Loading

உயிர் உறை 2 :

தமிழ்நாடு.
சென்னை.

முதல் நாள் கல்லூரி. எல்லோருக்கும் உரித்தான உற்சாகமும் பரவசமும் அவளிடத்திலும் இருந்தது.

கல்லூரியின் வாயிலில் அவள் தன்னுடைய முதல் அடியை வைத்து, அவ்வளாகத்தை சுற்றி பார்வையை சுழல விட்டாள். பல வண்ணங்கள் நிரம்பியிருந்தன. வண்ணத்துப்பூச்சிகள் கொத்து கொத்தாக ஆங்காங்கே அமர்ந்திருக்கும் தோற்றம். முதல் வருட மாணவர்களின் முதல் நாள் என்பதால் சீனியர்கள் அவர்களை பிடித்து வைத்து ராகிங் என்ற பெயரில் நட்பை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இது கல்லூரி என்றாலே வழக்கமான ஒன்று தானே. இப்போது பல கல்லூரிகளில் இல்லையென்றாலும், சீனியர்ஸ் ஜூனியர்ஸை அழைத்து அறிமுகம் செய்துகொள்வது மட்டும் மாறாத ஒன்றல்லவா!

அதன்படி அங்கிருக்கும் எல்லா மரத்தடியிலும் ஒரு குழு அமர்ந்து ஜூனியர்களை பிரண்ட்லி ராக் செய்தபடி இருந்தனர். எந்தவொரு செயலும் வரம்பு மீறவில்லை.

அங்கு கண்ட காட்சிகள் முகத்தில் புன்னகையை தோற்றுவிக்க, எதிர்பார்ப்போடு உள் நுழைந்தாள் நிரல்யா. அவளை தழுவிய காற்று அவனை சென்றடைந்ததோ, நிரல்யா கல்லூரியினுள் கால் பதித்த சமயம், தனது கேங்குடன் அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்தவனின் பார்வை அனிச்சையாய் அவள் பக்கம் திரும்பியது.

‘யாருடா இந்த பால்வாடி?’ அவளை பார்த்ததும் அவனுள் தோன்றியது இதுதான். பள்ளி பிள்ளையின் முகம் மாறாது இருந்தாள். பார்த்த நொடி அவனின் கவனமும் நண்பர்களிடம் திரும்பியது.

“யாரும் என்னை கூப்பிட்டிடவே கூடாது சாமி.” கடவுளை நோக்கி முணுமுணுத்தவளாக நிரல்யா மெல்ல சென்றுகொண்டிருக்க,

“ஓய் பாப்பா” என்ற குரல் அவளின் நடையை தடை செய்தது. நிரல்யாவை அழைத்தது ஒரு பெண்கள் குழு.

“என்னையா அக்கா!” நிரல்யாவின் அக்காவில் அவ்வளவு அழுத்தம்.

“உன்னைத்தான் கூப்பிடுறோம் தெரியுதுல, கிட்டவா பாப்பா!”

“உன் பெயர் என்ன?”

“நிரல்யாக்கா.”

“ஏய் இந்தாபுள்ள அக்கா கிக்கான்னு சொல்லி எங்க வயச ஏத்தாம்மா பேசு.” நிரல்யாவின் தலை வேகமாக ஆடியாதோடு, “அப்போ எல்லாரும் உங்க பேரு சொல்லுங்க” என்றாள்.

“சீனியர்கிட்டவே பேர் கேட்பியா!” அந்த பெண்ணின் உரக்க ஒலித்த குரலில் நிரல்யா சற்று பயந்துவிட்டாள் தான். இருப்பினும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

“நிரல்யா அர்த்தம் சொல்லு.”

“வரிசை, அழகானவள், தனித்துவமானவள்.”

“எந்த வரிசை… ரேஷன் கடையா, பெட்ரோல் பங்க்கா?” நிரல்யாவை கிண்டல் செய்துவிட்டதாக எண்ணி கன்னியர்கள் கை தட்டி சிரிக்க, ‘இது காமெடியா?’ என்ற ரீதியில் பார்த்த நிரல்யா,

“இங்க மட்டும் தான் வரிசை இருக்குமா சீனியர்? இன்னும் நிறைய இடத்தில் வரிசையில் நிக்கிறோமே! என்றாள்.

“இந்தாடி இந்தபுள்ள நம்மள வம்புல மாட்டிவிட்டுடும் போல, பேச்சுல அரசியல் தெரியுற மாதிரி இருக்கே! போக சொல்லிடுவோம்.” ஒருத்தி இன்னொருவளின் காதில் கிசுகிசுத்தாள்.

அதை கண்டு கொள்ளாமல் வேறொரு பெண் நிரல்யாவிடம், “உன் அத்தானுக்கு போன் பேசு” என்றாள்.

“எனக்கு அத்தானும் இல்லை, போனும் இல்லை சீனியர்ஸ், யாராவது பேசிக்காட்டுங்க” என பட்டென்று சொல்லிய நிரல்யா அவர்களின் முறைப்பிற்கு ஆளாகிய சமயம், யாரோ யாரையோ அடித்த சத்தம் அவ்விடத்தையே அதிர வைத்திருந்தது.

சத்தம் வந்த திசையில் அனைவரின் பார்வையும் நிலைத்தது. நிரல்யாவின் பார்வையும் கூட.

அவன் தான், நிரல்யாவை பார்த்ததும் பால்வாடி என நினைத்தவன். தன் கரத்தினை ஒருவனின் கன்னத்தில் இடியென இறக்கினான்.

“இன்னைக்கு எவன் மாட்டினான்னு தெரியலையே! இவனுங்களுக்கு அவன்கிட்ட அடி வாங்கலைன்னா தூக்கமே வராது போல.”

“இவன் காலேஜ் டாப்பருன்னு பிரின்சி இடம் கொடுக்கத்தான் எடுத்ததும் கை நீட்டிடுறான்.”

“தப்பில்லாம அவன் யாரையும் அடிக்கமாட்டான்.”

நிரல்யாவை கிண்டல் செய்து கொண்டிருந்த பெண்கள் அவனைப்பற்றி பேசிய அனைத்தும் நிரல்யா நன்கு உள்வாங்கினாள்.

அவன் தான் ஹீரோ என்பது அவர்கள் சொல்லாமலே, அவர்களின் பேச்சின் மூலம் தெரிந்து கொண்டாள்.

அவனை பார்த்ததும் நிரல்யாவின் கண்கள் சாசர் போல் விரிந்தது. அவனின் உருவத்தை ஆழியாய் விழுங்கிக் கொண்டது.

“கியூட்டி பைய்.” அவளையும் அறியாது வாய் சொல்லியிருந்தது. பார்த்ததும் காதலில் நிரல்யாவும் விழுந்திருந்தாள். மனமும் காதலென்று அடித்து சொல்லியதில், அவனை விட்டு பார்வையை அகற்றாது அப்பட்டமாக சைட் அடித்தாள்.

“ஏன்டா ராகிங்கிற பெயரில் என்ன வேணுமானாலும் பண்ணுவிங்களோ” என்று மீண்டும் ஒரு அடி வைத்தவன், “இனி இந்த ராகிங்க்கு என்னை கூப்பிடாதீங்க” என்று தன் நண்பர்களை எச்சரித்தவனாக அங்கிருந்து வகுப்பறை நோக்கி நகர்ந்தான்.

செல்லும் அவனையே நிரல்யா பார்த்திருக்க,

“இவளுக்கு அவன் தான்டி கரெக்ட்டு, நம்மளையே சத்தமில்லாம கலாய்க்க பாக்குறா(ள்), அவன் கிட்ட ஒரு அடி வாங்குனா(ள்) அமைதியாகிடுவாள்” என்று தங்களுக்குள் ஒரு திட்டம் வகுத்த சீனியர் மாணவிகள்,

“அங்க போறான் பாரு ஒருத்தன்” என்று நிரல்யாவை கை காட்டி, அவனுக்கு புரோபோஸ் பண்ணிட்டு வா! பயந்து சொல்லாம…” என்றாள் ஒரு பெண்.

“காலம் காலமாக ராகிங் அப்படின்னாலே இந்த மாதிரி சீன் தானா?” ஒருத்தி வினவிட,

“வேறெப்படி இவளை அவனிடம் மாட்டிவிடுவது” என்றாள் மற்றொருத்தி.

சீனியர் வார்த்தைகளை முடிக்க கூடவில்லை. நிரல்யா அவனை நோக்கி ஓடியிருந்தாள்.

அவன் துருவன். எம்.பி.ஏ இரண்டாம் வருடம்.

“என்னடி இந்த ஓட்டம் ஓடுறா(ள்)”

“நமக்கெதுக்கு வம்பு, அவள் நம்மள கோர்த்து விட்டால் துருவ் பிரின்சிகிட்ட கம்பளைன்ட் பண்ணாலும் பண்ணிடுவான்.” நிரல்யா துருவனை நெருங்கியதும் அந்த கூட்டம் வேகமாக கலைந்து சென்றிருந்தது.

தனக்கு முன்னால் மூச்சிரைக்க வந்து நின்ற நிரல்யாவை விநோதமாக பார்த்த துருவன், என்னவென்று புருவம் உயர்த்தி வினவினான்.

‘இது பால்வாடி ஆச்சே.’ அவனின் மனம் அவனியறியாது அவளை பதிந்து வைத்திருந்தது.

“ஐ லவ் யூ சீனியர்.”

வலது கையால் இதய பகுதியை மூன்று முறை குத்தியவள், எவ்வித மேல்பூச்சுமின்றி நேராக தனது காதலை சொன்னாள்.

சற்று திகைத்தாலும், ‘இது சீனியர் யாராவது சொல்ல சொல்லியிருக்கலாம்’ என நினைத்த துருவன் பார்வையை அவ்விடம் முழுக்க சுழற்ற,

“சீனியர், ஐ செட் சீரியஸ்லி. லவ் அட் ஃபர்ஸ்ட் சைட். அம் லவ் வித் யூ.” அசராது தனது கண்களை நேருக்கு நேர் பார்த்து சொல்லியவளை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காது அவளை ஏற இறங்க பார்த்தான்.

அடுத்து “மெண்டல்” என்ற ஒற்றை வார்த்தையில் அவளை கடந்திருந்தான்.

அதன் பிறகு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நிரல்யா துருவனிடம் தனது காதலை பலவிதமாக பல முறை சொல்லி பார்த்தாள்.

துருவன் கண்டுகொள்வதாக இல்லை.

துருவனின் நண்பனான ஆரோன் கூட நிரல்யாவை சந்தித்து “துருவ் கிட்ட அதிகம் வச்சிக்காத, அவனை மறந்திடு” என்று சொல்லியிருந்தான். அவள் கேட்பதாக இல்லை.

துருவ் செல்லும் இடங்கள் எல்லாம் அவன் பின்னாலே சுற்றினாள். அவனுக்குத் தெரியாது தன் மனதிலிருப்பதை எல்லாம் காகிதத்தில் வடித்து அவனது கல்லூரி பையில் வைத்திடுவாள்.

முதல் நாள் மட்டுமே என்ன காகிதமென தெரியாது பிரித்து படித்தான்.

“ஹாய் க்யூட்டி பைய்…

நான் தான் உங்கள் நிரல்யா!

யாருன்னு யோசிக்காதீங்க. கிட்டத்தட்ட ஒரு மாதமா உங்க பின்னால் சுத்துறேன். ஒரு முறையாவது திரும்பிப் பார்த்தா தானே தெரியும். பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்ஸ் பர்ஸ்ட் டேவில், உங்களுக்கு நான் ப்ரொபோஸ் பண்ணது நினைவிருக்கா? இருக்காதுன்னு தெரியும். தினமும் உங்களுக்கு அத்தனை ப்ரொப்போசல்ஸ் வருதே. ஏண்டா இவ்வளவு அழகா பொறந்த. காலேஜ் ஹீரோ நீதான். எல்லா பொண்ணுங்களும் நீ திரும்பி பார்த்திடமாட்டியான்னு ஏங்கிட்டு இருக்காங்க. நானும் அதிலொருத்தின்னு நினைச்சிடாதீங்க. என் லவ் ட்ரூ பாஸ். சீக்கிரம் ஓகே சொல்லுங்களேன் ப்ளீஸ்.”

இதயம் வரைந்து கடிதத்தை முடித்திருந்தாள்.

பள்ளி படிப்பை முடித்து ஒரு வருடம் கூட ஆகாத சிறு பெண் கிறுக்கத்தனமாக பிதற்றுவதாக எண்ணி அக்கடிதத்தை அவன் கிழிக்க முயன்ற சமயம் வகுப்பிற்கு பேராசிரியர் வர, எங்கிருந்தோ வேகமாக ஓடிவந்து துருவின் பக்கத்தில் ஆரோன் அமர கடிதத்தை பைக்குள் வைத்து மறைத்திருந்தான்.

அடுத்தடுத்து அவளின் கடிதங்கள் வாரத்திற்கு ஒன்றென அவனது பையில் இடம்பெற… முட்டாள் தனமாக அவள் கிறுக்கி இருப்பதை படிக்க அவனுக்கு விருப்பமில்லை. படித்து மட்டுமல்ல, அதனை பிரித்து பார்க்கக்கூட அவனுக்குத் தோணவில்லை.

ஆனால் எப்படி இதனை தன்னுடைய பையில் வைக்கின்றாள் என்பது மட்டும் அவனுக்கு விளங்கவில்லை. மறைந்திருந்து கூட பார்த்துவிட்டான். எப்போதும் அவனது பை அவனுடனே இருந்திட, இன்று வரை கடிதம் பைக்குள் வரும் ரகசியம் மட்டும் அவனுக்குத் தெரியவில்லை.

அன்று துருவன் நூலகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தான்.

“ஹாய் க்யூட்டி பைய்!”

ஹஸ்கி குரலில் ஒலித்த விளிப்பில் நிமிர்ந்து பார்த்தவனுக்கு சலிப்பாக வந்தது.

அவனுக்கு முன்பு நிரல்யா அமர்ந்திருந்தாள்.

“என்னடி வேணும் உனக்கு?” துருவன் ஆத்திரமாகக் கேட்க… அவளோ அதையும் ரசித்து அவனை ஆவென்று பார்த்தாள்.

“நீங்க ஏன் சீனியர் இவ்வளவு ஹேண்ட்ஸம்மா இருக்கீங்க?”

நிரல்யா இமை சிமிட்டாது இரு கையையும் மேசையின் மீது வைத்து, தன் முகத்தை தாங்கியவாறு துருவிடம் வினவிட…

“மச்சான்… நீ கேட்ட புக் அந்த ராக்கில் இல்லைடா” என்று கையிலிருக்கும் புத்தகத்தை திருப்பி திருப்பி பார்த்தபடி துருவிடம் வந்த ஆரோன்… “இதுவும் அதே புக் தான். ஆத்தர் வேற” என்று சொல்ல… துருவின் கரம் இடியென ஆரோனின் கன்னத்தில் பதிந்தது.

“எதுக்குடா அடிச்ச?” கன்னத்தில் கைவைத்து வினவினான் ஆரோன்.

நிரல்யாவை அடிக்க முடியாததால், அவளால் எழும் கோபத்தை தன்னை அடித்துக் காட்டுகிறான் என்பது துருவின் பார்வை நிரல்யாவின் மீது அழுத்தமாக படிந்ததில் ஆரோன் கண்டுகொண்டான்.

“வாவ் சீனியர் செம. பர்ஸ்ட் டே உங்களை நான் இப்படித்தான் பார்த்தேன். நீங்க ஒரு அண்ணாவை இப்படித்தான் அடிச்சீங்க! அன்னைக்கு உங்க அதிரடியில் உங்ககிட்ட விழுந்தவள் தான் இன்னும் எழ முடியல” என்று அவள் காதலாக பேசிட… அவனுக்கு உளறலாகத்தான் தெரிந்தது.

மீண்டும் ஆரோனின் கன்னம் சிவந்தது.

“டேய் அவ்வளவு தான் சொல்லிட்டேன். சும்மா அடிக்காதடா வலிக்குது” என்று ஆரோன் கத்திவிட…

நூலகத்தின் கண்காணிப்பாளர் அவர்கள் பக்கம் திரும்பி ஆரோனை பார்வையால் அதட்டினார்.

ஆரோன் பட்டென்று துருவனின் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டான்.

“அச்சோ அண்ணா பாவம். நீங்க அடிக்கிறதுன்னா நேரா என்னையே அடிக்கலாம் சீனியர்” என்று நிரல்யா தன்னுடைய கன்னத்தை காட்டிட…

“மெண்டல்” என்று அவளின் முகத்திற்கு நேராகவே சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான் துருவன்.

“நான்தான் சொன்னனேம்மா அவன் இந்த லவ்வுக்கெல்லாம் ஒத்து வரமாட்டான்னு, நீதான் அவன் பின்னால் சுத்தி உன்னை கஷ்டப்படுத்திக்கிற” என்ற ஆரோனின் அக்கறை அவளுக்கு பிடித்தது.

இருப்பினும் காதலை அவளால் விடமுடியாதே!

“அவங்க என்னோட சந்தோஷம் அண்ணா. மெண்டலுன்னு தானே சொன்னாங்க. வேறென்ன சொல்லித் திட்டினாலும் நான் ஃபீல் பண்ணமாட்டேன். அவங்க எனக்கு கிடைக்க என்ன பைத்தியகாரத்தனம் வேணும்னாலும் செய்வேன். இதை சொன்னாலும் உங்களுக்கு புரியாது” என்றவள் ஆரோனிடம் விடைபெற்றாள்.

செல்லும் அவளைத்தான் பார்த்திருந்தான் ஆரோன்.

அவளின் சந்தோஷத்திற்கு பின் மறைக்கப்பட்ட சோகம் இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது.

**********************

தமிழ்நாடு.
தூத்துக்குடி.

“பெயர் தெரியாத தேவதைக்கு…

தேவதையென்று சொல்கிறேனென்று நினைக்கிறீர்களா?

அணங்கு என்றால் தேவதை தானே?

ஆம் நீங்கள் உண்மையில் தேவதை தான். மற்றவர்களின் மறுபக்கத்தை பார்க்கும் நீங்கள் உங்கள் எண்ணத்தால் தேவதையாகத்தான் இருந்திட முடியும்.

உங்களின் கவிதை என்னை மொத்தமாக கவர்ந்து விட்டது.

உங்களின் மாறுபட்ட சிந்தனைக்கும், வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி. தங்களின் கண்ணோட்டத்தை எவ்வித சூழலிலும் மாற்றிக் கொள்ளாதீர்கள். வித்தியாசமான கோணத்தில் உலகத்தை பார்ப்பவர்கள் இங்கு மிக மிகக் குறைவு.

இப்படிக்கு, உங்கள் கவிதையின் ரசிகன்.

இவன்,
விநோதன்.”

கடிதத்தை படித்தவள் புன்னகைத்துக் கொண்டாள்.

“விநோதன்.” பெயரை மென்மையாக உச்சரித்தாள். ‘விநோதமானப் பெயர்’ என்று நினைத்துக்கொண்டாள்.

(ஆம் இவன் தான் திருவனந்தபுரம் உதவி ஆணையர். பத்திரிகையில் வந்திருந்த கவிதையை அத்தனை ரசித்தவன். பெயர் விநோதன்.)

“அப்படி என்னடி எழுதியிருக்கு? இப்படி சிரிக்குற?”

கேட்ட தோழியிடம் தன் கையிலிருந்த கடிதத்தை நீட்டினாள் ஆதர்ஷினி.

கடிதத்தை படித்துப்பார்த்த ஆதர்ஷினியின் தோழி பூமிகா,

“யாருடி இது விநோதன். உன் கவிதையும் நல்லாயிருக்குன்னு லெட்டரெல்லாம் போட்டிருக்கான்?” என்றாள்.

“தெரியல?” என்ற ஆதர்ஷினி,

“பத்திரிகை ஆபீஸிலிருந்து அனுப்பியிருக்காங்க” என்றாள்.

“அவ்வளவு நல்லாவா இருந்தது அந்த கவிதை?” பூமிகா ஆச்சரியமாகக் கேட்டாள்.

“நல்லாயிருந்ததா எல்லாம் தெரியாது. ஆனால் அவருக்கு என்னுடைய கவிதை பிடிச்சிருக்குன்னு மட்டும் தெரியுது” என்ற ஆதர்ஷினி பூமிகாவின் கையிலிருந்த கடிதத்தை வாங்கி தன்னுடைய புத்தகத்திற்கு நடுவில் பத்திரப்படுத்தினாள்.

ஆதர்ஷினி மூன்றாம் ஆண்டு இளங்கலை மாணவி.

“உன் அப்பாவுக்கு இந்த கவிதை விஷயம் தெரியுமாடி?”

“தெரிஞ்சா அவ்வளவு தான். ஆனால் தெரிய சான்ஸ் இல்லை” என்ற ஆதர்ஷினிக்கு அவளின் தந்தையை நினைத்த நொடி, கோபமும் ஆற்றாமையும் ஒருங்கே எழுந்தது.

முகம் வேதனையில் கசங்கியது.

ஆதர்ஷினியின் முகத்தில் வருத்தத்தைக் கண்டதும்,

“சாரிடா… இனி உன் அப்பாவைப் பற்றி பேசவே மாட்டேன்” என்று பூமிகா மன்னிப்பு வேண்டிட, சடுதியில் தன்னை மாற்றிக்கொண்டாள் ஆதர்ஷினி.

“திரும்ப கவிதை எழுதப்போறியா தர்ஷி?”

“இப்போதைக்கு இல்லை பூமி. இந்த தலைப்பு போன மாதம் பார்த்த போது, எழுதணும் தோணுச்சு. ட்ரை பண்ணலான்னு எழுதினேன். அவ்வளவு தான். இதில் இண்ட்ரெஸ்ட்லாம் இல்லை” என்றாள்.

“ம்ம்ம். கட்டுரை மட்டும் ரெண்டு எழுதுன?” கேள்வியாக இழுத்தாள் பூமி.

“எழுதணும் தோணுச்சுன்னா எழுதுவேன்” என்றவளை அணைத்துக் கொண்டாள் பூமிகா.

“உன்னால எப்படி தர்ஷி… அந்த வீட்டிலும் இத்தனை சந்தோஷமா இருக்க முடியுது?”

“அந்த வீட்டில் தானே என்னோட அம்மா இருக்காங்க” என்ற ஆதர்ஷினியின் முகத்தில் மலர்ந்த புன்னகை.

அதன் பின்னர் வகுப்புகள் பாடங்கள் என்று அன்றைய நாள் விரைந்து ஓடியது.

கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த ஆதர்ஷினி, தன்னுடைய இருசக்கர வாகனத்தை அதற்குரிய இடத்தில் நிறுத்தி விட்டு, வீட்டிற்குள் செல்ல அடி வைத்திட…

“டப்” என்ற சத்தம் அவளின் நடையை நிறுத்தியிருந்தது.

மெல்ல எட்டி தோட்டத்தில் பார்த்தாள்.

அவளின் தந்தை தான் ஒருவனை சுட்டிருந்தார்.

ஆதர்ஷினிக்கு சிறு வயதிலிருந்தே இது பழக்கம் தான். ஆனால், ஒவ்வொரு முறையும், பயத்தில் தானாக அவளின் உடல் நடுக்கம் கண்டுவிடும்.

இப்போதும் தன்னைப்போல் அவளின் விரல்கள் உதறின.

“சொத்துக்காக அண்ணனே தம்பியை கொன்னுட்டான்னு இவன் அண்ணன் மேல நம்ம ஆளுங்களை விட்டு புகார் கொடுக்க சொல்லிடுடா” என்ற முத்துச்சாமி அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கிறது, அவரின் பதிவிக்கலாம் முடிவடைந்திட.

மகளை பார்த்துவிட்ட முத்துச்சாமி, அவளை நோக்கி வந்தார்.

அவர் தனக்கு அருகில் தான் வருகிறார் என்பதை அவளின் மூளை கிரகித்த அடுத்த கணம் வேகமாக வீட்டிற்குள் ஓடியிருந்தாள்.

தன்னுடைய அறைக்குள் புகுந்தவள் கதவினை சாற்றி, சரிந்து கீழே அமர்ந்து கதறி அழுதாள்.

இவ்விடயத்தில் அவளைத் தேற்ற அவ்வீட்டில் யாருமில்லை.

எல்லா பிள்ளைகளையும் போல ஆதர்ஷினிக்கும் அவளது அப்பா ஹீரோ தான். அவளின் பதி மூன்று வயது வரை.

அப்போது முத்துச்சாமி அரசியல் தலைவர்களுக்காக அடிதடி மற்றும் கொலை செய்பவராக இருந்தார். ஒரு கட்டத்தில் இவர் சொல்வதை அரசியல்வாதிகள் கேட்கும் நிலைக்கு உயர்ந்தார்.

அரசியலின் இருட்டு உலகில் அவர்தான் முடிசூடா மன்னன். அதற்காக அவர் செய்த கொலைகள், கொள்ளைகள் ஏராளம். தன்னுடைய மனைவிக்கும், மகளுக்கும் இந்த உண்மை தெரியாது பார்த்துக்கொண்டார்.

அதுவரை அவர் நல்ல கணவன், நல்ல தந்தை தான்.

ரவுடிசம் மட்டும் செய்து கொண்டிருந்தவர், தன்னுடைய பண பலத்தை வைத்து, எந்தெந்த அரசியல்வாதிகளுக்காக எத்தனை கொலைகள் செய்திருக்கிறார் என்பதை வெளியில் சொல்லிவிடுவதாக அரசியல் தலைவர்களை மிரட்டி தேர்தலில் தன் தடம் பதித்தார்.

பணம் அவருக்கு வெற்றியைத் தேடி தந்தது. அதோடு அவரின் இருள் உலக ராஜ்ஜியமும் பரந்து விரிந்தது.

ஒரு கட்டத்தில் முத்துச்சாமியின் ஆட்டம் தாங்க முடியாத, அவரது கட்சி அவருக்கு எதிராக திட்டம் வகுத்தது.

அவர்களின் கட்சியில் அனைவரது பிடியும் ஏதோவொரு வகையில் முத்துச்சாமியிடம் இருந்திட, அவரை தீர்த்துகட்டினால் தான் தங்களுக்கும் கட்சிக்கும் நல்லதென்று அனைவரும் ஒருமித்தமாக முடிவெடுத்து, முத்துச்சாமியை கொலை செய்வதற்காக அவருக்குத் தெரியாமலே ஆட்களை ஏற்பாடு செய்தனர்.

அந்தோ பரிதாபம் அதில் மாட்டிக்கொண்டது, எட்டாம் வகுப்பு படிக்கும் ஆதர்ஷினியும் அவளது அன்னை மகாலட்சுமியும்.

அந்த விபத்தில் கடைசி நொடியில் முத்துச்சாமி இருவரையும் காப்பாற்றி விட்டாலும், மகாலட்சுமிக்கு குரல் போய்விட்டது.

குரல் வளையில் கம்பி குத்தி பேசும் திறனை இழந்துவிட்டார்.

அவருக்கு அந்த வலியைவிட தன்னுடைய கணவரின் உண்மை முகம்  தான் அத்தனை வலியை கொடுத்தது.

தன்னுடைய பின்பகுதி மனைவிக்கும் மகளுக்கும் தெரிந்துவிட்டதில் முத்துச்சாமி பயமெல்லாம் கொள்ளவில்லை. மாறாக அவரிடம் ஒரு ஆசுவாசம். இனி மறைத்து செய்ய வேண்டியதில்லை என்கிற நிம்மதி.

அதுவரை வீட்டிற்கு தெரியாமல் செய்தவர், அதன் பின்னர் வீட்டிலேயே செய்ய ஆரம்பித்துவிட்டார். கட்டப்பஞ்சாயத்து முதல் அடிதடி வரை வீட்டிலேயே நடக்கும்.

இதனையெல்லாம் பார்த்து ஒருவித பயத்துடன் தான் ஆதர்ஷினி வளர்ந்தாள்.

ஏற்கனவே அன்னை பேச முடியாததற்கு தன்னுடைய தந்தை தான் காரணமென்று முத்துச்சாமியிடம் மெல்ல ஒதுக்கத்தை காட்டிக்கொண்டிருந்த ஆதர்ஷினி, ஒருநாள் அவர் ஒருவனை உருட்டை கட்டையால் அடி வெளுப்பதை பார்த்து மொத்தமாக மனதால் சிதைந்துவிட்டாள்.

தன்னுடைய தந்தையா இப்படியென்ற வேதனை அவளை சூழ்ந்தது.

அதுமுதல் முற்றும் முதலாக அவரை தவிர்த்துவிட்டாள்.

அவராக பேச வந்தாலும், என்னவென்று கேட்டுக்கொள்வாளே தவிர, பதிலுக்கு ஒரு வார்த்தை பேசிடமாட்டாள்.

தந்தை என்றாலே அன்புமிக்கவர் என்கிற பிம்பம் உடைந்து அரக்கனென்ற எண்ணம் அவளின் ஆழ் உணர்வுகளில் படிந்து போனது.

எத்தனை நேரம் நினைவுகளில் உழன்று கதறி துடித்தாளோ,

அவளின் அறைகதவு தட்டும் சத்தத்தில் மெல்ல எழுந்தவள், முகத்தினை துணி வைத்து துடைத்து, தன் தோற்றத்தை சரிசெய்து கதவினைத் திறந்தாள்.

மகாலட்சுமி தான் கையில் பழரசம் அடங்கிய குவளையுடன் நின்றிருந்தார்.

மகளை பார்த்ததும் “அழுதியா?” என்று சைகை மொழியில் வினவினார்.

அவருக்கு இனி எப்போதும் பேச்சு வராது என்று மருத்துவர்கள் சொல்லியதும், சைகை மொழியை ஆள் வைத்து கற்றுக்கொடுத்தார் முத்துச்சாமி.

தனக்கு தன் அன்னை மட்டுமே என்றிருந்த ஆதர்ஷினியும், அவர் சொல்ல வருவதை தான் புரிந்து கொள்வதற்கு குரலோ, மொழியின் ஓசையோ தடையாக இருந்திடக் கூடாது என்பதற்காகத் தானும் சைகை மொழியை அன்னையுடன் கற்றுக்கொண்டாள்.

முத்துச்சாமி கூட கற்றுக்கொண்டது தான் ஆதர்ஷினிக்கு ஆச்சரியம்.

அவளுக்கு தாய் தந்தையிடம் இருக்கும் காதல் தெரியாதே! அந்த காதல் தான் கணவன் எத்தனை பெரிய கொடூரனாக இருந்தபோதும் மகாலட்சுமியை அவரைவிட்டு செல்லவிடாமல் தடுக்கிறது என்பதும் தெரியவில்லை.

மனைவி மற்றும் மகள் விடயத்தில் முத்துச்சாமி என்றுமே நல்லவர் தான். ஆனால் அவர் செய்யும் பாவத்தின் சம்பளம் யாவும் அவரைச் சார்ந்தவர்களையே சேரும் என்பதை அறிந்திருக்கவில்லை அவர்.

முத்துச்சாமி இப்போது வெளியுலகிற்கு நல்ல அரசியல்வாதி. கல்வி குழுமம், உப்பளம், கோவில் கொடைகள், இலவச மருத்துவமனை, அறக்கட்டளை என அனைத்தும் மக்களின் நலனுக்காக நடத்தும் உயர்ந்த மனிதர். அவ்வூர் அப்படித்தான் அவரை பார்க்கிறது.

நல்லவன் என்கிற பெயரோ அல்லது அவர் வகிக்கும் சட்டமன்ற உறுப்பினர் பதவியோ அல்லது வயதின் மூப்போ… இப்பொதெல்லாம் அவரே இறங்கி எந்தவொரு ரவுடிசமும் செய்வதில்லை. அதற்கென்று தனித்தனியாக ஆட்களை வைத்து தன் பெயர் பாதித்துவிடாத அளவிற்கு திறமையாக நிழல் உலகத்தை வெளிப்பார்வையில் மறைத்து வைத்திருக்கிறார்.

மனைவி மகளின் அறையின் முன் நிற்பதை கண்ட முத்துச்சாமி அங்குவர,

“நான் ஃபிரஷ் ஆகிட்டு வர்றேன்” என்று மகாலட்சுமியிடம் சொல்லியவள், அவரின் கையிலிருந்த குவளையை பிடுங்காத குறையாக வாங்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்து மறைந்தாள்.

முத்துச்சாமிக்கு மகள் விடயத்தில் எப்போதுமே வருத்தம் தான். அவளின் விலகல் அவரை தந்தையாக வருந்தச் செய்வது உண்மை. அதற்காக அவர் இத்தொழிலை விட்டுவிட முடியாதே. இத்தொழிலில் இருக்கும் அனைவரின் தலைக்கு மேல் எப்போதுமே கத்தி தொங்கியபடியே இருக்கும். அவர்கள் மாற வேண்டுமென்று நினைத்தாலும் அந்த கத்தி அவர்களை பதம் பார்த்துவிடும். அதற்காக மட்டும் அவர் இதிலே நிலையாகிடவில்லை. முத்துச்சாமிக்கு இதில் தான் விருப்பம். இதில் ராஜாவாக இருப்பதில் அத்தனை ஆசை.

அதுமட்டுமல்ல பணம். பணம் தானே இங்கு பிரதானம். அது தரும் மதிப்பும் மரியாதையும் வேறெதுவும் எளிதில் பெற்றுத்தராதே!

அதன் மிடுக்கே தனிதான்.

“எப்போ தான் என்னை பார்த்தா ஓடுறதை நிறுத்துவாளோ!” மனைவியிடம் குறையாகக் கூறினார்.

“அவளுக்கு உங்க மேல் பயம்.”

மகாலட்சுமி சைகையில் சொல்லிட, புரிந்தது என்பதைப்போல் தலையசைத்தார்.

“நான் அவள் அப்பா. அவளை என்ன செய்திடப்போறேன்?”

“என்ன செய்வீங்க அப்படிங்கிற பயமில்லை. என்ன செய்துட்டு இருக்கீங்கங்கிற பயம்” என்றார் மகாலட்சுமி.

“இதை என்னால விட முடியாது மகா. என்னால் உனக்குத்தான் பெரும் இழப்பு. நீ என்னோட பேசுற தானே?” எனக் கேட்டவருக்கு உண்மையில் ஒரு மகளின் நிலையில் நின்று யோசிக்கத் தெரியவில்லை.

“நான் உங்க மனைவி. அனைத்தையும் சகித்து வாழ வேண்டியது அவசியம். ஆனால் அவளுக்கு அப்படியில்லை.”

மகாலட்சுமி சைகையால் சொல்லியது புரிந்தாலும் அவரால் ஒப்புக்கொள்ளத்தான் முடியவில்லை.

“அவளும் பேசுவாள். ஒருநாள்” என்றவருக்குத் தெரியவில்லை அவள் எப்போதும் அவரிடம் பேசிடவே மாட்டாள் என்பது.

முத்துச்சாமி வீட்டில் இல்லை என்பது தெரிந்த பின்னரே அறையிலிருந்து வெளியில் வந்தாள் ஆதர்ஷினி.

வந்தவள் அன்னையிடம் ஏற்கனவே அவளது கவிதை மாதாந்திர பத்திரிகையில் வந்திருப்பதை சொல்லியிருந்ததால் விநோதனிடமிருந்து பத்திரிகை அலுவலகம் மூலமாக வந்திருந்த கடிதத்தை பற்றியும் கூறினாள்.

நன்றி தெரிவித்து பதில் கடிதம் அனுப்புவதாக இவள் தெரிவித்திட, மகாலட்சுமி யாரென்று தெரியாமல் நம்ப வேண்டாம் என்றார்.

“அவரைப்போல் பத்திரிகை ஆபீஸ் மூலமாகவே அனுப்புறேன் ம்மா” என்றவள் சொல்லியது போலவே விநோதனுக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பினாள்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 29

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
24
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. இந்த வினோதனை தானே டீசரில் கல்லை கட்டி கடலில் போட்டதாக சொல்லி இருந்தீர்கள் 🤔😲