
உயிர் உறை 12
நேசப்பிழை 5
வசீக்கு நூலிழையில் தப்பித்த உணர்வு. காற்றை உதடு குவித்து ஊதி தன்னை ஆற்றுப்படுத்திக்கொண்டான்.
பாலா இப்படி தன்னை கண்காணிப்பான் என்று வசீ எதிர்பார்க்கவே இல்லை.
பாலா கேட்டதும், வசீ பதில் சொல்ல முடியாது தடுமாறியது சில நொடிகள் தான்…
“நட்பில் மட்டுமில்ல பாலா… எந்த உறவா இருந்தாலும் நம்பிக்கை ரொம்ப முக்கியம். நீயெப்பவுமே என்னை நம்ப வேண்டாம். நம் போன்ற ஆட்களுக்கெல்லாம் நட்புங்கிற பந்தம் கூட ஆபத்து தான்” என்றான்.
வசீ இப்படியொரு பதிலை சொல்வானென்று பாலா நினைக்கவில்லை.
வசீ சொல்லியது முற்றிலும் உண்மையே. இன்றில்லை என்றாவது ஒருநாள் வசீயின் நோக்கம் தெரியவருமாயின் அங்கு அவர்களின் நட்பு காணமல் போவது உறுதி. அதற்காக மட்டுமே வசீ இவ்வாறு கூறினான். ஒருவகையில் உண்மையையே கூறியிருந்தான்.
முத்துச்சாமி வெளியில் வருவதை கண்டு எழுந்து செல்லும் வசீயை பார்க்க…
பாலாவுக்கு என்னவோ போலிருந்தது.
‘தான் இப்படி சந்தேகப்பட்டு கேட்டிருக்கக்கூடாதோ?’ என வருந்தினான்.
ஓடிச்சென்று அவனின் தோள்மீது கை போட… லாவகமாக விலகிக்கொண்டான் வசீகரன்.
‘ரொம்பத்தாண்டா’ என்று நினைத்த பாலா, அவனை முறைத்துக்கொண்டு முத்துச்சாமியின் அருகில் அவனுக்கு முன் சென்றான்.
“தலைவரை போய் பார்த்திட்டு வந்திடலாம். காலையிலே போக வேண்டியது.” முத்துச்சாமி சொல்லிக் கொண்டிருக்க…
வேகமாக தன்னுடைய வண்டியில் கேட்டை இடித்துக்கொண்டு உள் நுழைந்த ஆதர்ஷினி, வாசலில் நின்றிருந்த மூவரையும் பார்வையால் எரித்து… வண்டியை ஒழுங்காக நிறுத்தாது விறுவிறுவென உள் சென்றாள்.
செல்லும் முன் அவள் வசீயை பார்த்த பார்வையில் தீயின் ஜூவாலை. வசீ முகத்தை திருப்பிக்கொண்டான்.
அவளுக்கு பற்றிக்கொண்டு வந்தது.
“ரொம்ப கோபமா இருக்காள் நினைக்கிறேன்.”
முத்துச்சாமி சொல்லிட, அவள் நிறுத்தாமல் கீழே விழுந்திருந்த வண்டியை தூக்கி ஸ்டேண்ட் இட்டு நிறுத்தினான் வசீ.
“இன்னைக்கு நாங்க போயிருந்த கல்யாணத்துக்குத்தாங்க பாப்பா வந்திருந்தது.” பாலா சொல்ல,
“அவங்க போயிருந்த கல்யாணத்துக்குத்தான் நாம போயிருந்தோம்” என்று வசீ திருத்திக் கூறினான்.
“சரி விடுங்க… நானும் மாறப்போறதில்லை, அவளும் எனக்காக இறங்கி வரப்போறதில்லை” என்ற முத்துச்சாமி, “சீக்கிரம் கல்யாணம் செய்து அனுப்பி வைப்போம். போற இடத்திலாவது அவளுக்கு பிடித்த மாதிரி சந்தோஷமா இருக்கட்டும்” என்று பேச்சுவாக்கில் கூறியவர் பாலாவுடன் வண்டியில் அமர… வசீ தன்னுடைய இருசக்கர வாகனத்தை உயிர்பித்தான்.
மேலிருந்து யாரோ பார்க்கும் பார்வையை உணர்ந்த வசீ… அது ஆதர்ஷினி என்று அறிந்தும் திரும்பிப் பாராது சென்றான்.
அவனுக்கு அவள்மீது காதல் இருக்கிறது. ஆனால் அதனை ஏற்கும் நிலையில் அவனில்லை. அதுவும் நேற்று வந்த அலைப்பேசி அழைப்பு அவனின் கவனம் சிதறி காதலென்று மனம் லயிப்பதை தடை செய்திருந்தது.
