Loading

உயிர் உறை 16

நேசப்பிழை 9

நடுநிசி…

வசீக்கு ஆழ்ந்த உறக்கமென்று சொல்லிட முடியாது. உறக்கத்தில் கூட எச்சரிக்கையுடன் தான் இருப்பான். சிறு ஓசைக்கும் கண் விழித்திடுவான். அவனது புலன்கள் எப்போதும் ஓய்வின்றி விழித்தே இருக்கும்.

அலைபேசியின் அதிர்வின் விர்ரென்ற ஒலிக்கே சட்டென்று விழித்துவிட்டான்.

வாசுவின் கால் அவன் மீதிருக்க, மெல்ல நகர்த்தி வைத்தவன், இந்நேரத்தில் யாரென்று பார்த்திட, அழைத்தது ஆதர்ஷினி.

நேரத்தைப் பார்த்தான்.

ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது.

‘எடுக்கலாமா? வேண்டாமா?’ என்று யோசித்தபடி கையில் வைத்திருந்த அலைபேசியை வெறித்தான்.

தங்களது வேலையை கொஞ்ச நாட்கள் நிறுத்தி வைப்பதாக முடிவெடுத்த முத்துச்சாமி உப்பளத்தில் இருப்பவற்றை பத்திரப்படுத்த மற்றும் தயாராக இருப்பவற்றை ஏற்றுமதி இல்லாது சுற்றுவட்டராத்திலேயே புழங்கவிடுவதற்கு என்று அன்றிரவே அனைத்தையும் செய்து முடித்திட தன்னுடைய ஆட்கள் அனைவரையும் உப்பளத்தில் ஒன்று கூட்டியிருந்தார்.

வசீயும் வருகிறேன் என்றவனை,

“ஒரு ரூம் பொருளுக்கே உனக்கு அத்தனை இருமல் வந்துச்சு. இங்கு உன்னால் நிச்சயம் தாக்குப்பிடிக்க முடியாது. எல்லாம் அதிக வீரியம் கொண்டது. அதுவுமில்லாம பல வகை பொருட்கள் இருக்கு. அந்த இடத்தில் பழக்கமில்லாத உன்னால் மூச்சு விடவே கஷ்டமா இருக்கும்” என்று முத்துச்சாமி மறுத்துவிட்டார். அத்தோடு முத்துச்சாமிக்கே தெரியும் தனக்காக வசீ கேட்கிறானென்று. அதனாலேயே அவர் வேண்டாமென்றுவிட்டார்.

வசீயின் மீது எப்போதுமே அவருக்கு கண்ணுக்கு தெரியாத பிரியம் உண்டு. அது அவன் அவரின் உயிரை காப்பாற்றியதால். அதனாலேயே மற்றவர்களிலிருந்து அவனுக்கு மட்டும் சில சலுகைகள் மற்றும் விதிவிலக்குகள் அவரிடம் உண்டு.

வேண்டா வெறுப்பாகக் கேட்ட வசீயும் அவர் மறுத்ததும் சரியென்றுவிட்டான்.

வாசு இதனையெல்லாம் செய்வதில் வசீக்கு உடன்பாடில்லை. அவன் அன்னைக்காக இதில் மாட்டிக்கொண்டான், அன்னைக்காக தன்னுடைய வாழ்வையே இதில் பணயம் வைத்திட்டான் என்பதாலேயே வசீக்கு வாசுவின் மீது மெல்லிய பிடித்தம், அக்கறை. அதனால் வாசுவையும் முடிந்தளவு மற்றவர்களைப்போல் எளிதாக அடிதடி, கொலையை செய்திட வசீ அனுமதித்திடமாட்டான்.

இன்றும் அதுபோல் பாலா வாசுவை, “இதையும் இனி தெரிந்துகொள்” என்று அழைக்க வசீ தடுத்து தன்னுடனே நிறுத்திக்கொண்டான்.

முதல் முறை வந்த அழைப்பு ஓய்ந்து போக…

“ப்ளீஸ்…” என்று மட்டும் குறுஞ்செய்தி வந்தது ஆதர்ஷினியின் எண்ணிலிருந்து.

தான் தன்னுடைய காதலை சொல்லிட… அவளும் தன்னை காதலிப்பதை சொல்லியதோடு, இருவருக்கும் ஒத்துவராது இனி என் முன் வராதீர்கள் என்று சொல்லிச் சென்றவள் இந்த இரவில் இப்படி ஒற்றை வார்த்தையில் இரைஞ்சுதலாக குறுந்தகவல் அனுப்பினால் அவனும் என்னவென்று தான் நினைப்பான்.

தகவலை பார்த்துவிட்ட போதும், வசீ எவ்வித எதிர்வினையும் காட்டாது அமைதியாகவே இருந்தான்.

“பாலா இல்லையா? இருந்தா வீட்டுக்கு வரச்சொல்லுங்க?” அடுத்த தகவல் வந்தது.

