
உயிர் உறை 18
நேசப்பிழை 11
வசீ வீட்டிற்கு வந்ததும்,
முத்துச்சாமி கூறிய போதைப்பொருட்களின் தன்மை எத்தகையது அவை எதிலிருந்து பெறப்படுகின்றன என்று ஒவ்வொன்றாக இணையத்தில் ஆராயத் தொடங்கியவனுக்கு தெரிந்து கொண்ட விடயங்கள் யாவும் தலையை கிறுகிறுக்க வைத்தது.
‘இதனையா இன்றைய இளைஞர்கள் மத்தியில் பரப்புகின்றனர்’ என்று நினைத்தவனுக்கு அப்போதே அக்கூட்டத்தில் இருப்பவர்கள் ஒருவரையும் விடாது தன் துப்பாக்கிக்கு இரையாக்கிடும் வேகம். ஆனாலும் நிதானமாக இதனை கையாள நினைக்கின்றான்.
அதற்கான காரணம்,
இதுநாள் வரையிலும் முத்துச்சாமி தான் இவற்றிற்கெல்லாம் தலைமை என்று நினைத்திருந்தவனுக்கு, அவருக்கும் மேல் ஒருத்தன் இருக்கின்றான் என்பதே இன்றுதானே தெரிகிறது. அவன் யாரென்கிற யூகம் இருப்பினும்… கணிப்பு சரியாக இருப்பது எல்லா நேரங்களிலும் ஒத்துவராதது.
பொறுமை… எத்தனைக்கு எத்தனை பொறுமையாக இருந்திட முடியுமோ அவ்வளவுக்கு பொறுமையாக இருக்கின்றான்.
பொறுமையின் வீரியமும் சரி… பலனும் சரி என்றுமே அதிகம் தான்.
வசீயின் பொறுமைக்கான பலன்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேறத் துவங்கியிருந்தன.
இவர்கள் ஏதோவொரு வகை ட்ரக் மட்டுமே உபயோகிக்கின்றனர் என்று நினைத்தால்… உலகத்திலுள்ள அனைத்து வகையும் இவர்களிடம் அடக்கம்.
அதன் தன்மை தான் வசீயை இன்னும் இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதே சமயம் ஆச்சரியப்படுத்தியது.
அதிலும் அவர்கள் அதனை விற்பனை செய்யும் விதம்தான் வசீயை அதிகம் வருத்தப்பட வைத்தது.
‘இவனுங்களுக்கு வேற வழியே இல்லையா?’ என நினைத்தவனுக்கு ஆயசாமாக வந்தது.
அதிலும் உச்சக்கட்டம் என்று ஒன்று இருந்தது. அதைத்தான் வசீயால் ஜீரணிக்கவே முடியவில்லை.
“என்ன வசீ உன் முகம் ரொம்ப கவலையா இருக்கு?” என்றபடி வசீயின் பக்கவாட்டில் அமர்ந்தான் வாசு.
வசீயிடம் பதில் இல்லை. மடிகணினி திரையில் அவனது விழிகள் அழுத்தமாக பதிந்திருந்தன. கருவிழி மட்டும் வலப்பக்கம், இடப்பக்கம் என்று நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தது.
“இன்னைக்கு ரெண்டு காலேஜ் கேர்ள்ஸ் டா வசீ. செய்யவே அத்தனை கஷ்டமாப்போச்சு” என்று வாசு சொல்ல…
படாரென்று திறந்த கதவில் வாசு தான் அதிர்ந்து பார்த்தான்.
“வசீ… வசீ ஐயா பொண்ணு டா!”
அப்போதும் வசீ மெதுவாகத்தான் வாயிலை ஏறிட்டான்.
கோப கனலோடு தகிக்கும் பாவையாய் நின்றிருந்தாள் ஆதர்ஷினி.
“என்னடா பண்ணி வச்ச? மாடர்ன் பத்ரகாளி மாதிரி நிக்கிறாங்க” என்ற வாசு, “நான் ரூமில் இருக்கேன்” என்று எழுந்து சென்றான்.
ஆதர்ஷினியை பார்த்த பிறகும் வசீயிடம் எவ்வித அசைவுமில்லை. இருந்த இடத்தில் அப்படியே அமர்ந்திருந்தான்.
தான் வந்தது தெரிந்தும் கல்லென இருப்பவனின் மீது கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
வேகமாக வசீயின் முன் நின்றவள், அவனின் கையிலிருந்த மடிகணினியை பிடுங்காத குறையாக இழுத்து கோச்சில் தூக்கி எறிந்தாள்.
அப்போதும் வசீ அப்படியேதான் இருந்தான்.
அவள் முறைத்து நின்றாள்.
“பாலா இல்லையே!” அவளை பாராது கூறினான்.
“ஏன்டா இப்படி பண்ற? நான் இப்போ எதுக்கு வந்திருக்கேன்னு உனக்கு தெரியாது அப்படித்தானே?” என்றவள்,
“நானாடா உன்கிட்ட வந்து கல்யாணம் பண்ணிக்கலாமா கேட்டேன். உன் மேல லவ் வந்தாலும் சொல்லாமதானே நானிருந்தேன். நீயே வந்து எல்லாம் சொல்லிட்டு, இப்போ நீயே எனக்கு பையன் பார்ப்பியா?” என கோபமாக சத்தமிட்டவள், அவனின் முன்பு மண்டியிட்டு அமர்ந்தாள்.
“முடியலடா… எதாவது பண்ணு” என்றவளின் வலி அவன் உணர்வதாய். இருந்தபோதும், அவளுக்கு எவ்வித உறுதியும் அளித்திட அவன் முயலவில்லை.
“என் அழுகையை பார்த்து லவ் வருது சொன்னல… உனக்காக நான் அழணும் ஆசைப்பட்டதானே? இப்போ உனக்காகத்தான் அழறேன்” என்றவளின் கண்ணீர் கழுத்தை தொட்டிருந்தது.
அப்போதுதான் அவளை அவன் பார்த்தானே!
கண்களை அழுந்த மூடி திறந்தவன்,
“அன்னைக்கு நீ சொன்னதுதான் காதல் எப்படியோ… ஆனால் கல்யாணம் ஒத்துவரும் தோணல. என்னோட ஒரு வாழ்கையை உன்னால் வாழ முடியாதுன்னு சொன்னதானே? அது நிஜம். அதில் நீ உறுதியா இரு” என்றான்.
“ஆமா ஒத்துவராது தான். எனக்கு உன் ரவுடிசம் ஒத்தேவராது. அதனாலதான் அம்மாகிட்ட ஓகே சொன்னேன். ஆனா நீயில்லாம முடியாதுன்னு தோணுது. நான் என்ன பண்ணட்டும். வேணாம் சொன்ன நானே உன்கிட்ட நீதான் வேணும் கேட்கிறேன்” என்றாள். தழுதழுப்போடு.
வசீயிடம் இறுக்கமான மௌனம்.
அடுத்து ஆதர்ஷினிக்கு என்ன பேசவேண்டும்… இதற்கு மேல் எப்படி இறங்கி சென்று கேட்கவேண்டும் என்று தெரியவில்லை. அவனை பார்த்தபடியே காலை மடக்கி தரையில் அமர்ந்தாள்.
“அவ்வளவு தானா?”
இருக்கையை விட்டு வசீ எழுந்துவிட்டான்.
வசீக்கு, தான் யாரென்று தெரியும் முன்பே… தன்னை இப்படியே, ஒரு ரவுடியாக தன்னுடைய குறைகளோடு ஆதர்ஷினி தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமென நினைத்தான்.
எதை காரணமாக வைத்து உன்னுடன் நிம்மதியான வாழ்வு வாழ முடியாது என்று சொன்னாளோ… அந்நிலையில் அப்படியே அவள் தனக்காக வர வேண்டுமென்று நினைத்தான்.
காதல் இருந்தபோதும் தன்னுடைய ரவுடிசத்திற்காக வேண்டாம் என்றவள், தன்னைப்பற்றி தெரிந்ததும் வந்தால், அங்கு பொய்த்து போவது அவளல்ல… அவர்களின் காதல். அதற்காகவே அன்று அவள் வேண்டாம், என் திசைக்கு வராதே என்ற நிலையில் அமைதியாக இருந்துவிட்டான்.
சூரஜ்ஜின் மூலம் அவளின் காதலின் ஆழம் அறிந்து கொண்டவனுக்கு, இன்னொருவனுடன் திருமணம் என்றால் நிச்சயம் தன்னிடம் வருவாளென்று தெரிந்துதான் முத்துச்சாமி சொல்லியதும் பையனை பற்றி தீவிரமாக விசாரித்து தகவல் அளித்தான்.
சொல்லிவிட்டு வந்துவிட்டவனுக்கு, எந்நேரத்திலும் ஆதர்ஷினி தன்னைத்தேடி வருவாளென்பதில் அத்தனை திண்ணம். அந்நொடிக்காகக் காத்திருந்தான் என்றே சொல்லலாம்.
ஆனால் காத்திருப்பிற்கு நேர்மாறாக இப்போது பேசி வைத்தான்.
முத்துச்சாமி ஆதர்ஷினியின் திருமணத்தை காரணம் வைத்து அவர்களது சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திட நினைத்திருக்காவிட்டால், இந்நொடி ஆதர்ஷினியின் கண்ணீரை தன்னுடைய நெஞ்சத்தில் தாங்கியிருப்பான்.