அதுவும் இன்று காலை தன்னை மறந்து, அவளின் கலங்கிய விழிகள் கண்டு அவன் தன் காதலை அக்கறையாக வெளிப்படுத்தியிருக்க, அத்தோடு மண்டபத்தில் அவள் அவனை பார்த்த கொன்று புதைக்கும் பார்வையை நினைக்கையில், தன்னுடைய எண்ணம் ஈடேறும் வரையில் காதலிலிருந்தும் அவளிடமிருந்தும் தள்ளி நிற்க வேண்டும். அதற்காகவே இப்போது அவள் பார்வையை உணர்ந்தும் புறக்கணிக்கின்றான்.
ஆதர்ஷினிக்கு கண்ணீர் முட்டி நின்றது.
காலையில் அவன் பேசியதும், இப்போது அவன் விலகுவதும் அவளை வதைத்தது. காலையில் காதல், மாலையில் விலகல். வசீயை விளங்காது தவித்தாள்.
அவளே காதலில் ஒரு தெளிவு நிலைக்கு வந்திருக்க… அதனை குழப்புவது போலிருந்தது வசீயின் நடவடிக்கைகள்.
இரண்டு நாட்கள் கடந்திருக்க… வசீ முன்பு போல் ஆதர்ஷினியின் திசை பக்கம் கூட திரும்புவதில்லை.
ஏன் ஏன் என்று தவித்துப் போனாள்.
இரண்டு நாட்களாக அவனின் ஒதுக்கத்திற்கு காரணம் தெரியாது அவனைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க அனைத்தும் மறந்தாள். விநோதனை கூட மறந்திருந்தாள். அவளின் நினைவில் எஞ்சி நின்றதெல்லாம் வசீகரன் மட்டுமே.
நடுவில் பாலா ஆதர்ஷினியிடம் பேச எத்தனையோ முயற்சித்தும் அவள் பிடிகொடுக்கவில்லை.
நெருங்கி வந்து வசீ தூரம் செல்ல… அவன் மீது உண்டான கோபத்தையும் சேர்த்து பாலாவிடம் காட்டினாள்.
“எங்க தொழிலே இதுதானா பாப்பா. நாங்க நினைத்தாலும் விடமுடியாது. இது உனக்கும் தெரியும். அப்புறம் ஏன் பாப்பா பேச மாட்டேங்கிற. ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் ரொம்ப நாளுக்கு அப்புறம் பேசுன. இப்போ திரும்பவும் கோபப்படுற” என்று வருத்தமாக பேசினான்.
“உன்னால் விடமுடியாதுன்னா, என்னாலும் பேச முடியாது. சும்மா மூஞ்சியை தொங்கபோட்டுகிட்டு பாவமா என் முன்னால் வந்து நின்னு நடிக்காதே. இந்த மூணு நாளில் நீ ரெண்டு கொலை பண்ணியிருக்க. ஒரு கொலைகாரனோட பேச எனக்கு விருப்பமில்லை” என்று முகத்திற்கு நேராக மொழிந்து சென்றுவிட்டாள்.
பாலாவிற்கு முகமே கசங்கிப்போனது.
“விடுடா… நமக்கெல்லம் உறவுமுறை செட் ஆகுதுன்னு சொல்வியே! அப்புறமும் என்ன பீலிங்ஸ்” என்று வசீ தான் அவனைத் தேற்றினான்.
அன்று மாலை செய்தியில், எதிர்கட்சியின் தலைவர் மாசிலாமணி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி பாலாவை மட்டுமில்லாது முத்துச்சாமியையும் நடுங்க வைத்தது.
இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவரை நேரில் சந்தித்து, டீல் பேசி வந்திருக்க… இன்று அவர் இறந்திருகிறார் என்பதை அவர்களால் ஏற்க முடியவில்லை. அவரால் எத்தனை லாபம் முத்துச்சாமிக்கு.
அதோடு அவரிடம் பொருள் கைமாறியிருக்க… இன்னும் அதற்குரிய பணம் கைக்கு வரவில்லை. மாசிலாமணி இவ்விடயத்தில் யாருடனும் கூட்டு வைக்காததால் அதனை யாரிடம் இப்போது வாங்குவது என்றும் தெரியவில்லை. பல கோடியாயிற்றே முத்துவிற்கு மூச்சடைக்கும் போலிருந்தது.
“போச்சு பாலா… மொத்தமா புது சரக்கெல்லாம் அவர்கிட்ட தான் கொடுத்து வைத்தோம். இப்போ எங்கன்னு போய் தேடுறது.” முத்துச்சாமி புலம்பித் தீர்த்தார்.
வசீ அமைதியாக பார்த்திருந்தானே தவிர, எதுவும் ஆறுதலாக கூறவில்லை.
