
அத்தியாயம் 3 :
“எனது முதல் முயற்சியை அங்கீகரித்து கவிதை என்று ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி.
உண்மையில் உங்கள் பெயர் போலவே, நீங்களும் விநோதமானவர் தான். இல்லையென்றால் இத்தனை தூரம் மெனக்கெடல் செய்து என்னுடைய எண்ணத்தையும், சிந்தனையையும் பாராட்டி கடிதம் எழுதியிருக்கமாட்டீர்களே!
என்னுடைய கவிதை தங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி.
மனம் திறந்து பாராட்டிடவும் நல்ல மனம் வேண்டும். உங்களின் பாராட்டிற்கும் நன்றிகள் விநோதமானவரே!
இப்படிக்கு,
அணங்கு.”
படித்தவனின் இதழ்களுக்குள் புன்னகை. பார்வையில் மெச்சுதல்.
எவ்வித அதிகப்படியான அலட்டல் இல்லாத பதில் கடிதம். அவளறியாமலே அவனுள் அவள்மீது மதிப்பை உண்டாக்கியிருந்தாள் ஆதர்ஷினி.
அவனும் அப்படித்தானே தன்னைப்பற்றியோ, தன் பதவி பற்றியோ எதையும் பகிராது ஒரு ரசிகனாக தன்னுடைய கருத்தை எழுதியிருந்தான். அவனின் கண்ணியத்திற்காகத்தான் அவள் நன்றி கடிதம் அனுப்ப வேண்டுமென நினைத்ததே!
இருவருமே ஒருவரைப்பற்றி ஒருவர் அறிந்துகொள்ள விரும்பவில்லை. அதுவே அவர்களை கடிதத்தின் மூலம் நெருக்கமாக்கியிருந்தது.
அன்று கல்லூரியில் பிரச்சினையை சரிசெய்து அலுவலகத்திற்கு திரும்பியதும் உதவி ஆணையர் விநோதன் செய்த முதல் வேலை பத்திரிகையின் ஆசியருக்கு அழைத்தது தான்.
அவரிடம் தன் பதவியை கூறாது சாதாரண நபராகத்தான் ஆதர்ஷினியைப் பற்றி அறிந்துகொள்ள முயன்றான்.
அவரோ, “இதுதான் அப்பெண் அனுப்பும் முதல் கவிதை. ஆனால் இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இருப்பினும் ஒவ்வொரு முறையும், அவர்களின் எழுத்துக்களை அனுப்பும் போதே, தன்னைப்பற்றி எவ்வித தகவலும் வெளிவருவதை நான் விரும்பவில்லை என்பதை சொல்லித்தான் அனுப்புவார்கள். அதனால் தான் மற்ற கவிதைகளில் அதற்கு உரிமையானவர்களின் புகைப்படம் போட்டபோதும், இப்பெண்ணின் படம் போடவில்லை” என்று ஆசிரியர் தன்மையாகவே எடுத்துக்கூறினார்.
“இட்ஸ் ஓகே சார்” என்ற விநோதன், “அவர்களின் மின்னஞ்சல் முகவரியாவது கிடைக்குமா?” எனக் கேட்டான்.
தானே தன் எண்ணத்தை பகிர வேண்டுமென்கிற உந்துதல் அவனிடம். அதற்காகவே அவரிடம் மீண்டும் மீண்டும் ஆதர்ஷினியைப் பற்றி கேட்டான்.
“ஒரு பெண்ணுடைய தகவலை அப்படியெல்லாம் யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாது” என்று திண்ணமாக மறுத்துவிட்டார்.
இவ்வளவு தூரம் தான் இறங்கி கேட்டதே அவனுக்கு ஆச்சரியம் தான். இதற்குமேல் கேட்க முடியாதென நினைத்தவன், “என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் அவர்களுக்கு தெரிவித்துவிடுங்கள்” என்று கூறிட,
“வேண்டுமென்றால் நீங்கள் கடிதமாக எங்கள் அலுவலகத்திற்கு அனுப்புங்களேன். அதில் தவறாக எவ்வித விஷயமும் இல்லையென்றால், நாங்களே அவர்களுக்கு அனுப்பி வைப்போம்” என்றவர், “இதுபோல் பல வாசகர்கள் எங்களது மாதாந்திர புத்தகத்தில் வரும் தொடர் கதை மற்றும் நாவல் ஆசிரியர்களுக்கு எங்கள் மூலமாக அவர்களின் கருத்துக்களை அனுப்பிக் கொண்டுதான் இருக்கின்றனர்” என்று அவர் ஒரு வழியைக் காட்டினார்.
‘இந்த காலத்தில் கடிதமா?’ நினைக்கையில் சிரிப்பாக வந்தது அவனுக்கு.
அதனை அவரிடம் கேட்கவும் செய்தான்.
“கடிதத் தொடர்பு இருந்தவரை பல உறவுகளின் உன்னதம் அழியாமல் தான் இருந்தது” என்றவர், “அழிந்து வரும் கடிதத் தொடர்பை அழியவிடாது காக்க நாங்கள் செய்யும் சிறு முயற்சி” என்றதோடு “முடிந்தளவு தமிழில் எழுதுங்கள்” என்று கூடுதலாகவும் கூறினார்.
“தட்ஸ் நைஸ்” என்றவன் அவரிடம் பத்திரிகை அலுவலகத்தின் முகவரியை பெற்றுக்கொண்டு அவருக்கும் நன்றி தெரிவித்து அழைப்பைத் துண்டித்தான்.
கடிதம் அனுப்பலாமா வேண்டாமா என்று பலமுறை யோசனைக்கு பின்னரே அனுப்பியும் இருந்தான்.
அனுப்பிய பின்னரே தன்னுடைய செயல் அதிகப்படியோ என்று நினைத்திருந்தவனுக்கு பதில் கடிதம் மனதின் அலைப்புறுதலை நீக்கி அமைதியை கொடுத்தது.
முதல் முதலாக ஒன்றை செய்துவிட்டு, அதன் எதிர்வினை என்னவாக இருக்குமென்கிற பதட்டமே விநோதனிடத்தில் இருந்தது.
‘அவள் ஏற்கனவே இரண்டு கட்டுரைகள் எழுதியிருப்பதாகக் கூறினாரே!’ நினைத்ததும் இணையத்தில் அப்பத்திரிகையின் செயலியை தரவிறக்கம் செய்து, அணங்கு என்கிற பெயரில் வெளிவந்திருந்த இரண்டு கட்டுரைகளையும் படித்தான்.
ஒன்று ஏழ்மை. மற்றொன்று குற்றவாளிகள்.
முடிந்தளவிற்கு இரண்டிலுமே அவற்றிலிருக்கும் எதிர்மறைகளை விடுத்து நேர்மறையாகவே எழுதியிருந்தாள்.
அதிலும் குற்றவாளிகள் தலைப்பில் அவள் எழுதியிருந்த கருத்துக்கள் யாவும், ஒரு காவலனாக அவனது கருத்துக்களோடு ஒத்துப்போவதாக இருந்திட அவனுள் சிலிர்ப்பான உணர்வு.
தன்னுடைய எண்ணங்களுக்கு எழுத்து வடிவம் கொடுத்திருப்பதைப்போல் உணர்ந்தான்.
அதிலும் கல்லூரியின் சேர்மனிடம் அவன் கூறிய தவறு செய்தவர்களுக்கான தண்டனையைப்பற்றிய வார்த்தைகள், எண்ணம் மாறாது வார்த்தை மாற்றம் பெற்று எழுதியிருக்க… தன்னுடைய சிந்தனையோடு அவளின் சிந்தனை ஒத்திருப்பதை எண்ணி மகிழ்ந்தான்.
அந்த மகிழ்விற்கான காரணம் ஏனென்று தான் புரியவில்லை.
‘யாரோ ஒரு பெண்ணின் கண்ணோட்டம் தன்னோடு பொருந்தி போவதில் தனக்கெதற்கு இத்தனை துள்ளல்.’ சிந்தித்தவனுக்கு பதில் தானில்லை.
கட்டுரையின் இறுதியில், “நேர்மறை எண்ணம் தமது சிந்தனைகளை மாற்றும். பார்வையை மாற்றும்” என முடித்திருந்தாள்.
படித்ததும் அவனுள் அவளின் எழுத்தை ரசிக்கும் பாவனை.
அப்பெண்ணின் வயது, பெயர், தோற்றம் என இப்படி எதுவும் தெரியாமலே அவளை அவனுக்கு, அவனது உள்ளத்திற்கு பிடிப்பதை போலிருந்தது.
அதனால் யோசியாது மற்றொரு கடிதம் எழுதி அனுப்பி வைத்தான்.
******
“ஆச்சரியமான அணங்கிற்கு,”
இப்படித்தான் அவன் தன்னுடைய அடுத்த கடிதத்தை தொடங்கியிருந்தான்.
“என்னடா வழக்கமான கடிதங்களில் எழுதும், அன்புள்ள, மதிப்பிற்குரிய என்று எழுதாமல் ஆச்சரியமான என்று தொடங்கியிருக்கிறேன் என நினைக்கிறீர்களா?
ஆம் ஆச்சரியம் தான். என் எண்ணத்தோடு உங்களின் சிந்தனை ஒத்துப்போவதை கண்டு ஆச்சரியம்.
உங்களின் முந்தைய கட்டுரைகள் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
படித்தேன்! பிடித்தது! ரசித்தேன்!
என் கடிதத்திற்கு பதில் போட்டமைக்கு நன்றி.
தங்களின் மாறுபட்ட சிந்தனையை மற்றொரு கவிதையின் வாயிலாக எதிர்பார்த்திருக்கும் உங்களின் ரசிகன்.
இவன்,
விநோதன்.”
“என்ன தர்ஷி இவன் உன்னோட தீவிர ரசிகனாவே மாறிட்டான் போல. ஒரு கவிதையில ஒருத்தனை மொத்தமா காலி பண்ணிட்ட.”
ஆதர்ஷினியின் கையிலிருந்த கடிதத்தை பார்த்தவாறே கூறிய பூமிக்கு என்றுமில்லாமல் தோழியின் முகத்தில் தெரியும் மகிழ்வு நிறைவாக இருந்தது.
“என்ன முகம் ஜொலிக்குது?”
“எனக்கே தெரியும் பூமி. என்னுடைய எழுத்தின் அளவு எப்படின்னு. சும்மா மன அழுத்தம் தாளாம, என் அப்பாவுடைய செயல்களை பார்த்து வளர்ந்ததால், குற்றவாளிகள் தலைப்பில் எனக்கு மனதில் பட்டதை எழுதி அனுப்பியிருந்தேன். அதனை அனுப்பும் போது வெளிவரும் அப்படின்னே நினைக்கல. ஆனால் என்னுடைய சிந்தனையையும் ரசித்து ஒருவர் பாராட்டும் போது சந்தோஷமாத்தான் இருக்கு” என்று உண்மையைக் கூறினாள்.
“நல்லாயிருந்ததால் தான் பப்ளிஷ் பண்ணியிருக்காங்க, உன்னை நீயே குறைத்து மதிப்பீடு செய்யாதே தர்ஷி” என்ற பூமி மீண்டும் அக்கடிதத்தை படித்துவிட்டு, “இருந்தாலும் கொஞ்சம் ஓவர் தாண்டி இது” என்று கூறி ஆதர்ஷினியை வெறுப்பும் ஏற்றினாள்.
ஆதர்ஷினி இடுப்பில் கைகுற்றி முறைத்தாள்.
“உடனே முறைக்காதே!” என்ற பூமி,
“இதுக்கும் பதில் அனுப்பப்போறியா?” எனக் கேட்டாள்.
“தெரியல?” ஆதர்ஷினி தோள்களைக் குலுக்கினாள்.
“மொத்தத்தில் உனக்கு டெலிவரி சர்வீஸ் பார்த்து உன் அப்பாகிட்ட நான் என்னைக்கு மாட்டப்போறேன்னு தெரியல” என்ற பூமியின் புலம்பலை அவள் காதில் வாங்கவே இல்லை.
ஆதர்ஷினி பத்திரிகை அலுவலகத்தில் தன்னுடைய முகவரியாக பூமிகாவின் முகவரியைத்தான் கொடுத்திருக்கிறாள். அதனால் விநோதனின் கடிதங்கள், பத்திரிகை அலுவலகத்தின் வாயிலாக பூமிகாவின் வீட்டிற்குத்தான் வரும். அவள் தான் எடுத்து வந்து ஆதர்ஷினியிடம் கொடுப்பாள். அதனாலேயே பூமிகா அவ்வாறு கூறினாள்.
முத்துச்சாமிக்கு இதெல்லாம் பிடிக்காது. தெரிந்தால் அவ்வளவு தான். அதற்காகத்தான் முகவரியை மாற்றி கொடுத்திருக்கிறாள். அதுவும் அவரின் வாழ்க்கை தரத்தின் உயரம் இதனையெல்லாம் அனுமதிக்காது.
வீட்டிற்கு வந்த ஆதர்ஷினி வழக்கம்போல் அன்னையிடம் அன்றைய செயல்களுடன் விநோதனின் கடிதத்தையும் பகிர்ந்து கொண்டாள்.
அவளது எழுத்தைப்பற்றி மட்டுமே விநோதன் இரண்டு கடிதங்களிலும் குறிப்பிட்டு இருக்க… மகாலட்சுமிக்கு முன்பெழுந்த எச்சரிக்கை உணர்வு இப்போது தோன்றவில்லை.
“வாசகர் லெட்டர் போடுற அளவுக்கு பெரியாளாகிட்டியா தர்ஷிம்மா” எனக்கேட்டு மகளை கிண்டல் செய்தார். எல்லாம் சைகையில் தான்.
இருவரின் சிரிப்பு சத்தமும் வாசல் வரை கேட்டது.
அப்போதுதான் வீட்டு வளாகத்தினுள் நுழைந்த முத்துச்சாமி, மகளின் சிரிப்பு சத்தம் கேட்டு உள்ளே வராது காரிலேயே அமர்ந்திருந்தார்.
அவருக்கு நன்கு தெரியும், இப்போது தான் உள் சென்றால் மகள் தன்னுடைய சிரிப்பை துணிக்கொண்டு துடைத்ததைப்போல் மகிழ்ச்சியை விரட்டி அடித்திடுவாள் என்று. அதனால் மகளின் சிரிப்பின் சத்தத்தை அனுபவித்தபடி இருந்தார்.
என்ன தான் கெட்டவராக அடுத்தவர்களுக்கு பாதகமான செயல்களை செய்தாலும், அவருக்கும் உணர்வென்று, மனமென்று ஒன்று உள்ளதே. அதில் மகள் மீது வார்த்தையில் கொட்டிட முடியாத பாசம் வைத்துள்ளார். அதனை காட்டிடத்தான் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரது மகள் கொடுக்கவில்லை என்பதே உண்மை.
மகள் விடயத்தில் மட்டும் அவருக்கு வருத்தம் நீடித்துக்கொண்டே இருக்கிறது. அது தீரும் நாள் தான் என்றோ. விடை தெரியாது தவிக்கின்றார்.
“பதில் போடட்டுமாம்மா?”
முதுச்சாமியினாலேயே ஆதர்ஷினிக்கு அதிக நண்பர்கள் கிடையாது. பூமிகா மட்டுமே. அதுவும் சிறு வயதில் முத்துச்சாமி நடுத்தர வர்க்கமாக இருந்தபோது பூமிகா வீட்டிற்கு அருகில் தான் குடியிருந்தனர். அந்த நட்பு மட்டுமே அவளுக்கு இன்றும் தொடர்கிறது.
ஆதர்ஷினி தனக்கு வேண்டுமென்று எதையும் கேட்டது இல்லை. முத்துசாமியின் பாவப்பட்ட பணத்தில் எதையும் வாங்கி அனுபவிக்க அவளுக்கு மனம் ஒப்பவில்லை.
அதுவும் அவர் ஒருமுறை கொண்டு வந்த பணத்தில் ரத்த துளிகளை கண்டவள், அன்று முதல் அவர் பணத்தை உபயோகிப்பதையே நிறுத்திவிட்டாள்.
தாய்வழி தாத்தா அவர் இறக்கும் தருவாயில் அவளது பெயரில் விட்டுச்சென்ற பணத்தில் தான் இப்போது படித்துக் கொண்டிருக்கிறாள். அதுபோக, மகாவின் அம்மா… தங்களுடைய நான்கு வீடு வாடகையில் கிடைக்கும் பணத்தை தன்னுடைய செலவுக்கு போக மீதியை தனது பேத்தியின் பெயரில் வங்கியில் போட்டுவிடுவார். அவளின் தேவைகளுக்கு இன்று வரை முத்துசாமியின் பணத்தை அவள் தொட்டதே இல்லை.
அவளின் பிறந்தநாளுக்கு மற்ற விசேஷங்களுக்கு என, முத்துச்சாமி வாங்கித்தரும் பொருட்கள் யாவும் கேட்பாரற்று மகாலட்சுமியின் அறையில் பத்திரமாக உள்ளது.
மகாலட்சுமிக்காக மட்டுமே அவள் அந்த வீட்டில் இருக்கின்றாள்.
அப்போதும் இரவில் மட்டுமே. பகலில் கல்லூரிக்கு சென்றுவிடுவாள். விடுமுறை நாட்களில் பாட்டி வீட்டிற்கு சென்றிடுவாள்.
இவ்வட்டத்தை தாண்டி தனக்கென்று ஒன்றை செய்து… அதில் அவள் கொள்ளும் மகிழ்வை கெடுக்க விரும்பிடாத மகாலட்சுமி ஆதர்ஷினியின் கடிதத் தொடர்பிற்கு தடையேதும் சொல்லாது சம்மதம் வழங்கினார்.
“என்ன செய்தாலும் அதில் கவனமாக இருந்திட வேண்டும்” என்று சொல்வதற்கு அவர் மறக்கவில்லை.
அன்னைக்கு சரியென்றவள் அவரின் கன்னம் பற்றி கொஞ்சினாள்.
உற்சாகமாக தன்னுடைய அறைக்குச் சென்றவள், காகிதம் மற்றும் பேனாவுடன் அமர்ந்துவிட்டாள்.
என்ன எழுத வேண்டுமென்று முதலில் தடுமாறினாலும், விநோதனின் கடிதத்தை எடுத்து வாசித்தவள், அவன் எழுதியதற்கு ஏற்றவாறு எழுதி முடித்து உறையிலிட்டு ஒட்டி, பத்திரிகை அலுவலகத்தின் முகவரியை எழுதி, அதன் மேலேயே யாருக்கு என்றும் குறிப்பிட்டும் தன்னுடைய கல்லூரி பைக்குள் வைத்தாள்.
அவளிடம் தன்னுடைய செயலுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தின் நிறைவு.
