
நேசம்-8
உறுமலுடன் வாசலில் வந்து நின்றது அந்த இருசக்கர வாகனம்.
“நம்ம வீட்டுக்கு யாருங்க பைக்கில் வர்ரது?” கண்கள் கூசும் மஞ்சள் நிற ஒளி வெள்ளத்தில் வந்திருப்பது யாரெனத் தெரியாமல், கண்களைச் சுருக்கிப் பார்த்தார் செல்வி.
இருசக்கர வாகனத்தின் பின்னிருந்து அழகுநிலா இறங்குவதைப் பார்த்தவருக்கு நெஞ்சு வலியே வந்துவிடும் போலிருந்தது.
“என்ன காரியம் டி செஞ்சுட்டு வந்து நிற்கிற? பைத்தியமா டி நீ? யாருடி இவன்?” நறநறத்த பற்களின் நடுவே முணுமுணுத்தார். அந்த நொடி வரையிலுமே தன் மகளுடன் வந்திருப்பது அதிவீரன் தான் என்பதை அவர்கள் உணரவே இல்லை.
“அப்பாவுக்கு ஃபோன் பண்ணியிருக்கலாமே அழகி?” புவியரசனின் கேள்விக்கு அவள் பதில் சொல்ல வாயைத் திறப்பதற்குள்,
“ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சுட்டு, இந்தக் கேள்வியைக் கேட்குறீங்க?” என அவன் முன்னால் வந்த பின்பே அவனின் முகம் அவர்களின் பார்வைக்குக் கிடைத்தது. இவன் தான் அன்று தங்கள் மகளைப் பெண் பார்க்க வந்தவன் என்பதை அவர்கள் உணரவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது.
அவன் தான் இவன் என்பதை உணர்ந்ததும், மகளை வெளிப்படையாகவே முறைத்தார் செல்வி.
“ஏன்டி இப்படிப் பண்ணி தொலைச்ச? அப்பாதேன் யோசிச்சு முடிவு பண்ணுவோம்ன்னு சொன்னாங்களே? அதுக்குள்ளே என்னடி அவசரம் உனக்கு? நெதம் பள்ளிக்கூடம் போறேன்னு சொல்லிப்புட்டு இப்படித்தான் ஊர் சுத்தறியா?” எனச் செல்வி கேட்க,
“செல்வி! நம்ம புள்ளையை என்ன வார்த்தை பேசுற?அவசரம் அது இதுன்னு.. முதலில் என்ன நடந்துச்சுன்னு புள்ளைக்கிட்டே விசாரிப்போம்.!” என நிதானமாய்ப் பேசினார் புவியரசன்.
“அழகி.. உள்ளே வாம்மா! நான் கொஞ்சம் முன்னே தான் பஸ்ஸாண்டில் போய்ப் பார்த்துட்டு வந்தேம்மா! நீ வரலைன்னு சொல்லைவும் திக்குன்னு ஆகிருச்சு.” எனச் சொன்னபடியே அவர் வழிவிட, தயக்கமாய் உள்ளே நுழைந்தாள் அழகுநிலா. அவளின் பார்வை வேலையில்லாமல் தங்கள் வீட்டையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் மீது படிந்தது.
“ஊரே வேடிக்கை பாக்குது! இராத்திரி நேரமானாலும் இவளுகளுக்கெல்லாம் தூக்கம் வராது போல.. யாரு வீட்டில் என்ன நடக்குதுன்னு பார்க்கிறதே இவளுங்களுக்கு வேலை!” வாய்க்குள் முனகிக் கொண்டார் செல்வி.
“தம்பி! நீங்களும் உள்ளே வாங்க!” என அதிவீரனையும் அழைத்தார் புவியரசன்.
“இல்லை மாமா! இருக்கட்டும்! இன்னைக்கு மினிஸ்டர் வந்ததால் எனக்கு ஸ்கூலில் தான் ட்யூட்டி. பஸ்ஸை மிஸ் பண்ணிட்டு தனியா நிக்கவும் தான், நான் கூட்டிட்டு வந்தேன். அவ என்கூட வர மாட்டேன்னு தான் சொன்னா, நேரங்கெட்ட நேரத்தில் தனியாக விட மனசு வரலை! உங்களுக்குப் புரியும்ன்னு நினைக்கிறேன். நீங்க திட்டுவீங்கன்னு ரொம்பப் பயப்படுறா! அவளை எதுவும் சொல்லாதீங்க! வர்ரேன் அத்தை!” அவளைக் கேள்வி கேட்க முடியாத அளவிற்கு நாசூக்காய் விளக்கினான் அதிவீரன்.
தன்னவளை யாரும் ஒற்றை வார்த்தை பேசிவிடக் கூடாதென்பாதில் அவன் கவனமிருந்தது.
“வர்ரேன் நிலா!” தலையசைத்து அவளிடம் விடைபெற்றவன் தன் இருசக்கர வாகனத்தைத் தோரணையாய்க் கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டான்.
தெருவே அவன் அழகுநிலாவை விட்டுச் சென்றதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றது.
அழகுநிலாவோ, அவனின் தலை மறையும் வரை அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நின்றாள்.
“என்னடி இது? அந்தக் கதிரு பயலுக்குதேன் பேசி வச்சிருக்கோம்ன்னு சொன்னாய்ங்க?”
“எம்புட்டு உரிமையா வண்டியில் வந்து இறங்குறா பார்த்தியா? தோளில் கைபோட்டுல்ல அவனைப் பிடிச்சிருந்தா!”
“அப்படியா? பார்க்கத்தேன் ஒண்ணும் தெரியாத பாப்பா மாதிரி இருக்கா! என்ன வேலையெல்லாம் செய்றா பாரு!”
“இவன் தானேக்கா அன்னைக்குப் பொண்ணு பார்க்க வந்தவேன்?”
“அவன் வேற ஆளுடி! அவன் நல்லா சிவப்பா இருந்தியான்.. இவன் கருப்பா இருக்கியான்.! ஆனால் அவனும் போலிசுதேன்னு பேசிக்கிட்டாக”
“ஓ! பேசி வச்சது ஒருத்தன், பொண்ணு பார்த்துட்டுப் போனது இன்னொருத்தன், இவ சுத்துறது வேற ஒருத்தன் கூட.. எம்புட்டுத் திண்ணக்கம் பார்த்தியா இந்த அழகிக்கு. எல்லாத்துக்கும் இந்தச் செல்விதேன் காரணம், கடையைப் பார்க்கிறேன்னு புள்ளையை விட்டுட்டா! அது ஊர் மேஞ்சுக்கிட்டு திரியுது!” அன்றை இரவு பொழுதின் பேசு பொருளாக அழகுநிலா மாறியிருந்தாள்.
தங்களின் கற்பனைக் குதிரைக்குத் தீனி போட, அழகுநிலாவை இரையாக்கிக் கொண்டிருந்தனர் அண்டை வீட்டினர்.
“நமக்கு என்னத்துக்குடி ஊர் பஞ்சாயத்து? நாம எதையும் கண்டும் காணாமல் போயிருவோம்! போய்த் தூங்குங்க டி!” என அவர்கள் தங்கள் புறணியை முடித்துக் கொண்ட அதே நேரம் கதிரவன் வந்திருந்தான். வந்தவனின் முகத்தில் கோபம் அப்பியிருந்தது. எதுவுமே பேசாமல் அமைதியாய் வாசலில் நின்று விட்டான்.
“என்னங்க, இந்தப் பையன் அத்தை மாமான்னு சொல்லிட்டுப் போறான்.. எனக்குப் பயந்து வருதேங்க! ஊரிலிருக்கிற அம்புட்டும் நம்ம வீட்டைத்தேன் வேடிக்கைப் பார்த்துட்டு நிக்கிது. நாக்கு மேல பல்லைப் போட்டு பேசப் போறாளுங்க! எப்போடான்னு சந்தர்ப்பம் பார்த்து ஏழரையைக் கூட்டதேன் திரிவாளுங்க!” எரிச்சலுடன் முணுமுணுத்த செல்வி,
“ஏன்டி, கதிரவனுக்காவது ஃபோன் போட்டு சொல்லியிருக்கலாம்ல? நீ பாட்டுக்கு, அந்தப் பையன் கூட, ஜம்முன்னு வந்து இறங்கிட்ட.. அந்தப் பையன் வீட்டில் கேட்டால் என்ன பதில் சொல்றது? கொஞ்சமும் கூறு இல்லைடி உனக்கு, இன்னும் எதுவும் முடிவு பண்ணாமல் இருக்கும் போது, இப்படிப் பண்ணினால், நாங்களும்தேன் என்ன செய்ய?” மகளின் வாழ்க்கையைக் குறித்த கவலை அவர் வார்த்தைகளில் தெரிந்தது.
“நான் என்னைக்காவது மாமாவுக்கு ஃபோன் பண்ணியிருக்கேனா? அந்த நேரத்தில் எனக்கு அதெல்லாம் தோணலைம்மா!” எனச் சொன்ன மகளைப் பார்வையால் பொசுக்கினார் செல்வி.
“இப்போ அந்தப் பையன் வீட்டில், இதைச் சொல்லணுமா வேணாமாங்க? நாளை பின்னே வேற யாராவது சொல்லப் போய், அவங்களுக்குத் தெரிஞ்சால் சங்கடம் தானே?” எனக் கேட்ட செல்வியின் பார்வை எதேச்சையாய் வெளியே நின்றிருந்த கதிரின் மீது படிந்தது.
“என்னடா கதிரு! வெளியவே நிற்கிற? உள்ளே வாடா! சாப்பாடு வைக்கவா?”
“என்னக்கா நடிக்கிறியா? உம் மவ எவன்கூடவோ வண்டியில் வந்து இறங்கினாளாம்? புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து தானே இம்புட்டையும் செய்றீக? என்னைப் பார்த்தால் ஏமாளி மாதிரி தெரியுதா என்ன?” ஏகத்திற்கும் எகிறிக்கொண்டு வந்தான் கதிரவன்.
“இப்போ என்ன நடந்து போச்சுன்னு இப்படிக் குதிக்கிற? அழகி பஸ்ஸை விட்டுப்புட்டு ஒத்தையில நின்னுருக்காளேன்னு அந்தத் தம்பி வந்து விட்டுட்டுப் போவுது! சின்ன விஷயம் டா இது? இதுக்கு ஏன் இப்படிப் பேசுற?”
“எது? இது உனக்குச் சின்ன விஷயமா? அவள் ஒவ்வொரு நாளைக்கு ஒருத்தன் கூட வந்து இறங்குவா.. நான் கண்ணை மூடிட்டு வேடிக்கைப் பார்த்துட்டு நிக்கணுமா? என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க? உன் மவளை நீ எனக்குக் கட்டித் தர்ரேன்னு சொல்லிருக்க. என்கிட்டே ஒண்ணு சொல்லிப்புட்டு இந்தப் பக்கம் வேற மாப்பிள்ளை பார்ப்பீகளோ? நான் இதை லேசில் விடமாட்டேன்க்கா! நான் எவனுக்கும் இவளை விட்டுத் தர மாட்டேன். எவன் வர்ரான் பார்க்கிறேன்.!” கோபமும் அழுத்தமுமாய் நின்றான் கதிரவன். அவனின் சத்தமாய்ப் பேசியதால் அவன் குரல் வாசல் வரை கேட்டது.
கதிரவன் சொன்ன வார்த்தைகளின் சாராம்சம் புரியவே, செல்விக்குச் சில விநாடிகள் தேவைப்பட்டது. ஆனால் புவியரசன் அவன் வார்த்தைகளின் அர்த்தத்தை உடனே உள்வாங்கியிருக்க, கோபம் அவரின் உச்சந்தலைக்கு ஏறியிருந்தது.
“கதிரு! என்ன வார்த்தை பேசுற நீயி?” எனக் கதிரவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார். கதிரவனை அறைந்த வேகத்தில், புவியரசனின் கரம் தீயாய்க் காந்தியது. இதுவரை கோபத்தின் சாயலே படியாத தந்தையின் ரௌத்திரம் தாங்கிய முகத்தினைப் பயத்துடன் பார்த்தாள் அழகுநிலா.
“என்ன பேசினாலும் கையைக் கட்டி வேடிக்கைப் பார்த்துட்டு நிற்பேன்னு நினைக்கிறியா நீயி? இப்படியொரு வார்த்தை சொல்ல உனக்கு எப்படி மனசு வந்துச்சு? இப்போ வரைக்கும் அழகி எம் மவ மட்டுந்தேன். இப்போவே இப்படிப் பேசுறன்னா, என் புள்ளையை உன்னைய நம்பி கொடுத்தால் என்னென்ன பேசுவ நீ? வார்த்தை சுத்தமில்லாத உன்கிட்டே மனசும் குப்பையாத்தேன் கெடக்கு. எனக்குத் தெரியும் எம் மவளை யாருக்கு கட்டிக் கொடுக்கணும்ன்னு, இருக்கிற மரியாதை கெடும் முன்னே போயிரு இங்கிருந்து.!”
புவியரசன் அடித்ததில் அதிர்வில் அப்படியே நின்று விட்டான் கதிரவன். அவன் கன்னத்தில் தடமாய்ப் புவியரசனின் விரல்கள் பதிந்திருந்தது.
“என்னக்கா! இந்த ஆளை அடிக்கவிட்டு வேடிக்கை பார்க்கிறியா? என்னால் திருப்பி அடிக்க முடியாதுன்னு நினைக்கிறியா? அக்கா புருஷன்னு அமைதியாய் நிற்கிறேன். இருக்கிற மரியாதையையாவது அந்த ஆளை காப்பாத்திக்கச் சொல்லு!”
“உன்னைய போடான்னு சொல்லிட்டேன். என் வீட்டுக்குள்ளே நிற்கிற தகுதி உனக்கில்லை. என் வீட்டுக்குள்ளேயே நின்னு எம் மவளை தப்பா பேசுவ நான் சும்மா இருக்கணுமா? உன் மரியாதை மண்ணாங்கட்டி எல்லாம் எனக்குத் தேவையில்லை. போடா!” என விரட்டினார் புவியரசன்.
“கதிரு! போயிரு டா! அவரு அடிச்சுப்புட போறாரு! கிறுக்கத்தனமா என்னத்தையும் பேசி வைக்காதே டா! இப்படியொரு வார்த்தையை எப்படிச் சொல்லலாம் டா நீயி? அழகி நீ பார்த்து வளர்ந்தவத் தானேடா? அந்தக் கரிசனம் கூடவா உன்கிட்டே இல்லை? உனக்குக் கட்டிக் கொடுக்கலைன்னு அவள் நடத்தையையே தப்பா பேசுறியே டா? இந்த வார்த்தையெல்லாம் கேட்டும் உசுரோட மரமாத்தேன் நிற்கிறேன். ஒத்தை வார்த்தையில் உன்னை வெறுக்க வச்சிப்புட்ட கதிரு!” தொண்டை அடைக்க, ஆற்றாமையோடு செல்வி கேட்க,
“இப்போ என்ன சொல்றீங்க ரெண்டு பேரும்? எனக்கு அவளைக் கட்டித் தருவீங்களா மாட்டீங்களா?” கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல், பதில் சொல்லாமல் கேள்வி கேட்டான் கதிரவன்.
“உன்னைத் தவிர, வேற எவனுக்குனாலும் எம் மவளைக் கொடுப்பேன். செத்தாலும் நான் உனக்கு எம் மவளைக் கட்டித் தர மாட்டேன்.கேட்ட பதில் கிடைச்சுருச்சா? இடத்தைக் காலி பண்ணு! தப்பித் தவறி கூட இந்தப் பக்கம் வந்துராதே.. !” கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாய் பேசினார் புவியரசன்.
“நீ இப்படித்தேன் வந்து நிற்பன்னு எனக்குத் தெரியும் மாமா! இந்தக் கதிரவன் லேசுபட்டவன்னு நினைச்சீங்களா? பொழுது விடியட்டும் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் கொண்டு போய்ப் பஞ்சாயத்தில் நிறுத்துறேன். எம் மேலேயே கையை வச்சுட்டீல்ல? யோவ் மாமா! அனுபவிப்ப!” குருர சிரிப்புடன் சொல்லிவிட்டு வெளியேறும் கதிரவனைத் திகிலுடன் பார்த்திருந்தார் செல்வி.
“என்னங்க இவன் இப்படிச் சொல்லிப்புட்டு போறியான். எனக்கு நெஞ்சே அடைச்சுரும் போல இருக்குங்க! பஞ்சாயத்து அது இதுன்னு பேசிட்டு போறானே.. விடியவும் என்ன காத்திருக்கோ தெரியலையே?” எனப் பதற்றமாய் வினவிய செல்வியைக் கோபமாய்ப் பார்த்தார் புவியரசன்.
“இம்புட்டு அக்கப்போருக்கும் காரணம் நீதேன் செல்வி. நீயும் உங்க அம்மாவும் வாயை மூடிக்கிட்டு இருந்திருந்தாலே, பாதிப் பிரச்சனை வந்திருக்காது. நீயே உன் நெஞ்சைத் தொட்டு சொல்லு, வேலை வெட்டிக்குப் போகாமல், ஊரைச் சுத்திக்கிட்டு திரியுற உன் தொம்பிக்கு, இந்த ஜில்லாவில் எவனாவது பொண்ணு கொடுப்பானா? என் மவளைக் கொடுத்து அவள் வாழ்க்கையை அழிக்கச் சொல்றியா? என் மவ உங்க அம்புட்டு பேருக்கும் இளப்பமா போய்ட்டாளா என்ன.? நீங்க சொன்ன ஒத்தை வார்த்தையைப் பிடிச்சு தானே அவன் தொங்கிட்டுத் திரியுறான்? எனக்குப் பேசிட்டு போன அவனை விட, அவன் பேசுறதுக்குக் காரணமான உன் மேலத்தேன் கோவமா வருது!” கனமான அவரின் குரலில் அழுத்தமான கோபம் படர்ந்திருந்தது.
“பாருடி உங்கப்பா எப்படிப் பேசிட்டு போறாருன்னு? இப்படியெல்லாம் நடக்கும்ன்னு நான் என்ன கனா கண்டேனா?” எனச் செல்வி அழகுநிலாவைப் பார்த்துச் கேட்க,
தந்தையின் கோபம் ஒருபுறம், கதிரவன் ஒருபுறம், அதிவீரன் மீதான மெல்லிய பிடித்தம் மறுபுறமெனத் தவித்துப் போய் நின்றிருந்தவள், அன்னையின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் மௌனம் சுமந்து நின்றாள்.
*******
“சொல்லுங்க சார்! மறுபடியும் உங்க கடையில் நகை காணாமல் போய்டுச்சா.? எல்லாம் பத்திரமாக இருக்கு தானே?” என எதிரில் அமர்திருந்த இராஜேந்திரனைப் பார்த்தான் அதிவீரன்.
இந்த இராஜேந்திரன் மதுரையின் முக்கியப் புள்ளி அதாவது பெரும்புள்ளி. அமைச்சர் சுந்தர மூர்த்தியின் நெருங்கிய நண்பர். அமைச்சரின் பெயரைச் சொல்லியே நிறையக் காரியங்களைச் சாதித்துக் கொள்பவர்.
“ஆனாலும் உனக்கு ரொம்ப நக்கல் தான்யா! போலீசுன்னு என்கிட்டேயே காட்டுறியா?”
“ஐயோ! அப்படியெல்லாம் இல்லை சார்! உங்கக்கிட்டே அப்படியெல்லாம் நடந்துக்க முடியுமா? நீங்க யாரு.. அமைச்சரோட ஆருயிர் நண்பர், நகைக்கடை முதலாளி, மதுரையோட தொழிலதிபரே நீங்கதானே?” வார்த்தைகளில் அழுத்தம் வைத்துப் பேசினான் அதிவீரன்.
“என்னதேன் என் நண்பனே சொல்லியிருந்தாலும், சட்டுன்னு உன்னை மாதிரி ஒரு போலீஸ்காரனை நம்பி குடும்ப விஷயத்தைச் சொல்ல முடியாது பாரு. நான் என்ன சொன்னாலும் நீ செய்வேன்னு சுந்தரமூர்த்திச் சொல்லியிருக்கான். செய்வ தானே?” என இராஜேந்திரன் கேட்க, விருப்பமே இல்லாமல் தலையசைத்தான் அவன்.
அவன் முன்னாலிருந்த மேஜையின் மீது சில புகைப்படங்களைத் தூக்கிப் போட்டார் அவர். அதிவீரன் கேள்வியாய் அவரையே பார்த்திருக்க,
“இந்த ஃபோட்டோவில் இருக்கிறது என் பொண்ணு. பேரு பவித்ரா! இந்தப் போட்டோல இருக்கிற பரதேசி இருக்கானே.. இவன் பேரு பிரதீப். என் பொண்ணை இழுத்துக்கிட்டு ஓடிப் போய் மாசம் ஒண்ணு ஆகுது. உன்னோட வேலை என்னன்னா, இவங்க ரெண்டு பேரையும் கண்டுபிடிச்சுக் கொண்டு வந்து என் கண்ணு முன்னாலே நிறுத்தணும்.!”
“இப்போ என்னத்துக்கு வேண்டாத வேலை பார்க்குறீங்க.? அவளைக் கண்டுபிடிச்சு நீங்க என்ன செய்யப் போறீங்க.? அவள் எங்கேயாவது நல்லா இருந்துட்டு போவட்டும்ன்னு விட்டுருங்க!” அதிவீரன் பதில் சொல்லும் முன், இராஜேந்திரனின் மனைவி இடையிட்டுப் பேசியிருந்தார்.
“வாயை மூடிட்டு போயிரு சொல்லிப்புட்டேன். பொம்பளப் பிள்ளையை ஒழுங்கா வளர்க்க துப்பு இல்லை! நீயெல்லாம் வாயே பேசக் கூடாது. இழுத்துட்டு போனதுதேன் போனாள், நம்ம பயலா பார்த்து இழுத்துட்டு போயிருக்கணும். இப்போ வந்து குத்துதே குடையுதேன்னா நான் ஒண்ணும் செய்ய முடியாது. உன்னைக் காஃபி மட்டுந்தேன் கொண்டாரச் சொன்னேன். கண்டதையும் பேசாமல் உள்ளே போயிரு!” மனைவியை மிரட்டி உள்ளே அனுப்பினார் இராஜேந்திரன்.
“இதெல்லாம் நீ பெருசா எடுத்துக்காதேய்யா! நான் சொன்ன வேலை எனக்கு முடிஞ்சாகணும். நம்ம பயலுக தேடி அலசுன மட்டும், மதுரைக்குள்ளாற ரெண்டு பேரும் இல்லை. சென்னை, கோயம்புத்தூர்ன்னு மத்த இடங்களுக்கும் ஆளுகளை அனுப்பியிருக்கேன். ஒரு தகவலும் கிடைக்கலை. நீ எம்புட்டு வேகமா கண்டுபிடிக்க முடியுமோ, கண்டுபிடி! உன் பதவி உயர்வுக்கு நானே சுந்தரமூர்த்திக்கிட்டே சொல்றேன்.! அதுவும் இங்கேயே போஸ்டிங் போட சொல்றேன்.” பெற்ற மகள் நன்றாக வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என்ற எண்ணம் துளியும் இல்லாது அவர் பேசுவாதைப் பார்க்க இவனுக்குக் கோபமாக வந்தது.ஆனால் அவர் மீதான கோபத்தை அவனால் வெளிப்படையாய் காட்டிவிட முடியாது.
எதைச் செய்தாலும், யோசித்து நிதானமாய்ச் செயல்பட வேண்டுமென்பதில் உறுதியாய் இருந்தான் அதிவீரன். எதையாவது செய்து அவன் மீண்டும் மாற்றலாகிச் செல்ல துளியும் விரும்பவில்லை. அவன் மனதைக் கொள்ளைக் கொண்ட நிலவானவளை தன்னோடு உறவாகப் பிணைக்கும் வரை அவன் இங்கே இருந்தாக வேண்டும். அதற்காகவே பதுங்கிப் பாயும் புலியைப் போல், இப்போதைக்குப் பதுங்க முடிவு செய்திருந்தான்.
“பண்ணிடலாம் சார்! உங்க விருப்பபபடியே செஞ்சிடலாம்!” அந்த விருப்பப்படியில் அழுத்தம் தந்து சொன்னான்.
“நீ எங்களுக்குச் சாதகமாய் நடக்கிற வரை, உனக்குச் சாதகமாக எல்லாம் நடக்கும்!” என அவர் சொன்னதன் உள்ளர்த்தம் அவனுக்குப் புரிந்தது.
“புரியுது சார்!” என அவரிடம் விடைபெற்று கிளம்பி வெளியே வந்தவனை, வாசலில் வைத்துப் பிடித்துக் கொண்டார் இராஜேந்திரனின் மனைவி ஜெயந்தி.
“தம்பி! என் மகளை நீங்க தேடாதீங்க தம்பி! அவள் எங்கனையாவது உசுரோட இருந்துப்புட்டு போகட்டும். இந்தாள் அவளைக் கொன்னுருவாரு தம்பி. உங்களைப் பெறாத தாயாய் என்னை நினைச்சுக்கிடுங்க! எனக்காக அவளைத் தேடாதீங்க தம்பி!” என அவர் கேட்க, பதிலேதும் சொல்லாமல், அவர் கரத்தினில் அழுத்தம் தந்து விலகி வெளியேறியிருந்தான்.
ஜெயந்தி சொன்னதை வைத்து, பவித்ரா இருக்குமிடம் இவருக்குத் தெரியுமென்பதையும், அவள் மதுரையைத் தாண்டி எங்கேயும் செல்லவில்லை என்பதையும் அனுமானித்திருந்தான்.
யோசனையோடே ஜீப்பின் இருக்கையில் ஏறியமர்ந்தவனின் அலைபேசி சிணுங்க, தன் அன்னை அழைப்பதை அறிந்தவன், அழைப்பை ஏற்காமல், அணைத்துப் போட்டுவிட்டு நிமிர்ந்தவன்,
“கிளம்பலாம் ஏழுமலை! வண்டியை எடுங்க!” என்றபடியே வீட்டை நோக்கிய தன் பயணத்தைத் துவக்கியிருந்தான். அங்கே மாதவி மகனுக்காகக் கோபமாய்க் காத்திருந்தார்.

