Loading

உயிர் உறை 9

நேசப்பிழை 2

நன்றாக பேசிக்கொண்டிருந்த ஆதர்ஷினி திடீரென சென்றிடவும், அவளையே பாலா புரியாது பார்த்திருந்தான்.

“என்னடா பாப்பா பேசியாச்சா?” கிண்டலாகக் கேட்டபடி அவனின் அருகில் வந்த வசீகரன் பாலாவின் கழுத்தை கட்டியவாறு அவனை அழுத்தினான்.

“நான் இந்த வீட்டுக்கு வரும் போது எனக்கு வயசு பதினைந்து வசீ. அப்போ என்னையும் மதித்து, சாப்பிட்டியா கேட்க எனக்கிருந்த ஒரே ஆள் பாப்பா மட்டும் தான். மகாம்மா, அவங்களால் பேச முடியாது. எதுவாயிருந்தாலும் பாப்பா தான் வந்து என்கிட்ட பேசும், சொல்லும்… நான் அடிதடியில் இறங்கவும் என்கிட்ட பேசுறதையே விட்டுருச்சு. இருந்தாலும் எப்போவாவது ஜாடையா திட்டவாது செய்யும். அன்னைக்கு ரோட்டுல ஒருத்தனை போட்டு அடிச்சனே! அதை பாப்பா பார்த்திருக்கும் போல… அன்னையிலிருந்து சுத்தமா என் முகத்தைக்கூட பாக்குறது இல்லை. அதான் இன்னைக்கு என் பொறந்தநாள் பேசாதோன்னு ஒரு பயம். இப்போ தான் நிம்மதியா இருக்கு” என்று தன் உணர்வுகளை பாலா பகிர்ந்துகொள்ள, குறுக்கிடாது கேட்டுக்கொண்ட வசீ தன்னுடைய மனதில் வேறொன்றை நினைத்திருந்தான்.

அவனின் நினைப்பு…

தனக்கென இருக்கும் உறவுகளில் சென்று நின்றது.

வசீகரனுக்கு உறவுகள் இருக்கா? அதை அவன்தான் சொல்ல வேண்டும். நொடியில் கசங்கிய மனதை மீட்டிருந்தான். தன்னுடைய நோக்கம் நிறைவேறும் நாளுக்காகக் காத்திருக்கிறான்.

அவனின் நோக்கம் என்னவோ?

அனைத்தும் துறந்து இங்கு இருந்திட காரணம் என்னவோ?

தனக்குள் உழன்றவனாக நின்றுவிட்ட வசீயை பாலா தான் தோள் தொட்டு நிகழ் மீட்டான்.

“என்னடா யோசனை?”

“நத்… ஆங், ஒண்ணுமில்லை” என்ற வசீ வீட்டிலிருந்து வெளியில் வரும் முத்துச்சாமியை கண்டுவிட்டு, வேகமாக அவர் அருகில் சென்றான்.

“போலாமா வசீ?”

வசீ தலையசைத்ததும், பாலா காரின் ஓட்டுநர் இருக்கையில் சென்று அமர, முத்து அவனுக்கருகில் அமர்ந்தார்.

வழக்கம்போல் வசீ தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அவர்களுக்கு முன் சென்றான்.

நகரத்தை தாண்டி ஒதுக்குப்புறமாக அவர்களின் இருள் உலகிற்கு ஏதுவாக தனித்து இருக்கும் பங்களா போன்ற வீட்டின் முன் சென்று நின்றனர்.

முதலில் உள் நுழைந்த வசீயை பார்த்ததும், அங்கொருவர் இங்கொருவருமாக நின்றிருந்த முத்துவின் அடியாட்கள் யாவரும் ஒன்று சேர்ந்தனர்.

“என்னலே எல்லா பயலுவளும் சாப்பிட்டாச்சா?” கேட்டுக்கொண்டே உள் சென்றார். அவர்களிடம் அவர் பதிலெல்லாம் எதிர்பார்க்கவில்லை.

“என்ன பாலாண்ணா, பொறந்தநாள் ட்ரீட் இல்லையா?” முத்துவின் பின்னால் வந்த பாலாவிடம் ஒருவன் கேட்க,

“வசீகிட்ட சொல்றேன். அவன் வைப்பான் ட்ரீட்” என்று பாலா சொல்லி முடிக்குமுன், அவன் தலைக்கு மேல் கை கூப்பி வணங்கினான்.

“அந்த பயம் இருக்கணும்” என்ற பாலா உள்ளே சென்றான்.

அவ்வீட்டின் ஒரு அறையில் ஒருவனை கட்டி வைத்திருந்தனர்.

