Loading

பிறை – 1

தோட்டத்து பக்கம் வேலையாக இருந்தார் சிவகாமி. காலை நான்கு மணிக்கு எழுந்தால் வீட்டு வேலையிலேயே மூழ்கி விடுவார். ஒரே ஆளாக அந்த மொத்த குடும்பத்திற்கும் உழைக்கும் மகராசி.

ஆம் மகராசி தான். அந்த வீட்டின் குளவிளக்கு. சீர் செல்வத்தோடு இந்த வீட்டிற்கு மருமகளாக வந்தவர், வந்த கைமேல் குழந்தையும் பெற்றெடுத்தார். அவர் கைவைத்த எதுவும் செழிக்காமல் போனதில்லை. ராசியான புண்ணியவதி என ஊருக்குள் பெயர் பெற்றவர். 

அநேகம் பேர் அவர் கையில் அரிசி வாங்கிச் செல்வதும், அவர் கையில் பணம் வாங்கி செல்வதும் என அவரது ராசிக்காக அவரது கையில் கொடுத்து வாங்கி செல்வார்கள் .

ஊருக்கு தெரிந்த புண்ணியவதி வீட்டுக்கு தெரியாமல் போனது தான் அந்தோ பரிதாபம். சிவகாமி கொடிக்குளம் ஊரான கிராமத்து தலைவரின் மகள், அவளை அடுத்த ஊரான மஞ்சள்வயலில் உள்ள பெரிய வீட்டில் கட்டி வைத்தார் அவளது தந்தை. அவர்களும் பெயர் பெற்ற குடும்பம் தான்.

திருமணம் வெகு விமர்சையாக நடந்தேறியது. ஊரே பார்த்து வியக்கும் அளவிற்கு சீர்கள் கொடுக்கப்பட்டது.

நகை நட்டுகளுக்கு பஞ்சம் இல்லை. அந்த காலத்திலேயே எண்பது பவுனோடு திருமணத்தை நடத்தி வைத்தார் அவளது தந்தை.

திருமணம் ஆன இடம் எல்லாம் அமோகம் தான். சிவகாமிக்கு ஏற்ற சிவானந்தம். அவரோடு பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். வீட்டில் அம்மா மட்டும் தான். அகிலாண்டேஸ்வரி. இரு தங்கைகளுக்கும் திருமணம் செய்து வைக்கும் கடமையையும் முடித்து விட்டார் சிவானந்தம்.

அந்த வீட்டில் அகிலாண்டேஸ்வரியை மீறி ஒரு துரும்பும் நகராது. வீரம், கம்பீரம், தலைக்கனம், வாய்ப்பேச்சு, அகம்பாவம் என மொத்தத்திற்கும் பெயர் போனவர் தான் அவர். 

அப்படி ஒரு மாமியாரோடு, இரண்டு நாத்துனர்களும் அம்மாவின் குணத்தை குத்தகைக்கு எடுத்தார் போல இருக்கும் அவர்களையும், சட்டென கோபம் கொள்ளும் சிவானந்தன் என அனைத்தையும் சமாளித்து இத்தனை நாட்களும் வாழ்க்கையை ஓட்டி விட்டார் சிவகாமி.

சிவகாமி சிவானந்தம்  தம்பதியருக்கு ஒரே ஒரு பெண் குழந்தை. அதன் பிறகு எத்தனையோ குழந்தைகள் கரைந்து போனதெல்லாம் வேறு கதை. மொத்த வீட்டு வேலையும், வயல் வேலையும் என அவரை அசத்தி போட.. அதன் பின்பு வந்த கருக்கள் அனைத்தும் கழிவறையில் கரைந்து போனது.

ஒற்றை மகள் இருந்தாலும், பிள்ளை பெற தகுதி இல்லாதவள் என்ற ஏச்சு பேச்சுக்கள் எல்லாம் காதில் விழாமல் இல்லை. விழுந்து என்ன செய்வது. மகள் இருந்தும் மலடி பட்டம் அந்த வீட்டில்.

சிவானந்தம் தங்கைகளின் மூத்தவருக்கு இரண்டு மகன் ஒரு மகள்.. இரண்டாம் பெண்ணிற்கு ஒரு மகன் ஒரு மகள் என பெரிய குடும்பமாக தான் இருந்தனர்.

இதில் தனக்கு இருக்கு ஒரு பெண் அவர்களது கண்ணுக்கு தெரியவில்லையா என பல முறை சிந்தித்து பார்த்திருக்கிறார். சிவானந்தம் வீட்டு விஷயத்தில் எதிலும் தலையிடுவதில்லை. வயலுக்கு சென்று வரும் காசும், மில்லுக்கு சென்று வரும் காசும் மொத்தமும் தாய் கையில் ஒப்படைத்து விடுவார்.

உனக்கு தேவையான பணத்தை அம்மாவிடம் வாங்கிக்கொள் என கூறி விட்டு அவர் அடுத்த வேலையை பார்க்க சென்று விடுவார். ஆனால் ஒத்த ரூபாய்க்கு ஓராயிரம் பேச்சுக்கள் வாங்க வேண்டும் என அறிவாரோ.

அவருடைய மொத்த ஆறுதலும் மகள் தான். சிறு வயதில் இருந்தே தாய்க்கு நடக்கும் கொடுமைகளை எல்லாம் பார்த்தும் அமைதியாக இருப்பாள். காரணம், தான் ஏதேனும் பேசினாலும், அதற்கும் தாயையே வருத்துவார்கள் என அமைதியாக கடந்து விடுவாள்.

சில நேரங்களில் துடுக்காக கேட்பதும் உண்டு. அகிலாண்டேஸ்வரியின் சில குணங்களும் அப்போது எட்டிப் பார்க்க தான் செய்கிறது. பின்னே மகன் வழிப் பேத்தி அல்லவா. அப்பத்தாவின் தைரியம், அஞ்சாத பார்வை என அவளிடம் இருக்கும். 

தற்போது திருமணம் வயதை எட்டி இருக்கும் மகளுக்கு நாத்தனார் குடும்பத்தில் இருக்கும் பிள்ளைகளை எடுப்பதில் விருப்பமில்லை சிவகாமிக்கு. வெளியே வரன் பார்த்து அவளை கட்டி அனுப்ப பார்க்கிறார். நாத்தனார் மகன்கள் மூவரும் இவளை விட வயதில் குறைந்தவர்கள். சொத்து மற்றும் சொந்தம் விட்டு போகக் கூடாது என்பதற்காக அவர்களில் ஒருவரை பேத்திக்கு கட்டி வைக்க திட்டம் தீட்டுகிறார் அகிலாண்டேஸ்வரி. 

யாருடைய திட்டம் பலிக்கும். சிவகாமியா இல்லை அகிலாண்டேஸ்வரியா ? பொறுத்திருந்து பார்க்கலாம்.

“சிவகாமி …. ” காலை எழுந்தது முதல்  இரவு ஊரடங்கும் வரை அந்த வீட்டில் கேட்டுக் கொண்டே இருக்கும் ஒரே பெயர் அவர் தான்.

” இதோ வந்துட்டேங்க ” என கையை துடைத்து கொண்டு பரபரப்பாக அடுக்களையில் இருந்து ஓடி வந்தார் சிவகாமி. 

கூடத்தில் வெற்றிலையை இடித்து கொண்டே தனது லேசர் கண்களால் அனைத்தையும் பார்வையிட்டு கொண்டிருந்தார் அகிலாண்டேஸ்வரி.

” வரப்புக்கு போகனும்.. என்ன பண்ணிட்டு இருக்க ” என சிவானந்தம் சத்தமிட.. வேகமாக டிவிஎஸ் எக்ஸல் பைக் சாவியை எடுத்து கொடுத்தவர்,  அவர் போட்டுக் கொள்ள துண்டும், அவருக்காக அடித்து வைத்த மோரும் என மடமடவென வேலையை பார்க்க.. திருப்தியாக வயலுக்கு சென்றார் சிவானந்தம்.

மனைவியின் முகத்தை பார்த்து விட்டு வயலுக்கு செல்ல வேண்டும். நேரடியாக கேட்டால், தாயார்.. வீட்டை இரண்டாக்கி விடுவார் என்பதால் இப்படி சில வேலைகளை கேட்டு மனைவியை பார்த்து விட்டு செல்வார் சிவானந்தம்.

இதெல்லாம் அகிலாண்டத்திற்கு தெரியாமல் போகுமா. மகனின் எண்ணம் புரிந்தவர், மனதிற்குள்ளேயே திட்டி விட்டு மருமகளை வேலை வாங்குவார்.

” சிவகாமி.. இன்னைக்கு சாம்பார் வச்சு, உருளைக்கிழங்கு மசாலா , வெண்டைக்காய் பச்சடி, மல்லி துவையல், கொஞ்சமா பருப்பு பாயாசம் அப்பறம் அப்பளம் பொருச்சு வச்சுடு.. ” என அன்றைக்கான மெனுவும் அவர் தான் கூறுவார்.

” சரித்தை.. பண்ணுறேன் ” அமைதியாக நகர்ந்து விடுவார் சிவகாமி. 

” கொஞ்சம் நில்லு.. அப்படியே கொஞ்சம் தக்காளி ரசம் வை.. ” என்றதும் தலையாட்டி விட்டு உள்ளே சென்று விடுவார்.

கல்லூரிக்கு கிளம்பி வந்தாள்.. அழகான வெள்ளையில் தங்க நிற ஜரிகை வைத்த புடவையும், சிகப்பு வண்ண ஜாக்கெட், தளர பிண்ணிய கூந்தல், அதில் சூடிய மல்லிகை மலர், நெற்றியில் சின்ன அரக்கு வண்ண பொட்டும், மேலே கொஞ்சமாக சந்தன கீற்று, கைகளில் தங்க நிற கண்ணாடி வளையல்.. என கல்லூரி பையோடு வந்து நின்ற பேத்தியை கண்ணெடுக்காது பார்த்து வைத்தார் அகிலாண்டேஸ்வரி.

அவரது இளமை பருவத்தை திரும்பிப் பார்ப்பது போல ஒரு பிரம்மை. பேத்தி தன்னை போல இருப்பது அவருக்கு அப்படி ஒரு பெருமை. செக்க சிவந்த நிறமும், எழிலாக இருக்கும் அவளது அழகும் காண்போரை அசரடிக்கும் தான்.

” படிக்க தான போற.. இன்னைக்கு என்ன இத்தனை அலங்காரம் “

” இன்னைக்கு எங்க காலேஜ்ல ஓணம் பண்டிகை கொண்டாடுறோம் .. அதான் கிளம்பி போறேன்  அப்பத்தா.. ” முத்து பற்கள் தெரிய அவள் சிரித்ததில், பல மனக்கோட்டைகளை கட்டி இருந்தார் அகிலாண்டேஸ்வரி.

” அம்மா….. ” என அழைத்து கொண்டே அடுக்களைக்குள் சென்ற  மகளை கண்டு பூரித்து போனவர், விரைவிலேயே நல்ல இடத்தில் அவளை மணமுடித்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார்.

” பசிக்குது.. டைம் ஆச்சு மா ” 

” எல்லாமே செஞ்சுட்டேன்.. நீ சாப்பிட்டு கிளம்பு தங்கம் ” என்றதும் வேகமாக தட்டில் மூன்று இட்லியை எடுத்து வைத்து , தக்காளி சட்னியை வைத்து சாப்பிட்டு விட்டு கிளம்பி இருந்தாள் அவர்களது ஒரே புதல்வி.. பிறைநிலா.

**

வீட்டில் உள்ள அனைவரும் அவன் ஒருவனுக்காக தான் காத்துக் கொண்டிருந்தனர். விஷயத்தை அவனிடம் பேசிவிட வேண்டும் ஆனால் எப்படி பேசுவது யார் பேசுவது என்ற போராட்டம் தான்.

மகனிடம் நீயே பேசிக்கொள் என தந்தையான திவாகர் கழண்டு கொண்டார். கணவரை முறைத்து கொண்டு மகனிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என மிகுந்த யோசனையில் இருந்தார் அவரது மனைவி மீனாட்சி. 

திவாகர் மீனாட்சி இருவருமே காதலித்து திருமணம் செய்தவர்கள். அதனால் காதலை ஆதரிப்பவர்களும் கூட. ஆனால் அவர்களது இரு பிள்ளைகளும் காதல் என்றால் என்ன விலை என கேட்கும் ரகம்.

ஒரு நாளாவது மகனோ மகளோ காதலிக்கிறேன் என கூற மாட்டார்களா என்ற ஏக்கத்தில் மீனாட்சி. ” விடு மீனு.. நம்மளே நல்ல பையனும் பொண்ணும் பார்த்து கட்டி வைப்போம் ” வழக்கமான ஆறுதலில் திவாகர் என நாட்கள் ரெக்கை கட்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆனால் இன்று வீடு தேடி வந்த நல்ல வரனை மகனிடம் பேச வேண்டும் என இருவருமே துடித்துக் கொண்டிருக்கிறார்கள். மகன் திருமணத்திற்கு இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால் நல்ல வரன் வரும் பொழுதே முடிப்பது தானே சாலச் சிறந்தது.

” அண்ணா வந்துட்டாரா மா ” பார்கவி பயந்த வண்ணம் தாயிடம் கேட்டாள். அவர்களின் ஒரே புதல்வி. அக்ரி இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறார். அண்ணன் என்றால் உயிர் ஆனால் அதை விட பயம்.

” இல்ல பாரு.. இன்னும் வரல.. வந்தா என்ன பேசுறது .. ஒரே குழப்பமா இருக்கு ”  மீனாட்சி புலம்பிக் கொண்டிருக்கும் பொழுதே.. தனது ஜீப்பை நிறுத்தி விட்டு காக்கி உடையோடு உள்ளே வந்தான் ஆதிதேவ் ஆருத்ரன்.

சென்னை மாநகரத்தின் கமிஷனர் ஆப் போலீஸ். அவனை பார்த்து அராஜகம் செய்பவர்கள் நடுங்கலாம்.. ஆனால் வீட்டில் இருக்கும் ஜீவராசிகளும் அல்லவா நடுங்குகிறது.

” மா… அண்ணன் வராங்க.. நான் மேலே போறேன் ” என வேகமாக ஓடிச் சென்று கதவடைத்துக் கொண்டாள் பார்கவி.

” அடிப்பாவி இப்படி என்னைய தனியா விட்டுட்டு போயிட்டாளே ” என புலம்பியே விட்டார் மீனாட்சி.

உள்ளே வந்தவன் நடுக்கூடத்தில் ஒருவரும் இல்லாததை பார்த்து புருவம் சுருக்கி யோசனையில் இருக்க.. ” போய் கை கால் கழுவிட்டு வா  ஆதி.. டிபன் ரெடி பண்ணிட்டேன் ” என மீனாட்சியின் குரல் அடுக்களையில் இருந்து வந்ததை அடுத்து மேலே சென்று கடமைகளை முடித்து கொண்டு கீழே வந்தான்.

மகனுக்கு சுட சுட சாப்பாட்டை பரிமாறினார். அதுவரை இருந்த தைரியம் அனைத்தும் வற்றிப் போனது போல அமைதியாக நிற்கும் அன்னையை அவன் கவனிக்காமல் இல்லை.

முழுவதுமாக உண்டு முடித்தவன், ” வீட்ல எங்க யாரையும் காணோம் ” கணீரென்ற குரலில் அவன் கேட்டதும்..

” அது.. வந்து.. அப்பாக்கு டயர்டா இருக்காம்.. பார்கவி படிக்கிறா பா ” 

” ஓ ” என்றவன் கையை கழுவிக் கொண்டு மேலே செல்ல போனவனை தவிப்பாக பார்த்தார் மீனாட்சி.

இரண்டு படிகள் ஏறியவன் சற்றே நிதானித்து.. ” என்ன விஷயம் மா ” சாதாரணமாக தான் கேட்டான். ஆனால் அவருக்கு தான் அந்த கணீர் குரலில் பயம் தொற்றிக் கொண்டது.

” அது.. வந்து பா.. நீ இந்த விஷயத்தை பத்தி பேசக் கூடாதுன்னு ஏற்கனவே சொல்லியிருக்க.. ஆனால்…. ” என அவர் முடிக்கும் முன்னரே.. 

” அதான் சொல்லிருக்கேன்ல அப்பறம் எதுக்கு பேசிட்டு ” என ஏறிச் சென்றவனை பார்த்து தலையில் அடித்துக் கொண்டார் மீனாட்சி.

” தேவையில்லாம பழசை பேசிட்டேன்… நேரடியா விஷயத்துக்கு வந்திருக்கலாம் ” என புலம்பிக் கொண்டே கணவனது அறைக்குள் சென்றார் மீனாட்சி.

மேலே சென்றவனின் எண்ணங்களில் வந்து விழுந்தாள் அவள்.. 

யாரவள் ??

சனா💖

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
10
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்