
பிறை -12
ஒரு வாரம் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. இந்த ஒரு வாரமும் அவனது கண்களில் பட்டு விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தாள் பிறைநிலா. வழக்கமாக பார்க்கும் சிக்னலில் கூட , ஐந்து நிமிடத்திற்கு முன்பே வீட்டில் இருந்து கிளம்பி வேகமாக அந்த இடத்தை கடந்து விடுவாள்.
அடுத்த முறை பார்த்தால் என்ன செய்வான் என்றெல்லாம் தெரியவில்லை.. ஆனால் பட்டு விட்டால் என்ன செய்வது. அவனிடம் இருந்து தப்ப முடியுமா.. பிரச்சனை என்று வந்தால் காவல் துறையை நாடி விடலாம். ஆனால் பிரச்சனையே கமிஷனரிடம் என்றால் என்ன செய்வது என பலவாறு சிந்தித்தது மனம்.
எதற்கும் ஜாக்கிரதையாக இருந்து விட்டு, ஊரை தேடிச் சென்று விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தாள் பிறை. ஆனால் நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே.
ஒரு வாரமாக அவனை தவிர்த்து விட்டோம், அவனை பார்க்கவில்லை என அவள் நினைத்திருக்க.. தினமும் அவளை தலை முதல் கால் வரை அங்குலமாக பார்த்து செல்பவனுக்கு தானே தெரியும்.. அவனது ரகசிய தரிசனத்தை பற்றி.
” எதுக்கு டி வெளிய வந்தாலே இப்படி படபடன்னு இருக்க.. நீ பயப்புடறதை பார்க்கும் போது எனக்கே சென்னையை பார்த்தா பயமா இருக்கு டி.. இனிமேல என்ன ஆக போகுது. இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு.. பார்த்துக்கலாம் பிறை கொஞ்சம் ப்ரீயா இரு ” என சுஷ்மிதா கூறியதை கேட்டாலும் .. மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது.
ஏனோ அவன் சாதாரணமாக கூறியது போல அவளுக்கு தெரியவில்லை.
” இன்னைக்கு ஈவ்னிங் நம்ம வெளிய போறோம் பிறை. பக்கத்துல ஒரு எக்சிபிஷன் போட்டுருக்காங்க.. போய் பார்த்துட்டு, நமக்கு தேவையானதை வாங்கிட்டு வரலாம் “
” ஐயோ நான் வரலை சுஷ்மி.. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு “
” எப்படி எப்படி உனக்கு டயர்டா இருக்கா.. நான் அதை நம்பனுமா.. கோவிலுக்கு மட்டும் அன்னைக்கு ஓடுன..ஒழுங்கா என் கூட வரனும் ” என சுஷ்மிதா அன்பு கட்டளையிட, அதை மறுக்க முடியாமல் மாலை வீடு வந்ததும் மூவரும் கிளம்பி எக்சிபிஷன் வந்தனர்.
” உங்களுக்கு தேவையானதை எல்லாம் வாங்குங்க.. இங்க காசு கம்மி தான் .. பொருளும் கொஞ்சம் நல்லாத்தான் இருக்கும். பிறை நீ வீட்டுக்கு ஏதாவது வாங்குறதா இருந்தாலும் வாங்கிட்டு போ மா ” என ரஞ்சனி அங்கிருக்கும் கடைகளை எல்லாம் சுற்றி காட்டிட.. ஆர்வமாக இருவரும் அந்த கடைகளை எல்லாம் சுற்றிப் பார்த்தனர்.
கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்ததால், பொருட்கள் வாங்குவதில் சிரமம் இல்லாது போனது. ஒவ்வொரு கடையாக சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள் பிறை. சிவகாமிக்கு என்ன வாங்குவது என தெரியவில்லை. ஆனால் அவளுக்கு நேர்மாறாக சுஷ்மி கைக்கு கிடைத்ததையெல்லாம் வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தாள்.
” ஹே பிறை எங்க அத்தை சொன்னது உண்மை தான் டி.. நான் வாங்குறத விட இங்க கம்மியா தான் இருக்கு. சான்ஸ் மிஸ் பண்ணிடாத நல்லா தேவையானதை வாங்கிக்கோ ” என சுஷ்மிதா அடுத்த கடைகளை பார்வையிட செல்ல.. அவள் தான் விழித்து நின்றாள்.
ரஞ்சனியும் வீட்டிற்கு தேவையான வீட்டு உபயோக பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தாள். கண்ணில் பட்ட கடைகளை எல்லாம் பார்வையிட்டவள்.. எதிரே இருந்த சேலை கடைக்குள் நுழைந்திருந்தாள் பிறைநிலா.
மொத்தமாக குவித்த வைத்திருந்த புடவைகளை பார்த்ததும் மலைத்து போனது அவளுக்கு. இப்படியெல்லாம் பெரிய கடைகளில் அவள் துணி வாங்கியதில்லை. ஆனால் இன்று இத்தனை பெரிய அங்காடியை கண்டு திணறிப் போனவள்.. ” மேடம் என்ன மாதிரி சேரி பார்க்குறீங்க ” ஊழியரின் குரலில் நினைவிற்கு வந்தவள்..
” அது என் அம்மாக்கு புடவை வாங்கனும் ” என்றதும்.. அவர்கள் கட்டுவது போல சேலைகள் இருந்த பிரிவின் பக்கம் அனுப்பி வைத்தார்கள்.
” வாங்க மேடம் என்ன மாதிரியான சேரி வேணும் ”
” அது என் அம்மாக்கு தான் வேணும் “
” இங்க நிறையா கலெக்ஷன் இருக்கு. நீங்க பார்த்து சொன்னா அதுக்கு ஏத்த மாதிரி நான் எடுத்து போடுறேன் ” என முதலில் ஒரு சேலையை எடுத்து விரித்துக் காட்டினாள் அந்த பெண்மணி.
” ரொம்ப அழகா தான் இருக்கு. ஆனால் எங்க அம்மா இந்த மாதிரி எல்லாம் கட்ட மாட்டாங்க.. ”
” வேற எந்த மாதிரி மேடம் ” என்றதும் பெயர் கூற தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள் பிறை.
அருகில் இருந்து இத்தனை நேரம் இவளை பார்த்துக் கொண்டிருந்த பெண்மணி.. பிறை அருகில் வந்து.. ” உங்க அம்மா எந்த மாதிரி சேலை கட்டுவாங்க.. பெயர் தெரியாதா மா ” என அவர் கேட்க.. தெரியாது என தலை அசைத்தாள்.
” அப்போ அவங்க சேலை கட்டுன மாதிரி போட்டோ இருந்தா அவங்களுக்கு காட்டு அந்த மாதிரி எடுத்து கொடுப்பாங்க ” என யோசனை வழங்க.. வேகமாக தனது கைபேசியை எடுத்து அன்னையின் புகைப்படத்தை காட்டி இருந்தாள் பிறை.
போட்டோவை வாங்கி பார்த்தவர்.. ” அவங்க அம்மா காட்டிருக்கது கிரேப் சில்க் பூனம் .. அதையே கொடுங்க ” என போனை அவளது கையில் கொடுத்தவள்.. ” உன்னோட தாவணி ரொம்ப அழகா இருக்கு மா.. இப்போலாம் யாரும் இதை கட்டிக்கிறது இல்ல.. ” என அவளது தாவணியை பார்த்து கூற.. அவருக்கு சின்னதாக சிரிப்பை பதிலாக கொடுத்தவள்.. ” தாங்க்ஸ் மா.. நான் இந்த மாதிரி கடைக்கெல்லாம் வந்தது இல்ல.. அதான் எனக்கு சேலை வாங்க தெரியல ” உண்மையை ஒப்புக் கொண்டாள் பிறை.
” நீ இந்த ஊர் இல்லையா “
” இல்ல மா.. நான் திருநெல்வேலி .. இங்க வேலைக்காக வந்திருக்கேன். அதான் அம்மாக்கு புடவை வாங்கிட்டு ஊருக்கு போகலாம்னு வந்தேன் ” அவளது அமைதியான பேச்சும், அழகான உடையும் அவள் மீது மேலும் மதிப்பை கூட்டியது.
” என்ன மீனு புடவை எடுத்தாச்சா என்ன ” திவாகர் மனைவியை நெருங்க..
