Loading

அத்தியாயம் 5 :

எதிர்பார்ப்பு…

ஏமாற்றத்தின் உச்சம்.
எதிர்பார்ப்பில்லாமல் வாழ்வில்லை.
வைக்கும் இடம் சரியாக இருப்பின்
ஏமாற்றமில்லை.
இங்கு, எதிர்பார்ப்புகளைவிட
எதிர்கொள்வதே அதிகம்.
எதிர்கொள்ள கற்றுக்கொள்வோம்.
வாழ்க்கை எளிதானது…
எதிர்பார்ப்புகளை கடந்திடும் போது.
எதிர்பார்ப்பின்றி புன்னகைப்போம்,
உனையன்றி அழகானோர் யாருமில்லை!

நானும் எதிர்பார்ப்புகளை சுமக்கும் சாதாரணப் பெண்ணாக… எதிர்கொள்ளத் தயாராகுகிறேன்.

                              – அணங்கு.

“எதிர்பார்த்து ஏமாந்துவிடாதீர்கள்” என்று விநோதனுக்கு கடிதம் அனுப்பிவிட்டு, அவனின் பதிலுக்காக எதிர்பார்த்து ஏமாற்றம் கொண்டாள் ஆதர்ஷினி.

அவளின் சிந்தனைகளை பாராட்ட நினைத்து கடிதம் போட்டவனுக்கு, அடுத்தடுத்து தொடர்ந்து போடுவது அதுவும் ஒரு பெண்ணிற்கு, சரியாக இருக்காதென்று ஆதர்ஷினியின் முந்தைய கடிதத்திற்கு பதில் அனுப்பவில்லை விநோதன்.

ஆனால் ஆதர்ஷினி வெகுவாக அவனது கடிதத்தை எதிர்பார்த்தால்.

அவனிடம் சொல்லிய வார்த்தைகளை தனக்குத்தானே சொல்லிக்கொண்டு நாட்களை கடத்தியவளுக்கு, ஏனோ அவனது கடிதம், அதிலுள்ள வார்த்தைகள் வேண்டுமென்பதைப்போல் தோன்ற, தன் மனதின் ஓட்டத்தையே எண்ணமாக்கி எதிர்பார்ப்பு என்கிற தலைப்பில் கவிதை எழுதி பத்திரிகைக்கு அனுப்பி வைத்தாள்.

அதுவும் அம்மாத கவிதைகள் பக்கத்தில் வெளிவந்திருந்தது.

நான்கு நாட்கள் கடந்திருந்தது.

“என்னடி லெட்டரே வரல?”

பூமிகாவிடம் பலமுறை இந்த கேள்வியை கேட்டுவிட்டாள் ஆதர்ஷினி.

பொறுமை இழந்த பூமியோ தன்னிரு கைகளையும் தலைக்கு மேல் கும்பிடுவதைப் போல் உயர்த்தி…

“விட்டுடு தர்ஷினி. மீ பாவம்” என்றாள்.

அதில் சத்தமாக சிரித்த ஆதர்ஷினி,

“ஓகே ஓகே… கோபப்படாதே! நம்ம  கிறுக்குவதையும் ஒருத்தர் ரசிக்கிறாரேங்கிற சந்தோஷம், ஆர்வம் தான்” என்றாள்.

ஆதர்ஷினியை பார்வையால் முழுதாக அளந்த பூமி…

“உண்மையிலே அது மட்டும் தானா?”  எனக் கேட்க, ஆதர்ஷினியிடம் தடுமாற்றம்.

“வேறென்னடி? நீ நினைக்கிறப் போலெல்லாம் ஒன்னுமில்ல.” வார்த்தை தந்தியடித்தது.

“நான் என்ன நினைக்கிறேன்னு உனக்கெப்படித் தெரியும்?”

“இப்படி கேட்கும்போதே வில்லங்கமா ஏதோ நினைக்கிறன்னுதானே அர்த்தம்” என்ற ஆதர்ஷினிக்கு விளங்கவில்லை. தானெதற்காக இந்த கேள்வியில் இத்தனை தடுமாறுகிறோம் என்று.

“சரிவிடு… ரொம்ப மண்டயை உருட்டாதே!” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவளுக்கு நினைப்பெல்லாம் விநோதனிடம் தான்.

விநோதனோ அவளது நினைவே இல்லாது காவல் நிலையத்தில் ஒருவனை அடி துவைத்துக் கொண்டிருந்தான்.

“வேண்டாம் சார். என்மேல் கை வைத்து ரொம்ப தப்பு பண்றீங்க?”

“கை வைத்தது தான் தப்பா?” என்ற விநோதன், தன் பூட்ஸ் காலினாலே அவனது அடி வயிற்றில் உதை வைத்தான். அவனோ வயிற்றை பிடித்துக்கொண்டு சுருண்டான்.

