Loading

பிரபஞ்சம்  3

 

மாதங்கள் வேகமாக சென்றது. கல்லூரி தொடங்கி மூன்று மாதங்கள் மேல் ஆகி இருக்கும். ஆனால் ஆதனி இதுவரை தன்னுக்கென என்று ஒரு நண்பரை கூட உருவாக்கி கொள்ளவில்லை. மேனகாவிடம் மட்டும் பேசுவாள், அதுவும் எதாவது சந்தேகம் இருந்தால் மட்டுமே. மற்றவரிடம் அது கூட இருக்காது.  மொத்தத்தில் அவளை ‘அமைதியின் மறுஉரு’ என்றே அனைவரும் கேலி செய்வர். அதையும் கூட அவள் கண்டுக்கொள்ள மாட்டாள்.

“உன் அம்மா அப்பா கிட்ட இதை முதலில் சொல்றது தானே. என் கிட்ட சொல்லவா இவ்வளவு தூரம் வந்த?” என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல், அவனையே முறைத்து கொண்டு இருந்தாள் அவள்.

 

“சரி சொல்லிட்ட தானே கிளம்பு. ஏற்கனவே என் கிட்ட பேசி தானே  போன வாரம்  உன் அப்பா கிட்ட அடி வாங்குன, முதல கிளம்பு” என்று அவன் சலிப்பாக சொல்ல,

 

“ரொம்ப சலிச்சுக்காதீங்க, இது உங்களுக்காக நான் வாங்கிட்டு வந்தது. எப்பவும் கூடவே வெச்சுக்கோங்க” என்று ஒரு கிபிட் பேக் பண்ணப்பட்ட பொருளை கொடுத்து, “இந்தப் பொருள் எப்பவுமே உங்களுக்கு என்னை ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கணும்”  என்று சொல்லிக் கொண்டே அவள் உருவம் காற்றோடு கலைந்தது.

 

அதுவரை ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த குரு இந்தக் கனவின் தாக்கத்தில் பதறி எழுந்தான்.

 

‘ச்சை… காலையே இந்த  கனவு வரணுமா’ என்று தன்னை நொந்துக்கொண்டே தன் வேலைகளை கவனிக்க தொடங்கினான். பின்  கல்லூரி செல்ல தயாராகி கீழே வந்தவன், தன் அன்னையை நோக்கி 

 

“அம்மா நம்ம வீடு சேஞ்ச் பண்ணும் போது என்னோட பொருள் எல்லாம் ஒரு அட்டப்  பெட்டியில் இருந்துச்சு தானே?  அது இப்ப எங்க இருக்கு”

 

“வேற எங்க கிடக்கும் ஸ்டோர் ரூம் ல தான் இருக்கு.  ஏதாவது முக்கியமான பொருள் இருக்கா? நான் வேணா தேடி வைக்கவா?”

 

“இல்ல இல்ல, நானே வந்து பாத்துக்குறேன்” என்று சொல்லிக்கொண்டே அன்னை எடுத்து வைத்த காலை உணவை உண்டு விட்டு கல்லூரிக்குச்  சென்றான். 

 

எப்பொழுதும் போல் அன்றும் வகுப்பை எடுத்துக் கொண்டிருக்க, என்றும் இல்லாத தடுமாற்றம் இன்று அவனுக்கு. அதன் காரணம் காலையில் அவன் கண்ட கனவின் தாக்கமாக கூட இருக்கலாம்.

 

பல வருடங்களாக அவன் மறந்து விட்டதாக  நினைத்த அவனின் கடந்த காலம் ஒரே கனவின் மூலம் வெளியே வந்துவிட்டது.

 

அவனிற்கு ஒரு பழக்கம் உள்ளது. அவனது கண்மணிகள்  ஒரு நிமிடம் கூட ஒரே இடத்தில் நின்று விடாது. சுற்றுப்புறத்தை ஆராய்ந்து கொண்டே இருக்கும். சொல்லப்  போனால் தன்னைச்  சுற்றி நடப்பதில்அவன் எப்போதும் கவனம் வைத்திருப்பான்.

 

பாடம் எடுத்துக்கொண்டே அனைவரையும்  ஒரு முறை பார்த்தவன், கடைசியாக ஆதனியின்  பக்கம் திரும்ப, ஒரு நிமிடம் இருவரின் கண்களும் சந்தித்துக்கொண்டது. அந்த நொடி நேர சந்திப்பு இருவருக்கும் அதிர்வை தான் கொடுத்தது.

 

‘இந்த கண்ணு இதுக்கு முன்னாடி எங்கையோ பார்த்து இருக்கோம். எங்க?’ என்று யோசிக்க ஆரம்பித்து விட்டான். மூளை யோசித்துக்கொண்டிருந்தது, கைகள் தன் பழக்கப்படி போர்டில் எழுதிக்கொண்டிருந்தது.

 

அவன் மேலும் யோசிக்கும் முன் அந்த வகுப்பு முடிந்தது என்று பெல் அடிக்க,  “நாளைக்கு ஒழுங்கா எல்லாரும் நான் சொன்ன டொபிக் படிச்சிட்டு வாங்க. கண்டிப்பா நாளைக்கு டெஸ்ட் இருக்கு. இன்னும் இரண்டே வாரத்தில் இன்டெர்னல் ஸ்டார்ட் பண்ணிடுவாங்க. சோ இப்பவே படிக்க ஸ்டார்ட் பண்ணிடுங்க” என்று சொல்வது என் கடமை என்று அவன் ஸ்டாப் ரூம் நோக்கி செல்ல,  அவன் பின்னே தன் புத்தகம் ஒன்றை எடுத்து கொண்டு சென்றாள் ஆதனி .

 

சில நிமிட போராட்டம் அவளுள், அவனிடம் இதை பற்றி கேக்கலாமா வேண்டாமா என்று. பின் துணிந்து “சார் மே ஐ கம் இன்?” என்று கேள்வியாக கேட்க,

 

“எஸ்” என்றவன் இவளை இங்கே எதிர் பார்க்கவே இல்லை.

 

“சொல்லுங்க ஆதனி” என்றதும்,

 

“எனக்கு ஒரு டவுட்” என்று அவள் கையில் இருந்த புத்தகத்தை அவன் முன் வைத்தவள், ஒரு பக்கத்தைத் திறந்து காட்டினாள்.

 

அவனோ “இது லீலா மேம் ஹாண்டில் பண்ற பாடம் தானே” என 

 

“ஆமா, அவங்க கிட்ட போன முறை டவுட் கேட்டேன். அதான் கிளாசில் இரண்டு முறை சொல்லிட்டேனே, இப்ப சொல்ல முடியாதுனு சொல்லிட்டாங்க. திரும்ப கேட்க பயமா இருக்கு. எனக்கு இந்த இடம் மட்டும் சொன்ன கூட போதும்” என 

 

அவனோ ஒரு பெருமூச்சு விட்டு  “ஈவினிங் வீட்டுக்கு வா ஆதனி, டுடே பீலிங் சோ டயர்டு” என்று அவன் சாதாரணமாக தான் சொன்னான். அவன் இருக்கும் தெருவில் தானே இருக்கிறாள் என்ற நினைப்பில் தான் சொன்னான்.

 

ஒரு நிமிடம் அதிர்ந்தவள் “நா…  நான் எதுக்கு வீட்டுக்கு…. நான் வரலை எனக்கு எதுவும் தெரிய வேண்டாம். நான் போறேன்” என்று பயத்தில் முகம் வெளுத்து சொல்ல,

 

அதை கண்டவன் “ஈசி ஈசி ஆதனி. நான் எந்த தப்பான எண்ணத்திலும் சொல்லல. உன் வீடு இருக்கிற அதே தெருவில் தான் என் வீடும் இருக்கு. நீ அங்க வந்து ரொம்ப மாசம் ஆகவே உனக்கு என் வீடு தெரிந்து இருக்கும் நினைச்சு கேட்டுட்டேன். உன் பாட்டி கூட வந்து இருக்காங்க” என்று அவன் அவளிடம் பேசிக்கொண்டே இருந்தவன் ஒரு நிமிடம் அவளது கையைப் பார்த்து அமைதியாகி, பின் அவள் சொன்ன சந்தேக இடத்தை விளக்க ஆரம்பித்தான். 

 

அவள் “தேங்க்ஸ்” என்று வெளியேறும்  போது “ஆரா” என ஒரு நிமிடம் அதிர்ந்து அவனை திரும்பி பார்த்தாள்.

