
உயிர் உறை 10
நேசப்பிழை 3
அதிகாலை நான்கு மணியளவில் கண் விழித்த ஆதர்ஷினிக்கு தலையெல்லாம் பாரமாகியிருந்தது.
மனமும் கனத்து தெரிந்தது.
இப்போது கிளம்பிச் சென்றால் தான் வானொலி நிலையத்திற்கு சரியாக சென்று நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிட முடியும்.
மனம் சோர்வாக இருந்ததால், உடலிலும் அலுப்புத் தெரிந்தது.
பற்றாக்குறைக்கு உறக்கம் போனதும், வசீயின் நினைவு தானாக வந்து ஒட்டிக்கொண்டது.
தன்னை குறித்தே இரு வேறு மனநிலையில் சிக்கி சுழன்றாள்.
ஆதர்ஷினிக்கு விநோதன் என்றும் மறக்க முடியாத பக்கம். அவளின் ஞாபத்தின் நினைவுகளில் நீங்காது இடம் பிடித்திருப்பான். அது மறுப்பதற்கில்லை. இப்பவும் வசீயின் மீது வந்திருக்கும் ஈர்ப்பை அவளொன்றும் தவறென்று நினைக்கவில்லை.
இந்த ஈர்ப்பானது அடுத்த கட்டத்தில் காதலென்று நகரும் போது… அவளுக்கு வசீயுடனான வாழ்க்கை ஒத்துவருமா? இக்கேள்வியால் தான் அவள் குழம்பி தவிக்கின்றாள்.
வசீ நல்லவனாகவே இருந்தாலும், அவனது தொழில் அடிதடி. அவளின் அப்பாவின் அடியாள்.
எந்த காரணத்திற்காக இன்றளவும் ஆதர்ஷினி அவளின் தந்தையை வெறுத்து ஒதுக்கி வைத்திருக்கின்றாளோ, அதே காரணம் தான் இப்போது வசீயிடத்திலும். அவனை மட்டும் எப்படி ஏற்பாள்.
‘இது காதலாக இருந்தால் அமைதியாகக் கடக்க வேண்டியது தான். வசீயிடத்திலும் சொல்லிவிடக் கூடாது, காதலை தனக்குள் மறைத்திட வேண்டும். அவனிடம் சொல்லி, அவனது வாழ்க்கை முறை தனக்கு ஒத்துவராத நிலையில் இருவரின் மன அமைதிக்கும், நிம்மதிக்கும் பெரும் பிரச்சனையாக முடியும்.’ தெளிவாக முடிவெடுத்த பின்னரே அவளால் கட்டிலிலிருந்து இறங்க முடிந்தது.
நேரத்தை பார்த்தவள், குளித்து முடித்து வேகமாக வானொலி நிலையம் நோக்கிச் சென்றாள்.
சரியான நேரத்திற்கு ஆன் ஏர் அறைக்குள் சென்று அமர்ந்த பின்னர் தான் அவளின் படபடப்பு அடங்கியது.
ஆள் மாற்றி நிகழ்ச்சியை நடத்தியிருக்கலாம். ஆனால் அதற்கென்று முன்தினம் ஏற்பாடு செய்திருக்க வேண்டுமே. இப்படி கடைசி நேரத்தில் சொன்னால் சிக்கலில் தானே முடியும். அதற்காகத்தான் மனம் ஒத்துழைக்கவில்லை என்றாலும், அனைத்தையும் ஒதுக்கி வைத்து வந்துவிட்டாள்.
“ஹாய்…
ஹலோ…
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
நேரம் சரியாக ஆறு மணி.
நான் ஆர்.ஜே தர்ஷி.
இது உங்கள் பேவரெட் ஷோ புத்தம் புது காலை.
ஒரு செயலை நம்மால் சரியான நேரத்திற்கு தொடங்கிட முடியுமா? தொடங்கினால் முடித்திட முடியுமா? என்ற எண்ணங்களுக்கு நடுவில் ஒருவரின் மனம் கொள்ளும் படபடப்பு எத்தகைய அவஸ்த்தையானது.
இப்போ ஏன் இதை சொல்றேன்னு யோசிக்குறீங்களா? ஒரு நிமிடத்திற்கு முன்னால் வரை நானும் அதே படபடப்பில் தான் இருந்தேன். இன்று சரியான நேரத்திற்கு ஆன் ஏர்’இல் மைக் முன்னால் உட்கார்ந்திடுவேனா என்கிற படபடப்பு. இந்த நொடி உங்கள் அனைவரிடமும் வழக்கமான காலை வணக்கம் சொல்லிய பின்னர் தான் ஆசுவாசம் கொள்கிறேன்.
