Loading

நேசம்-6


“ம்மா! இன்னைக்கு அந்தப் பட்டுச் சேலையைத்தேன் கட்டணும்! டீச்சர்ஸ் எல்லாம் ஒரே கலர் கட்டணும்மா! சேலையையும், ப்ளௌஸையும் காணோம்மா! லேட்டாகப் போனால் மண்டோதரி வையும்!” வழக்கம் போல வீட்டை நடையால் அளந்தபடியே எதை எதையோ எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் அழகுநிலா.

அவளின் பாத கொலுசுகள் மென்மையாய் சிணுங்க, தரையதிர நடக்கும் மகளை ‘இவளுக்கு வேற வேலையே இல்லை’ என்பதைப் போல் பார்த்திருந்தார் செல்வி.

“அயர்ன் பண்ண கொடுத்தேன்டி! இன்னும் கொண்டு வரலை.!” கடையில் உள்ள பொருள்களை அடுக்கியபடியே பதில் சொன்னார் அவர்.

“என்னம்மா இப்படிச் சாதாரணமாய்ச் சொல்ற?”

“இருடி! அப்பாவை வாங்கியாரச் சொல்லி அனுப்பியிருக்கிறேன். உனக்கு வேற நேரமாகுதே? பேசாமல் அம்மாவோட ப்ளௌஸை போட்டு கட்டிட்டு போறியா? பிடிச்சு தைச்சு தர்ரேன்டி! ஆத்திர அவசரத்திற்கு ஒண்ணும் தப்பு இல்லை டி!” எனச் சொன்ன செல்வியை முறைத்தாள் அழகுநிலா.

“போம்மா.. லூசா இருக்கும்.. பத்தாக்குறைக்கு நீ கழுத்தெல்லாம் மேலே ஏத்தி வச்சு தைச்சுருப்ப.. எனக்கு அது செட் ஆகாது.” என அன்னையிடம் மறுத்தவள்,

“டேய் கவினு! அப்பா வர்ராங்களான்னு பாருடா! நேரமாகிருச்சு!” எனத் தம்பியை விரட்டினாள்.

“போக்கா! நீயே போய்ப் பாரு!” என அவன் தொலைக்காட்சியின் முன் அமர்ந்துவிட, வாசலுக்கு ஓடிப் போய் எட்டிப் பார்த்துவிட்டு வந்தாள். தந்தை வரும் சுவடே தெரியவில்லை.

“போச்சு! போச்சு! மண்டோதரி வையப் போவுது! நாங்க போய்தேன் எல்லாத்தையும் செய்யணும்மா! கீர்த்தனாவெல்லாம் கிளம்பிட்டாளாம்!”

“நீ அந்தச் சேலையைத்தேன் கேட்பன்னு நான் என்னடி கனா கண்டேனா.? சுருங்கிப் போய்க் கிடக்கேன்னு அயர்ன் பண்ண கொடுத்தேன். நீ என்னடான்னா இந்தக் குதி குதிக்கிறே?”

“ஃபோனைப் போட்டு அப்பாவை வேகமா வரச் சொல்லும்மா! ஸ்கூல் பஸ் வேற வந்துரும்மா!”

“அப்போ கவினுக்கு இன்னைக்கு ஸ்கூல் இல்லையா டி? அவன் விழாவுக்கு வர வேணாமா?”

“அஞ்சாவது வரை லீவுதாம்மா! நானுமே நைட் வர லேட் ஆகும்மா! எல்லாம் முடிய ஒன்பது மணிக்கு மேலே ஆகும். நேரமாகிடுச்சுன்னு பதறிக்கிட்டு ஃபோனைப் போடாதே! உன் காதில் விழுதுதானே.? நான் வர லேட்டாகும்!”

“கத்தாதே டி! காதில் நல்லா விழுந்துச்சு.! அப்பறம் சாப்பாடெல்லாம் கொண்டு போக வேணாமா?”

“வேணாம்! டீச்சர்ஸ் எல்லாரும் சேர்ந்து ஆர்டர் பண்ணி சாப்பிட்டுக்குவோம்!” என அவள் சொல்ல,

“அக்கா! நீ மட்டும் ஆர்டர் பண்ணி சாப்பிடுற.. எனக்கு?”

“இன்னொருநாள் வாங்கித் தரேன்டா!”

“அக்கா! நானும் வருவேன்.. என்னையும் கூட்டிப் போ! ம்மா, அக்காவைக் கூட்டிப் போகச் சொல்லும்மா!”

“உனக்கு ஸ்கூல் லீவுடா கவினு! நீ வீட்டில் இரு!”

“முடியாது! எனக்குப் போர் அடிக்கும்! நான் போவேன்.!” எனப் பிடிவாதமாய் அழத் துவங்கினான் கவின்.

“கூட்டிப் போயேன்டி! புள்ளை ஆசைப்படுறான்.!” மகனுக்குப் பரிந்து வந்தார் செல்வி.

“ம்மா! நீயும் ஏம்மா புரியாமல் பேசுற? அவன் என்னை ஒரு வேலையும் பார்க்க விடமாட்டான். இதை வாங்கித்தா! அதை வாங்கித்தான்னு உயிரை எடுப்பான். இவனை இழுத்துட்டுப் போய் நான் வை (வைதல்-திட்டுதல்) வாங்க முடியாதும்மா!” எனத் தாயிடம் சொன்னவள்,

“நானே நேரமாகிருச்சுன்னு நிற்கிறேன்! கடுப்பேத்தாதே கவினு!” எனத் தம்பியிடமும் கோபத்தைக் காட்டிவிட்டாள்.

“ஏய் கவினு! நீ அங்கிட்டு போடா! அவதேன் உயிர் போற மாதிரி கத்துறாளே! அம்மா அப்பறமா உனக்கு ஐஸ்க்ரீம் தாரேன்!” என மகனைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த செல்வி, கணவருக்கும் அழைத்து விரைந்து வரும்படி சொல்லிவிட்டு வைத்தார்.

“இந்தா ரெண்டு நிமிஷந்தேன் அப்பா வந்துருவாக டி!”

“இன்னும் அஞ்சு நிமிஷத்தில் எனக்குப் பஸ் வந்துரும்!” என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, தயங்கி தயங்கி உள்ளே வந்தான் கதிரவன்.

வரக்கூடாதென்று தான் நினைத்திருந்தான். ஆனால், அவனுக்கு உறவென்று இருப்பதே, தமக்கையின் குடும்பம் மட்டும்தான்! அப்படி இருக்கையில் அவனும் என்னதான் செய்வான்.? எதுவுமே பேசாமல் அமைதியாய் அங்கே நடப்பவற்றை வேடிக்கைப் பார்த்தபடி கதிரவன் நின்றிருக்க,

“ம்மா! மாமா வந்திருக்கு பாரு!” என அன்னையிடம் சொன்னாள் அழகுநிலா.

“வரட்டும்டி! உன் மாமனை நான் வர வேணாம்ன்னு சொல்லலியே? உன் மாமனுக்கு இன்னைக்குதேன் வழி தெரிஞ்சிருக்கு போல!” நேரடியாய் கதிரவனிடம் பேசாமல், தனக்குத் தானே பேசுவதைப் போல் காட்டிக் கொண்டார் செல்வி.

“அக்கா!”

“என்னடா அக்கா? இங்கண வராமல் ஒருநாள் பொழுது இருப்பியா டா? இப்போ உனக்கு நான் வேண்டாதவளா ஆகிட்டேன்ல்ல டா? எவன்கூடயோ சேர்ந்துக்கிட்டு புகையா ஊதித் தள்ளுறியாம்? எனக்கு எதுவும் தெரியாமல் இருக்குன்னு நினைச்சுட்டு இருக்கியா? மூஞ்சிக்கு நேராகக் கேட்டுச் சங்கடப்படுத்த வேணாம்ன்னுதேன் அமைதியாய் இருந்தேன். உங்காமல் திங்காமல் அப்படி என்னடா ஊர் சுத்துற வேலை உனக்கு? தாய் இல்லாமல் தறுதலையா வளர்த்துவிட்டுப்புடாள் அக்காகாரின்னு பேரு வாங்கிக் கொடுத்தானே இம்புட்டும் செய்ற? உன் மாமா சொன்ன சோலியைப் பார்த்து, ஒழுங்கா முன்னேறப் பாரு சொல்லிப்புட்டேன்.!” எனக் கோபமாய்ப் பேசினார் செல்வி.

“உன் சங்கத்தமே வேணாம்! போன்னு சொன்ன பிறகு நான் எப்படி இங்கண வந்து நிற்கிறது?”

“இதுக்கு முன்னே நான் உன்னை எதுவுமே பேசினது இல்லையா? அக்கா தம்பின்னு குளுகுளுன்னு கொஞ்சிக்கேதானே திரிஞ்சோம். பேச வந்துட்டியான் எனக்குதேன் வாய் இருக்குன்னு!” சடைத்துக் கொண்டார் செல்வி.

“அழகி நீயாச்சும் சொல்லேன்.?” அழகுநிலாவின் முகத்தைப் பார்த்தான் கதிரவன்.

“நான் என்னத்தை மாமா சொல்றது? நேத்து மாப்பிள்ளை வீட்டுக்காரய்ங்க வந்தாய்ங்களே, உரிமையாய் முன்னே நின்னுருக்க வேண்டியது யாரு.. நீதானே? இந்தத் திசைப்பக்கமே உன்னைய காணோம். அக்கா தம்பி சண்டையில் ஊடால என்னை இழுக்காதீங்க சொல்லிப்புட்டேன். அன்னைக்குச் சொன்னதைத்தேன் இப்போவும் சொல்றேன். என் மாமனா உன்னை எனக்குப் பிடிக்கும். அதைத் தாண்டி நான் எதையும் நினைக்கவே இல்லை மாமா! புரிஞ்சுக்கோ! கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டாளேன்னு மூஞ்சியைத் தூக்காதே! இந்தாரு மாமா! ஆயிரம்தேன் இருந்தாலும், எனக்குத் தாய் மாமன் நீதேன். உன் அக்கா மவளுக்கு ஊர் மெச்ச சீர் செய்வாச்சும் வேலைக்குப் போற வழியைப் பாரு!” அக்கா மகளின் பேச்சில் அசையாமல் நின்றுவிட்டான் கதிரவன்.

 

அவனுடன் திருமணம் எனப் பேச்செடுத்ததிலிருந்தே ஓரிரு வார்த்தைகளில் மட்டுமே பதில் பேசுபவள், இரண்டு நாட்களாய் தந்த அதிர்ச்சியில் அமைதியாகியிருந்தான் அவன்.

“ம்மா நான் கிளம்புறேன்!”

“என்னடி சுடிதாரோட போறவ? சேலை கட்டணும்ன்னு சொன்னியே டி?”

” வழியில் அப்பா வருவருல்ல, அப்படியே வாங்கிட்டு கிளம்புறேன்.. ஸ்கூலுக்குப் போய்ச் சேலையை மாத்திக்கிறேன்ம்மா! நேரமாகிடுச்சு!” என்றபடி அவள் தெருவில் இறங்கி நடக்கத் துவங்கியிருந்தாள்.

“கதிரு! என்னத்துக்கு இங்கணையே நட்டமா நிக்கிறே? போய் உட்காரு, தோசை ஊத்திட்டு வர்ரேன்.!” எனச் செல்வி உள்ளே சென்ற அதே நேரம், கதிரவனின் அலைபேசி இசைந்தது. இனியன் தான் அழைத்திருந்தான்.

“சொல்லு இனியா! எப்படி இருக்கே?”

“அதெல்லாம் இருக்கட்டும் மாமா! நீ எங்கே இருக்கே?”

“நம்ம வீட்டில் தான்!”

“கொஞ்சம் வெளியே தனியா வந்து பேசு மாமா! முக்கியமான விஷயம் பேசணும்.!” இனியனின் பீடிகையில், கதிரவனின் முகம் யோசனையில் சுருங்கியது.

“எதாவது பிரச்சனையா டா? பணம் எதாவது ஏற்பாடு பண்ணணுமா? உன் அம்மா வையும்ன்னு பயப்படுறியா?” எனக் கேட்டான் கதிரவன்.

“அதெல்லாம் இல்லை மாமா! உங்க விஷயம் தான் பேசலாம்ன்னு நினைச்சேன். அம்மாவும் அப்பாவும் வேற இடத்தில் மாப்பிள்ளை பார்க்கிறாங்களாம்? மாப்பிள்ளை வேற அழகியைப் பிடிச்சுருக்குன்னு சொல்லிட்டானாமே?”

“ம்ம்.. ஆமா டா! இதை எதுக்கு என்கிட்டே கேட்கிற?”

“வேற யாருக்கிட்ட கேட்பாய்ங்க? நீ ஏன் மாமா விட்டுக் கொடுக்கிற? அழகியை உனக்குக் கட்டி வைக்கிறேன்னு தானே சொன்னாங்க! அப்படி இருக்கும் போது அவிங்க வந்து பொண்ணைப் பார்த்துட்டுப் போவட்டும்ன்னு நீ ஒதுங்கி நின்னியாக்கும்?”

“உன் தங்கச்சியே என்னைப் பிடிக்கலைன்னு சொல்றா டா! நான் என்ன செய்யட்டும் சொல்லு? அவளுக்குப் பிடிச்சிருந்தால் , எம்புட்டு பெரிய பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கலாமே டா?”

“பிடிச்சுருக்கோ இல்லையோ, அது ரெண்டாவது விஷயம். எங்க அம்மா அழகியை உனக்குக் கட்டி வைக்கிறேன்னு சொன்னிச்சு தானே? உனக்குக் கட்டி வைக்கிறேன்னு சொல்லிப்புட்டு, வேற மாப்பிள்ளை பார்க்கிறது எந்த விதத்தில் நியாயம்?”

“நீ சொல்றதெல்லாம் விளங்குது டா இனியன்! நீ சொல்றதும் சரித்தேன். இப்போ நான் என்னதைச் செய்யணும்ங்கிற?”

“பஞ்சாயத்தைக் கூட்டு மாமா! எனக்குக் கட்டித் தரேன்னு சொல்லிப்புட்டு, இப்போ ஏமாத்துறாகன்னு சொல்லு! உன் பக்கம்தான் நியாயம் இருக்கு மாமா! நீ எதுக்கு விட்டுக் கொடுக்கிற?”

“அது எப்படிடா? உன் அம்மா என் உடன் பொறந்தவடா.. அக்காவைப் போய்ப் பஞ்சாயத்தில் நிறுத்திக்கிட்டு. நம்ம குடும்பத்துக்குதேன் அசிங்கம்!”

“லூசா மாமா நீயி? உன் உரிமையை விட்டுக் கொடுக்கிறேன்ங்கிற? முன்னே மாதிரி இப்போவெல்லாம் ஊரைக் கூட்டியா பஞ்சாயத்து நடத்துறாங்க? ரெண்டு குடும்பமும் அவங்களுக்கு வேண்டப் பட்டவங்களும் தான். இதில் என்ன அசிங்கப்படுறதுக்கு இருக்கு? உங்க விஷயம் யாருக்கும் தெரியாததா என்ன? நேத்து பொறந்த பிள்ளைக்குக் கூடத் தெரியும் உனக்கும் அழகிக்கும்தான் கல்யாணம் பேசியிருக்காங்கன்னு..!”

“இருந்தாலும்!” எனக் கதிரவன் இழுத்து நிறுத்த,

“இப்படியே யோசிச்சுக்கிட்டு திரிஞ்சால் நீ ஏமாந்து தான் மாமா போகணும்.! நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்பறம் உன் இஷ்டம் தான்.!” எனச் சொல்லிவிட்டு இனியன் அழைப்பைத் துண்டித்திருக்க, கதிரவனின் மனம் கொஞ்சம் கொஞ்சமாய் மாறத் துவங்கியிருந்தது.

*******

“என்னடி அழகி, சுடிதாரோட வந்து உட்கர்ந்திருக்க? பிரின்ஸிபல் வையப் போகுது டி!” கேள்வியுடன் அழகுநிலாவின் அருகில் வந்தமர்ந்தாள் கீர்த்தனா.

“நீ வேற ஏன்டி? நேரமாகிருச்சு.! அப்பாதேன் புடவையை அயர்ன் பண்ணி வாங்கிட்டு வந்தாரு! அப்படியே அடிச்சு பிடிச்சு ஓடியாந்து பஸ்ஸில் ஏறியிருக்கேன்.! எப்படியும் சாயங்காலம் தானே சேலையைக் கட்டணும்! அங்கே போய் மாத்திக்கிறேன் டி! நீயும் சாதாரணச் சேலையைக் கட்டியிருக்க வேண்டியது தானே? விடு பார்த்துக்கலாம்!”

“நீ வை வாங்குறதுக்கு என்னையும் கூட்டு சேர்க்குறியாக்கும்? நான் பட்டுச் சேலையோடேவே இருந்துக்கிறேன்ம்மா! நேத்து வேற நீ வரலையே டி! ரிகர்ஸல்ன்னு உட்கார வச்சு, ஏழு மணிக்குதேன் வீட்டுக்கே அனுப்புனாய்ங்க தெரியுமா? அப்பறம் நான் சொன்னதெல்லாம் வாங்கிட்டியா? லிப்ஸ்டிக், மேக்-அப் திங்க்ஸ்.. எல்லாமே இருக்கு தானே டி? போனதும், ஒவ்வொரு ஈவன்ட்டா மறுபடியும் ரிகர்சல் பண்ணணும் டி! உன் பிள்ளைங்க நல்லா ஆடுறாய்ங்க தெரியுமா? நல்லா சொல்லிக் கொடுத்துருக்க டி!” எனப் பாராட்டினாள் கீர்த்தனா.

“எல்லாம் வாங்கிட்டேன் டி! எனக்குத் தெரிஞ்சு எதுவும் மிஸ் பண்ணலை! இப்போவே புலம்பாதே டி! உன் புலம்பலைக் கேட்டாலே பயமா இருக்கு!”

“நான் புலம்பி நீ பயந்துருவியாக்கும்? நம்பிட்டேன் டி! அடியேய் அழகி! இந்த ஆண்டுவிழா பஞ்சாயத்தில், இதை மறந்துட்டேனே.. பொண்ணு பார்க்க வந்தாய்ங்களே.. என்னடி ஆச்சு? மாப்பிள்ளை பேர் என்ன.? அழகா இருந்தாரா?” வரிசையாய் கேள்விகளை அடுக்கினாள் கீர்த்தனா.

“ம்ம்!” என ஒற்றை எழுத்தில் பதில் சொன்னாள் அழகுநிலா.

“என்னடி நாம் இம்புட்டுக் கேள்வி கேட்கிறேன்.. நீ என்னமோ ம்ம்ன்னு பதில் சொல்ற? சரியில்லையே.. என்னடி ஆச்சு?” தோழியின் மனம் உணர்ந்தவளாய் வினவினாள் கீர்த்தனா.

தோழியின் கேள்விக்கு, கதிரவன் வீட்டிற்கு வந்து சண்டையிட்டதிலிருந்து, அதிவீரன் அவளைப் பிடித்திருக்கிறதென வெளிப்படையாய்ச் சொன்னது வரை நிதானமாகவே பதில் சொன்னாள்.

“மாப்பிள்ளை போலீசா? சூப்பர் டி! கடைசியில் என்னதான்டி முடிவு செஞ்சீங்க?”

“தெரியலை டி! அப்பா அம்மா எடுக்கிற முடிவுதேன்.!”

“ஆமா! அவிங்கதேன் அந்த அதிவீரனோட குடும்பம் நடத்தப் போறாய்ங்க பாரு.. உன்னைப் பெத்தவிங்க எடுக்கிற முடிவெல்லாம் இருக்கட்டும். உன் முடிவு என்னடி?” என்ற கீர்த்தனாவின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அமைதியாய் இருந்தாள் அழகுநிலா.

“உன்னைத்தேன் கேட்கிறேன்.. உனக்குப் பிடிச்சுருக்கா இல்லையா?”

“தெரியலை டி!”

“தெரியலையா? இது பதில் இல்லையே டி அழகி! பிடிச்சுருக்குன்னா ஆமான்னு சொல்லு.. பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லு.. அதென்ன ரெண்டிலும் சேராமல் தெரியலைங்கிற?”

“உனக்குப் பிடிச்சிருக்கு! உன்னைப் பெத்தவிங்க எதாவது சொல்வாய்ங்கனு பயந்துகிட்டு தெரியலைன்னு சொல்றியா?” தோழியின் மனதை சரியாகக் கணித்துக் கேட்டாள் கீர்த்தனா.

“அப்படியெல்லாம் இல்லை டி!”

“அப்போ வேற எப்படி? உன்னைப் பெத்தவிங்க எடுக்கிற முடிவில் உனக்குச் சம்மதம்ன்னா, நீ உன் கதிரு மாமாவையே கட்டிக்கலாம் தானே? அவரைக் கட்டி வைக்கிற முடிவு உன் அம்மா எடுத்தது தானே? கதிர் மாமாவைக் கட்ட மாட்டேங்கிற முடிவில் தெளிவா இருக்கிற நீ.. அதிவீரன் விஷயத்தில் மட்டும் தெரியலைங்கிற.. நம்ப முடியலையே டி!” அழகுநிலாவின் முகத்தை உன்னிப்பாய் கவனித்தபடியே கீர்த்தனா கேட்ட அதே நேரம், பள்ளிக்கு வந்து சேர்ந்திருந்தார்கள்.

பள்ளியில் அதீத பரபரப்புடன் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. மின்விளக்கு அலங்காரம், மேடை அலங்கரித்தல் என ஆங்காங்கே வேலை நடந்து கொண்டிருந்தது. பள்ளியின் பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டம் என்பதால் நிறைய மெனக்கெடல்கள் தெரிந்தது.

பொன்விழா சிறப்பு விருந்தினராகக் கல்வி அமைச்சர் கலந்துக்கொள்ள இருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகக் காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டிருந்தனர். பரவலாகக் காவல்துறையினரின் நடமாட்டமும் பள்ளி வளாகத்தினுள் தெரிந்தது.

காக்கி உடையணிந்த காவலர்களைப் பார்க்கையில், அதிவீரனின் நினைப்பு அவளுக்குள் தன்னால் எழுந்தது.

“ஒருவேளை அவன் வருவானா?”

“நான் இந்தப் பள்ளியில் பணிபுரிவது அவனுக்குத் தெரியுமா?” என அவள் யோசனைக்குள் மூழ்கியிருக்கும் போதே, பள்ளி வளாகத்தின் பின்புறமிருந்த வாகனத் தரிப்பிடத்தில் நின்றது அந்தப் பேருந்து.

“என்னடி பஸ் பேக் ஸைட் வந்து நிற்கிது? இங்கிருந்து எம்புட்டுத் தூரம் டி நடக்கிறது?” எனப் புலம்பியபடியே இறங்கிய கீர்த்தனாவை அடுத்து கீழே இறங்கினாள் அழகுநிலா.

“ஐடி கார்ட் காட்டுங்க ப்ளீஸ்!” என்ற குரலின் பரிட்சயத்தில், அவசரமாய் விழகளால் துழாவி பின் குரல் வந்த திசையை நோக்கி அவள் பார்க்க, அவளுக்கு நேரெதிரில் நின்றிருந்தான் அதிவீரன்.

 

தன் இருசக்கர வாகனத்தில் அவன் சாய்ந்து நின்றிருந்த தோரணையில், அவனை விட்டு விழி நகர மறுத்தது அவளுக்கு.

காக்கி உடையில், இன்னும் கம்பீரமாய், அடர்ந்த மீசையும், லேசாக வளர்ந்த தாடியுமாய் அவன் நின்றிருந்த தோரணை அவளுக்குள் இரசனை கூட்டியது. அதிலும் சட்டை பொத்தான்களின் நடுவே தன் குளிர் கண்ணாடியை அவன் மாட்டிய லாவகம், அவனின் தலைங்கோதல், சிரிக்காமலே மலர்ந்த முகம் என அத்தனையையும் ஒன்று விடாமல் பத்திரமாய் உள்ளுக்குள் பதுக்கினாள் அழகுநிலா.

எதுவுமே அறியா சிறுபிள்ளை போல், அவன் முன் நீண்டிருந்த வரிசையில் அமைதியாய் நின்றுக் கொண்டாள்.

“என்னத்துக்குடி இப்போ செக் பண்ணுறாய்ங்க? நம்ம என்ன கொள்ளையா அடிக்கப் போறோம்? ஸ்கூல் பஸ்ஸில் வர்ரோம் டீச்சர்ஸ்ன்னு தெரியாதா என்ன?” என்ற கீர்த்தனாவின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டிருந்தாள் அவள்.

“என்னடி வாயெல்லாம் பல்லாக நிற்கிற? உன் தோரணையே சரியில்லையே?” சந்தேகமாக அழகியைப் பார்த்தாள் கீர்த்தனா.

“பேசாமல் நில்லு டி!” எனத் தோழியைப் போலியாய் அதட்டியவள், அவனை விழியகலாது பார்த்துக் கொண்டே நின்றாள்.

“என்னடி போலீஸ்காரரை சைட் அடிக்கிறியா?” எனக் கேட்ட கீர்த்தனா சட்டென ஞாபகம் வந்தவளாய் நெற்றியில் அறைந்துக் கொண்டாள்.

“உன் ஆளா டி? இவரு தானே? இம்புட்டு அழகா இருக்காரே டி?” எனக் கிசுகிசுப்பாய் தோழியின் காதுக்குள் கீர்த்தனா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கீர்த்தனாவின் அடையாள அட்டையைக் கையில் வாங்கியிருந்தான் அவன்.

அதிவீரன் கீர்த்தனாவின் அடையாள அட்டையைப் பரிசோதித்துவிட்டு, இவளதை கரத்தில் வாங்க இவளோ அவனைப் பார்த்தபடியே நின்றாள். அடையாள அட்டையைச் சரிபார்த்துத் தேவைப்பட்ட விபரங்களைக் குறித்தவாரே அவளை நோக்கினான். அழகுநிலா என்ற பெயரைப் பார்த்ததும் அவன் கண்களில் மின்னல் வெட்டியது.

 

சட்டெனத் தலையை நிமிர்த்தி எதிரில் நின்றவளைப் பார்த்தான். சிரிப்பில் மீசையின் இடப்புறம் துடித்தது. கண்கள் சட்டென மலர்ந்தது. நொடி நேரத்தில் அவன் முகத்தில் நர்த்தனமாடிய ஒவ்வொன்றையும் அவளின் கண்கள் ஆழமாய் உள்வாங்கியது.

“நிலா!” என்ற விளிப்புடன் நிமிர்ந்தவனின் கண்கள் உச்சாதி பாதம் வரை அவளை நிதானமாய் ஆராய்ந்தது.

 

அவளின் நீளமான கூந்தல் லோ போனிடெய்லில் அடங்கியிருக்க, நெற்றியில் வழிந்து கன்னம் தீண்டிய கருஞ்சிகை அவளுக்குக் கூடுதல் அழகு சேர்த்தது. முட்டி வரையுமான இளஞ்சிவப்பு நிறத்தில் பெரிய பூக்கள் வரைந்திருந்த மஞ்சள் வர்ண டாப்பும், நீலநிறத்தில் பேண்ட்டும் அணிந்திருந்தாள். புடவையில் பெரிய பெண்ணாய் தெரிந்தவள், இப்போது சிறு பெண்ணாய் தெரிந்தாள்.

“டிச்சரம்மாவே ஸ்டூடண்ட் மாதிரி இருக்கீங்களே?” அவள் விழிகளைப் பார்த்தபடியே கேட்டான்.

“போலீஸ்காரர் போலீசாகத்தேன் இருக்கீங்க? ரொம்பப் போலீசா இருக்காதீங்க சார்!” அவள் விளையாட்டாய் சொல்ல,

“ஓகே மட்டும் சொல்லுங்க டீச்சரம்மா! மாறிடுவோம்.. உங்களுக்கு ஹஸ்பண்டா!” முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் இயல்பு போல் அவன் சொல்லியிருந்தான்.

“யாத்தே!” மெலிதாய் அலறியவள்,

“கீர்த்தனா! வாடி போகலாம்!” எனக் கீர்த்தனாவைத் தேட,

“கடைசியாய் உன் கண்ணுக்கு நான் தெரிஞ்சுட்டேனா டி? உத்துப் பார்த்தே அவரை உருக வச்சிருவ போல டி?உன் மூஞ்சி மொகரையிலேயே தெரியுது உனக்கு அவரைப் பிடிச்சுருக்குன்னு..!” எனக் கீர்த்தனா பேசிக்கொண்டே கூட நடக்க, அதிவீரனைத் திரும்பி பார்த்தபடியே தோழியுடன் செல்பவளை கண்ணில் தெறித்த மின்னலுடன் பார்த்திருந்தான் அதிவீரன்.

அவனின் மனமெனும் நேசப்பெருவெளியில் சின்னச் சின்னதாய் காதல் பூக்கள் அரும்பத் துவங்கியிருந்தன.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
12
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment