Loading

நேசம்-7

காதலோடு கைகோர்த்து, கண்ணோடு கண் சேர்த்து அவளுடன் வாழப்போகும் நாளுக்கான ஆசைகள், அவனுக்குள் கற்பனையாய் விரிந்தது. தன்னைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே செல்லும் பெண்ணவளின் தோற்றம் சித்திரமாய் அவன் மனதில் பதிந்தது. அவளின் உருவம் தன் கண்ணிலிருந்து மறையும் வரை அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான் அதிவீரன். பிறை நிலவாய் அவன் மனதில் விழுந்த பிடித்தம், வளர் பிறையாய் உருமாறிக் கொண்டிருந்தது அவனறியாமலே..

அவள் சென்ற பின், தன் கவனத்தை மற்ற பணிகளில் திருப்பினான். கவனம் திரும்ப மறுத்தது. கண்கள் அனிச்சை செயலாய் அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நின்றது. அணவு தேடும் பூனையாய் அவன் மனம் அழகுநிலாவைத் தேடி தவித்து நின்றது.

“என்னைத் தவிக்க விடுற நிலா!” தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

“ஏழுமலை! அப்படியே ஒரு ரௌண்ட் போய்ட்டு வருவோம் வாங்க!” உடனிருந்த காவலரைத் துணைக்கு அழைத்துக் கொண்டவன், பள்ளி வளாகம் முழுதும் ஒருமுறை சுற்றி விட்டு, கலையரங்கம் நோக்கிப் போனான். மாணவர்களும், ஆசிரியர்களும், குழு குழுவாய் பிரிந்து ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பள்ளியின் முதல்வர் மகேஸ்வரி, அனைத்தையும் மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்.

“வாங்க சார்!” ஜன்னல் வழியே அதிவீரன் வருவதைப் பார்த்துவிட்டு, உள்ளே அழைத்தார் அவர்.

“ஒண்ணுமில்லை மேம்! நார்மல் செக்யூரிட்டி செக் தான். யூ கேரி ஆன்!” என அவரை அனுப்பியவனின் விழிகள், அவனவளைத் தேடியது.

சுற்றிலும் வட்டமிட்டு முடித்து எதேச்சையாய் திரும்ப,

“மிஸ்.. பூவெல்லாம் அப்பறம் வச்சுக்கலாம் தானே.? கோலம் மட்டும் போட்டால் போதும் தானே?” பக்கத்திருப்பவரிடம் பேசிய படியே, தரையில் மண்டியிட்டபடி அமர்ந்து கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் அவள்.

“இங்கே சாக்பீஸில் போட்டால் போதும் மிஸ்! லெவன்த் பிள்ளைகளை வரச் சொல்லியிருக்கேன் பூ அவங்களை வச்சு அரேன்ஞ் பண்ணிக்கலாம். வெளியில் வாசலில் போடுற கோலம் தான் பெருசா போடணும் மிஸ்.! என்ன கோலம் போடுறதுன்னு தெரியலை. மகேஸ்வரி மேம் திட்டுவாங்கன்னு பயமா இருக்கு. நீங்களே கேட்டு வர்ரீங்களா மிஸ்.!”அவளுடன் பணிபுரியும் கவிதா கேட்க, திருதிருவென விழித்தாள் அழகுநிலா.

“நானா மிஸ்?”

‘அந்தம்மாகிட்டே போய் எப்படிக் கேட்கிறது? சும்மாவே எனக்கும் அதுக்கும் ஆகாது. ஏற்கனவே சுடிதார் போட்டு வந்ததுக்கு வஞ்சுபுடுச்சு. திரும்பப் போய் வாங்கிக் கட்டிக்கணுமா?’ தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டாள்.

“பேசாமல் ரெண்டுபேரும் சேர்ந்து கேட்போமா மிஸ்?” எனக் கவிதாவையும் உடன் அழைத்துக் கொண்டு போனாள். மருண்ட விழிகளுடன், நடந்து வருபவளை எட்ட நின்று பார்த்துக் கொண்டிருந்தான் அதிவீரன். அவன் விழிகள், அவளில் சுவாரசியமாய்ப் படிந்திருந்தது.