 

அவளுக்கு தான் அவன் யார் என்று பார்த்த கணமே தெரியுமே. இருந்தும் தன்னை கண்டுக்கொள்ள கூடாது என்று தானே அவள் தினமும் கடவுளிடம் வேண்டினாள். இப்பொழுது அறிந்து கொண்டானே என்று பயம் தான் அதிகரித்தது, வேகமாக ஓடி விட்டாள்.

 

அவனும் ஓடும் அவளையே விசித்திரமாக பார்த்தான். அவன் பழகிய ஆரா இவள் இல்லை. எல்லாம் மாறி  உள்ளதே. பயம் என்பதே அவளுக்கு எளிதில் வராதே. இவளுக்கோ பயம் மட்டும் தான் எல்லாத்திலும்.  என்னவோ நடந்து இருப்பது மட்டும் புரிந்தது.

 

இதை உடனே தன் தாயிடம் சொல்ல வேண்டும் என்ற ஆவல் எழ எப்ப தான் மாலை ஆகும் என்ற எண்ணமே அவனிடம் இருந்தது.

 

“டேய், இன்னுமா அவங்க எங்க போனாங்கன்னு தேடறீங்க!” என்று யாரோடு கைபேசியில் கத்திக்கொண்டிருந்தான் கணேஷ்.

 

எதிர் பக்கம் சொன்ன செய்தியில் முகம் அதிருப்தியை காட்ட, அவனோ “உனக்கு இன்னும் ஒரு வாரம் தான் டைம். அதுக்குள்ள எனக்கு விஷயம் தெரியணும். இல்ல நீ இந்த உலகத்தில் இருந்ததே யாருக்கும் தெரியாம போய்டும்” என்று கைபேசியை வைத்தவன், அதே  கோபத்தில் “உங்களை எல்லாம் நம்பினேன் பாரு, என்னை சொல்லணும். அவங்களை பார்த்துக்கிறதை விட உங்களுக்கு என்ன தான் வேலையோ. அவங்க மட்டும் கிடைக்காம போகட்டும் உங்க எல்லாருக்கும் இருக்கு” என்று கோபமாக சென்றான்.

 

“என்ன புள்ள வந்ததுல இருந்து சுவற்றையே வெறிச்சிட்டு கிடக்கிற? எதாவது பிரச்சனையா, புள்ள?”  என்ற தன் பாட்டியை கண்ணுக்கே எட்டாத புன்னகையோடு பார்த்தவள்,

 

“எப்படி இருந்தேன் ஆத்தா நான். இப்ப மனுசங்க கிட்ட பேசவே பயமா இருக்கு. இன்னும் சொல்ல போன மனசுக்கு ரொம்ப நெருக்கமானவங்க கிட்ட கூட பேச முடியல. என்ன வாழ்க்கை இது? எது மாதிரி நான் வாழ்ந்துட்டு இருக்கேன்னு நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று கண்ணில் கண்ணீர் நிரம்ப, குரல் தழதழக்க ஆதனி சொல்ல,

 

“விடு புள்ள எல்லாமே ஒரு நாள் மாறும். போய் முகத்தை கழுவிட்டு  அடுத்த வேலையை பாரு. நான் எதித்த வீட்டுக்கு போயிட்டு வந்துடுறேன்” என்றதும், கல்லூரியில் குரு சொன்னது தான் நியாபகம் வந்தது.

 

“நானும் வாறேன் இரு ஆத்தா. இங்கவே தனியாஉட்கார  கடுப்பா இருக்கு” என்று முகத்தை மட்டும் கழுவிட்டு அங்கே சென்றாள்.

 

மாதவி “அடடே வா மா! உன் பாட்டி உன்னை பற்றி  சொல்லி இருக்காங்க. நானே பார்க்கணும்னு நினைச்சேன். நீயே வந்துட்ட. என்ன சாப்பிடுற” என்று இவளை கண்டு கேட்க,

 

“இல்ல எனக்கு எதுவும் வேண்டாம்” என்று தயக்கமாக மறுக்க,

 

“சரி மா” என்று அவரும் அவளை மேலே வற்புறுத்தாமல் பேச்சியிடம் பேச ஆரம்பித்தார். இருவருக்கும் பேச கற்று கொடுக்க வேண்டுமா என்ன!  நேற்று இரவு பார்த்த சீரியலில் ஆரம்பித்து இதோ மதியம் பார்த்த பார்த்த பழைய படம் வரை பேசிக்கொண்டே  இருக்க, 

 

ஆதனி சற்று கடுப்பாகி தான் போனாள். ‘தெரியாம வந்திட்டோமோ, இவங்க மொக்க போடுறதை பார்த்த இன்னும் கடுப்பு தான் ஆகுது’ என்று எண்ணிக் கொண்டே வீட்டை சுற்றிப்பார்க்க ஆரம்பித்தாள்.

 

அப்படியே படியேறி மாடிக்கு வந்தவள், அங்கே இருந்த அலங்காரப்பொருளை எல்லாம் ஆர்வமாக பார்த்துக் கொண்டே இருந்தவள், அப்பொழுது யாரோ தன்னையே குறுகுறுவென பார்ப்பது போல் இருக்க, திரும்பி பார்க்க அங்கே இவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான் குருப்ரசாத்.

 

“என்ன இந்த பக்கம்” என்று நக்கலாக கேட்க,

 

“பாட்டி.. பாட்டி கூட வந்தேன்” என்று திக்கி சொல்ல,

 

“அவங்க கீழ மட்டும் தான் இருப்பாங்க. மேல எல்லாம் வர மாட்டாங்க” என்று கேட்க அவளோ பதில் சொல்லாமல் முழிக்க அவனே திரும்ப “ஏன் ஆரா, இப்படி ஆகிட்டே? நீ எப்படி இருந்த, இப்ப பேச கூட யோசிக்கிற மாதிரி என்ன ஆச்சு உன் வாழ்க்கையில? நீ சொன்னால்  தானே எனக்கு தெரியும்… உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் நான் பண்ணுவேன். உனக்கு தெரியும் தானே, ஆரா? எதாவது சொல்லு…” என்று அவன் சிறுவயதில் பார்த்த பெண்ணை எதிர்நோக்கி கேட்க,

 

அவளோ என்ன சொல்வது எங்கே ஆரம்பிப்பது என்று யோசனையாகவே அவனையும் நிலத்தையும் மாறி மாறிப்  பார்த்துக்கொண்டே இருந்தாள்.

 

பின் அவளே மெதுவாக “அப்பறமா சொல்றேன்” என, அவள் சொல்றேன் என்று சொன்னதே அவனுக்கு பெரிய விஷயமாக இருந்தது.

 

பின் கீழே வந்தவன் முதல் வேலையாக அவளை பற்றி தன் அன்னையிடம் சொல்ல, அவரோ கொஞ்சியே தள்ளி விட்டார். “ஏன்டா முதலே சொல்லல” என்று குறைவேறு சொன்னார்.

 

பேச்சிக்கு அப்பொழுது தான் சற்று நிம்மதியாக இருந்தது. தன்னையும் தாண்டி ஒருவர் தன் பேத்தியை அக்கறையாக பாசமாக பார்த்துக்கொள்வது தெரிந்து சந்தோசம் அடைந்தார்.

 

அவர் சந்தோசத்தை கெடுப்பது போலவே “அண்ணே அவங்க மதுரை வரை போயிடு அங்க இருந்து தான் வேற எங்கவோ போய் இருக்காங்க. நம்ம கிட்ட நெருங்கிட்டோம்” என்று கைபேசி வழியாக சொல்ல,

 

கணேஷ் “அதையும் சீக்கிரமா கண்டுபிடிச்சி சொல்லு டா” என்று சற்று கட்டமாகவே சொல்லி விட்டு மனதில் ‘இன்னும் எவ்வளவு தூரம் தான் ஓடி போயிருப்பிங்க. கையில் கிடைக்கட்டும் இருக்கு உங்களுக்கு எல்லாம்’ என்று தன் கோபத்தையெல்லாம் சேர்த்து வைத்து இருந்தான்.

 

எந்த விஷயம் நடக்கவே கூடாது என்று பல நாட்களாக கடவுளிடம் வேண்டிக்கொண்டு இருந்தாளோ, அதே விஷயம் நடக்க, ஆதனியோ  பேச கூட முடியாமல் கண்ணில் கண்ணீரோடு சிலையாக நின்று விட்டாள். அப்படி என்ன தான் நடந்து இருக்கும்?

 

    

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்