வசீயின் கண்முன்னே இரண்டு மணி நேரத்திற்கு முன்பு நடந்த நிகழ்வு காட்சிகளாக விரிந்தது.
அன்று முத்துச்சாமி மொட்டையாக தலைவரை பார்க்க வேண்டுமென்று அழைத்துச் சென்ற பின்னரும் கூட வசீக்கு எதற்காக வந்திருக்கோமென்று தெரியாது.
மாசிலாமணி இப்போது அரசியலில் இல்லையென்றாலும், அவர் கட்சியில் இருந்தவரை அவருக்கு கொடுக்கப்பட்ட மரியாதைகள் இன்றும் கொடுக்கப்படுகிறது.
வயதின் மூப்பு காரணமாக அரசியலிலிருந்து விலகிவிட்டவர், பணியாட்களையும் குறைத்துவிட்டார். எதாவது அவசரம் என்றால் முத்துச்சாமி அவரது ஆட்களுடன் பக்கபலமாக இருந்திட அவருக்கு தனியாக அடியாட்கள் வைத்துக்கொள்ள அவசியமின்றி போனது.
வீட்டு காவலுக்கு இருவர் மட்டுமே! சமைப்பதற்கும், தோட்டத்திற்கும் கணவன் மனைவி இருவர். அவர்களும் வீட்டின் பின்புறம் இருக்கும் சிறிய வீட்டில் தங்கிக்கொள்வர்.
மாசிலாமணிக்கு குடும்பமென்று யாருமில்லை. மனைவி பத்து வருடங்களுக்கு முன்பே இறந்திருந்தார்.
அவரின் பாதுகாப்பான தனிமையை முத்துச்சாமி தன்னுடைய தொழிலுக்கு பயன்படுத்திக் கொண்டார்.
மாசிலாமணிக்கும் நல்ல லாபம் கிட்டிட முத்துச்சாமிக்கு துணை நின்றார்.
நான்கு நாட்களுக்கு முன்பு தான் புதிதாக சரக்கு வந்திருக்க… அதனை மாசிலாமணியிடம் கொடுத்து பத்திரப்படுத்தி வைத்தார் முத்துச்சாமி.
முத்துச்சாமிக்கு வேண்டிய போது, மாசிலாமணி தான் அதனை கைமாற்றுவார். முத்துச்சாமி தங்களுக்கு வேண்டிய வகையில் அதனை பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வார்.
இம்முறை மாசிலாமணியே தன் வழியில் விற்று லாபம் கொடுப்பதாக பேசியிருக்க… அதைப்பற்றி முடிவெடுக்கவே அன்று அவரை சந்தித்தனர்.
மாசிலாமணி சொல்லிய முறையில் லாபம் இரண்டு மடங்கு வருவதைப்போலிருக்க முத்துச்சாமியும் ஒப்புக்கொண்டார்.
கைமாற்றினால் தான் பணமென்று மாசிலாமணி சொல்லிட… அவர்மீது நம்பிக்கை இருந்ததால் முத்துச்சாமியும் பண விடயத்தில் கறாராக இல்லாமல் மெத்தனமாக இருந்துவிட்டார்.
இப்போது அதுவே அவருக்கு பெரும் இடியாக அமைந்துவிட்டது.
மாசிலாமணி பொருளை பதுக்கி வைத்திருந்த அறைக்குள் மூவரையும் அழைத்துச் சென்று காட்டிட… அதனின் காற்றை முதல் முறையாக சுவாசித்த வசீக்கு இருமல் வந்துவிட, கண்கள் சொருகுவது போலிருந்தது. உடனே வெளியே வந்துவிட்டான்.
ஆனால் அவ்வறையில் மலைபோல் குவிந்து கிடந்தவை வசீயின் மனதை பிசைந்தது. இதனால் எத்தனை பேர் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.
தன்னை திடப்படுத்திக்கொண்டு மீண்டும் உள்ளே சென்றான்.
“தம்பி புதுசு போல…” மாசிலாமணி கேட்டிட,
“பழக்கப்படுத்திக்கிறேன்” என்றான் வசீ.
அதில் முத்துச்சாமிக்கு வசீயை எண்ணி பெருமை.
தனக்காக அவனை மாற்றிக்கொள்கிறானே. ஒரு விசுவாசி இப்படித்தான் இருக்க வேண்டுமென்கிற அவரின் எண்ணத்தில் வசீ பல படிகள் முன் சென்றிருந்தான்.
“இப்போ ஓகேவா?” பாலா கேட்டிட வசீ தலையாட்டினான்.
ஆனால் முகத்தில் கைக்குட்டை கொண்டு சுவாசம் உள்ளிழுக்காதவாறு கட்டிக்கொண்டான்.
அதற்கு பிறகு அவர்கள் பேசியதெல்லாம்… எங்கெங்கு எப்படி பொருள் இடமாறுகிறது என்பது. கிட்டத்தட்ட இந்தியா முழுவதுமே அவர்களின் கட்டுப்பாட்டில் வந்திருந்தது.
வசீக்கு நரம்புகள் புடைத்தது. ஆனால் வீரியத்தை விட காரியம் பெரிதல்லவா, தன்னை அடக்கி கட்டுக்குள் நின்றான்.
அதற்கடுத்த இரண்டு நாட்கள், மாசிலாமணியை இன்ச் பை இன்ச்சாக நோட்டம் விட்டதில் மதிய உணவுக்கு பின்னர் மட்டுமே அவர் தனியாக இருக்கிறார் என்பது. அந்நேரத்தை வசீ தனக்கு பயன்படுத்திக்கொண்டான்.
எப்படியோ காவலாளியின் கண்ணில் பாடாது மாசிலாமணியின் வீட்டிற்குள் வந்தவன், அவரிடம் முத்துச்சாமி ஒரு விடயம் சொல்ல அனுப்பியதாக சொல்லி உள்ளே சென்று அமர்ந்தான்.
மாசிலாமணி வசீயிடம் பேசுவதற்கு ஏதுவாக அவன் முன் அமர்ந்தது தான் தாமதம், தன் பின்னாலிருந்து துப்பாக்கியை எடுத்த வசீ அவர் உணரும் முன் நெற்றி பொட்டில் சுட்டிருந்தான்.
நொடியில் உயிர் பிரிந்தது. இருக்கையின் பின்னால் அவரின் தலை சரிய, திருப்தியாக பார்த்துவிட்டு உள்ளிருந்து வெளியில் வந்தவன், வீட்டிற்கு வலது பக்கமிருந்த தோட்டத்தின் புதர்களுக்கு நடுவில் மறைந்து, மதில் சுவர் தாண்டி சென்றிருந்தான்.
மாலை மாசிலாமணிக்கு தேநீர் கலக்க வேண்டுமென, பின்னிருந்த வீட்டிலிருந்து வந்த சமையல் பெண் நடுகூடத்தில் இறந்து கிடந்த மாசிலாமணியின் உடலை கண்டு வீலென்று கத்தியதில் விடயம் மெல்ல அனைவருக்கும் பரவியது.
இங்கு அவரை கொன்றது யாரென்று தெரியாது முத்துச்சாமி தலையை பிய்த்துக்கொள்ளாத குறையாக புலம்பிக் கொண்டிருக்க… அதனை வசீ உள்ளுக்குள் ரசித்திருந்தான்.
‘புலம்புடா… உன்னால் எத்தனை குடும்பம் புலம்பியிருக்கும். அழிந்திருக்கும். இது சாம்பிள் தான். இன்னும் இருக்கே! உன் புலம்பலை கொஞ்சம் மிச்சம் வை.’ தனக்குள் கழுகாய் உருத்து பார்த்தான் அவரை.
பாலா தான் பொருளை எப்படியும் கண்டு பிடித்துவிடலாம் என்று முத்துவை தேற்றிக் கொண்டிருந்தான்.
வசீ மகிழ்வோடு அவர்களை பார்த்திருக்க…
“என்னடா வசீ பார்த்துட்டே நிக்குற, எதாவது சொல்லுடா?” என்றான் பாலா.
“என்ன சொல்ல பாலா? ஷாக்கிங்கா இருக்கு. எப்படி பொருளை மீட்கப்போறோம்? அந்த யோசனை தான்” என்று உள்ளுக்குள் பொங்கிய சிரிப்பை மறைத்தவனாக வசீ கூறினான்.
“அவர் வீட்டுக்கே சென்று அங்கிருக்கும் பொருளை எடுக்கணும். அதுவும் இன்று இரவே செய்யணும்” என்றார் முத்துச்சாமி.
“நடந்திருப்பது கொலை. வீட்டிற்கு போலீஸ் சீல் வைத்திருப்பதா நீயூஸில் சொன்னாங்க. இப்போ எப்படி வீட்டிற்குள் போக முடியும்?” தற்போதைய நிலையை விளக்கினான் பாலா.
“அதுக்காக அப்படியே விட சொல்றியா? எத்தனை கோடி” என்று விஷமத்தை ஒளித்தவனாக பேசிய வசீ… அங்கு அவர்களுக்கு தான் கொடுக்கப்போகும் அதிர்ச்சியை நினைத்து புன்னகைத்துக் கொண்டவனாக, “நைட் யாருக்கும் தெரியாமல் போவோம்” என்று பாலாவை இதற்குள் இழுத்துவிட்டான்.
“போயி… ஒரு கிலோ ரெண்டு கிலோ இல்லை. கையில் பிடிச்சுக்கிட்டு வருவதற்கு” என்றான் பாலா.
“அதுக்கு நான் பிளான் வைத்திருக்கேன். முதலில் அங்கு போவோம்” என்று அழுத்தமாகக் கூறிய வசீயை வழக்கம்போல் மெச்சுதலாக ஏறிட்டார் முத்துச்சாமி.
“எப்படியும் சரக்கை நான் கொண்டு வர்றேன்” என்ற வசீயின் கையை பற்றிய முத்துச்சாமி, “உன்னைத்தான் நம்பியிருக்கேன்” என்றார்.
இந்த நம்பிக்கைத்தானே வசீக்கு வேண்டும்.
அர்த்தம் நிறைந்த மென் சிரிப்பை அவருக்கு அளித்தான்.
******************
அன்று வானொலி நிலையம் சென்று திரும்பிய ஆதர்ஷினி காலை உணவு வேண்டாமென்று அறைக்குள்ளே முடங்கிவிட, மகா மகளை தேடிச் சென்றார்.
அப்போது அவள் ஆசிரியர் சம்பந்தரிடம் அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தாள்.
மகள் பேசி முடிக்கட்டுமென்று மகா அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திட, அன்னையின் வருகை உணர்ந்த ஆதர்ஷினி ஒரு நிமிடமென்று விரல் காண்பித்தாள்.
அன்றைய மாதத்திற்கான கட்டுரையை அவர் கேட்க, “இந்த மாதம் முடியாது, அடுத்த மாதம் முயற்சிக்கிறேன்”என்று பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“எதாவது பிரச்சினையா தர்ஷிம்மா?”
அவளின் நலம் விரும்பும் சிலரில் அவரும் ஒருவராயிற்றே! அவரிடம் மறைக்கத் தோன்றவில்லை அவளுக்கு.
வசீயின் மீதான பிடித்தத்தையும், தனக்கிருக்கும் குழப்பத்தையும் அவள் சொல்லி முடிக்கும் போது தான் மகா வந்தார்.
“இது தப்பில்லைம்மா. இயற்கையின் இயல்பு இதுதான். உன் மனதிற்கு சரியென்பதை செய்” என்றார். விநோதனின் மீது வைத்த காதலுக்காக, அவன் உயிரோடில்லை என்ற நிலையில் ஆதர்ஷினி வாழ்க்கையை துறந்து தனித்து நிற்பதில் அவருக்கு உடன்பாடில்லை. ஆதலாலே அவளின் எண்ணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.
அவளைப்பற்றிய வேதனை பக்கங்கள் அனைத்தையும் அறிந்தவராயிற்றே. அவள் நன்றாக இருக்க வேண்டுமெனத்தானே நினைப்பார்.
மகா வந்ததால் ஆதர்ஷினியால் வசீயை பற்றி முழுதாக, அவனின் தொழில் செயல்கள் ஆகியவற்றை சம்பந்தரிடம் சொல்ல முடியாது போனது. ஒருவேளை வசீயின் அடிதடி பக்கங்களை சொல்லியிருந்தால், அவரும் பூமியை போல் எதிர்ப்பை காட்டியிருப்பாரோ!
ஆதர்ஷினி அமைதியாக இருந்திட…
“நாளைய நாள் நினைவிருக்கா தர்ஷிம்மா?” என்று அவர் கேட்ட பின்பு தான் சுவரில் மாட்டியிருந்த நாள்காட்டியை பார்த்தவளுக்கு பக்கென்று இருந்தது.
ஒருவாறு தன்னை சமாளித்து சம்பந்தரிடம் “நினைவிருக்கு அங்கிள்” என்று தடுமாறி கூறியவள் இணைப்பை வைத்திருந்தாள்.
‘இந்த நாளை நானெப்படி மறந்தேன். அந்தளவுக்கா வசீ மீதான எண்ணத்தில் என்னை தொலைத்திருக்கேன்.’ தலையை பிடித்துக்கொண்டு மகாவை மறந்தவளாக மெத்தையில் அமர்ந்திட்டாள்.
நெஞ்சம் விம்பியது. கண்கள் சரசரவென கண்ணீர் மழையை பொழிந்தன.
“விநோ…” அவ்வறையே கிடுகிடுக்க நெஞ்சை பிடித்துக்கொண்டு கத்தினாள்.
மகா பயந்தவராக ஆதர்ஷினியின் அருகில் வேகமாக சென்று தன்மீது சாய்த்துக்கொண்டார். பேச முடியாத அவரால் நினைத்ததும் வாய் திறந்து மகளுக்கு வார்த்தையால் ஆறுதல் அளித்திட முடியவில்லை.
மகளின் தலையை தனக்குள் புதைத்தவராக, மற்றொரு கையால் அவளின் முதுகை ஆதுரமாய் நீவிவிட்டார்.