“கெஸ்ட் வெல்கம் பண்ற மாதிரி இருக்கணும்ன்னு ஏற்கனவே சொன்னேனே கவிதா? கொஞ்சம் கவனமா வேலையைப் பாருங்க! ரெண்டு மணிக்கு முன்னே ஒருமுறை ரிகர்ஸல் பார்த்துடணும் புரியுதா?” என மகேஸ்வரி சொல்ல, தலையைத் தலையை இருவரும் ஆட்டினர். சற்று தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கோ, இதழ்கள் புன்னகையில் விரிந்தது. முத்துப் பற்கள் பளிச்சிட பற்கள் தெரிய வெகு நாளைக்குப் பின் சிரித்தான் அதிவீரன்.

“டீச்சரம்மாவுக்கு என்கிட்டே மட்டும் தான் வாய்! மத்தவங்ககிட்டே தலையாட்டி பொம்மை தான்!” புன்னகையுடன் தனக்குள் முணுமுணுத்தபடியே அவளைத் தொந்தரவு செய்யாது தன் வேலையைப் பார்க்கச் சென்றான் அவன்.

அவன் தன் பணிகளில் மும்முரமாய் இருந்தான். கடினப்பட்டுக் கவனத்தைத் தன் பணிகளில் திருப்பியிருந்தான். பள்ளி வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவது, அமைச்சருக்கான இருக்கையை ஒதுக்குவது, போக்குவரத்து நெரிசலைக் கண்காணிப்பது என அத்தனையையும் உடனிருந்த காவலர்களின் உதவியுடன் செய்து முடித்தான்.

 

அதே நேரம், பள்ளி வளாகத்திற்குள் அங்குமிங்குமாய் ஓடியோடி வேலை செய்து கொண்டிருந்த அழகுநிலாவும் அவ்வப்போது அவன் கண்களில் பட்டுக்கொண்டு தான் இருந்தாள். கோடை நேரத்து மழையைப் போல, அவளின் தரிசனம் அவனுக்கு இதம் தந்தது.

 

உணவு இடைவேளைக்குப் பின், வேலைகள் வேகமாக நடக்கத் துவங்க, மேடையில் மயில்கழுத்து வர்ணத்தில், அடர் வைலட் நிற கரையிட்ட பட்டுப்புடவையில் தேவதையாய் ஜொலித்தவளைப் பார்த்து மூச்சுவிட மறந்து போய் நின்றிருந்தான் அதிவீரன்.

 

பள்ளியின் பிராதான வாயிலில் அவன் நின்றிருக்க, அவள் பார்வை அவனைத் துளைப்பதை அவனால் உணர முடிந்தது.

*******

நேரம் யாருக்கும் காத்திருக்காமல் இறக்கை கட்டிக் கொண்டு பறக்க, கல்வி அமைச்சரின் வரவுக்காக அந்தப் பள்ளி வளாகம் முழுதுமே ஆர்வத்தோடு காத்திருந்தது. அமைச்சரின் வரவுக்காகப் போக்குவரத்துக் காவலரின் உதவியுடன், வாகனங்களை வேறு சாலைக்கு மாற்றிவிட்டு, அமைச்சரை வரவேற்பதற்குத் தயாராய் நின்றான் அதிவீரன்.

 

தன் பாதுகாவலர்கள் புடைசூழ, கருப்பு நிற சொகுசு மகிழுந்தில் வந்திறங்கினார் கல்வியமைச்சர் சுந்தரமூர்த்தி.

பள்ளியின் முதல்வர் பூங்கொத்தும் புன்னகையுமாய் அவரை வரவேற்க, சிரித்த முகமாய் வணக்கம் வைத்த சுந்தரமூர்த்தியின் பார்வை அதிவீரனில் அழுத்தமாய்ப் படிந்தது. அதற்கான காரணம் புரிந்தும் எதிர்வினை எதையும் முகத்தில் காட்டாமல் அவருக்கு மரியாதை நிமித்தமாய்ச் சல்யூட் வைத்து அமைதியாய் நின்றிருந்தான் அதிவீரன். இது சுந்தரமூர்த்தி என்ற தனி மனிதனுக்கான மரியாதை அல்ல, அவரின் பதவிக்கான மரியாதை என்பதையும் தெளிவாகவே உணர்ந்திருந்தான் அவன்.

 

முகத்தில் எந்த விதமான உணர்வுகளையும் பிரதிபலிக்காமல், அவரை வரவேற்று அவருக்கான இருக்கையில் அமர வைத்தவன், மேடையின் பக்கவாட்டிலேயே நின்று கொண்டான்.
வரவேற்பு நடனம், வாழ்த்துரை, விருந்தினர் உரை, மாணவ மாணவியருக்கு பரிசு வழங்குதல், தன் கரத்திலிருந்த நிகழ்ச்சி நிரலைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“சார்! பரிசு வழங்கிட்டு சார் கிளம்பிருவாரு! எல்லா ஏற்பாடும் பக்காவா இருக்கணும்!” அமைச்சரின் உதவியாளன் கட்டளையாய்ச் சொன்னான்.

“கலை நிகழ்ச்சிகள் முடிஞ்சதும் தானே கிளம்புறதா இருந்தது?” என அவன் பதில் கேள்வி கேட்க,

“அதெல்லாம் உனக்குத் தேவையில்லாதது. ஐயா கிளம்பும் போது எல்லாம் தயாராய் இருக்கணும்!” சொல்லிவிட்டு சென்றுவிட்டான் அவன்.
அமைச்சர் முன்னரே கிளம்புகிறார் என்றால் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். எனவே பள்ளி முதல்வரான மகேஸ்வரியைத் தேடிப் போனான். மேடையில் அமர்ந்திருந்தவரை, தனியே அழைத்து வந்தவன், அவரிடம் விபரம் சொல்லிவிட்டு, மற்ற ஏற்பாடுகளைப் பார்க்கச் சென்றிருந்தான். அவன் ஏற்பாடுகளைச் செய்து முடிக்கவும், சுந்தரமூர்த்திக் கிளம்பவும் சரியாக இருந்தது.

 

பிரதான நுழைவு வாயில் வழியாகச் சென்றால் கூட்ட நெரிசல், அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதால், பின்புற கேட்டில் ஏற்பாடுகளைத் தயார் நிலையில் வைத்துவிட்டுக் காத்திருந்தான் அவன்.

 

பாதுகாவலர்களின் அணிவகுப்போடு நடந்து வந்தவரை, கார் கதவினைத் திறந்துவிட்டு உள்ளே அமர வைத்தான்.

“இப்படியே இருந்துக்கணும் சொல்லிட்டேன். கையில் துப்பாக்கி இருக்குன்னு உன் இஷ்ட ம*ருக்கு சுட்டுத் தள்ளிருவியா? அவன் யாருன்னு தெரியும்ல? இந்தத் தடவை ட்ரான்ஸ்ஃபரோட முடிஞ்சு போச்சுன்னு சந்தோஷப்பட்டுக்க.. அடுத்த முறை எதாவது ஏடாகூடம் செஞ்சன்னு தெரிஞ்சுது, டிப்பார்ட்மெண்ட்டில் நீ இருக்க மாட்டே! உன் இடம் இது தான்.. மனசில் நல்லா பதிய வச்சிக்கோ! அரசியல்வாதிக்குச் சல்யூட் வைக்கிற வாட்ச்மேன் தான் உங்க தகுதியெல்லாம். உனக்குத் துப்பாக்கி கொடுத்துருக்கிறது, என்னை மாதிரி அரசியல்வாதிக்கு எதுவும் நடக்காமல் பார்த்துக்கிறதுக்குத் தான். எங்க பாதுகாப்புக்கு தான். நினைச்ச நேரத்துக்கு நீ எடுத்து சுடுறதுக்கு இல்லை.!” எரிச்சல் படர்ந்த முகத்துடன் அவர் சொல்லிவிட்டு முகத்தில் அடித்தார் போல், மகிழுந்தின் கதவை மூடினார்.

அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும், அவனின் கைமுஷ்டி அழுத்தமாய் இறுகியது. உள்ளே எரிமலையாய்க் கொதித்து வெளிய வரக் காத்திருந்த கோபத்தைக் கண்கள் மூடி தனக்குள் விழுங்கினான் அதிவீரன். அவனுக்கிருக்கும் கோபத்திற்கு, துப்பாக்கியை எடுத்து, அவரின் நெற்றிப்பொட்டி வைத்து அழுத்தி விடலாம் என்ற எண்ணம் தான் எழுந்தது.

 

முயன்று தன் கோபத்தை இறுகியப் பற்களின் நடுவே கட்டுப்படுத்தி, முகத்தில் உணர்வுகளைப் பிரதிபலிக்காமல் அவருக்குச் சல்யூட் வைத்து வழியனுப்பினான்.

 

அவனுக்குத் தெரியும் அவன் அனுபவிக்கும் ஒவ்வொன்றும், அவனின் நேர்மைக்குக் கிடைக்கும் வெகுமதிகள் தான். அவன் நேர்மையாய் இருந்ததற்கான பரிசுகள்.

அமைச்சர் கிளம்புவதற்கே காத்திருந்ததைப் போல் அவனின் அலைபேசி ஒலியெழுப்பி அவன் சிந்தையைக் கலைத்தது. ரதி தங்கமாளிகை உரிமையாளர் தான் அழைத்திருந்தார்.

“என்ன அதிவீரன், நான் வரச் சொல்லியே ரெண்டுநாள் ஆனதாக ஞாபகம்.. அமைச்சர் சொன்னால் தான் வருவீங்களா? நான் வேணும்ன்னா சுந்தரமூர்த்திகிட்டே சொல்லவா?” எனக் கேட்டார் அவர்.

“அமைச்சர் வர்ரதில் கொஞ்சம் பிஸி சார்! நாளைக்குக் கண்டிப்பா வர்ரேன்.!” எனச் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்திருந்தான். மனம் ஏனோ மரத்துப் போனதைப் போல் உணர்ந்தான்.

 

அவன் ஆசைப்பட்டுத் தேர்வெழுதி தான் இந்தப் பணிக்கு வந்தான். ஆனால் இங்கே நடக்கும், அரசியல் விளையாட்டின் நடுவே, கடைசியாய் பணமும் பதவியும் தான் வெற்றிவாகை சூடுகிறது என்பதை அவனின் பணிமாற்றமும், தற்காலிகமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பதவி உயர்வும் அவனுக்குச் சொல்லாமல் சொல்லியிருந்தது.
தான் மார்பில் குத்தியிருந்த பெயர் பட்டையிலிருந்த பெயரை மென்மையாய் வருடினான். அவன் மனதில் வகுத்து வைத்திருந்த கொள்கைகளையும் மீறி, சூழ்நிலைக் கைதியாய் சில வேலைகள் செய்ய வேண்டியிருந்தாலும், காவல்துறை பணி அவனுக்குப் பிடித்ததென்பதை அவனின் செயல் அப்பட்டமாய்ப் பறைசாற்றியது.

அதே நேரம் ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் முடிவடையத் துவங்கியிருந்தன. பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை அழைத்து வருவது தெரிந்தது. ஆங்கில நாடகம் ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பது, ஒலிபெருக்கியின் வழியே சத்தமாய்க் கேட்டது. அமைச்சர் கிளம்பியதும், மற்ற காவலர்களும் கிளம்பியிருந்தனர், சிலர் மட்டுமே ஆங்காங்கே நடமாடிக் கொண்டிருந்தனர்.

“நீங்க கிளம்பலையா சார்? ரெண்டு பி.சி மட்டும் நிறுத்திட்டு மத்தவங்களை எஸ்.பி கிளம்பச் சொல்லிட்டார் சார்! அவர் அமைச்சர் பின்னாடியே பாதுகாப்புக்குப் போயிருக்கார் சார்! ஜீப்பை எடுக்கவா சார்?” என ஓட்டுநர் ஏழுமலை வந்து நிற்க,

“நீங்க வண்டியை எடுத்துட்டு கிளம்பிருங்க! என் பைக் இங்கே கொண்டு வந்துட்டீங்க தானே? நான் அதில் போய்க்கிறேன். நீங்க காலையில் வீட்டுக்கு வந்து பிக்-அப் பண்ணிக்கோங்க!” எனச் சொன்னவன் கலையரங்கம் நோக்கிப் போனான். அவனுக்கு அழகுநிலாவை ஒருமுறை பார்த்துவிட்டுச் செல்லலாம் என்ற எண்ணமிருந்தது.

 

அந்தப் பெரிய கலையரங்கத்தினுள் அவன் நுழைந்த போது, பாதி இருக்கைகள் காலியாக இருந்தன. அடுத்த நிகழ்ச்சியைத் துவக்குவதற்காக மேடையை இருளாக்கியிருந்தனர்.
குட்டி குட்டி குழந்தைகள் அழகாய் இளவரசியைப் போல் உடையணிந்து நின்றிருக்க,

“வாயாடி பெத்த புள்ள
வரப்போறா நெல்ல போல
யார் இவ
யார் இவ
கையில சுத்தற
காத்தாடி
காத்துல ஆடுது
கூத்தாடி
கண்ணுல கலரா
கண்ணாடி
வம்புக்கு வந்து நிப்பா
யார் இவ
யார் இவ.” எனப் பாடல் ஒலிக்க அழகாய் நேர்த்தியாய் ஆடத் துவங்கியிருந்தன.

 

சின்னச் சின்னப் பெண் குழந்தைகளைப் பார்த்ததும், அவன் மனம் இலகுவாக, நடனத்தில் லயித்திருந்தவன், குழந்தைகளின் பார்வை ஒரே இடத்தில் நிலைப்பதைக் கண்டு, அவன் அந்தப் பக்கமாய்ப் பார்வையைத் திருப்ப, மேடையின் பக்கவாட்டில் நின்று குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் அழகுநிலா. குழந்தைகளுக்கு ஏற்றாற் போல், குதித்துக் குதித்து, புன்னகையுடன், கண்களை உருட்டி அவள் ஆடும் தோரணையில், அவன் மனம் சிக்கித் தவிக்கத் துவங்கியது.

நடனத்தின் ஒவ்வொரு படிகளையும் அவள் சொல்லித் தர ஆடிய வாண்டுகள், நடனத்தை நிறைவு செய்யவும், “சூப்பர்!” எனச் சைகை செய்து, கைத்தட்டி குழந்தைகளை ஊக்கப் படுத்தியிருந்தாள்.

அதோடு வேலை முடிந்ததென அவள் நின்றுவிடவில்லை, பிள்ளைகளைப் பக்கவாட்டில் யாருக்கும் தொந்தரவு தாராத வகையில் அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு, குழந்தைகளின் பெயர் பட்டியலில் குறித்து வைக்கும் வரையிலுமே அவள் முகம் பதற்றத்துடன் தான் இருந்தது.

“டீச்சரம்மா சின்சியர் சிகாமணியாய் இருப்பாங்க போல!” எனத் தனக்குள் சொல்லிக் கொண்டவனின் கண்கள், தன்னை எதிர் துருவமாய் ஈர்க்கும் அவளை நோக்கியே நகர்ந்தது.

சிறிது நேரத்தில் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவடைந்திருக்க, பள்ளி வளாகமே வெறிச்சோடியிருந்தது. பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களும், அலுவலகப் பணியாளர்களும் மட்டும் மீதமிருந்தனர். அவர்களும் ஒவ்வொருவராய் கிளம்பிக் கொண்டிருக்க, மணிக்கட்டைத்திருப்பி நேரத்தைப் பார்த்தான் அதிவீரன். இரவு ஒன்பது மணியாகியிருந்தது.

 

ஏற்கனவே மாதவி இருமுறை அழைத்திருந்த காரணத்தால், விருப்பமே இல்லாமல் அங்கிருந்து கிளம்பினான் அவன். வாகனத் தரிப்பிடத்திலிருந்து தன் இருசக்கர வாகனத்தை எடுத்தவன், பிரதான வாயிலை நோக்கி நகர, தோளில் பையை மாட்டியபடி நின்றிருந்தாள் அழகுநிலா.

அவளை எதேச்சையாய் கடந்து போக முயன்று, பின் அந்த முயற்சியைக் கைவிட்டவனாய் அவள் முன் சென்று வாகனத்தை நிறுத்தினான். பக்கத்தில் வந்து பார்த்த பிறகே அவளின் முகம் பதற்றத்தில் இருப்பதை உணர்ந்தான் அவன்.

“என்ன ஆச்சு நிலா? வீட்டுக்குப் போகலையா?” என அவன் கேட்க, அழுதுவிடுபவள் போல அவனைப் பார்த்தாள்.

“என்ன ஆச்சுன்னு கேட்கிறேன்ல்ல பதில் சொல்லு?”

“ஸ்கூல் பஸ்ஸை மிஸ் பண்ணிட்டேன். உள்ளே போய்த் திங்க்ஸ் எடுத்துட்டு வர்ரதுக்குள்ளே பஸ் போய்டுச்சு!”

“எல்லாரும் இருக்காங்களான்னு பஸ்ஸில் செக் பண்ண மாட்டாங்களா?”

“பாதிப் பேர், வீட்டிலிருந்து ஆள் வரச் சொல்லி அவங்களோட போய்ட்டாங்க! நானும் அப்படிப் போயிருப்பேன்னு நினைச்சுருப்பாங்க!” தட்டுத் தடுமாறி பதில் சொன்னாள் அவள்.

“இப்போ என்ன செய்யப் போற?”

“ஆட்டோ, இல்லைன்னா கே புக் பண்ணணும்!”

“லூசா நீ? இந்த நேரத்திற்குக் கேப் எப்படி வரும்?” என அவன் கேட்க, பதில் சொல்லாமல் அமைதியாய் நின்றாள் அவள்.

 

அந்தப் பகுதியில் குறிப்பிட்ட நேராத்திற்குப் பின் வாகனங்களின் வரவு அறவே இருக்காது என்பது அவளுக்குத் தெரியும் தான். பயமும் தவிப்புமாய் அவள் நிற்பதைப் பார்த்து,

“நான் வீட்டில் விடறேன் வா!” அவன் அழைக்க அவளிடம் எதிர்வினையில்லை.

“உங்க அப்பாவுக்குக் கால் பண்ணி வரச் சொல்லு, அதுவரை வெய்ட் பண்ணுறேன்.!” என அவன் சொல்லவும், அலைபேசியை எடுத்து தந்தைக்கு அழைத்தாள். ஆனால் அந்தப் பக்கம் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாய் தகவல் தந்துவிட்டு ஓய்ந்தது கணிணி குரல்.

“இப்போ என்ன செய்யலாம்? இப்படியே விடியற வரை இங்கே நிற்க போறியா? உங்க அம்மாகிட்டே ஃபோன் இல்லையா?” என்ற அவன் கேள்விக்கு,

“வீட்டில் ஒரேயொரு ஃபோன் தான்!” பாவமாய்ப் பதில் சொன்னாள்.

“இப்போ என்ன செய்யலாம்ன்னு நீ தான் சொல்லணும்? என்னைப் பார்த்தால் பயமா இருக்கா? அதனால் தான் வரமாட்டேன்னு சொல்றியா?” என்ற அவனின் கேள்விக்கு, அவசரமாய் இடவலமாய் இல்லையென ஆடியது அவள் தலை.

“அப்பறம் என்ன?”

“அம்மா வையும்!”

“அப்போ வீட்டுக்குப் போகாமல் இங்கேயே நின்னால், உங்க அம்மா திட்ட மாட்டாங்களா? பேசாமல் ஜீப் வரச்சொல்லட்டுமா?”

“யாத்தே! வேணாம்! எதோ கொலை பண்ணின மாதிரி ஊரே பேசும்.!” அவசரமாய் அவள் பதில் சொல்ல,

“அப்போ நீ என்கூடத்தான் வந்தாகணும்! வேற வழியில்லை. உனக்கு வரப் பிடிக்கலைன்னா சொல்லிடு, நான் இப்படியே கிளம்புறேன். நீ பொடி நடையாய் நடந்து வீடு போய்ச் சேரு!” எனச் சொல்லிவிட்டு, அவன் வாகனத்தைக் கிளப்பினான்.

கருப்பு நிற புல்லட், தெருவிளக்கின் ஒளியில் பளபளத்தது.
அவன் வாகனத்தைக் கிளப்பிய அதே நேரம், ஓடிப்போய் அவன் பின்னால் ஏறி அமர்ந்திருந்தாள். அவளுக்கும் அவனை விட்டால் வேறு வழியிருக்கவில்லை.

“என்ன இது.. இவ்ளோ சின்னதாக இருக்கு சீட்?” எனப் புலம்பியபடியே அவள் ஏறியமர,

“இது கார் இல்லை, பைக்.. சீட் அவ்வளவு தான் இருக்கும்!” என்றபடியே அவன் வாகனத்தை உயிர்ப்பித்துச் சாலையில் செலுத்தியிருந்தான். அவளின் அண்மையில் தன்னைத் தொலைத்து, பக்கக் கண்ணாடியில் தெரியும் அவளின் முகம் பார்த்தபடியே சென்று கொண்டிருக்க, இந்த இதமான இரவு நீண்டு கொண்டே செல்லாதா? என்ற ஏக்கம் மிகுந்தது அவனுக்கு.

அவள் ஒற்றைப்பக்கமாகச் சற்று இடைவெளி விட்டு அமர்ந்திருந்தாள். ஒற்றைக் கையில் தோள் பையைப் பிடித்திருந்தவள் மறு கரத்தை தன் மடியிலேயே வைத்திருந்தாள். சென்டர் க்ளிப் செய்யப்பட்டு விரித்துவிடப்பட்டிருந்த அவளின் கூந்தல் காற்றின் இசைக்கேற்ப அசைந்து கொண்டிருந்தது. அவள் காதில் அணிந்திருந்த குட்டி ஜிமிக்கி அவளுக்குக் கூடுதல் அழகு சேர்த்தது.முதன் முறையாய் வேற்று ஆணுடன் பயணிக்கும் தயக்கம் வேறு அவள் முகத்தில் தெரிந்தது.

அவளை விழிகளுக்குள் நிரப்பியபடியே அவன் வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருக்க, அவன் பின்னால் அமர்ந்திருந்தவளோ, அவனுக்கு நேர் எதிரான மனநிலையில் இருந்தாள்.

‘இன்னும் எதுவுமே முடிவு செய்யப்படாத நிலையில், அதிவீரனுடன் சென்று வீட்டின் முன் இறங்குவது சரியாக இருக்குமா?’ என்ற பயம் அவளை முற்றுகையிட்டிருந்தது.

“வீட்டு முன்னால் விட வேணாம்! கொஞ்சம் முன்னாலேயே இறக்கிவிடுங்க நான் எதாவது சொல்லி சமாளிச்சுக்கிறேன்!” என அவள் சொல்ல,

“நாம ஒண்ணும் தப்பு பண்ணல நிலா! எதையும் நேரடியாய் சொல்ல கத்துக்கோ!” எனச் சொன்னவன், அழகுநிலாவின் வீட்டை நோக்கி வாகனத்தைச் செலுத்த, பயத்துடன் பின்னால் அமர்ந்திருந்தாள் அழகுநிலா.

 

அவளின் பயத்தை மெய்யாக்குவது போல, வாசலிலேயே அமர்ந்திருந்தனர் புவியரசனும் செல்வியும்.

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
10
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment