Loading

 

 

“அம்மா, அந்த சுக்கு பாட்டி வீட்டுக்கு யாராவது குடி வந்திருக்காங்களா? கதவு திறந்து இருக்கு” என்று கேள்வியை கேட்டுக்கொண்டே தான் வீட்டுக்குள் நுழைந்தான்.

 

“ஆமா டா, யாரோ தூரத்து சொந்தம் போல. அது சரி மதியம் வரேன் சொன்ன இது தான் மதியமா” என்று கடிகாரத்தில் ஐந்தை நெருங்கும் முள்ளை பார்த்து கேட்க,

 

“வந்துடலாம்னு தான் மா நினைச்சேன், ஆனா வேலை இழுத்துடுச்சு. இந்த முறை எனக்கு ஆறு சப்ஜெக்ட் போட்டு இருக்காங்க. போன முறை நான்கு சுப்ஜெக்ட்க்கே நாக்கு தள்ளிடுச்சு. இந்த முறை மூச்சு  கூட விட முடியாது போல” என்று சோர்வாக சொல்ல,  “மேல் இடத்தில் பேசி பார்த்தியா” என்று அவரும் கவலையாக கேட்க, 

 

“பேசி பார்த்துட்டேன் மா. ஒரு ஸ்டாப் ரிலீவ் ஆகிட்டாங்க. சோ கண்டிப்பா இப்பதிக்கு மாற்ற முடியாது. பார்க்கலாம் இதுவும் ஒரு அனுபவம் தானே” என்று மாடியில் இருக்கும் தன் அறைக்கு செல்ல நினைத்தவன், பின் திரும்பி “அப்பா எங்க” என்றதும்,

 

“அவரை பற்றி கேக்காத டா. மனுஷனுக்கு இப்ப தான் வாலிபம் திரும்பி இருக்குனு நினைப்பு. வெளிய ஊர் சுற்ற போய்ட்டாரு.  மதியம் என்ன வெயிலு! போகாதீங்கனு சொல்றேன் எங்க கேக்கறாரு. அவரை பற்றி என்கிட்ட கேக்காத. நீ சாப்பிட வரியா இல்ல இன்னும் நேரம் ஆகுமா?”

 

“இப்ப எதுவும் வேண்டாம் மா, மதியமே லேட்டா தான் சாப்பிட்டேன். இருங்க நான் பிரெஷ் ஆகிட்டு வரேன்” என்று அவன் மேலே சென்ற நேரம் அவர்களின் வாசலில் “யாரவது இருக்கீங்களா?” என்ற குரல்  கேட்க, மாதவி வாசலுக்கு விரைந்தார். வயதான பெண்மணியை கண்டு “சொல்லுங்க மா, யார் வேண்டும்” என 

 

“நான் இந்த தெரு முக்குல இருக்கிற வீட்டுக்கு  குடி வந்து இருக்கேன். பக்கத்துல எதாவது கடை இருக்கானு கேக்க வந்தேன்” என்று குரலில் மட்டும் தான் சிறு தடுமாற்றம் தெரிந்ததே தவிர மற்றபடி உடல் வலிமையில் என்றும் பதினாறே என்பது போல் தான் தோற்றம் இருந்தது.

 

“நானே உங்க வீட்டுக்கு வரனும்தான் இருந்தேன் மா. வாங்க உள்ளே, கடை பக்கத்துல சின்னதா இருக்கும் மா. ஆனா மெயின் ரோடு போய்ட்டா அங்க ஒரு சூப்பர் மார்க்கெட் இருக்கு மா. அங்க எல்லாமே இருக்கும். வாங்க, டீ  போடுறேன். குடிச்சிட்டு போகலாம்”

 

“இல்ல மா, பேத்தி தனியா இருக்கா. வேற ஒரு நாள் வறேன். நன்றி மா. இப்ப வரை வயசு புள்ளைய வெச்சிட்டு தனியா என்ன பண்ண போறேன்னு ரொம்ப பயமா இருந்துச்சு உங்கள பார்த்ததும் ஒரு தைரியம் வந்து இருக்கு  பார்க்கலாம்” என்று கிளம்பி விட்டார்.

 

செல்லும் அவரை சில நிமிடங்கள் பார்த்துகிட்டு இருந்தார். அப்போது, “மாது, அங்க என்ன பண்ற? பிள்ளைக்கு ஒரு காபி டீ  போட்டு வைப்பானு பார்த்தா வெளியே வேடிக்கை பார்த்துட்டு இருக்க!” என்று கிண்டலாக மகன் கேட்க,

 

“அட சும்மா இருடா. கேட்கும் போது வேண்டாம் சொல்லுவா, இப்ப நான் போடலைனு குத்தம் சொல்ல வேண்டியது! அந்த வீட்டுக்கு ஒரு பாட்டியும் பேத்தியும் தான் வந்து இருக்காங்க. இப்ப தான் அந்த பாட்டி வந்து பேசிட்டு போனாங்க” 

 

“உனக்கு பேச ஒருத்தர்  கிடைச்சிட்டாங்கனு சந்தோசம் உன் முகத்தில் நல்லாவே தெரியுது. அந்த சந்தோசத்தை கொஞ்சம் தள்ளி வச்சிட்டு வந்தினா நம்ம எங்கையாவது பக்கத்தில் போயிட்டு வரலாம். அப்பறமா எனக்கு காலேஜ் ஓபன் ஆகிடுச்சுனா, நான் பிஸி ஆகிடுவேன்” என 

 

“சரி டா பக்கத்தில் புதுசா ஒரு கடை திறந்து இருக்காங்க. அங்க வீட்டுக்கு தேவையான எல்லாமே மலிவா இருக்காம். அங்க போயிட்டு அப்படியே உச்சி பிள்ளையாரை பார்த்துட்டு வந்திடலாம்” என்று தன் திட்டங்களை சொல்லிக்கொண்டே போக 

 

‘இந்த அம்மாக்கு வெளியே போறோம்னு சொன்ன மட்டும் எங்கிருந்து தான் இவ்வளவு எனர்ஜி வருதோ’ என்று நினைத்துக்கொண்டே “சரி மா போகலாம் போய் ரெடி ஆகிட்டு வாங்க” என  அவரும் சென்றார்.

 

ஆதனி “ஆத்தா, இங்க நிறைய இடம் இருக்கு தானே? இங்க எல்லாம் பூ செடிகள்  வைக்கலாமா?” என்று ஆசையோடு கேட்க, 

 

அவருக்கோ இவளின் வாழ்க்கையை நினைத்து பயம் சொல்லமுடியாத அளவுக்கு மனதை அழுத்திக்கொண்டு இருக்க, அதை வெளியே கட்டிக்காமல் “உன் விருப்பம் கண்ணு என்ன வேண்டுமோ செஞ்சிக்கோ. நான் வேண்டாம்னா சொல்லப்போறேன்?” என 

 

அவளும் அதை கேட்டு சந்தோசமா துள்ளி குதித்து செல்ல,  “அப்பனே ஈஸ்வரா உன் கிட்ட சொத்து பத்தா கேட்டேன் என் பிள்ளை நல்லா  இருக்கணும்னு தானே கேட்டேன். அதை தான் நீ கொடுக்கல. இப்ப என் பேத்திக்காக உன் கிட்ட நிற்கறேன் அவள் சந்தோசத்தை மட்டும் கெடுத்திராதே” என்று நின்ற இடத்தில் இருந்தே கடவுளிடம் வேண்டிக்கொண்டு இருந்தார். 

 

கல்லூரி திறக்கும் திங்கள் கிழமையும் வந்தது.

 

பேச்சி “இங்க பாரு புள்ள உனக்கு நான் சொல்லணும்னு இல்ல. இன்னும் எத்தன நாள் ஆண்டவன் என்னை உன் கூட இருக்க விடுவானோ தெரியல. உனக்கு துணை உன் படிப்பு மட்டும் தான். நல்ல படி புள்ள. வேற எதை பற்றியுமே இப்ப நினைக்காதே, நான் இருக்கிற வரை உன்னை எந்த தீங்கும் நெருங்க விட மாட்டேன்” என 

 

“இது வரை படிப்போடு அருமை எனக்கு புரிஞ்சது இல்ல ஆத்தா, ஆனா இப்ப எனக்கு நல்லாவே புரியுது. என் படிப்பு மட்டும் தான் என்னை காப்பாத்தும்.  நீ கவலை படாதே, நான் படிச்சிடுவேன்” என்று அவரை இறுக்க அணைத்து விட்டு கல்லூரிக்கு கிளம்பினாள்.