” இதோ ரெண்டு எடுத்து வச்சுருக்கேன். அப்பறம் இந்த பொண்ணு அவங்க அம்மாக்கு சேலை வாங்க வந்திருக்கா ” என நடந்ததை கூற..
” ஓ திருநெல்வேலி.. நல்ல இயற்கை நிறைந்த ஊர் தான். உங்க அம்மாக்கு புடவை எடுத்தாச்சா மா “
” இன்னும் இல்ல .. இப்போதான் பெயரை கண்டு பிடிச்சு சொல்லிருக்கோம்.. ” என பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அவர்கள் கேட்ட புடவைகளில் வகை வகையாக எடுத்து போட.. அத்தனை புடவைகளையும் பார்த்தவளுக்கு குழப்பமே வந்தது.
” இவ்வளவு புடவையில எப்படி எங்க அம்மா கட்டுற புடவையை நான் எடுக்குறது”
” சரியா போச்சு போ.. உங்க அம்மாவை காட்டு.. நானே அவங்களுக்கு ஏத்த புடவையை செலக்ட் பண்ணி கொடுக்குறேன்.. உனக்கு ஓகே தானே ” என மீனாட்சி கேட்க.. பளிச்சிடும் கண்களுடன் வேகமான தலை அசைத்தாள் பிறை.
தனது கைபேசியில் இருக்கும் சிவகாமியின் போட்டோவை காட்டினாள் பிறை. அழகாக லட்சணமாக இருந்தார் சிவகாமி.
” உங்க அம்மா அப்படியே கிராமத்து அழகி தான் ”
” ஆமா மா.. எங்க அம்மா அழகு…” கூறும் போதே அவளது முகத்தில் அத்தனை பெருமை.
” நீயும் அப்படியே உங்க அம்மா சாயல் தான்.. அதான் அழகா லட்சணமா இருக்க “
” தாங்க்ஸ் மா.. “
” உன் பேரு என்ன மா “
” பிறைநிலா ”
” அழகான பெயர்.. உன்ன மாதிரி ” என புடவைகள் இருக்கும் பக்கத்தின் மீது பார்வையை பதித்தவர்.. பத்து நிமிடங்களில் அழகான இரு புடவைகளை தேர்வு செய்து கொடுத்தார்.
வாடாமல்லி கலரில் ஒரு புடவையும்.. ஆகாய வண்ண நிறத்தில் ஒரு புடவையும் தேர்வு செய்து அவளது கையில் கொடுக்க.. அவளுக்குமே அந்த சேலை பிடித்து தான் இருந்தது.
” நீங்க நல்லா செலக்ட் பண்ணுறீங்க மா “
” பல வருஷமா சேலை எடுத்துட்டு இருக்கா என் பொண்டாட்டி.. இது கூட இல்லைன்னா எப்படி மா ” திவாகர் கேட்டதும்.. ” நீ ரெண்டு புடவை எடுக்க போறியா.. இல்ல ஒன்னு தானா”
” ஒன்னு எடுக்கலாம்னு தான் இருந்தேன்.. ஆனால் எனக்கு ரெண்டு புடவையும் பிடிச்சிருக்கு மா.. அதுனால ரெண்டுமே எடுக்க போறேன் ” ஆசையோடு சேலையை அணைத்துக் கொள்ள.. கையோடு அதற்கு பணத்தையும் கட்டிவிட்டு வெளியேறி இருந்தார்கள்.
” நீ மட்டுமா வந்த.. “
” இல்ல மா.. என் பிரெண்ட் கூட தான் வந்தேன்.. அவங்க அந்த கடையில வாங்கிட்டு இருக்காங்க.. “
” சரி மா பார்த்து பத்திரமா போயிட்டு வா ” என மீனாட்சி பேசிக் கொண்டிருக்க.. பிறையின் கண்களில் கலவரம் உண்டானது.
பின்னே இருக்காதா.. கலவரத்திற்கு காரணமானவன் தான் உள்ளே வந்து கொண்டிருந்தானே… அவனை பார்த்ததும் மிரண்டு போனவள்.. எங்கு ஓடுவது என தெரியாமல் சுற்றி எங்கிலும் பார்வையை சுழற்ற..
அவளது முகமாற்றத்தை உணர்த்து கொண்ட மீனாட்சி.. ” என்னாச்சு மா.. ஏன் ஒரு மாதிரி இருக்க.. முகமெல்லாம் வேர்த்து போயிருச்சு.. ” என அவரும் பதறி தனது கணவனை பார்க்க.. அவருக்குக் ஒன்றும் புரியவில்லை.
” அது.. வந்து..மா.. நான் போகனும்.. நான் போறேன்.. கடவுளே ” என நொடியில் அங்கிருந்து ஓடி விட.. அவளையே குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் மீனாட்சி தம்பதிகள்.
” நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன பண்ணுறீங்க ” பின்னால் கேட்ட குரலில் பெரியவர்கள் இருவரும் திரும்பி தனது மகனை பார்த்தனர்.
” சும்மா தான் பா அப்பாவும் நானும் வந்தோம்..”
” கூட்டமா இருக்குற இடத்துக்கு ஏன் அம்மாவை கூட்டிட்டு வரீங்க.. ” தந்தையை கேள்விப் பார்வை பார்க்க..
” நான்தான் வரனும்னு சொன்னேன் பா.. இதோ கிளம்பிட்டோம் ” என இருவரும் பையை தூக்கி கொண்டு கார் பார்க்கிங் சென்று விட.. அவர்கள் சென்றதும் அங்கிருந்த கூட்டத்தை ஒரு முறை பார்வையால் அளந்தவனின் உதடுகளில் மர்மப் புன்னகை.
” எதுக்கு டி இப்படி பதறி அடிச்சுட்டு ஓடி வர ” சுஷ்மிதா கேட்டதும்.. சுற்றி எங்கிலும் பார்வையை பதித்தவள்.. சற்று நிதானமாக.. ” இல்ல டி கமிஷனரை பார்த்தேன் அதான் “
” வர வர உன் போக்கே சரி இல்ல டி.. அவரு வந்தா உனக்கென்ன.. அதுவும் இல்லாம இந்த எக்ஷிபிஷனுக்கா அவரு வரப் போறாரு. அவருக்கு வேற வேலை இல்லையா “
” இல்ல சுஷ்மி நல்லா பார்த்தேனே.. அவரு தான் வந்தாரு “
” இருபத்தினாலு மணி நேரமும் அவரையே நினைச்சுட்டு இருக்க.. அதான் எங்க பார்த்தாலும் அவரு வந்து நிக்கிற மாதிரி உனக்கு தெரியுது “
” நான் ஒன்னும் அவரை நினைக்கல “
” அப்போ இப்போ எப்படி வந்தாராம் “
” வா நானே உனக்கு காட்டுறேன் ” என அவளை இழுத்துச் சென்று அவனை பார்த்த இடத்தில் சற்று மறைவாக நின்று அவனை தேட.. அவனை எங்கும் காணவில்லை.
” எங்க கமிஷனரை காணோம் “
” அதான் டி எனக்கும் புரியல.. இப்போதான் இங்க பார்த்தேன்..”
” ஒழுங்கா ஊர் போய் சேரனும்.. கமிஷனர் நினைப்பா விட்டுடு.. நீதான் அவரை ரொம்ப நினைச்சுட்டு இருக்க ” என சுஷ்மிதா கடைக்குள் நுழைய.. பிறை குழம்பிப் போனாள்.
‘ நெஜமாவே நான் தான் அவரை ரொம்ப நினைக்கிறேனோ.. இல்லையே அவரை பார்த்தேனே.. ‘ யோசனையுடன் அவளும் நகர.. தூரத்தில் அவன் வந்து கொண்டிருப்பது அவளது விழிகளில் விழுந்தது.
காக்கி பேண்டும் , வெள்ளை சட்டையும்.. சட்டையில் இருந்து புஜங்கள் தெறித்து கொண்டு நிற்க.. போலீஸ் கட்டிங் வைத்து.. கையில் இருக்கும் அலைபேசியை ஒரு பார்வையும்.. கூட்டத்தை ஒரு பார்வையுமாக பார்த்து கொண்டே வந்தவனை விழி அகலாது பார்த்து வைத்தாள் பிறைநிலா.
கமிஷனர் மீது காதலோ? காலம் தான் பதிலளிக்கும்.
சனா💖
