Loading

பிறை -4

 

 

சென்னை மாநகரம் மூவரையும் வியக்க வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

 

” எம்மாடியோவ்.. எவ்வளவு பெரிய ஊரு.. எவ்வளவு பஸ், காரு, பிளைட் எல்லாம் போயிட்டே இருக்கு பிள்ள ” கீதா அதிசயத்து கூற, அறையை சுற்றிப் பார்த்துக் கொண்டே அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தாள் பிறை.

 

” ரூம் ரொம்ப நல்லா இருக்கு கீதா.. உங்க அண்ணன் நல்லா தான் எல்லாம் ரெடி பண்ணி இருக்காரு ” 

 

” ஆமா டி.. நம்ம ஒரு நாள் எங்க அண்ணன் வீட்டுக்கு போயிட்டு வரலாம்.. அங்க என் அண்ணன் மகன் இருக்கான்.. ரொம்ப சுட்டி ” கீதா ஆசையாக கேட்டதும் மறுக்க தோன்றாது தலை அசைத்தாள் பிறை.

 

அந்த ஒரு நாள் தோழிகள் மூவரும் அறையை சுத்தம் செய்து.. வேண்டிய பொருட்களை எல்லாம் வாங்கிக் கொண்டு மறுநாள் இன்டென்ஷிப் செல்ல தயாராக இருந்தனர்.

 

” முதல் நாள் டி.. சோ நல்லா அழகா போகனும்” என சுஷ்மிதா , சென்னை  வாசிகளுக்கு ஏற்றார் போல உடைகளை அணிந்து இருந்தாள்.

 

கீதா அவளது உடையை அத்தனை அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்தாள். ” எதுக்கு டி அவளை இப்படி பார்க்குற ” பிறை அவளது கைகளை உலுக்கி கேட்டதும்…

 

” இவளுக்கு இந்த டிரஸ் நல்லா இருக்குல்ல ” 

 

” ஆமா அவ அடிக்கடி  வெஸ்டர்ன் போட்டு பழகிட்டா அதுனால அவளுக்கு எது போட்டாலும் அழகா இருக்கும்.. ” பிறை கூறியதில் சுஷ்மிதா முகத்தில் அப்படி ஒரு பெருமை.

 

கீதா குனிந்து தன்னுடைய உடைகளை பார்த்தாள். அவள் வைத்திருந்த நல்ல நான்கு சுடிதாரில் ஒன்றை எடுத்து அணிந்திருந்தாள்.

 

பிறையை பார்க்க.. அவளும் ஒரு ஆகாய வண்ண குர்தி அணிந்திருந்தாள். அவளை பார்த்து சற்றே மனதை தேற்றி கொண்டவளும்.. ” நேரமாச்சு வாங்க போகலாம் ” என மூவரும் கீழே சென்று காலை உணவை உண்டு விட்டு, நேற்று கீதா அண்ணனிடம் கேட்க வழியை பின்பற்றி பஸ் ஸ்டாப்பை அடைந்தனர்.

 

அதன் பின் அங்கிருந்து பேருந்தை பிடித்து அவர்கள் இறங்க வேண்டிய இடத்தை கூறி சரியாக இறங்கியவர்கள்.. கூகுள் மேப் உதவியுடன் அந்த அலுவலகத்தையும் கண்டு பிடித்தனர்.

 

அவர்களை போல அங்கு பலரும் இன்டென்ஷிப்பிற்காக வந்திருந்தனர்.

 

காலை ஒன்பது மணியில் இருந்து, மாலை மூன்று மணி வரை வேலை என அனைத்து விவரங்களையும் கூறி அந்த டைல்ஸ் கம்பெனியில் உள்ள அனைத்து இடங்களையும் சுற்றி காண்பித்தார் அங்குள்ள மேனேஜர்.

 

அன்றைய பொழுது அப்படியே கடந்து போனது. மாலை ஹாஸ்டல் வரவும் முதல் வேலையாக தாய்க்கு அடித்து அன்றைய நாளில் நடந்த அனைத்து கதைகளையும் ஒன்று விடாமல் ஒப்பித்து விட்டு, வீட்டில் உள்ளவர்களின் நலனையும் விசாரித்து விட்டு போனை வைத்தாள் பிறை.

 

நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார் சிவகாமி. ஒரு நாள் முடிவடைந்த நிலையில் இன்னும் இருபத்தி ஒன்பது நாட்கள் இருந்தது. எப்படியாவது மகள் பத்திரமாக வந்து விட வேண்டும் என வேண்டாத தெய்வம் இல்லை.

 

” என்ன டி உன் மக போன் எதுவும் போட்டாளா.. என்ன சொன்னா ” அகிலாண்டம் வெற்றிலையை இடித்துக் கொண்டே கேட்டார்.

 

” பேசினா அத்தை. வந்ததும் பேசுனா.. கம்பெனி எல்லாம் நல்லா இருக்காம் அவளுக்கும் பிடிச்சிருக்காம்.. எந்த பிரச்சனையும் இல்லையாம். மூணு பேரும் ஒன்னா தான் தங்கி இருக்காங்களாம்.. சாப்பாடு நல்லா இருக்காம் ” அவரை அடுத்த கேள்வி கேட்க வைத்து விட கூடாது என்ற எண்ணத்தில் ஒப்பித்து வைத்தார் சிவகாமி.

 

கேட்காமல் இருந்தால் அது அகிலாண்டம் இல்லையே. ” எங்கிட்டோ நல்லா இருந்தா சரிதான்.. காசு பத்தலைனா சொல்ல சொல்லு.. நம்ம அனுப்பி விடுவோம்.. நல்லா சாப்பிட்டு வேலையை பார்க்க சொல்லு ” என்றதும் தலை அசைத்தார் சிவகாமி. அவருக்கும் பேத்தியின் மீது அத்தனை பாசம் என்பதை இவள் அறியாது போவாளா!

 

” சூதானமா இருக்க சொல்லு.. இவ வர வரைக்கும் வயித்துல நெருப்பை கட்டிட்டு இருக்குற மாதிரி இருக்கு. ஊர் பயலுக எல்லாம் ஒரு மாதிரி பேசுறாங்கே.. நம்ம மெட்ராஸ் வரைக்கும் அனுப்பி படிக்க வச்சு என்ன செய்ய போறோம்.. என் பேரனுக்கு தானே கட்டி கொடுக்க போறோம்.. இதுக்கு எதுக்கு இதையெல்லாம் பண்ணிட்டு இருக்கனும்.. போனது போயாச்சு.. பார்த்து நடந்துக்க சொல்லு உன் மவள ” என அப்போதும் திட்டி ஓய்ந்தார் அகிலாண்டேஸ்வரி.

 

மாமியார் பேச்சுக்கு மறுபேச்சு பேசவில்லை சிவகாமி. அமைதியாக வேலையை பார்க்க தொடங்கினார். அவரது இந்த குணம் தான் இத்தனை வருடங்களாக அந்த வீட்டில் அவரை நிலைக்க வைத்திருக்கிறது.

 

மகளைப் பற்றி பேசியதில் அவருக்கு வருத்தம் தான் என்றாலும், மேற்கொண்டு பேசினால் சண்டை வலுக்கும். தாய்க்கும் தாரத்திற்கும் நடுவில் கணவன் முழித்து கொண்டு நிற்க வேண்டும். அந்த நிலை தனது கணவனுக்கு வேண்டாமே என்ற அக்மார்க் மனைவி அவள்.

 

வீட்டிற்கு வந்த சிவானந்தம் மகளை பற்றி மனைவியிடம் கேட்டறிந்தார்.

 

இரவு உணவை முடித்து கொண்டு வீடே உறக்கத்தை தழுவி இருக்க.. சிவகாமிக்கு தூக்கம் எட்டாக்கனியா இருந்தது.

 

இடையில் விழிப்பு தட்டிய சிவானந்தம் எழுந்து மனைவியை பார்த்தவர்.. ” இந்த நேரத்துல எதுக்கு உட்காந்து இருக்க சிவகாமி.. உடம்புக்கு எதுவும் செய்யுதா ” என்றவருக்கு மறுப்பாக தலை அசைத்தவர்.. ” எல்லாம் நம்ம பிறையை பத்தி தான் நினைச்சுட்டு இருக்கேன் ” 

 

” இந்த நேரத்துல பிள்ளையை பத்தி நினைக்க என்ன இருக்கு .. பாப்பா அங்க நல்லா தானே இருக்கா ” அவர் மனமும் பதறியது.

 

” அதெல்லாம் நல்லாத்தாங்க இருக்கா.. ஆனால் வந்ததும் உங்க தங்கச்சி மகனுக்கு அவளை முடிக்கனும்னு அத்தை சொல்லிட்டு இருக்காங்க ” என்றதும் அப்பக்கம் பெரிய அமைதி.

 

” எனக்கு உங்க தங்கச்சி மகனுக்கு நம்ம பிள்ளையை கொடுக்க இஷ்டம் இல்லைங்க.. நான் ஏதாவது தப்பா பேசிருந்தா மன்னிச்சிடுங்க ” என கண்ணீரோடு படுத்துக் கொள்ள.. தற்போது அவருக்கு பாரம் ஏறிக் கொண்டது.

 

மனைவி பட்ட துயரங்களை எல்லாம் கண்கூடாக பார்த்தவர் அவர். மனைவி மிகவும் பொறுமைசாலி அதனால் மாமியார், நந்தனார் அனைவரையும் சமாளிக்க முடிந்தது. ஆனால் மகள் அப்படி இல்லையே. முகத்திற்கு நேராக பேசும் ரகம். எப்படி அந்த குடும்பத்தில் வாழ்க்கையை ஓட்டுவாள் என்ற எண்ணமே அவருக்கு வருத்தத்தை கொடுத்தது.

 

ஒன்று மட்டும் அவருக்கு நன்றாக புரிந்தது. மகளுக்கு ஏற்ற இடம் தனது தங்கை வீடு இல்லை என்பது. ஆனால் அவளுக்கு எங்கே சென்று மாப்பிள்ளை தேடுவது ? 

 

” ரொம்ப யோசிக்காதீங்க.. நான் வெளியூர்ல இருக்குற தரகர் கிட்ட சொல்லி வச்சுருக்கேன். உங்களுக்கு விருப்பம்னா நம்ம மகளுக்கு அங்க சொல்லி சரியான மாப்பிள்ளையை தேட சொல்லலாம். உங்க தங்கச்சி வீட்ல அவளால ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ முடியாதுங்க.. அதுக்கு மேல உங்க இஷ்டம் ” என முதுகுப் பக்கம் காட்டிக் கொண்டே அனைத்தும் கூறி இருந்தார் சிவகாமி.

 

” பாப்பா ஊருக்கு வரட்டும்.. எனக்கும் நீ சொல்லுறது தான் சரின்னு படுது. அவ வரவும் பேசுவோம் “

 

” அவ கிட்ட பேச என்ன இருக்கு. அவளுக்கும் அங்க கல்யாணம் பண்ணி போறதுல விருப்பம் இல்லைங்க “

 

” சரி வீட்டுக்கு தெரியாம தான் மாப்பிள்ளை பார்க்கனும் சிவகாமி. இல்லைனா அம்மாக்கு பதில் சொல்ல முடியாது. கடைசியா தான் நம்ம விஷயத்தை சொல்லனும் “

 

” அப்படியே செய்வோம்.. ” என்றவருக்கும் மனதில் லேசான நிம்மதி. அதே நிம்மதியோடு கண் அசந்தார் சிவகாமி. ஆனால் அதற்கு மேல் சிவானந்தனுக்கு தூக்கம் பறிபோனது.

 

வீட்டையும் சமாளிக்க வேண்டும், தங்கைகளை விடாது, மகளின் வாழ்க்கையையும் பார்க்க வேண்டும். அவருக்கு தான் இதில் அதிகபட்ச கனமான சூழல்.

 

***

 

அறைக் கதவை தட்டிய தாயை வியப்பாக பார்த்தான் ஆதி. எந்த விஷயமாக இருந்தாலும் கீழேயே பார்த்து இரண்டு வார்த்தைகளோடு முடித்து விடுவார். ஆனால் இன்று மாடியேறி வரக் காரணம், என்னவாக இருக்கும் என்ற சித்தனையில் இருந்த மகனை கலைத்தார் மீனாட்சி.

 

” உன்கிட்ட பேசனும் பா “

 

” சொல்லுங்க மா ” என அறையில் இருந்து வெளியே வந்தவன்.. அங்குள்ள சோபாவில் அமர்ந்தான். மீனாட்சி பயத்தோடு மகனருகே அமர்ந்திருந்தார்.