பார்த்ததுமே தெரிந்தது இரவு முழுக்க அவனுக்கு அவர்கள் தண்ணீர் கூட குடிக்க கொடுக்கவில்லையென.

அருகிலிருந்த மேசையை பார்த்தான் வசீ. தண்ணீர் குவளை இருக்க… அதனை எடுத்தவன், அவனின் கட்டுகளை அகற்றி குவளையை அளித்தான்.

தண்ணீர் குடித்து முடித்தவன் வசீயை நன்றியோடு பார்க்க…

“உன்னை நேத்து இங்க கூட்டியாந்ததே அவன்தாம்ல” என்ற பாலா மீண்டும் அவனை கட்டிபோட்டான்.

“அவன் எழுந்து நடக்குற நிலையிலா இருக்கான். நீயே விட்டாலும் அவனால் தப்பிப்போக முடியாது. எதுக்கு கட்டுற?” வசீக்கு பிடிக்காத ஒன்றை செய்யும் பாவனைதான்.

“ஐயா வர்றார்?” என்ற பாலா வசீ சொல்லியதை கேட்கவில்லை.

கட்டிப் போடப்பட்டிருந்தவனின் முன் ஒரு இருக்கையை பாலா இழுத்துப்போட… அதில் முத்து அமர்ந்தார்.

“சொல்லு… எதுக்காக நான் எங்க போய் வாரன்னு நோட்டமிட்டுட்டு இருந்த?” கால் மேல் காலிட்டு, தொடையில் கை முட்டியை பதித்தவராக முகத்தில் கோபத்தை தேக்கி வினவினார்.

“இப்போ நீ சொல்லலன்னா, போட்டுத்தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்.” முத்து அவனை கொன்றுவிடுவதாக மிரட்டிய அடுத்த கணம் வசீ அவ்வறையை விட்டு வெளியில் வந்திருந்தான்.

“என்னலே வேலை முடிஞ்சுதா?” அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்த குமார் வசீயிடம் வினவ, பதில் சொல்லாது அமர்ந்திட்டான்.

வாசுவுடன் ஒரு பெண்ணும், சிறுமியும் உடன் வர, அவர்கள் யாரென வினவிய வசீயின் பார்வைக்கு வாசு பதில் சொல்லிய அடுத்த நொடி வசீயின் கரம் வாசுவின் கன்னத்தில் இடியென இறங்கியிருந்தது.

“வசீ…”

“அவன் பண்ணதுக்கு இவங்க என்ன பண்ணுவாங்க? இவங்களை கூட்டிட்டுப்போய் விட்டுட்டு வா!” சிங்கமென கர்ஜித்தான் வசீ. வாசு இரண்டடி பின்னால் நகர்ந்திருந்தான்.

அவனின் கத்தலில் சிறுமி மிரண்டு அன்னையிடம் ஒண்ட… வசீக்கு தன்மீது, இந்த வேலை செய்யும் ஒவ்வொருவரின் மீதும் கோபம் கட்டுக்கடங்காது பொங்கியது.

ஆனால் இதைவிட்டால் அவனுக்கு வேறெதுவும் இல்லையே? யாருமற்ற நிலையில் கிடைத்த வேலையென பற்றிக்கொண்டான்.

“சொல்றேன்… அப்படியே நின்னுட்டு இருக்க… கூட்டிட்டு கிளம்புடா!” மீண்டும் வசீ வாசுவிடம் தகித்தான்.

“நான் தான் கூட்டிட்டு வர சொன்னேன்.” பாலா சொல்ல… வசீ உடல் விறைத்து நின்றான்.

“இது தப்பு பாலா…”

“செய்யுறதே பாவச்செயல் தான். இதில் தப்பு சரின்னு எதுவுமில்லை வசீ” என்ற பாலா, “பின் எப்படித்தான் அவனோட வாய் திறக்க வைக்கிறது?” எனக் கேட்டான்.

“நீ அவங்களை கூட்டிட்டு போ!” வாசுவுக்கு உத்தரவிட்ட வசீ, அறைக்குள் வேகமாக நுழைந்தான்.

அதுவரையிலுமே அவன் முத்து கேட்ட கேள்வி எதற்கும் வாய் திறந்தான் இல்லை.

“நீங்க வெளிய இருங்க… நான் என்னன்னு கேட்டு சொல்றேன்” என்று வசீ சொல்லிட முத்துச்சாமி அறையைவிட்டு வெளியேறினார்.

குமார் மட்டும் உடனிருந்தான்.

