் என அந்த பெண் கூறி இருந்தும்.. இவன் அதற்கு மசியவில்லை.

 

இப்படியே நாட்கள் கடக்க.. இளவரசி அவனை வெகுவாக மிரட்டி பார்த்தும், கெஞ்சி பார்த்தும் வேலைக்கு ஆகாமல் போனது. கோபத்தில் ஒரு வாரம் அவனிடம் பேசாமல் இருந்தால் தான் வழிக்கு வருவான் என அவளும் பேசாமல் இருந்து விட.. நேற்றைய தினம்.. அவனிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி தான் அவளை இந்த நிலைமைக்கு ஆளாக்கியது.

 

இருவரும் தனிமையில் சேர்ந்திருந்த வீடியோவை நெட்டில் விட்டுவிட்டு, அவளுக்கும் அந்த லிங்கை சேர் செய்து இருந்தான்.

 

அவனிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியை ஆசையாக திறந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. உலகமே அவளை அப்படி ஒரு கோலத்தில் பார்த்து விட்டது.

 

இனிமேலும் உயிருடன் இருக்க வேண்டுமா என்ற எண்ணத்தில் தான் அவள் தூக்கிட்டு கொண்டது.

இந்த உண்மை எல்லாம் அவள் போனில் இருந்து கண்டெடுக்கப்பட்ட விஷயங்கள்.

 

சரியாக பிறையிடம் பேசி விட்டு அறைக்கு சென்றவள் போனை எடுத்து பார்த்து, அதற்கு மேல் தான் தற்கொலை செய்திருக்கிறாள். இதில் சிசிடிவி காட்சிகளில் அவர்கள் பேசிக் கொண்ட மணிக்கு , ஒரு மணி நேரம் கழித்து தான் அந்த ஆடவன் அவளது அலைபேசிக்கு வீடியோவை அனுப்பி இருந்தான். அதனால் தான் இரவு பிறையுடன் பேசும் பொழுது அந்த பெண் சாதாரணமாக பேசி இருக்கிறாள்.

 

மற்றொரு விஷயம்.. லிப் சின்ங் கண்டுபிடிக்கும் ஆடவனை வரவைத்து , உண்மையிலேயே இவர்கள் பேசியது உண்மைதானே என உறுதியான பிறகே இவர்களை அவன் அனுப்பி வைத்தது.

 

இதுதான் நடந்த கதை.. இதில் தானாக வந்து மாட்டியது தான் இவ் மூவரும்.

 

” அவன் மேல எப் ஐ ஆர் பைல் பண்ணுங்க.. ” என வாட்சை கழற்றி டேபிள் மீது வைத்தவன்.. உள்ளே சென்று அவனுக்கு வித விதமாக ட்ரீட்மென்ட்டை வழங்கி இருந்தான்.

 

” இனிமே நீ  ஹாஸ்டல்ல இருக்க வேண்டாம் கீதா.. என் வீட்ல இருந்தே போ.. ஒரு மாசம் தானே.. நான் உன் அண்ணியை சமாளிக்கிறேன் ” கீதாவின் அண்ணன் மறு பேச்சின்றி அவளை இழுத்து சென்றிருக்க .. செய்வதறியாது தோழிகளை கண்ணீர் மல்க பார்த்துக் கொண்டே அண்ணனுடன் சென்றாள்.

 

அவளுக்கு நன்றாக தெரியும், அவள் சென்றாலே அவளது அண்ணிக்கு பிடிக்காது, இதில் எப்படி இவர்களை எல்லாம் அழைத்து செல்வது. தற்போது வரவில்லை என்று கூறினாலும் அண்ணன் போன் செய்து வீட்டில் கூறி விடுவான் என தெரிந்ததால் அமைதியாக சென்று விட்டாள்.

 

சுஷ்மிதாவின் மாமாவும் அதையே தான் செய்தார். ” நீங்க ரெண்டு பேரும் என் வீட்ல தங்குங்க.. போற வரைக்கும். அதுதான் உங்களுக்கு நல்லது.. பாதுகாப்பும் கூட ” என அவர் அழைக்க.. சுஷ்மிதா சம்மதித்து விட.. பிறை யோசனையுடன் இருந்தாள்.

 

” என்னாச்சு மா.. எங்க கூட வர தானே “

 

” இல்ல சார்.. தப்பா நினைக்க வேணாம்.. எங்க வீட்ல விஷயம் தெரிஞ்சா என் படிப்பு வீணா போயிடும்.. அதுனால நான் ஹாஸ்டல் போறேன்.. நானே பார்த்துக்கிறேன்.. எனக்காக பேசுனதுக்கு நன்றி சார் ” என்றவளை பெரும் மூச்சுடன் பார்த்தவர்.. 

 

” சரி நான் ஹாஸ்டல்ல விட்டுட்டு போறேன்.. அப்படியே இவளோட பொருட்களையும் எடுத்துட்டு போகட்டும் ” என்றதும் விதிக்கு சென்றிருக்க.. அதற்கு முன்பே கீதா அறையை காலி செய்திருக்க.. அதன் பின் சுஷ்மிதா காலி செய்தாள்.

 

இருவரும் ஆயிரம் பத்திரம் கூறி அவளை விட்டு சென்றனர். இத்தனை பிரச்சனைக்கு பிறகு மருமகளை தனியாக விட ஒருபோதும் சம்மதிக்க மாட்டார் .அதனால் தான் பிறையை கூட அழைத்தார். ஆனால் அவள் மறுத்து விட்டாளே. மாமாவை மீறி பேச முடியாத காரணத்தால் சுஷ்மிதா கிளம்பியிருக்க.. ஒரே நாளில் தனிமரமாகி போனாள் பிறைநிலா.

 

யாரோ ஒருவர், சம்மந்தம் இல்லாமல் இறந்ததற்கு இன்று அவளது நிலைமை தனிமையாகி போனது. நினைக்க நினைக்க அத்தனை வேதனையாகி போனது.

 

இப்போதே இதெல்லாம் வேண்டாம் என ஊருக்கு செல்ல வேண்டும் என்று துடித்த மனதை அடக்கி விட்டு, போர்வைக்குள் தன்னை நுழைத்துக் கொண்டவளுக்கு கண்ணீர் ஆறாக பெருகியது.

 

காலையில் கூட மூவரும் இந்த அறையில் அரட்டை அடித்தது நினைவில் வந்தது. வீட்டை நினைத்தால், அப்போது தான் சிவகாமி அவளுக்கு போன் செய்திருப்பார் என்ற நினைவே அவளுக்கு வந்தது. சட்டென தனது அலைபேசியை தேடி அடித்து விட்டாள் அன்னைக்கு.

 

” என்ன தங்கம் போன் எடுக்கவே இல்ல.. எதுவும் பிரச்சனை இல்லையே ” தாய் கேட்ட முதல் கேள்வியில், அனைத்தையும் கூறி ஆறுதல் தேட துடித்த மனதை அடக்கிக் கொண்டவள்.. ” அதெல்லாம் பிரச்சனை இல்ல மா.. செமினார் கிளாஸ் ஆன்லைன்ல போச்சு.. அதான் போன் எடுக்க முடியல.. இல்லைனா உங்க கிட்ட பேசாமல் இருப்பேனா ” 

 

” அதுசரி.. நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்.. ” சிவகாமி மகளை எண்ணி கவலை கொள்ள.. ஏதேதோ பேசி அவரை சரி செய்தவள்.. பின் போனை வைத்தவள் , முகத்தை கழுவி விட்டு இன்டென்ஷிப் விஷயங்களை எல்லாம் பார்க்க தொடங்கினாள்.

 

மனதை திசை திருப்ப நினைத்தாலும் .. அதிலேயே வந்து நிற்கும் மனதை என்னவென்று சொல்வது. சலிப்பாக புத்தகத்தை மூடி வைத்தவளை கலைத்தது கதவு தட்டும் சத்தம்..

 

” இப்போது என்ன ” என புலம்பிக் கொண்டே கதவை திறக்க.. வார்டன் தான் நின்று கொண்டிருந்தாள்.

 

” உன்கூட தங்கியிருந்த ரெண்டு பேரும் காலி பண்ணிட்டாங்க தானே “

 

” ஆமா “

 

” நீ சீக்கிரம் இன்னைக்குள்ள காலி பண்ணு மா ” என அவர் சென்று விட.. செய்வதறியாது திகைத்து போனாள் பிறைநிலா.

 

சனா💖

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
12
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்