 

” நானும் அப்பாவும் இன்னைக்கு உனக்கு பொண்ணு பார்க்க போனோம் பா.. எங்க ரெண்டு பேருக்கும் பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு.. வீடும் தான்.. நல்ல மனுஷங்க.. நீ தான் முடிவு சொல்லனும் ” என ஒரே வார்த்தையில் முடித்து விட்டார்.

 

” அந்த பொண்ணை யாருக்கு பார்த்தீங்க ” மகனின் கேள்வியை முழித்து வைத்தவர்.. ” உனக்கு தான் பா ” பரிதாபமாக கூறினார்.

 

” அப்போ யார் பொண்ணை பார்க்கனும் “

 

” நீதான்.. ஆனால்..”

 

” போட்டோ இருக்கா ” மகனின் அடுத்த கேள்வியில் சிட்டாக பறந்து தனது போனை எடுத்து வந்து இன்று எடுத்த போட்டோவை காட்டினார். 

 

போனை வாங்கி அதிலிருக்கும் பெண்ணை பார்த்தான்.. ” நாட் பேட்.. பட்… ” என அவன் இழுக்க..

 

” ரொம்ப அமைதியான பொண்ணு பா.. வீட்ல நல்ல வசதி.. இவ கூட யாருமே இல்ல ஒரே பொண்ணு தான்.. நல்ல மாதிரியா பேசுனா.. ” என மீனாட்சி வாயை விட..

 

” சிங்கிள் சைல்ட்டா.. நோ எனக்கு கூட பிறந்தவர்களோட இருக்குற மாதிரி பொண்ணு வேணும்.. எனக்கு பார்கவி மாதிரி ”  என்றதும் தலை சுற்றியது அவருக்கு.

 

” நமக்கு தேவை பொண்ணு தானே பா.. எதுக்கு கூட பிறந்தவங்க எல்லாம் ” மீனாட்சிக்கு எப்படியாவது அந்த பெண்ணை முடித்து விட வேண்டும்.

 

மகன் பார்த்த பார்வையில் என்ன கண்டாரோ.. ” சரி.. சரி.. பார்க்குறேன்.. அப்பா கிட்ட சொல்லி பார்க்கலாம் ” என தலையை ஆட்டி விட்டு கீழே வந்தார் மீனாட்சி.

 

மனைவியின் முகத்தை வைத்தே முடிவை தெரிந்து கொண்டார் திவாகர். ” விடு மீனாட்சி பார்த்துக்கலாம்.. “

 

” உங்க மகனுக்கு கொழுந்தியா வேணுமாம் ” மீனாட்சி கூறியதும்.. வாய் விட்டே சிரித்தார் திவாகர்.

 

ஒரு வாரம் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. பிறை எப்போதும் போல அலுவலகம் செல்வதும்.. மாலை வந்து தாயிடம் அனைத்தையும் கூறுவதும் என பொழுதுகள் அழகாக ஓடி அடைந்தது.

 

வார இறுதியில்.. திடீரென ஹாஸ்டல் பரபரப்பாக காட்சி அளிக்க.. என்னவென்று தெரியாமல் மூவரும் அறை வாசலில் நின்று முழித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை கடந்து சென்று பக்கத்து அறையில் உள்ளவளிடம்.. ” என்னாச்சு கா.. ஏன் எல்லாரும் ரொம்ப பரபரப்பா இருக்காங்க ” கீதா பதட்டத்துடன் கேட்க..

 

” ரூம் நம்பர் 103 ல இருக்கிற பொண்ணு சூசைட் பண்ணிட்டா.. ” என்றதும் மூவருக்கும் அதிர்ச்சி தான். அவர்கள் அறையில் இருந்து இரண்டு அறை தள்ளி தான் அந்த 103 அறை.

 

” என்ன கா சொல்லுறீங்க “

 

” ஆமா ஃபேன்ல தூக்கு போட்டு இறந்துட்டா” என அவள் சென்று விட.. தோழிகள் மூவரும் அதிர்ச்சியோடு அறைக்குள் சென்றிருந்தனர். 

 

அதே நேரம் அந்த ஹாஸ்டல் வாசலில் நின்றது ஆதிதேவ் ஆருத்ரனின் கார். 

 

விதியின் சதியால் இருவரும் முதல் முறை பார்க்க போகும் தருணம் .. 

 

சனா💖

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
10
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்