Loading

உயிர் உறை 14

நேசப்பிழை 7

அந்நேரத்தில் யாருமில்லாத இல்லத்தின் தோட்டப்பகுதிக்கு வந்த ஆதர்ஷினி… சட்டென்று துளிர்த்துவிட்ட கண்ணீரை கட்டுப்படுத்தவே நினைக்கவில்லை.

இத்தனை நாளும் தன்னுள் மறைத்து வைத்த கண்ணீரை இன்றே மொத்தமாக வெளியேற்றி, விநோதனோடு பிணைந்திருக்கும் தன் உணர்வுகளை கடந்து வெளியேறிட வேண்டுமென்ற எண்ணத்தில் இதயம் வெடித்து விடுமளவிற்கு அழுகையில் கரைந்தாள்.

சற்று தூரத்திலிருந்து அவளையே பார்த்திருந்தான் வசீகரன்.

அழைப்பினை முடித்துக்கொண்டு அவர்களைத் தேடி வந்த விசாலாட்சி, வசீ மட்டும் தனித்து நிற்பதை கண்டு,

“தர்ஷி எங்கப்பா?” எனக் கேட்டார்.

வசீ ஆதர்ஷினி இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டினான்.

“ஆரம்பிச்சிட்டாளா?” என்று ஆயாசமாகக் கூறியவர், “இப்போதான் கொஞ்சநாளா அதிலிருந்து மீண்டு வந்தாள். வந்துட்டா(ள்)ன்னு நினைச்சிருந்தேன். இன்னைக்குதான் தெரியுது இல்லைன்னு. நானே அவரைப்பற்றி கேட்டு ரணத்தை கீறி விட்டுட்டேன்!” என்று வருத்தமாக தன்போக்கில் பேசிக்கொண்டே போனவரின் பேச்சில் வசீ தன் கண்களை இறுக மூடி திறந்தான்.

“இந்த அழுகையெல்லாம் கம்மி. அவங்க இறந்துட்டாங்கன்னு தெரிஞ்ச அன்னைக்கு ரூமுக்குள்ள போனவ(ள்), மூணாவது நாள் காலையில்தான் வெளிய வந்தாள். அவளை அதிலிருந்து திசை திருப்பத்தான் அவளை இங்கு வரவழைத்தேன். இப்போ இங்கு இருப்பவர்களுக்கு அவள் இன்றியமையாதவளாகிட்டாள்” என்று பேசிக்கொண்டே போனவர், “இதுக்கு அப்புறம் அவள் உள்ள வரமாட்டாள். பசங்களுக்கு சாப்பாடு கொடுக்கணும். நீ பார்த்து அழைச்சிட்டு போப்பா” என்றவர் இல்லத்தின் உணவுக்கூடம் நோக்கிச் சென்றார்.

இதையெல்லாம் அவர் ஏன் அவனிடம் கூறினாரென்று அவருக்கும் தெரியாது, கேட்ட வசீக்கும் தெரியாது.

ஆனால், ஆதர்ஷினியின் அழுகை அவனை இழுத்தது. மொத்தமாக கவர்ந்தது.

தன்னுடைய காரியத்திற்கு இந்த காதலெல்லாம் ஒத்துவராது என்று விலக நினைத்தவன், அவளின் அழுகையில் அவளிடம் சரணாகதி அடையத் துடித்தான்.

இங்கு வருவதற்கு முன்புதான் அவள் அத்தனை அழுதிருக்க… இப்போது மீண்டும் இப்படி அழுது உடலிற்கு ஏதேனும் வந்துவிடுமோ என்று அவன்தான் அவளுக்காக பயந்தான்.

மெல்ல அவளின் அருகில் சென்று, அவளிருந்த மேடையிலேயே சற்று இடைவெளிவிட்டு அமர்ந்தான்.

வசீயின் வருகை உணர்ந்தவளின் அழுகையின் சத்தம் மட்டுமே குறைந்தது. கண்ணீரல்ல.

சில நிமிடங்கள் அவளையே பார்த்திருந்தவன்,

“அழுது முடிச்சிட்டியா?” எனக் கேட்டிருந்தான்.

ஆதர்ஷினி வசீயை சிவந்து நீர் ததும்பி நின்ற விழிகளுடன் ஏறிட…

“இப்படி அழுதுகிட்டே இருக்க இந்த கண்ணுல, அதுல தேங்கி நிக்கிற தண்ணியில தாண்டி மொத்தமா கவுந்துட்டேன்” என்றவன், அவளின் விழிகள் தெறித்து விரிவதை நேருக்கு நேராகப் பார்த்துக்கொண்டே, “உன்னை கல்யாணம் பண்ணிக்கணும் தோணுது. உன்னோட இந்த அழுகை எனக்கு வேணும். எனக்காக நீ துடிக்கணும். உயிரோட இல்லாதவனுக்காகவே இப்படி அழறியே… நான் உனக்கு சொந்தமானவனா இருந்தா, எனக்காக எப்படி அழுவ? உன் மொத்தமும் அழுகை, கோபம், சிரிப்பு இப்டியெல்லாம் எனக்கே எனக்குன்னு வேணும்” என்று அதிகம் பேசிடாதவன், ஓரிரு வார்த்தைகளில் தன்னுடைய பேச்சினை முடித்துக் கொள்பவன் இன்று வழக்கத்திற்கு மாறாக நீளமாக பேசினான்.

வசீ கவிழ்ந்திட்டேன் என்று சொன்னதும் இருந்த இடத்திலிருந்து அதிர்ந்து எழுந்து நின்றவள், அவன் சொல்ல சொல்ல சிலையாகவே சமைந்து போனாள்.

தன்மீதான அவனின் பார்வை மாறியிருக்கிறது என்று அவளும் உணர்வாள்.

ஆனால் அவன் இப்படி உடனே கூறுவானென்று எதிர்பார்க்கவில்லை. அதுவும், காதலை விடுத்து நேராக திருமணத்திற்கு பேசுவானென்று சுத்தமாக நினைத்திருக்கவில்லை.

“என்ன ஃப்ரீஸ் ஆகிட்ட?” என்றவன் அவளை பிடித்து மீண்டும் அமர வைத்தான்.

“இப்போவே மண்டையை உருட்டாதே. எனக்கு ஏனோ இப்போ சொல்லத் தோணுச்சு சொல்லிட்டேன்” என்றவன் அதுவரை பிடித்து வைத்திருந்த மூச்சினை இதழ் குவித்து ஊதினான்.

“எனக்கு இதில் யோசிக்க ஒண்ணுமில்ல” என்ற ஆதர்ஷினி, “நான் கொஞ்சம் வெளிப்படையா பேசணும் நினைக்கிறேன்” என்றாள்.

“ஹ்ம்ம்…”

“எனக்கும் உங்களை பிடிச்சிருக்கு.”

வசீயின் முகம் பார்த்து எவ்வித மழுப்பமலுமின்றி பளிச்சென்று சொல்லியிருந்தாள்.

அவளுக்கு தன்மீது ஒருவித ஈர்ப்பு உள்ளது என்பதை அவனும் அறிவான். அதனை அவளாகவே சொல்லிக் கேட்டிட அவனுக்கு எப்படி இருக்கிறதாம்?

இரு கைகளையும் தலைக்கு பின்னால் கோர்த்து அழுந்த தடவிக்கொண்டான்.

“எனக்கு உங்களை பிடிக்கிறதுக்கு முன்னாடி வேறொருத்தரை பிடிச்சது… ரொம்ப” என்றவள், விநோதனைப்பற்றி… இருவருக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது, அவன் எழுதிய கடிதங்கள், அதற்கு அவள் அனுப்பிய பதில்கள், அவன் தற்போது தன் மனதில் எந்தளவிற்கு இருக்கிறான் என்று அனைத்தும் கூறினாள்.

ஆனால் எந்தப்பெயரில், எந்த பத்திரிகையில் எழுதுகிறாள் என்பதை சொல்லவில்லை.

வசீகரன் அமைதியாகக் கேட்டுக்கொண்டான்.

“இப்போதான் அவங்க உயிரோட இல்லையே?”

“அஃப்கோர்ஸ்… உயிரோடில்லை” என்றவள், “எனக்கு அவர் மீதிருந்த அன்பிற்கு என்ன பெயருன்னு தெரியல. என்னை என் எண்ணத்தை, மாறுபட்ட என்னுடைய சிந்தனையை முதல் முதலா அங்கீகரித்தவர் அப்படிங்கிறதுல ஆரம்பிச்சது அவர்மீதான என்னோட பிடித்தம். அந்த பிடித்தம் இப்பவும் இருக்கு. ஆனால்” என்று நிறுத்தியவள்,

“அவரை நான் பார்த்தது இல்லை. புகைப்படம் கூட இணையத்திலிருந்து எடுத்தது” என்றதோடு, “அவருக்கு உருவமிருந்தா எப்படியிருக்கும் நான் நினைத்து பார்த்திருக்கேன். இப்போலாம் அந்த உருவம் உங்களோட பொருந்தி போகுது. என் ஹார்ட் முழுக்க நீங்கதான் இருக்கீங்க” என்றாள்.

“எனக்கு புரியுது.”

“உங்களுக்கு புரியனுங்கிறதுக்காக நான் இதையெல்லாம் உங்கக்கிட்ட சொல்லல” என்றவள், “நான் உங்களை எந்தளவிற்கு விரும்புறேன்னு உங்களுக்குத் தெரியணுமே! அதுக்காக மட்டும் தான் சொன்னேன்” என்றாள்.

“அவரும் நீங்களும் ஒன்னில்லைன்னு தெரியும். அவர் போலீஸ், நீங்க ரவுடி. அவரை விரும்பின மனசால உங்களை எப்படி விரும்ப முடிஞ்சுதுன்னு தெரியல”  என்றவள், “ஐ லவ் யூ… பட் ஐ காண்ட் லவ் வித் யூ அண்ட் லிவ் வித் யூ” என்றவளின் குரலில் அத்தனை அழுத்தம்.

“உங்களை மாதிரி ரவுடியோட என்னால வாழ முடியாது. என்னுடைய எண்ணங்கள், ஆசைகள் வேறு. அதுக்கு எதிலும் நீங்க பொருந்தமாட்டீங்க. பெத்த அப்பாகிட்டவே அவர் செய்றதையெல்லாம் பொறுத்துக்கிட்டு இறங்கிப்போய் என்னால் பேச முடியல. உங்களோட என்னால் எப்படி வாழ முடியும்?” எனக் கேட்டவளின் வார்த்தைகளில் இருந்த திடம், அவளின் மனதிடம் இல்லை.

“இனி எப்பவும் என் முன்னால் வராதீங்க. மூளைக்கும் அறிவுக்கும் புரியிற விஷயம், மனசுக்கும் விருப்பத்துக்கும் புரிய மாட்டேங்குது” என்றவள் ஒற்றை கண்ணில் துளியென கொட்டிய நீரினை துடைத்தவளாக இல்லம் விட்டு வெளியேறி ஆட்டோ பிடித்து சென்றுவிட்டாள்.

வசீகரன் அவள் பேசிச் சென்றதில் எவ்வித வருத்தமும் அடையவில்லை. மாறாக அவனது முகத்தில் விரிந்த புன்னகை. அதன் ஒளி கண்களில் பிரகாசித்தது.

******

தூத்துக்குடியிலிருந்து தரைவழியாக சென்னை செல்ல பத்து மணி நேரமாகியிருந்தது.

பாலாவும், குமாரும் மாசிலாமணியிடம் தொழில் வைத்திருக்கும் சங்கரின் இருப்பிடம் கண்டறிந்து செல்ல மதியத்திற்கு மேலானது.

அங்கு அவர்கள் சென்ற நேரம், அவர்களுக்கு கிடைத்ததோ சங்கரின் இறப்பு செய்தித்தான்.

“எப்படி?” அதிர்வோடு அங்கிருந்த ஆள் ஒருவரிடம் பாலா வினவினான்.

“யாரோ நெத்தியிலே சுட்டிருக்காங்க தம்பி. விடியகாலையில் நடந்திருக்கு” என்றவர், “எத்தனை பேரை கொன்னிருப்பான், இன்னைக்கு அவனையும் ஒருத்தன் கொன்னுட்டான்” என்று பக்கத்திலிருந்த நபரிடம் அவர் சொல்ல…

“சும்மாவா சொன்னாங்க, கத்தி எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவுன்னு” என்றபடி அவர் நகர்ந்தார்.

“இப்போ என்ன பாலா பன்றது?” குமாருக்கும் அதிர்ச்சி.

“அவருடைய ஆட்கள் யாரிடமாவது விசாரிக்கணும் குமார்” என்ற பாலாவுக்கு அடுத்து கிடைத்த தகவலும் உபயோகமானதாக இருக்கவில்லை.

சங்கர் வீட்டில் இரவு உறக்கத்திலேயே கொன்றிருக்கின்றனர்.

அவரது அடியாட்களை தவிர்த்து உடன் யாருமில்லை. அதன் அடிப்படையில் அவரது ஆட்டகளிலேயே ஒருத்தன்தான் அவரை கொலை செய்திருக்க வேண்டுமென்று போலீஸ் அத்தனை பேரையும் விசாரணை என்கிற பெயரில் கைது செய்திருக்க… யாரிடம் சென்று கேட்பது தெரியவில்லை.

பாலாவின் நிலை முட்டுச்சந்தில் நிற்பதைப் போலத்தான்.

பாலா சென்னை வந்துவிட்டேன் என்று சொல்லியது முதல் நிமிடத்திற்கு ஒருமுறையென சென்ற காரியம் என்னவானதென்று முத்துச்சாமி வேறு அழைப்பு விடுத்த வண்ணம் இருக்க… அவரிடம் இதனை எப்படி சொல்வதென்று தெரியாது தடுமாறினான்.

“அவர்களை அரேஸ்ட் செய்திருக்கும் ஸ்டேஷனுக்கு போய், கேட்கலாம் பாலா.” குமார் யோசனை வழங்கிட பாலா அவனை தீயாய் உறுத்தான்.

“கொஞ்சம் கூட யோசிக்கமாட்டியா குமார்? நாம அவனுங்க ஃபிரண்டுன்னு போய் பார்த்தா, அந்த கும்பலில் நாமும் ஒருத்தங்கன்னு நம்மையும் பிடிச்சு உள்ள வச்சிடுவாங்க.” மொத்த கடுப்பையும் குமார் மீது இறக்கினான்.

“ஓகே… நீ டென்சன் ஆகாத. வசீயிடம் சொல்லு. அவன் ஐயாவை பார்த்துக்குவான். நாம் அங்கு போகும் முன்ன, ஐயா ஒரு முடிவுக்கு வந்திருப்பார்” என்றான்.

குமார் சொல்வது பாலாவுக்கு சரியெனப்பட… வசீக்கு அழைத்து விடயத்தைக் கூறினான்.

வசீ எதிர்பார்த்தது. போலி வருத்தத்துடன் தான் பார்த்துக்கொள்வதாகக் கூறி, அவர்களை உடனடியாக கிளம்பும்படி சொல்லியவனின் முகம் அத்தனை இறுக்கமாக இருந்தது.

பாலாவிடம் பேசி முடித்ததும், ஒரு எண்ணிற்கு அழைப்பு விடுத்தான் வசீ.

“கேம் ஸ்டார்ட் பண்ணிட்ட போல” என்ற எதிர்முனையின் கேள்வியில் வசீ புன்னகைத்தான்.

“இதுக்காகத்தான் வெயிட் பண்ணேன்.”

….. வசீயிடம் பதில் இல்லை.

“சீக்கிரம் முடிச்சு விடுடா” என்ற குரலிலிருந்த ஏக்கம் தொழிலை மீறிய ஒன்று.

“இன்னும் நான் சொன்ன டைம் முடியல” என்ற வசீ, இரண்டு பேரையும் எப்படி கொலை செய்தான் என்று விளக்கினான்.

மாசிலாமணியை கொன்றது ஏற்கனவே அறிந்தது.

சங்கரை பார்க்க பாலா கிளம்பியதும், வாசுவின் ஆழ்ந்த உறக்கத்தை உறுதி செய்து… அதிகாலை நான்கு மணிக்கு தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு விமானத்தின் மூலம் வந்து சேர்ந்த வசீ, சங்கரின் வீட்டிற்குள் யாருக்கும் தெரியாது நுழைந்தவன், சங்கரை அவனது படுக்கையறையிலே வைத்து சுட்டிருந்தான்.

சங்கரின் ஆட்கள் எல்லோரும் குடி போதையில் மயங்கியிருக்க, வசீ வந்ததோ, சங்கரை கொன்றதோ, திரும்பிச் சென்றதையோ அறியவில்லை.

அங்கிருந்து கிளம்புவதற்கு முன் சிசிடிவி புட்டேஜினை அழித்த வசீ அதன் ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்துக்கொண்டு வந்திருந்தான்.

சென்னையில் ஆறு பதினைந்துக்கு விமானம் ஏறியவன், ஒரு மணி இருபது நிமிடத்தில் தூத்துக்குடியில் தன்னுடைய வீட்டிலிருந்தான்.

இதனால் வாசுவிற்கும் வசீ சென்று வந்தது தெரியாமல் போனது.

“நீ கவனாமா இருடா” என்ற எதிர் பக்கத்தின் அக்கறையில் நெகிழும் மனதை இழுத்து பிடித்து இறுக்கி வைத்தான் வசீ.

“கொஞ்சம் பார்த்துக்கோடா… இன்னும் கொஞ்ச நாள்” என்ற வசீ எதை கூறுகிறானென்று புரிந்து… “தான் பார்த்துக்கொள்வதாக” உறுதி வந்தது எதிரிலிருந்து.

********************

முத்துச்சாமி தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாது குழம்பி இருந்தார்.

நிழல் உலகில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை அவர் உருவாக்கி வைத்திருக்கிறார். அதில் பல மாநிலங்களில் பெரிய பெரிய தாதாக்கள் அவர் வசம். அவரின் பிடியில் ஆட்டுவிப்பார்.

ஆனால் தொடர்ந்து இரண்டு கொலைகள் அவரை ஆட்டம் காண வைத்தது.

இவ்விடத்திற்காக எத்தனையோ கொலை செய்திருக்கிறார். எத்தனையோ உயிர்களை காவு வாங்கியிருக்கிறார். அப்போதெல்லாம் அதனை கௌரவமாக, மதிப்பாகப் பார்த்தவர், இன்று தனது கூட்டத்தில் இருவர் இறந்திருப்பதற்கு அரண்டு நின்றார்.

ஆம் அவருக்கு பயம் தான். அவர்களின் கூட்டத்தில் ஒரு ஆடு மரணித்தாலும், அதற்கான காரணம் மற்றொரு மந்தையாக இருக்கும் அல்லது வேட்டைக்காரனாக இருக்கும்.

மந்தை என்றால் பயமில்லை. அதுவே வேட்டைக்காரனாகிய போலீஸ் களம் இறங்கியிருந்தால், அவனின் அதரடிக்கும் திறமைக்கும் நடந்திருக்கும் இரு மரணங்களே போதும். இறந்தவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்களையே எளிதாக வீழ்த்தியிருக்கிறான் என்றால் எதிரி தங்களைவிட பலம் பொருந்தியவன் என்று கணித்தார்.

“எப்படி வசீ…?”

சங்கர் இறந்ததை அவரால் நம்ப முடியவில்லை.

முத்துச்சாமி தீவிர யோசனையில் ஆழ்ந்தவராக குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.

அவரை அவதானித்தபடி வசீ நின்றிருந்தான். மற்ற ஆட்கள் யாவரும் உப்பளத்தில் இருந்தனர். புதிதாக வந்திருப்பதையாவது சரியாக கைமாற்ற வேண்டுமென்று அனைவரையுமே அங்கு அனுப்பி வைத்திருந்தார்.

வசீக்கு அதில் தயக்கம் இருக்குமென்பதால் அவ்வேலைக்கு அவனை அவர் அனுப்பவில்லை.

“எனக்கென்னவோ நம்மக்கூட்டத்தை டார்கெட் பண்ணி ஸ்கெட்ச் போட்டுட்டானுங்களோன்னு தோணுது வசீ” என்று தன்னுடைய சந்தேகத்தைக் கூறினார்.

“அப்படி எதாவது போலீஸ் மூவ் பண்ணா, உங்களுக்குத்தான் காட்டிக்கொடுக்க ஆளுங்க இருக்காங்களே! நீங்க அரசியலில் இல்லைன்னாலும், பல அரசியல் ஆட்கள் உங்களுடைய கையில் தானே!” வசீ அவரை குறித்து பெருமையாக பேசினானோ அல்லது வஞ்சப்புகழ்ச்சியில் கூறினானோ, ஆனால் அவனது குரலில் ஒரு கேலி.

“ஆமா…” என்ற முத்துச்சாமி தன்னுடைய அலைப்பேசியிலிருந்து யாருக்கோ அழைத்திட, அழைப்பு செல்லவில்லை. அவருக்கு சிக்னல் இல்லை.

“நான் சொல்லும் நெம்பருக்கு போடு வசீ” என்றவர் எண்களை கூறிட, அதன் லொகேஷன் கேரளாவை காண்பித்தது. வசீயின் மூளை யாராக இருக்குமென்று சிந்திக்க… அவன் கண்ணில் மங்கலாக ஒரு உருவம் தோன்றி மறைந்தது. யாரென்று தான் தெரியவில்லை.

ட்ரூ காலரில் யாரென்று பார்ப்பதற்குள்…

“என்ன வசீ உனக்கும் சிக்னல் இல்லையா?” என்று முத்துச்சாமி கேட்டார்.

“இதோ ரிங் போகுது” என்றவன் அவரிடம் அலைபேசியை நீட்டிட, வாங்கி காதில் வைத்தவர் வசீயை விட்டு தள்ளிச்சென்றார். தான் பேசுவது அவனக்கு கேட்காதவாறு.

அதையெல்லாம் வசீ பொருட்படுத்தவில்லை.

மாசிலாமணி, சங்கரின் இறப்பை எதிர் பக்கத்திலிருப்பவருக்கு முத்துச்சாமி கூறிட, எவ்வித எதிர்வினையும் இல்லை.

“அங்கும், மற்ற மாநிலங்களிலும் இதுபோல் ஏதும் நடந்திருக்கிறதா என்று தெரிய வேண்டும். விசாரித்து சொல். நாம் மூன்று மாதத்தில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை நடத்தலாமா வேண்டாமா என்று பின்னர் முடிவு செய்வோம்” என்றவர் எவ்வித பதிலும் எதிர்பாராது வைத்துவிட்டார்.

அலைபேசியை வசீயிடம் கொடுப்பதற்கு முன்னர் எண்ணை அழித்துவிட்டே கொடுத்தார்.

“தவறாக நினைக்காத வசீ” என்றவர், “இப்போ நான் என்னையே நம்பும் நிலையில் இல்லை” என்று கூறினார்.

வசீயிடம் மர்மப் புன்னகை.

‘உன்னை இப்படி பார்க்க எத்தனை நாள் காத்திருந்தேன்!’ வசீக்கு மனதில் நிறைவு.

முத்துச்சாமிக்கு இப்போது நடந்து கொண்டிருக்கும் பிரச்சனையிலிருந்து சற்று இளைப்பாற வேண்டும். மனதை வேறு எதிலாவது திசை திருப்ப வேண்டும். மனம் அமைதியாக இருந்திட வேண்டும். அப்போதுதான் அடுத்து என்பதில் ஒரு தெளிவு கிடைக்கும் என நினைத்து தன்னுடைய சிந்தையை ஆதர்ஷினியின் பக்கம் மாற்றம் கொண்டார்.

“மகா தர்ஷிக்கு கல்யாணம் பண்ணனும் சொல்றாள் வசீ. எனக்கும் இப்போ ஒரு மாற்றம் தேவை” என்றவர், “நான் ரெண்டு பசங்களோட டீடெயில்ஸ் கொடுக்கிறேன். நீ கொஞ்சம் விசாரிச்சு சொல்லு. ரெண்டு பேருமே தெரிஞ்ச ஆளுங்க பசங்கதான். அவனுங்க அப்பா ரெண்டு பேருமே நம்ம வேலையில் ஈடுபாடு இருக்கவனுங்க, பசங்களுக்கும் இருக்குமோன்னு தெரியணும்” என்றதோடு, “தர்ஷிக்கு நம்ம பழக்கம் ஒத்துவராதே அதான் அவளுடைய போக்குக்கு மாப்பிள்ளை பார்ப்போம்” என்றார்.

அவர் சொல்லியதை கேட்டுக்கொண்டேன் என்பதற்காக தலையை ஆட்டினான்.

“உங்க பொண்ணுகிட்ட கேட்டுட்டீங்களா?”

“மகா சொன்னா கேட்டுப்பாள்” என்றார்.

“நீங்க பசங்க யாருன்னு சொல்லுங்க… எப்படின்னு நான் பார்த்துடுறேன்” என்ற வசீயின் தோள் தட்டியவர், இரண்டு புகைப்படங்களை காண்பித்து யாரென்று விவரம் கூறினார்.

‘நீங்க ரெண்டு பேரும் என் கையில் காலிடா.’ வசீ இருவருக்குமான பதிலாக என்ன சொல்ல வேண்டுமென்று அப்போதே முடிவு செய்துவிட்டான்.

அந்நேரம் புதிய எண்ணிலிருந்து அழைப்புவர வசீ அதனை ஏற்கவில்லை.

இரண்டு முறை வந்த அழைப்பு வசீ எடுக்காததால் அதன் பிறகு வரவில்லை.

நள்ளிரவில் பாலாவும் குமாரும் தூத்துக்குடி வந்து சேர்ந்தனர்.

அனைவரும் உப்பளத்தில் அந்த நேரத்திலும் முத்துச்சாமியின் மேற்பார்வையில் பரபரப்பாக வேலையில் மூழ்கியிருந்தனர்.

“சங்கர் எதனால் இறந்தான்னு ஏதும் தெரிந்ததா பலா?”

“இல்லைங்க ஐயா. ஆனால், மாசி சரக்கை அவருக்கும் கை மாத்தல” என்றவன், “மாசிலாமணி வீட்டில் சிசிடிவி இருக்கே அதை செக் பண்ணி பாக்கலாமே! அந்த ரெண்டு நாளில் யார்யார் வந்து போனங்கன்னு தெரிந்தால் விசாரிக்க எளிதா இருக்கும்” என்றான்.

“எனக்கும் இது தோணுச்சு பாலா. வாசுவை வைத்து எடுத்துவரக்கூறி அனுப்பி வைத்தால், விசாரணைக்கு போலீஸ் கொண்டு போயிட்டதா வந்து சொன்னான். நான் டிப்பார்ட்மெண்டில் நம்ம ஆளுகிட்ட சொல்லியிருக்கேன். நாளைக்கு கைக்கு கிடைச்சிடும். பார்ப்போம் அதில் ஏதும் மாட்டுதான்னு” என்ற முத்துச்சாமி, “இனி நீ பார்த்துக்கோ! நான் கிளம்புறேன்” என்று அங்கிருந்து புறப்பட…

“சரக்கு எங்கங்க ஐயா?” எனக் கேட்டான் பாலா.

“கோயம்புத்தூர் குணசேகரனுக்கு” என்று சொல்லிவிட்டு அவர் சென்றார்.

வேலை முடித்து வீட்டிற்கு வர அதிகாலை ஆனது.

வாசு மட்டும் தான் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தான்.

“வசீ எங்கடா?”

அவர்கள் அழுத்திய அழைப்பு மணியின் ஓசையில் தான், வாசு உறக்கத்திலிருந்து அசைந்தான். அரை தூக்கத்தில் கதவு திறந்தவனிடம் பாலா வசீயை கேட்டிட, அவனோ தலையை சொறிந்தவனாக “தெரியலையே” என்றிட… “எப்போடா வந்த?” எனக் கேட்டுக்கொண்டே வசீ உள்ளே வந்தான்.

வசீ ஷார்ட்ஸ் மற்றும் டிஷர்ட் அணிந்திருந்ததால்…

“இங்கு தான் இருந்தியா? நீ எங்கு போனன்னு தெரியல சொன்னான் இவன்” என்று வாசுவின் முதுகிலே ஒன்று வைத்தான் பாலா.

“மொட்டை மாடியில் படுத்திருந்தேன்” என்ற வசீ, “நீங்க இல்லைன்னு இங்கவே ஹாலில் தான் படுத்தோம். பாதி நேரத்துக்கு வெக்கையா இருந்ததுன்னு நான் மட்டும் மாடிக்கு போனேன்” என்று சரளமாக பொய் கூறினான்.

அந்நேரம் வசீயின் அலைபேசிக்கு தகவல் வந்த ஒலி கேட்டிட… நிதானமாக மின் இணைப்பில் பொருத்தியிருந்த அலைபேசிக்கு அருகில் சென்றான்.

“என்னாடா இன்னைக்கு தர்ஷி ஷோ இல்லையா? இந்தநேரம் அந்த போனை நெஞ்சோட அழுத்தி பிடிச்சிருப்பியே!” என்று கிண்டல் செய்தான் பலா.

“அதுக்குத்தான் மொபைல் எடுக்க வந்தேன்” என்று பதிலளித்த வசீ அதனை எடுத்துக் கொண்டவனாக மொட்டைமாடிக்கு சென்றுவிட்டான்.

தகவலை திறந்து பார்த்த வசீ அர்த்தமாக சிரித்துக் கொண்டான்.

“இன்னைக்கு ஒரு சம்பவம் இருக்கு” என்று பதில் அனுப்பியவன், எப்.எம் கேட்கத் தயாராகினான்.

அன்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது ஆதர்ஷினி அல்ல. வேறொரு பெண். ஹலோ சொல்லியதிலேயே கண்டுகொண்டான்.

“இன்னைக்கு ஷோக்கு உங்க தர்ஷி வரல. அதனால் நான்தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போறேன்.

நான் உங்கள் …..”

அப்பெண் அவளின் பெயரை சொல்வதற்குள் ஆஃப் செய்திருந்தான்.

காலை நேரமே அத்தனை எரிச்சலாக வந்தது அவனக்கு.

கீழே வந்தவனின் முகம் கண்டு,

“என்னடா டல்லா இருக்க? ஷோ இல்லையா?” வாசு வினவினான்.

“தர்ஷி வரலடா!” என்ற வசீயின் குரலில் ஸ்ருதி குறைந்து இருந்தது.

“இதுக்கு எதுக்குடா ஃபீல் பன்ற?”

“அப்படிலாம் இல்லை” என்றவன் சோஃபாவில் சரிந்து அமர்ந்தான்.

“அந்த பொண்ணு யாருன்னு தெரியாம இவ்வளவு அட்டாச் ஆவறது நல்லதில்லை வசீ.” பாலா எடுத்துக்கூறினான்.

“தெரியாமல் இல்லை. ஒரு கெஸ் இருக்கு.” ஏதோவொரு வேகத்தில் தன்னை மறந்து உளறியவன், வார்த்தையை நிறுத்திக்கொண்டான்.

“கெஸ் அப்படின்னா… ரேடியோ ஸ்டேஷனுக்கே போய் யாருன்னு தெரிஞ்சிக்கோ… இங்கிருந்து ஏழு கிலோமீட்டர் தானே” என்று யோசனை வழங்கினான் பாலா.

“அதெல்லாம் நான் யோசிக்காம இல்லை. ட்ரை பண்ணிட்டேன். தெரியாத ஒருத்தவங்களுக்கு டீடெயில்ஸ் கொடுக்க முடியாது சொல்லிட்டாங்க” என்றான் வசீ.

“ஹ்ம்ம்… சோஷியல் மீடியாவில் அவங்க பேஜ் செக் பண்ணு.” வாசு வேகமாகக் கூறினான்.

“படிச்சவன்னு நிரூபிக்கிறாண்டா!” குமார் சொல்லிட, “இப்போலாம் மூணு வயசு குழந்தை கூட மொபைல் யூஸ் பண்ணுது” என்று குமார் தன்னை கேலி செய்ததாக நினைத்து வாசு பட்டென்று கூறினான்.

“அதனால் தான் நாடு உருப்படல.” பாலா சொல்லி சிரித்திட, அவனுடன் குமாரும் வாசுவை கிண்டல் பார்வை பார்த்து சிரித்தான்.

“கொஞ்சம் சும்மா இருங்கடா… அதெல்லாம் செக் பண்ணிட்டேன். இந்தப்பொண்ணு புதுசு. அதனால் அவளோட டீடெயில்ஸ் எதுவும் இன்னும் அப்லோட் ஆகல” என்ற வசீ, சற்று நேரத்திற்கு முன்னர் சைலண்ட் மோடில் போட்ட அலைபேசி அழைப்பு வருவதாக ஒளிர, கையிலிருந்த அலைபேசியை ஷார்ட்ஸ் பையில் போட்டவனாக, அறைக்குள் புகுந்து கதவடைத்தான்.

“வசீ இந்த விஷயத்தில் தீவிரமா இருக்கான்னு தோணுது. அவனை இதில் சீண்டாதீங்க.” வாசு சொல்லிட, பாலா உதடு சுளித்தான்.

“வசீ மேல கொஞ்சநாளா டவுட்டாவே இருக்கு. அவன் தனியா என்னமோ பன்றாண்டா” என்ற பாலாவுக்கு, முன்பு இருந்த அதே உறுத்தல் இப்போதும்.

வசீ விடயத்தில் எதையோ எங்கேயோ தவற விடுவதாக அவனின் மூளை வலியுறித்தியது.

அறைக்குள் சென்ற வசீ, சன்னல் கதவினை கூட அடைத்துவிட்டு, வந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்.

“எத்தனை தடவை சொல்றது, நான் கால் பன்ற வரை வெயிட் பண்ண முடியாதா?” சத்தமில்லாமல் அதட்டினான்.

“சும்மா கத்தாத… விஷயமில்லமா கூப்பிடமாட்டேன்னு தெரியாதா?” அந்தப்பக்கம் குரல் உயர்ந்தது.

“என்னன்னு சொல்லு.”

எதிர்பக்கம் சொல்லியதில் வசீயின் புருவம் உச்சி தொட்டது.

“நிஜமாவா?”

“எஸ்.”

“இப்போ என்ன பண்ணனும் முடிவு பண்ணிட்டேன். நான் பாத்துக்கிறேன்” என்ற வசீயின் கண்ணில் வேட்டையாடும் வெறி.

“ஒருத்தனையும் விடமாட்டேன். உயிருன்னா என்ன… அதோட மதிப்பு என்னன்னு நான் இவனுங்களுக்கு காட்டுறேன்” என்று அழுத்தமாக உரைத்த வசீ…

“உன் காலில் கூட விழுறேன். மெசேஜ் மட்டும் அனுப்பு. ஃப்ரீயா இருந்தால், நானே கால் பன்றேன்” என்றதோடு, “அல்ரெடி பாலாவுக்கு என் மேல் டவுட் வந்திடுச்சு” எனக் கூறினான்.

“பீ கேர்ஃபுல்.”

“நான் பார்த்துக்கிறேன்” என்ற வசீ, “பாலாவோட டார்கெட் வேற” என்றான் பாலாவை நன்கு அறிந்தவனாக.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
11
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்