வாசுவும் குமாரும் அழைத்து வந்தது அவர்கள் கட்டிப்போட்டு வைத்திருக்கும் நபரின் மனைவி மற்றும் மகள். இந்த மாதிரி ஆட்கள் எத்தனை சித்தரைவதை செய்தாலும், காட்டிக்கொடுத்திட மாட்டார்கள் என்பது அவர்கள் அறிந்தது. அதற்காகவே அவனை மிரட்டுவதற்காக பாலா தான் அழைத்து வரச் செய்திருந்தான்.

வசீ விட்டுவருமாறு கூறியதும், முதலில் தயங்கினாலும் அவன் சொல்லியதை செய்திடுவான். எப்படியும் அவனிடமிருந்து விடயத்தை வாங்கிவிடுவான் என்பதை தெரிந்திருந்த பாலா வாசுவுக்கு ஜாடை காட்டிட, அவன் இரு பெண்களையும் அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

“இந்த தொழிலில் இருந்துட்டு இப்படி பாவமெல்லாம் பார்த்தால் சரிவராது. வசீயிடம் சொல்லி வை பாலா.” முத்துச்சாமி சொல்ல பாலா தலையாட்டிக்கொண்டான்.

அறைக்குள்ளிருந்து ஐந்து நிமிடத்தில் வெளிவந்த வசீ…

“உப்பளத்தில் உங்களை எதிர்த்து பிரச்சனை செய்த சாமி தான் உங்க தினசரி நடவடிக்கைகளை நோட்டமிட சொல்லியிருக்கான். ஏன் எதற்கு காரணம் அவனுக்கும் தெரியல” என்றான்.

நாடியை நீவியபடி இருந்த முத்துச்சாமி, பாலாவிடம் கண் காட்டிட…

பாலா அவ்வறைக்குள் சென்ற அடுத்த நொடி டப்பென்று துப்பாக்கி சுடும் சத்தம் கேட்க, வசீ தன் கைகளை இறுக மூடி உடல் விறைத்து நின்றான்.

“இப்போ இவனை வெளியில் விட்டால், அந்த சாமிக்கிட்ட போய் சொல்லுவான். எதுக்கு அவனுவளுக்கு நாமளே வழியமைச்சுக் கொடுக்கணும். அதான். சில நேரங்களில் நமக்கான நியாயங்கள் எல்லாமே சரின்னு போகணும் வசீ” என்ற முத்து அவனின் தோளினை தட்டிச் சென்றார்.

இரண்டடி முன் சென்றவர் திரும்ப வந்து,

“உப்பளம் விடயத்தை பாலா பார்த்துப்பான். நீ அந்த கட்சி தலைவரை பார்த்து எப்போ பணம் தராருன்னு கேளு” என்றவராக நகர்ந்தார்.

உப்பளம்… முத்துச்சாமிக்கு பல ஏக்கர்களில் உப்பளம் இருக்கிறது என்று வசீக்கு தெரியும். ஆரம்ப காலகட்டங்களில் அவனும் அங்கு சென்றிருக்கிறான்.

அதெல்லாம் பாலாவைப்போல் வசீயும் இருப்பானென்று முத்துச்சாமி நினைக்கும் வரை தான். என்று வசீயின் நியாய பக்கங்கள் முத்துச்சாமிக்கு உறுத்தலாக ஆரம்பித்ததோ அன்று முதல் சில காரியங்களில் வசீயை அவர் ஒதுக்கிவிட்டார்.

இதெல்லாம் தெரிந்தாலும் வசீ பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அவனைப் பொறுத்தவரை அடிதடி ரவுடிசமாகவே இருந்தாலும், ஒரு எல்லைக்கு மேல் அவனால் கொலை கொள்ளை, கடத்தல் என்று இறங்கி செய்திட முடியாது. அது தெரிந்து வசீயும் தன்னுடைய எல்லையில் அனைத்தையும் முடித்துக்கொள்வான்.

தன்னால் முடிந்தவரை பெரும் தவறுகளை அவர்களை செய்யவிடாது தடுத்திடுவான்.

இப்போதும் உப்பளத்தில் என்ன நடக்கிறதென்று அவன் அறிவான். ஆனால் அவனின் எண்ணம் வேறு. அதனால் அமைதியாக இருக்கிறான்.

பாலாவை ஆழ்ந்து பார்த்த வசீ எதுவும் பேசாது சென்றுவிட்டான்.

முத்துச்சாமி சொல்லிய அரசியல்வாதியை பார்த்து பேசி வந்த வசீ, அவர் கொடுத்த பணம் அடங்கிய பெட்டியை முத்துச்சாமியிடம் கொடுப்பதற்காக அவர் வீட்டிற்கு சென்றான்.

அந்த பணம் எதற்காக என்று ஓர் யூகம் வசீக்கு இருக்கிறது. அதன் உண்மையை அறிய அவன் சற்று பொறுமையாகத்தான் இருக்க வேண்டும்.

வசீ வீட்டிற்குள் சென்ற போது, கூடத்தின் நடுவிலிருந்த இருக்கையில் அமர்ந்து ஆதர்ஷினி எதுவோ எழுதிக் கொண்டிருந்தாள்.

முன்னாலிருந்த டீபாயில் எழுதி முடித்த சில காகிதகங்கள் வைக்கப்பட்டிருந்தன.

அவளைத் தவிர வீட்டில் யாருமில்லை எனத் தெரிந்ததும், முத்துவிற்கு அலைப்பேசி வாயிலாக அழைத்தான்.

“உன்னை வர சொல்லியதையே மறந்துட்டேன் வசீ. அவசர வேலையா வந்துட்டேன். மகாகிட்ட பெட்டியை கொடுத்துடேன்” என்றவர் அவனின் பதிலை எதிர்பாராது வைத்துவிட்டார்.

ஆதர்ஷினிக்கு எதிரே இருந்த ஒற்றை கதிரையில் சென்று அமர்ந்தவன், மகா எங்கிருக்கிறார் என்பதைப்போல் பார்வையை சுழற்றினான்.

இப்போது எழுதிக்கொண்டிருந்த காகிதத்தை வைத்துவிட்டு, அதிலிருந்ததை மடிகணினியில் தட்டச்சு செய்ய ஆரம்பித்தாள்.

‘இவள் நம்மை கவனித்தாளா இல்லையா?’

வசீக்கு அவளை எப்படி அழைப்பதென்றும் தெரியவில்லை. நேரம் தான் சென்றது.

ஆதர்ஷினி வேலையில் கண்ணாக இருந்திட, வசீ அவளையே பார்த்திருந்தான். அவனுள் திடீரென ஏதோவொன்று மொட்டவிழும் உணர்வு.

இதயம் படபடத்தது. அவளின் நெற்றியில் தொடங்கிய அவனின் பார்வை, அவளின் கண்கள், நாசி என இடம்பெயர்ந்து இதழில் நிலைத்தது.

மனதின் தாளம் தப்பியது அவனுள். ஏதோ தடம் புரள்வதை போலிருந்த கணம், இதயத்தில் மற்றொரு பூவின் வாசம்.

மனதை திடப்படுத்தியவன் ஆழ்ந்த மூச்சினை வெளியேற்றி தன்னை சமன் செய்தான்.

‘என்னடா இது புதுசா? இது நீயில்லையே! வந்த வேலையை மட்டும் பாருடா.’ மனதோடு கூறிக்கொண்டவன், ஆதர்ஷினியை அழுத்தமாக பார்த்துவிட்டு அங்கிருந்து எழ, அவள் அவனை கவனித்துவிட்டாள்.

“எப்போ வந்தீங்க. நான் கவனிக்கலையே!”

அவளுக்கு அவன் பதில் சொல்லாது, தன் கையிலிருந்த பெட்டியை அவள் முன் நீட்டினான்.

“வாய் திறக்க மாட்டிங்களோ?”

பாலா வசீயைப் பற்றி நல்ல விதமாக சொல்லியதால், இத்தனை நாட்கள் அவனை அலட்சிப்படுத்தியது போல் இன்று அவளால் அலட்சியம் செய்ய முடியவில்லை.

அதோடு வசீயிடம் பேச அவளுக்கு எவ்வித தயக்கமும் இல்லாது இயல்பாகவே வந்தது.

வசீயால் அவளின் கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை.

ஏனோ இன்று புதிதாய் ஆதர்ஷினியின் முன் அவன் தன் இயல்பை தொலைப்பது போலிருந்தது.

“இதை ஐயா வீட்டில் கொடுக்க சொன்னாங்க!” எங்கோ பார்வையை பதித்துக் கூறினான்.

“என்னது?”

“பணம்.”

“ஹோ… அப்போ இருங்க” என்றவள் உள்ளே செல்ல…

வசீ அவள் விட்டுச்சென்ற மடிகணினியின் திரையை பார்வையிட்டான்.

******************

மொட்டை மாடியில் தண்ணீர் தொட்டியின் மேல் பாலா, குமார், வாசு உறங்கியிருக்க… உறக்கம் வராது மொட்டைமாடியின் கைப்பிடி சுவற்றில் சாய்ந்து மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு தூரத்து விண்மீனை பார்த்தவாறு நின்றிருந்தான் வசீகரன்.

கண்களை மூடினாலே… நொடிக்கும் குறைவாக அவன் ரசித்த ஆதர்ஷினியின் முகமும், படபடக்கும் அவளின் இமைகளும், மதுரம் நிறைந்த சிவந்த அதரங்களுமே வலம் வந்து அவனை இம்சித்தன.

அங்கு அவளது வீட்டில் தன்னை மறந்து அவளை ரசித்தபோது இருந்த குழப்பம் இப்போது அவனுள் இல்லை.

ஒருவித பரவச நிலையில் மூழ்கிக் கொண்டிருந்தான்.

ஏற்கனவே காதலென்று இல்லாமல் ஒரு பெண்ணால் ஈர்க்கப்பட்டிருந்தவனின் மனம், இன்று மொத்தமாக ஆதர்ஷினியின் பக்கம் சரிந்து நிற்கிறது.

வசீ பெட்டியை நீட்டியதும் என்ன ஏதென்று சொல்லாது அவள் உள்ளே சென்றிட… தன்னைப்போல் அவனது கண்கள் அவள் விட்டுச்சென்ற மடிகணினியின் திரையில் பதிந்தது.

பார்த்தது பார்த்தபடி நின்றுவிட்டான்.

அவனால் அவனது விழிகளையே நம்ப முடியாது போனது.

டீபாயின் மீது அவள் வைத்துச்சென்ற காகிதங்களை எடுத்து பார்த்தவனின் கண்கள் ஆச்சரியத்தில் அகல விரிந்தன.

அவன் ரசிக்கும் ஒன்று.

தன்னையே கிள்ளி பார்த்துக்கொண்டான்.

ஆதர்ஷினி வருவது தெரிந்ததும் காகிதத்தை வெகு நிதானமாக கீழே வைத்தான்.

“நல்லாயிருக்கு.”

“தேன்க்ஸ்” என்றவள், “ரவுடிக்கு ரசனையெல்லாம் இருக்கும் போல” என்றிட…

“நானும் மனுஷன் தான்” என்ற அவனது  பதிலில் உறைந்து நின்றாள்.

“சாரி… ஐ டிடின்ட் மீன் இட்.”

“பட், ஐ மீன் இட்.” அவள் சொல்லியதற்கு பட்டென்று அவன் திருப்பிக்கொடுக்க கோபம் கொண்டுவிட்டானோ என அவள் அவனை உற்று பார்க்க…

அவன் முகம் சாதரணமாகத்தான் இருந்தது. சொல்லப்போனால் எப்போதும் இருக்கும் இறுக்கமின்றி இந்நொடி கனிவாக இருந்தது என்றே சொல்லலாம்.

ஆதர்ஷினி வசீயின் முகம் பார்த்தபடியே இருக்க…

“இப்படியே பார்த்து உள்ளிழுத்துக்கலாம் நினைச்சியா?” எனக் கேட்டான்.

அவனின் வார்த்தையின் பொருள் அவளுக்கு சுத்தமாக விளங்கவில்லை.

மலங்க விழித்தாள்.

“ரொம்ப யோசிக்காத!” என்றவன், “மூளை உருகி வழியப்போகுது” என்று கிண்டல் செய்திட, அவனை உலக அதிசயம் போல் வியந்து பார்த்தாள்.

வசீகரன் எப்போதும் இப்படியில்லையே!

அவளிருக்கும் திசையின் பக்கம் கூட அவனது பார்வை திரும்பாது. ஆனால் இன்று அவனது பார்வை பேச்சு எல்லாம் புதிதாய். மாற்றமாய்!

ஆவென வாய் திறந்தது கூட தெரியாது அவள் நின்றிருக்க, பட்டென்று அவளின் தாடையின் கீழ் ஒற்றை விரல் வைத்து வாயினை மூடச் செய்தான்.

அவள் தான் அவனது தீண்டலில் விதர்விதர்த்து போனாள்.

உறை நிலைக்குச் சென்றவளை கண்சிமிட்டி நிகழ் மீட்டான்.

அவளால் அவனது திடீர் செய்கைகளை ஏற்றுக்கொள்ள முடிந்தது தான் அவளுள் பெரும் ஆச்சரியம்.

விநோதன் பதிந்து போன இதயத்தடத்தில் வசீகரனின் முகம் பொதிந்து நின்றிட… மூச்சு விடவும் சிரமம் கொண்டவளாக இருக்கையில் தொப்பென்று அமர்ந்து காற்றினை உள்ளிழுத்தாள்.

‘விநோ…’ அவள் மனம் கூவியது.

‘இதெப்படி சாத்தியம்?’ தலையை கைகளால் தாங்கியவளாக கவிழ்ந்திட்டாள்.

“என்னாச்சு?”

வசீயின் குரலில் தன்னை நிதானப்படுத்தியவள்,

“நத்திங்… ஒண்ணுமில்லை” என்று தலையசைத்தாள்.

அவளுக்கு அவளை குறித்தே சிந்திக்க வேண்டும் போலிருந்தது. அவனுக்கோ இப்போது தான் தெளிவாக இருப்பதை போலிருந்தது.

“அம்மா வருவாங்க. அவங்ககிட்ட கொடுத்திடுங்க” என்றவள், தன்னுடமைகளை எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்றுவிட்டாள்.

உள்ளே நுழைவதற்கு முன்பு வசீயை ஆதர்ஷினி திரும்பிப் பார்த்த பார்வை அவனை சில்லென்று நனைத்தது.

தகித்து திரிபவனின் தேகம் மழையில் தோய்ந்த குளுமையில் சிலிர்த்து அடங்கியது.

சில நிமிடங்களில் மகா வர அவரிடம் பெட்டியை கொடுத்துவிட்டு, நேராக தங்களுடைய பிளாட்டிற்கு வந்தவன் தான்… முற்றும் முழுதாக ஆதர்ஷினியின் நினைவுகளோடு லயித்துவிட்டான்.

எப்போது மற்ற மூவரும் வந்தார்கள், இரவு என்ன உண்டார்கள், தான் எப்படி மொட்டைமாடி வந்தோம் என்பது எதுவும் வசீயின் கருத்தில் பதியவில்லை.

தன்னைப்போன்ற அடிதடி ஆட்களுக்கெல்லாம் ரசனையே ஆபத்தென்று சொல்லும் போது, காதல் எப்படி சாத்தியமாகும்.

அதுவும் ஒரே நாளில் ஒரு நொடியில் ஆதர்ஷினியின் மீது அவனுள் எப்படி இத்தனை காதல். விடை கூற வேண்டியவன் கூறும் நிலையில் இல்லை.

கேட்டாலும் சொல்ல முடியாத நிலையில் அவன்.

வெகு நாட்களுக்கு பின் எவ்வித ஓட்டமுமின்றி சீரான மனநிலையில் சந்தோஷமாக தன்னை உணர்கிறான்.

வேகமாக தண்ணீர் தொட்டியின் ஏணியின் மீது ஏறி, உறங்கிக் கொண்டிருந்த பாலாவை உலுக்கி எழுப்பினான்.

“என்னடா… நீயின்னும் தூங்கலையா?”

முகத்தை தேய்த்தவாறு அரை தூக்கத்தில் எழுந்து அமர்ந்தான் பாலா.

“பாப்பா பேரு என்னடா?”

அவ்வாறு கேட்ட வசீயை வினோதமாக ஏறிட்டான் பாலா.

“சொல்லுடா?” துரிதப்படுத்தினான். இந்நேரத்தில் பாலாவின் அமைதி வசீயை எரிச்சல்படுத்தியது.

“நிஜமாவே பாப்பா பேரு உனக்குத் தெரியாதா வசீ?”

வசீ இல்லையென இதழ் சுளித்தான்.

“எப்படிடா?”

“எப்படின்னா? நீயோ, மத்தவங்களோ, மகா ஆண்ட்டியோ அவளை பெயர் சொல்லி அழைத்து நான் கேட்டது இல்லை. அதோட இத்தனை நாட்கள் எனக்கு அவளோட பெயர் தெரிந்துகொள்ள எந்த காரணமும் இருக்கல” என்று தன்பக்க விளக்கம் கொடுத்தான் வசீகரன்.

“அப்போ இப்போ காரணம் வந்திருச்சா?”

பாலாவின் அக்கேள்வியில் வசீ ஜெர்க்காகினான். ஒரு நொடி தான். சந்தேகம் வராத அளவிற்கு சமாளித்திருந்தான்.

“பணம் கொடுக்க வீட்டுக்கு போனேன். அவள் மட்டும் தான் இருந்தாள். எப்படி கூப்புடுறது தெரியாம ரொம்ப நேரம் நிக்க வேண்டியதாப்போச்சு” என்று பாதி உண்மையும் பாதி பொய்யுமாக சொல்லி பாலாவை நம்ப வைத்தான்.

“ஹோ…” என்ற பாலா, “ஆதர்ஷினி” என்றவனாக மீண்டும் படுத்துவிட்டான்.

வசீயின் உதடுகள் மெல்ல ‘ஆதர்ஷினி’ என உச்சரித்தன.

நெஞ்சின் துடிப்பு ஸ்வரமாய் உருவகம் கொண்டது. மெல்ல நீவி விட்டுக்கொண்டான்.

திரும்பத்திரும்ப உச்சரித்திட…

“நான் உங்கள் தர்ஷி” என்ற ஆர்ஜேவின் குரல் அவனின் காதுகளில் ஒலித்து அடங்கியது.

‘ஆதர்ஷினி… தர்ஷி…’

‘நேரில் குரலை சரியா கவனிக்காமல் விட்டோமோ! இத்தனை நாள் இதை எப்படி விட்டோம்? அந்த குரல் இவளா இருக்குமோ?’

‘ம்க்கும்… நீ கவனிக்க, அவள் உன்கிட்ட பேசியிருக்கணுமே! என்னவோ அதிசயத்திலும் அதிசயமாக இன்னைக்கு உன்கிட்ட பேசியிருக்காள்.’ மனம் இடித்துரைத்தது.

‘அதுவும் கரெக்ட் தான்’ என்றவன், ‘நாளை கவனித்து பார்க்க வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டான்.

வசீக்கு தெரிந்திருக்கவில்லை, பன்பலையில் பேசும் போது ஆதர்ஷினி தன்னுடைய குரலில் மாற்றம் செய்கிறாள் என்று. டப்பிங் பேசுபவர்கள் காட்சிகளுக்கு ஏற்ற வகையில் பல விதமாக குரலின் ஒலியை மாற்றுவார்களே அதேபோல், சாதாரணமாக பேசும் குரலை அலைவரிசைக்கு ஆதர்ஷினி பயன்படுத்துவதில்லை.

இருவரும் ஒருவராக இருந்திட வேண்டுமென பேராசை கொண்டான்.

அவளின் கண்ணோரம் தானென்கிற அடையாளத்தோடு விழும் நாட்களுக்காக அந்நொடி முதல் காத்திருக்கத் துவங்கினான்.

புதிதாய் ஆதர்ஷினியின் மீது முளைத்த காதலின் தடத்தோடு மெல்ல உறங்கியும் போனான்.

புதிய காதலா? அவனால் மறைக்கப்பட்டு புதைக்கப்பட்ட காதல் அல்லவா?

கண்ணோரம் விழுந்து, நெஞ்சோரம் பிழைத்து… அவளின் உயிரோடு கலக்க துடிப்பவனின் காதலை அவன் சொல்லாது அல்லது சொல்லினால் ஏற்றுக்கொள்வாளா ஆதர்ஷினி?

தன் உயிர் சுமக்கும் காதலின் முகம் யாரென்று அறிந்த பின்னர் வசீ காதலில் திளைத்திட… அவனின் காதலாகிய ஆதர்ஷினி தவிப்பில் குழம்பிக் கொண்டிருந்தாள்.

வசீயின் பார்வையிலும், பேச்சிலும் தடுமாறிய ஆதர்ஷினி அறைக்குள் வந்ததும் கண்ணாடி முன் நின்று தன்னையே மனதால் நிந்தித்துக் கொண்டாள்.

விநோதன் உயிரோடில்லை என்று தெரிந்த நாளில்… அவள் துடித்த துடிப்பும், சிந்திய கண்ணீரும் சொல்லுமே அவள் விநோதன் மீது கொண்டது ஈர்ப்பு மட்டுமல்ல காதலென்று.

ஆனால் இன்று எப்படி வசீயிடம் தடுமாற முடிந்தது? குழப்பத்தில் தலையை சுவற்றில் முட்டிக்கொள்ளும் வேகம் அவளிடத்தில்.

‘விநோதன் இல்லையென்று ஆனபின், என் மனம் மற்றொரு காதலை தேடுகிறதா?’ தனக்குத்தானே கேட்டுக் கொண்டவளுக்கு அத்தனை தவிப்பாக இருந்தது.

எதையுமே மாற்று கோணத்தில் சிந்திப்பவளுக்கு… ஒரு காதல் மரித்த நிலையில் மற்றொரு காதல் முளைவிடுவது இயல்பு என்கிற எண்ணம் தான். அதனை குறை சொல்லிடவும் முடியாது.

ஒருத்தருக்கு ஒருமுறை தான் காதல் வரும் என்று சொல்வது கதைகளுக்கு வேண்டுமானால் சாத்தியப்படும். நிஜத்தில் அப்படியிருக்காதே! அப்படியிருந்தால் பிறந்த குழந்தையின் காதல் அன்னை தந்தையோடு நின்றுவிடும். வளரும் பிள்ளையின் காதல் உடன்பிறப்புகளோடு நின்றுவிடும். இளமையின் காதல் உணர்வுகளோடு நின்றுவிடும். திருமண காதல் தன் இணையோடு நின்றுவிடுமே!

வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு காதலை கடப்பது தான் நியதி.

அதற்கு தான் மட்டும் விலக்கல்ல என்று நினைத்த ஆதர்ஷினிக்கு இருக்கும் குழப்பமெல்லாம் ஒன்று தான்.

‘விநோதனை காதலித்த மனம் அதற்குள் வேறொருவனை நாடுகிறதென்றால் தன்னுடைய முந்தைய காதல் அத்தனை பலமிழந்ததா? அல்லது வசீயின் மீது புதிதாக துளிர்விடத் தொடங்கியிருக்கும் காதல் வலுவானதா?’

யார் மீது கொண்ட நேசம் ஆழம் அதிகம் என்பதை உணர்வதற்கு, விநோதனின் மீது கொண்ட காதலுக்கு ஆயுள் நீடிக்கவில்லை. அவனுடன் மனம் கலந்து காதல் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளவில்லை. அதனால் இதற்கு இப்போது மட்டுல்ல இனி எப்போதுமே அவளுக்கு பதில் கிடைத்திடாது.

வசீயின் மீது காதல் வந்துவிட்டதா என்பதே கேள்வி நிலையில் இருக்கும் போது… இதற்கான பதில் அவனுடன் காதலை பகிர்ந்துகொள்ளும் தருவாயில் தான் அறிந்திட முடியும்.

கொண்டிருந்த காதலுக்கும், கொண்ட காதலுக்கும் இடையில் போராடி கலைத்தாள்.

விநோதனின் கடிதங்களை எடுத்து படித்தாள். அவனை பார்த்திடாத போதும், முகம் அறிந்திடாத போதும், அவனே அவளருகில் நின்று அவளை பாராட்டுவதைப்போல் உணர்ந்தாள்.

மறுபக்கம் வசீயின் பார்வை, கண் சிமிட்டல், ஒற்றை விரல் தொடுகை அவளை மொத்தமாக புரட்டி போட்டது.

ஓவென்று சத்தமிட்டு கத்த வேண்டும் போலிருந்தது.

மனதை ஒருநிலை படுத்தி கண்களை மூடி யோசித்தாள்.

இத்தனை நாட்களும், விநோதனின் முகம் பார்திராததால் அவனின் கையெழுத்து மனக்கண்ணில் ஊர்வலம் போகும். இன்றோ குறுநகையோடு கண் சிமிட்டி காட்சிகொடுத்தான் வசீகரன்.

வேகமாக இமை பிரித்தவள், அருகிலிருந்த தண்ணீரை எடுத்து அப்படியே வாய்க்குள் சரித்தாள்.

மேலே சிந்துவதையும் பொருட்படுத்தாது, தனக்குள் எழுந்த படபடப்பை குறைக்க வேகமாக நீர் அருந்தினாள்.

‘இத்தனை நாட்கள் இல்லாது இப்போது காதலா? ஏன்? எப்படி?’ தலை விண்ணென்று தெரித்தது.

‘அவனைப்பற்றி பாலா இன்று நல்ல விதமாக சொல்லியதால் மனதில் எழுந்த தடுமாற்றமோ?’ நிச்சயம் இல்லையென அவளின் மனம் அடித்துக் கூறியது.

‘அய்யோ படுத்துறானே!’ வாய்விட்டே புலம்பியவள் வசீயின் திடீர் செயல்களுக்கான காரணங்களை தனக்குள் தேடியபடி மெத்தையில் கவிழ்ந்து படுத்து, எப்போது உறங்கினாள் என்பது தெரியாது உறங்கியும் போனாள்.

அவனின் பக்கங்கள் யாவும் அவளுக்கு முற்றிலும் பிடிக்காதவை. அவளின் பக்கங்கள் யாவும் அவன் வாழ்ந்து பார்க்க ஏங்கும் ஒன்று. அனைத்தும் மாறுபட்ட நிலையில் காதல் கொண்ட இரு நெஞ்சங்களும் காதலில் கரை சேர்ந்திடுமா?

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 24

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
21
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. வசீ – ஆதர்ஷினி காதல் 🤔🤔🤔😉😉😁😁❤️❤️..