“செத்துடப்போறான் சார்.” தாமஸ் பதறினார். அடியென்றால் அப்படியொரு அடியல்லவா. காவல் நிலையமே விநோதனின் அடியில் மிரண்டிருந்தது.

“சாகட்டும். இவனெல்லாம் உயிரோடு இருந்து என்ன கழுட்டப்போறான்” என்று உக்கிரமாக உரைத்த விநோதன் மேலும் சில நிமிடங்கள் அடித்த பின்னரே தன்னிருக்கையில் சென்று அமர்ந்தான்.

“எனக்கு பயந்து வருதுடா தாமஸ். அசைவில்லாமல் கிடக்குறான். உயிர் இருக்கா பாருடா.” மற்றொரு கான்ஸ்டபிளான நம்பிக்கு கைகளெல்லாம் உதறல் எடுத்தது.

தாமஸ் தண்ணீர் போத்தாலுடன் குற்றவாளியை நெருங்க…

“விடுங்க தாமஸ். தொண்டை வறண்டு போய் சேரட்டும். இவனெல்லாம் கோர்ட்டுக்கு இழுத்துக்கிட்டு நாமெதுக்கு அலையனும்?” என்ற விநோதன் தன்னுடைய ஆத்திரம் தீராது மீண்டும் அவனை புரட்டி எடுத்துவிட்டான்.

“இவனையெல்லாம் நம்பி பொம்பளை பிள்ளைங்களை அனுப்பி வைத்தால்… செய்திருக்கும் வேலையை பார்த்திங்களா?” எவ்வளவு அடித்தாலும் விநோதனின் கோபம் மட்டுப்படுவதாக இல்லை.

அவன் பள்ளி சிறுமிகளை தன்னுடைய ஆட்டோவில் அழைத்துச் சென்று அழைத்து வரும் ஆட்டோ டிரைவர்.

ஆட்டோவில் பிள்ளைகளை ஏற்றி விடும்போதும் இறக்கி விடும்போதும் தவறான எண்ணத்தில் அவனது தொடுகைகள் இருந்திட… மாணவிகளில் சற்று விவரம் தெரிந்த சிறுமி வீட்டில் சொல்லிவிட்டாள். அவர்கள் பயந்து ஒதுங்காமல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திட்டனர்.

விநோதன் அவனை பிரித்து மேய்ந்திட்டான்.

“இவரு நம்ம வேலைக்கு உலை வைக்கமால் விடமாட்டாரு போலடா!”

சொல்லிய நம்பியை தாமஸ் முறைத்தார்.

“அத்தனையும் சின்ன பசங்க. எந்த கண்ணோட்டத்தில் தொடுறாங்கன்னு கூடத் தெரியாது” என்றார். நம்பி கப்சிப்.

“இந்த மேட்டர் வெளியில் வரக்கூடாது. செயின் சினாச்சிங், ரெண்டு நாளுக்கு முன்னால் வீடு புகுந்து கொள்ளையடித்தது, அப்புறம் அந்த கள்ளச்சாராய வழக்கு… இதையெல்லாம் போட்டு FIR தயார் பண்ணிடுங்க தாமஸ்” என்ற விநோதன், “பதினைந்து வருசமாவது உள்ளிருந்து நொந்து சாகணும் இவனெல்லாம்” என்று அப்போதும் தன் சீற்றம் குறையாது சீறினான்.

அப்போது அங்கிருந்த மேசையில் வீற்றிருந்த தொலைப்பேசி தொல்லைப்பேசியாய் சத்தம் எழுப்பியது.

அழைத்தது எம்.எல்.ஏ’வின் காரியதரிசி.

தாமஸ் யாரென்று விசாரித்து விநோதனிடம் ரிசிவரை நீட்டிட…

“என்ன ஏசி சார்… திரும்ப திரும்ப எங்ககிட்டவே ராங்கா மோதிக்கிட்டு இருக்க. உன்னை தண்ணியில்லா காட்டுக்கு மாத்துறதுக்குத்தான் எங்க அண்ணன் முயற்சி செஞ்சிட்டு இருக்காரு. ஒழுங்கா நீயா ஓடிடு” என்றவன், “உன் சொந்த ஊருக்கே மாத்தல் கொடுத்திடுவோமா?” என்று அதிகாரமாய் வினவினான்.

“அதை நான் அப்புறம் சொல்லுறேன். இப்போ நீங்க எதுக்கு கூப்பிட்டிங்கன்னு சொல்றீங்களா?” விநோதனின் குரலில் அப்படியொரு பவ்யம்.

“நீ புடிச்சி வச்சிருக்கியே ஆட்டோ டிரைவர், அவன் எங்க ஆளு. அவனை விட்டுவிடு” என்றான்.

“ஓ அப்படிங்களா? இது தெரியாமப்போச்சே” என்ற விநோதன், எதிர்முனையில் அவனுக்கு கேட்கும்படியே…

“போன வாரம் அந்த பிரிட்ஜ் பக்கத்தில் ஒரு கொலை நடந்ததே! குற்றவாளியை தேடிட்டுத்தானே இருக்கோம் தாமஸ்” என்றவன் “அந்த கொலையை பண்ணது இவன் தானேம்மே… அதையும் சேர்த்து ஃபைல் பண்ணிடுங்க” என்றிட, அந்தப்பக்கம் அழைப்பில் இருந்தவன் கத்தும் சத்தம் தொலைப்பேசியை மீறி வெளியில் கேட்டது.

“ஷ்ஷ்ஷ்… என்கிட்ட இப்படியெல்லாம் கத்தக்கூடாது” என்ற விநோதன், “உன் அண்ணன் மாட்டுவாண்டா என் கையில் அப்போ கூண்டோடு உங்களைத் தூக்குறேன்” என்றவனாக ரிசீவரை பட்டென்று அதனிடத்தில் பொறுத்தினான்.

“இவன் பின்னணி என்னன்னு விசாரிங்க நம்பி. எம்.எல்.ஏ சப்போர்ட் சாதாரண ஆட்டோ டிரைவருக்கு எப்படி?” என்றவன் நேரத்தை பார்த்தவனாக அங்கிருந்து வெளியேறினான்.

விநோதன் வீட்டிற்கு வருவதற்கு முன் துருவன் இரு முறை அழைத்துவிட்டான்.

“சாப்பிட்டியா துருவ்?”

“நீ வந்ததும் சாப்பிடலாம் வெயிட் பண்ணேன் அண்ணா. நீதான் மதியம் வருவேன்னு சொல்லிட்டு போனீயே!” என்றான் துருவன்.

துருவன் இப்போது நிரல்யா விடயத்திலிருந்து ஓரளவிற்கு தெளிந்திருந்தான்.

‘தன்னால் ஒரு பெண்ணின் படிப்பு வீணாகிவிட்டதே’ என்கிற குற்றவுணர்வு அவனுள் முழுதாக போய்விட்டதா என்றால் இல்லை தான்.

ஆனால் விநோதன் அதனை மறக்கச் செய்திருந்தான். அத்தோடு அப்பெண்ணை பற்றி தான் விசாரித்து சொல்லுவதாகக் கூறியிருக்க தற்சமயத்திற்கு துருவனுக்கு அதுவே போதுமானதாக இருந்தது.

“நீ வந்து நாலு நாளாச்சு துருவ். எப்போ காலேஜ் போற?” உணவினை வாயில் வைத்தபடி விநோதன் கேட்டான்.

“இன்னும் ரெண்டு நாள் உன்னோட இருந்துட்டு போறேனேண்ணா! ப்ளீஸ்” என்ற துருவ், “நீயும் அங்கு வரமாட்டேங்கிற. நான் போயிட்டா திரும்ப உன்னை எப்போ பார்ப்பேனோ?” என்ற துருவிற்கு அப்போது தெரியவில்லை… இனி தன் அண்ணனை பார்க்காது தவிக்கப்போகிறோம் என்று. அவனின்றி தனது நாட்கள், வாழ்க்கை நகர இருக்கிறதென்று.

“நான் மொத்தமாவே அங்கு வந்துடுவேன் போலிருக்கு துருவ்” என்ற விநோதன், “இங்கு ஒரு அரசியல்வாதிக்கும் எனக்கும் முட்டிக்கிச்சி. எப்படியும் இரண்டொரு நாளில் டிரான்ஸ்ஃபர் வந்திடும் நினைக்கிறேன்” என்றான்.

“வாவ்… சூப்பர் அண்ணா” என்று உற்சாகமாகக் கூவிய துருவன், “எனக்கும் இன்னும் நான்கைந்து மாதத்தில் காலேஜ் முடிஞ்சிடும். அதனால் நம்மவூர் பக்கமே போஸ்டிங் வாங்கிடுண்ணா” என்றான்.

“இது நானா கேட்டு வாங்குறது இல்லைடா” என்ற விநோதன், “வேறொரு எண்ணம் இருக்கு. பிறகு சொல்றேன்” என்றான்.

“எப்போண்ணா மன்த்லி புக்லாம் படிக்க ஆரம்பிச்ச?” சாப்பிட்டு முடித்ததும் சற்று ஓய்வாக அமர்ந்திட, டீபாயின் மீது கிடந்த புத்தகத்தை பார்த்து வினவினான்.

“இந்த மன்த் புக் வந்திருச்சா?” என்ற விநோதன் ஆர்வமாக அதனை எடுத்து புரட்டினான்.

“மார்னிங் ஒரு பையன் கொண்டு வந்து கொடுத்தான்” என்றான் துருவன்.

“அவன் இங்கிருக்க மெஸ்ஸில் வேலை பார்க்கும் பையன்” என்ற விநோ, “இதில் ஒரு பொண்ணு கவிதை எழுதுறாள். எனக்கு பிடிச்சிருக்கு” என்றான்.