“ஹோ… பாலா கால் அட்டெண்ட் பண்ணலன்னு என்னை கூப்பிட்டிருக்காள்?” என்றவனுக்கு சட்டென்று உரிமை கோபம் வந்தது.

‘அவனில்லைன்னாதான் நானா? முதலிலே எனக்கு கூப்பிட முடியாதாமா?’ அவனுக்கு உள்ளுக்குள் பொடுபொடுவென வந்தது.

அவள் அழைத்தபோது எடுக்க யோசித்தவன், அவள் தன்னை விடுத்து இன்னொருவனை, அவனை அவள் உடன்பிறப்பாகவே எண்ணியிருக்கும் போதும்… உதவியென நாடுவது கடுப்பாக இருந்திட, அவனே அவளுக்கு அழைத்துவிட்டான்.

அழைப்பு முடியும் தருவாயில் தான் ஏற்றிருந்தாள்.

“ஹாஸ்பிட்டல் போகனும். கூட்டிட்டு போறீங்களா?” அதை சொல்லிடவே அத்தனை திணறல் அவளிடம். குரலில் அப்பட்டமான சோர்வு.

நொடியும் தாமதிக்காது என்னவோ ஏதோவென்று கிளம்பிவிட்டான்.

வாசுவை எழுப்பி “முக்கியமான வேலை போயிட்டு வர்றேன்” என்று வசீ கூறிட, அவனோ “இன்னைக்கு யாரை தீர்த்துக்கட்ட போறீங்க?” எனக் கேட்டான்.

அவனை முறைத்த வசீ…

“அப்படின்னா உன்கிட்ட சொல்லாமதான் போவேன்” என சொல்லிவிட்டு வேகமாக விரைந்தான்.

கேட்டில் காவலாளி உறங்கிக்கொண்டிருந்தான்.

வசீயே கேட்டிற்கு இறுதியில் இருக்கும், சிறு கதவை திறந்து உள் சென்றான்.

அந்த பெரியவீட்டில் அந்நேரத்தில் யாரும் இருப்பதாகவே தெரியவில்லை.

வாயில் கதவு தாழிடப்படாது திறந்தே இருந்தது.

உள்ளே செல்லலாமா வேண்டாமா என்று ஒரு கணம் தான் சிந்தித்தான். ஆதர்ஷினியின் சோர்ந்த குரல் காதில் எதிரொலிக்க உள்ளே நுழைந்தான்.

கூடத்திலிருந்தபடியே “மகா ஆண்ட்டி” என்று பலமுறை விளித்தும் பதிலின்றி போக, வசீ ஆதர்ஷினியின் அறை நோக்கிச் சென்றான்.

கதவு ஒருக்களித்து சாற்றியிருந்தது. தட்டிப்பார்த்தவன் அரவமின்றிப்போக, அறைக்கு வெளியில் நின்றபடியே கதவினை அகல திறந்தான்.

அவனுக்கு நேரெதிர் உள்ளே கிடந்த நீண்ட கோச்சில் உடலை குறுக்கி படுத்திருந்தாள் ஆதர்ஷினி.

“ஆது…” என்றவன் தொண்டையை செறுமியவனாக “ஆதர்ஷினி” என்று அழைத்தான்.

கண்களை முழுதாக திறக்க முடியாது, அரை விழியில் வசீயை ஏறிட்டவள், எழ முயற்சித்தால் முடியவில்லை.

“முடியல…” மெல்லொலியில் கூறினாள்.

உள்ளே செல்லத் தயங்கினாலும், அவளின் வாடியத் தோற்றம் உடலுக்கு ஏதோ சரியில்லை என்று காட்டிக்கொடுக்க… தயக்கம் விடுத்து அவளின் அருகில் சென்றான்.

“என்ன பண்ணுது ஆதர்ஷினி?”

“பீ…பீவ்…பீவர்.” இதனை சொல்வதற்குள் அத்தனை மூச்சு வாங்கியது.

“சரி எழுந்து வா. ஹாஸ்பிட்டல் போகலாம்” என்றவன் அவள் எழ உதவி செய்தான்.

அவளின் உடலில் அத்தனை சூடு. அருகில் நிற்பவனுக்கே அனல் தீண்டியது கடுமையாய்.

“என்ன இவ்வளவு பீவர் இருக்கு” என்றவன், அவளை தன்மீது சாய்த்தவனாக மெல்ல நடத்தி கூட்டிவந்தான்.

“பைக்கில் உட்கார முடியுமா?”

அவனுக்கு அங்கு நின்றிருந்த காரில் ஏற சுத்தமாக ஒப்பவில்லை. இருப்பினும் அவளுக்காக தன்னிலிருந்து இறங்கி வந்தான்.

“அது அவரோட கார்” என்ற ஆதர்ஷினி, “நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்” என்றாள்.

“ஆர் யூ ஷ்யர்?”

“ம்.”

கேட்டினைத் தாண்டி அழைத்து வந்தவன், தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறே அவள் அமர்ந்திட உதவி செய்தான்.

இரண்டு பக்கமும் காலிட்டு அமர கூறியவன், தானே அவளின் கைகளை எடுத்து தன்னுடைய இடையைச்சுற்றி கோர்த்து வைத்தான். அதையெல்லாம் அவள் உணரும் நிலையிலே இல்லை.

வசீ வண்டியை ஸ்டார்ட் செய்ததும் தானாக அவன் முதுகில் தலை கவிழ்த்துக் கொண்டாள்.

ஆதர்ஷினியின் சூடு அவன் உடலில் பரவியது.

‘என்ன இப்படி காய்ச்சல் அடிக்குது. என்னன்னு சமாளிச்சாள். எப்போலிருந்துன்னு தெரியலையே! நேற்று மழையில் நனைந்தது. ஈர உடையிலே இருந்தது. அழுததென காய்ச்சல் வந்திருக்குமோ?’ என்று புலம்பியவாறு இருபத்தினான்கு மணிநேர மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான்.

பரிசோதனை செய்த மருத்துவர், வசீயை திட்டித்தீர்த்தார்.

“என்ன சார்… படித்தவர் தானே நீங்க? மனைவிக்கு உடம்பு சரியில்லைன்னா உடனே மருத்துவமனைக்கு அழைத்து வரணும் தெரியாதா? இவ்வளவுக்கு டெம்ப்பரேச்சர் அதிகம் ஆகும் வரையா பார்த்திட்டு இருப்பாங்க. ஃபிட்ஸ் வந்தா என்ன பன்றது?” என்று மருத்துவர் அவர் போக்கில் வசீயை திட்டிக்கொண்டே ஆதர்ஷினிக்கு சிகிச்சை அளிக்க,

அவரின் பேச்சினை தடுக்கும் விதமாக பேச வந்த ஆதர்ஷினியின் கையை பிடித்து தடை செய்தான் வசீ.

“இந்த நிலையிலும் பாருங்க… உங்களை திட்ட வேண்டான்னு, உங்க மனைவி தடுக்கப்பாக்குறாங்க. இந்த அன்பு உங்களுக்கு அவங்க மீதிருக்கா?” மருத்துவர் இருவரையும் கணவன் மனைவியென நினைத்து பேசிட… வசீக்கு அப்பேச்சு இனிக்கவே செய்தது.

அதற்கு மேல் முடியாதென மருத்துவரின் மேசை மீதே தலை கவிழ்ந்திட்டாள் ஆதர்ஷினி.

“ஹை டெம்பரேச்சர் சார். அன்கான்ஷியஸ் ஆக சான்ஸ் இருக்கு. பீவர் குறைய இன்ஜெக்ஷன் போட்டு, மருந்து கொடுப்போம். ட்ரிப்ஸ் ஏற்றினா ட்யர்ட்னஸ் குறையும். அட்மிட் பண்ணிடுங்க” என்ற மருத்துவர் நர்ஸ் ஒருவரை அழைத்து ஆதர்ஷினியை கவனிக்க உத்தரவிட்டார்.

ஆதர்ஷினியை நர்ஸ் பிடித்து அழைத்துச்செல்ல முற்பட, வேகமாக அவளருகில் சென்று வசீ தன்மீது தாங்கிக்கொண்டு, நர்ஸ் காட்டிய சிகிச்சை அறை நோக்கிச் சென்றான்.

மருத்துவர் அளித்த சிகிச்சை குறிப்புகளை எல்லாம் ஆதர்ஷினிக்கு செய்து முடித்த நர்ஸ்…

“நான் அப்பப்போ வந்து செக் பன்றேன் சார். ட்ரிப்ஸ் முடியும் போது, எதாவது எமெர்ஜென்ஸி அப்படின்னா இந்த பட்டன் பிரெஸ் பண்ணுங்க” என்றவர், “ரெண்டு மணி நேரத்தில் கொஞ்சம் தெளிவாகிடுவாங்க, அவங்க எதுவும் சாப்பிட்ட மாதிரியும் தெரியல… எழுந்ததும் பால் வாங்கி கொடுங்க” என அறையைவிட்டு வெளியேறினார்.

அவளை பார்த்தவாறே அவளின் படுக்கைக்கு அருகே, இருக்கையை இழுத்துப்போட்டு அமர்ந்துவிட்டான் வசீகரன்.

ஒருநாளில் அத்தனை மெலிந்தவளாக தெரிந்தாள். காய்ச்சல் அவளை மொத்தமாக நிலைக்குலைய வைத்திருந்தது.

இமைக்காது அவளில் உறைந்து கொண்டிருந்தவன் எப்போதென்று தன்னை அறியாமல் அவளின் கையை தன்னிரு கைகளுக்குள் பொத்தியபடி பிடித்திருந்தான்.

நர்ஸ் சொல்லிச்சென்றது போலவே சில மணி நேரங்களில் காய்ச்சலினால் உண்டான சோர்வு குறைய, கண் திறந்தவள்… பாதி படுத்த நிலையில் சாய்ந்து அமர முயற்சித்திட அவளுக்கு உதவ முனைந்த போதுதான் அவள் கரம் தனக்குள் இருப்பதையே உணர்ந்தான். அதற்காக அலட்டிக்கொள்ளவெல்லாம் இல்லை. இயல்பானது என்பது போல் அவளை அமர வைத்தான்.

“இப்போ பரவாயில்லையா?”

தலையை மட்டும் ஆட்டினாள்.

“இரு பால் வாங்கி வரேன்” என்றவன் வாங்கி வந்து கொடுத்து அவள் குடிக்கும் வரை அமைதியாக இருந்தான்.

“எப்போலிருந்து பீவர்?”

“நேத்து நைட்லேர்ந்து.”

“ஹோ…” என்றவன், “காலையிலே ஹாஸ்பிட்டல் வந்திருக்கலாமே… இப்படி படுத்திருக்கும் நிலை வந்திருக்காதே?” சற்று கடுமையாகத்தான் கேட்டான்.

அவள் அதில் அவனை மிரண்டு பார்த்தாள்.

தன்னவளின் மருண்ட விழியில் அவன் தான் கொள்ளைப்போனான்.

தன் கோபம் குறைத்தவன்,

“உன்னை இப்படி பார்க்கவும் கொஞ்சம் டென்சன் ஆகிட்டேன்” என்றான்.

அவளிடம் பதிலில்லை. அவனையே பார்த்திருந்தாள்.

வசீ வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவிட்டாலும், அவளுக்கானத் தவிப்பு, அவனின் கண்களில் அவள் கண்டுகொண்டாள்.

“அம்மா வீட்டில் இல்லை. பாட்டியை பார்த்துவரேன்னு நேத்து ஈவ்னிங் தான் இல்லத்துக்கு போனாங்க. சாதாரணக் காய்ச்சல் அப்படின்னு நானே டேப்லெட் எடுத்துக்கிட்டேன். இன்னைக்கு ஈவ்னிங் குறைஞ்ச மாதிரிதான் இருந்துச்சு. சடனா நைட் ஓவர் ஹை ஆகிடுச்சு. நானுமே எதிர்பார்க்கல. மயக்கம் வர மாதிரி ஃபீல் ஆச்சு. தனியா எழவும் முடியல, அதான் உங்களுக்கு கால் பண்ணேன்” என்று அவன் கோவப்பட்டுவிட்டானே என கோர்வையாக விளக்கம் கொடுத்தாள்.

அவனை தன் முன்னால் வரவேண்டாமென்று சொன்னவள் தான்… அவனின் அக்கறையான கடிதலிலும், தவிப்பான பார்வையிலும் மெல்ல கரைந்து கொண்டிருக்கிறாள்.

“உன் அப்பாவுக்கு கால் பண்ணி சொல்லட்டுமா?”

“வேண்டாம்.” அந்நிலையிலும் அத்தனை அழுத்தமாகக் கூறியிருந்தாள்.

“அப்போ ஓகே. பாலாவுக்கு கால் பண்ணி வரச்சொல்றேன்” என்றிட, “நீங்க… நீங்க இருக்க மாட்டிங்களா?” எனக் கேட்டவள் அவன் பார்த்த பார்வையில் நாக்கினை கடித்து அசடு வழிந்தாள்.

“பாலா எடுக்கலன்னுதான எனக்கு கால் பண்ண?” மனதில் எழுந்த உரிமை உணர்வின் உந்துதலில் கேட்டுவிட்டான்.

“நீங்க கால் அட்டெண்ட் பண்ணல, மெசேஜுக்கு ரிப்ளை பண்ணலன்னு கோவத்தில்தான், பாலாவை கால் பண்ண சொல்லுங்கன்னு மெசேஜ் பண்ணேன். அப்பவும் பாலாவுக்கு நானா கூப்பிடனும் தோணல” என்றாள். முகத்தை தொங்கப்போட்டு மேல் கண்ணால் அவனை பார்த்தவாறு.

வசீயிடம் குறுநகை. அவளின் பாவனையிலும், பேச்சிலும். ஆனால் வெளிக்காட்டிக்கொண்டால் அவன் வசீயல்லவே!

“என்னை உன் முன்னாடி வரவே கூடாதுன்னு சொல்லிட்டு, எனக்கு எதுக்கு கால் பண்ண? அதுக்குதான் அட்டெண்ட் பண்ணல” என்றவன் அசட்டையாகத் தோள் குலுக்கினான்.

அவளுக்கு அவனது செயலில் தலையிலே உருட்டுக் கட்டையால் ஒன்று போடவேண்டும் போல் தோன்றியது.

“உன் அப்பாவுக்கு தப்பாம யோசிக்கிறாய்?”

அவளின் மைண்ட் வாய்ஸினை கேட்ச் செய்தவனாக சரியாக அவளைத் தாக்கிட… பட்டென்று கண்களை மூடிக்கொண்டாள்.

அதில் வசீயின் முகம் கனிந்து விகசித்தது.

*******

அதிகாலை வரை மருத்துவமனையில் ஆதர்ஷினியுடன் இருந்தவன், அவள் உறக்கத்திலிருக்க, விசாலாட்சிக்கு அழைத்து சொல்லிவிட்டான்.

அரைமணி நேரத்தில் அவரும் மகாவுடன் மருத்துவமனை வந்துவிட்டார்.

“காய்ச்சல் தான். இப்போ குறைய ஆரம்பிச்சிடுச்சு” என்றவன் “பயப்பட ஒண்ணுமில்ல” என்று சொல்லிச் சென்றுவிட்டான்.

ஆதர்ஷினி கண் விழிக்கும் வரையிலும் கூட அவன் காத்திருக்கவில்லை.

தான் உடனிருப்பது முத்துச்சாமிக்கு தெரிந்தால் அவர் என்ன எண்ணம் கொள்வாரோ? தற்போதைக்கு அவருடன் முட்டிக்கொள்ள அவன் விரும்பவில்லை.

அதற்காவே ஆதர்ஷினியின் அன்னை மற்றும் பாட்டியை வரவழைத்தவன், அவர்கள் வந்ததும் சென்றிருந்தான்.

விசாலத்திற்கு இல்லாத ஆராய்ச்சி மகாவிற்குள்.

மருத்துவரும் நேரடியாக அவர்களிடம் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று சொல்லிச்செல்ல… ஆதர்ஷினி கண் விழிப்பதற்காக இருவரும் காத்திருந்தனர்.

மருந்தின் வீரியத்தில் ஆதர்ஷினிக்கு நல்ல ஆழ்ந்த உறக்கம்.

வெகு நேரத்திற்கு பின்னரே கண் திறந்தாள்.

தனக்கு முன்பு அமர்ந்திருந்த அன்னை, பாட்டியை தாண்டி அவளின் விழிகள் பயணித்தது.

அதிலேயே மகாவிற்குள் உருவான சந்தேகம் வலுவானது.

“வசீ எங்க பாட்டி?”

“போயிட்டாரும்மா!”

அதர்ஷினியின் கேள்வியை விசாலம் போல் மகாவால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

மகள் முழுதாக தேறி வரட்டுமென்று பொறுமையாக இருந்தார்.

உப்பளத்தில் வேலை முடிந்திட… அன்று மாலை ஆனது.

விடயம் கேள்விப்பட்டு மருத்துவமனைக்கு வந்த முத்துச்சாமி தன்னிடம் ஏன் சொல்லவில்லை என்று ஆட்டம் ஆடித் தீர்த்துவிட்டார்.

முத்துச்சாமி வந்ததுமே விசாலாட்சி புறப்பட்டிருந்தார். மருமகனாக அவர்மீது மதிப்பு, அன்பு இருந்தபோதும்… அவரால் அவரை மனிதனாக ஏற்றுக்கொள்ள முடியாது போனது.

மகா தான் முத்துச்சாமியை அடக்கினார்.

ஆதர்ஷினிக்கு பிடிக்காது என்று தெரிந்தும்… அவளிருந்த அறைக்குள் சென்றவர், அவளின் தலை வருடி ஆறுதலாய் சில கணங்கள் அருகில் அமர்ந்திருந்துதான் வெளியில் வந்தார்.

முத்துச்சாமி உள்ளே வந்ததும் கண்களை மூடியவள் தான், அவர் வெளியில் சென்ற பின்னரும் திறக்கவில்லை.

பாலா வந்து போதும் மூடியே இருந்தாள்.

“நைட் நீ தனியா கஷ்டப்பட்டன்னு மகாம்மா ஐயாவிடம் சொல்லிட்டு இருந்தாங்க, எனக்கு கால் பண்ணியிருக்கலாமே பாப்பா?” என்று பாலா கேட்டது தான் தாமதம்…

அடுத்த கணம், “உனக்கு நானே ஈசியா வழியமைத்துக் கொடுப்பேன்னு நினைச்சிட்டியா?” என அழுத்தமாக அதே சமயம் குரல் சற்றும் உயர்த்தாது கூறியிருந்தாள்.

“என்ன பாப்பா சொல்ற, எனக்கு புரியல?” என்றான் பாலா.

“புரியாது தான்” என்ற ஆதர்ஷினி, “தயவுசெய்து இங்கிருந்து போ” என்று கத்தினாள்.