இப்போது வசீ சரியென்று ஆதர்ஷினிக்கு சம்மதம் சொல்லி, முத்துச்சாமியின் ஏற்பாடுகள் நின்றுவிட்டால், மீண்டும் அவனால் இதற்காகக் காத்திருக்க முடியாது. இப்போதே நிலைமை கைமீறி சென்றுவிடக்கூடாது என்பதில் ஒவ்வொரு அடியையும் பார்த்து நிதானமாக வைக்கின்றவனுக்கு, காதல் இன்னும் கூடுதல் சிரத்தை அளித்துவிடும். அதற்காகவே காதலை மறுக்கிறான்.
வசீக்கு காதலைவிட அவன் எண்ணி வந்த காரியம் பெரியதாக தெரிகிறது என்றால் எப்படியான சூழலில் அவன் நின்றுகொண்டிருக்கிறான் என்பது அவனுக்கு மட்டுமே உரித்தானது.
ஆதர்ஷினி அவ்வளவு தானா எனக் கேட்டதுமே வசீயின் இதயத்திற்குள் மின்னல் கிழித்து இடி வெடிக்கும் சப்தம்.
“உங்களை வேண்டான்னு சொன்னாலும், இந்த காதல் படுத்துது” என்றவள், கண்களை துடைத்துக்கொண்டு எழுந்து நின்றாள்.
“நான் ஒருமுறை உங்க விரலை பிடிச்சிக்கட்டும்மா?” எனக் கேட்டாள்.
அவள் எதற்காகக் கேட்கிறாள் என்று புரியவில்லை. பேண்ட் பாக்கெட்டிற்குள்ளிருந்த கையினை வெளியில் எடுத்துவிட்டான். அவள் முன் நீட்டவில்லை.
அவன் அமைதியாய் கையினை வெளியில் விட்டு நின்றதே அவளுக்கு போதுமானதாக இருந்தது.
அவனின் வலது கையின் சுண்டு விரலோடு தனது சுண்டு விரலை மடக்கி வளைத்து பிடித்தாள்.
அவனுள் சுர்ரென்று மின்சாரம் பாய்வதைப்போல் மாயம். நொடியில் எல்லாம் குளுமையாய் மாறிப்போனதை உணர்ந்தான். அவளிடம் காட்டிக்கொள்ளத்தான் மனம் வரவில்லை.
“என்ன பண்ற?” அவன் கேட்கவில்லை. ஆனாலும் அவனது மொழி புரிந்து பதில் கொடுத்தாள்.
“பிடிச்சிருக்கேன் பிடிச்சதுனால.”
“உனக்கு உங்கப்பா வேறொருவனை தேர்ந்தெடுத்திருக்கார்.” மனதினை கல்லாக்கிக் கூறினான்.
“தெரியும். இனி எப்பவுமே பிடிக்க முடியாதே! அதான் பிடிச்சிருக்கேன். ரொம்ப பிடிச்சிருக்கு” என்றவள் தன்னுடைய அலைப்பேசியில் பிணைந்திருக்கும் விரல்களை புகைப்படம் எடுத்தாள். விரலினை உருவிக்கொண்டு அவனது முகம் பார்க்காது வேகமாக வெளியேறிவிட்டாள்.
அவளின் செயலிலும், இறுதிப் பேச்சிலும் அவன் தான் உயிர் உறைந்து நின்றான்.
தொப்பென்று இருக்கையில் அமர்ந்தவன், தன்னுடைய வலது கையை உயர்த்தி சுண்டு விரலை மட்டும் அத்தனை ரசனையாய் ஏக்கமாய் பார்த்தான்.
அந்த விரலோடு பிணைந்திருந்த அவளின் விரலும் சேர்ந்து அவனுக்கு காட்சிக்கொடுத்தது.
ஏதோ அவள் தன்னையே முழுவதுமாக அணைத்தது போன்றோரு இதமான இதம் அவனின் தேகம் முழுவதும்.
ஒற்றை விரல் பிணைப்பில் அவனை அக்கணம் அடியோடு சாய்த்திருந்தாள்.
“இப்படி மயங்கியிருக்கும்போது எதுக்கு நோ சொல்லணும்?”
வசீயின் முகத்தில் அப்படியொரு பிரகாசம். ஒளி கூடித் தெரிந்தது.
அறைக்குள் சென்றுவிட்டாலும், இருவரது பேச்சும் வாசுவிற்கு கேட்கத்தான் செய்தது.
எப்போதும் வசீயின் முகத்தில் இறுக்கம், தீவிரம், யோசனை சில நேரங்களில் அர்த்தம் விளங்கா சிரிப்பு இதைத்தான் பார்த்திருக்கிறான் வாசு.
ஆனால் இன்று இக்கணம் வசீயின் முகத்தில் இருக்கும் தேஜஸ் என்றும் பார்த்திடாதது. புதிது. அதனாலேயே அப்படி கேட்டிருந்தான்.
வாசுவின் கேள்வியில் தன்னை மீட்டவன்,
“யாரும் இங்கு மயங்கிப்போயில்லை” என்று தடுமாற்றமாகக் கூறினான்.
“பாருடா… தி கிரேட் வ்… ஹாஹா… வசீ சாருக்கு பேச்சு தடுமாறுது” என்ற வாசு, “உன்னை நீயே ஏமாத்திக்காத வசீ. ஆதர்ஷினியை இழந்திடாதே. கடமை முக்கியம் தான் அதைவிட வாழ்க்கை முக்கியம்” என்ற வாசு வசீயின் தோள் மீது தட்டிக்கொடுத்தான்.
“என்னடா எனக்கே அட்வைஸா?”
“அப்படியா தோணுது உனக்கு. அப்போ அப்படியே வச்சிக்கோ” என்று வாசு, “நீயும் அவங்களை லவ் பண்ற தெரியும். அப்புறம் ஏன் முடியாது சொன்ன?” எனக் கேட்டான்.
வசீ ஏதோ சொல்ல வர, கைக்காட்டி தடுத்த வாசு,
“இப்போ அதை சொல்லும் நிலையில் நீயில்லை. அதானே என்றதோடு, “நீ காரணமில்லாம எதுவும் செய்யமாட்ட” என்றான் வசீயை புரிந்தவனாக.
தன்னுடைய திட்டத்திற்கு பங்கம் ஏற்படாது எப்படி ஆதர்ஷினியை தன்னிடம் கொண்டு வருவதென்று சிந்திக்க ஆரம்பித்தான்.
புலனத்தில் தகவல் வந்திருப்பதாக ஒலியெழுப்பிட… தன்னுடைய சிந்தனையை நிறுத்தி வைத்தவன் என்னவென்று ஆராய்ந்தான்.
அந்த தகவல் அவனது கை முஷ்டியை இறுக வைத்தது.
******
ஆதர்ஷினி வசீயிடம் பேசிவிட்டு நேராகச்சென்றது கடற்கரைக்கு. சுடும் மணலையும், எரிக்கும் சூரியனையும் பொருட்படுத்தாது கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள். கண்கள் தொடுவானத்தை வெறித்திருந்தது. அலைநீர் அவளின் கால் விரல்கள் தீண்டிச் சென்றன.
இன்றே அழுது… அழுகையில் உன் காதலையும் கரைத்துவிடு என்று மனதினுள் ஏதோவொன்று உந்தித் தள்ளிட… கண்கள் கடல் நீருக்கு போட்டியாய் வழிந்து கொண்டிருந்தது.
விநோவின் மீதான காதலை கடந்துவர முடிந்தவளால், வசீயின் காதலை எளிதாகக் கடக்க முடியவில்லை.
விநோவின் உருவத்திற்கு வசீயின் தோற்றம் அவளுள் பொருந்திப் போனதால்… இவனையும் இழந்துவிடக் கூடாதென ஒதுக்க முடியாது தவிக்கின்றாளோ?
அலையின் சத்தத்தை மிஞ்சி கத்திட வேண்டும் போலிருந்தது அவளுக்கு.
“நான் போகின்ற வழியெல்லாம்
நீ அல்லவா!
உயிர் சுமக்கின்ற காதலும்
உனது அல்லவா!
உன் பிழைத்தாண்டி
நான் உன்னை நேசிக்கவா!
இல்லை நீ இன்றி
நான் வாழ வழி தேடவா!
நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!”
நேரங்காலம் இல்லாமல் காலையில் பன்பலையில் அவள் ஒலிக்கச் செய்த பாடலுக்கான இடையிலுள்ள வரிகள் நினைவுக்கு வந்து மனதின் வலியைக் கூட்டியது.
‘உன்னோட தவறு, பிழை, குற்றம் எல்லாத்தையும் தாண்டி உன்னை லவ் பண்றேன்… உனக்கு புரியலையா?’ இல்லாத வசீயிடம் மானசீகமாகக் கேட்டுக்கொண்டவளின் மனம், பொங்கி வரும் அலைக்கு நிகராக காதலில் பொங்கிக்கொண்டிருந்தது.
“பாப்பா…”
திடீரென பின்னால் கேட்ட குரலில் திரும்பியவளுக்கு தன்னை அழைத்தது பாலா என்று தெரிந்து தான் இருந்தது.
************
அன்றைய இரவு வசீ பாலில் எதையோ கலந்து கொண்டிருந்தான். வாசு ஆவேன பார்த்திருந்தான்.
“என்னது இது?”
“நைட் எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு!”
“தூக்க மருந்தா?”
“ச்ச… ச்ச…” வாசு கேட்டதற்கு இரு பக்கமும் தலையாட்டினான்.
“வேறென்ன?”
“இதுவொரு ட்ரக்.” சர்வ சாதாரணமாகக் கூறினான் வசீ.
“இந்தப்பழக்கம் அவனுங்களுக்கு இல்லையே?” வாசு பயத்தோடு சொன்னான்.
“உனக்குத் தெரியுமா?”
வசீயின் கேள்வியில் வாசு விழி விரித்தான்.
“என்ன சொல்ற… அவனுங்க இதையெடுத்து ஒருநாளும் நான் பார்த்தது இல்லையே” என்றான் வாசு.
“அப்படியா?” என்ற வசீ… “இது காஃபீன்” என்றான்.
“நம்ம காபிப்பொடியில் இருக்குமே அதுவா?” என்று கேட்ட வாசுவை மெச்சுதலாய் பார்த்த வசீ, “இதெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கியே” என்றான்.
“அதிலிருந்தும் பெறப்படுதுதான்” என ஆரம்பித்த வசீ, “இது பல செடிக்கொடிகளில் இயற்கையாவே கிடைக்குது. காபியில் இதனோடத் தன்மை புத்துணர்வை கொடுக்கக்கூடியது. ஆனால் மற்ற தாவரங்களிலிருந்து பெறப்படுவது அப்படியில்லை. எதுவுமே அளவுக்கு அதிகமானால் ஆபத்து தானே. காபியில் அளவாக கிடைப்பதால் அதன் ஆபத்தை நாம் உணர்வதில்லை. ஆனால், அதனால் எதிர்காலத்தில் பிரச்சினைகள் உண்டு. நிறைய காஃபி குடிப்பவர்களுக்கு எளிதில் வெள்ளை முடி வரும். இதுமாதிரி சின்ன சின்ன பாதிப்புகள் நிறைய இருக்கு. நாம் அன்றாடம் பயன்படுத்துவதிலே விளைவுகள் இருக்கும்போது, ட்ரக்ஸ் ஆக பயன்படுத்துவதில் எத்தனை வீரியம், விளைவுகள் இருக்கும்? நான் இப்போ கலப்பது அந்த வகையைச் சேர்ந்தது, இவனுங்க விற்பது” என்று முடித்தான்.
“கண்டுபிடிச்சிட மாட்டானுங்களா?”
“இது கலர் அண்ட் டேஸ்ட்லெஸ்” என்ற வசீ… வாசுவின் முகத்திற்கு நேரே குவளையை பிடித்தவாறு கலக்கு கலக்கென்று கலக்கினான்.
“பார்த்துப்பா… உன் ஆர்வத்தில் என் தம்ளரில் கலந்திடப்போற!” என்ற வாசுவுக்கு, “இன்னைக்கு பால் குடிச்சே ஆகணுமா?” எனக் கேட்டான்.
“கண்டிப்பா… நீ குடிக்கலன்னா டவுட் வந்திடுமே” என்ற வசீ நான்கு குவளைகளையும் எடுத்துக்கொண்டு மொட்டைமாடிச் சென்றான்.
பாலாவும், குமாரும் எதையோ பேசிக்கொண்டிருக்க… இவர்கள் சென்றதும் நிறுத்திக்கொண்டனர்.
“இந்தாங்கடா பால்” என்று ட்ரக் கலந்த தம்ளர்கள் இரண்டையும் எடுத்து முன்னெச்சரிக்கையாக வாசுவே அவ்விருவரிடமும் நீட்டினான்.
“ஏன் எங்களுக்கு எடுத்துக்க தெரியாதா?” எனக் கேட்ட குமார், வசீயின் கையிலிருந்த தம்ளர்களில் ஒன்றை எடுத்து பாலாவிடம் கொடுத்து, மற்றொன்றை தான் எடுத்துக்கொண்டான்.
வாசு பேய் முழு முழித்தான்.
வசீ சாதரணமாக வாசுவின் கையிலிருந்த தம்ளர்களில் ஒன்றை எடுத்து குடிக்க ஆரம்பித்தான்.
“நைட்டெல்லாம் நாங்க குடிக்கிறதே வேற… நீ வந்ததிலிருந்து எல்லாமே மாறிப்போச்சு” என்ற பாலா, “நீ ஏன்டா நின்னுட்டே இருக்க. குடிச்சிட்டு வந்து படு” என்றான்.
‘இப்போ இதை குடிக்கலாமா வேண்டாமா?’ திருதிருத்த வாசுவை பார்த்து வசீக்கு சிரிப்பாக வந்தது.
“டேய் குடிடா…” வசீ வேண்டுமென்றே அதட்டினான்.
“இல்லை எனக்கு வேண்டாம். வயிறு புல்லா இருக்கு” என்ற வாசு, தம்ளரை கீழே வைக்க… குமார் அவனின் கழுத்தை பின்பக்கமாக பிடித்து ஒரே மூச்சில் அவனின் வாயில் சரித்துவிட்டான்.
திமிறி துப்பினாலும் பாதிக்கும் மேல், வாசுவின் தொண்டைக்குள் இறங்கியிருந்தது.
“வசீ…” அரண்டவனாக வாசு. விட்டால் அழுதுவிடுவான் போல்.
வசீ… பொறுமையாக மிகமிக பொறுமையாக மிடறு மிடறாக பாலினை பருகிக் கொண்டிருந்தான்.
“டேய் நான் பீதியில் இருக்கேன். நீயென்னடான்னா ரசிச்சு குடிச்சிட்டு இருக்க?” வசீயின் காதில் முணுமுணுத்தான் வாசு.
“அப்போதாண்டா எபெக்ட் நல்லாயிருக்கும்.” வசீ சொல்லியதில் வாசுவிற்கு தலை சுற்றுவது போலிருந்தது.
“வசீ எனக்கென்னவோ போலிருக்குடா, நாக்கு குழறுது” என்றவன் கண்கள் சொருக வசீயின் மீது சரிய,
“டேய் நடிக்காதடா எழுந்திரு” அவனை கிளப்பினான் வசீ.
“வசீ நடிக்கலடா…” அரை மயக்கத்தில் வருவது போலிருந்தது வாசுவின் பேச்சு.
“டேய் அங்கப்பாரு.” தோளில் விழுந்து கிடைந்தவனை எத்தி தள்ளி அமர வைத்தவனாக போதையில் உளறிக்கொண்டு அரை மயக்கத்தில் கிடந்த பாலா மற்றும் குமாரை காண்பித்தான் வசீ.
“அப்போ நான் குடித்தது?”
“ஆர்வக்கோளாரில் நீ இப்படி எதாவது பண்ணுவன்னு தெரியும். அதான் மேலேறி வரும்போதே மாத்தி வச்சிட்டேன்” என்ற வசீ, “நீ பார்த்துக்கோ நான் போயிட்டுவரேன்” என்றான்.
“அப்போ எனக்கு இந்த மயக்கம், பதட்டம் எல்லாம்?” வாசு கேள்வியாக இழுத்தான்.
“இல்லாத ஒன்னை இருக்குன்னு நம்பினால் இருப்பது போலத்தானே தோற்றம் கொடுக்கும்.” வசீ தோள்களை குலுக்கியவனாக கீழிறங்கினான்.
அந்நேரம் போதையின் பிடியில், “அவனை கொல்லாம விடமாட்டேன். அவன் சாவு என் கையில் தான்” என்று பாலா கத்திட, பயந்தவனாக வாசு வசீயின் பின்னால் ஓடினான்.
“நானும் உன்னோட வரேன். என்னையும் கூட்டிட்டு போடா.”
“நான் போகும் இடத்துக்கு உன்னை எப்படிடா?” வீட்டிற்குள் வந்த வசீ தன்னுடைய பிஸ்டலை எடுத்து சட்டையின் பின்னால் சொருகியவனாகக் கேட்டான்.
“துப்பாக்கிலாம் வச்சிருக்க?”
“டேய் நீயெல்லாம் ரவுடி கேங்கில் இருக்கன்னு வெளிய சொல்லிடாத” என்ற வசீ… “அவனுங்களோட தூங்க பயமாக இருந்தா, வீட்டிலே தூங்கு” என்க… “என்னால் தனியா இருக்க முடியாது. நானும் வரேன்” என்று அடமாக வசீயின் கைகளை பிடித்துக்கொண்டான்.
பாலாவின் அறையில் எதையோ தேடியவனாக இருந்த வசீ, “சரிடா கூட்டிட்டுப்போறேன். கையை விடு” என்று உதறிவிட்டு, அங்கிருந்த அலங்கார பொம்மையின் உள் பாலா வைத்த சாவியை எடுத்துக்கொண்டு வாசுவுடன் வெளியேறினான்.
“ட்ரெஸ் சேன்ஞ் பண்ணலையா?”
தான் அணிந்திருந்த ஷார்ட்ஸ் மற்றும் டிஷர்ட்டை குனிந்து பார்த்த வசீ, “போகும் வேலைக்கு இதுதான் சரி” என்றவனாக அப்படியே சென்றான்.
“எங்கப்போறோம்?” வாசு கேட்டுக்கொண்டே வர வசீ பதில் சொல்லாது சாலையிலேயே கவனமாக இருந்தான்.
வந்து சேர்ந்த பின்னர் தான் எங்கு வந்திருக்கிறோம் என்றே வாசுவுக்கு தெரிந்தது.
“நம்ம இடத்துக்கு வரத்தான் இத்தனை பில்டப்பா?” எனக் கேட்ட வாசு வண்டியிலிருந்து இறங்கிட…
“வீட்டுக்கு பின்னால் போடா. தோட்டத்தில் கிடக்கும் ஏணியை அங்கிருக்கும் மரத்தில் சாற்றி வைத்து காத்திரு” என்ற வசீ, வீட்டின் பக்கவாட்டில் பைப்பினை பிடித்து ஏற ஆரம்பித்துவிட்டான்.
“இதுக்குத்தான் இந்த ட்ரெஸ் வசதின்னு சொன்னனா!” அவன் ஏறுவதை வாய் பிளந்து பார்த்திருந்தான்.
மின்னல் வேகத்தில் இரண்டாவது மாடியைத் தொட்டிருந்தான்.
“இங்கு நேராவே போகலாமே இவன். யார் என்ன கேட்பாங்க?” என்று முனங்கினாலும் வசீ சொல்லியதை செய்ய வீட்டின் பின்புறம் சென்றான் வாசு.
அந்த இருட்டில் ஏணியை தேடி எடுத்தவனுக்கு, எந்த மரத்தில் வைக்கணும் சந்தேகம் எழ வசீக்கு அழைத்தான்.
அப்போதுதான் பைப் பிடித்து மேலேறியவன் இரண்டாவது தளத்திலிருந்த பால்கனி வழியாக வீட்டிற்குள் நுழைந்து நோட்டம் விட்டபடி இருட்டை பார்வைக்கு பழக்கப்படுத்திக் கொண்டிருந்தான்.
தளத்தின் மேலிருந்து கீழே ஹாலில் பார்க்க… அனைத்து தடியர்களும் பல கோணங்களில் ஆங்காங்கே விழுந்து கிடந்தனர். அவர்களின் நிலையே சொல்லியது அவர்கள் தன்னிலையில் இல்லையென்று.
ஒருவித அருவருப்பான முகச்சுளிப்போடு அவர்களை பார்த்தவன், காலடி சத்தம் வராது படிகளின் வழி கீழிறங்கினான்.
அந்நேரம் தான் வாசுவின் அழைப்பு வந்தது.
ஷார்ட்ஸ் பாக்கெட்டில் அதிர்வை உணர்ந்தவன்,
“என்னடா?” என்று எடுத்ததும் மென்குரலில் கடிந்தவனாக வினவினான்.
“எந்த மரன்னு சொல்லலையே?” என்றான் வாசு.
“டேய் நீயெல்லாம் எப்படிடா… இந்த கும்பலில்?” எப்போதும் வாசுவிடம் கேட்கும் அதே கேள்வி வசீயிடம்.
“மொட்டை மாடியில் எந்த மரத்தின் கிளை படர்ந்திருக்கோ, அந்த மரத்தில்” என்றான்.
“வசீ சீக்கிரம் வாடா. பயங்கர இருட்டா பயமா இருக்கு.”
“பேய் வந்தா சேர்ந்து டூயட் ஆடுடா” என்று கடுப்பாக மொழிந்தவனாக வசீ வைத்திட, ஒருவன் வெளியிலிருந்து உள் வந்தான்.
வசீ தன்னை மறைத்தவனாக படிகளுக்கு கீழிருந்த இடத்தில் ஒளிந்து நின்றான்.
“எல்லாரும் ஒரே நேரத்தில் சாஞ்சுட்டானுங்க. அதுங்களை யார் காவல் காக்குறது” என்று புலம்பியவனாக அங்கு பூட்டப்பட்டிருந்த அறைக்கு முன்பாக நீள்விருக்கையை இழுத்துப்போட்டு படுத்துவிட்டான்.
‘இவனை ஓரங்கட்டனுமே’ என யோசித்த வசீ சுற்றி எதையோ தேடினான்.
தடித்த கட்டை ஒன்று கண்ணில்பட, அதனை எடுத்தவன், அவனுக்கு சத்தம் எழுப்பாது அருகில் சென்று, தலையில் ஒரே அடி. நொடியில் மயங்கி சரிந்திருந்தான்.
அங்கே உருண்டு கொண்டிருந்த அனைவரையும் சுற்றி பார்த்தவன், கையோடு கொண்டு வந்திருந்த சாவியை எடுத்து பூட்டினை திறக்க முயற்சித்தான்.
‘இந்த தொழிலில் இருப்பவன் எவனையும் நம்பமாட்டான் போல. இங்கு இத்தனை பேர் இருக்க, பூட்டி சாவியை அவனே கொண்டுவந்திருக்கான்.’ பாலாவை நினைத்து மனதோடு முணுமுணுத்தான்.
பூட்டினை திறந்து உள் நுழைந்தவன், மின்விளக்கினை போடாது அலைபேசியில் விளக்கினை ஒளிரச் செய்தான்.
இரண்டு கல்லூரி மாணவிகள் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூலையில் சுருண்டு கிடந்தனர்.
திடீர் வெளிச்சத்தில்… ஏற்கனவே மிரண்டு இருந்தவர்கள் மேலும் பயந்தவர்களாக சுவற்றோடு ஒண்டினர்.
“எங்களை ஒன்னும் பண்ணிடாதீங்க. பயமா இருக்கு. வீட்டில் தேடுவாங்க. எங்களை வைத்து என்னென்னவோ செய்யப்போறதா பேசிக்கிறாங்க. விட்டுடுங்க ப்ளீஸ்” என்று இருவரும் பயத்தில் அழுகையோடு வேண்டிட… வசீக்கு நெற்றி நரம்புகள் புடைத்தன.
“ஷ்ஷ்ஷ்…” வாயில் விரல் வைத்து காண்பித்தவனாக அவர்களை நோக்கி முன்னேறினான்.
“கிட்ட வராதீங்க ப்ளீஸ்…” என்று இருவரும் அலறிட…
இரண்டடிக்கு முன்பே ஒற்றை கால் குற்றி அமர்ந்தவன்,
“நான் உங்களை ஒன்னும் செய்யமாட்டேன். உங்களை காப்பாத்ததான் வந்திருக்கேன். என்னை நீங்க நம்பனும்” என்றான்.
வசீயின் தோற்றமே சற்று நேரத்திற்கு முன்புவரை அவர்கள் பார்த்த முரட்டு ஆட்களிடமிருந்து வேறுபட்டு தெரிய,
“எங்களை எங்க வீட்டில் விட்டுடுறீங்களா?” என்று அழுகையோடு கேட்டனர்.
“கண்டிப்பா. அதுக்கு முன்னால் இப்படி அழறதை நிறுத்துங்க. சத்தம் கேட்டு எவனாவது வந்திடப்போறான்” என்ற வசீ வேகமாக இருவரின் கட்டுக்களையும் நீக்கினான்.
இருவரும் எழுந்து அதுவரை மறுத்து போயிருந்த காலினால் நிற்க முடியாது தடுமாறிட…
“கொஞ்ச நேரத்தில் சரியாகிடும்” என்று குடிக்க தண்ணீர் கொடுத்தான்.
அவர்கள் சற்று ஆசுவாசம் கொண்டதும்,
“என் பின்னாலே வாங்க” என்று மெல்ல அழைத்துச் சென்றான்.
மாடிக்கு செல்லும் படிகளை காண்பித்தவன், “சத்தமில்லாது ஏறுங்க” என்று அவர்களை முன்னே செல்லவிட்டு, அறையினை பழையபடி பூட்டியவனாக பின்தொடர்ந்தான்.
மொட்டை மாடிக்கு வந்தவன், மெதுவாக வாசு என்று அழைத்திட, மரத்திற்கு கீழிருந்து தள்ளி வந்து தன்னிருப்பைக் காட்டி கையசைத்தான் வசீ.
“கீழ ஏணியை பிடிச்சிக்கோ” என்ற வசீ,
“பயப்படாம இந்த சுவற்றின் மீது ஏறி மரத்தின் கிளையில் கவனமா கால்வைத்து இறங்குங்க. மரத்தில் ஏணி இருக்கும் அது வழியா கீழே இறங்கிடலாம்” என்றான்.
இருவரும் பயந்தவர்களாக கைகளை பிசைந்தபடி நின்றிருக்க…
முதலில் கிளையில் இறங்கி நின்ற வசீ,
மாடி சுற்று சுவற்றில் அவர்களை வெளிபக்கம் காலினை தொங்கவிட்டு அமருமாறு கூறினான்.
அவர்களும் அவ்வாறு செய்திட,
“இப்போ என் கையை பிடிச்சுக்கிட்டு கிளையில் கால் வைத்து, மேல் கிளையை பிடித்து நில்லுங்க” என்றான்.
வசீ சொல்ல சொல்ல ஒவ்வொன்றாக செய்த இருவரும், வசீயுடனே தரையை அடைந்திருந்தனர்.
வசீயுடன் வந்த இரண்டு பெண்களையும் பார்த்து வாசு அதிர்ந்து நின்றான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
27
+1
2
+1