அன்னையின் தீண்டலில் சுயமிழந்த தன்னிலையை வெறுத்தவளாக,
“அம் ஓகேம்மா” என்றவளாக விலகி அமர்ந்தாள்.
முகத்தை, அணிந்திருந்த துப்பட்டாவால் நன்கு அழுத்தி துடைத்து நிமிர்ந்து மகாவை பார்த்து சிரிக்க முயன்றாள்.
என்னவானது என்று மகா சைகையால் வினவ, “விநோ நினைவு” என்று மட்டுமே கூறினாள்.
அதற்கு மேல் கேட்டு அவளை வருந்த வைக்க விரும்பாத மகா, “இல்லாதவருக்காக உன்னை வருத்திக்காத!” என்றதோடு அப்பேச்சினை முடித்துக்கொண்டார்.
இந்நிலையில் சாப்பிட அழைத்தாலும் அவள் வரமாட்டளென்று மகளின் கன்னம் வருடி வெளியேறியவர் பழச்சாறு அடங்கிய குவளையை வேலை செய்யும் பெண்மணியிடம் கொடுத்து அனுப்பினார்.
இப்போது ஆதர்ஷினிக்கு தனிமை அவசியமென உணர்ந்தவர், மீண்டும் தானே சென்றால் விநோதனை மறப்பதை பற்றி ஏதேனும் பேசி அவளை வருந்தச் செய்திடுவோம் என்பதாலேயே தான் செல்லாது பணிப்பெண்ணிடம் கொடுத்து அனுப்பினார்.
வேலை விடயமாக வெளியில் சென்றிருந்த முத்துச்சாமி மதிய உணவிற்காக வந்திருந்த போது…
“தர்ஷிக்கு திருமணம் செய்து வைக்கலாமே!” என்று மகளின் கல்யாணப் பேச்சினை ஆரம்பித்தார் மகா.
மகள் தனிமையில் இருக்கும் வரை விநோதனை மறக்கமாட்டாள். அது அவளின் எதிர்கால வாழ்வுக்கு உகந்தது அல்ல என நினைத்த மகாவிற்கு மகளை மாற்ற கிடைத்த ஒரே வழி திருமணம் செய்து வைப்பது.
மகா எதற்காக திடீரென மகளின் கல்யாணத்தை பற்றி பேசுகிறார் என்பது தெரியாத போதும்,
“நானும் நினைத்தேன். சீக்கிரம் நல்ல செய்தி சொல்றேன்” என்று மனைவியிடம் கூறினார்.
“வயது இருபத்திமூன்று ஆகுது. கொஞ்சம் சீக்கிரம் பாருங்க” என்றவர் கணவருக்கு உணவெடுத்து வைக்கலானார்.
‘மகளின் ஏறும் வயது தான் திருமணப் பேச்சிற்கு காரணம்’ என நினைத்த முத்து… “ரெண்டு மூணு இடம் யோசித்து வைத்திருக்கேன். எது ஒத்து வரும் பேசி பார்த்து, ஒரு வாரத்தில் பதில் சொல்றேன்” என்றார்.
அப்போதுதான் மகாவிற்கு நிம்மதியானது.
இதனை அறியாது படுக்கையில் விழுந்து கிடந்த ஆதர்ஷினிக்கு நினைவெல்லாம் விநோதனே.
விநோதனின் விலகல் தான் ஆதர்ஷினிக்கு அவனை நெருங்கத் தூண்டியது. இப்போதும் அதே தான் வசீயின் விடயத்திலும்.
விநோதனின் பெயருக்கு வசீயின் உருவத்தை பொருத்தி பார்க்கின்றாளோ. அதனால் தான் அவளால் வசீயை விரைவில் ஏற்றுக்கொள்ள முடிந்ததோ?
நாம் ஏன்? எப்படி? என்று பல காரணங்களை தேடலாம்… யூகிக்கலாம். ஆனால், காதல் வருவதற்கு ஒரே காரண தான். இவன்(ள்) தான் தன் இணை என்று மனதில் எழும் இயல்பான உணர்வு. அது பார்த்திடாதா விநோவின் மீதே சாத்தியமானது எனும்போது, அவளின் கண் முன் நடமாடிக் கொண்டிருக்கும் வசீயின் மீது ஏன் தோன்றாது.
இங்கு விநோவும், வசீயும் இரு வேறு துருவத்தினர் என்பது மட்டுமே அவளின் தயக்கம்.
அதனையும் வசீ உடைத்துவிட்டான்.
இருப்பினும் அவனை நெருங்க தடையாய் இருப்பது அவன் செய்து கொண்டிருக்கும் ரவுடிசம். சிறு வயது முதல் தன் தந்தையிடம் பார்த்து பார்த்து அவள் வெறுக்கும் ஒன்று, வசீயின் விடயத்தில் அதனை ஒதுக்கி வைத்துவிட்டு தன் காதலை வெளிப்படுத்தி அவனை ஏற்றுக்கொள்வாளா?
*****
மாசிலாமணி இறந்த அன்று, அவரின் வீட்டைச்சுற்றி ஊடகவியலாளர்கள் வருவதும் போவதுமாக இருந்ததோடு, தடயம் எடுக்கிறோம்… துப்பு துலக்குகிறோம் என்று ஃபாரன்சிக் துறை நிபுணர்களும், காவலர்களும் அங்கு இரவில் இருந்த வண்ணமே இருந்திட… அவர்கள் திட்டமிட்டபடி பொருளை எடுப்பதற்கு செல்ல முடியவில்லை.
பாலா நோட்டமிட்டு வருகிறேன் என்று சென்று வந்தவன், “இன்னைக்கு முடியாது” என்று சொல்ல… “போலீஸ் பார்வை அடங்கட்டும். அந்த ரூம் இருப்பதே தெரியாது. அதனால் கொஞ்சம் பொறுத்து நாம மாட்டாத வகையில் உள்ள போவோம்” என்று முத்துச்சாமியே தெரிவித்திட, இரு நாட்கள் அமைதியாக இருந்தனர்.
அன்றைய இரவு நள்ளிரவிற்கு மேல் வசீ… பாலா, குமார், வாசுவை அழைத்துக்கொண்டு மாசிலாமணியின் வீட்டிற்கு பக்கவாட்டில், அன்று அவரை கொல்வதற்காக பயன்படுத்தி உள்ளே நுழைந்த வழியில் இன்று அவர்களுடன் நுழைந்தான்.
“உனக்கெப்படி இந்த வழி தெரியும்?” பாலா கேட்டிட…
“சம்பவம் பண்ண போறதுக்கு முன்னாடி ஒரு இடத்தை பற்றி ஆராய்வோம் தானே! ரெண்டு நாட்களா இந்த வேலையாத்தான் இருந்தேன்” என்று மாசியை கொலை செய்திட அவன் வகுத்த திட்டத்தின் உண்மையை இங்கு பயன்படுத்திக் கொண்டான்.
மூவருமே வசீ சொல்லியதை நம்பினர்.
கொலை என்றதுமே, அவ்வீட்டில் வேலை செய்பவர்கள் எல்லாம் வேலையை விட்டு சென்றிருந்தனர்.
கொலையின் பேச்சு இரண்டு நாட்களில் அடங்கிவிட… காவலுக்கு இருந்த காவல் துறையைச் சேர்ந்தவர்களும் இன்று காவலுக்கு இல்லை.
“நல்லா பிளான் பன்ற வசீ.” பாலா வசீயை சந்தேகப்பட்டதற்காக, அவன் செய்யும் ஒவ்வொன்றையும் பாராட்டினான். இருப்பினும் வசீ முன்னது போல் பாலாவுடன் நெருங்கவில்லை. முடிந்தவரை எட்டவே நின்றான்.
பாலா உணர்ந்தாலும் அதற்காக வருந்தவில்லை. பாலாவை பொறுத்தவரை, இந்த தொழில் பந்த பாசத்திற்கு அப்பாற்பட்டது. அதில் அவன் தெளிவாக இருக்கின்றான்.
தோட்டத்தினை கடந்து வீட்டிற்கு முன் வந்து நின்றனர்.
கதவு சீல் வைக்கப்பட்டு, தடையிடப்பட்டிருப்பதற்கான பேரிகேட் ரோப் வழியை மறித்து சுற்றப்பட்டிருந்தது.
“சீல் உடைத்தா தெரிந்திடும். இப்போ எப்படி உள்ளப்போறது?”
குமார் வினவிட, வசீ அவ்வீட்டின் இண்டு இடுக்கெல்லாம் தெரிந்துகொண்டே… “நீ அந்தப்பக்கம் போய் வழி கிடைக்குதா பார்” என்று வாசுவை அனுப்பி வைத்தான்.
சென்று வாசுவும் இரண்டு நிமிடங்களில் வந்து,
“அங்கிருக்க மரத்தின் கிளை வழியா மேலிருக்கும் சன்னல் வழி உள்ள போகலாம்” என்று கூறிட, நால்வரும் அதன்படி உள்ளே வந்திருந்தனர்.
குமார் மின்விளக்கின் பொத்தானை அழுத்திட… வசீ வேகமாக அணைத்திருந்தான்.
“ஆளில்லாத, போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் வீடு. இந்நேரத்தில் வெளிச்சம் தெரிந்தா சந்தேகம் வரும்” என்றான்.
ஏற்கனவே தேடி வந்திருக்கும் பொருள் இருக்கும் ரகசிய அறை வசீக்கும், பாலாவுக்கும் தெரியும் என்பதால் இருவரும் நேராக அவ்வறையை நோக்கிச் செல்ல மற்ற இருவரும் அவர்களை பின் தொடர்ந்தனர்.
அறையை திறந்த பாலாவுக்கு அத்தனை அதிர்ச்சி.
வசீ தனக்கும் அதிர்ச்சி எனும் விதமாக விழிகள் விரித்து நின்றான். உள்ளே தனக்குள் புன்னகைத்தவனாக.
“என்ன பாலா இது? அன்னைக்கு அறை முழுக்க இருந்ததே” என்ற வசீ உள்ளே சென்று நடுவில் நின்று சுற்றிப் பார்த்தான்.
“எனக்கும் தெரியலையே வசீ” என்ற பாலா முத்துச்சாமிக்கு அழைத்து… இவ்வறைக்குள் ஏதேனும் மாத்து அறை இருக்கிறதா என்று வினவ, அவர் அப்படியெல்லாம் எதுவும் கிடையாது என்று சொல்லிட… பாலாவிற்கு விழிகள் தெறித்தது.
குமாரும் வாசுவும் என்னவென்று கேட்டிட,
“பொருள் இங்கில்லை” என்றான் வசீ.
“என்னது இல்லையா? பல கோடி ரூபாய் சரக்காச்சே!” குமார் அதிர்வாகினான்.
“இல்லை. என்ன பன்றது?”
வசீ எரிச்சலாய் தன்னைக் காட்டிக்கொண்டான்.
“சரி கிளம்பலாம். யாராவது வருவதற்கு முன் வந்த வழியே போயிடுவோம். நம்மிடத்திற்கு சென்று பேசிக்கலாம்” என்ற வசீ மூவரையும் கூட்டிக்கொண்டு நகரத்திற்கு ஒதுக்கு புறமாக இருக்கும், அவர்கள் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.
பாலா விடயத்தை முத்துச்சாமியிடம் முன்னரே தெரிவித்திருக்க, அவர் அதீத பதட்டத்தோடு… அவர்களுக்கு முன்பாக அங்கு வந்து காத்திருந்தார்.
“என்னாச்சு வசீ. பாலா என்னென்னவோ சொல்றான்?”
அவர்களை கண்டதும் ஓடிவந்தவராக வசீயிடம் வினவினார்.
“எங்களுக்கும் ஒண்ணும் விளங்கல!”
வசீ தீவிர சிந்தனையில் இருப்பதைப்போல் முகத்தை வைத்திருந்தான்.
“ஒருவேளை அவர் சரக்கெல்லாம் டெலிவரி செய்திருப்பாரோ?” பாலா சந்தேகமாகக் கேட்க… வேகமாக இருக்காது என்று மறுத்தார் முத்துச்சாமி.
“அப்படி சரக்கை கை மாத்தியிருப்பாருன்னா, நம்ம ஆளுங்களைத்தான் அவர் கேட்டிருப்பார். அவர்தான் ஆளுங்க தனியா வைத்தில்லையே!” என்ற முத்துச்சாமியின் கருத்து ஏற்பது போலிருந்தது.
“ஒருவேளை சரக்கை பரிசோதித்து வாங்குவதற்கு ஏற்றதான்னு பார்க்க எவனாவது வந்து, அவனே மாசியை போட்டுத் தள்ளிட்டு மொத்தமா சுருட்டிட்டு போயிருப்பானோ?”
வசீ அவர்களின் யோசனையின் பாதையை, தனக்கு ஏற்றவாறு திசை திருப்பினான்.
“ஒருவேளை வசீ சொல்வதும் சரியா இருக்கலாமே ஐயா?”
பாலாவை கவலை படிந்த முகத்துடன் ஏறிட்ட முத்துச்சாமி…
“அப்படின்னா, யாரு வரா… எப்போ மீட்டிங் அப்படின்னு தலைவர் எனக்கு தகவல் கொடுத்திருப்பாரே” என்றார் முத்துச்சாமி.
“அவரு மொத்தமா லாபம் பார்த்திட உங்களிடம் மறைத்திருந்தால்?” பற்றி எரிந்திட எண்ணெய் ஊற்றினான் வசீ.
“அவர் என்னை ஏமாற்ற நினைக்கமாட்டார்.”
மாசிலாமணியின் மீது நம்பிக்கை கொண்டவராக முத்துச்சாமி கூறினார்.
“அவர் ஏன் உங்களை ஏமாற்ற நினைத்திருக்கக்கூடாது?”
இம்முறை வசீயின் கூற்றை ஏற்றவனாக பாலாவும் பேசிட, முத்துச்சாமி சிந்தனைக்குள் ஆழ்ந்தார்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
15
+1
+1

