Loading

உயிர் உறை 15

நேசப்பிழை 8

கோவை குணசேகரன் இறப்பு செய்தி பேரிடியாக முத்துச்சாமியின் தலையில் இறங்கியது.

அதனை கிரகித்து அவர் வெளியில் வருவதற்கு முன் கமிஷ்னர் சேதுராமனின் மரணம் முத்துச்சாமியின் இத்தனை வருட நிழல் உலகத்தை ஆட்டம் காண வைத்தது.

குணசேகரினின் உடலில் சிறு கீறல் கூட இல்லாததாதல் உடற்கூறு ஆய்வின் முடிவில் தான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியுமென தகவல் கிடைத்திருக்க முத்துச்சாமி இடிந்து போய் அமர்ந்திருந்தார்.

குணசேகரனுக்கு அனுப்பி வைத்தது பாதி வழியிலேயே திரும்பி வருகிறது. அதனை வேறு கை மாற்றும் வரை தலைவலி தான்.

சேதுராமன்… மாசிலாமணி வீட்டின் காமிரா காணொளி பதிவு அடங்கிய ஹார்ட் டிஸ்கினை அவரிடம் தான் முத்துச்சாமி கேட்டிருந்தார். அத்தோடு இம்முறை அவருக்கும் இரு மடங்கு சரக்கு சென்று சேர்ந்திருக்கிறது. அது எப்படி எந்நிலையில் இப்போது உள்ளது என்கிற விவரமும் தெரியாது சுவற்றில் முட்டிக்கொள்ளும் நிலை.

செல்லும் இடமெல்லாம் யாரோ கண்ணி வைத்து தன்னுடைய சாம்ராஜ்யத்தை கொஞ்சம் கொஞ்சமாக தகர்ப்பது போல் இருந்தது. இத்தனை வருடத்தில் இதுபோன்று என்றுமே நடந்தது இல்லை.

முத்துச்சாமிக்கு தனக்கு துணை நின்றவர்கள் எல்லாம் இறப்பதில் வருத்தமில்லை. அவருடைய கவலையெல்லாம் அவர்களிடம் சேர்ந்த, சேர்பித்த பொருளின் நிலை என்னவென்று தெரியாதது தான்.

அதன் மதிப்புகள் சொல்ல முடியாதவை. அந்த தொழில் உலகின் முடி சூடா மான்னனாக அவர் வலம் வருவதே அவரிடம் இருக்கும் பணத்தின் மதிப்பை வைத்துதானே. இன்று பல கோடிகளில் அவரின் நஷ்டம் கழுத்தை நெறிக்கிறதே!

நிலை குலைந்து அமர்ந்துவிட்டார்.

“ஐயா வருத்தப்படாதீங்க” என்ற பாலா…

“கமிஷனர் ஹார்ட் டிஸ்க் எங்கே வச்சிருக்காருன்னு தெரியணும். அதை முதலில் கண்டுபிடிப்போம்” என்று சொல்ல…

“இல்லை வேண்டாம்” என்றான் வசீ.

ஏன் என்பதைப்போல் முத்துச்சாமி அவனை ஏறிட்டார்.

“நீங்க கொஞ்ச நாளுக்கு எல்லாத்தையும் நிறுத்திட்டு, உங்க பொண்ணு கல்யாணத்தில் மட்டும் கவனம் வைய்ங்க” என்றான்.

“என்ன வசீ எங்க எல்லாரையும் உன் வழிக்கு கொண்டு வரலாம் பார்க்குறியா?”

“என்மேல உனக்கு சந்தேகம் வந்து ரொம்ப நாளாகுதுன்னு தெரியும் பாலா” என்ற வசீ, “நம்பிக்கை இல்லாதவரிடம் பேச எனக்கொன்றும் இல்லை” என்றான்.

வசீ இப்படி வெடுக்கென பேசுவான் என்று பாலா எதிர்பார்க்கவில்லை. வசீயை கூர்மையாக நோக்கினான்.

‘உன்னை எனக்குத் தெரியும் போடா’ என்ற மிதப்பான பார்வை வசீயிடம்.

பாலாவை பற்றி அறிந்து கொண்டதும்…

‘நீயும் இவ்வளவு தானா?’ என்கிற கீழான பார்வைதான் வசீக்கு.

“வசீ என்ன சொல்றான் கேட்போம் பாலா” என்ற முத்துச்சாமி பாலாவை அமைதியாக இருக்கக் கூறினார்.

“நீங்க ஆரம்பத்திலிருந்து நடந்ததை வரிசையா நினைத்து பாருங்கள்” என்று ஆரம்பித்த வசீ, “நீங்க நெருங்க நினைக்கும் ஒவ்வொருவரும் தான் வரிசையா இறந்து வர்றாங்க. வழக்கமா அதிகளவில் நீங்க டீலிங் வைக்கும் ஆட்கள். அத்தோடு சட்ட உதவியா இருந்த கமிஷனர் உட்பட யாவரும், இப்போ நீங்க பொருள் கை மாற்றியவர்கள். வேற யாரையாவது அனுக நினைத்தால் அவர்களுக்கும் இந்தநிலை ஏற்படலாம்” என்று விளக்கமாகத் தெரிவித்தான்.

“அதெப்படி வசீ எல்லாத்தையும் பக்கத்திலிருந்து பார்ப்பதை போல்… இவ்வளவு தெளிவா சொல்ற?”

பாலா அன்று வசீயின் மீதான சந்தேகத்தை வெளிப்படையாக சொன்னது முதல், கேரளாவிற்கு சென்ற லாரி விபத்தில் மாட்டி எவ்வித சேதாரமுமின்றி வசீயின் மூலம் திரும்பி வந்தது… முத்துச்சாமியின் பார்வை வசீயின் மீது பெருமையாக படிந்தது என அன்றிலிருந்து பாலாவின் கண்ணோட்டம் வசீயின் மீது வேறுவிதமாக மாற்றம் கொண்டுள்ளது.

பாலா மற்றும் வசீக்கு இடையே பனிப்போர் உருவாகியிருந்தது.

“கொஞ்சம் உட்கார்ந்து யோசித்தாலே நம்முடைய எதிராளி என்ன நினைக்கிறான், செய்றான் நமக்கே புரியும். இதுக்கு எதிராளியா அவன் பக்கம் நின்னு பார்க்க வேண்டிய அவசியமில்லை” என்று பாலாவிற்கு கொட்டு வைத்த வசீ, “நான் எனக்குத் தோன்றியதை சொல்லிட்டேன். அத்தோடு உங்க விருப்பம்” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

முத்துச்சாமி வசீ சொல்லியதை சிந்திக்கத் துவங்கினார்.

“வசீ ஏதோ சொல்றான்னு நாம் வேலையெல்லாம் நிறுத்தி வைத்தால், பொருளெல்லாம் தேங்கி போயிடும். எத்தனை நட்டம் வரும். எதிரிக்கு பயந்து நாம அமைதியா இருக்கணுமா?” என்று முத்துச்சாமியிடம் வினவினான் பாலா.

அவரிடம் பதிலில்லை. அமைதியாக நாடியில் விரல் வைத்தவராக அமர்ந்திருந்தார்.

“எனக்கென்னவோ வசீ சொல்ற மாதிரி கொஞ்சநாள் அமைதியா இருக்கலாம் தோணுதுங்க ஐயா. பொருளெல்லாம் இருக்க வீரியம் தானே. ஒண்ணும் கேட்டுப்போறது இல்லையே” என்று வசீயின் கருத்தை முன்வைத்து வாசு பேசிட…

“ஐயாவுக்கே யோசனை சொல்லும் அளவுக்கு நீ பெரியாளாகிட்டியோ?” என்று சினந்தான் பாலா.

“யோசனை சொல்ல பெரியாளா இருக்கணும் அவசியமில்லை பாலா” என்ற வாசு, “வசீ என்ன சொன்னாலும் அதில் நமக்கு லாபமுன்னு தானே ஐயா சொல்வீங்க. இப்போ மட்டும் ஏன் தயங்குறீங்க. நம்ம தொழிலில் பொறுமை முக்கியமுன்னு சொல்வீங்களே, அதையேதான் வசீயும் சொல்றான். பொறுமையா இருங்கன்னு” என்று வெளியேறிவிட்டான்.

“இந்த பயல் அந்த வசீக்கு ஒத்து” என்றான் குமார்.

“செத்த அமைதியா இருக்கீங்களா” என்று இரைந்த முத்துச்சாமி… “எனக்கும் வசீ சொல்றதுதான் சரின்னு படுது” என்று சொல்லி முடிப்பதற்குள்,

“என்னங்கய்யா அவன் சொல்றான்னு..” என்று பாலா இழுத்தான்.

நடந்து கொண்டிருக்கும் கொலைகளுக்கும் பாலாவுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. ஆனால் இதனை வைத்து அவன் வகுத்து வைத்திருக்கும் திட்டமே வேறாயிற்றே!

அதற்கு முட்டுக்கட்டையிட்ட வசீயின் மீது பாலாவுக்கு அத்தனை ஆத்திரமாக வந்தது.

நேற்று கேரளாவில் ஒரு எண்ணிற்கு அழைத்திருந்த முத்துச்சாமி மீண்டும் அவ்வெண்ணிற்கு அழைத்தார்.

“உங்க மாநிலத்தில் என்னதான் நடந்துட்டு இருக்கு. மற்ற இடத்திலிருக்கும் நம் ஆட்கள் எல்லோரும் பயப்படுறாங்க” என்று அவர் பேசுவதற்கு முன் அந்தப்பக்கமிருந்து குரல் ஒலித்தது.

“இப்போதைக்கு எல்லாத்தையும் நிறுத்தி வைப்போம். புட் ப்ரோடாக்ட்ஸ் மூலமாக விநியோகம் செய்வது மட்டும், கடைகளில் பொருளின் ஸ்டாக் இருக்கும்வரை நடக்கட்டும். பின்னர் நம் கூட்டம் முடிந்ததும் பார்த்துக்கொள்ளலாம்” என்றார் முத்துச்சாமி.

“என்னது… கூட்டமா?” என்று அதிர்ந்த எதிர்முனை… “அதைப்பற்றி யோசிப்போமென்று தானே சொல்லியிருந்தீங்க!” என்றது.

“கண்டிப்பா பிக்ஸ் பண்ண தேதியில் கூட்டம் நடந்தே ஆகணும். எல்லோரும் ஒரேயிடத்தில் கூடிட இதைவிட நல்ல சந்தர்ப்பம் வேறு அமையாது. பயந்து இருக்கிறவங்களுக்கு தைரியம் கொடுக்கணும். கண்ணில் சிக்காம மறைந்து தாக்குறவன் எவன்னு தெரியணுமுன்னா கண்டிப்பா இது நடந்தே ஆகணும். எல்லோரும் ஒரேயிடத்தில் இருக்கப்போறமென்று தெரிந்தால் அவன் வருவான் தானே! அவனை பிடிக்க இதைவிட வேறுவழியில்லை” என்றவர் பேசிய ஒன்றும் பாலாவுக்கு கேட்கவில்லை.

பேசி முடித்தவர் பாலாவை பார்த்து அர்த்தமாக சிரித்தார்.

அவர் சிறிப்பிற்கான காரணம் விளங்கவில்லை என்றாலும், பாலா ஆமோதித்து தலையசைத்தான்.

பாலாவின் உள்ளே அவர் யாரிடம் என்ன பேசியிருப்பார் என்கிற எண்ணம் ஓடியது.

‘எனக்குத் தெரியாமல் யார்?’

வஞ்சம் வைத்திருப்பவன் வென்றிடுவானா?

*****

வசீகரன் அங்கிருந்து கிளம்பியிருந்தாலும், அவன் வீட்டிற்கு செல்லவில்லை.

நேற்றைய தினம் அவனுக்கு இருமுறை அழைப்பு விடுத்த தெரியாத புதிய எண்ணிலிருந்து,

“உங்களை சந்திக்க விரும்பும்… உங்களைப்பற்றி அறிந்த ஒருவன்” என்று குறுந்தகவல் வந்திருந்தது.

வசீ தகவலை பார்த்துவிட்டான் என்றதுமே அடுத்த நொடி குறிப்பிட்ட இடத்தினை சொல்லி அங்கு வருமாறு அனுப்பினான்.

‘என்னைப்பற்றி… யார்?’ என்கிற யோசனையோடு சென்ற வசீ தன்னை பின் தொடர்ந்த வாசுவை கவனிக்கத் தவறினான்.

வாசு வசீயை சந்தேகித்து பின் தொடரவில்லை. முத்துச்சாமியிடம் பேசிவிட்டு வந்தவன், வண்டியை வேகமாகக் கிளப்பிக்கொண்டு போகும் வசீயைத்தான் பார்த்தான். அவனின் வேகம், வாசுவுக்கு கோபமாகத் தெரிந்திட… வசீயை சமாதானம் செய்திட வேண்டுமென்ற எண்ணத்தில் தான் பின் சென்றான். ஆனால் அங்கு அவனுக்கு காத்திருந்தது பெரும் அதிர்ச்சி.

அந்த இடத்திற்கு வசீ சென்று சேர்ந்ததும், அவனின் தோள் தொட்டு தன்னை யாரென்று அடையாளம் காட்டிக்கொண்டது வேறு யாருமல்ல, பூமிகாவின் கணவன் சூரஜ்.

வசீக்கு பார்த்ததும் சூரஜ்ஜை அடையாளம் தெரிந்தது.

“நீங்க சூரஜ் தானே?”

“பரவாயில்லையே ரவுடி சாருக்கு என்னையெல்லாம் நினைவிருக்கே!” சூரஜ் ரவுடி என்பதில் அழுத்தம் கொடுத்துக் கூறினான்.

இந்த நேரத்தில்தான் வசீயை அந்த பெரிய பூங்காவின் உயர்ந்த மரத்திற்கு பின் நின்றிருந்த வசீயை அடையாளம் கண்டு அருகில் வந்தான் வாசு.

“நாம இப்படி உட்கார்ந்து பேசுவோம்.”

கல் மேடையை வசீ காண்பித்திட, இருவரும் அமர்ந்தனர். அவர்களுக்கு பின்னால் சில அடி தூரத்தில் வந்து கொண்டிருந்த வாசுவை வசீ பார்க்கவில்லை.

கிட்ட நெருங்கிவிட்ட வாசுவுக்கு சூரஜ் பேசியது தெளிவாகவே செவி நுழைந்தது.

………..?

சூரஜ் வசீயிடம் கேட்ட கேள்வியில் வாசு மின்னல் தாக்கியது போல் உடல் முழுவதும் அதிர்வலை பரவ வேரோடி நின்றான்.

………….!

சூரஜ்ஜிற்கு வசீ கொடுத்த பதிலில் கண்கள் மிரள, மரத்தின் தண்டில் சாய்ந்தவனாக அவர்களுக்கு தன்னை மறைத்துக்கொண்டான்.

மேலும் சில நிமிடங்கள் அவர்களது பேச்சு நீடித்திட, வாசு மூச்சுவிடவே மறந்தான்.

“நான் யாரிடமும் சொல்லமாட்டேன் வ்…”  என்று சூரஜ் தடுமாற,

“வசீ… வசீகரன்” என்றான் மென் புன்னகையோடு.

“நான் உங்களை அங்கு எதிர்பார்க்கவேயில்லை. பார்த்ததும் அப்படியொரு ஷாக்” என்று மண்டபத்தில் வசீயை பார்த்ததைக் கூறிய சூரஜ்,

“நீங்க இங்கு… அதுவும் முத்துச்சாமியிடம் ரவுடியா… ஏதாவது காரணம் இருக்கும் தெரிந்துதான்” என்று வார்த்தையை முடிக்காது ஏதோ நினைவு வந்தவனாக,

“ஆதர்ஷினி லவ்ஸ் யூ மேட்லி” என்று ஆதர்ஷினிக்கு தான் எந்த வகையில் நெருக்கம் என்றதோடு, அன்று ஆதர்ஷினிக்கும் பூமிக்கும் நடந்த வாதத்தை அப்படியேக் கூறி, “உங்களைப்பற்றி தெரிந்ததை சொல்லாமவிட்டேன்” என்றான்.

“நீங்க சொல்லாம விட்டதே நல்லது. இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கு” என்ற வசீ “இப்போதைக்கு தெரியாமல் இருப்பதே நல்லது” என்றான்.

“ஷ்யூர்… கண்டிப்பா” என்று வசீயின் கை பிடித்து உறுதி கொடுத்தான் சூரஜ்.

“நேரில் பார்த்து பேசினால் எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்குமென்று தான் இப்படி வரவழைக்க வேண்டியதாப்போச்சு” என்று சூரஜ் தன்னுடைய செயலுக்கு விளக்கம் கொடுக்க…

“இட்ஸ் ஓகே” என்று அதனை ஒதுக்கினான் வசீ.

“இதுவே நம் சந்திப்பு கடைசியா இருக்கட்டும். ஃபியூச்சரில் சந்திக்கலாம்” என்று வசீ சூரஜ்ஜிற்கு விடை கொடுத்தான்.

வசீயிடம் கை குலுக்கிய சூரஜ்,

“உண்மை தர்ஷிக்கு தெரிந்தா ரொம்ப சந்தோஷப்படுவாள்” என சொல்லிச் சென்றான்.

‘அவளோட ஃபிரண்டுகிட்ட என்னை விட்டுக்கொடுக்காம பேசிட்டுதான், என்கிட்ட செட்டாகாதுன்னு மேடம் டயலாக் விட்டாங்களா? என்னைத்தேடி… நான் வேணுன்னு நீயே வருவ ஆது… ஆதர்ஷினி. வரவழைக்கிறேன்’ என்று ஆதர்ஷினியின் காதலை பற்றி சூரஜ் சொல்லிச் சென்றதை நினைத்து தனக்குள் தன்னவளிடம் சபதம் ஏற்றான்.

ஆதர்ஷினியின் நினைவில் தன்னை சற்று இளகுவாக உணர்ந்தவன், திரும்பாமலே…

“வெளிய வா வாசு” என்று அழைத்திருந்தான் வசீகரன்.

***************

வாசுவிற்கு பயத்தில் தொண்டைக்குழி ஏறி இறங்கியது.

அச்சத்தோடு தயங்கி தயங்கி முன் வந்து நின்ற வாசுவின் தோளில் தட்டிய வசீ…

“ரிலாக்ஸ் மேன்… போகலாமா?” என்று நகர்ந்தான்.

“நான் யார்கிட்டவாது சொல்லிட்டா?”

வசீ தன்னை ஒன்றும் சொல்லவில்லை… தனக்கு உண்மை தெரிந்திட, பிறரிடம் சொல்லக்கூடாது என்று மிரட்டவோ இல்லை. அதனால் தைரியம் வரபெற்றவனாக வினவினான் வாசு.

“சொல்ல நினைக்கிறவன் கேட்கிட்டு நிக்கமாட்டான்.”

வசீயின் பதிலில்,

“நான் சொல்லமாட்டேன்னு உங்களுக்குத் தோணுதா?” எனக் கேட்டான் வாசு.

“உன் திடீர் மரியாதை பன்மையிலேயே தெரியுதே!”

“வசீ…” என்ற வாசுவிற்கு அடுத்து என்ன பேசுவது கேட்பது என்றே தெரியவில்லை.

“அவனுங்களுக்குத் தெரிஞ்சா அவ்வளவு தான்” என்றான். வாசுவின் முகத்தில் தான் எத்தனை பயம். அவனின் நெஞ்சை யாரோ கவ்வி பிடிப்பதைப்போல் உணர்ந்தான்.

“இன்னும் த்ரீ மன்த்ஸ். எல்லாம் முடிஞ்சிடும்” என்றான் வசீ.

“எதுக்கும் கொஞ்சம்… பார்த்து சூதானமா இரு வசீ” என்றான்.

“அதான் இப்போ என் துணைக்கு நீயிருக்கியே!” என்று வசீ அவன் தன் பின்னால் தொடர்ந்து வந்ததை குறிப்பிட்டு சொல்ல…

“சந்தேகம் கொண்டு வரல. கோபமா போறியேன்னு வந்தேன்” என்று முகத்தை சுருக்கிய வாசுவின் தோள் மீது கைபோட்டு நடக்கத் துவங்கிய வசீ,

“இதுக்காக நான் இழந்து நிற்பது கொஞ்சமில்லை வாசு. முழுசா முடிக்காம ஓயமாட்டேன்” என்றான். வசீயின் குரலில் இருந்தது வேட்டையாடத் துடிக்கும் சிங்கத்தின் கர்ஜனை. எதிராளியை அந்த ஒலியே நடுங்க வைத்திடும்.

“இதெப்படி உங்களால் முடியுது? இப்படி எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாம” என்ற வாசு, “உங்க இடத்தில் நானிருந்திருந்தா, இத்தனை தூரம் இறங்கி செய்திருக்கமாட்டேன். ஏன் இந்த இடத்திற்கு இவ்வளவு தூரம் அவர்களுக்கு இணையா வந்திருக்கமாட்டேன்” என்றான்.

வசீயிடம் மௌனப் புன்னகை.

“உங்க இந்த சிரிப்பிற்கான அர்த்தம் இப்போ தான் புரியுது. இது எதிராளிக்கான எச்சரிக்கை விடுத்தல் என்று.” வாசுவின் முகம் தெளிவடைந்திருந்தது.

இத்தனை நாட்கள் கெட்டது மட்டுமே செய்திடும் இடத்தில் இருந்தாலும், அவர்களிலிருந்து வசீ மட்டும் எப்படி மாறுபட்டு இருக்கிறான் என்பதற்கான காரணம் தெரிந்த பின்னர், வாசுவுக்கு ஒரு நிம்மதி. தன்மீதான வசீயின் அக்கறையெல்லாம் அவனது இயல்பான குணத்தால் என்று நினைக்கும் போது, வாசுவுக்கு வசீயின் மீது மதிப்பு உயர்ந்தது.

தனக்காக வசீ இருப்பான் என்ற எண்ணமே வாசுவுக்கு அமைதியை கொடுத்தது.

“கஷ்டப்பட்டு மரியாதையா பேசுறேன்னு நினைக்கிறேன்!” வண்டியில் அமர்ந்தவனாக வசீ சொல்லிட,

“நீங்க யாருன்னு தெரிந்த பிறகு மனசில் தானா மரியாதை வருது. ஆனால் இத்தனை நாள் பழக்கம் நண்பனா உரிமை காட்ட செய்யுது” என்று தன் மனதை வெளிப்படையாக பகிர்ந்தான் வாசு.

“நீ எப்பவும் போல என்கிட்ட சாதாரணமா உன் இயல்பில் இரு வாசு” என்ற வசீயை அணைத்து விடுத்தான் வாசு.

நண்பனாக வாசு கொடுத்த அந்த அணைப்பு வசீக்கு வேறொருவரை நினைவுப்படுத்தியது.

அவரின் பெயரை வசீயின் மனம் நட்பாய் கூறி பார்த்தது.

“பாலாவுக்கு உன்மேல சந்தேகம்” என்று இன்று வசீ வெளியேறிய பின்னர், பாலா முத்துச்சாமியிடம் பேசியதைக் கூறினான்.

“அதை அவன் நேரடியாவே என்கிட்ட சொல்லிட்டான்” என்ற வசீ மறந்தும் பாலாவைப்பற்றி தான் அறிந்து கொண்டதை வாசுவிடம் சொல்லவில்லை.

“சரி கிளம்பலாம்” என்ற வசீ வண்டியை ஸ்டார்ட் செய்ய, அவனை தடுத்த வாசு ஏதோ நினைவு வந்தவனாக,

“உனக்கும் நடக்கும் கொலைகளுக்கும் சம்மந்தம் இல்லையே?” என்று கேட்டிட, ஆமாம் இல்லையென எல்லா பக்கமும் தலையை உருட்டிய வசீயிடம் அப்படியொரு சிரிப்பு.

“இந்த சிரிப்புக்கு உண்மையில் எனக்கு அர்த்தம் விளங்கல” என்ற வாசு, “ரெண்டு நாள் நைட் நீ அப்ஸகாண்ட் ஆனதுல நீதான்னு தோணுது” என்றான் உறுதியாக.

“அப்படியும் வச்சிக்கலாம்” என்ற வசீ வண்டியை இயக்கியிருந்தான்.

வசீயின் வேகத்திற்கு ஈடுகொடுத்து வாசுவும் தன்னுடைய வேகத்தை அதிகரித்து, சாலையில் வசீக்கு இணையாக வந்து சேர்ந்தான்.

“ப்ளீஸ் சொல்லு வசீ. தலை வெடிச்சிடும் போல” என்று பாவமாகக் கேட்டான். உண்மையை தெரிந்துகொள்ள வேண்டுமென்கிற எதிர்பார்ப்பு அவனிடத்தில்.

“இதுவரை நீ தெரிந்து கொண்டதே அதிகம் வாசு…” வசீ அவனை முந்தியிருந்தான்.

மீண்டும் வாசு வசீயை பிடித்திருந்தான்.

“இதற்கு மேல் தெரிந்து கொண்டால், என்மீதான உன்னுடைய பார்வை மாற்றமே மத்தவங்களுக்கு என்னை காட்டிக்கொடுத்திடும்” என்ற வசீ வண்டியை முடுக்கியிருந்தான்.

வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் வாசு வசீயை பார்ப்பதும் தயங்குவதுமாக இருந்தான்.

கண்டுகொண்டாலும், ஏனென்று வசீ கேட்டுக்கொள்ளவில்லை.

இருவருக்குமான தேநீருடன் வசீயின் அருகில் அமர்ந்த வாசு, வசீயின் கையில் ஒரு கோப்பையை அளித்திட…

“என்ன கேட்கணும்?” என்றான் வசீ.

“உன்னைப்பற்றி தெரிஞ்சுகிட்டதுக்கு என்னையும் போட்டுதள்ளிடுவன்னு நினைச்சேன். அப்படி எதுவும் பண்ணிடமாட்டியே?” என்று வினவிய வாசு, “உனக்கே தெரியும், நான் அடிதடியை தவிர வேறெதுவும் செய்ததில்லை. உப்பளத்தில் நடக்கும் மர்மமான விஷயம்கூட எனக்குத் தெரியாது. அதை நினைவு வச்சிக்கோ” என்றான்.

வசீ வெடித்து கிளம்பிய சிரிப்பை கட்டுப்படுத்தாது வாய்விட்டு சிரித்தான்.

அதில் கடுப்பாகிய வாசு,

“என் பயம் எனக்கு. உனக்கு சிரிப்பா இருக்கா?” என்று முறைத்துக்கொண்டு கேட்க, அப்போதும் வசீ சிரிப்பை நிறுத்தவில்லை.

“நீ சிரிச்சாலே எனக்கு பயம் தான். கொஞ்சம் நிறுத்துடா” என்று வாசு கெஞ்சிய பின்னரே வசீ அமைதியாகினான்.

“நீயொரு அப்பாவின்னு தெரியும் வாசு. உன்னுடைய சூழ்நிலை உன்னை இங்கு கொண்டுவந்து சேர்த்திருச்சு” என்ற வசீ… “நீ இதிலிருந்து வெளியில் போகனும் நினைக்குறன்னும் எனக்குத் தெரியும். திருந்தி வாழ நினைக்குற எல்லாருக்குமே ஒரு வாய்ப்பு இருக்கு. அதனால், என் டார்கெட்டில் நீயில்லை” என்று வாசுவின் நெஞ்சில் மழையை பொழிந்தான் வசீ.

வாசுவிடம் ஆசுவாசமான சுவாசம்.

“என்னடமிருந்து விலகியே இரு வாசு. இன்னைக்கு எனக்கு சப்போர்ட் செய்து முத்துச்சாமியிடம் பேசியதுபோல் வேறெப்போதும் பேசிடாதே. குறிப்பா பாலா முன்பு. நான் யாருன்னு தெரிந்த பின்னர், அது உனக்கு ஆபத்தாக முடியும்” என்று அவனில் அக்கறை கொண்டவனாக வசீ எடுத்துக் கூறினான்.

வாசுவிடம் வசீயின் பேச்சினை ஏற்றுக்கொண்ட பாவனை.

“இப்போ எனக்கு எல்லாம் புரியுது. நீ முத்துச்சாமியை ஐயா என்று அழைக்காததற்கும், அவர் வீட்டில் தண்ணீர் கூட குடிக்காது தவிர்ப்பதற்குமான காரணங்கள்” என்ற வாசு, “லவ் மட்டும் அவர் பொண்ணு மேல எப்படி?” என்று குறுகுறுப்புடன் வினவினான்.

“இதையும் கேட்டுட்டியா?”

“கேட்பதை முழுசா கேட்டுட்டால் பின்னாடி சந்தேகம் வராது பாரு” என்ற வாசு வசீயிடம் சில அடிகளை பரிசாகப் பெற்றுக்கொண்டான்.

“எல்லாத்தையும் ஒரே நாளில் தெரிஞ்சிக்கனும் நினைக்காதடா” என்ற வசீ, அருகில் கிடந்த துண்டால் வாசுவின் தோளில் மீண்டும் அடித்தபடி எழுந்து சென்று…

கிச்சனில் தன்னுடைய கோப்பையை கழுவி வைத்துவிட்டு வந்தான் வசீ.

சோபாவின் மீதிருந்த வசீயின் அலைப்பேசி தகவல் வந்திருப்பதாக ஒலி எழுப்பியது அக்கணம்.

திறந்து பார்க்க…

ஒரு பெயரும், அப்பெயர் பற்றிய தகவல்களும் இருந்தன.

வசீயின் முகம் யோசனையானது. முகம் தீவிர பாவனை காட்டியது.

“என்னாச்சு வசீ?”

அவனையே பார்த்திருந்த வாசு பதற்றம் கொண்டவனாக வசீயின் அருகில் சென்றான்.

“நத்திங்” என்ற வசீக்கு அடுத்து என்ன என்கிற குழப்பம்.

அமைதியாக கண்களை மூடிக்கொண்டு அமர்ந்துவிட்டான். சில நிமிடங்களில் கண்களை பட்டென்று திறந்த வசீயிடம் அத்தனை தெளிவு.

எல்லாவற்றையும் ஒரே நாளில் முடித்துவிடும் வெறி. அது வசீயின் முகத்தில் பிரதிபலித்தது.

“எதுவாக இருந்தாலும் அதீத கவனத்தோடு செய் வசீ.” வசீயின் திட்டம் என்னவென்று அறிந்திடாத போதும், அவனின் முகம் காட்டிய தீவிரத்தில் அவன்மீது நலன் கொண்டவனாக வாசு கூறிய கணம்,

“அப்படியென்ன செய்யப்போறான்?” என்று கேட்டபடி பாலா வர, அவனைத் தொடர்ந்து குமார்.

வாசு தடுமாறிட…

“தர்ஷியை மீட் பண்ணலாம் இருக்கேன். பொம்பள புள்ள விஷயம். அதான் கவனமா செய்ய சொன்னான்.” எவ்வித தடுமாற்றமும் இன்றி மொழிந்த வசீ, அங்கு நிற்காது அறைக்குள் சென்றுவிட்டான்.

அலைபேசியை எடுத்தவன்,

முதல் நாள் வசீயின் மொபைலில் இருந்து யாருக்கோ முத்துச்சாமி பேசியதை கால் ரெக்கார்டாரில் மீண்டும் கேட்டு, தனக்கு வந்திருந்த தகவலை திரும்ப ஒருமுறை பார்த்து ஆராய்ந்தான்.

ரெக்கார்டர் பதிவில் முத்துச்சாமியை அடுத்து ஒலிக்கும் இன்னொரு குரல் வசீக்கு நன்கு பரீட்சயமானது. அக்குரலை என்றுமே அவனால் மறந்திட முடியாது. அதற்கான வலுவான காரணம் வசீயிடம் உள்ளது. அதனை நாம் தெரிந்துகொள்ளும் காலம் இதுவல்ல.

அறையின் கதவினை உள்பக்கமாக தாழிட்டவன்,

எப்போதும் அவனை அழைக்கும் ரகசியமான நபருக்கு அழைத்திருந்தான்.

“இந்த தகவல் உண்மையானதா?”

“எஸ்… பட் அவன் யாருன்னு கெஸ் பண்ணவே முடியல? இதுல நானெப்படி இறங்கி வேலை பார்ப்பதும் புரியல” என்றது எதிர்முனை.

“ரொம்ப குழப்பிக்காதே” என்ற வசீ, “நான் சொல்லும் ஆளை தனியா ஆள் வைத்து கண்காணித்துப் பார்” என்று அந்நபர் யாராக இருக்குமென்று தனக்கிருக்கும் யூகத்தை வைத்துக் கூறினான்.

“ஆர் யூ ஷ்யர்?”

“என்னோட கெஸ் தப்பாகாது” என்ற வசீயின் உறுதியே இது உண்மையாக இருக்குமென்று வலியுறுத்தியது.

“அப்புறம்” என்ற வசீ, சூரஜ் மற்றும் வாசுவைப்பற்றி தெரிவித்தான்.

“உனக்கு சொல்ல வேண்டியதில்லை. இருந்தாலும்…”

“புரியுது” என்றதோடு வசீ முடித்துக்கொண்டான்.

அடுத்து ஏதோ வசீ பேச முற்பட…

“போதும் நிறுத்துடா… எப்போ பாரு கொலை, கொள்ளைன்னு. என்னைக்காவது சிரிச்சு பேசுரியா நீ.”

“அதுக்கெல்லாம் இப்போ நேரமில்லை.” இப்போதிருக்கும் நிலையில் ஆற அமர ஜாலியாக பேசுவது ஒன்றுதான் குறைச்சல் எனும் விதமாக கடுப்பாக மொழிந்தான் வசீ.

“லவ் பண்ண மட்டும் நேரமிருக்கோ?” வசீக்கு மேல் சுள்ளென்று வந்தது வார்த்தை.

“என்ன வேவு பாக்குரியா?”

“இல்லையே!”

“பார்த்தாலும் எனக்கு கவலை இல்லை. வேவு பார்ப்பவனையும் சேர்த்து போட்டுதள்ளிட்டு போயிட்டே இருப்பேன்.”

“ஹேய்… எப்பா சாமி, நான் சும்மா தான் போட்டு வாங்குனேன். நீதானே அந்த ஆளு முத்துச்சாமி பொண்ணு மேல் ஏதோ இண்ட்ரெஸ்ட் அப்படின்னு சொன்ன… அதை வச்சு கேட்டேன்.” சமாதனமாக குரல் வந்தது.

“இப்போ இதை சொன்னா உனக்கு புரியாது. புரியும் அப்படின்னு எனக்கு தோணும் போது சொல்றேன்” என்ற வசீ, ” இன்றிலிருந்து சரியாக அறுபத்தி எட்டாவது நாள் புல் ஸ்டாப் வச்சிடலாம். என் கையில் கூண்டோடு மாட்டன்னே ஒண்ணு கூடுறானுவ” என்ற வசீயின் கண்கள் வேங்கையின் கூர் விழிகளுக்கு இணையாக பளபளத்தது.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
20
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்