Loading

அத்தியாயம் 4 :

“விநோதமானவருக்கு,

எனக்கென்று நண்பர்கள் அதிகம் கிடையாது. விருப்பமானத் தோழி ஒருத்தி மட்டுமே!

அவளுக்கு என்னுடைய அனைத்தும் தெரியும். நான் அழுதால் அழுது, சிரித்தால் சிரித்து, என்னையே அவளும் பிரதிபலிப்பாள். அதனால் அவளிடம் என்னுடைய மன அழுத்தத்தை என்னால் பகிர்ந்துகொள்ள முடியாது. என் கஷ்டம் என்னைவிட அவள் அதிகம் உணருவாள்.

அதனால் அழுத்தம் அதிகம் உணரும் தருணங்களில் அதிலிருந்து மீள்வதற்கு ஒரு காரணியாக மட்டுமே எழுத்தை நான் பயன்படுத்துவது.

இத்தனை விளக்கம் எதற்கு கொடுத்திருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா?

என்னுடைய எழுத்தையும் மதித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்து இருப்பதோடு, அடுத்த கவிதை எப்போது என்று கேட்டதற்கே நீண்ட விளக்கம்.

தொடர்ந்து எழுதும் ஆளில்லை நான். மன நிம்மதிக்காக எப்போதோ தோன்றும் போது எழுதுவேன். எதிர்பார்த்து ஏமாறாதீர்கள்.

இப்படிக்கு,
அணங்கு.

படித்து முடித்தவன் கடிதத்தை மேசைமீது வைத்துவிட்டு, இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்.

அழுத்தம்… நிம்மதி…

கடிதத்திலிருந்த இவ்விரண்டு வார்த்தைகளும் விநோதனை வேதனைக்குள்ளாக்கியது.

‘அப்படியென்ன வருத்தம் இருக்கும்?’ அவளுக்காக யோசித்தான். ஏனென்று காரணம் இல்லாமலே.

தமக்கு ஏதோ ஒருவகையில் ஒருவரை பிடித்துவிட்டாலும், அவர்களை சார்ந்த ஒன்று நிகழும் போது அவர்களுக்காக தன்னை அறியாது சிந்திப்போமே! அந்நிலையில் தான் இப்போது விநோதனும் இருந்தான்.

அவளுக்கு எத்தகைய பெரும் பிரச்சினைகள் இருந்தாலும், களைய வேண்டுமென்று மனதில் எழும் எண்ணத்தை அவனால் தடை செய்ய முடியவில்லை.

‘ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் எழுதி அனுப்பலாமா?’

நினைத்தவன் அப்போதே அவ்வெண்ணத்தை விரட்டி அடித்தான். இது சற்று அதிகப்படியானதே.

யாரென்று தெரியாமல் உரிமையாக அனுப்புவதாக நினைத்துவிட்டால், தவறான புரிதலுக்கு இதுவே காரணமாக அமைந்துவிடும்.

ஏனோ அவள் சந்தேகக் கண் கொண்டு தன்னை பார்த்திடக்கூடாது எனக் கருதினான்.

கடிதத்தை எடுத்து மடித்து மேசை இழுவையில் வைத்தவன், கடமை அழைக்க காவலனாக மாறியிருந்தான்.

அவனுக்கு அனைத்தும் அவனது காக்கிச்சட்டை தான். வேலையில் அமர்ந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. இளம் காவலன். முதல் பணியே கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் தான்.

“படிக்கத்தான் இவ்வளவு நாள் தனியா இருந்த. வேலையாவது நம்ம ஊரிலே வாங்கிருக்கலாமே?” அவனது அன்னையின் ஏக்கம் சுமந்த கேள்வி, எப்போது அவரை நினைத்தாலும் காதில் எதிரொலித்திடும்.

“பர்ஸ்ட் போஸ்டிங்’ம்மா. ஒரு வருஷம் போகட்டும். நானே டிரான்ஸ்பர் வாங்கிக்கிறேன்” என்று அன்னைக்கு ஆயிரம் சமாதானங்கள் செய்து வந்திருந்தான்.

வந்த பத்து நாட்களில் மொத்த ஊரையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தான். இரண்டு மாதங்கள் ஆகிறது. இன்னும் அன்னையை பார்க்க தமிழ்நாட்டிற்கு செல்லவில்லை. பேசும் போதெல்லாம் அழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்.

அவனுக்கும் அன்னையை பார்க்க வேண்டும். அவரின் கையால் உணவு உண்ண வேண்டும். அவரின் மடியில் படுத்து செல்லம் கொஞ்ச வேண்டுமென ஆசைகள் இருக்கின்றன. இருப்பினும் அதனையெல்லாம் வென்றதல்லவா அவனது காக்கி கனவு.

அத்தனை பிடித்தம் அதில் அவனுக்கு.

வீட்டினை பூட்டிவிட்டு காவல் வாகனத்தில் ஏறியவன் தானே இயக்கியபடி காவல் நிலையம் நோக்கிச் சென்றான்.

அவன் கடந்து சென்ற பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகம் இருக்கவே, அங்கேயே நின்றுவிட்டான்.

காலை நேரம் என்பதால் பரபரப்பாக காட்சியளித்தது அவ்விடம்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகமாக தென்பட்டனர். அலைப்பேசியை எடுத்து நேரத்தை பார்த்தவன் வண்டியின் பேனெட்டில் சாய்ந்து நின்றுவிட்டான்.

“இந்த பஸ் தினமும் லேட் தான்.”

“என்னைக்குத்தான் சரியான நேரத்துக்கு வந்திருக்கு?”

இரண்டு மாணவிகள் சலிப்பாக உரையாடியது அவனுக்கும் கேட்டது.

மேலும் ஐந்து நிமிடங்கள் கடந்த பின்னரே பேருந்து வந்தது. தமதமாக வந்ததும் இல்லாமல், நிறுத்தத்தில் நிற்காது சென்றிட…

“இந்த டைமுக்கு வர பஸ்சுக்கு இதே வேலையாப்போச்சு” என்று  அலுத்துக்கொண்டவர்களாக வேலைக்கு செல்பவர்கள் தனி வாகனம் பிடித்து சென்றிட, மாணவர்கள் மட்டும் அடுத்த பேருந்திற்காகக் காத்திருந்தனர்.

ஐந்தாறு பள்ளி மாணவர்கள் ஒரே சீருடையில் இருக்க மற்றவர்கள் கல்லூரி மாணவர்கள் போலும்.

தனக்கு அருகில் நான்கடி இடைவெளியில் நின்று முணுமுணுத்துக் கொண்டிருந்த மாணவிகளை அழைத்தான்.

“சொல்லுங்க சார்?” அவனின் காக்கி உடை மரியாதையாக விளிக்க வைத்தது.

“உங்க ஸ்கூல் எங்கிருக்கு? நான் டிராப் செய்றேன் வாங்க” என்று அழைத்தான்.

“இல்லை சார் வேண்டாம். இன்னும் பதினைந்து நிமிடத்தில் இன்னொரு பஸ் வரும். அதில் போய்க்கிறோம்” என்று ஒரு மாணவி மறுப்பாகக் கூற, மற்றொரு மாணவி “போலாம்டி… பர்ஸ்ட் அவர் டெஸ்ட் இருக்கு. மிஸ் பண்ணிட்டா அந்த வாத்தி வச்சு செய்யும்” என்று அவளின் காதில் கிசுகிசுத்தாள். அது அவனுக்கும் கேட்டது.

அதற்குள் ஒரு மாணவன் விநோதனின் அருகில் வந்து…

“சார் நீங்க ஏசிபி விநோதன் தானே? நீங்க வந்தபிறகு சிட்டியே கன்ட்ரோலா இருக்குன்னு எங்க அப்பா காலையில் தான் சொல்லிட்டு இருந்தார்” என்று உற்சாகமாக பேசினான்.

தன்னைப்பற்றி எந்தவொரு தகவலும் ஊடகங்களில் வருவதை விரும்பாத விநோதன், அதனை அனுமதித்ததும் இல்லை. என்னைப்பற்றி செய்தி என்றால் வெறும் பெயரோடு முடித்துக்கொள்ளுங்கள், புகைப்படம் வேண்டாம் என்று தன்மையாகவேக் கூறியிருந்தான். அதனால் தன்னைப்பற்றி இவனுக்கு எப்படித் தெரியும் என்று விநோதன் யோசத்திட அதற்கு அம்மாணவனே விடையளித்திருந்தான்.

“உங்களுக்கு கீழ் வேலை பார்க்கும் தாமஸ் பையன் தான் சார் நான். ரெண்டு நாளுக்கு முன்ன ஸ்டேஷனுக்கு அப்பாவை பார்க்க வந்தப்போ உங்களை பார்த்திருக்கேன்” என்றான்.

“ம்… காலேஜ் போகலையா?”

அவன் அத்தனை பேசிட… தான் மௌனமாக இருப்பது சரியல்ல என்று கேட்டிருந்தான்.

“பஸ் வரணமே சார். வந்தாலும் இங்க நிக்கணுமே!”

“அண்ணா உங்க காலேஜ் ரூட் பஸ் வருது.” அங்கு நின்றிருந்த மாணவி அவனிடம் சொல்லிட, அவன் விநோதனிடம் சொல்லிக்கொண்டு ஓடிவிட்டான்.

“இந்த பஸ்ஸே வந்திருச்சு. இன்னும் நமக்கு வரலையே!” என்று விநோதனிடம் மறுத்த பெண்,

“எங்களை டிராப் பண்றீங்களா சார்?” என தானாகவே கேட்டிருந்தாள்.

விநோதன் அலட்டிக்கொள்ளாது,

“போகலாம் ஏறுங்க” என்றான். மாணவிகள் ஏறி அமர்ந்திட, எதிரில் இருந்த தேநீர் கடையில் நின்றிருந்த இரண்டு மாணவர்கள் ஓடிவந்தனர்.

“நாங்களும் அதே ஸ்கூல் தான் சார். வரட்டுமா?” எனக் கேட்டனர்.

“ஏற்கனவே இங்க இடமில்லை சேது.” ஒரு மாணவி சொல்லிட…

முன்னிருக்கையில் தனக்கு அருகில் அமர்ந்திருந்த மாணவியை, பின்னால் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து உட்காருமாறு கூறி… மாணவன்  இருவரையும் முன்னிருக்கையில் நெருங்கி உட்கார வைத்து, வண்டியை கிளப்பினான்.

இதனை விநோதன் செய்வதற்கும் ஒரு காரணம் இருந்தது.

தனக்கு வேண்டிய தகவல்களை பேச்சுவாக்கில் அவர்களிடமிருந்தே பெற்றுக்கொண்டான்.

அவர்களை பள்ளியில் இறக்கிவிட்டவன் நேராகச் சென்றது போக்குவரத்து கழக அலுவலகத்திற்குத்தான்.

போக்குவரத்து காவல் உயர் அதிகாரியை உடன் அழைத்துச் சென்றிருந்தான்.

நேற்று முன்தினம் தான் கவனித்திருந்தான். குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்தில் எந்தவொரு அரசு பேருந்து நிற்பதில்லை என்பதை. இரண்டு நாட்கள் போக்குவரத்து கன்ட்ரோல் ரூமில் அப்பேருந்து நிலையத்தை காமிராவின் மூலம் கண்காணித்தவனுக்கு காரணம் இதுதானென்று அனுமானிக்க முடியவில்லை. அதனாலேயே இன்று மாணவர்களை அழைத்துச் செல்வதைப்போல் என்னவென்று அறிந்துகொண்டான்.

அந்த ஏரியாவில் இருக்கும் பள்ளி கல்லூரி இரண்டுமே, போக்குவரத்து கழக எம்.எல்.ஏ’வுக்கு எதிரான ஜாதிக் கட்சித் தலைவருடையது. சுற்று வட்டாரத்தில் பெயர் பெற்ற கல்வி நிறுவனம். அதனை வாங்குவதற்கு எம்.எல்.ஏ முயற்சிக்க அக்கல்வி நிறுவனர் மறுத்துவிட்டார்.

எம்.எல்.ஏ’விற்கு கல்வியில் அதிக பணம் ஈட்டலாம் என்ற எண்ணம். அது முடியாமல் போய்விட, அக்கல்வி நிறுவனத்தை கைப்பற்றியே ஆக வேண்டுமென பல வழிகளில் முயற்சித்தும் தோல்வியே கண்டார்.

அதனால் தன்னுடைய பதவியை வைத்து, அந்த பள்ளி மற்றும் கல்லூரியைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து படிக்க வரும் பிள்ளைகளை நிறுத்துவதற்காக அவ்வூர்களில் பேருந்துகளை நிறுத்தவிடாமல் செய்துவிட்டார்.

இத்தகவலைத்தான் அந்த பள்ளி மாணவர்களிடம் விநோதன் தெரிந்து கொண்டான்.

“இவனுங்க ஜாதி பிரச்சினையில் எங்க படிப்பு உருளுது சார். சுற்று வட்டாரத்திலேயே இந்த ஒரு பள்ளி மற்றும் கல்லூரி தான்.”

“அதனால் வேற இடம் போய் படிக்கவும் வழியில்லை.”

“அந்த எம்.எல்.ஏ’வுக்கு தனக்கு கீழுள்ள ஜாதிக்காரன் தன்னை எதிர்த்து பள்ளி, கல்லூரி நடத்துவதான்னு பொறாமை சார். அந்த ஆளு தொடங்கிய பள்ளிக்கூடம் கட்டடம் இடிஞ்சு விழுந்து, மூணே மாசத்தில் தரமில்லைன்னு மூடிட்டாங்க. அந்த காண்டுல இப்படி பண்றான் சார்.”

மாணவர்களும் தங்களுக்கு தெரிந்த விடயத்தை தங்களைப்போல் கூறியிருந்தனர்.

“நாளையிலிருந்து பஸ் சரியான நேரத்திற்கு வரும். நிற்கும்” என்று அப்பிள்ளைகளிடம் கூறி பள்ளிக்கு அனுப்பி வைத்திருந்தான்.

அதற்கு முன்பாக கன்ட்ரோல் ரூமிற்கு சென்றவன், அப்பகுதியில் சுற்றியிருக்கும் அனைத்து பேருந்து நிலையங்களையும் கவனித்தான். சரியாக பள்ளி, கல்லூரி ஆரம்பிக்கும் மற்றும் முடியும் நேரங்களில் எந்தவொரு பேருந்தும் எந்தவொரு ஊர்களிலும் நிற்பதில்லை என்பதை அறிந்தவனுக்கு அந்த எம்.எல்.ஏ’வின் மீது கட்டுக்கடங்கா கோபம் கனன்றது.

அவனைத் தொட வேண்டுமென்றால் சரியான ஆதாரம் இருக்க வேண்டுமென நினைத்தான்.

அதன் நடவடிக்கையாகத்தான் எங்கு தன் வேலையை காட்ட வேண்டுமோ அங்கு வந்திருக்கிறான்.

போக்குவரத்து கழக அலுவலகத்திற்கு வருவதற்கு முன்… முதன் கட்டமாக குறிப்பிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை சந்தித்து விசாரித்தான்.

அவர்களின் மூலம், “டிப்போவிலிருந்து தங்களுக்கு வந்த உத்தரவு” என்று அனைவரும் ஒன்றுபோல் சொல்ல… அடுத்து அங்கு தான் சென்றான்.

அங்கு அவர்கள் எவ்வளவோ மறைக்க முயன்றும், எம்.எல்.ஏ தான் காரணம் என்பதை தன்னுடைய அழுத்தமான விசாரணையிலேயே சொல்ல வைத்திட்டான்.

திரட்டிய ஆதாரங்களையும், கண்ட்ரோல் ரூமில் சேகரித்த காணொளிகளையும் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்தவன்,

“அவை யாவும் நகரத்திற்கு ஒதுக்குபுறமான கிராமங்கள் என்பதால் பார்வைக்கு வராமல்… இத்தனை மாதங்களாக பள்ளி கல்லூரி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்” என்றான்.

அச்சமயம் தாமஸ் தன் மகனை அழைத்துக்கொண்டு அங்கு வந்திருந்தார்.

கழகத்தின் தலைமை அதிகாரி எதற்கென்று கேட்க…

“நேரடி ஆதாரம். உங்க துறை எம்.எல்.ஏ. தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்பிற்கு இடமளித்து பதவியை தவறா பயன்படுத்தி இருக்கார். நீங்க அவரை காப்பாற்ற நினைத்தால்? அதற்காகத்தான்” என்ற விநோதன் “அனைத்து மாணவர்களையும் அழைத்து வருவது கடினம். அதான் சாட்சிக்கு ஒரு மாணவன். உங்களுக்கு இன்னும் சாட்சிகள் வேணும்னா, நாம அந்த பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று அனைத்து மாணவர்களையும் நேரடியா விசாரணை செய்யலாம்” என்றிட அதிகாரிக்கு வியர்த்து வழிந்தது.

விநோதன் முன்பாக அவரால் எம்.எல்.ஏ’வுக்கு அழைத்து விவரத்தை கூறவும் முடியவில்லை.

விநோதன் இப்போதே நடவடிக்கை எடுத்தாக வேண்டுமென்று திடமாக அமர்ந்திருக்க…

அந்தந்த டிப்போவிற்கு அழைத்த அதிகாரி… அலுவலகத்திலிருந்து காகித உரையாக எவ்வித உத்தரவும் வராது எதையும் செய்யக்கூடாது என்றி அழைத்து கூறியதோடு, இனி அனைத்து பேருந்து நிறுத்தத்திலும் பேருந்துகள் பள்ளி, கல்லூரி நேரத்தில் மாணவர்கள் இறங்கி ஏறும் வரை நின்று செல்ல வேண்டுமென்று சொல்லிய பின்பே விநோதன் தன்னிருக்கையிலிருந்து எழுந்தான்.

“அப்படியே எல்லா டிப்போவிற்கும் மெயில் பண்ணிடுங்க சார்” என்றவன் அதோடு நிறுத்தாமல், தன்னுடைய மேலதிகாரியின் துணையுடன் நீதிபதியை தனிப்பட்ட முறையில் நேரடியாக சந்தித்து நடந்தவற்றை விளக்கிக்கூறி ஆதாரங்களை சமர்ப்பித்தான்.

நீதிபதியும் அனைத்தையும் சரிபார்த்துவிட்டு, உடனடியாக எம்.எல்.ஏ’வை கண்டித்து சம்மன் அனுப்பினார்.

நேரில் வந்து தகுந்த விளக்கங்கள் கொடுக்கவும் ஆணையளித்தார்.

இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் நேரடி பேட்டி எடுத்து ஊடகங்கள் செய்திகளாக வெளியிட்டிருந்தனர்.

மாணவர்கள் அனைவரும் விநோதனுக்கு நன்றி தெரிவித்து பெருமையாக பேசிட… அப்போதும் தனது புகைப்படம் வெளிவருவதை அவன் அனுமதிக்கவில்லை.

எம்.எல்.ஏ’வின் செயலை இதனைக்கொண்டு எதிர்க்கட்சி தலைவர்கள் கிழித்து தொங்கவிட்டனர்.

செய்தி உலகில் விநோதன் அரசனாக வலம் வந்தான்.

எம்.எல். ஏ’வின் கோபம் முழுக்க விநோதனின் மீது வேறு விதமாக திரும்பியது.

*************************

நள்ளிரவில் விநோதனின் அலைப்பேசி விடாது ஒலித்தது.

அப்போதுதான் ரோந்து முடித்துவிட்டு குளியலறைக்குள் புகுந்திருந்தான். தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கவும் அவசரமாக குளியலை முடித்துக்கொண்டு வந்து அழைப்பை ஏற்றிருந்தான்.

‘இந்நேரத்தில்…?’ யோசனையானான்.

“இன்னும் அரை மணியில் ட்ரெயின் திருவனந்தபுரம் ஸ்டேஷன் வந்திடும்” என்ற தகவல் தெரிவித்து துண்டிக்கப்பட்டது.

வேகமாக ஆடை மாற்றியவன் புயல் வேகத்தில் சென்றான் என்று தான் சொல்ல வேண்டும்.

வந்து கொண்டிருப்பது விநோதனின் உயிராயிற்றே. இந்த வேகம் கூட அவனிடம் இல்லையென்றால் எப்படி? தானிருக்கும் இடத்திலிருந்து இருபது நிமிடங்களில் ரயில் நிலையம் வந்து சேர்ந்திருந்தான்.

விநோதனிடம் படபடப்பு. அந்நபரை பார்க்கும் வரை குறையாது.

‘என்னவானது?’ மூளை பலவற்றையும் சிந்தித்து சோர்ந்தது. தாயிற்கு அழைக்க நினைத்தவன், இந்நேரத்தில் அவரை பதட்டம் அடைய வைக்க வேண்டாமென்று கைவிட்டான்.

ரயில் வருவதற்கான அறிவிப்பு ஒலிக்கவும், அதற்குரிய தடம் எண்ணின் நடை மேடையில் சென்று நின்றான்.

மொத்த கூட்டமும் இறங்கியும் அந்நபரை காணவில்லை. விநோதனே ஒவ்வொரு பெட்டியாக சென்று பார்த்தான்.

ஒரு பெட்டியில் விநோதன் தேடி வந்த நபர் தென்படவும், சன்னல் வழியாகவே வெளியிலிருந்து அழைத்தான்.

தனக்கு முன்பு வெறித்தவாறு அமர்ந்திருந்தவனிடம் எவ்வித அசைவுமில்லை.

பெட்டியின் உள்ளே ஏறிய விநோதன்…

“துருவ்” என்று அருகில் சென்று தோள் தொட்டு அழைக்க,

“அண்ணா” என்ற கேவலுடன் விநோதனை அணைத்துக் கொண்டான் துருவன்.

விநோதனின் உடன் பிறப்பு துருவன். விநோதனுக்கு மூன்று வருடம் இளையவன் துருவன். அவர்கள் தந்தை இறக்கும்போது விநோதனுக்கு ஓரளவு அனைத்தும் புரியும் வயது, அதனால் தன் தம்பிக்கு தானே தாயுமானவன் ஆகிப்போனான்.

அவர்களது தந்தை விட்டுப்போன தொழிலை, உரிமையே இல்லாது சொந்தம் கொண்டாட முனைந்த உறவுகளிடம் தங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள அன்னப்பூரணி தொழிலை தன் கையில் எடுத்து, அதன் பின்னால் ஓடிட… துருவனை அன்னையாய் மடி தாங்கியவனும் விநோதனே.

சொல்லப்போனால் விநோதன் தாயாகின், துருவன் சேயாவான்.

தன்னுடைய தம்பி எதற்காக அழுகிறான் என்றெல்லாம் விநோதனுக்கு தெரியவில்லை. ஆனால், அவன் மனம் ஆறும் மட்டும் அழுது முடியட்டும் என்று அவனிடம் தன்னை ஒப்புவித்து அப்படியே நின்றிருந்தான். துருவனின் முதுகை ஆறுதலாய் தடவியபடி.

அடுத்தகட்ட பயணிகள் அப்பெட்டியில் ஏறிடவே…

“வீட்டுக்கு போகலாம் துருவ்” என்றான்.

“சாரிண்ணா” என்றபடி துருவன் விலகிட…

“அப்படியே அடிச்சன்னு வை… சாரியாம் சாரி” என்ற விநோதன் “ரொம்ப பெரியாளாகிட்டியோ?” என்றவாறே துருவனின் கண்ணை துடைத்து அழைத்துச் சென்றான்.

வண்டியில் ஏறியதும் துருவன் விநோதனின் தோளில் சாய்ந்துகொண்டான்.

தம்பியின் கன்னத்தை தட்டிக்கொடுத்த விநோதன், துருவனின் கையை பிடித்து அழுத்தம் கொடுத்தான்.

“காரணம் கேட்கமாட்டியா ண்ணா?”

“வீட்டுக்கு போய் பேசிக்கலாம்” என்ற விநோதன் வண்டியை சாலையில் செலுத்த ஆரம்பித்தான்.

“நீ ரெஃபிரஷ் பண்ணிட்டு வா.” வீட்டிற்கு வந்ததும் துருவனை அறைக்குள் அனுப்பி வைத்த விநோதன் கிச்சனிற்குள் சென்றான்.

பிரிட்ஜிலிருந்து பாலினை எடுத்து அடுப்பில் ஏற்றியவன், பிரட் துண்டுகளை அடுப்பின் மற்ற பக்கம் டோஸ்ட் செய்து, இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி நிமிடத்தில் பிரெட் ஆம்லெட் தயார் செய்தான்.

“அண்ணா…”

உள்ளிருந்து துருவன் அழைத்தான்.

“நான் ட்ரெஸ் எதுவும் கொண்டு வரலண்ணா!” குளியலறைக்குள் இருந்து கூறினான்.

அப்போதுதான் துருவன் கையில் பையென்று எதுவும் எடுத்துவரவில்லை என்பதே விநோதனின் கருத்தில் பட்டது.

தன்னையே மறக்கும் நிலையில் கிளம்பி வந்திருக்கிறான் என்பதும் புரிந்தது.

எத்தகைய பெரிய விடயமாக இருந்தாலும் சரிசெய்து தன்னுடைய தம்பியின் முகத்தில் சிரிப்பை வரவழைத்திட வேண்டுமென்று மனதில் நினைத்தான்.

“முதல்ல குளிச்சிட்டு வெளியே வாடா! வார்ட்ரோபில் இருக்கு. எது வேணுமோ எடுத்துக்கோ!”

துருவன் ஆடைமாற்றி வரும்போது விநோதன் வரவேற்பரையில் தொலைக்காட்சியின் முன்பு அமர்ந்திருந்தான்.

“இந்த நேரத்தில் எதுக்குடா தலைக்கு தண்ணீ ஊத்திருக்க? ஒழுங்கா துடைக்கக்கூட இல்லை. நீர் சொட்டுது” என்று தம்பியை கடிந்து கொண்டவனாக தானே துண்டினை எடுத்து துடைத்து விட்டான்.

துருவன் விநோதனின் முகத்தையே பார்த்திருக்க…

“என்னை பார்த்தது போதும். சாப்பிடு!” என செய்து வைத்திருந்ததை கொண்டு வந்து தானே ஊட்டியும் விட்டான்.

பால் அடங்கிய குவளையை துருவனின் கையில் திணித்த விநோதன், அவன் குடித்து முடிக்கும்வரை அமைதியாக இருந்து, பின்னர் கேட்டான்.

“இப்போ சொல்லு. என்ன விஷயம் உன்னைப்போட்டு அழுத்துது.”

விநோதன் கேட்பதற்காகவே காத்திருந்தவன் போல்… அறைக்குள் சென்று கழட்டிபோட்ட சட்டையின் பையிலிருந்து மடிக்கப்பட்ட காகிதம் ஒன்றை கொண்டு வந்து அண்ணனின் கையில் கொடுத்தான்.

“ஹாய் க்யூட்டி பைய்…

நான் தான் உங்கள் நிரல்யா!”

அதனை பிரித்து முதல் இரண்டு வரியை படித்த விநோதன்,

“என்னடா லவ் லெட்டரா? இதுக்கா இவ்வளவு ஃபீல் பண்ணிட்டு இருக்க?” என்று கேட்டபடியே அதனை மடிக்க…

“ஃபுல்லா படி” என்ற துருவன் விநோதனின் மடியில் தலை வைத்து படுத்து விட்டான்.

“காதல் சொல்லிட்டு வராது சீனியர். காதல் வருவதற்கு வயசு அவசியமில்லை. மனசு தான் முக்கியம். ஒரு விஷயம் பார்த்ததும் நம்ம மனசில் எப்படி பதியுமோ, கடைசி வரை அதனோட பிம்பம் அப்படியேத்தான் இருக்கும். எனக்கு நீங்களும் அப்படித்தான்.

உங்களை பார்த்ததும் உள்ளுக்குள்ள சொல்லுச்சு… என்னோட மொத்த சந்தோஷமும் உங்ககிட்ட இருக்குன்னு. சின்ன வயசிலிருந்து நான் எப்போ சந்தோஷப்பட்டேன் எனக்கு நினைவிலே இல்லை.

உங்களை பார்த்ததும் நான் இழந்த மொத்த சந்தோஷங்களும் என் கண்முன்னே நடமாடுவதைப்போல் உணர்ந்தேன்.

நீங்க சொன்ன மாதிரி வயது கோளாறில், பக்குவமில்லாம இல்லை சீனியர்.

வெட்கமாயில்லையான்னு கேட்டிங்க?

எதுக்கு சீனியர் வெட்கப்படணும். லவ் பண்றது வெட்கப்படுவதற்குரிய செயலா?

ஆனால் ஒண்ணு மட்டும் புரியுது சீனியர்… இத்தனை நாட்கள் என்னுடைய காதல் உங்களுக்குத் தொந்தரவாத்தான் இருந்திருக்கு. இனியும் அந்த தொல்லையை உங்களுக்கு கொடுக்க விரும்பல.

நீங்களே நினைத்தாலும்,

நீங்க ஏன் என்ன நினைக்கப்போறீங்க? அப்படி தவறுதலா நினைத்தாலும் நான் உங்க கண் முன்னால் வரமாட்டேன்.

நான் போறேன் சீனியர்.

பத்திரமா இருங்க.

லவ் யூ சீனியர்.”

விநோதனுக்கு மனம் கனத்து இருந்தது. அந்த பெண்ணின் காதலின் ஆழத்தை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. தன் தம்பி அவளின் மனதை வெகுவாகக் காயப்படுத்திருக்கிறான் என்பதும் புரிந்தது.

“நீ லவ் பண்றியா?”

துருவிடம் விநோதன் கேட்டது இதைத்தான்.

“இல்லண்ணா.”

நொடியும் தாமதிக்காது பதில் வழங்கியிருந்தான் துருவன்.

“அப்புறம் எதுக்கு பீல் பண்ற? லவ் சொல்லுறது அந்த பெண்ணோட உரிமைங்கிற மாதிரி, மறுக்க உனக்கும் உரிமை இருக்கு. என்ன நீ கொஞ்சம் தன்மையா சொல்லியிருக்கலாம். சரி விடு, இதுக்கா இவ்வளவு ஃபீல் பண்ற?” எனக் கேட்ட விநோதனின் கை தம்பியின் தலையை வருடிக் கொண்டிருந்தது.

“நான் சொல்லியிருக்க மாட்டேன்னு நினைக்குறியாண்ணா. எத்தனை முறை, எனக்கு செட் ஆகாது. என் பின்னால் சுத்தாதன்னு சொல்லிட்டேன். அதையும் மீறி பார்க்கும் போதெல்லாம் லவ் லவ்வுன்னு உயிரை எடுத்துட்டாள்” என்று எழுந்து அமர்ந்தான் துருவன்.

“ஹேய்… எதுக்கு இப்போ இவ்வளவு டென்ஸ்ட் ஆகுற” என்ற விநோதன் தம்பியின் தோளில் கை வைத்து அழுத்தினான்.

“அம்மாக்கு உடம்பு முடியலன்னு ஊருக்கு போயிருந்தேன்ல… அப்போ என்னைத்தேடி நம்ம லாட்ஜுக்கே வந்துட்டா(ள்)ண்ணா. திரும்ப அவளை ஹாஸ்டல் கொண்டுபோய் சேர்க்கும் வரை நான் நானாவே இல்லை. காதல் இப்படி பைத்தியக்காரத்தனமெல்லாம் செய்ய வைக்குமா?” என்று வினவியவனிடம் ஆயாசம்.

“ஷீ இஸ் மேட்லி லவ்ஸ் யூ.” சொல்லிய விநோதனை துருவன் முறைத்தான்.

“இந்த ஆரோன் பயலும் இதைத்தான் சொல்லுறான். ஆனால் எனக்கு அவள் பெயரை கேட்டாலே இரிட்டேட் ஆகுது விநோண்ணா” என்ற துருவன் முகத்தை இரு கைகளாலும் அழுத்தமாக தேய்த்தான்.

விநோதனுக்கு ஒன்று புரிந்தது. காதலை உணரும் நிலையில் அவனில்லை என்று.

“சரி விடுடா… அந்த பொண்ணு தான் இனி உன்னை டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டாளே. அப்புறமும் என்னத்துக்கு இப்படி வந்திருக்க. வந்து என்னையும் பயம் காட்டிட்ட” என்ற விநோதன் அடுத்து துருவன் சொல்லியதைக்கேட்டு…

“கோபத்தை கொஞ்சம் குறைச்சுக்கோ துருவ்” என்றான்.

கொடைக்கானலிலிருந்து நிரல்யாவை அழைத்து வந்து கல்லூரி விடுதியில் விட்ட துருவன் முடிந்தளவு நிரல்யாவின் பார்வையில் விழாமலே இருந்தான்.

அதுதான் இருவருக்குமே நல்லது என்கிற எண்ணம் அவனிடத்தில்.

ஆரோன் கூட…

“உன் பின்னாடி பெயருக்கு லவ்வுன்னு சுற்றும் பெண்கள் மாதிரி இவள் இல்லைடா” என்று சொல்லி பார்த்திட்டான்.

துருவிற்கு ஏனோ காதலில் நம்பிக்கை இல்லை. அவனுக்கு படிப்பில் அத்தனை ஆர்வமும், பிடித்தமும் இருந்தது. அத்தோடு தனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும், தன்மீது உயிரே வைத்திருக்கும் அண்ணனின் அன்புக்கு முன்னால் அவனக்கு வேறெதுவும் பெரியதாக தெரியவில்லை.

வழக்கமாக அவனிருக்கும் இடங்களிலெல்லாம் நிரல்யாவால் துருவனை காண முடியாது போனது.

மனதில் அவன்மீது கொள்ளை கொள்ளையாக காதலிருக்க, அவனிடம்  சிறு பார்வை கூட இல்லாதது அவளின் காதல் மனதை வலிக்க செய்தது. அதனால் ஒரு முடிவுடன், துருவன் மைதானத்தில் அமர்ந்திருக்க அவனிடம் சென்றவள் அங்கிருக்கும் பிற மாணவர்களை கருத்தில் கொள்ளாது,

“சீனியர் எனக்கு எப்போ ஓகே சொல்லுவீங்க” என கத்தினாள். கிட்டத்தட்ட மிரட்டும் தொனி. மாணவர்கள் அனைவரும் துருவனை, நிரல்யாவை பார்த்து ஏதேதோ தங்களுக்குள் கிசுகிசுக்க அவமானமாக உணர்ந்த துருவன் அப்போதே நிரல்யா மீது முதல்வரிடம் புகார் அளித்ததோடு…

“வேண்டான்னு சொல்ற பையன் பின்னாடி சுத்திட்டு இருக்கியே உனக்கு வெட்கமாயில்லையா?” என்றும் கேட்டிருந்தான்.

முதல்வரிடம் புகார் அளித்ததோடு தன்னுடைய வேலை முடிந்தது என இருந்த துருவனுக்கு, அடுத்து நிரல்யாவின் நிலை என்ன ஆனது என்பது கூட தெரியாது போனது. தெரியவில்லை என்பதைவிட அவன் தெரிந்துகொள்ள நினைக்கவில்லை.

அவள் அவனின் கண்ணில் மட்டுமல்ல கருத்திலும் படவில்லை.

பத்து நாட்களுக்கு மேலாகியிருந்தது.

அன்று துருவனின் பையில் கடிதமிருக்க…

“பத்து நாள் நிம்மதியா இருந்தேன். இதோ ஆரம்பிச்சிட்டாள்” என்ற துருவன், கடிதத்தை கிழிக்கப் போக ஆரோன் தடுத்திருந்தான்.

“என்னடா?” துருவனின் குரல் சலிப்பாக வந்தது.

“உனக்கு நிரல்யா நினைவே இல்லையாடா?”

“எதுக்கு?”

“அவள் காலேஜ் விட்டே போயிட்டாள்.”

ஆரோன் சொல்லிட, துருவனிடம் சிறு அதிர்வு.

“உன்னால் தான். நீ பிரின்சியிடம் கம்ப்ளெயின்ட் கொடுத்ததால் தான்.”

“பொய் சொல்லாதடா. இதுக்கு போயிட்டு டிசி கொடுத்து அனுப்புவாங்களா? சஸ்பன்ட் பண்ணிருப்பாங்க. பத்து நாளோ, பதினைந்து நாளோ வந்திடுவாள்” என்று சர்வசாதாரணமாகக் கூறினான்.

ஆரோனுக்கு அவனை அடிக்க வேண்டும் போலிருந்தது.

“உன்னாலதான் அவள் போயிட்டாள். அவளோட படிப்பே உன்னால போயிடுச்சு” என்ற ஆரோன், “அன்னைக்கு ஏதோ கோபத்தில் கம்ப்ளைண்ட் கொடுத்துட்ட நினைத்தேன். ஆனால் இத்தனை நாளாகியும் அவளுக்கு என்ன ஆச்சுன்னு கூட நீ தெரிஞ்சிக்க நினைக்கல இல்லையா?” என்று முதல் முறையாக நண்பனிடம் கோபம் கொண்டு கத்திய ஆரோன்,

“அவளுக்கு என்னாச்சுன்னு எனக்கும் தெரியாது. நீ புகார் கொடுத்த அடுத்த நாள் என்னை வந்து பார்த்தாள். இந்த லெட்டரை உன் பையில் வைக்க சொல்லிக் கேட்டுக்கிட்டாள்.

நான் ஊருக்கு போறேன். அவரை பத்திரமா பார்த்துக்கோங்கண்ணான்னு சொல்லிட்டு போயிட்டாள்.”

துருவனுக்கு இது அதிர்ச்சி. இதில் ஒன்று அவனுக்குத் தெரிந்தது. இத்தனை நாள் கடிதம் எப்படி தன்னுடைய பைக்குள் வருகிறது என்பதற்கான பதில். ஆரோன் தான் வைத்திருக்கிறான். ஆனால் அதனை கேட்கும் நிலையில் அவனில்லை.

“இதுக்கு முன்னால் வைத்த லெட்டரெல்லாம் நீ படிக்கலன்னு எனக்குத் தெரியும். இதுதான் கடைசி. இதை மட்டுமாவது படி” என்ற ஆரோன், “எத்தனை கனவுகளோட படிக்க வந்திருப்பாள். அவள் கனவை இப்படி சிதைச்சிட்டியேடா” எனக் கேட்டிருக்க துருவன் குற்றவுணர்வுக்கு ஆளானான்.

நடந்ததை விநோதனிடம் பகிர்ந்துகொண்ட துருவன்….

“ரொம்ப கில்டியா இருக்குண்ணா. என்னால் ஒரு பொண்ணோட படிப்பு போயிடுச்சேன்னு. ரொம்ப அழுத்தமா இருக்கு விநோண்ணா. அவசரப்பட்டுட்டனோன்னு தோணுது.” விநோதனின் கைகளை பற்றிக்கொண்டு கலங்கினான்.

விநோதனுக்கு தெளிவாக தன் தம்பியின் நிலை புரிந்தது.

அவனை ஆட்டுவிப்பது குற்றவுணர்வு அல்ல… காதலென்று.

சொல்லி புரிவதா காதல். அவனாக உணர வேண்டியதாயிற்றே.

“விடுடா… இங்கில்லைன்னா என்ன? அவளோட ஊர்ல வேற கல்லூரியில் சேர்ந்து படிக்கப்போறாள். இதுக்காக எதுக்கு ஃபீல் பண்ணிட்டு இருக்க? லாஸ்ட் இயர். ஒழுங்கா ஸ்டடிஸில் கவனம் வை” என்று பலதை பேசி துருவனை தேற்றினான் விநோதன்.

“நிச்சயம் அவள் படிப்பு என்னால் வீணாகவில்லை தானே? அவள் வேற கல்லூரியில் படிப்பாள் தானே?”

துருவனிடம் ஆமென்று தலையாட்டினான் விநோதன்.

விநோதனுக்கும் இதில் புரியாத பக்கங்கள் பல இருக்கு…

‘இதற்காகவா அவள் கல்லூரியை விட்டு போயிருப்பாள்?’ என்கிற கேள்வி மனதில் எழுந்தது.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
15
+1
2
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்