 

“டேய் மச்சா, இன்னிக்கு புது புது பறவைங்க வருவாங்க டா. உனக்கு என்ன கலர் வேண்டும்?” என்று சந்துரு என்ற முதுநிலை மாணவன் கேட்க,

 

அதற்கு அசோக் “எனக்கு பெருசா ஆர்வம் இல்லடா. நீயே பார்த்துக்கோ, என் கண்ணு மட்டும் எந்த பறவை மேல படுறதை என் பட்சி பார்த்துச்சு என் இறக்கையை ஒடச்சிடும் டா. நான் வரலை இந்த விளையாட்டுக்கு” என 

 

“அப்போ பிரபு நீ” என 

 

“எனக்கு எந்த லிமிட்டும் இல்ல மச்சி. நீ பாரு எனக்கு பச்சை பறவை தான் வேண்டும்” என சந்துருவோ “அப்ப நான் மஞ்சள் பக்கம் போயிடுறேன்” என்று இருவரும் பேசிக்கொண்டு இருக்க, ‘இதுங்க எப்ப திருந்த போகுதோ’ என்ற ரீதியில் பார்த்து வைத்தான் அசோக்.

 

கல்லூரி வாயிலில் வந்த ஆதனி ‘முருகா கூடவே இருப்பா’ என்று பயத்தை மறைத்துக்கொண்டு தன் பச்சை தாவணியை கையில் இறுக்கி பிடித்து கொண்டு உள்ளே தயக்கத்துடன் நுழைய,

 

சற்று தூரத்தில் “ஏய்!” என்ற குரலில் பதறி திரும்பியவள் அங்கே மூன்று ஆடவர்கள் நின்றதை கண்டு இன்னும் பதறி தான் போனாள்.

 

இது வரை அவள் படித்தது எல்லாம் பெண்கள் பள்ளி, பெண்கள் கல்லூரி தான், இங்கு தான் முதன்முதலாக இருவரும் படிக்கும் கல்லூரிக்கு வந்து இருக்கிறாள். பயத்திலே அவர்களை நோக்கி செல்ல,

 

பிரபு “மச்சி எனக்கு தான், சரியா” என அதற்கு சந்துருவோ “அது எல்லாம் முடியாது எனக்கு தான்” என 

 

“டேய் நான் சொன்ன பச்சை கலர் டா” என்றதும்  “அதே தான் நான் சொன்ன மஞ்ச கலரும் இருக்கே” என்று இருவரும் சிறிய விவாதத்திற்கு பின் “சரி இரண்டு பேருக்கும் பொது ஓகே வா” என்று பெருந்தன்மையாக சந்துரு சொல்ல,

“சரி டா சரி டா” என்று வாய் எல்லாம் பல்லாக பிரபு சொன்னான்.

 

“சொல்லுங்க அண்ணா” என்று சத்தமே கேட்காதவாறு அவர்களை நோக்கினாள்.

 

“அண்ணாவா அதை எல்லாம் விடு என்ன டிபார்ட்மெண்ட்” என்று பிரபு கேட்க, 

 

“கமெர்ஸ்” என  “பிரஸ்ட் இயர் தானே” என்ற கேள்விக்கு இல்லை என்று தலையை ஆட்ட,

 

“உன்னை இதுக்கு முன்ன பார்த்த மாதிரி இல்லையே. சரி என்னவோ போ” என்று பிரபு சொல்ல,

 

சந்துரு அடுத்து கேட்ட கேள்வியில் இவளோ பயந்து சத்தமாக அழுக ஆரம்பித்து விட்டாள். ஒரு நிமிடம் மூவருக்குமே ஒன்றும் திக் என்று இருந்தது.

 

சரியாக அந்த நேரம் தான் குரு தன் வண்டியில் கல்லூரி உள்ளே வந்தவன், வண்டியை அதன் இடத்தில் நிறுத்தி விட்டு,  வழமை போல் கண்ணாலே சுற்றுப்புறத்தை ஆராய அவன் கண்ணில் மூன்று ஆடவர் முன்னே ஒரு பெண் அழுது கொண்டு இருப்பது தெரிய கோவமாக அவர்களை நோக்கி வந்தான்.

 

அவன் வருவதை கவனித்த அசோக் “இந்தாமா பசங்க தெரியாம கேட்டுட்டாங்க நீ கிளம்பு முதலில்” என அவளின் அழுகை இன்னும் கூடியதே தவிர குறைய வில்லை.

 

“இங்க என்ன நடக்குது” என்று தன் சினத்தை மறைத்து கொண்டு கேட்க, அவனை அறிந்த அவர்களோ “சாரி சார் சாரி”என்று வேகமாக சென்று விட்டனர்.

 

“இடியட்ஸ்” என்று திட்டியவன் அழுது கொண்டு இருந்தவளை நோக்கி “பர்ஸ்ட்  இயரா?” என்று கேள்வி எழுப்ப,

 

இல்லை என்று தலையை ஆட்ட, அவனோ சிறிய யோசனைக்கு பின் “ஆதனி ரைட்?” என்று கேள்வியாக பார்க்க, தன் பெயரை சரியாக சொன்னதும் அதிர்ந்து அவன் முகத்தை பார்த்தவள் முகத்தை பார்த்து இன்னும் அதிர்ந்து தான் போனாள்.

 

சிறிய  தயக்கத்துடன் “அவங்க எதாவது தப்பா பேசினாங்களா?” என்று கேள்வியாக கேட்டான். இப்பொழுது தான் ராக்கிங் என்ற பெயரில் எல்லா தப்பயை செய்கிறார்களே. அந்த பயம் அவனுக்கு.

 

இல்லை என்று அதுக்கும் தலையை ஆட்ட, அதில் சற்று கடுப்பாகி “பின்ன என்னதான் சொன்னாங்க?” என்றதும் 

 

“பாட்டு பாட சொன்னாங்க” என்ற அவளை புரியாத பார்வை பார்த்து கொண்டே “அதுக்கு எதுக்கு இவ்வளவு அழுகை. பாட முடியாதுனு சண்டை போடுறதை விட்டுட்டு, போங்க முதல் நாள் கிளாஸ் அதுவுமா அழுதுட்டே போக வேண்டாம். அவங்களை நான் கண்டிக்கிறேன். இனி உங்க பக்கம் வரமாட்டாங்க” என்றதும் தான் அவள் நிம்மதியாக பெருமூச்சுடன் வகுப்பறையை நோக்கி சென்றாள்.  

  

வணிகவியல் மூன்றாம் வருட வகுப்பை  தேடி மூச்சு வாங்க உள்ளே சென்றவள், முதல் வரிசையில் அமர, “ஹலோ புதுசா”என்ற குரலில் திரும்பி பார்க்க,

 

அங்கே தன் முத்து பற்கள் தெரிய சிரித்துக்கொண்டே நின்று இருந்தாள், மேனகா.  ஆதனி ஆம் என்பது போல் தலையை ஆட்ட, 

 

“நான் மேனகா, உன் பெயர் என்ன? இதுக்கு முன்ன எங்க படிச்ச? இந்த காலத்திலும் காலேஜ்க்கு தாவணி போட்டுட்டு வந்து இருக்க, உன் வீட்டில் ரொம்ப ஸ்ட்ரிக்டா? எங்க இருக்கு உன் வீடு? அது எல்லாம் இருக்கட்டும் ஏன் இப்படி மூச்சு வாங்கற?” என்று அவள் தன் கேள்வி கணைகளை நிறுத்தாமல் கேட்டுக்கொண்டே செல்ல,

 

முதலில் தயங்கியவள் பின்  “வெளிய அங்க சீனியர் அண்ணாங்க ராகிங் பண்ணாங்க. பயந்துட்டேன்” என 

 

“அட அந்த ட்ரையோ கேங் தானே. அவங்க எல்லாம் டம்மி பீஸ் போக போக நீயே தெரிஞ்சிப்ப” என்று அவள் இவளுடன் பேசிக்கொண்டு இருக்கும் போதே வேகமாக ஒருத்தி இவளை நோக்கி வந்தாள்.

 

“உனக்கு என்னடி” என்று அவளை பார்த்து கேட்க,

 

“நமக்கு யார் தெரியுமா இன்சார்ஜ்” என்று சந்தோசம் பொங்க கேட்க, ஒரு நிமிடம் யோசித்த  மேனகா கண்கள் மின்ன “யாரடி?  நம்ம ஹீரோவா?” என 

 

அவளும் அதே ஆர்வத்தில் ஆம் என்று தலையை சந்தோஷமாக ஆட்டினாள், அவள் தான் தனா.

 

தனா “இவள் யாரு புதுசா இருக்கா” என்னும் போதே வகுப்பறையில் நுழைந்தான் அவன்.

 

“ஹாய் கைஸ் இந்த செம் நான் தான் உங்க கிளாஸ் இன்சார்ஜ்.  உங்க எல்லாரோட பெயரும் தெரியாது, ஒரு சிலர் மட்டும் தெரியும் சீக்கிரமே எல்லாரோட பெயரையும் தெரிந்துக் கொள்வேன். இந்த வருடம் புதுசா ஜாயின் பண்ணவங்க இன்றோ பண்ணிக்கோங்க” என்றதும் தயக்கத்துடன் எழுந்தாள் ஆதனி.

 

“நா… நான் ஆதனி ஆதிரா. இதுக்கு முன்னாடி வேற காலேஜில் படிச்சேன் இப்ப இங்க பாட்டி கூட வந்து இருக்கேன். என் அப்பா… அப்பா” என்று அதற்கு மேல்  என்ன சொல்வது என்று தெரியாமல் நிற்க,

 

அவள் கண்களில் எதோ ஒரு வித தயக்கத்தை கண்ட குரு, “ஓகே சிட் நான் உங்களுக்கு இரண்டு பேப்பர் எடுக்க போறேன்” என்று அவன் வகுப்பை தொடங்கி விட்டான்.

 

வேலூர் மத்திய சிறைச்சாலை, சில வருட தண்டனை காலம் முடிந்து அன்று தான் விடுதலை ஆனான் ஜெயகணேஷ். வயதோ நாற்பதுகளை கடந்து சில வருடங்கள் இருக்கும். 

“கணேஷ் அண்ணா!” என்ற ஆரவாரத்துடன் கொண்டாட்டம் தான் அங்கே தொடங்கியது. பெயர் சொல்லும் அளவிற்கு பெரிய ரவுடி தான். 

 

“மூர்த்தி, அவங்க இருக்கிற இடம் தெரிஞ்சுதா” என்று கோபமாக கேட்க,

 

“இன்னும் இல்ல அண்ணா, சீக்கிரமா கண்டுப்பிடிக்கிறோம். இப்ப தானே வந்து இருக்க கண்டு பிடிச்சிடலாம்” என்று பயத்தை மறைத்துக் கொண்டு சொல்ல,

 

“இதை சொல்ல உனக்கு வெக்கமா இல்ல. அவங்க போன மூணு மாசமா என்ன பு.. பண்ணிட்டு இருக்கீங்க? இனி நானே பார்த்துகிறேன். கையில் மட்டும் கிடைக்கட்டும் அப்பறமா இருக்கு கச்சேரி” என்று வேகமாக செல்ல மூர்த்தி என்பவனும் அவன் பின்னே சென்றான்.

 

கல்லூரி முடித்து வந்ததில் இருந்தே சோர்ந்து இருக்கும் பேத்தியை யோசனையாக பார்த்தவர், “என்ன புள்ள என்ன ஆச்சு? எதாவது பிரச்சனையா? என் கிட்ட சொல்லு அத்தா” 

 

“பிரச்சனை இல்லம் எதுவும் இல்ல அத்தா. எதோ தேவையே இல்லாத யோசனை” என 

 

“நீயே சொல்லிட்டியே தேவையே இல்லாததுனு. போய் தூங்கு நேரம் ஆகுது பாரு”  என்று அவரும் தூங்க செல்ல, தூக்கமே வராமல் தன் கால்களை கட்டிக்கொண்டு திண்ணையில் அமர்ந்து இருந்தாள்.

 

அதே சமயம் தன் அறையில் இருக்கும் பால்கனிக்கு வந்த குரு தன் நண்பர்களுடன் போனில் பேசிக்கொண்டே கண்களை சுழல விட, அவன் கண்ணில் பட்டதோ சோகமே உருவெடுத்த அந்த மங்கையை தான்.

 

“நான் அப்பறமா பேசறேன் டா” என்று பேசிக்கொண்டு இருந்ததை விட்டுட்டு இவளை யோசனையோடு பார்த்தான். எதிரே இருக்கும் வீடு இவன் அறையில் இருந்து தெளிவாக தான் தெரியும். என்றும் ஈர்க்காத அந்த வீடு இன்று அவனை ஈர்த்தது.

 

‘இந்த பொண்ணு ஆதனி தானே. ஓஒ.. இங்க வந்து இருக்கிறது அவங்க குடும்பம் தான் போல. ஆனால், இந்த பொண்ணு கூட  எனக்கு ரொம்ப நெருங்கிய பழக்கம் இருக்கிற மாதிரியே  தோணுதே’ என்று தன் நெஞ்சை தொட்டு யோசிக்கும் போதே, அங்கே 

 

கையில் இருந்த ஒரு பொருளிடம் “நான் தனி ஆளு இல்ல என்ன நடந்தாலும் என் கூட நீ இருக்க. கண்டிப்பா நீ இருப்ப” என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டே அந்த பொருளை இறுக்கி பற்றி கொண்டாள். 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்