ஆதர்ஷினியின் சத்தத்தில் அனைவரும் உள்ளே செல்ல…

“சிஸ்டர் இவரை முதலில் போக சொல்லுங்க” என்று நர்ஸிடம் வேண்டினாள்.

நர்ஸும் பாலாவை வெளியில் அழைத்துச்சென்றிட…

“விடு பாலா… அவள் தான் நம்மை வெறுக்குறாளே!” என்று வருத்தமாகக் கூறிய முத்துச்சாமி,

“அந்த சாமியோடு மீட்டிங் அரேஞ் பண்ணியிருக்கு. நீ போய் அதை கவனி” என்று அனுப்பி வைத்தார்.

சாமிக்கும் முத்துச்சாமிக்கும் தான் உப்பளத்தில் போட்டி. இன்று பாலா இருக்குமிடத்தில் அன்று சாமி இருந்தார். இருவரும் இணைந்து தான் தொழில் நடத்தி வந்தனர். அது வெளி வேலை, நிழல் வேலை இரண்டிலுமே. சாமி, முத்துச்சாமி இடத்திற்கு ஆசைப்பட்டு இருவருக்கும் முட்டிக்கொண்டு தனித்தனியாக செயல்பட ஆரம்பித்தனர்.

இருவரும் ஒன்றாக செய்தபோது ஆட்கள் பொதுவாக இருந்திட… இருவரும் பிரிந்ததும், அவர்களும் தங்களுக்கு இசைவான ஆள் யாரென அவரவர் பக்கம் சென்றிருந்தனர்.

எவ்வளவு முயற்சித்தும் சாமியால், முத்துச்சாமியின் இடத்தை தொட முடியவில்லை.

அப்போதிலிருந்தே சாமிக்கு முத்துச்சாமியை ஒழித்து, தான் முதன்மை வகிக்க வேண்டும் என்கிற எண்ணம் ஆழ வேரூன்றியது.

இருமுறை முத்துச்சாமியை தீர்த்துக்கட்டிட சாமி முயன்றிருக்கிறார். அதிலெல்லாம் தோல்விதான்.

‘ஒருவேளை தன்னை ஒழிக்க முடியாததால், தன்னுடன் தொழில் வைத்திருப்பவர்களை சாமி முடித்துக்கொண்டு வருகின்றாரோ’ என்ற எண்ணத்தை, தொடர்ந்து அவருடன் தொடர்புடைய ஆட்கள் இறந்து வருவது தோற்றுவிக்க சாமியுடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்திருந்தார் முத்துச்சாமி.

அதற்கு இப்போது செல்ல முடியாது என்பதால் பாலாவை அனுப்பி வைத்தார்.

மகள் அவரை வெறுத்தாலும், அவருக்கு தனக்கிருக்கும் ஒரே மகளின் மீது பிரியம் அதிகமாயிற்றே. அதனால் மருத்துவமனையிலே இருந்து கொண்டார்.

வசீக்கு அழைத்தவர், பாலவுடன் செல்லுமாறு சொல்லி வைத்ததோடு, பாலாவிடம் “வசீயை கூட்டிட்டுப்போ. அவன் தெளிவா பேசுவான்” என்று கூறினார்.

பாலாவிற்கு வசீயை அழைத்துச் செல்வதில் விருப்பமில்லை என்றபோதும், முத்துச்சாமி சொல்லியதால் அவனக்கு அழைத்து நேராக அவ்விடத்திற்கு வரச்சொல்லிச் சென்றான்.

அவ்விடம் உப்பளத்திலிருந்து சற்று தள்ளியிருந்தது. சாமிக்கு உட்பட்ட பகுதி.

நான்கு பக்கம் சுவர் கொண்ட செவ்வக வடிவத்தளம். சாமியின் ஆட்கள் ரகசியமாக தங்குவதற்கான இடம் அது.

இரண்டு ஆட்கள் மட்டும் வெளியில் நின்றிருந்தனர். சாமியின் காவலுக்கென்று பார்த்ததும் பாலாவிற்கு புரிந்தது.

“சாமி இருக்காரா?”

“ம்.”

பாலா கேட்டிட, இருவரில் ஒருவன் ஆமென்று சொன்னதோடு பாலாவை உள்ளே செல்லுமாறு கைக்காட்டினான்.

“எங்க ஆளு ஒருத்தர் வரணும்” என்ற பாலா வசீக்காக வெளியவே காத்திருந்தான்.

சில நிமிடங்களில் வசீ வந்து சேர்ந்திட,

இருவரும் உள் சென்றனர். அவர்களுடன் சாமியின் ஆட்களும்.

“உங்களோட மற்ற ஆட்கள் எல்லாம் எங்க?”

உள்ளே சிறிது தூரம் நடக்க வேண்டுமென்பதால் பாலா அவர்களிடம் பேச்சுக்கொடுத்தான்.

“எல்லாரும் எல்லா நேரமும் இங்கிருக்கமாட்டோம்” என்ற ஒருவன், “தேவையில்லாத எதையும் பேசாதீங்க” என்று சொல்ல… அதன் பின்னர் அந்த கட்டிடத்தை நெருங்கும் வரையிலும் அமைதி தான்.

“உள்ள போங்க” என்று ஒருவன் கதவினை திறக்க… நால்வரும் ஸ்தம்பித்து நின்றனர்.

பாலாவின் உடலில் அப்பட்டமான அதிர்வு.

அவனின் அதிர்வு எதனால் என்பது வசீக்குத் தெரிந்திருக்க… வழக்கமான அர்த்தப் புன்னகை அவனிடம்.

“அய்யோ ஐயா” என்று சாமியின் ஆட்கள் அருகில் சென்றிட, ஓடத் துடித்த கால்களை வெகுவாக சிரமப்பட்டு கட்டுப்படுத்தி நின்றான் பாலா.

“என்ன பாலா இப்படி ஆகிப்போச்சு?” வசீ போலி பரிதாபம் காட்டினான்.

“இனி இங்கு நமக்கென்ன வேலை” என்று வசீ முன் செல்ல… திரும்பி திரும்பி அங்கு கழுத்து அறுபட்டு இறந்து கிடந்த சாமியின் உடலை பார்த்துக்கொண்டே உடன் சென்றான் பாலா.

“யாரு இதெல்லாம் செய்யுறான்னு சீக்கிரம் கண்டுபிடிக்கணும் வசீ” என்று சொல்லிய பாலாவிடம் அத்தனை வெறி. மறைந்திருந்து தாக்குபவன் யாரென்று தெரிந்தால் அவனை அணு அணுவாய் செதுக்கிடும் வேகம்.

ஒற்றை புருவத் தூக்கலுடன் பாலாவை பார்த்திருந்த வசீயின் இதழோரம் சுழிந்திருந்தது.

விடயம் கேள்விப்பட்டு முத்துச்சாமி முன்பு போல் அதிரவெல்லாம் இல்லை. புலம்பவில்லை. பயம் கொள்ளவில்லை.

மாறாக, எதிரியின் நோக்கம் என்னவென்று கணிக்க முயன்றார்.

“என்ன ஏதுன்னு உன்னால் யூகிக்க முடியுதா பாலா?”

“இல்லை” என்ற பாலாவின் உள்ளம் உலைக்கலனென கொதித்துக் கொண்டிருந்தது.

சாமியை கொன்றவன் முத்துவை நெருங்க எத்தனை நேரம் ஆகிவிடும்.

முத்துச்சாமி மருத்துவமனையில் இருக்க, அங்கு அவரிடம் சொல்வது சரியிருக்காதென்று தங்களுடைய இடத்திற்கு அவரை வரவழைத்துதான் வசீ விடயத்தைக் கூறியிருந்தான்.

உப்பளத்தில் பதுக்கிய சரக்குகளை பாதுகாப்பாக அங்குதான் கொண்டு வந்து சேர்த்திருந்தனர்.

வசீக்கு அவ்விடத்தில் நிற்கவே நரம்புகள் புடைத்தது.

“நாம் ரொம்ப கவனமா இருக்கணும் தோணுது” என்ற முத்துச்சாமி, தள்ளிச்சென்று வழக்கமாக… தான் அழைக்கும் எண்ணிற்கு அழைத்தார்.

“இங்கு நிலைமை ரொம்ப மோசமா போயிட்டு இருக்கு. நாம் எல்லோரும் ஒண்ணுக்கூடி கட்டாயம் ஒரு முடிவை எடுத்தே ஆகணும். அந்த எதிராளி யாருன்னு கண்டறிந்தே ஆக வேண்டும்” என்று சொல்லிட,

“அதான் இரண்டு மாதத்திற்கு அப்புறம் மீட்டிங் அரேஞ்சமெண்ட்ஸ் நடந்துட்டு இருக்கே” என்றது எதிர்முனை.

“அதற்குள் எத்தனை பேர் சாவாங்களோ” என்ற முத்து, இரண்டாம் மாதம் தொடக்கத்திலே வைத்துவிடலாம்” என்றார்.

எதிர்முனையும் சிறிது யோசித்துவிட்டு சரியென்றது.

அதன் பிறகே முத்துச்சாமிக்கு மூச்சு விட முடிந்தது.

இதெல்லாம் வசீயின் கணக்கு.

என்ன தான் அவன் தனது இலக்கிற்கு மூன்று மாதங்கள் இருக்கின்றது என்றபோதும், தனக்கான சந்தர்ப்பத்தை அவனே அருகில் கொண்டு வரப்போட்ட திட்டம் தான் இது.

அவர்களில் முக்கியமானவர்கள் மர்மமான முறையில் இறந்திட… துரித நிலையில் ஒரு முடிவெடுக்க விரைந்து கூடுவர் என்கிற வசீயின் கணக்கு தப்பாகவில்லை.

பாலாவும் இவர்கள் அனைவரும் ஒன்று கூடும் நாளிற்காகத்தான் காத்திருக்கிறான்.

நம்மிலிருந்து யாராவது சாமியின் இறுதி ஊர்வலத்திற்கு செல்ல வேண்டுமென்ற பாலா, தானே சென்று வருவதாகவும் சொல்ல முத்துச்சாமி மறுக்கவில்லை.

வசீயையும் பாலாவுடன் சென்று வருமாறு முத்துச்சாமி கூறிட… பாலாவிடம் சிறு தயக்கம்.

ஆனால் வசீ அத்தயக்கத்தை பாலாவிற்கு கொடுக்க விரும்பாது,

“எனக்கு அங்கு செல்வதில் விருப்பமில்லை” என்று சொல்லிவிட்டான்.

பாலாவிற்கு எங்கோ மூலையில் சிறு நிம்மதி.

பாலா நேராக இடுகாட்டிற்குத்தான் சென்றான்.

********

மறுநாள் ஆதர்ஷினி மருத்துவமனையிலிருந்து நலம் பெற்று வீடு திரும்பியிருந்தாள்.

அன்றே மகா ஆதர்ஷினியின் திருமண விடயம் என்னவானது என்று கேட்க, இப்போது தானிருக்கும் நிலையில் மன அமைதிக்காக மகளின் திருமணத்தை எடுத்துச்செய்ய நினைத்தாலும் சூழல் அத்தனை இலகுவாக இல்லை என்பதால் முத்துச்சாமி கொஞ்சநாள் போகட்டும் என்றார்.

ஆனால் மகா இப்போதே செய்து வைக்க வேண்டுமென்று அத்தனை அடமாக நின்றார்.

அவர் மகளைப்பற்றி அறிந்துகொண்ட விடயம் அவருக்கு அத்தனை உவப்பானதாக இல்லை. மகளுக்கும் தன்னைப்போல் நேர்ந்திடக் கூடாதென்று நினைத்தார்.

“சரி உன் விருப்பம்” என்றவர், “பையன் ஓகேன்னா ஒரு மூன்று மாதங்கள் கழித்தே நாள் குறிப்போம்” என்றார்.

அச்சமயம் அங்கு வந்த வசீ…

முத்துச்சாமியின் முன் கவர் ஒன்றை வைத்தான்.

அவர் என்னவென்று கேட்டிட,

“இரண்டு பசங்களைப்பற்றி விசாரிக்க சொல்லியிருந்தீங்களே!” என மகாவை பார்த்துக்கொண்டேக் கூறினான்.

“மகாவுக்கும் தெரிய வேண்டியதுதானே சொல்லு” என்றிட,

“நீங்க விசாரிக்க சொல்லியதில், முதலாமானவனிடம் சொல்லிக் கொள்ளும்படியான குணங்கள் இல்லை. அவன்கிட்ட இல்லாத தீயப்பழக்கங்களே இல்லைன்னு சொல்லலாம்” என்றவன், “பெண்கள் பழக்கமும் இருக்கு” என்றான்.

“நான் வெறும் வாய் வார்த்தையா விசாரித்து சொல்லல. அதற்கான ஆதாரங்கள் எல்லாம் இதில் இருக்கு” என்று அவன் வைத்த உரையைக் காட்டினான்.

“இரண்டாவது பையன் ஓகேதான். அவன் அப்பா மூலம் ஆரம்பித்த பிஸ்னெஸில் நல்லாவே முன்னேறிட்டு இருக்கான். வீக்கெண்ட் பப் போறான். அதுவும் கொஞ்ச நேரம் நண்பர்களுடன் அரட்டை, வெறும் ஆட்டம் மட்டும் தான்” என்றவன் தன் வேலை முடிந்தது என சென்றுவிட்டான்.

இரண்டாவதாக வசீ சொல்லிய பையனின் புகைப்படத்தை மகாவிடம் காண்பித்த முத்துச்சாமி,

“இவன் ஓகேவான்னு பாரு” என்றதோடு…

“தர்ஷியிடம் காட்டி என்ன சொல்றான்னு சொல்லு. பிடிச்சிருக்கு சொன்னா அடுத்து என்னன்னு பார்ப்போம்” என்றார்.

கையிலிருந்த படத்தை பார்த்தவருக்கு தன்னுடைய மகளுக்கு சரியான பொருத்தம் என்று நினைத்தார்.

‘நிச்சயம் இதற்கு அவள் ஒத்துக்கொள்ளப் போவதில்லை’ என்ற எண்ணத்தோடு ஆதர்ஷினியிடம் சென்றவருக்கு அவள் சொல்லிய பதில் ஆச்சரியத்தைக் கொடுத்தது.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
17
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment