
உயிர் உறை 13
நேசப்பிழை 6
முத்துச்சாமிக்கு மாசிலாமணி இறந்தது பெரும் தலையிடியாய் அமைந்தது.
மாசிலாமணி கொல்லப்பட்டதற்கு வருந்தினாரோ இல்லையோ, பல கோடி இழப்பினை சந்திப்பதற்கு அத்தனை கவலை கொண்டார்.
மீண்டும் இதுபோல் சரக்கினை பெறுவது அத்தனை எளிதல்லவே. அவ்வளவும் மாயமானது எப்படியென்று தெரியாது மண்டயை உடைத்துக்கொண்டார்.
மாசிலாமணியை அந்நிலையில் பாலாவால் பார்த்திடவே முடியவில்லை. ஆனால் அவனுக்கு எதிராக வசீ அகத்தில் மகிழ்ந்து கொண்டிருந்தான்.
இதுதான் வசீக்கு முதல் வெற்றி. அதனை கொண்டாடித் தீர்த்தான். எதற்கும் ஆரம்பம் ஒன்று வேண்டுமே! வசீ தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டான். அவனின் காத்திருப்பு வீண் போகவில்லை. ஆரம்பத்திலேயே முத்துவை மொத்தமாக சுற்ற வைத்ததில் அத்தனை சந்தோஷம் கொண்டான்.
வசீயின் காத்திருப்பு நீண்டது. முழுதாய் இரண்டு வருடங்களுக்கு மேல் ஓடியிருந்தன. அனைத்தையும் தெரிந்து கொள்வதற்கே இத்தனை மாதங்கள் கடந்துவிட்டன.
அன்று வந்த அழைப்பின் பிறகு… இனியும் காலம் கடத்துவது ஆபத்தென்று நினைத்து தன்னுடைய அடியை எடுத்து வைக்க துவங்கியிருந்தான் வசீகரன்.
வசீ தன்னுடைய அடுத்த அடியை பற்றி சிந்திக்க… முத்துச்சாமி, பாலாவின் பேச்சினை அவன் கவனிக்கவில்லை.
பாலா தொட்டு மீட்கவே என்னவென்று வினவினான்.
“மாசியுடன் டீலிங் வச்சிருக்கவன் சென்னையில் இருக்கான். அவனை நேரில் விசாரிக்க ஐயா சொல்றாங்க. நான் போயிட்டு வரேன்” என்று பாலா குமாருடன் அப்போதே கிளம்பிவிட, வசீயும் வீட்டிற்கு செல்வதாகக்கூறி சென்றுவிட்டான்.
தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு தரைவழி செல்ல கிட்டத்தட்ட பதினோரு மணி நேரமாகும். இருப்பினும் தாங்கள் போகும் வேலைக்கு யாரின் கவனித்திலும் பதியாது செல்வதுதான் நன்றென்று காரிலே சென்றான் பாலா.
விமானம் வழி சென்றால் செக்கிங் அது இதென்று ஏதோவொரு வகையில் கவனிக்கப்படுவோம் என்பது அவனின் எண்ணம். பாலாவின் இத்தகைய எண்ணம் வசீக்கு சாதகமாக அமைந்தது.
ஏற்கனவே நள்ளிரவிற்கு மேலாகியிருக்க… நொடியையும் வீண் செய்ய நினைக்காது புயல் வேகத்தில் பாலா கிளம்பியிருந்தான்.
வாசுவுடன் வீட்டிற்கு வந்த வசீ, வழக்கம்போல் மொட்டைமாடி தண்ணீர் தொட்டியின் மீது சென்று படுத்துவிட்டான்.
காலை எட்டு முப்பதுக்கு கண்விழித்த வாசு, இரவு இரண்டு மணியளவில் தன்னுடன் படுத்த வசீயை காணாது துரிதமாக படுக்கையை எடுத்து வைத்துவிட்டு கீழே தங்கள் வீடிருக்கும் தளத்திற்கு வந்தான்.
வீடு பூட்டியிருக்க…
‘எங்க போனான்?’ என்று யோசிக்கும் போதே வீட்டின் கதவை உள்ளிருந்து திறந்திருந்தான் வசீ.
“என்னடா நின்னுட்டே கனவா?” எனக்கேட்ட வசீ குளித்திருப்பான் போலும், துண்டால் தலையை துவட்டியபடி இருந்தான்.
“வீடு பூட்டியிருந்துச்சே!”
“நீ மேல தூங்கிட்டு இருந்த. நானும் குளிக்கப்போனேன், கதவை திறந்து வச்சிட்டா போக முடியும்?” வசீ கேட்டதில் எங்கோ மனதின் ஓரம் தோன்றிய சிறு உறுத்தலும் வாசுவுக்கு நீங்கியது.
