
நேசம்-4
“ஏய் கதிரு! என்னடா இது? எதுக்குடா இப்படி வந்திருக்கே?” அதிர்வுடன் கதிரைப் பார்த்துக் கேட்டார் செல்வி. கலைந்த தலையும், சிவப்பேறிய கண்களுமாய்க் கோபமாய் நின்றிருந்தான் கதிரவன்.
செல்வியின் பார்வை வாசலையும் ஒருமுறை தொட்டு மீண்டது. மார்க்கெட்டிற்குச் சென்றிருக்கும் கணவன் மட்டும் வந்தால், களேபரம் ஆகிவிடும் என அவருக்குத் தெரியும்.
“எப்படி வந்திருக்கேன்.? நல்லா தானே இருக்கேன்? எங்கே உன் மவ? அவளைக் கூப்பிடு!” அழுத்தமாய் நின்றான் கதிரவன்.
“இவன் யாருடா? எவனையோ வீட்டுக்கு கூட்டியாந்துருக்க.? வயசுப்பொண்ணு இருக்குற வீடு! ஏன்டா இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்துக்கிற?” தன் நண்பன் என, உடன் ஒருவனையும் அழைத்து வந்திருந்தான் அவன்.
“நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்? நீ என்ன செய்ற? உன் மவளை முதலில் கூப்பிடு! அவள் எப்படி என்னை வேணாம்ன்னு சொல்லலாம்? நான் அப்படி எந்த விதத்தில் குறைஞ்சு போய்ட்டேன்? அவளை வரச் சொல்றியா? இல்லை நானே உள்ளே போகட்டுமா?” அதீத கோபமும், ஆத்திரமும் கண்ணை மறைத்தது கதிரவனுக்கு.
“நான் சொல்றதைக் கேளு! நீ வீட்டுக்கு போ! பொண்ணு பார்த்துட்டு போவட்டும், பிறகு என்னன்னு பேசுவும். கொஞ்சம் பொறுமையாய் இரேன்டா!”
“தாய் மாமன் நான் இருக்கும் போதே, என்னை மீறி எவன் வந்து அவளைப் பொண்ணு பாக்கிறியான்னு நானும் பார்க்கத்தானே போறேன்.!”
“இந்தாரு கதிரு! நான் உனக்காகத்தேன் அவருக்கிட்டே பேசலாம்ன்னு இருக்கேன். என்னத்தையாவது ஏடாகூடமா செஞ்சு, காரியத்தைக் கெடுத்து தொலையாதே டா!”
“நீ எனக்காக எவன்கிட்டேயும் பேச வேணாம்.! நானே அவளைத் தூக்கிட்டுப் போய்த் தாலியைக் கட்டிப்புடுறேன். அப்பறம் பார்க்கிறேன் எவன் வந்து இவளைப் பொண்ணு பார்க்கிறான்னு!” தெனாவெட்டாகவே வேண்டுமென்று பேசினான் கதிரவன்.
“மாமா இப்போ வந்துருவாரு! ஒழுங்கா போயிரு! என்னை நம்பமாட்டியாடா நீயி?” எனச் செல்வி கேட்க,
“நான் உன்னை நம்புறேன்க்கா! என் கூடப் பொறந்தவளா உன்னை நம்புறேன். இப்போவே எனக்கும் அழகிக்கும் கல்யாணம் பண்ணி வச்சிரு! உன்னை முழுசா நம்பிட்டு போறேன்.!” எனச் சொன்ன கதிரவனைப் பார்த்து அதிர்ந்து நின்றார் செல்வி.
“கதிரு! நீ செய்றது ஒண்ணும் சரியில்லை சொல்லிப்புட்டேன்.! மாமா வந்தாருன்னா அம்புட்டுதேன்.”
“வரச் சொல்லுக்கா! அந்த ஆளு வரட்டும், ஒரே ஏத்தா ஏத்திப்புட்டு போலாம்ன்னுதேன் காத்திருக்கேன்.!” எனக் கதிரவன் சொல்ல திகில் படர்ந்தது செல்வியின் முகத்தில்.
“ஏன்டா இப்படியெல்லாம் செய்ற? நானே இருதலைக்கொள்ளி எறும்பா தவிச்சுட்டுக் கிடக்கேன். கொஞ்சமும் புரிஞ்சுக்க மாட்டியா டா நீயி?”
“யாரு நீயி? நீ தவிச்சுக் கெடக்க.. அதை நாங்க நம்பணுமாக்கும்? உன் புருஷன் எழுதிக் கொடுத்ததை எழுத்து மாறாமல் ஒப்பிச்சுக் கெடக்க.. என்ன புருஷனும், பொண்டாட்டியும் சேர்ந்து திட்டம் போட்டு ஒதுக்கி விட்டுப்புட்டீகல்ல.? இம்புட்டுநாளும் தம்பி தம்பின்னு நடிச்சுட்டு தானே கெடந்துருக்க.? இனிமேட்டுக்கு நான் ஒருத்தரையும் நம்புறதா இல்லை!” எனக் கதிரவன் சொல்ல, அவன் சொன்ன வார்த்தைகளின் தாக்கம் தாங்காது, ஸ்தம்பித்து நின்றார் செல்வி.
“என்ன பேச்சைக் காணோம்? அப்போ நாஞ்சொன்னது நெசந்தேன்னு ஒத்துக்கிறியா? நீயி, உம் புருஷன், உம் மவ, அம்புட்டு பேரும் நாடகக்காரய்ங்க! நல்லா நடிச்சு ஏமாத்திப்புடுறீங்க! நான்தேன் உடம் பொறந்தவள்ன்னு உன்னை நம்பி ஏமாந்துட்டேன்.!” எனச் சொன்னவன்,
“டேய்! இவிங்ககிட்டே பேசிட்டு இருந்தால் வேலைக்கு ஆகாது! உள்ளே போய் அவளை இழுத்துக்கிட்டு வருவோம்!” உடன் வந்த நண்பனைக் கூட்டிக் கொண்டு உள்ளே நுழைய முயன்றவனை, தடுத்து நிறுத்தினார் செல்வி.
“கதிரு! உள்ளே போனேன்னு வையி! மரியாதை கெட்டுப் போயிரும் சொல்லிப்புட்டேன்.
“இப்போ மட்டும் என் மரியாதை வாழுதாக்கும்? போக்கா நீ வேற! ஒழுங்கா வழியை விட்டு நில்லு! அக்கான்னும் பார்க்க மாட்டேன்! ஆட்டுக்குட்டின்னும் பார்க்க மாட்டேன்!” என அழுத்தமாய் அவன் சொல்ல, அவன் குரலில் பயந்தாலும் கூட, வெளியில் காட்டிக் கொள்ளாமல், வீம்பாய் நின்றார் செல்வி.
“நான் தூக்கி வளர்த்தவன் டா நீயி! ஏன்டா இப்படி நடந்துக்குற?”
“ஆமா! தூக்கி வளர்த்த! அதுக்கு? உன் காலில் விழுந்துக் கிடப்பாய்ங்களா?” எனச் சொன்னபடியே செல்வியைத் தள்ளிவிட்டு உள்ளே போக முயன்றான் அவன்.
எதைப்பற்றியுமே யோசிக்காமல், அழகுநிலாவைத் திருமணம் செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு பேசினான் கதிரவன்.
“ஏய் அழகி! என்னடி செய்ற? வெளியில் வா டி!” என அவன் கத்திக் கொண்டிருக்க,
“கதிரு!” அவனை விடச் சத்தமாய்க் கத்தியிருந்தார் செல்வி. அவர் கத்திய சத்தம் அந்த வீடு முழுதும் எதிரொலிக்க, வீட்டின் பின்னாலிருந்து வாசலுக்கு ஓடி வந்திருந்தாள் அழகுநிலா.
“நானும் போனால் போவுது.. கூடப் பொறந்தவனேன்னு பொறுமையாய் பேசிட்டு இருக்கேன். என்னடா நினைச்சுட்டு இருக்க நீயி? எம்புட்டு பேச்சு பேசுறடா நீயி? இம்புட்டு நாளும், என் தம்பிக்குதேன் கட்டி வைப்பேன்னு வீம்புக்கு நின்னுட்டு இருந்தேன். இப்போ தானே தெரியுது.. நீ நினைச்சது நடக்கலைன்னதும், உன் சாயம் வெளுத்துருச்சே கதிரு? எம் மவளை நான் உனக்குக் கட்டிக் கொடுக்க மாட்டேன். நம்ம அம்மா என்கிட்டே கேட்கும் போது, இதெல்லாம் சரின்னு தோணுச்சுதேன். நான் இருக்கும் போதே, நான் பெத்த பிள்ளையை, இழுத்துட்டு போவேன்னு சொல்லுற? கூட எவனையோ கூட்டியாந்துருக்க? உன்னை நம்பி என் பிள்ளையைக் குடுத்துட்டுப்புட்டு அவ சீரழியுறதை எங்களைப் பார்க்கச் சொல்றியா? வேணாஞ்சாமி! உன் சங்காத்தமே வேணாம்.! ஒழுங்கு மரியாதையா போயிரு!” இத்தனை நேரமாய்த் தம்பி என்ற ஒற்றைக் காரணத்திற்காக இழுத்து வைத்திருந்த, அவரின் பொறுமையெல்லாம் காற்றில் கரைந்து காணாமல் போயிருக்க, கணவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மை என்பதைத் தாமதமாக உணர்ந்து கொண்டார் செல்வி.
அழகுநிலாவோ, என்ன செய்வதென அறியாமல் சில நிமிடங்கள் நின்றாள். ஆனால், இப்படியே விட்டால், பிரச்சனை பெரிதாகக் கூடிய வாய்ப்புகள் அதிகமென்பதால், தன் அன்னையைத்தான் உள்ளே அழைத்தாள்.
“ம்மா! போதும்! நீ உள்ளே வா!” என அன்னையை அழைக்க,
“என்னடி! இம்புட்டு நேரமும், பூனை மாதிரி உள்ளே இருந்துட்டு.. இப்போ வந்து நடிக்கிறியா? என்கிட்டே மாமா! மாமான்னு இளிச்சுக்கிட்டு தானே டி பேசின? என்கிட்டே ஒண்ணுமண்ணுமா பழகிபுட்டு, இப்போ வசதி வாயப்போட ஒருத்தனைப் பார்த்ததும் அத்துவிடப் பார்க்குறியா?” எனக் கதிரவன் கேட்ட, வார்தைகளின் அருவருப்பில் காதுகளை மூடிக் கொண்டாள் அழகுநிலா.
“கதிரு!”
“மாமா!” என்ற வார்த்தைகள் ஒரே நேரத்தில் வந்தன.
“போதும் மாமா நிப்பாட்டு! இனிமேட்டு நீ ஒத்தை வார்த்தை பேசக் கூடாது சொல்லிட்டேன். நானா என்னைக்காவது உன்கிட்டே வந்து எனக்கு உன்னைப் பிடிச்சுருக்குன்னு சொன்னேனா? என் விருப்பம் என்னன்னு கேட்காமலே நீங்களா முடிவு பண்ணிக்கிட்டா நான் என்ன செய்யட்டும்? தாய் மாமன் தானேன்னு உரிமையில் உன்கிட்டே பேசினதெல்லாம் கொச்சை படுத்திட்டியே மாமா? பேசாமல் போயிரு மாமா! என் கண்ணு முன்னாலே நிக்காதே! எனக்கு அருவருப்பா இருக்கு!” என்ற அழகுநிலாவின் பதிலில் இந்த முறை அதிர்ந்து நின்றதென்னவோ கதிரவன் தான்.
அவன் இது வரையிலுமே, செல்வியும், புவியரசனும் பொய் சொல்கிறார்கள் என்று தான் நினைத்திருந்தான்.
அழகுநிலாவிற்குத் தன் மேல் விருப்பம் இருப்பதாக அவன் ஆழமாய் நம்பியிருந்தான். ஆனால் அழகுநிலாவின் வாயால் கேட்ட விஷயங்கள், அவனுக்குப் பேரதிர்வைக் கொடுத்திருக்க, பதிலேதும் சொல்லாமல், அமைதியாய் வெளியேறியிருந்தான் கதிரவன்.
*******
எல்லாப் பொருட்களும் சரியாய் இருக்கிறதா? எனப் பார்த்துக் கொண்டிருந்தார் மாதவி. மாம்பழ நிறத்தில் அரகக்கு நிற பார்டர் வைத்த பட்டுப்புடவை அணிந்திருந்தார்.
“அடேய் கரீஷு!”
“ம்மா! ஏம்மா இப்படி ஏலம் போடுறீங்க? பொண்ணு வீட்டுக்குப் போய்ட்டு என்னைப் பேர் சொல்லிக் கூப்பிட்டீங்க.. எனக்குக் கடுப்பாகிரும் சொல்லிட்டேன்.!”
“சரிடா! நானும் மாத்திக்கனும்ன்னு நினைக்கிறேன் முடியலை டா! உங்க அண்ணன் என்னடா இன்னும் வரக் காணோம். ஒரு ஃபோன் போட்டு கேளேன்டா!”
“ஏன் நீங்க கேட்கிறது?”
“நான் ஃபோன் பண்ணி பார்த்துட்டேன் டா! எடுக்க மாட்டேங்குறானே?”
“நீங்க ஃபோன் பண்ணியே எடுக்க மாட்டேங்குறான், நான் பண்ணினதும் எடுத்துடுவானா என்ன? வருவான் மா!”
“ஏங்க! என்னன்னுதேன் கேளுங்களேன்.!” எனக் கணவனைப் பார்த்தார் மாதவி.
“பண்ணிட்டேன்.. அவன் நேரடியாய் அங்கே வந்துடுறானாம்!” என இந்திரன் சொல்ல, கணவனைத் தீயாய் முறைத்தார் மாதவி.
“துணியை மாத்தாமல் போலீஸ் யூனிஃபார்மோட வாரானாமா? நீங்களும் அவஞ்சொன்னதுக்கெல்லாம் மண்டையை ஆட்டுனீங்களா? உங்க மயனுக்குத் துப்பாக்கி விஜய்ன்னு நெனைப்பு. அப்படியே நேரடியாய் யூனிஃபார்மோட வரப்போறாராக்கும்?”
“எம்மா தாயே! உன் மயன்கிட்டே பேச முடியலைம்மா! நீயே பேசு!” அவ்வளவுதான் என்பதைப் போல் முடித்துவிட்டார் இந்திரன்.
“நீங்க எண்ணி எண்ணி பேசுற மாதிரிதேன் அவனும் பேசுறான். அப்படியே உங்களைக் கொண்டுதேன் பிறந்துருக்கான்.!” சலித்துக் கொண்டாலும், கணவனின் அலைபேசியைப் பிடுங்கி மகனுக்கு அழைப்பெடுத்தார் மாதவி.
தன் அலைபேசி எண்ணைப் பார்த்தால் எடுக்க மாட்டானென்று அவருக்குத் தெரியாதா என்ன?
ஆனால் மாதவி பெற்ற மகனோ, அவருக்குப் பதினாறு மடங்காக இருந்தான். அழைப்பை ஏற்றுக் காதில் வைத்ததுமே,
“சொல்லுங்கம்மா!” என அவன் கேள்வியாய் நிறுத்த, திணறித்தான் போனார் மாதவி.
“அது.. வந்து.. நேரமாகிடுச்சே அதி?”
“நேராக அங்கே வந்துடுவேன். லொக்கேஷன் மட்டும் ஷேர் பண்ணுங்க!” சர்வசாதாரணமாய்ச் சொன்னவனை ஒன்றும் செய்ய முடியாது,
‘ஒரு முடிவோட தான் இருக்கான்!’ தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார்.
“யூனிஃபார்மோட வந்தால் நல்லா இருக்காது அதி! நல்ல நேரம் முடியறதுக்குள்ளே போய்ட்டு வந்துட்டோம்ன்னா நல்லா இருக்கும்!”
“எனக்குத் தெரியும்மா! வந்துடுவேன் வைங்க!” எனப் சொல்லிவிட்டு அவன் வைத்துவிட்டான்.
“இவன்கிட்டே பேசுறதுக்குச் சுவற்றில் போய் முட்டிக்கலாம் போல!” எனப் புலம்பிக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்து வாய்க்குள் சிரித்த இந்திரன்,
“என்ன உன் மயன் உடனே வாரேன்னு சொல்லிருப்பானே?” என நக்கலாய் கேட்க, கணவனை முறைத்தார் மாதவி.
“எல்லாம் என் தலையெழுத்து.. நான் பெத்ததும் சரியில்லை! என் மாமியார் பெத்ததும் சரியில்லை! கிளம்புங்க! அவன் நேராகப் பொண்ணு வீட்டுக்கு வந்துருவானாம். அவனுக்குப் பொண்ணு வீட்டு அட்ரஸை அனுப்பி விடுங்க!”
“டேய் கரீஷு! எல்லாத்தையும் எடுத்து காருக்குள்ளே வையி!” எனச் சின்ன மகனை விரட்டினார். அன்னையை முறைத்துக்கொண்டே ஹரிஷ் அனைத்தையும் எடுத்து வைக்க, மூவரும் அழகுநிலாவின் வீட்டை நோக்கிய பயணத்தைத் துவக்கினர்.
*****
தன் வீட்டின் முன்னே மகிழுந்தில் வந்து இறங்குபவர்களை, ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் அழகுநிலா.
“ஏய்! மாப்பிள்ளை வீட்டில் வந்துட்டாய்ங்க டி!” அழகுநிலாவின் காதில் முணுமுணுத்தாள், அவளின் எதிர்வீட்டு தோழி தமயந்தி.
“என்னடி அழகி! மாப்பிள்ளை காத்துல பறக்குற மாதிரி இம்புட்டு ஒல்லியா இருக்காரு!” தாய் தந்தையருடன் உள்ளே நுழைந்த ஹரிஷைப் பார்த்துச் சொல்ல, எதையும் கவனிக்காமல் அமைதியாய் அமர்ந்திருந்தாள் அழகுநிலா.
“உன்னைத்தேன் பார்க்க வந்துருக்காய்ங்க டி! இப்படி யாருக்கு வந்த விதியோன்னு உட்கார்ந்திருக்கிற?”
“பொண்ணுதேன் பார்க்க வந்துருக்காய்ங்க! என்னமோ பரிசம் போட வந்திருக்கிற மாதிரி பேசுற.? பொண்ணு பார்க்க வர்ர அம்புட்டு பேரையும் பார்த்துக்கிட்டே இருந்தால், எத்தனை பேரை பார்ப்ப?” என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளே வந்திருந்தனர் மணமகன் வீட்டார்.
“வாங்க! வாங்க! உட்காருங்க!”
“செல்வி! வந்தவங்களுக்குத் தண்ணீ கொண்டா!” என மனைவியை அழைத்தார் புவியரசன்.
“இருக்கட்டும்ங்க! பொண்ணைப் பார்த்துட்டு அப்பறம் குடிக்கலாம்!” என இந்திரன் மறுத்துவிட,
“இவருதேன் மாப்பிள்ளையா? ஃபோட்டோவில் வேற மாதிரி இருந்தாருங்களே?” கேள்வியாய் இடைநிறுத்தினார் புவியரசன்.
“இல்லைங்க! இவன் இளையவன்!எங்க வீட்டில் ரெண்டு பயலுகதேன். இவன் இளையவன். பேரு ஹரீஷ்! பல் டாக்டருக்கு படிச்சுட்டு இருக்கான். மூத்தவனுக்குதேன் பொண்ணு பார்க்க வந்துருக்கோம்! அவன் மதுரைக்கு இப்போதேன் மாத்தலாகி வந்துருக்கான். இந்நேரம் எஸ்.பி ஆகி இருக்க வேண்டியவன். நிறைய மாற்றல் அது இதுன்னு டி.எஸ்.பி ஆக இருக்கான். கொஞ்சம் வேலையாய் இருக்கான்! இப்போ வந்துருவான். நீங்க ஒண்ணும் தப்பா எடுத்துக்கலையே?” எனக் கேள்வியாய் பார்த்தார் இந்திரன்.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லைங்க! எங்க வீட்டிலும் ரெண்டு பயலுகதேன். மூத்தவன் இனியன் மருமகளோட சென்னையில் இருக்கான். சின்னவன் கவின் அஞ்சாம்கிளாஸ் படிக்கிறான். தம்பி படிக்கிற ஸ்கூலில் தான் அழகியும் டீச்சரா வேலை பார்க்கிறாள்.” எனப் புவியரசு பதில் சொல்ல,
“என்னடி மாப்பிள்ளை போலீசா? சொல்லவே இல்லை?” எனத் தமயந்தி கேட்க,
“எனக்கே தெரியாது டி!” எனச் சொன்னவள் இத்தனை நேரமாய் இல்லாத பதற்றத்தை முதன்முதலாய் உணர்ந்தாள். ஏனென்று தெரியாத பதற்றம் அவளைக் கொஞ்சம் கொஞ்சமாய் ஆட்கொள்ளத் துவங்கியது.
“என்னடி பதற்றமா இருக்க?”
“போலிசுன்னு கேட்டதும் கொஞ்சம் பயமா இருக்கு டி! ஏன்னு தெரியலை.! நான் யாராவது வருவாங்க, பார்த்துப்புட்டு போயிருவாங்கன்னு நினைச்சேன். ஆனால், என்னமோ மனசு படபடங்குது!” என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, இருசக்கர வாகனத்தின் ஓசை கேட்க, தன்னையறியாமல் ஜன்னலருகே ஓடிப் போய் எட்டிப் பார்த்திருந்தாள் அழகுநிலா.
வெள்ளை நிற சட்டையும், காக்கி நிற பேண்ட்டும் அணிந்து, கலைந்த முன்நெற்றி கேசத்தை, இருசக்கர வாகனக் கண்ணாடியில் பார்த்துச் சரிபடுத்திக் கொண்டவன், உள்ளே நுழைய, அவனைப் பார்த்ததும், அழகுநிலாவின் இதயம் காரணமே இல்லாமல் அதிவேகமாய்த் துடித்தது.
“இந்தா தம்பி வந்துட்டான்!” என எழுந்து சென்ற மாதவி, வாசலிலிருந்து மகனை உள்ளே அழைத்துச் சென்றார்.
“பொண்ணு பார்க்க பைக்கில் வந்த ஒரே ஆளு நீதேன்! எங்களோடவே வந்துருக்கலாம் தானே? இல்லைன்னா ஜீப்பிலாவது வந்திருக்கலாமே அதி?”
“பர்ஸ்னல் விஷயத்திற்கு யாராவது ஜீப்பில் வருவாங்களா? பேசாமல் உள்ளே போங்க!” அன்னையை அரற்றினான் அதிவீரன்.
“கொஞ்சமாவது சிரிச்சமேனிக்கு வா அதி! பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க?” எனக் கேட்டபடியே உள்ளே அழைத்து வந்தவர், மகனை அமர வைத்துவிட்டு,
“பொண்ணைக் கூட்டிட்டு வாங்க! தம்பி பார்க்கட்டும்! அப்பறம் மேற்கொண்டு பேசுவோம்!” எனச் சொன்னார் மாதவி.
அதிவீரனோ அந்த வீட்டை பார்வையால் அளந்து கொண்டிருந்தான். கீழே இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீடு. வரவேற்பறை கொஞ்சம் பெரியதாக இருந்தது. வரவேற்பின் பக்கவாட்டில் சமையலறையும், அதை ஒட்டினாற் போல் இருந்த நீண்ட பகுதியைக் கடையாகத் தடுத்திருந்தார்கள். வீட்டின் முன்னாலும் முற்றம் போல் இடம் விட்டிருந்தார்கள். முற்றத்தின் ஓரத்தில் மரம் வைப்பதற்கு மட்டும் இடம் விட்டுவிட்டு, மீதி இடம் சிமெண்ட் தரையாக இருந்தது. அவன் ஒவ்வொன்றாய் ஆராய்ந்து கொண்டிருக்க, தொண்டயைச் செருமி, மகனின் கவனத்தைத் திருப்பினார் மாதவி.
அழகுநிலா கூடத்தில் வந்து நின்று, பொதுவாக வணக்கம் வைக்க, அதிவீரனின் பார்வை அவளில் அழுத்தமாய்ப் பதிந்தது. மெல்லிய தங்கக் கரை வைத்த, கத்தரிப்பூ நீ பட்டுப்புடவையில், அளவான ஒப்பனையில் நிலவாகவே மிளிர்ந்தாள் அழகுநிலா.
மெல்ல நிமிர்ந்து மெத்திருக்கையில் அமர்ந்திருந்த அதிவீரனைப் பார்த்தாள். அழுத்தமான முகவெட்டும், அடர்ந்த மீசையும், திண்ணமான உடல்வாகுமாய் இருந்தவனைப் பார்க்கக் கொஞ்சம் பயமாக இருந்தது அவளுக்கு.
‘ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸரா இருப்பாரோ?’ எனத் தனக்குள் புலம்பிக் கொண்டாள்.
“காபிதேன் குடிக்க மாட்டிங்க? ஜூஸ் குடிக்கலாம் தானே?” எனக் கேட்ட செல்வி, மகளின் கரத்தில் ட்ரேயைக் கொடுத்தார்.
“அழகி! எல்லாத்துக்கும் ஜுஸைக் கொடுத்தா!”
“கடையில் உள்ள ஜூஸுதேன் சங்கடப்படாமல் குடிங்க!” எனச் சொல்விவிட்டு ஓரமாய் நின்று கொண்டார் செல்வி.
அனைவருக்கும் குளிர்பானத்தைக் கொடுத்துவிட்டு, அதிவீரனின் முன் வந்து நின்றாள் அழகுநிலா. இருவரின் விழிகளும், நொடிநேரம் தழுவி நழுவியது.
அவன் குளிர்பானத்தைக் கையில் எடுப்பதற்காய் அவள் காத்துக் கொண்டிருக்க, அவனோ விழியெடுக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் விழிவீச்சில், அவளுக்குள் நடுக்கம் பிறக்க, அவள் சங்கடமாய் நின்று கொண்டிருக்கும் போதே, எழுந்து நின்றிருந்தான்.
சட்டென அவன் எழுந்து நின்றதில், நிஜமாகவே பயந்துதான் போனாள் அழகுநிலா.
“யாத்தே!” கை நழுவ முயன்றா ட்ரேயை இறுகப் பற்றினாள்.
கையிலிருந்த ட்ரேயைத் தவறவிடாமல் அவள் பிடிப்பதே பிரம்ம பிராயத்தனமாக இருந்தது.
அவன் எழுந்து நின்றதை அனைவரும் புரியாமல் பார்த்திருக்க,
“நான் பொண்ணு கூடத் தனியா பேசணும்!” எனச் சொன்னவனின் கம்பீரக் குரல் அந்த அறையின் சுவர்களில் பட்டு எதிரொலித்தது. இங்கே அழகுநிலாவின் மனமோ திக் திக்கென அடித்துக் கொண்டது.