நாம் செய்யும் ஒன்றிற்கு ஊக்கமளிப்பது… பிறர் தட்டிக்கொடுப்பதும், பாரட்டுவதும் தான்.
அவ்விரண்டுமே விநோதனின் எழுத்தில் அவளால் உணர முடிந்தது. அது கொடுத்த நிறைவே அவளிடம்.
**************************
“அண்ணா சீனியர் வரலையா?”
இரண்டு நாட்களாகக் கல்லூரிக்கு வராத துருவனை பற்றி ஆரோனிடம் விசாரித்தாள் நிரல்யா.
“வரலன்னு தெரியுதுதானே! அப்புறமும் ஏன் கேட்குற?”
“நீங்க காரணம் சொல்லுவீங்கன்னு தான்” என்றாள்.
“ஊருக்கு போயிருக்கான்.”
“எதுக்கு?”
“அவன் அம்மாக்கு உடம்பு சரியில்லை.”
“அச்சச்சோ அத்தைக்கு என்னாச்சு?”
“எதே அத்தையா?” என்று அதிர்ந்த ஆரோன், “முடிவே பண்ணிட்டியா?” என்று கேட்டான்.
“இதுல முடிவு பண்ண என்னயிருக்கு அண்ணா?” என்றவள், “பார்த்ததும் அவர் தான்னு மனசு சொல்லுச்சு. அதைவிட அவர்தான் என் வாழ்க்கைன்னு முடிவு பண்ண வேறென்ன காரணம் வேணும்?” என்று கேட்டவளின் தெளிவில் ஆரோன் வாயடித்துப் போனான்.
“அவன் பயங்கர கோபக்காரன் நிரல்யா. அவன் கட்டுப்படுவது அவனோட அண்ணாக்கு மட்டும் தான். அவனுக்கு அவங்களோட பிஸ்னெஸ்ஸை பார்த்துக்கணுங்கிறது தான் ஆசை. படிப்பெல்லாம் பிஸ்னெஸ் சர்க்கிளில் சொல்லிக்கத்தான். இருந்தாலும், என்ன செய்தாலும் அதில் அவன் தான் முதலா இருக்கணும் நினைப்பான். அதுக்குத்தான் படிப்பில் புலியா இருக்கான். இந்த நான்கு வருடத்தில் அவனுக்கு வராத ப்ரபோசல்ஸ்ஸா! எல்லாத்தையும் பார்வையிலே ரிஜெக்ட் பண்ணிட்டான்” என்று தன்னுடைய நண்பனை பற்றி அனைத்தும் கூறினான்.
“அவங்க எல்லாம் நிரல்யா கிடையாதேண்ணா. துருவனுக்கு நிரல்யா தான்” என்று அப்போதும் ஆரோனின் வாயினை அடைத்துவிட்டாள்.
‘துருவனைப்பற்றி முழுவதுமாகத் தெரியாது அவன் பின்னால் சுற்றுகின்றாளே! என்னைக்கு அவன் எரிமலையா வெடிக்கப் போறான்’ என்று ஆரோனுக்கு பயந்து வந்தது.
“நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம்மா” என்ற ஆரோனுக்கு, துருவன் நிரல்யாவை வார்த்தையால் வருத்தம் கொள்ள செய்துவிட்டால் அவளுக்கு துணையாக நிற்க வேண்டுமென்று நினைத்தான். அதற்கு அவளின் அண்ணா என்கிற அழைப்பும் காரணம்.
“அவங்க ஊர் பேர் என்னண்ணா?”
“கொடைக்கானல் ம்மா. அங்க போய் அன்னப்பூரணி லாட்ஜ் எதுன்னு கேட்டால யார் வேணாலும் வழி காட்டுவாங்க. கொடைக்கானல், பழனின்னு ஐந்து லாட்ஜ் இருக்கு” என்று தன்போக்கில் சொல்லிக்கொண்டே வகுப்பிற்கு தாமதமாகிறது என்று சென்றான்.
அடுத்தநாள் நிரல்யா கல்லூரிக்கு வரவில்லை.
இன்னும் இரண்டு நாட்களில் துருவன் வந்துவிடுவான் என்ற தகவலை அவளிடம் சொல்வதற்காக கல்லூரி முழுக்க தேடி பார்த்துவிட்டான். அவள் தான் அவன் பார்வையில் தென்படவே இல்லை. கல்லூரிக்கு வந்திருந்தால் தானே!
‘இந்தப்பொண்ணுக்கு என்னாச்சுன்னு தெரியலையே!’ என்று நினைத்தவன் அவளைப்பற்றி வீடு, ஊரென்று எதையும் கேட்டுக் கொள்ளவில்லையே என்று முதல் முறையாக நிரல்யாவைப் பற்றி அவளின் வகுப்பு பெண்களிடம் விசாரித்தான் ஆரோன்.
எல்லாருமே ஒன்று போல் தான் கூறினார்கள்.
“அவளைப்பற்றி ஒன்றும் தெரியாது. ஹாஸ்டலில் தங்கியிருக்காள். மொபைல் கூட அவகிட்ட இல்லை. அவ்வளவுதான். யாரோடவும் பேசவே மாட்டாள்.” என்று ஒரு பெண் சொல்லிட,
“துருவ் சீனியர் பின்னாடியே சுத்திக்கிட்டிருந்தா நாங்கல்லாம் எப்படி அவளுக்கு தெரிவோம்” என்று நிரல்யாவை கிண்டல் செய்தாள்.
“வகுப்பு நேரம் மட்டும் தான் கிளாசில் இருப்பாள். அப்புறம் எல்லாம் சீனியர் பின்னால் அவளை பார்க்கலாம்.”
“எங்க பெயரே அவளுக்குத் தெரியுமாங்கிறது டவுட் தான்.”
அதில் ஆரோனுக்குத்தான் நிரல்யாவை நினைத்து வேதனையாகிப் போனது.
“இப்படி தான் படிக்கும் துறையிலேயே தன்னுடைய பெயரை தவறாக கேலி செய்யும் அளவிற்கு அவன் பின்னால் பைத்தியமா சுத்துறாளே!”
அந்நேரம் துருவின் மீதும் ஆரோனுக்கு கோபமாக வந்தது.
‘கிட்ட நெருங்கிடும் பெண்கள் யாவரையும் எட்ட நிறுத்திடுபவன், நிரல்யாவையும் ஏதேனும் சொல்லி தள்ளி நிற்க வைத்திருக்கலாமே’ என எண்ணினான்.
அடுத்த கணமே… ‘துருவ் எத்தனை கடினமா நடந்துகிட்டாலும், நிரல்யா இப்படித்தான் இருந்திருப்பாள். மற்றவர்களை போல் பார்வைக்கே தெறித்து ஓடுமளவிற்கு அவளுடைய காதல் பலகீன்மானதில்லை’ என்றும் நினைத்தான்.
ஆரோன் தனக்குள் உழன்றபடி வகுப்பில் கவனம் பதியாது பெயருக்கு பேராசாயரின் மீது கவனத்தை வைத்திருந்தான்.
மேசைக்கு கீழிருந்த ஆரோனின் அலைப்பேசி விடாது ஒலித்தது. பேராசிரியரின் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்த அறையில் அலைப்பேசியின் வைப்ரேட் ஒலி கிர்ரென்று அதிர்வாய் கேட்டிட…
“கெட் அவுட் ஆஃப் மை கிளாஸ்” என்று ஆரோனை பார்த்து கத்தியிருந்தார் அவர்.
அடுத்த நொடி அவரின் ரம்பத்திலிருந்து விடுதலையென நினைத்து மகிழ்வுடனே வகுப்பை விட்டு வெளியேறியிருந்தான் ஆரோன்.
மைதானத்தில் ஒரு மரத்திற்கு கீழ் சென்று அமர்ந்தவன், அலைப்பேசியில் அழைத்தது யாரென்று பார்த்திட…
மீண்டும் துருவனிடமிருந்து அழைப்பு.
‘அவன் இப்படியெல்லாம் வகுப்பு நேரத்தில் விடாது கூப்பிடமாட்டானே?’ என்று சந்தேகமாக அழைப்பினை ஏற்றான்.
“ஏண்டா பர**, யாராவது கேட்டா என் ஜாதகத்தையே தூக்கி கொடுத்துடுவியா நீ? மண்டையில அறிவுங்கிறதே சுத்தமா இல்லையா? உன்னை அங்க வந்து பேசிக்கிறேன்” என்று விடாது ஆரோனை நல்ல நல்ல வார்த்தைகளால் அர்ச்சரித்தான் துருவன்.
“டேய் மச்சான் நீ திட்டுறதுகூட பழகிப்போச்சுடா. கொஞ்சம் ஏன்னு காரணம் சொல்லிட்டு திட்டுடா” என்று அழுகை குரலில் வினவினான் ஆரோன்.
“பச்சையா நடிக்காதடா நா*!” என்ற துருவ், “அவள் இங்க வந்திருக்காள்டா. என்னைத்தேடி!” என்றான்.
“யாரு மச்சான்?”
“அவள் பேரு?” என்று யோசித்தவன் தனக்கு முன்னால் நின்றிருந்தவளிடம்,
“உன் பெயர் என்ன?” என்று வினவுவதும், “அதற்கு அவள் நிரல்யா” என்று சொல்வதும் இணைப்பில் அடுத்த முனையிலிருந்த ஆரோனுக்குத் தெளிவாகக் கேட்டது.
“மச்சி… நிரல்யாவாடா?” அதிர்வு கலந்த ஆச்சரியமாக வினவினான் ஆரோன்.
“ம்” என்ற துருவ், “நீதான இதுக்கு காரணம்? உன்னை வந்து நாலு மிதி மிதிக்கிறேன் இரு” என்று அலைப்பேசியை வைத்திட்டான்.
துருவன் தாய் அன்னப்பூரணிக்கு காய்ச்சல் என்று ஊருக்கு வந்திருந்தான். அவனுக்கு தந்தை இல்லை. பிள்ளைகள் இருவரும் வெளியூரில் இருந்திட, அவர் தான் மேலாளர் உதவியுடன் நான்கு லாட்ஜ்களையும் பார்த்துக்கொள்கிறார். அதுவும் மேற்பார்வை மட்டும் தான்.
இது சீசன் டைம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வரவு அதிகம் இருந்திட… வேலை கூடிப்போனது. நேரமில்லாமல் வேலை பார்த்தது காய்ச்சலை இழுத்து விட்டுவிட்டது.
இன்று தான் அவரின் உடலில் முன்னேற்றம் தென்பட, நாளை மறுநாள் கல்லூரி கிளம்பி விடலாம் என்கிற எண்ணத்தில் இருந்தான்.
அவர்களின் லாட்ஜில் உண்மையான தகவல்களைத் தெரிவித்து அடையாள அட்டையை காண்பிப்போருக்கு மட்டுமே அறைகள் விடப்படும்.
அன்று காலை ஒருவன் அடையாள அட்டையும் இல்லாமல், பெயரும் சரியாக சொல்லாது அறை கேட்டு வம்பு செய்திட தன்னால் முடிந்தவரை அவனுடன் போராடி பார்த்த மேலாளர் துருவனிற்கு அழைத்து விட்டார்.
வந்தவனும் தன்மையாக அவனுக்கு எடுத்துக் கூறினான். ஆனால் அவன் கேட்பதாக இல்லையென்றதும், ஒரே அறையில் அவனை கீழே விழச் செய்திருந்தான் துருவன்.
“இவனை போலீஸ் ஸ்டேஷனில் விட்டு கம்ப்லைன்ட் ரிஜிஸ்டர் பண்ணிடுங்க” என்று மேலாளரிடம் சொல்லியவன் வாயில் பக்கம் திரும்பிட இவனையே விழிகளால் பருகியபடி நின்றிருந்தாள் நிரல்யா.
‘இவள் இங்க எங்க?’ என சிந்தித்தவன், அவளை தாண்டிக்கொண்டு வெளியேற…
“உங்களை பார்க்கத்தான் சீனியர் வந்தேன்” என்றவளின் வார்த்தையில் ஆணி அடித்தார் போல் நின்றான்.
“வாட்…” அதிர்வாய் அவனது குரல்.
“அத்தைக்கு எப்படியிருக்க சீனியர்?”
“ஏய்… யாருக்கு யார் அத்தை?” சிங்கமென கர்ஜித்தான்.
“வாட் ஹேப்பெண்ட் சார்?” வரவேற்பில் அமர்ந்திருந்தவன் வேகமாக துருவின் அருகில் வந்திருந்தான்.
“நத்திங்” என்றவன் அவளை பார்வையாலேயே தன் பின்னால் வரும்படி உத்தரவிட்டு லாட்ஜிற்கு முன்னிருக்கும் பூங்காவிற்குள் நுழைந்தான்.
அவள் வந்து தன் முன்னால் நின்றதை கவனித்தும் ஆரோனுக்கு அழைத்து திட்டிக்கொண்டிருந்தான்.
அவன் வைத்ததும்,
“இப்போ எதுக்கு சீனியர் அண்ணாவை திட்டுறீங்க? நான் வந்தது அவருக்கே தெரியாது” என்றாள்.
“அப்படியே அறைஞ்சேன்னு வை” என்று கையை உயர்த்தியவன் சட்டென்று கீழே உதறியிருந்தான்.
“எந்த தைரியத்தில் இவ்ளோ தூரம் தனியா வந்த நீ? அறிவிருக்கா இல்லையா?” எனக் கேட்டவனின் கோபம் மட்டுப்படுவதாக இல்லை.
“கையில பையோட என்னை பார்க்க ஒரு பொண்ணு வந்திருக்கான்னு தெரிஞ்சா என்கிட்ட வேலை செய்ரவங்களுக்கே தவறா தோணாதா?” எனக் கேட்டவன் அருகிலிருந்த மரத்தில் ஓங்கி குத்தியிருந்தான்.
“அய்யோ சீனியர்” என்று பதறியவள் அவனது உஷ்ண பார்வையில் இரண்டடி பின் நகர்ந்திருந்தாள்.
“நீங்க ரெண்டு நாளா ஆளில்லை. உங்களை பார்க்காம இருக்க முடியல. அதான் கிளம்பி வந்துட்டேன்” என்று அப்பாவியாக மொழிந்தவளை கன்னம் கன்னமாக அறையும் வேகம் அவனுள். கட்டுப்படுத்தி நின்றான்.
அவளை கூர்ந்து நோக்கினான்.
அப்பார்வையில் அவளின் தண்டுவடம் சில்லிட்டது.
“இப்படிலாம் என்னைத்தேடி வந்து சினிமா டயலாக் பேசினா, உன்கிட்ட விழுந்துடுவேன் நினைச்சியா?” என்று அடிக்குரலில் சீறி “எவ்வளவு தைரியம் இருந்தா என்னைத்தேடி வந்திருப்ப?” என்றவனுக்கு மனதில் அனல் கூடியது.
“வந்த மாதிரியே திரும்பிப்போயிடு” என்றவன் முன் சென்று மீண்டும் அவளருகில் வந்தான்.
“இதுக்கெல்லாம் மயங்கும் ஆள் நானில்லை” என்று அழுத்தமாகக் கூறினான்.
கையில் கட்டியிருந்த வாட்சில் நேரத்தைப் பார்த்தவன்,
“ரயில்வே ஸ்டேஷனுக்கு போய் வெயிட் பண்ணு” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென பூங்காவிலிருந்து வெளியேறியிருந்தான்.
நேராக வீட்டிற்கு சென்றவன், நாளை கல்லூரியில் முக்கிய வகுப்பு இருப்பதாக பூரணியிடம் முதல் முறையாக பொய்யுரைத்து விட்டு, அரைமணி நேரத்தில் கிளம்பி ரயில் நிலையம் வந்து சேர்ந்தான்.
அவனை கையில் பையுடன் அங்கு பார்த்தவள், அவனுடன் பயணிக்கப்போகும் பயணத்தை நினைத்து அப்போதே உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் வெளியில்…
“சீனியர் நானே போய்ப்பேன். நீங்க அத்தையை பாருங்க” என்று கூறிட, எங்கிருந்துதான் அத்தனை ஆத்திரம் வந்ததோ அவனது கண்கள் தீகங்குகளாய் நொடியில் மாறிப்போனது.
“இந்த உறவு கொண்டாடும் வேலையெல்லாம் என்கிட்ட வச்சிக்காத! அவ்வளவு தான்” என்று விரல் நீட்டி எச்சரித்தவன் இரண்டு பயணச்சீட்டுகள் எடுத்துக்கொண்டு அவளை கருத்தில் கொள்ளாது தன்னுடைய இருக்கை இருக்கும் பெட்டியில் ஏறி அமர்ந்துவிட்டான்.
டிடிஆர் அவனின் அண்ணனின் நண்பன் என்பதால் முன்பதிவு இன்றியே அவனுக்கு பயணச்சீட்டு கிடைத்தது. அதுவுமில்லாமல் பொதுவாக குளிர் பெட்டிகள் அத்தனை நிரம்புவதில்லை.
அவன் ஏறிய பெட்டியை கவனித்தவள், ‘ஏசி கோச்சா?’ என்றபடி அப்படியே நின்றிருக்க…
“மகாராணியை கையை பிடித்து ஏத்தி விடணுமோ” என சன்னல் வழி கேட்டிருந்தான்.
அவனின் குரலில் ஒருவித படபடப்புடனே உள்ளே ஏறி அமர்ந்தாள்.
இரவு முழுக்க ராத்திரி பயணம். அதுவும் தனியாக என்பதால், ஒருவித அச்சத்துடன் உறங்காது பேருந்தில் பயணம் செய்தவளுக்கு கண்கள் சுழற்றிட வண்டி புறப்பட்ட சில நிமிடங்களிலேயே உறங்கிவிட்டாள். அவனின் அருகில் அவள் உணர்ந்த பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையின் அளவை அவளின் ஆழ்ந்த உறக்கமே எடுத்துக்காட்டியது.
உறங்கும் அவளை நொடிக்கும் குறைவாக பார்த்தவன்,
பார்வையை அலைப்பேசியில் பதித்தான்.
‘இவளை கூட்டிட்டுப் போகணுமுன்னு உனக்கென்ன அவசியம் துருவா?’ மனம் அவனிடம் கேள்வி கேட்டது.
‘என்னை பார்க்கப்போறேன்னு யார் யார்கிட்ட சொல்லிட்டு வந்தாளோ? இவளுக்கு ஒண்ணுன்னா என் மண்டை தான் உருளும். அதுக்காக மட்டும் தான்’ என்று அழுத்தி கூறிக்கொண்டான்.
தன்னவளின் பாதுகாப்பில் கொள்ளும் கவனமும் அக்கறையும் காதலின் படிநிலைகளில் ஒன்றென்று அவன் அறிந்திருக்கவில்லை. அது அவன் செய்த தவறோ?
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
20
+1
+1
1

