Loading

உயிர் உறை 11

நேசப்பிழை 4

கல்லூரி தோழி ஒருத்திக்கு திருமணமென்று ஆதர்ஷினி வந்திருந்தாள்.

அவள் வர காரணமே உடன் படித்தவர்களை பார்க்கலாம் என்பதோடு, திருமணமாகி பக்கத்து ஊருக்கு சென்றுவிட்ட பூமிகா இத்திருமணத்திற்கு வருவதால் தான்.

மாப்பிள்ளை பையன் பூமிகாவிற்கு அன்னை வழியில் உறவு. அதனால் கட்டாயம் வர வேண்டிய நிலை. அவள் தான் வர மறுத்த ஆதர்ஷினியை பார்த்து மாதங்கள் ஆகிவிட்டது என்று வற்புறுத்தி வரவழைத்திருந்தாள்.

ஆதர்ஷினியை பார்த்ததும் ஓடிவந்த பூமிகாவை அணைத்து விடுவித்தாள் ஆதர்ஷினி.

அதற்குள் பூமிகாவின் பின்னால் வேகமாக வந்த அவளின் கணவன் சூரஜ்,

“மெதுவா நடன்னு ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாதா பூமி” என்று அதட்டினான்.

“தர்ஷியை பார்த்ததும் எக்ஸைட் ஆகிட்டேன். எதுக்கு கோபப்படுறீங்க?” பூமிகா கணவனிடம் முறுக்கிக்கொண்டவளாக வேறு பக்கம் திரும்பி நின்றிட, “சூரஜ் சாரிடி பூமி” என்று தொண்டையில் கை வைத்து மன்னிப்பு வேண்டினான்.

“உனக்குள்ள பாப்பா இருக்குல்ல பூமி” என்றான் அக்கறையாக.

“அதை மெதுவா சொல்லியிருக்கலாமே!”

“சொன்னா கேட்டுடுவியா நீ?”

இப்போது அவனின் புஜத்தில் பூமி கிள்ளி வைத்தாள்.

அவன் வலிப்பதைப்போல் தேய்த்து வைக்க… பூமி சன்னமாக சிரித்து வைத்தாள்.

இருவரின் ஊடலும், கொஞ்சலும் பார்த்துக் கொண்டிருந்த ஆதர்ஷினிக்கு ரசிக்கும்படியாக இருந்தது.

‘இப்படியொரு அந்நியோன்ய திருமண வாழ்க்கை தனக்கும், வசீக்கும் நடுவில் இருக்குமா?’ ஆதர்ஷினியின் மனம் தன்னைப்போல் ஏக்கம் கொள்ள அப்பட்டமாக அதிர்ந்து போனாள்.

ஆதர்ஷினியின் திடீர் அதிர்வில் அவளை உலுக்கி நிகழ் மீட்ட பூமி என்ன என்று வினவ ஒன்றுமில்லை என்று ஆதர்ஷினி சொன்னாலும், அவளிடம் பிறகு கேட்க வேண்டுமென நினைத்துக்கொண்டாள் பூமிகா.

அதற்குள் சென்று தண்ணீர் பாட்டில் கொண்டு வந்து ஆதர்ஷினிக்கு குடிக்க கொடுத்த சூரஜ், அவள் நீர் அருந்தியதும்… “இப்போ ஓகே தானா தர்ஷி?” எனக் கேட்டான்.

“ஓகேதாண்ணா… சட்டுன்னு படபடப்பாகிடுச்சு சாரி” என்றாள்.

இருவரும் அவளையே பார்த்திருக்க…

“ரெண்டு பேருமே சொல்லவேயில்லை?” என்று குறைபட்டாள். பூமிகா தாய்மை அடைந்ததற்காக.

“மார்னிங் தான் டவுட் வந்து கிட் வச்சு கண்பார்ம் பண்ணோம் தர்ஷி. இன்னும் வீட்டில் கூட யாருக்கும் சொல்லல. கல்யாணம் முடிஞ்சாதான் சொல்லணும்” என்றிட, இருவரையும் மனதார வாழ்த்தினாள் ஆதர்ஷினி.

அதன் பின்னர் நண்பர்கள் வட்டம் அவர்களை சூழ்ந்து கொள்ள சூரஜ் தள்ளிச் சென்று பூமிகாவை பார்த்தபடி அமர்ந்திட்டான்.

தோழிகள் அனைவரும் கல்லூரி நாட்களின் கலாட்டாக்களை பகிர்ந்து சிரித்துக் கொண்டிருக்க… அதில் ஒட்ட முடியாது ஆதர்ஷினி தவித்து நின்றாள்.

பூமிகா கவனித்து என்னவென்று கண்களால் வினவிட, ம்ப்ச் என்று சமாளித்து வைத்தாள்.

அந்நேரம் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட, அனைவருடனும் ஆதர்ஷினியின் பார்வையும் மண்டபத்தின் வாயிலை நோக்கிச் சென்றது.

அங்கு தன்னுடைய சட்டையின் கையினை மடித்து விட்டவனாக வசீ முன்னால் வர, அவனக்கு அடுத்ததாக பாலாவும் குமாரும் இணையாக நடந்து வந்தனர்.

‘இங்கெதுக்கு?’ ஆதர்ஷினி யோசத்திட, அவர்கள் மூவரும் முன்னிருக்கையில் சட்டமாக அமர்ந்தனர்.

வந்திருப்பவர்களை பார்த்து ஆளாளுக்கு தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்.

ஒருவரின் பார்வையும் மேடையில் இல்லை. அவர்களின் மூவரின் மீதே இருந்தது.

பெண்ணின் தந்தைக்கு வந்திருப்பவர்கள் யாரென்று நன்கு தெரியும். இருப்பினும் மேடையை விட்டு இறங்காது சட்டமாக நின்றிருந்தார்.

பையனின் அப்பா தான், ‘ரவுடி பயலுங்க இங்கெதுக்கு வந்திருக்கானுங்க?’ என்று புலம்பியபடி வசீயிடம் ஓடினார்.

வசீயோ கால் மேல் காலிட்டு அமர்ந்தவன், அவரை கிஞ்சித்துக்கும் பொருட்படுத்தவில்லை.

“நீங்க எக்ஸ் எம்.எல்.ஏ முத்துச்சாமி ஆளுங்க தானே?  இங்க என்ன விஷயமா வந்திருக்கீங்க?” என்று வினவினார்.

வசீ வாய் திறக்கவே இல்லை.

அவனின் பார்வை எல்லாம் மணப்பெண்ணின் தந்தையின் மீதே!

“எதுக்கு வந்திருக்கீங்கன்னு சொன்னாதானே தெரியும்!” பையனின் தகப்பனார் கிட்டத்தட்ட இரைஞ்சினார்.

“அதை உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்லை.” பாலாவைத் தொடர்ந்து, “அதோ அங்கு நிக்கிறாரே பொண்ணோட அப்பா, அவரை வரச்சொல்லுங்க” என்றான் குமார்.

வேகமாக மேடை ஏறியவர்,

“முதலில் என்ன ஏதென்று பேசி அவர்களை அனுப்பிட்டு வாங்க. இல்லைன்னா இந்த திருமணம் நடக்காது போலிருக்கு” என்று சம்மந்தி என்ற வார்த்தையை தவிர்த்தவராக அவர் கூறிட… பெண்ணின் தந்தை வேண்டா வெறுப்பாக இறங்கி வசீயிடம் வந்தார்.

“இப்போ என்ன தான் உங்களுக்கு வேணும்?”

வசீ பாலாவை பார்த்தான்.

பாலாவோ தன்னுடைய சட்டைக்குள்ளிருந்து ஒரு காகிதத்தை அவர்முன் நீட்டிட…

“நிச்சயம் நான் கையெழுத்து போடமாட்டேன். இதை முன்னாடியே சொல்லிட்டனே!” என்றார் அவர்.

வசீ பட்டென்று இருக்கையிலிருந்து எழுந்தவனாக இரு கைகளையும் மேலே உயர்த்தி கோர்த்தவனாக சோம்பல் முறித்தவாறே,

“பையன் பேரென்ன?” என்று வினவிட,

அவ்வளவுதான் மனிதர் அரண்டு விட்டார்.

இவர்களின் வருகையால் வெளிறியிருந்த தன்னுடைய பெண்ணின் முகத்தை பார்த்தவர் வேறெதையும் யோசிக்காது அவசரமாக பாலா நீட்டிய காகித்தில் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.

“மினிஸ்டர் சொல்லியும் நீ கேட்களையாமே. அதான் இங்கு வரை வர வேண்டியதாப்போச்சு” என்ற வசீ தன்னுடைய பின்னாலிருந்து மூன்று பிங்க் வண்ண பண கட்டுகளை அவரின் கையில் திணித்தான்.

“அடிச்சி பிடுங்கிட்டோம் அப்படின்னு பெயர் வந்திடக்கூடாது பாரு” என்ற வசீ, “இதில் அளவுக்கு அதிகமாவே இருக்கு” என்று முன் சொல்ல பாலாவும், குமாரும் அவனை பின் தொடர்ந்தனர்.

நீண்ட எட்டுக்கள் வைத்து நடந்த வசீயின் கால்கள் ஒரு கணம் தேங்கி பின் தொடர்ந்தது.

வசீயின் நடையின் தடுமாற்றத்தை அவதானித்த பாலா என்னவென்று பார்க்க, இவர்களை முறைத்தபடி நின்றிருந்தாள் ஆதர்ஷினி.

“பாப்பா…” பாலாவின் வாய் சத்தமில்லாது உச்சரித்திட, அவளோ வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

முன் சென்று கொண்டிருந்த வசீக்கு…

‘ஏண்டா இங்கு வந்த?’ தன்னையே நிந்தித்தான்.

ஆனால் அடுத்த நொடியே ஆதர்ஷினியை ஒதுக்கி வைத்தான். அவனுக்கு இப்போது முத்துச்சாமி அவன்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை அதிகப்படுத்த வேண்டும். ஆழப்படுத்த வேண்டும். காதலைவிட அவனின் எண்ணம், செய்ய வேண்டியவை பெரிதாய் கண்முன் நின்றன.

முத்துச்சாமியின் உப்பளத்திற்கு நடுவில் மணப்பெண்ணின் தந்தையுடைய உப்பளம் சிறிதளவு உள்ளது.

சுற்றி கடல் போல பல ஏக்கரில் முத்துச்சாமியின் உப்பளம் பரந்து விரிந்திருக்க… இவருடையது சிறு துரும்பு தான். இருப்பினும் அந்த துரும்பு முத்துவின் கண்ணை உறுத்திட, வாங்கிட நினைத்து பல வகையில் அவரை அணுகினார்.

ஆனால் அவரோ எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. மினிஸ்டர், போலீஸ் என்று தன்னுடைய அனைத்து பலத்தையும் காட்டினார். அவர் முடியாது என்பதில் உறுதியாக நின்றிட… இன்று அவரை பணிய வைத்திட வேண்டுமென்றே அவரின் பெண்ணின் திருமணத்தை பயன்படுத்திக்கொண்டான் வசீகரன்.

இதில் அவனுக்கு உடன்பாடில்லை தான். ஆனால் செய்திட வேண்டிய சூழலில் இருக்கின்றான். அவனே வேண்டாமென்றாலும் ஒதுங்க முடியாத இறுதி கட்டத்தில் வசீகரன்.

செய்வது அநியாயம், அதில் ஒரு அப்பாவி பலியாகிடக் கூடாது என்பதற்காகவே,

“நாம கேட்டப்பவே எழுதி கொடுத்திருந்தா, பணம் கொடுத்திருப்போம் தானே” என்று பேசி, முத்துச்சாமியை சரிகட்டி, ஒப்புக்கொள்ள வைத்து அவரின் உப்பளத்திற்கும் அதிகமான தொகையை கொடுக்கச் செய்திருந்தான் வசீகரன். இதில் வசீக்கு தன்னுடைய தவறான செயல்களை நியாயப்படுத்திக்கொள்ளும் சிறு நிம்மதி.

போகும் வழியில் பாலா புலம்பித் தள்ளிவிட்டான்.

“போச்சு போச்சு… இனி பாப்பா என் முகத்திலே முழிக்காது.

வேறவழியில இதை செய்திருக்கலாமோ?

பாப்பா நேர்ல பார்க்கும் போது முகத்தை திருப்பிக்கிட்டு போகுமே.”

ஏற்கனவே ஆதர்ஷினி தன்னை இப்படியொரு நிலையில் பார்த்துவிட்டாளே என்று சஞ்சலத்தில் இருந்த வசீக்கு பாலாவின் புலம்பல்கள் கடுப்பைக் கிளப்பியது.

வண்டியை ஒட்டிக்கொண்டிருந்தவன் சட்டென்று பிரேக்கிட்டு நிறுத்தினான்.

அதில் டேஷ்போர்டில் முட்டி பின் வந்து சரிந்தான் பாலா.

“என்னாச்சி வசீ?”

பின்னால் அமர்ந்திருந்த குமார் கேட்டிட,

“இவனை கொஞ்சம் வாய் மூடிட்டு வரச்சொல்லு” என்று கடுகடுத்தான்.

“உனக்கு என்னடா, ரொம்ப நாளுக்கு அப்புறம் நேத்து தான் பாப்பா பேசுச்சு. இனி பேச எத்தனை வருஷம் ஆகுமோ!” என்று மீண்டும் புலம்பினான்.