நொடி நேரம் தோன்றும் பதட்டம் நம்மை எத்தனை அழுத்தத்திற்குள் கொண்டு சென்றுவிடுகிறது. சோ, எத்தனை பெரிய விஷயமா இருந்தாலும், பொறுமையா, நிதானமா செய்வோம். நம்மால் ஒன்று நடந்தே ஆகவேண்டிய கட்டாயம் இருப்பின், அந்த விஷயத்தை நம்மைத் தவிர்த்து வேறொருவரால் நடத்திட முடியாது. அதனால், எதிலும் அமைதியாய் சாதிப்போம்.
இதோ உங்கள் காலை பொழுதை இனிமையாக்க எனக்கு பிடித்த காதல் பாடல்.
கேளுங்க… கேளுங்க… கேட்டுக்கிட்டே இருங்க. இது உங்கள் ‘சாரல் FM 97.5’. நான் ஆர்.ஜே தர்ஷி.”
“அட உசுரையே தொலைச்சேன் உனக்குள்ள
இந்த உலகினில் உன்போல் யாரும் இல்ல
ஆசைய வெதச்சேன் உனக்குள்ள
உன்ன போல ஒருத்தன பார்த்ததில்ல
அழகாலே உன் அழகாலே
கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே.
உன்னாலே இனி உன்னாலே.
விடியும் என் நாள் முடியாதே!
நம் காதல் சொல்ல.
மொழி தேவை இல்ல..
என் ஜீவன் என்றும் நீதானே!”
பாடல் ஒலித்துக் கொண்டிருக்க… விநோதன் என்ற பெயரின் தோற்றம் வசீகரனாக உருவகம் பெற்று அவளின் இதயத்தில் உயர்ந்து நின்றது.
விநோதனுக்காக ஒரு இதயம் துடிக்க… வசீகரனுக்காக மறுபாதி இதயம் தவித்தது.
‘நடப்பது நடக்கட்டும்.’ வாழ்க்கையை அதன்போக்கில் ஏற்கத் தயாராகினாள்.
இதேநேரம் பன்பலையில் ஒலித்த தர்ஷியின் குரலையும், பாடலையும் கேட்டுக்கொண்டிருந்த வசீக்கு முகத்தில் வசீகரமான புன்னகை.
ஆதர்ஷினி, தர்ஷி இருவரும் ஒருவர் தானா என்று அவனுக்குத் தெரிய வேண்டியிருந்தது.
எதனால் இந்த சந்தேகம் என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால், இருவரும் ஒன்றாக இருக்க வேண்டுமென்று அவனின் மனம் ஆசைகொண்டது.
அத்தோடு அந்த காலை வேளையில் வேலை முடிந்தது என்று முன்தினம் அவள் வந்திருக்க… இவனும் வானொலி நிகழ்ச்சி முடித்து அவள் வீட்டிற்கு சென்றிருக்க… இவன் கேட்டும் என்ன வேலையென்று அவள் சொல்லாதது என அனைத்தும் அவனுள் சந்தேக விதையாய்.
அத்தோடு வசீயின் மனம் நேற்றிலிருந்து லட்சங்களில் அவளின் பெயரை உச்சரித்திருக்க… ‘நான் உங்கள் தர்ஷி’ என்ற ஒலிப்பு அவனின் காதில் ஓசையாய்.
மனம் இருவரும் ஒருவரென்று அடித்துக்கூறிட… அப்படித்தான் இருக்கவேண்டுமென நினைத்தான்.
“இந்த ஷோ எப்போ முடியும் வசீ?” பாலா.
நேரத்தை பார்த்த வசீ… “இன்னும் நாப்பது நிமிடம் இருக்கு” என்றான்.
“ஹோ… நான் உப்பளம் போயிட்டு வரேன். சரக்கு ஏத்த ஆள் வராங்க” என்ற பாலா வசீயின் அர்த்தமான முக பாவனையை கவனியாது குமாருடன் சென்றுவிட்டான்.
“ஐயாவோட உப்பளத்திலிருந்து தான் உப்பு நாடு முழுக்க சப்ளை ஆகுது போலிருக்கே?” வாசு கேட்டிட… “ம்” என்ற இறுகிய ஒலி வசீயிடம்.
“அங்கு வேலைன்னா நம்மை ஏன் விட்டுவிட்டு போயிடுறானுங்க?” வாசு கேட்டிட வசீயிடம் அர்த்தமான புன்னகை.
“அதெல்லாம் நீ தெரிஞ்சிக்க வேண்டாம் வாசு” என்ற வசீ, “அம்மாவோட மருத்துவ செலவுக்கு சீக்கிரம் பணம் புரட்டனும்ன்னு தானே இங்கு இந்த அடியாள் வேலைக்கு சேர்ந்த? இப்போதான் அம்மாக்கு சரியாகிருச்சே… நீ வேற எதாவது நல்ல வேலைக்கு போகலாமே!” என்றான் அக்கறையாக.
“எங்கடா போறது. போதாத நேரம் இந்த வேலைக்கு வந்தேன். இப்போ எங்க போனாலும் ரவுடிங்கிற பேருல தானே பாக்குறானுங்க. இதுக்குள்ள வந்தால் திரும்ப போக முடியாதுன்னு நீ சொன்னப்போ எனக்கு புரியாம போயிடுச்சு வசீ” என்ற வாசு, “இப்போ வருத்தப்பட்டு ஆகப்போறது ஒண்ணுமில்லை” என்றான் விரக்தியாக.
வாசு ஒரு வருடத்திற்கு முன்பு அவனின் அன்னையின் மருத்துவ செலவிற்கு அவசரமாக பணம் வேண்டுமென பாலாவிடம் கேட்க, அவனோ அப்போது அவசரமாக ஒருவனை தூக்குவதற்காக சென்றுகொண்டிருக்க, வாசுவை தன்னுடன் இணைத்துக் கொண்டான்.
அப்போது இரு கோஷ்டிகளுக்கு இடையே நடைபெற்ற மோதலில், சும்மா கட்டையை எடுத்து வீசியதற்காகவே பாலா அவ்வளவு பணம் கொடுத்திருக்க… வாசுவிற்கு ஆச்சரியம்.
கொஞ்சநாள் உடனிருந்தாலும் அம்மாவை முழுமையாக குணப்படுத்திவிடலாம் என்று நினைத்த வாசுவிற்கு இத்தொழில் சுழலென்று தெரியாமல் போனது.
அந்நேரத்தில் வசீ எத்தனையோ எடுத்து சொல்லியும், வாசுவிற்கு அன்னையின் வைத்திய செலவிற்கான பணம் தான் பிரதானமாக பெரியதாக தெரிந்தது.
இப்போது காலம் கடந்து வருந்துகிறான்.
“பீல் பண்ணாத வாசு… உனக்கு ஓகேன்னா சொல்லு, உனக்கு நல்ல வேலை நல்ல இடத்தில் ஏற்பாடு செய்து தர்றேன்” என்றான் வாசு.
“அப்போ நீயே அந்த வேலையை பார்க்கலாமே வசீ. நீயேன் இங்கு இருக்க?”
…..
வசீயிடம் அப்படியொரு அழுத்தமான மௌனம்.
“உன்னால சொல்ல முடியாத ஒரு காரணம் இருக்கு. நீ இங்கு இருக்க. ஒருத்தனை அடிக்கணும், கடத்தனும் அப்படின்னா அத்தனை யோசிக்குற. உன் பார்வை, பேச்சு, செயல், ரசனை எல்லாமே இங்கிருக்கவங்களில் முழுசா மாறுபட்டது. நீயெப்படி இந்த கூட்டத்தில் அப்படின்னு நிறைய நேரம் யோசிக்கத்தோணும். ஆனாலும் அந்த யோசனையெல்லாம் அடுத்து நீயொருவனை போட்டு புரட்டி எடுப்பதை பார்த்ததும் ஓடிப்போயிடும்” என்றவனை மெச்சுதலாகப் பார்த்த வசீ…
“காரணமிருக்கு… அவ்ளோதான்” என்றான்.
இன்று வசீ உண்மையை சொல்லப்போகிறான் என்று வாசு வசீயின் முகத்தை ஆர்வமாய், ஆவலாய் பார்த்திருக்க…
“உன்னை மாதிரி தான். நானும் பிடித்து இந்த தொழிலுக்கு வரல. உனக்கு அம்மான்னா, எனக்கு பசி. பசிக்கு முன்னால் நல்லது கெட்டது என்று எதுவுமில்லை” என்ற வசீ குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
‘இருக்கலாம்’ என நினைத்த வாசுவிற்கு வசீ பொய் சொல்வதாகத் தெரியவில்லை.
அதன் பின்னர் வசீ வாசுவை அவர்களது இடத்திற்கு அனுப்பி விட்டு, முத்துச்சாமியின் வீட்டிற்கு சென்றான்.
முத்துச்சாமி கோபமாக இருப்பதைப்போல் தெரிந்தது.
தானாக எதுவும் கேட்டிட வேண்டாமென வசீ வெளியிலேயே நின்றிருக்க… ஆதர்ஷினி வீட்டின் உள்ளிருந்து வெளிவந்தாள்.
‘அப்போ… எப்.எம், ஆர்ஜே?’ என சிந்தித்தவன், அவளையே விழி மூடாது பார்த்திருக்க… அவளோ அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
இன்று அவள் நிகழ்ச்சியில் இறுதி பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்ததுமே கிளம்பி வந்துவிட்டாள் என்பது அவனுக்கு யார் சொல்வது?
புடவையில் இருந்தாள் அவள். இடை வரையிலான கூந்தலை விரித்து விட்டிருந்தாள். நெற்றியில் இருக்கிறதா இல்லையா எனுமளவிலான சிறிய கரு நிற பொட்டு. காதில் தொங்கல் இல்லாது ஒற்றை முத்து தோடு.
‘தேவதை…’ அவனின் மனம் நினைத்தது.
‘ஜிமிக்கி போட்டால் இன்னும் நல்லாயிருக்கும்.’ மனதோடு சொல்லிக்கொண்டான்.
காதல் வந்த பின்பு அவளின் ஒவ்வொன்றையும் அவனது மனது கவனிக்கச் சொல்லியது. ரசிக்கத் தூண்டியது.
‘பார்க்கமாட்டாங்களாமா?’
அவன் அவளையே பார்த்தபடி இருக்க… அவளோ அவனின் பக்கம் செல்லத்துடிக்கும் கருவிழியை கட்டுப்படுத்தி வண்டியில் சாவியை நுழைக்க தடுமாறினாள்.
அவனின் இருப்பு அவளை இயல்பாய் இருக்க விடவில்லை. ஒருவித நடுக்கம் அவளிடம்.
வண்டி வேறு ஸ்டார்ட் ஆவேனா என்று அவளை சோதனைக்குள்ளாக்கியது.
அந்நேரம் வேகமாக வெளியில் வந்த முத்துச்சாமி… ஆதர்ஷினியை கவனிக்காது,
“நீ பன்றது எதுவும் சரிகிடையாது வசீ. நான் ஒருத்தனை போட்டுதள்ளினா, நீ அவன் குடும்பத்தை தேடிப்போய் உதவி செஞ்சிட்டு வர” என்று அவர் சத்தம் போட… அதனை காதில் வங்காதவனாக நகர்ந்து சென்றவனை முறைத்தார்.
அவனோ ஆதர்ஷினியின் அருகில் சென்றிருந்தான்.
அப்போதுதான் முத்துச்சாமி தன்னுடைய மகளை கருத்தில் கொண்டார்.
அவர் வசீயுடனானப் பேச்சில் தான் செய்ததை சொல்லியிருக்க, ‘இவர் மாறவே மாட்டாரா?’ என்று ஆதர்ஷினி கண்கள் கலங்க நின்றிருந்தாள்.
‘போச்சு… கவனிக்காமவிட்டனே. இன்னும் எவ்வளவு தூரம் விலகப்போறாளோ?’ வருத்தத்தோடு எண்ணினார்.
வண்டியை உயிர்பித்து பிரேக்கை பிடித்து ஆக்சிலேட்டரை முறுக்கிய வசீ, “அழுதா உன் அப்பாவுக்கு உன்னுடைய விலகல் புரிஞ்சிடுமா?” என்று முறுக்கும் தன் கையில் கண் வைத்தவனாக உதடு அசையாது அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் வினவினான்.
ஆதர்ஷினி அவனின் கேள்வியில் பனித்த கண்களை அவனுக்கு காட்டாது தலை கவிழ்த்திட…
“ம்ப்ச்… அழாதடி! கஷ்டமாகுது” என்றான் வசீகரன்.
அவனின் வார்த்தைகளில் விலுக்கென அவள் நிமிர்ந்திட, ஒற்றை கண்ணில் கரை உடைத்து கன்னம் வழிந்தது கண்ணீர்.
***********************
வசீயின் உரிமையான அக்கறையில் ஆதர்ஷினிக்கு கரித்துக் கொண்டு வந்தது.
‘நான் அழுதா இவனுக்கு என்னவாம்?’ மனதில் சடைத்து கொண்டவள்,
“அவர் மாறுவாருங்குற எண்ணமெல்லாம் எனக்கு எப்பவோ போயிடுச்சு” என்றாள்.
“அப்புறம் எதுக்கு கண்ணை கசக்குற?” இன்னமும் அவளின் கண்களில் நீர் தேங்கி நின்றிட, சற்று கடுமையாகவே சாடினான்.
“அப்பாவாச்சே” என்றவள் உதட்டின் ஓரம் துளிர்த்த விரக்தி புன்னகையை அவனுக்கு காட்டாது, வண்டியில் அமர்ந்தாள். வசீயின் கை இன்னமும் வண்டியின் பிடியில் இருந்திட… அவனின் முகத்தை பார்த்துக்கொண்டே அவள் கையை அவன் கை மீது வைத்தாள்.
“அவரை நான் ஒதுக்க என்ன காரணமோ… அந்த காரணம் உன் விஷயத்திலும் இருக்கு” என்று பூடகமாக சொல்லிட, வசீ தன் கை மீதிருந்த அவளின் கையை அழுத்தமாகப் பார்த்தான்.
மெதுவாக… மிக மிக மெதுவாக தன்னுடைய கையை ஆதர்ஷினி விலக்கிக்கொள்ள, வேகமாக கையை எடுத்திருந்தான் வசீகரன்.
அர்த்தமாக கண்களை அவனது கண்களில் படரவிட்டவள், விருட்டென்று கிளம்பிவிட்டாள்.
கண்ணாடியின் ஊடே பார்த்தவளுக்கு வசீயின் முகத்தில் தெரிந்த விஷமத்திற்கு பொருள் விளங்கவில்லை.
“என்ன வசீ சொல்லிட்டுப்போறா(ள்)?”
ஆதர்ஷினி சென்ற பின்பும் அவள் போன திசையையிலேயே வசீ நின்றிருக்க, அவனின் அருகில் வந்து முத்துச்சாமி வினவினார்.
இருவரும் அவருக்கு முதுகுக்காட்டி நின்றிருந்ததால், அவர்கள் பேசிக்கொண்டது அவருக்கு தெரிந்திருக்கவில்லை.
“நீங்க செய்யுற கட்டப்பஞ்சாயத்து அடிதடி உங்க பொண்ணுக்கு பிடிக்கலன்னு நினைக்கிறேன்.”
ஆதர்ஷினி தன்னிடம் பேசியதாக வசீ காட்டிக்கொள்ளவே இல்லை. அவனாக யூகித்தது போல் கூறினான்.
“ஆமாம். பேசி பத்து வருசம் ஆச்சு” என்றவர் வசீயின் மீது கோபமாக இருந்ததையே மறந்துவிட்டார்.
அவரின் கோபத்திற்கான காரணம், நேற்று அவர்கள் விசாரித்த ஆளினை கொலை செய்திருக்க, அவனின் மனைவி மற்றும் மகளை நேரில் சந்தித்து செலவிற்கான பணம் கொடுத்து, எந்த உதவியென்றாலும் தன்னிடம் தயங்காமல் கேட்குமாறு தன்னுடைய அலைப்பேசி எண்ணையும் கொடுத்து வந்திருந்தான்.
வசீ முத்துச்சாமியுடன் சேர்ந்த பிறகு, அவர் ஏதேனும் செய்தால் அதற்கு வசீ பிராய்ச்சித்தம் செய்து கொண்டிருந்தான்.
அவர் பலமுறை சொல்லியும் இவ்விடயத்தில் வசீ கேட்பதாக இல்லை.
அதனால் இம்முறை சற்று கடுமையாகவே கடிந்துகொள்ள இருந்தவர், ஆதர்ஷினியை கண்டு வயடைத்துக் கொண்டார்.
“இனிமேலாவது உங்க பொண்ணுக்காக கொஞ்சம் விலகலாமே!” எப்படியும் முத்துச்சாமி கேட்கமாட்டாரென்று வசீக்குத் தெரியும். தெரிந்தும் கூறினான்.
“இப்படி ஊரடிச்சு இவ்வளவு சம்பாதிக்கிறது எம்பொண்ணுக்காகத்தான். ஆனால் இதிலிருந்து ஒத்த பைசா தொட மாட்டேங்கிறாள். வேலைக்கு போவேன்னு பிடிவாதமா போயிட்டு இருக்கிறாள்.”
இவ்விடத்தில் வசீக்கு அவள் என்ன வேலை செய்கிறாள் என்று கேட்க வாய் வரை வந்த வார்த்தையை தொண்டையோடு தடுத்தான்.
“அவளுக்காகவாவது விடணும் நினைச்சாக்கா… எப்போ எவன் போட்டுதள்ளுவான் தெரியல” என்றவர், “பார்த்துக்கலாம் விடு. பேசலன்னா என்ன? கண்ணு முன்னாடி தானே இருக்காள். அதுபோதும்” என்றுவிட்டு உள்ளே சென்றார்.
அதுவரை வைப்ரேட் மோடில் அதிர்ந்து கொண்டிருந்த அலைப்பேசியை எடுத்து காதுக்கு கொடுத்தவன், இரைய ஆரம்பித்தான்.
“அப்படி என்னடா தலைப்போற காரியம். நானா கூப்பிடாம நீ கூப்பிடாதன்னு எத்தனை முறை சொல்றது?” சத்தமில்லை. ஆனால் குரலில் அப்படியொரு கோபம்.
…………
எதிர்பக்கம் யார்… என்ன சொல்லப்பட்டதோ?
“அவ்வளவு சீரியஸ் ஆகிருச்சா?” எனக் கேட்டவன்… “முடிச்சிடலாம். இன்னும் நான்கு மாதத்தில்” என்றான்.
…………
“வெயிட் பண்ணித்தான் ஆகணும். இதுக்காகத்தானே இத்தனை பொறுமை. மொத்தமா முடிச்சிடலாம்” என்ற வசீ தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று சுற்றத்தை அலசியபடி தான் பேசினான்.
…………
“எல்லாம் பக்காவா இருக்கு. இன்னும் ஒண்ணே ஒண்ணு. தூக்கிடலாம்” என்ற வசீ தானாக அழைக்காமல் அழைக்க வேண்டாமென்று அழுத்தமாக சொல்லிவிட்டே வைத்தான்.
வசீயின் முகமும் மூளையும் யோசனையில் தீவிரமாகியது.
அவனிடம் ஒருவித ஆயாசம்.
வெளியில் வந்த முத்துச்சாமி,
“ஒரு இடம் போகணும் வசீ” என்றிட, அவரின் காரை பின் தொடர்ந்தான்.
முத்துச்சாமி உடன் எங்கு சென்றாலும், வசீயின் கவனம் அதிகமாக இருக்கும். அவர்கள் வந்தது முத்துச்சாமியின் உப்பளத்திற்குத்தான்.
அப்போதுதான் சூரியன் தன்னுடைய வெப்பத்தை முழுதாய் காட்டிடும் நேரம் என்பதால்… எங்கும் பளிங்காய் கண்களை கூசச்செய்தது. உப்பின் படிமம்.
வெள்ளை பனி மழை பொழிந்து விட்டது போல் அத்தனை வெண்மை. காணும் இடமெங்கும்.
பாத்தி பாத்தியாய் கரை அமைத்து அவ்விடம் பார்ப்பதற்கே எழிலாய்! ஆனால் அதனை ரசித்துப் பார்க்கும் மனநிலை வசீயிடம் இல்லை. எதிலும் ஓர் ஆராய்ச்சி.
‘என்னை இங்கு வர விடமாட்டாரே! என்னவா இருக்கும்?’
வசீ சிந்திக்கும் போதே,
அங்கு வேலை செய்பவர்கள் தங்குவதற்காக ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த குடில்களுக்கு நடுவிலிருந்த முத்துச்சாமிக்கான அலுவலக கூடாரத்திலிருந்து சட்டையில் தெறித்த ரத்த துளிகளுடன் கையில் சிறு கத்தியை உதறியபடி வெளியில் வந்தான் பாலா.
வசீயிடம் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ இல்லை. மாறாக, ‘எந்த அப்பாவி மாட்டினான் தெரியலையே’ என்று தான் நினைத்தான்.
“என்ன பாலா முடிச்சிட்டியா?”
வெளியவே கிடந்த நாற்காலியில் அமர்ந்தவாறு முத்துச்சாமி கேட்டிட… ரத்தம் தோய்ந்த கைகளை கழுவியபடி பாலா ஆமென்று தலையசைத்தான்.
“கேரளாவுக்கு லோடு போன லாரி சாலையோர மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்தாகிடுச்சாம். டிரைவர் ஸ்பாட் அவுட். உங்க ரெண்டு பேரில் ஒருத்தர் அங்கு போகணும். யாருன்னு நீங்களே முடிவு பண்ணி, பத்து நிமிஷத்தில் கிளம்பியிருக்கணும்” என்ற முத்துச்சாமி பாலாவையும், வசீயையும் மாற்றி மாற்றி பார்த்தார்.
“நீயே போடா!” பாலா சொல்லியதும் வசீ எதையும் காட்டிக்கொள்ளாது அங்கிருந்து நகர,
“நீ போவேன்னு நினைச்சேன். லாரியில என்னயிருக்குன்னு தெரியும்ல. வசீ சரிவருவான்னு தோணல. அவனே மொத்தமா அழிச்சிட்டு, லாரியில ஒண்ணுமில்லைன்னு வந்து நின்னாலும் நிப்பான்” என்றார் முத்துச்சாமி.
“அப்புறம் எதுக்கு அவனையும் சேர்த்து சொன்னீங்க? நேரடியாக என்னிடம் மட்டும் சொல்ல வேண்டியது தானே?” என்று கேட்ட பாலா, “அவனை போகச்சொல்லிட்டு இப்போ நான் போய் வேணான்னு சொன்னால் அவன் எதுவும் நினைக்க மாட்டானா?” என்றான்.
“இங்கு வரும் போது தான். தகவல் வந்துச்சு. இங்கு வந்திட்டு தலைவரை பார்க்க போகலான்னு இருந்தேன். அங்கு போகும்போது வசீ உடனிருந்தால் நல்லாயிருக்கும் தோணுச்சு. அத்தோடு, தலைவருக்கு வசீ மீது ஒரு பயமிருக்கே” என்றவர், “அவன் உடனிருக்கும்போது உன்னை மட்டுமே சொன்னால், அவனை ஒதுக்குறதா நினைத்துட்டா என்னன்னுதான் சேர்த்து சொன்னேன். நீயே போறேன்னு சொல்லுவேன்னு எதிர்பார்த்தேன்” என்றார்.
“எனக்கு இங்கு சரக்கு அனுப்புற வேலையிருக்கே ஐயா. அதான் வசீயை போகச்சொன்னேன்” என்ற பாலாவுக்கும், அவனின் பேச்சினை ஆமோதித்த முத்துச்சாமிக்குமே வசீயை அனுப்புவதற்கு விருப்பமில்லை.
“வசீக்கு தெரியாதுன்னு நினைக்குறீங்களா ஐயா?” என்ற பாலா, “ஏற்கனவே அவனுக்கு நாம இந்த விஷயத்தில் அவனை ஒதுக்குவது நல்லாவேத் தெரியும்” என்றான்.
“என்ன பன்றது பாலா, அவன் என்னதான் நம்மளோட இருந்தாலும், நீதி நேர்மைன்னு இருக்கான்னே” என்ற முத்துச்சாமியிடம் பெருமூச்சு.
“நாம் செய்யுற தப்பெல்லாம் தெரிந்தாலும், நமக்கு விசுவாசமா இருக்கானே… அவனை எப்படி விட. சில விஷயம் நீயே தயங்கினாலும் அவன் செய்து முடிக்குறானே” என்ற முத்துச்சாமிக்கு வசீயின் மீது அதீத நம்பிக்கை. அது அவரின் பேச்சிலும் வெளிப்பட்டது.
“நிச்சயம் அங்கு போன பின்பு அது என்னவிதமான சரக்குன்னு தெரிந்தால், அப்படியே விட்டுட்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்ற பாலா, “அந்த லாரியிலிருக்கும் சரக்கை மறந்திடுங்க” என்றான்.
முத்துச்சாமி, ‘அவசரபட்டுவிட்டோமோ?’ என எண்ணுகையில், அவரின் அருகில் திரும்பி வந்தான் வசீகரன்.
“என்னடா போகலையா? உனக்கு விருப்பம் இலைன்னா, நானே போறேன்டா” என்று முன் வந்தான் பாலா.
“அதெல்லாம் யாரும் போக வேண்டாம்” என்ற வசீ… “லாரியில் உண்மையிலேயே உப்பு மட்டும் தான் இருக்கா?” எனக் கேட்டான்.
அதில் பாலா, முத்துச்சாமி இருவருமே அவனை அதிர்ந்து பார்த்தனர்.
“இதெல்லாம் உனக்கு பிடிக்காதே வசீ. உன்னை போகச்சொன்ன அப்புறம் தான் எனக்கு விஷயமே தெரியும்” என்று தயக்கத்தோடு கூறினான் பாலா.
“இதுதான் வேலைன்னு இறங்கியாச்சு, இனி என்ன நல்லது பண்ணாலும் ரவுடிங்கிற பேரு மாறப்போறதில்லை. நல்லவங்குற பேரு இப்போ மட்டும் இருக்கா என்ன?” என்ற வசீ, “கொலை மட்டும் தான் செய்ய வராது” என்றான்.
இவன் என்ன சொல்ல வருகிறான் என்று தான் இருவரும் பார்த்தனர்.
“லாரி திரும்ப வந்திட்டு இருக்கு. ட்ரைவர் உடம்பை கிளினர் வச்சு அவங்க வீட்டுக்கே நேரா கொண்டுப்போக ஏற்பாடு பண்ணிட்டேன். மொத்த சரக்கும் பத்திரமா சேர வேண்டிய இடத்துக்கு போய் சேர்ந்தாச்சு. பணம் மட்டும் பாக்கியில்லாம உங்க அக்கௌண்ட் வந்திருச்சா செக் பண்ணிக்கோங்க” என்றான்.
இருவருக்கும் அத்தனை அதிர்ச்சி.
“இருந்த இடத்திலிருந்தே எப்படி?” முத்துச்சாமியால் நம்ப முடியவில்லை.
இதனை செய்தது வசீ என்பதால் தான் அவரால் நம்ப முடியாது, சந்தேகமாக வினவினார்.
கெட்ட இடத்திலிருந்தாலும் வசீ செப்பு கலக்காத தங்கம் என்று அவர் அறிவாறே! இதுநாள் வரை ஒதுங்கி இருந்தவன் இன்று மட்டும் எப்படி இதனை செய்தான் என்ற எண்ணம் அவருக்கு. பாலாவிற்கும் அதேதான்.
“எனக்கு பிடிக்காத ஒன்று தான். ஆனால் உங்களுக்காக என்ன வேணாலும் செய்வேன்” என்று இருவரின் கவனத்தையும் லாவகமாக மாற்றி, முத்துச்சாமி கேட்ட “எப்படி?” என்ற கேள்வியை முழுதாய் தவிர்த்தான்.
வசீயின் பதிலில் முத்துச்சாமி தன் மீசையை பெருமையாய் நீவிக்கொண்டார்.
வசீக்கு இதில் முற்றிலும் உடன்பாடு கிடையாது. இப்போது அவன் செய்திருக்கும் செயல் அவனின் குணத்திற்கும் எண்ணத்திற்கு புறம்பான ஒன்று. இருப்பினும் ஒன்றை அடைய வேண்டுமானால் சிலவற்றை அடகு வைக்க வேண்டுமென்பது தானே நியதி.
வசீயை பொறுத்தமட்டில் தன்னுடைய மனசாட்சியை முத்துச்சாமியிடம் அடகு வைத்திருக்கிறான். அதற்கான பலனை அவன் அறுக்கக் காத்திருக்கிறான்.
இனியும் தன்னுடைய மனசாட்சியை காரணமாக வைத்து ஒதிங்கி இருந்தால், அவனின் எண்ணம் ஈடேறாது என்பதை தெளிவாகக் கண்டுகொண்டான்.
முத்துச்சாமியிடம் இப்போது இருப்பதை விட இன்னும் நெருக்கமாக வேண்டும் அவன்.
அவர் என்ன சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு வசீ செய்வான் என்கிற எண்ணம் அவருள் பதிய வேண்டும். அதற்காகத்தான் தன்னுடைய கொள்கைகளை சற்று நகர்த்தி வைத்து இதனை செய்தான்.
“அப்போ உனக்கும் இனி இதெல்லாம் செய்வதில் ஆட்சேபனை இல்லையே?”
முத்துச்சாமி ஆர்வமாக வினவினார்.
அவருக்கு பாலாவும், வசீயும் இரு கைகள் ஆயிற்றே.
இரண்டின் பலமும் சம விகிதத்தில் இருக்குமேயாயின், அவருக்கு கொள்ளை லாபம் தானே! என்னதான் வசீ சிலவற்றில் முடியாதென்று ஒதுங்கி நின்றாலும், அவன் முத்துச்சாமிக்கு செய்திடும் யாவும் பாலாவின் செயல்களை விட அத்தனை நேர்த்தியாக இருக்கும்.
பாலாவுக்கு இணையாக வசீயும் அவரின் இருள் உலக வேட்டையில் இறங்க வேண்டுமென்பது முத்துவின் ஆசை.
அதனை வசீ இன்று நிறைவேற்றி வைத்திருக்க… முத்துச்சாமிக்கு அத்தனை மகிழ்ச்சி.
வசீயை அணைத்து அவனுக்கென இருக்கும் எல்லையை உடைத்து தங்களின் பாவ உலகிற்கு அவனை உற்சாகமாக வரவேற்றார் முத்துச்சாமி.
‘நம்புங்க… என்னை இன்னும் அதிகமா நீங்க நம்பனும். எனக்கு அதுதான் வேணும். நம்பிக்கை மாதிரி சிறந்த ஆயுதம் இல்லை.’
முத்துச்சாமியின் அணைப்பிலிருந்த வசீயின் மனவோட்டம் இப்படித்தான் இருந்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
19
+1
1
+1
1