“பொண்ணாண்ணா…” துருவன் ஆச்சரியத்தில் விழிவிரித்து வினவினான்.

“எங்கே ஃபோட்டோ காட்டு?” இப்போது அவனிடம் ஒரு ஆர்வம்.

“அவளோட பெயரையே மறைத்துதான் எழுதுறாள். ஃபோட்டோலாம் இல்லை” என்ற விநோதன், எதிர்பார்ப்பு என்கிற தலைப்பில் அவள் எழுதியிருந்த கவிதையை வாசித்தான்.

வாசித்தவனுக்கு முந்தைய கடிதத்தில் அவள் சொல்லியிருந்த எதிர்பார்த்து ஏமாந்துவிடாதீர்கள் என்ற வார்த்தைகள் தான் நினைவுக்கு வந்தது.

அவள் மறைமுகமாக தனக்காக இக்கவிதையை எழுதியிருக்கிறாள் என்பதும் விநோதனுக்கு விளங்கிற்று.

“உன்னையே ஒரு பொண்ணு ஈர்த்திருக்காள் அப்படின்னா பெரிய விஷயம் தான். அப்படியென்ன எழுதியிருக்காள் காட்டு பார்ப்போம்” என்ற துருவனும் அக்கவிதையை படித்தான்.

“மொத்த வரியும் புரியல. ஆனால், Expectations are very dangerous அப்படின்னு மட்டும் புரியுது” என்றான்.

“உண்மை தானே ஏமாற்றங்களை கொடுப்பதே எதிர்பார்ப்புகள் தானே!” என்ற விநோதனிடம் திடீரென ஒரு அமைதி.

விநோதனிற்குள் கவிதையின் இறுதி வரிகளே ஓடிக்கொண்டிருந்தன.

‘என்ன சொல்கிறாள் இவள். என்னிடம் எதிர்பார்க்காதீர்கள் என்று சொல்லிவிட்டு அவள் எதிர்பார்த்தாளா? எதை… என்னுடைய கடிதத்தையா?’ விநோதனுக்கு புதுவிதமான உணர்வு. அந்த வரிகளை அவனால் சாதாரணமாக கடந்துவிடவும் முடியவில்லை.

அவளிடமே கேட்டுவிடத் தான் தோன்றியது.

துருவன் உடன் இருந்ததால் கடிதம் எழுதாமல் தவிர்த்தான். இரண்டு நாட்களில் துருவன் சென்றிட, அன்றே அவளுக்கு கடிதம் எழுதிவிட்டான்.

“எதிர்பார்த்திருக்கும் அணங்கிற்கு…

என்னுடைய ஆரம்பம் சரியென்றால் நான் இங்கு நினைப்பதும் சரியே!

எழுதமாட்டேன் என்று சொல்லிவிட்டு எனக்காக எழுதியதற்கு நன்றி.

எதிர்பார்க்காதீர்கள் என்று வலியுறுத்திவிட்டு… எனது பதிலை எதிர்பார்த்து இருந்தமைக்கு மற்றொரு நன்றி.

இந்த கடிதப் பயணம் எந்தளவிற்கு சரியென்று எனக்குத் தெரியவில்லை. உங்களது கவிதை குறித்து, என் எண்ணங்களை பகிர்ந்துகொள்ளவே கடிதத்தின் மூலம் தொடர்பு கொண்டேன். ஆனால், பயணத்தின் பாதை வேறு  திசையில் திரும்பும் போல் தெரிகிறது.

நீங்கள் சொல்லியதை உங்களுக்கே திரும்பச் சொல்கிறேன்!

எதிர்பார்த்து ஏமாறாதீர்கள்!

இவன்,
விநோதன்.”

அவன் ஏன் அப்படி எழுதினானென்று அவனுக்கேத் தெரியவில்லை. மனதில் தோன்றியதை எழுதிவிட்டான். அதனை அனுப்பியும் வைத்துவிட்டான். இருப்பினும் காரணம் விளங்காது தவிக்கின்றான்.

‘தன் எண்ணம் தவறாக இருந்து கணிப்பும் தவறாக இருப்பின், தன்னுடைய கடிதம் அப்பெண்ணிற்கு எத்தனை மன வருத்தத்தை கொடுக்கும்’ என நினைத்தவன், ‘என்னுடைய கடிதத்தை அவள் எதற்கு எதிர்பார்க்க வேண்டும்? அப்போ நான் எழுதியது சரிதான்’ என்றும் நினைத்தான்.

யாரென்று ஒருவரைப்பற்றி முழுதாக தெரியாமல் வரும் உறவு அத்தனை நல்லதல்ல என்பது விநோதனின் எண்ணம். அதையே கடிதத்தில் பிரதிபலித்தான்.

***************************

ஆதர்ஷினியின் முகம் அத்தனை வருத்தத்தில் இருந்தது.

அவளது கையிலிருந்த கடிதம் காற்றில் அசைந்தாடியது. கண்கள் அதிலுள்ள எழுத்துக்களை வெறித்தபடி. மனம் அசைபோட்டபடி.

“அப்படி என்னதாண்டி எழுதியிருக்கு, இப்படி உட்கார்ந்திருக்கவ?” கடிதத்தை கொண்டு வந்து கொடுத்ததும் ஆதர்ஷினியிடம் தென்பட்ட சந்தோஷம், படித்த பின்னர் துணி கொண்டு துடைத்து விட்டதுப்போலிருக்க… அவளின் கையிலிருந்து காகிதத்தை வெடுக்கென பறித்திருந்தாள் பூமிகா.

படித்தவள் பொங்கிவிட்டாள்.

“என்னடி நினைச்சிட்டு இருக்கான் அவன்? அவனா லெட்டர் போட்டான். திரும்ப நாம போட்டா இப்படி சொல்வானோ! ரொம்பத்தான் திமிரு. என்ன நினைச்சிட்டான் நம்மள.”

தன்போக்கில் படப்படத்தாள்.

“நீயெதுக்கு கோபப்படுற பூமி. அவர் சொல்லுவது சரிதானே! நான் எதிர்பார்த்தது உண்மை தான். நான் ஏன் எதிர்பார்த்தேன். இதே அவரிடத்தில் நானிருந்திருந்தாலும், இதைத்தான் செய்திருப்பேன். முதல் கடிதத்தின் போது நமக்கும் இப்படித்தானே தோன்றியது. லீவ் இட் பூமி.” விடு என்று எளிதாக சொல்லிவிட்டாள். ஆனால் உள்ளுக்குள் ஏதோ அழுத்தும் உணர்வு. அவளின் மனவோட்டம் அவளுக்கே பிடிபடவில்லை. வெறும் இரண்டு கடிதங்களில் நான்கு வரிகளில் ஒருவரின் மனதை கொள்ளைக்கொள்ள முடியுமா?

அடுத்தடுத்த நாட்களில் ஆதர்ஷினியின் நிலை அவளுக்கே வேறாகத்தான் இருந்தது.

அதிகம் சிரித்திடமாட்டாள். பேசிடமாட்டாள் என்ற போதும், இப்போது இன்னும் தனக்குள் ஒடுங்கிப்போனாள்.

கல்லூரியில் அவளுக்கென்றிருக்கும் ஒரே தோழியான பூமிகாவுடன் கூட இப்பொதெல்லாம் நேரம் செலவழிப்பதில்லை.

கல்லூரி… வீட்டில் தன்னறை என்று முடங்கிப்போனாள். மகாலட்சுமிக்கே மகளின் இந்த பேரமைதி வித்தியாசமாகப்பட்டது. முத்துச்சாமி இருந்தால் ஆதர்ஷினி இருக்கும் இடம் தெரியாது இருந்து விடுவாள் என்பதால், அவருக்கு எவ்வித மாற்றமும் தெரியவில்லை.

யாரென்றே தெரியாத அவனின் மீது தனக்குள் இத்தனை பிடித்தமா? நாட்கள் செல்ல அவளின் மனதில் இக்கேள்வி அறிக்கத் தொடங்கியது.

பெயரைத் தவிர ஒன்றும் தெரியாது. அதுவும் உண்மையான பெயரா என்றால்… தெரியாது. அப்படியெல்லாம் பெயர் வைப்பார்களா?

அவளுக்கே இன்னதென்று தெரியாத சோகம் அவளை ஆட்டுவிப்பதைப்போல் தவித்துப் போனாள்.

மகளை கவனித்துக் கொண்டிருந்த மகாலட்சுமி என்னவென்று விடயம் அறிய முற்பட்டார்.

அவரிடம் எதையும் மறைக்கும் பழக்கம் இல்லாததால் அனைத்தையும் சொல்லிவிட்டாள்.

கேட்ட அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“எனக்கு எவ்வித தவறான எண்ணமும் இல்லம்மா!” இறுதியாக உடைந்துவிட்டாள். அந்த உடைப்பின் காரணம் நேசமென்று வாழ்ந்து அனுபவித்தவருக்குத் தெரியாதா என்ன? ஆனால் இதனையெப்படி பேசிட முடியும் என்கிற யோசனை அவருள்.

ஒரு அன்னையாக மகளுக்கு நல்லதை எடுத்து சொல்ல வேண்டியது அவருடைய கடமையல்லவா!

மகளை தெளிவுபடுத்த முயன்றார்.

“உனக்கான முதல் அங்கீகாரம் அவரிடமிருந்து வந்ததால், அவர்மீது உனக்கொரு பிடித்தம். அவ்வளவு தான். இனி அது நடக்காது எனும்போது உன்னை அறியாமலே உன்னுடைய எழுத்தை அவர் பாராட்ட வேண்டுமென்று உனக்குள் தோன்றும் எண்ணம் உன்னை வருத்தப்பட வைக்கிறது.

அவர் ஒரு வாசகரா உன்னை அனுகியிருக்கார். அந்த உறவு அடுத்தக்கட்டத்திற்கு… அதாவது நட்பாகக்கூட வேண்டாமென்று நினைத்து அப்படி எழுதியிருக்கலாம்.

முதலில் உன்னை நான் எச்சரித்தேன் தானே! எளிதா யாரையும் நம்பிடாதே என்று சொன்னேன் தானே! இந்த எச்சரிக்கை ஆணுக்கும் இருப்பதில் தவறில்லையே தர்ஷிம்மா.

வீணா உன்னைப்போட்டு குழப்பிக்காதே… உன்னால் இன்னும் சில நாட்களில் இதனை கடந்திட முடியும். அவரின் பாராட்டில் ஈர்ப்பு மட்டுமே இருந்தால். அப்படி இல்லைன்னா உன் மனமே உனக்கான பதிலை கொடுக்கும்.”

அனைத்தையும் மகாலட்சுமி பொறுமையாக தன்னுடைய சைகை மொழியில் மகளுக்கு புரியும்படி கூறியிருக்க… அவளிடம் ஒரு தெளிவு.

“அவருடைய நட்பு உனக்கு வேணும்னா, பத்திரிகை ஆசிரியரிடம் அவரின் முகவரியை கேட்டுப்பாரேன்.”

ஒரு விஷயம் பிள்ளைகள் செய்திடும் போது தயக்கம் ஏற்படுவது இயல்பு தான். அது நல்லதா கெட்டதா என்று பெற்றோர்கள் ஆராய்ந்து கூறும்போது தவறான ஒன்றாக இருப்பினும் சரிசெய்திடும் எண்ணம் பிள்ளைகளுக்கு தன்னைப்போல் வந்து சேரும்.

தவறை கூட சரியான கோணத்தில் சுட்டிக்காட்டிட வேண்டும்.

அதைத்தான் மகாலட்சுமி இன்று செய்தார்.

“இனி எழுதபோவதில்லையா?”

ஏனென்று புரியாது ஏறிட்டாள் அன்னையை.

“அவருக்காக கவிதை எழுதபோய்த்தானே நல்ல வாசகரை இழந்துட்ட?” தன்னுடைய கேள்வியின் அர்த்தம் விளக்கினார்.

“அவருக்காக நான் எழுத ஆரம்பிக்கலயே. என்னுடைய சந்தோஷத்தில் ஒன்னு இது. வாசகருக்காக எழுதுவது தப்பு இல்லையேம்மா. அதை அவர் தவறா புரிஞ்சிக்கிட்டா நான் ஒன்னும் செய்ய முடியாது. இதுநாள் வரையிலும் கூட தொடர்ந்து எழுதுவதைப்பற்றி சிந்தித்தது இல்லை. ஆனால் இப்போ தொடர்ந்து எழுதணும் தோணுது” என்றவளின் தெளிவில் மாகலட்சுமி நிம்மதி கொண்டார்.

ஆதர்ஷினியிடம் இருந்த தெளிவெல்லாம் அடுத்த மாதம் கவிதை எழுதி பத்திரிகைக்கு அனுப்பிவிட்டு, பிரசுரமானதும்… வழமையாக அவனின் கருத்தை அவளறியாது அவள் மனம் எதிர்பார்க்கும் வரை தான்.

எதிர்பார்ப்பு வேண்டாமென்று சொல்லியவளையே மாதாமாதம் எதிர்பார்க்க வைத்திட்டான்.

இத்தனை நாட்கள் கருத்து தெரிவித்த வாசகர் திடீரென நிறுத்திவிட்டதால், ஏனென்ற மனதின் குழப்பம் இது என எத்தனை ஒதுக்க நினைத்தாலும் அவளால் முடியவில்லை.

அவனுக்காக எழுதுவதை நிறுத்த வேண்டுமா என அன்னையிடம் கேட்டவள், இப்பொதெல்லாம் அவனுக்காகவே மாதாமாதம் எழுதுகிறாள்.

விநோதனின் கருத்துக்கள் மூலம் அவனுக்கு பிடிக்கும் வகையில் ஒரு விஷயத்தின் மற்றைய பக்கங்களை ஆராய்ந்து தேடித்தேடி எழுதினாள். அவனிடமிருந்து எந்தவொரு கடிதமும் வரவில்லை.

கல்லூரி படிப்பும் முடிந்துவிட்டது. அடுத்து என்னவென்று அவள் யோசிக்க வேண்டிய நேரம். வீட்டில் சோம்பி இருக்கவும் பிடிக்கவில்லை.

கண்ணில் விழுந்த துரும்பாய் மனதில் பதிந்து உருத்திக்கொண்டிருக்கும் விநோதனை எத்தனை முயற்சித்தும் அவளால் ஒதுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவனின் இந்த எண்ணத்தோடே வாழ பழகிக்கொண்டாள். அவளுக்கு இது பிடித்தும் இருந்தது.

இப்போது பத்திரிகையில் கவிதை மட்டுமல்லாது, கட்டுரை, தத்துவ விளக்கங்கள், தலைவர்கள் பற்றிய விமர்சனம் என அனைத்தும் எழுதி அனுப்புகிறாள். அவளுக்கும் ஆசிரியரின் எழுத்து பிடித்துப்போக, அவளே விட நினைத்தாலும் அவர் எழுத வைத்திடுவார். அவளின் அனைத்தும் இப்போது அவருக்கு மட்டுமே தெரியும். இதற்குமேலும் அவரிடம் மறைப்பது சரியில்லையென்று முத்துச்சாமி தான் தன்னுடைய தந்தையென்றும் அவருக்குத் தெரியாமல் தான் எழுதுகிறேன் என்பதையும் கூறியிருக்க… அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவருக்கு அவளது எழுத்து மட்டுமே பிரதானம்.

மாதங்கள் உருள… ஆதர்ஷினியின் எழுத்து மெருகேறத் துவங்கியது. அவளுக்கான வாசகர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியது. பலரிடமிருந்து கடிதம் வரத் துவங்கியது. ஏனோ அவள் எதிர்பார்ப்பவனிடமிருந்து மட்டும் வரவில்லை.

எதற்குமே முதல் என்று ஒன்றுள்ளதே. அந்த முதலில் வரும் பிடித்தம் எப்போதுமே தனித்துவமானது தானே! அந்நிலை தான் ஆதர்ஷினியிடம்.

ஒவ்வொரு முறை கடிதம் வரும்போதும் விநோதனை நினைத்து நினைத்து சோர்ந்து போவதால்…

“இனி கடிதங்கள் அனுப்ப வேண்டாம் சார். என்னுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்துவிடுங்கள். விருப்பமுள்ளவர்கள் அதில் அவர்களது கருத்துக்களை என்னிடம் பகிர்ந்துகொள்ளட்டும்” என்று சொல்லிவிட்டாள்.

ஏனென்று விளக்கம் கேட்டவரிடம் வினோதனைப்பற்றிக் கூறிவிட்டாள். பத்திரிகையின் ஆசிரியரான  திருசம்பந்தர் இப்போது அவளுக்கு எழுத்துலகின் வழிகாட்டியும் ஆவார்.

அவளின் மனம் அவருக்கு புரியத்தான் செய்தது. இதில் அவர் செய்வதற்கு ஒன்றுமில்லையே! அவள் கேட்டுக்கொண்டதற்காக அவளுக்கான கடிதங்களை நிறுத்தி, மின்னஞ்சல் தொடர்பை வாசகர்களுக்கிடையே ஏற்படுத்திக் கொடுத்தார்.

ஆதர்ஷினி கேட்கவில்லை என்றாலும் அவளுக்கு உதவ நினைத்த சம்பந்தர், விநோதன் தன்னுடைய முகவரியின்றி அனுப்பியிருந்த போதும், கடிதத்தில் அச்சிடப்பட்டிருந்த தபால் நிலையத்தின் முத்திரையை வைத்து எங்கிருந்து அனுப்பியிருக்கிறான் என்பதை தெரிந்துகொண்டு, கேரளா, திருவனந்தபுரத்தில் இருக்கும் காவலர் குடியிருப்பு தபால் அலுவகத்தினை தொடர்பு கொண்டார்.

தபால் நிலையம் இருப்பது காவலர் குடியிருப்பு பகுதி என்றதுமே…

‘விநோதன் போலீஸா?’ என்ற கேள்வி தான் சம்பந்தருக்கு மனதில் எழுந்தது.

‘ஏன் அங்கிருந்தால் போலீஸாகத்தான் இருக்க வேண்டுமா? அவர்களது குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடாதா?’ என்று அடுத்த கணமே தன்னுடைய கேள்வியை விரட்டி அடித்தார்.

சம்பந்தர் கடிதத்தில் உள்ள முத்திரையின் விவரங்களைக்கூறி “யார் அனுப்பியது தெரிந்துகொள்ளலாமா?” என்று வினவிட, “முத்திரையை வைத்து இடத்தை தான் கண்டுபிடிக்க முடியும். முகவரி இல்லாத பட்சத்தில் அனுப்பும் ஆளை கண்டறிய முடியாது” என்று சொல்லிவிட்டார்கள்.

அதில் சம்பந்தர் சோர்ந்து போனாலும், எதற்கும் கேட்டு பார்ப்போமே என விநோதனின் பெயரைக்கூறி “காவலர் குடியிருப்பில் அப்படி யாரும் இருக்காங்களா?” என்று வினவினார்.

அதற்கு அவர்கள் சொல்லிய பதிலில் சம்பந்தரின் கையிலிருந்த அலைப்பேசி கீழே நழுவியிருந்தது.

விநோதன் நேர்மையான இளம் காவல்துறை அதிகாரி என்பதாலும், எம்.எல்.ஏ’வின் வழக்கால் அவனது பெயர் நகரமெங்கும் பரவியிருந்ததாலும், அத்தோடு அவனது வருகைக்கு பின்னர் ஊரில் குற்றங்கள் குறைந்திருப்பதாக பல காவல்துறை அதிகாரிகளே சொல்லக் கேட்டிருந்ததாலும்… வித்தியாசமான அவனது பெயரும் சம்பந்தர் சொல்லியதும், உடனடியாகக் காட்டிக்கொடுத்தது.

“விநோதன் திருவனந்தபுரம் ஏசிபி சார். நல்லவங்களுக்குத்தான் காலமே இல்லையே! அதான் பாவி பயலுங்க அவரை கொன்னு கடலில் தூக்கிபோட்டுட்டானுங்களே!” என்று தபால் நிலையத்தின் அலுவலர் சொல்லியதும் சம்பந்தருக்கே அத்தனை அதிர்ச்சி.

கீழே நழுவிய அலைப்பேசியை எடுத்து மீண்டும் காதில் வைத்தவர், எதிர் முனையில் இருப்பவருக்கு நன்றி தெரிவித்து அழைப்பைத் துண்டித்ததும், இணையத்தில் விநோதனைப்பற்றி ஆராய்ந்தார்.

ஒரு செய்திகளிலும் அவனது புகைப்படம் இடம் பெறவில்லை. அதற்கு அவன் என்றுமே அனுமதித்தது இல்லையே என்பதை சம்பந்தர் அறிய வாய்ப்பில்லையே. ஆனால் அவனைப்பற்றி வந்திருந்த செய்திகள் அனைத்திலும் ஒற்றை நாயகனாக தனித்திருந்தான். குறுகிய காலத்தில் பணியில் அவன் செய்த செயல்கள் யாவும் படித்து தெரிந்துகொண்ட சம்பந்தருக்கே விநோதனின் மீது தனி மரியாதை வந்திருந்தது.

விநோதன் இறந்த பின்னர் எடுக்கப்பட்டு செய்திகளில் போட்டிருந்த படத்திலும் அவனது முகம் வெகுவாக சிதைந்து போயிருந்ததால், அவனை இறுதியாக காணும் வாய்ப்பும் அமையாமல் போனது.

மனம் கனத்து அமர்ந்திருந்தார் சம்பந்தர்.

விநோதன் தமிழ் நாட்டைச் சேர்ந்தவன் என்ற காரணம் அவருக்கு போதுமானதாக இருந்தது. அவன் மீது பிணைப்பு ஏற்பட. தன் மாநிலத்தைச் சேர்ந்தவன், வெளிமாநிலத்தில் பெயர் சொல்லிக்கொள்ளும்படி நன்மைகள் செய்திருக்கிறான் என்பதில் அவருக்கு பெருமை. பத்திரிகை உலகில் இருப்பவருக்கு இதுபோன்ற நல்லவர்கள், நேர்மையானவர்கள் அரிதானவர்கள் என்பது தெரியாததா?

இதனை எப்படி ஆதர்ஷினியிடம் சொல்வதென்று வெகுவாகத் தயங்கினார்.

அவனது கடிதத்திற்காக அவள் வாழ்நாள் முழுவதும் காத்திருப்பதற்கு, அவன் உயிரோடில்லை என்பதை சொல்லிவிடுவதே அவருக்கு சரியெனப்பட, ஆதர்ஷினியிடம் விநோதனைப்பற்றி தானறிந்த அனைத்தையும் சொல்லிவிட்டார்.

கேட்டவளின் உலகம் ஸ்தம்பித்தது. காலுக்கு அடியில் பூமி நழுவியது. தரை பிளந்து உள்ளே புதையும் உணர்வு.

அழுகையென்றால் அப்படியொரு அழுகை. அறைக்குள் ஊன், உறக்கமின்றி இரண்டு நாட்களாக முடங்கிக் கிடந்தாள்.

அப்போதுதான் அவளுக்கே தெரிந்தது… ‘விநோதன் தன்னுள் பதிந்துபோன நினைவல்ல, தனக்குள் உறைந்துபோன நின்னுயிர்’ என்று.

பார்க்காமல், தெரியாமல் நேசம் வருமா? ஆதர்ஷினியின் நிகழ்வில் நிஜமென்றானது.

வெறும் நாலுவரி எழுத்தைக்காட்டி ஆதர்ஷினியின் உலகமாகிப் போயிருந்தான் விநோதன்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
17
+1
0
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. ஆதர்ஷினி, விநோதன் நிலை மனம் கனக்கிறது.. மனகாயங்களுக்கு காலம் மருந்தாகும் ஆதர்ஷினி..

    1. Author

      நிச்சயம் காலம் மாற்றும் sis… நன்றி 😍