“அவ்வளவு வருத்தப்படுறவனா இருந்திருந்தா, நீயெப்பவோ அவளுக்காக இந்த வேலை செய்றதை நிறுத்திருப்ப.” சுள்ளென்று உரைத்தான் வசீ.

“அதிலும் நீ கொலையெல்லாம் செய்யுறேன்னு தெரிந்தது வச்சிக்கோ… உன்னுடைய புலம்பலோட எண்ணிக்கை அதிகமாக வேண்டியது தான்” என்றான்.

பாலா கொலைகள் செய்வதில் வசீக்கு அத்தனை அதிருப்தி. பாலா நல்லவன் தான். ஆனால் முத்துச்சாமிக்கு என்று வரும்போது நல்லவன் பாலா காணமல் போய்விடுவான். முத்து என்ன கூறினாலும், அது கொலையாகவே இருந்தாலும் பாலா கண்ணை மூடிக்கொண்டு செய்திடுவான்.

பாலாவிற்கும் காரணங்கள் இருக்குமோ?

“நீயே போட்டு கொடுத்திடேன்!”

‘ம்க்கும் நான் மாட்டிக்கவா? இப்போதான் என் முகம் பார்க்க ஆரம்பித்தாள். அதுக்கே நான் என் கையால் வேட்டு வச்சிட்டு வந்திருக்கேன். எதிர்வினை என்னன்னு தெரியல. உன்னை கோர்த்துவிடறன்னு, நானே வலிய போய் மாட்டிக்கவா?’ பாலா சொல்லியதற்கு அவனை பார்த்தவாறே மனதில் அரற்றினான்.

தனக்கான தவிப்பு அவளிடமும் உள்ளது என்று அவளின் பார்வையாலேயே அறிந்துகொண்ட வசீக்கு, அவளுக்கு பிடிக்காத தன்னுடைய பக்கத்தை காட்டிடக் கூடாதென்று நினைத்திருக்க… இன்று  நேரிலேயே அதனை அரங்கேற்றி வந்திருக்க… ஆதர்ஷினியை நினைத்து சற்று பயம் அவனுள் எழுந்தது உண்மை தான்.

‘இவளால் தன்னுடைய காரியத்தில் கவனம் சிதறும் போலிருக்கே’ என நினைத்தவன்… எண்ணி வந்த காரியம் ஈடேறும் வரை காதலுக்கு இடமில்லை என்று திடமான முடிவை எடுத்தபின்னரே வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

வழக்கம்போல் வசீயின் எண்ணவோட்டமும்… அவனின் சிந்தையின் யோசனைகளும் பாலாவிற்கு பிடிபடவில்லை.

நண்பனென்று உடனிருக்கின்றான். ஆனால், இன்றுவரை வசீயின் பெயர் தவிர அவனுக்கு யாருமில்லை என்பதைத் தவிர அவனைப்பற்றி வேறொன்றும் அவர்களுக்கு தெரியாது.

இப்போது சில நாட்களாக அவனது நடவடிக்கைகளில் பாலாவிற்கு சந்தேகம் வந்துள்ளது. அதனை உண்மையென்று தெரிந்துகொள்ளாமல் முத்துச்சாமியிடம் சொல்ல முடியாது அமைதியாக இருக்கின்றான்.

பாலாவின் சந்தேகம் தன்மீது விழுந்துள்ளது என்பதை அறிந்தே அதனை களைவதற்காகவே மனதிற்கு ஒப்பாதா இரு காரியங்களை இன்று வசீ செய்து முடித்திருக்கிறான்.

ஒன்று லாரியில் ஏற்றிச்சென்ற சரக்கு விபத்துக்குள்ளாகி, போலீசிடம் மாட்டாவிருந்த நிலையில் அதனை எப்படியோ கைப்பற்றி முத்துவிடம் ஒப்படைத்தது. மற்றொன்று சற்று நேரத்திற்கு முன்பு கையெழுத்து வாங்கி உப்பளத்தை முத்துவின் பெயருக்கு மாற்றியது.

பாலாவிற்கு வசீயின் மீது தோன்றியிருக்கும் சந்தேகம் வலுப்பெற்றுவிட்டால்… வசீயின் திட்டங்கள் யாவும் தவிடுப் பொடியாகிவிடும்.

வசீயின் கட்டாயங்கள் யாவும் அவனென்பதை காட்டிக்கொடுத்திடாமல் இருப்பதற்கே.

யாவும் வசீயின் நியாயங்களுக்கு உட்பட்டவையே!

இதனை வசீ விரும்பி ஏற்கவில்லை. ஆனால் கட்டாயத்திற்காகவும் செய்யவில்லை.

************

ஒருவித பதட்டத்திலும் அந்த திருமணம் நல்ல முறையிலேயே நடந்திருந்தது.

அனைவரும் கிளம்பியிருக்க, நெருங்கிய உறவினர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

சூரஜ் தோழியர் இருவருக்கும் தனிமையை கொடுத்தவனாக சற்று விலகி அமர்ந்திருந்தான்.

சூரஜின் யோசனையெல்லாம் சிறிது நேரத்திற்கு முன் பார்த்த வசீயை பற்றியே.

முழுதாக எதுவும் தெரியாது அவசரப்பட்டுவிடக் கூடாது என்று அமைதியாக தனக்குள் உழன்றவனாக அமர்ந்திருந்தான்.

தள்ளி இருந்தாலும் பெண்கள் இருவரும் பேசுவது அவனுக்கு கேட்கத்தான் செய்தது.

பூமிகா ஆதர்ஷினியை திட்டிக் கொண்டிருந்தாள்.

தன்னை பார்த்த உற்சாகம் கூட இல்லாது ஏதோ நினைவில் அமைதியாகவே இருந்த ஆதர்ஷினியிடம் பூமிகா என்னவென்று விசாரிக்க, ஆதர்ஷினி தோழியிடம் பொய்யெல்லாம் சொல்லி மறைக்கவில்லை.

அவளுக்குமே தெளிவு வேண்டுமென்பதால் தன் மனதை திறந்திருந்தாள்.

“அம் இன் லவ் பூமி.”

பூமிகா அதிர்வெல்லாம் இல்லை.

“இது மூன்று வருச கதை தானே. இன்னைக்கு என்ன இதில் புதுசா தெரிஞ்சிக்க?” நொடித்துக் கொண்டாள். அடுத்த கணமே,

“இல்லாதவன் ஒருத்தன் மேல் காதல் சரியில்லை தர்ஷி. உன் வாழ்க்கை?” என இழுத்தாள் பூமி.

“நான்… விநோவை சொல்லல!”

ஆதர்ஷினி அவ்வாறு சொல்லியதும் பூமிகா மகிழ்ந்தாள்.

எங்கே விநோதனின் நினைவில், தன் வாழ்வை பாழாக்கிக்கொள்வாளோ என்று பூமிகா அவளைப்பற்றி கவலை கொள்ளாத நாளில்லையே. இன்று அவளே தான் வேறொருவனை விரும்புகிறேன் என்று சொன்னால் மகிழ்வு இருக்கத்தானே செய்யும். அதனை பூமி தன் வார்த்தைகளாலும் கூறினாள்.

“ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு தர்ஷி.” தன்னுடைய கைகளை பிடித்துக்கொண்டு கூறிய பூமியின் மகிழ்ச்சி தர்ஷியிடம் இல்லை. அதனை கவனித்த பூமி, “வேறெதுவோ உன்னை வாட்டுது. என்னன்னு சொல்லுடா?” எனக் கேட்டாள்.

“எனக்கு யார் மேல் காதல் வந்திருக்கு தெரியுமா?” அப்பாவியாக வினவிய ஆதர்ஷினியை குறுக்கீடு செய்யாது, நீயே சொல் எனும் விதமாக இருந்தாள் பூமிகா.

“வசீகரன்.”

வசீகரன் முத்துச்சாமியிடம் வேலைக்கு சேர்ந்த சமயம், பூமிகா திருமணமாகி சென்றிருந்தாள். அதனால் அவளுக்கு ஆதர்ஷினி சொல்லியதும் சட்டென யாரென்று பிடிபடவில்லை.

“யாருன்னு தெரியலையே தர்ஷி?”

“இப்போ பாலாவோட ஒருத்தர் வந்தாரே அவர் தான்.”

“யாரு… அந்த பிளாக் ஸர்ட்டா?”

ஆதர்ஷினியின் தலை ஆமென்று ஆடியது தான் தாமதம்,

“உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு தர்ஷி” என்று கத்தியபடி இருக்கையிலிருந்து எழுந்துவிட்டாள் பூமிகா.

அனைவரும் அவர்களை திரும்பிப் பார்த்திட… சூரஜ் அவர்கள் அருகில் வேகமாக வந்திருந்தான்.

“ஒண்ணுமில்லை” என்று ஆதர்ஷினி தான் மற்றவர்களின் கவனத்தை திருப்பினாள்.

“எதுக்கு இவ்வளவு எக்ஸ்பிரஸ் ஆகுற பூமி… இந்த மாதிரி நேரத்தில் நீ இப்படியெல்லாம் பிஹேவ் பண்ணக்கூடாது.” ஆதர்ஷினி கடிந்தவளாக சூர்ஜ்ஜிடம் மன்னிப்பு வேண்டினாள்.

“நீ சொன்னதுக்கு உன்னை கொஞ்சுவாங்களா?” எனக் கேட்ட பூமியை, பிடித்து அமர வைத்தாள் ஆதர்ஷினி.

“அவன் ஒரு ரவுடி. இப்போ நேரிலே பார்த்ததானே? வயதில் பெரிய மனுஷன் இறங்கி வந்து பேசுறதை எவ்வளவு அலட்சியப்படுத்தினான். ஒரு வார்த்தை பேசல. ஆனால், பயத்தை ஒத்த பார்வையில் காட்டி நினைத்ததை சாதிச்சிட்டு போயிட்டான். உன் அப்பா, அவரையே நீ ஒதுக்கி வைக்க காரணம்? இந்த தொழில். பாலா, அவனிடமும் இந்த காரணம் தானே? அப்புறம் எப்படி உன்னால் அவனை லவ் பன்றன்னு சொல்ல முடியுது தர்ஷி. உன் அப்பாவால் இதுவரை நீ சந்தோஷமா இருந்து நான் பார்த்ததே இல்லை. விநோதன் கடிதம் வந்தப்போ பார்த்தது. அதுக்கு அப்புறம் இப்போ வரை இல்லை. உன்னோட திருமண வாழ்க்கையாவது உனக்கு அந்த சந்தோஷத்தை கொடுக்கணுன்னு நான் வேண்டாத நாளில்லை. ஆனால், நீயென்னடான்னா… ஒரு ரவுடியை காதலிக்கிறேன் சொல்ற?” பூமிகா பொறுமினாள். வேறெப்படி எடுத்து சொல்லி ஆதர்ஷினியின் மனதை மாற்றுவதென்று தெரியாது பூமிகா ஆயாசமாக உணர்ந்தாள்.

சூரஜிற்கு அப்போதும் வசீயின் எண்ணம் தான்.

‘எப்படி… எப்படி…?’ வசீயை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான். அவர்களின் பேச்சினை காதில் வாங்கியவனாக. நடுவில் பூமி விநோதன் என்று உச்சரித்திட சூரஜ்ஜின் மூளையில் மின்னல்.

கப்பென்று அதனை பிடித்துக் கொண்டான்.

“அப்பா, பாலா மாதிரி வசீ கிடையாது பூமி” என்ற ஆதர்ஷினி, வசீயின் நல்ல குணங்களை பட்டியலிட…

“எவ்வளவு நல்லது செய்தாலும், பண்ண பாவம் இல்லைன்னு ஆகிடாதே!” என்றாள் சூடாக.

“அவனோட உன் வாழ்க்கை நல்லாயிருக்காது தர்ஷி. நீ செடியிலிருக்க இலையை பறிக்கக்கூட அத்தனை தயங்குவ… ஆனால் அவன் சாதரணமா ஆளையே போட்டுதள்ளிட்டு போவான். அவனோட உனக்கெப்படி செட் ஆகும்?”

ஆதர்ஷினி புரிந்துகொள்ள வேண்டுமே என்கிற மன்றாடல் பூமியிடம்.

“அவர் கொலையெல்லாம் பண்ணதில்லை பூமி.”

“அவர்… ஹ்ம்ம்… முடிவு பண்ணிட்ட” என்ற பூமி, “இதுல என்னால் உனக்கு சப்போர்ட் பண்ண முடியாது தர்ஷி” என்றாள்.

வசீயைப்பற்றி பாலா கூறியதை சொல்லிய ஆதர்ஷினி, “என்னால் அவரை மாற்ற முடியும் தோணுது பூமி” என்றாள்.

“இவனுங்க முப்பது வருசமா உலகத்தில் இருக்க அத்தனை தப்பையும் செஞ்சிட்டு இருப்பானுங்களாம். அவனை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு திருத்திடுவியா? அவனை திருத்தவா நீ பொறந்த? இல்லை அவ்வளவு வருஷம் திருந்தாதவன் இப்போ நீ சொன்னதும் திருந்திடுவனா?” அத்தனை காட்டம் பூமியிடம்.

“அதெப்படி காதலிக்குற உங்க கண்ணுக்குலாம் நல்லவன் எவனும் தெரியமாட்டானா?” எனக் கேட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

ஆதர்ஷினி சூரஜ்ஜை கவலையாக ஏறிட…

“அவளை குறை சொல்லிட முடியாதேம்மா. நான் அவளிடத்தில் இருந்தாலும் இதைத்தான் சொல்லியிருப்பேன்” என்ற சூரஜ், எதையோ நினைத்தவனாக… “நிச்சயம் உன் காதல் உன்னை சந்தோஷமாவே வாழ வைக்கும்” என்று கூறினான்.

நேர்மறையாக சூரஜ் சொல்லியதில் கலக்கம் நீங்கி சிரிக்க முயன்றாள் ஆதர்ஷினி.

“நான் கிளம்புறேன் அண்ணா. அவகிட்ட சொல்லிடுங்க” என்று வெளியேறிய ஆதர்ஷினியையே பார்த்து நின்றான் சூரஜ்.

******

கையெழுத்து வாங்கிய காகிதத்தை முத்துச்சாமியிடம் கொடுத்திட வீட்டிற்கு வந்த வசீயும், பாலாவும் அவர் காத்திருக்க சொல்லியதற்காக தோட்டத்தில் மரத்திற்கு கீழிருந்த கல் மேடையில் அமர்ந்திருந்தனர்.

பதிவு செய்து வைத்திருந்த தர்ஷியின் புத்தம் புது காலை நிகழ்வினை கேட்டுக்கொண்டிருந்தான் வசீகரன்.

வசீயின் கண்கள் மூடியிருக்க… அவனின் காதிலிருந்த வயர்லெஸ் இயர் பட்ஸ் ஒன்றை எடுத்து என்னவென்று கேட்ட பாலா அவனை தீயாய் முறைத்தான்.

பாலா முறைப்பதை கணக்கில் கொள்ளாத வசீ அவனின் காதிலிருந்த பட்ஸை எடுத்து தன்னுடைய சட்டையில் இந்தப்பக்கம் அந்தப்பக்கம் என்று துடைத்து தன் காதில் வைத்து மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்.

“இதெல்லாம் ரொம்ப ஓவர் வசீ. எத்தனை முறை தான் அதை கேட்ப?”   என்று எரிந்து விழுந்தான்.

“எனக்கு பிடிச்சிருக்கு.” அவ்வளவு தான் வசீ எதுவும் கூறவில்லை.

“குரலையா? அந்த பொண்ணையா?” கோபமாக வினவினான் பாலா.

கண்களை திறந்த வசீ, “ரெண்டையுமே வச்சிக்கோ” என்றான் படு கூலாக.

“அந்த பொண்ணு உன்னைவிட பெரிய பொண்ணா இருந்தால் என்ன செய்வ வசீ?”

“அல்ரெடி இந்த கேள்வியை குமாரோ, வாசுவோ என்கிட்ட கேட்டுட்டாங்க” என்ற வசீ… “இது ரசனை மட்டும் தான். ரசிக்க வயதோ, பாலினமோ முக்கியமில்லை. இதுவொரு ஆண் குரலா இருந்திருந்தா நீ இப்படி என்னிடம் கேட்டிருக்கமாட்டதானே?” என்று கேட்டிட, பாலா என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் மௌனியானான்.

“உன்னை குறை சொல்லல. ஒரு பையன் ஒரு பெண்ணை பார்த்தாலே அது காதலா மட்டும் தான் இருந்திடும் என்கிற எண்ணம் தான் இங்கு பலருக்கும்” என்ற வசீ “நம் ரசனைக்கும் பிடித்தத்திற்கும் விளக்கம் கொடுக்க முயற்சித்தால் நேரம் தான் வீண். இங்கு ஒரு உடலில் இருக்கும் விரல்களே ஒன்றுபோல் இருப்பதில்லை. இதில் மனிதர்களிடம்  ஒன்று போல் எண்ணம் இருக்கணும் நினைப்பது மடத்தனம். எனக்கும் தான் நீ கொலை செய்றதில், அந்த பொருளை மார்க்கெட்டிங் செய்றதில் விருப்பமில்லை, அதுக்காக உன்னை ஒத்துக்கிட்டனா என்ன?” எனக் கேட்ட வசீ, “ஒருவருடைய பிடித்தத்திற்கு குறை சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. உனக்கு பிடித்ததை நீ செய்யுற. அதில் நான் தலையிட்டா என்னைவிட முட்டாள் யாருமில்லை” என்றான்.

“இப்போ என்ன உனக்கு பிடிச்சிருக்கு நீ கேட்குற. இதை ஏன் செய்யுறன்னு நான் கேட்க கூடாது. அவ்வளவு தான்! இதை நீ நேரடியாவே சொல்லியிருக்கலாம்” என்றான் பாலா.

“சில விஷயங்களை சொல்லி புரிய வைக்க முடியாது பாலா” என்ற வசீ, “இந்த குரலுக்கு சொந்தமான பெண், இளம் வயதா இருந்தா, நேரில் பார்க்கும்போது நிச்சயம் நீ நினைப்பது போல் எனக்கு ஈர்ப்பு வரலாம். ஏன்னா ஒருவரை நமக்கு பிடிக்க அவரிடம் ஏதோ ஒன்று நம்மை கவர்ந்திருக்கும். அதேதான் இங்கும். இதே வயதில் பெரியவராக இருந்தாலும் ஈர்ப்பு வரும். அது இந்த வயதிலும் எவ்வளவு உற்சாகமாக துள்ளலோடு இருக்காங்க அப்படின்னு மரியாதைக்குரிய ஈர்ப்பாக இருக்குமே தவிர தவறான கண்ணோட்டமா இருக்காது” என்று விளக்கம் கொடுத்தான்.

பாலாவிற்கு புரிந்தும் புரியாத நிலை.

“அப்போ சின்ன பொண்ணா இருந்தால் லவ் பண்ணுவன்னு சொல்றியா?” எனக் கேட்டான்.

“அல்ரெடி எனக்கு லவ் வந்தாச்சு” என்ற வசீ, தான் சொல்லியதில் வாய் பிளந்து பார்த்தவனை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தான்.

“இப்படி சிரித்து மழுப்பாதே.”

“நான் லவ் பன்ற பொண்ணும், இவளும் ஒரே ஆளா இருந்தா ரொம்ப சந்தோஷன்னு சொல்றேன்” என்றான்.

“எப்பா சாமி… இனி உன்கிட்ட இதைப்பற்றி நான் கேட்டா, உன் காலில் கிடப்பதை எடுத்து அடி. அதெப்படித்தான் காதல் வந்தா கூட இருப்பவனுக்கே புரியாத மாதிரி பேச ஆரம்பிச்சிடுறீங்களோ தெரியல” என்ற பாலா, “நமக்கு காதலெல்லாம் செட்டாகுமான்னு யோசிச்சிக்கோ வசீ” என்று அக்கறையாகக் கூறினான்.

“ஏன் செட்டாகாது பாலா. உன் ஐயா குடும்பம் மனைவி பிள்ளைன்னு வாழலையா?” எனக் கேட்க, வசீ இப்படி மடக்குவான் என்று பாலா எதிர்பார்க்கவில்லை.

“அவர் குடும்பமாக இருக்கிறார் தான். சந்தோஷமா இருக்கிறாரான்னு அவர்கிட்ட தான் கேட்கணும்” என்ற பாலாவுக்கு மட்டுமல்ல, வசீக்குமே கூடத் தெரியும், முத்துச்சாமி மனைவி விஷயத்தில் எப்படியோ… மகள் விஷயத்தில் அவருக்கு சந்தோஷமில்லை. மகளின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாத அவரெப்படி தந்தை என்கிற அகராதியில் மகிழ்ச்சியாய் இருப்பார்.

பாலாவின் எண்ணவோட்டம் வசீக்கு புரிந்ததோ…

“கண்டிப்பா நான் அவரைப்போல் இல்லை” என்று அழுத்தமாகக் கூறினான்.

“எனக்கு நீ இந்த கூட்டத்தில் சேர்ந்தது முதல் ஒரு சந்தேகம் இருக்கு வசீ” என்ற பாலா, அவனை ஆழ்ந்து பார்த்தபடி “கேட்கவா?” என்று வினவினான்.

“ஹ்ம்ம்…”

“நீ எங்களையெல்லாம் திருத்த முயற்சி பன்ற மாதிரி இருக்கு. அப்படியா?”

வசீயிடம் நொடி நேர தடுமாற்றம். அதனை பாலா சரியாக உள்வாங்கினான். வசீயிடம் காட்டிக்கொள்ளவில்லை.

“திருத்த முயற்சி பன்றவன் தான், சரக்கை காப்பாத்தி கொடுப்பானா? அடிதடின்னு ஆளுங்களை கடத்துவானா?” என்று கேட்டு பாலாவை சமாளிக்கப் பார்த்தான்.

“இருந்தாலும் எனக்கு உன்மேல் டவுட் தான்” என்ற பாலா, “இதையெல்லாம் உன்னை நம்பனுங்கிறதுக்காக, ஏன் நீ செய்திருக்கக்கூடாது?” என்றான்.

வசீ இதற்கு என்ன கூறுவான். பாலாவின் கணிப்பு சரிதானே! முதல் முறையாக தடுமாறி நின்றான் வசீகரன்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்