“வழக்கமா தர்ஷி ஷோ முடியாம கீழ வரமாட்டியே அதான்… வீடு உள்ள இல்லாம வெளிய பூட்டியிருக்கு நினைச்சுட்டேன்” என்றான் வாசு.
“ம்ம்ம்…” வசீயின் தலையாட்டலில் இருந்த அர்த்தம் அவன் மட்டுமே அறிவான்.
“நான் அங்க வீடு வரை போயிட்டு எப்படியிருக்காருன்னு பார்த்துட்டு வரேன். நீ நம்ம இடத்துக்கு போயிடு” என்றான் வசீ.
சரியென்ற வாசு, “நீயேன் அவரை ஐயான்னு கூப்பிட மாட்டேங்குற? இதை கேட்கணும் ரொம்ப நாளா நினைத்திருந்தேன்” என்றான்.
“எனக்கு இயல்பா அது வரல. உங்களை மாதிரி கூப்பிட்டே ஆகணும் அப்படிங்கிற கட்டாயம் எதுவுமில்லையே” என்ற வசீ தலையை கோதியபடி வெளியேறிவிட்டான்.
வசீ முத்துச்சாமியின் வீட்டிற்கு வந்த போது… ஆதர்ஷினி கேட்டினை கடந்த உள் வாயிலிலேயே யாருக்கோ காத்திருந்தாள்.
வசீ அவளை பார்த்தாலும் கண்டுகொள்ளவில்லை.
மகாவின் மூலம் முத்துச்சாமி இன்னும் அறையை விட்டே வெளியில் வரவில்லை என்பதை தெரிந்துகொண்டு தோட்டத்தில் வழக்கமாக அமரும் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டான்.
அன்றைய தினம் கேட்க தவறிய தர்ஷியின் நிகழ்ச்சியை பதிவில் போட்டு வைத்திருந்ததால், காதில் இயர் பட்ஸ் கனெக்ட் செயத்வன் கண்களை மூடி கேட்க ஆரம்பித்திருந்தான்.
“ஹாய்…
ஹலோ…
நேரம் சரியாக ஆறு மணி.
நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி புத்தம் புது காலை வித் தர்ஷி.”
அவளின் குரலில் ஏதோ மாறுபாடு இருப்பதாக வசீக்குத் தோன்றியது.
“நாம் தினம் புது புது மனிதர்களை சந்திக்கின்றோம். அவர்களெல்லாம் ஏன் வருகிறார்கள் என்பது புரியாத புதிர் தான். ஆனால் நம் வாழ்வின் புள்ளி ஏதோவொரு வகையில் நாம் கடக்கும் மனிதர்களுடன் தொடர்பு கொண்டிருக்கும்.
வாழ்க்கையும் பயணம் போல் தான். சில மணி நேரம் நம்முடன் இணைந்து பயணிப்பவர்கள் வாழ்நாள் முழுவதும் நம்மில் அவர்களின் நினைவை தாக்கமாக பதிந்து சென்றுவிடுவர்.
சிலரை அத்தனை எளிதாக கடந்து வரவே முடியாது. அவர்களின் நினைவுகள் சிக்கிய சுழலாய் நம்மில் தேங்கி நின்றிடும்.
அப்படி, உங்களால் மறக்க முடியாத நபரை பற்றி என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
நீங்கள் அழைக்க வேண்டிய எண் ***986.
கேளுங்க. கால் பண்ணுங்க. பேசலாம்.
நான் உங்கள் தர்ஷி.
இது ‘சாரல் FM 97.5’.”
பாடல் ஒலிக்க ஆரம்பிக்க கண்களை திறந்தான்.
‘அப்படி தனக்கு யாரும் இருப்பாரோ?’
சிந்தித்தவனின் நினைவடுக்கில் பல காட்சிகள் விரிந்து அவனின் இதழில் புன்னகை விரிந்தது.
அது அவனை அழகாய் காட்டிட, அவனை விழி அகலாது எதிரே நின்று ரசித்திருந்தாள் ஆதர்ஷினி.
நொடி நேரம் தான், இமைப்பொழுதில் அவனிடம் தடுமாறிய தன்னை நிந்தித்தவளாக தொண்டையை செருமி அவனுக்கு தன்னிருப்பை உணர்த்தினாள்.
நிமிர்ந்து பார்த்தாலும் என்னவென்று அவன் கேட்கவில்லை.
“பாலா வரலையா?”
அவள் தான் தானாக பேசினாள்.
“அவன் வெளியூர் போயிருக்கான்.” ஒருவார்த்தை மிட்சமாக அவன் பேசிடவில்லை.
“ஹோ…” என்று திரும்பி நடந்தவள், “இவங்ககிட்டவே கேட்கலாமா?” என்றவளாக அவன் பக்கம் திரும்புவதுமாய், ‘பாலாவை கேட்டும் என்ன விடயமென்று கூட கேட்கவில்லை. எப்படி கேட்பது’ என நினைத்தவளாக மீண்டும் வந்தவழி திரும்பிட… அவள் எதையோ கேட்க வந்து தயங்குவதும் முடியாது திரும்புவதையும் அவதானித்தவன் அவளாகவே கேட்கட்டுமென்று அமைதியாகவே இருந்தான்.
சிறிது நேரம் வசீக்கு முதுகை காட்டியபடி நகத்தை கடித்து யோசித்தவள்,
‘இவங்கள விட்டாலும் நமக்கும் யாரையும் தெரியாது. நாமளே கேட்டுடலாம்’ என்ற பலத்த யோசனையின் முடிவாக வசீயின் முகம் பார்த்தாள்.
“ஐயர் ஒருத்தரை ஏற்பாடு பண்ண முடியுமா?” தயங்கித்தான் கேட்டாள்.
அவனோ அலைபேசியை அணைத்து பையில் போட்டவனாக எழுந்துகொண்டான்.
“எதுக்கு?”
“அதை உங்கக்கிட்ட சொல்லணும் அவசியமில்லை.” அவன் தன்னை கண்டு கொள்வதில்லையே என்கிற கடுப்பை இதில் காட்டினாள்.
ஆதர்ஷினி அவ்வாறு கூறியதும் அவன் அமர்ந்துவிட்டான்.
“என்ன உட்கார்ந்துட்டிங்க?” பதறி வினவினாள்.
“காரணம் சொல்லாம வாங்கன்னு கூப்பிட்டா எந்த ஐயரும் வரமாட்டாங்க” என்றான் அவளை அழுத்தமாக ஏறிட்டு.
“அது…” மூச்சினை நன்கு இழுத்து வெளிவிட்டவளாக,
“திதி கொடுக்கணும்” என்றாள்.
வசீயின் கண்களில் ஆராயும் தன்மை.
“இது அவருக்கு தெரியவேண்டாம்.”
அவள் அவர் என்று குறிப்பிட்டது முத்துச்சாமியை என்பது அவனுக்கு புரிந்தது.
அவள் திதி கொடுக்கணும் என்று சொல்லும்போதே அவளின் குரலில் ஒரு தழுதழுப்பு. கண்களில் மின்னலென நீர்த்துளிகள் மின்னி மறைந்தன. அதனால் வசீ மேற்கொண்டு எதையும் கேட்கவில்லை.
“இங்கு கூட்டிவர வேணாம். கடற்கரை மண்டபத்திற்கு பக்கத்தில் திதி கொடுக்கும் இடத்திற்கு கூட்டி வந்ததும் எனக்கு கால் பண்ணுங்க, நான் வந்துடுறேன்” என்றவள் சென்ற வேகத்தில் திரும்பி வந்து அவன் முன் நின்றாள்.
என்னவென அவன் புருவம் தூக்கிட,
“என் நெம்பர்” என்றவள், அவனின் சட்டை பையில் சற்று நேரத்திற்கு முன்பு அவன் அலைபேசியை வைத்ததை கவனித்து இருந்தவள், அவன் சிலையாக நின்றிருக்க தானே அவனின் அலைபேசியை எடுத்து தன்னுடைய எண்ணிற்கு அழைப்பு விடுத்து இருந்த இடத்திலேயே வைத்தாள்.
அவளின் விரல் தீண்டியதில் உள்ளுக்குள் பனியாய் உறைந்து நின்றான்.
சில்லென்ற இதம் தேகம் முழுவதும் ஊடுருவியது.
இத்தனை குளிர்ச்சியை அவன் இதற்கு முன்னால் உணர்ந்ததே இல்லை.
‘விரல் தீண்டலுக்கேவா! கண்ட்ரோல் டா’ என தனக்குத்தானே சொல்லிக்கொண்டவன், அவளின் அருகில் தடுமாறியவனாக அவளை வேகமாக கடந்து சென்றான்.
“ரொம்பத்தான்.” உதடு சுளித்தவள் வீட்டிற்குள் சென்று கிளம்பி, மகாவிடம் வெளியில் செல்வதாக மட்டும் சொல்லிவிட்டு… வசீயின் அழைப்புக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள்.
நாற்பது நிமிடத்தில் அழைத்து விட்டான். மிஸ்டு கால் தான்.
‘ரெடி.’ ஒற்றை வார்த்தை குறுந்தகவலாக வந்து விழுந்தது.
“ஷப்பா… இவனோட” என்று முணுமுணுத்தவள் விரைந்து கடற்கரை பகுதிக்கு வந்து சென்றாள்.
அங்கு வசீ திதி கொடுப்பதற்கு ஏதுவாக அனைத்தும் வாங்கிக் கொடுத்திருக்க… ஐயர் அதனை தயார் நிலையில் வைத்திருந்தார்.
“இதற்கெல்லாம் பணம்” என்று அவள் கேட்டிட, வசீ அவளை தீயாய் முறைத்தான்.
“பாவப்பட்டு சம்பாதிக்குற பணத்தில் செய்தா, கிடைக்குற புண்ணியமும் அந்த ஆத்மாவுக்கு பாவமா போய் சேரும்” என்றபடி தன்னுடைய கை பையிலிருந்து சில தாள்கள் பணத்தை எடுத்து வசீயின் கையில் திணித்திருந்தாள்.
வசீயின் முறைப்பையெல்லாம் அவள் கண்டுகொள்ளவே இல்லை.
ஐயர் அமர சொல்லிய இடத்தில், பாதுகையை வசீக்கு அருகில் கழட்டிவிட்டவளாக சம்மணமிட்டு அமர்ந்தாள்.
“யாருக்குமா திதி கொடுக்கணும். போட்டோ இருக்கா?” ஐயர் கேட்டிட, ஆதர்ஷினியிடம் தடுமாற்றம்.
வசீ அவளையேத்தான் ஆழ பார்த்திருந்தான்.
‘அப்படி யாருக்கு வீட்டிற்கு தெரியாமல் இவள் திதி கொடுக்கின்றாள்?’
“இப்போதைய ஃபோட்டோ இல்லைங்க, ஆனால் சின்ன வயது போட்டோ இருக்கு” என்றவள், தான் கொண்டு வந்திருந்த கையடக்க புகைப்பட சட்டத்தினை ஐயரின் கையில் கொடுத்தாள்.
“போட்டோவே இல்லைன்னாலும் பெயர் மட்டும் வைத்தே செய்யலாம்மா” என்ற ஐயர் அவள் அளித்த படைத்த பார்த்தார்.
வசீக்கு ஐயரின் கையிலிருந்த படத்திலிருப்பது யாரென்று தெரியவில்லை.
“உனக்கு என்ன உறவும்மா?”
“ஃபிரண்ட்…” அவள் நா திணறி வார்த்தை வந்தது.
ஐயர் அவளின் தடுமாற்றத்தை உணர்ந்தாரோ… அவளை ஒருவிதமாக ஏறிட்டுப் பார்த்தார்.
“என்னங்க ஐயா… ரத்த சொந்தமா இருந்தாதான் பண்ணனுமா?” எனக் கேட்டவள், “ஆனால் போன முறையும் நான்தான் திதி கொடுத்தேன்” என்றாள். எங்கே அவர் மறுத்துவிடுவாரோ என்று.
அவளின் பதட்டத்தை கண்டு மென்மையாகப் புன்னகைத்த ஐயர்…
“நல்ல மனசு இருந்தா போதும்மா. எந்தவொரு ஆத்மாவிற்கும் மனதால் நல்ல எண்ணத்தோடு யார் வேணாலும் முக்தி கொடுக்கலாம்” என்றவர் தன் கையிலிருந்த படத்தை மணலில் ஊன்றியவராக,
“பெயர் என்னம்மா?” என்று ஆதர்ஷினியிடம் வினவினார்.
ஐயரின் கை விலகி, புகைப்படத்திலிருந்த நிழலுருவம் வசீயின் கண்களில் படுவதும், ஆதர்ஷினி படத்திலிருப்பவரின் பெயரை உச்சரிப்பதும் ஒரே கணத்தில் நிகழ்ந்தது.
“விநோதன்.”
**********************
வசீகரனிடம் எவ்வித சலனமுமில்லை.
புகைப்படத்தில் இருப்பவனை புதிதாய் பார்த்தான்.
பள்ளி படிக்கும் சிறு வயதில் NCC சீருடையில் இருந்தான் விநோதன்.
ஐயர், படத்தில் இருக்கும் சிறுவன் விநோதனுக்கு மல்லிகை சரத்தை நான்காக மடித்து மாலை போல் சுற்றியதும், ஆதர்ஷினியின் கண்ணீர் கன்னம் தாண்டியது.
தன்னுடைய அழுகையை பிறருக்கு காட்ட பிடிக்காதவள், கண்களை துடைத்துக்கொண்டாள்.
வசீ நடப்பதற்கும் தனக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லையெனும் விதத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
“இப்போ இவருக்கு என்ன வயசு இருக்கும்மா?”
“இருபத்தி ஒன்பது முடிய போகுது.”
இணையத்தில் விநோதனின் புகைப்படம் என்று இருந்தது இரண்டே இரண்டு தான். ஒன்று அவனின் சிறு வயது புகைப்படம். மற்றொன்று இறந்த ஆண்டு உப்புநீரில் ஊறி அடையளாம் தெரியாது முகம் சிதைந்த நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படம். அதிலிருந்து தான் தற்போது அவள் வைத்திருக்கும் படத்தை எடுத்திருந்தாள். அவனது பயோவில் அவனின் பிறந்த தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை வைத்து விநோவின் வயதை கணித்திருந்தாள்.
ஐயர் ஒவ்வொவன்றாய் சொல்ல சொல்ல கர்ம சிரத்தையுடன் ஆதர்ஷினி செய்து கொண்டிருந்தாள்.
திடீரென வீசும் காற்றின் தன்மை வலுப்பெற்று, அலைகளின் ஆர்ப்பரிப்பு சீற்றம் கொண்டது. காற்றில் புகைப்படத்திற்கு மாட்டியிருந்த மலர் மாலை தூரம் சென்று விழுந்தது. முன் ஏற்றி வைக்கப்பட்ட ஊதுவத்தி, பழங்கள், பிண்டம் யாவும் அலையில் அடித்துச் செல்லப்பட்டன. தூறலாய் தொடங்கிய மழை சடுதியில் மழையாய் வலு பெற்றது.
ஐயர் மழைத்துளி உடல் தீண்டியதும் தன்னுடமைகளை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த நாலு கால் மண்டபத்திற்குள் புகுந்து கொண்டார்.
முதல் வருடமும் இப்படித்தான். ஆதர்ஷினி விநோதனுக்கு பிண்டம் கரைக்க கடலில் இறங்கிய நொடி சூறாவளியாய் காற்று சுற்றி சுழன்று தடை செய்திருந்தது.
இந்த வருடமாவது சரியாக செய்திட வேண்டுமென அவள் நினைத்திருக்க மழை வலுத்து கெடுத்துவிட்டது.
“மழை நிக்குற வரை இப்படியே உட்கார்ந்திருக்கப்போறியா?”
வசீ கேட்ட பின்னர், ஸ்மரணை வந்து விநோவின் புகைப்படத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, வசீயுடன் மண்டபத்திற்குள் சென்று நின்றாள்.
வசீ தான் மழையில் நனைந்து கொண்டிருந்த அவளின் கைப்பையை எடுத்திருந்தான்.
ஆதர்ஷினியின் வாடிய முகம் கண்ட ஐயர்…
“கவலைப்படாதம்மா… சேர வேண்டிய பொருள் எல்லாம் கடலில் கலந்திருச்சு. அது போதும்” என்று அவளை ஆற்றுப்படுத்த பொய் கூறினார். அவருக்குத் தெரியும் செய்ய வேண்டிய வழி முறைகள் ஒன்றும் முழுமை பெறவில்லை என்று. இருப்பினும் ஒரு பொய் அவளை சமன் செய்யும் என்ற நல்ல எண்ணத்தில் கூறியிருந்தார்.
அவரே சொல்லியதால் ஆதர்ஷினியும் ஒருவாறு தன்னை தேற்றிக்கொள்ள… சடுதியில் மழை நின்றிருந்தது.
“மழை நின்றுவிட்டதே திரும்ப செய்யலாமா?” ஆதர்ஷினி ஒரு வேண்டுதலுடன் கேட்டிருந்தாள்.
ஏனோ இந்த விடயம் இயற்கைக்கு முரணாக நடைபெறுவதாக அவருக்குத் தோன்றிட…
“வேண்டாம்மா… நடப்பது எல்லாம் நன்மைக்குத்தான்” என்று சொல்லி, “அடுத்து மழை வரதுக்குள் நான் கிளம்புறேன்” என்றவர் அவள் கொடுத்த தட்சணையை வாங்க மறுத்து சென்றுவிட்டார்.
ஆதர்ஷினி அப்படியே கால்களை மடக்கி மண்டபத்தின் தரையில் அமர்ந்துவிட்டாள்.
கையிலிருந்த படத்தையே வெறித்திருந்தாள். கண்ணீர் மட்டும் நின்றபாடில்லை.
விநோதன் அனுப்பிய கடிதங்களில் இருந்த எழுத்துக்கள் யாவும் அப்படத்தில் ஊர்வலம் போயின. அவனின் பாராட்டு, அவனின் வாழ்த்து, அவனின் அக்கறை, எழுத்தக்களிலே அவன் காட்டிய நெருக்கம், நேரடியாக வெளிப்படுத்திய விலகல் என்று அனைத்தும் வரிசைக்கட்டி நின்று கண்ணீரை நிற்க விடாது செய்தது.
மனதின் ரணம் கூடிப்போக… புகைப்படத்தை நெஞ்சில் அணைத்தவாறு கண்களை மூடிக்கொண்டாள். கண்ணீர் மட்டும் ஓய்ந்தபாடில்லை.
அவளையே பார்த்துக்கொண்டிருந்த வசீக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. வெறும் வார்த்தைகள் அவளை தேற்றிவிடாது என்ற எண்ணம் அவனுக்கு.
முழுதாய் அழுது ஓய்ந்த பின்னர் மனம் கொள்ளும் அமைதிக்கு வேறெந்த ஆறுதலும் ஈடாகாது. அதற்காகவே அவள் அழுது கரையட்டும் என்று நினைத்தான். இந்நிலையில் அவளை தனியாக விடுத்து செல்வது உகந்தது அல்ல என்று அவள் ஓயும் வரை காத்திருக்கலானான்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்த பின்னர் தான், இருக்கும் இடம் உணர்ந்து தன்னை தேற்றி நிமிர்ந்து அமர்ந்தாள்.
விநோதனின் மீது இப்போது காதலிருக்கா என்றால் இருக்கு என்று தான் சொல்வாள். அந்த காதல் நம் பெற்றோர், உடன் பிறந்தோர், நண்பர்கள் மீது வைத்திருக்கும் அன்பைப்போல்.
முதல் முதலாக அவள் பயத்தோடு செய்த விடயத்தை மனம் திறந்து ஊக்குவித்தவன். இன்று பத்திரிகையில் அவளுக்கென்று ஒரு பெயர், அது புனைப்பெயராகவே இருந்தாலும்… அவளுடையது, அதன் உந்து சக்தி விநோதன்.
அவனின் எதிர்பார்ப்பாக தொடர்ந்தவள், இன்று தொடர்ந்து கொண்டிருக்கிறாள். அவளுக்குள் எழுத்தில் திறமை இருக்கிறது என்பதை வெளிப்படையாக சொல்லாது, அவளுக்கு அவளையே விளங்க வைத்தவன் அவன். இல்லையென்றாலும் எளிதில் மறந்திட முடியுமா?
கண்களை துடைத்துக்கொண்டு எழுந்தவள், மண்டபத்தின் படியில் அமர்ந்திருந்த வசீயை கண்டு,
‘இவங்க முன்னாலா இப்படி அழுது கரைந்தோம்’ என்று வெட்கினாள்.
‘இவ்வளவு நேரம் அழுதிட்டு இருந்திருக்கேன்… என்ன ஏதுன்னு கேட்டுச்சா பாரு. அடிதடி செய்றவனிடம் மனதை எதிர்பார்க்க முடியுமா?’ அவனை திட்டிக்கொண்டே, அவனுக்கு முன்னால் வந்து நின்றாள்.
“அழுது முடிச்சாச்சு போலவே” என்றவனின் குரலில் என்ன இருந்தது என்று அவளுக்கு புரியவில்லை.
“போகலாம்” என்றவள், நேரத்தை பார்த்துவிட்டு, “ஒரு இடத்துக்கு போகணும், இங்கிருந்து அவ்வளவு லாங் ட்ராஃபிக்கில் ஆட்டோ வராது. நானும் வரும்போது ஸ்கூட்டி கொண்டு வரல” என்றாள்.
மறைமுகமாக வசீயையும் உடன் அழைத்தாள். புரிந்தவன் சரியென்பதைப்போல் முன்னால் நடந்தான்.
“நியாயமா நான் தான் கோபமா இருக்கணும். நான் தான் உங்களைவிட்டு தள்ளி தள்ளிப் போகனும். ஆனால், இங்கு எல்லாம் உல்டாவா இருக்கு.” பொருமினாள் அவள்.
நின்று அவளைத் திரும்பிப் பார்த்தான்.
“திருப்பி பேசினா குறைஞ்சி போயிடுவீங்களா? நானே வந்து பேசினாலும், பதில் சொல்லாம இப்படியே இருந்தா எனக்கென்ன புரியும்?” எனக் கேட்டாள்.
“நான் இப்படித்தான், கஷ்டமா இருந்தா பேசாத!” இலகுவாக சொல்லியவன் அவளின் முறைப்பை பொருட்படுத்தாது திரும்பி நடந்தான்.
விநோவிற்கு சடங்கு செய்திட ஏற்பாடு செய்த இடத்தை கடக்கும் போது…
“உன் சாண்டல்ஸ்” என்றான்.
மழை பெய்ததால் மணலில் பாதி புதைந்து இருந்தது. எடுத்து கடல் நீரில் அலசியவள், பெரும் அலையை கவனிக்காது தடுமாறி விழ இருந்த தருணம், அவளின் கை பிடித்து இழுத்திருந்தான்.
அவன் இழுத்த வேகத்திற்கு அவன் மீதே மோதி நின்றாள்.
இருவருக்குமே புதுவித சலனம். ஒற்றை நொடியில் மறைந்தும் இருந்தது.
வசீ வேகமாக விலகி தன்னுடைய வண்டியின் அருகில் வந்து நின்றான்.
ஆதர்ஷினி தன்னை நிலைப்படுத்திக்கொண்டு அவனருகில் செல்ல, அவனோ ஏதும் பேசாது வண்டியில் அமர்ந்து உயிர்பித்தான்.
அவள் அவனின் பின்னால் அமர்ந்ததும், “எங்க போகணும்?” எனக் கேட்க, “நீங்க போங்க, நான் ரூட் சொல்றேன்” என்றாள் அவள்.
அதில் அவளை முறைக்க முடியாது வண்டியை இயக்கியவன், அவள் சொல்லிய வலது, இடது, வளைவு என அனைத்திலும் பயணித்து நிறுத்த சொல்லிய இடத்தில் நிறுத்தியிருந்தான்.
“இங்கு எதற்கு?”
அவனையும் மீறி கேட்டிருந்தான்.
அவர்கள் வந்திருந்தது ஆதரவற்றோர் இல்லம்.
“சும்மா” என்றவள், “நீங்களும் வரதுன்னா வரலாம்” என்க வசீயும் அவளுடன் சென்றான்.
“வாம்மா தர்ஷி…”
இல்லத்தின் நிர்வாகி அவளை வரவேற்றார். அவரின் விளிப்பு, தர்ஷி என்கிற பெயர் அவனுள் அதிர்வை ஏற்படுத்தியது.
அவள் மீது அவனுக்கு காதல் இருப்பினும், அவனுக்கு பிடித்தமான குரலுக்கு சொந்த்காரியாக இவள் இருப்பாளென்று அவன் சிறிதும் நினைக்கவில்லை. இருக்க வேண்டுமென்ற எண்ணம். அன்று அவள் எழுதி வைத்திருந்த தாள் மற்றும் அவளின் பெயரை பாலாவிடம் கேட்டு தெரிந்துகொண்டது முதல்… தன்னுடைய மனம் விரும்பும் இருவர் இவள் ஒருத்தியாக இருக்க வேண்டுமென்ற ஆசை.
இருப்பினும், ‘இருக்காது. நேரில் வாய்ஸ் வேற மாதிரி இருக்கே’ என நின்றுவிட்டவன், அவள் எங்கே என்று பார்க்க, வயதானவர்கள் சிலரிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
வசீ அவளையே பார்த்திருக்க…
அவனின் பார்வை உணர்ந்து ஏறிட்டவள், அருகில் வருமாறு தலையசைத்து கூப்பிட்டாள்.
“இவங்க வசீகரன்.” ஆதர்ஷினி தான் பேசிக் கொண்டிருந்தவர்களிடம் அவனை அறிமுகம் செய்தாள்.
“தம்பி யாரும்மா?” ஒரு பாட்டி வினவிட, என்ன சொல்வதென்று தெரியாது ஆதர்ஷினி விழித்திருக்க…
“ஃபிரண்ட் பாட்டிம்மா” என்றான்.
அவர்களின் நலனெல்லாம் அறிந்தவள்,
இல்லத் தலைவரிடம்…
“காலையில் பழங்கள் அனுப்பி வைத்தது வந்துச்சுங்களா பாட்டி?” என்று கேட்டாள்.
“இப்போ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் வந்ததும்மா” என்றவர்,
“நீ கொடுத்த பணத்திலே சாப்பாடு, பிள்ளைங்களுக்கு, பெரியவங்களுக்குன்னு உடைகள் வாங்கியது போக மீதியிருக்கும்மா. அதிலே இன்னும் ஒரு வாரத்துக்கு பழங்கள் வாங்கலாம்” என்றார்.
“இருக்கட்டும் பாட்டி” என்றவள், “அப்படியே மறைமுகமா கணக்கு சொல்லிட்டிங்க” என்று அவரை போலியாய் முறைத்தாள்.
“என்னயிருந்தாலும் நல்லது நினைத்து பணம் கொடுப்பவர்களுக்கு, அவர்களின் பணம் நியாயமாக செலவு செய்யப்பட்டதா என்று தெரியணுமே” என்றார் அவர்.
“என்கிட்டவும் அதை செய்யணுமா?” எனக் கேட்டவள், “இனி இப்படி செய்தீங்கன்னா, நான் இங்கு வரவே மாட்டேன்” என்று மிரட்டினாள்.
“நீ வரலன்னா இங்கிருக்கவங்களாம் ஏங்கிப்போயிடுவாங்க தர்ஷி” என்றவர், “நம்மை பார்க்க வரது ஒருவரா இருந்தாலும், அவங்க வருகை… யாருமில்லாம இங்கிருப்பவர்களுக்கு எத்தனை மகிழ்வை கொடுக்கும் தெரியுமா?” என்றவர், “உன் அம்மா எப்படியிருக்கிறாள்?” என்று வினவினார்.
இருவரும் வசீ இருப்பதையே மறந்திருந்தனர்.
“நல்லாயிருக்காங்க” என்றவள், அவர் அடுத்து முத்துச்சாமியை பற்றி கேட்பார் என்று அறிந்து அதனை தவிர்ப்பதற்காகவே… அப்போதுதான் வசீயை கவனித்து, அவனின் கரம் பற்றி தனக்கருகில் இழுத்து அவனை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
“இவங்க என்னோட பாட்டி. அம்மாவோட அம்மா. இவங்க தான் இந்த இல்லத்தை நடத்துறாங்க” என்று வசீயிடம் தன்னுடைய பாட்டி விசாலாட்சியை வசீக்கு அறிமுகம் செய்து வைத்தவளிடம் இவர் என்னுடைய பாட்டி என்கிற பெருமை மிளிர்ந்தது.
“இவளுக்கு நான்னா பிரியம். அதுல இந்த பெருமை வேறு” என்று வசீயிடம் சிரிப்புடன் கூறியவர், “நீவாப்பா” என்று அவனை உள்ளே சிறியவர்கள் இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
“இங்கு வரேன்னு தெரியாது. நான் பசங்களுக்கு ஒண்ணுமே வாங்கலையே!” வெறும் கையோடு குழந்தைகளை சந்திக்கத் தயங்கினான்.
“உங்க பாவப்பட்ட பணத்தில் வாங்கி தரதுக்கு தராமலே இருக்கலாம்” என்று இப்போதும் அவனை குத்தி பேசினாள்.
“தர்ஷிம்மா…” விசாலாட்சி பேத்தியை அடக்கினார்.
“உண்மைதானே” என்ற வசீ, “நான் இன்னொரு நாள் பார்க்கிறேன் பாட்டி” என்று வெளியில் செல்ல… அவர்களும் அவன் பின்னே சென்றனர்.
“விநோதனுக்கு திதி கொடுத்துட்டியா?”
பாட்டி மெதுவாக அவளிடம் கேட்டிருந்தாலும், அவர்களுக்கு இரண்டடி முன் சென்று கொண்டிருந்த வசீக்கும் அவரின் கேள்வி நன்றாகவே கேட்டது.
ஒரு கணம் அவனின் நடையின் வேகம் குறைந்து சீரானது.
அவர் விநோதன் என்றதும் அன்றைய நாளின் அவனின் இறப்பு, இப்போது அவன் இல்லை என்கிற நிஜம் அவளிடம் மலுக்கென கண்ணீரை உதித்திருந்தது.
விசாலாட்சி ஆதர்ஷினியின் அழுகையை காண்பதற்கு முன்…
“அம்மா உங்களுக்கு போன்” என்கிற அழைப்பில் அவர் அலுவலக அறை நோக்கி நகர்ந்திட, அங்கிருந்த மரத்திற்கு கீழிருந்த மேடையில் கண்ணீர் வழிய அமர்ந்துவிட்டாள் ஆதர்ஷினி.
அவளின் அருகில் வசீ அமர்வதை உணர்ந்தாலும் அவளிடம் மாற்றமில்லை.
சில நொடிகளில் வசீ அவளிடம் கேட்ட கேள்வியில் அழுகை, வருத்தம் மறைந்து சிலையென அசைவற்று அதிர்ந்து நின்றாள் ஆதர்ஷினி.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
18
+1
+1

