Loading

நேசம்-3

அழகுநிலாவைப் பார்த்ததும், அத்தனை நேரம் நடந்த களேபரங்கள் அப்படியே நீர்த்துப் போய்விட, ஒட்டுமொத்த வீடும் அசாத்தியமான நிசப்தத்தைச் சுமந்து நின்றது. கதிர் விறுவிறுவென வெளியேறியிருந்தான்.

அன்று இரவு வரையிலுமே அதே நிலைதான் நீடித்தது. அழகுநிலாவுமே எதையும் யாரிடமும் கேட்கவே இல்லை. எதையும் கேட்க அவளுக்கு விருப்பமும் இல்லை.

“அழகி!” அமைதியாகத் தட்டிலிருந்த தோசையை உண்டுக் கொண்டிருந்தவள் தந்தையின் விளிப்பில் நிமிர்ந்து பார்த்தாள்.

“நாளைக்கு ஸ்கூலுக்கு லீவ் போட்டுடும்மா!”

“ஏன்ப்பா?”

“இப்போதேன் தரகர் ஃபோன் பண்ணி சொன்னாரு! நாளைக்கு மாப்பிள்ளை வீட்டிலிருந்து வாரோமின்னு சொல்லிருக்காகளாம்!” என அவர் சொல்ல, வெளிப்படையாகவே அதிர்ந்து தகப்பனைப் பார்த்தாள் அழகுநிலா.

உண்மையைச் சொன்னால், இது புவியரசனுக்கே கொஞ்சம் அதிர்ச்சி தான். திடீரென வருவதாய்த் தகவல் சொல்வார்கள் என அவரும் எதிர்பார்த்திருக்கவில்லை தான்.

“குடும்பம் நல்ல மாதிரிதேன் புவி. ரெண்டு பயலுகதேன்.. நாத்தனார் பிக்கல் புடுங்கல் ஒண்ணும் இருக்காது. மாப்பிள்ளை நம்மூருக்கு இப்போதேன் மாத்தலாகி வந்திருக்காரு. இதைச் செய் அதைச் செய்ன்னு நசநசக்க மாட்டாக! பொண்ணுக்குச் செய்யறதெல்லாம் உங்க விருப்பந்தேன்.!” தரகர் அலைபேசியில் சொன்னவை புவியரசனின் காதில் அசரீரியாய் ஒலித்தது. வேறு வழியில்லாமல் தான் வரச் சொல்லியிருந்தார்.

“மாப்பிள்ளையா? எந்த மாப்பிள்ளை? யாருக்குப்பா கல்யாணம்? எனக்கா?” தகப்பனின் எண்ணங்களை அறியாமல், கேள்விகளை வரிசையாய் அடுக்கினாள் அவள்.

“என்னத்துக்கு இம்புட்டு அவசரப்படுறீக? ஏற்கனவே இங்கணப் பஞ்சாயத்தா கிடக்கு.. இதில் மாப்பிள்ளை வீட்டாளுகளை வரச் சொல்லி, இருக்கிற பிரச்சனையைப் பெருசாக்க பார்க்குறீகளா?” என அடுக்களையிலிருந்து வெளியே வந்தார் செல்வி.

“நீ வாயை மூடிட்டு போயிரு செல்வி! என்னமாவது பேசிப்புட போறேன்.! இது புள்ளையோட வாழ்க்கை!”

“இப்போ என் வாயை அடைச்சுருவீங்க! நாளைக்குக் கதிரு வந்து பஞ்சாயத்தைக் கூட்டினால் என்ன பண்ணுவீங்க? வாரவிங்க முன்னால் அசிங்கப்பட்டு நில்லுங்க!” எனக் கோபமாய்ச் சொல்லிவிட்டு அடுக்களைக்குள் சென்றுவிட்டார் செல்வி.

“நீ என்ன சொல்ற அழகி?” மனைவி சென்றதும், மகளைப் பார்த்துக் கேள்வி கேட்டார் புவியரசன்.

“இதில் நான் என்னப்பா சொல்லணும்? அம்மா என்னைக் கேட்டா கதிர் மாமாவுக்கு என்னைக் கட்டி வைக்கிறேன்னு சொன்னாங்க.? நீங்க தான் என்னைக் கேட்டுட்டு மாப்பிள்ளை வீட்டை வரச் சொன்னீகளா? இப்போ மட்டும் நான் என்ன சொல்லணும்ன்னு நீங்க எதிர்பார்க்கிறீங்க ப்பா?” இத்தனை நாள் மனதிற்குள் பூட்டி வைத்திருந்த அழுத்தங்களை வார்த்தையாய்க் கொட்டியிருந்தாள் அழகுநிலா.

“என்னடி அப்பாவையே எதிர்த்து பேசுற? எங்களுக்குத் தெரியும் உனக்கு எது நல்லதுன்னு!” இந்தமுறை செல்வியின் குரல் மட்டும் தான் வெளியே வந்தது.

“சரிம்மா! உங்களுக்குதேன் எது நல்லதுன்னு தெரியும்.. உங்க பேச்சை மட்டுந்தேன் நான் கேட்கணும்.. அப்படித்தானே? ரெண்டுபேரும் ஆளுக்கொரு மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்கீங்க.. அதுக்காக நான் ரெண்டு கல்யாணம் பண்ணிக்கவா முடியும்? என் விருப்பம் என்னன்னு யாருமே கேட்காதீங்க!” எனக் கோபமாய்ப் பேசிய அழகுநிலாவின் விழிகளில் நீர் ததும்பி நின்றது.

“என்ன பேச்சுடி பேசுற.? செவுணியோட சேர்த்து இறுக்குனேன்னு வையி.. செவிடாப் போயிருவ! ஒத்தை பொம்பளப் பிள்ளைன்னு செல்லம் கொடுத்ததுக்குதேன் இம்புட்டும் பேசுறியா?” கையிலிருந்த தோசைக்கரண்டியை ஓங்கிக் கொண்டு வந்திருந்தார் செல்வி.

“செல்வி! புள்ளை மேலே கை நீட்டுனே.. அம்புட்டுதேன் சொல்லிப்புட்டேன். அவள் கேட்கிறதும் நியாயம் தானே? இல்லாததையா கேட்டுட்டா? ஆளுக்கொரு மாப்பிள்ளை பார்த்தால் அவளும் என்ன செய்வாள் பாவம்?” தாய் அடிக்க வந்ததும் பயந்து, தட்டோடு அவள் எழுந்து நின்றிருக்க,

“நீ கை கழுவிட்டு வாம்மா! பொறுமையாய் பேசுவோம்!” எனத் தகப்பனாய் நிதானித்துப் பேசினார் புவியரசன்.

“கவின் சாப்பிட்டானா செல்வி?”

“அவன் சாப்பிட்டு அப்போவே தூங்கிட்டான்!” எனச் செல்வி பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, தந்தையின் முன் அமைதியாய் அமர்ந்தாள் அழகுநிலா.

“அழகி!” தந்தையின் விளிப்பில் நிமிர்ந்து பார்த்தாள், கண்ணீரில் நனைந்திருந்த ஈர இமைகள், படபடக்க, கண்ணீரை உள்ளிழுக்க முயன்றாள்.

“உன் மனசில் என்ன இருக்குன்னு கேட்காமல் விட்டது எங்க தப்புத்தேன். எதுவா இருந்தாலும் அப்பாக்கிட்டே சொல்லலாம் டா! உன் பிரியம்தேன் எங்களுக்கு முக்கியம். உன் மனசில் யார் மேலேயாவது விருப்பம் இருக்காம்மா? தயக்கமெல்லாம் வேணாம்.! வெளிப்படையா சொல்லிரு!” மகளின் மன உணர்வுகளைக் கவனமாய்ப் படிக்க முயன்று கொண்டிருந்தார் புவியரசன்.

சில நிமிட இடைவெளியின் பின், ‘இல்லை’ எனும் விதமாய் இடவலமாய்த் தலையசைத்தாள் அழகுநிலா.

“வேற என்னம்மா? நீ சொன்னால் தானே அப்பாவுக்குத் தெரியும்?” குழந்தையிடம் பேசுவதைப் போல், பொறுமையாய்ப் பேசிக்கொண்டிருந்த கணவனைப் பார்த்து, பற்களை நறநறவெனக் கடித்தார் செல்வி.

“கன்னத்தைச் சேத்து நாலு இழுப்பு இழுத்தால் தன்னைப்போல் சொல்லப் போறாள். கொஞ்சிக்கிட்டு திரியிறாரு மனுஷன்!” புலம்ப மட்டுமே செல்வியால் முடிந்தது.

தந்தையின் கேள்வியில், நிமிர்ந்து தந்தையைப் பார்த்தவள், திரும்பி தனக்குப் பின்னால் நிற்கும் தாயையும் பார்த்தாள்.

“அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டா! நீ சொல்லு!” என அவர் தந்த தைரியத்தில்,

“எனக்குக் கதிர் மாமாவைக் கல்யாணம் பண்ண வேணாம்ப்பா! எனக்கு அது பிடிக்கலை! உடைச்சு சொல்லணும்ன்னா நான் இதுவரை மாமாவை அப்படி வச்சு யோசிச்சதே இல்லைப்பா!” ஒருவழியாய் தொண்டைக்குள் முள்ளாய் நெடுநாளாய் குத்த்திக் கொண்டிருந்த விஷயத்தைச் சொன்னதும், தன்னையறியாமல் அவளுக்குள் ஒரு ஆசுவாசம் பிறந்தது. அவளின் நிம்மதி பெருமூச்சில் புவியரசனுக்கு ஓரளவிற்கு மகளின் மனநிலை புரிந்தது.

“அப்படி என்னடி செஞ்சுப்புட்டான் அவன் உன்னை? இம்புட்டு பேச்சு பேசுறவ?” என்ற செல்வியை,

“வாயை மூடு செல்வி! உன்னால் மட்டுந்தேன் இம்புட்டும்! இன்னமும் உன் தம்பிக்காக மட்டுந்தேன் யோசிக்கிறன்னா, இந்த விஷயத்தில் நீ தலையிடதே செல்வி! முதலில் நம்ம பிள்ளைக்காக யோசி! அப்பறம் உன் தம்பிக்காக யோசிக்கலாம்! நீ நம்ம புள்ளையையும் கதிரையும் சேர்த்து வச்சு பேசிதேன் இந்த நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிறுக்கிற. நம்ம பிள்ளை எவ்வளவு வேதனைப் பட்டிருப்பா? உன் தம்பிக்கு மட்டும் பிடிச்சால் பத்தாது.. எம் மவளுக்கு அவனைப் பிடிக்கணும். அதுதேன் இங்க ரொம்ப முக்கியம்!” எனப் புவியரசன் சொல்லவும், பிடித்தமின்மையை முகத்தில் அப்பட்டமாய்க் காட்டினார் செல்வி.

“அப்போ நான் அவனுக்கு என்ன பதில் சொல்லட்டும்?”

“என்னவும் சொல்லு! அதை ஏன் என்கிட்டே கேட்கிற?” மகளை மையமாக வைத்துத் துவங்கியது கணவன் மனைவி சண்டையாக மாறத் துவங்கியது.

“என்னமும் பதில் சொல்லுன்னா என்னத்தைச் சொல்லுறது.? உங்க முடிவுக்குச் சாதகமா உங்க மவ பேசிப்புட்டான்னு தானே இப்படிக் குதிக்கிறீங்க? இதுவே கதிரைத்தேன் கட்டுவேன்னு சொல்லியிருந்தாலும் சம்மதம்தேன் சொல்லியிருப்பீகளா? உங்களுக்கு என் தம்பியைப் பிடிக்காது! அத்துக்குத்தானே இம்புட்டு நாடகமும்!” கோபமும் கண்ணீருமாய்ச் செல்வி பேச,

“கிறுக்கியாடி நீ? இது நம்ம புள்ளை வாழ்க்கை டி! ரெண்டு பேரும் சேர்ந்து பேசி, அவள் விருப்பத்தோடதேன் முடிவெடுக்கணும். நாமளே ஆளுக்கொரு திசையில் நின்னால், பிள்ளை என்ன செய்வாள் சொல்லு?” குரலைத் தாழ்த்தி பொறுமையாய் அவர் கேட்க,

“இல்லைன்னு நான் சொல்லலியே? நீங்கதேன் என்னைக் கேட்காமல் மாப்பிள்ளை வீட்டாளுகளை வரச் சொல்லிட்டீகளே?” எனப் பதில் சொன்னார் செல்வி.

“பொண்ணைப் பிடிச்சு பார்க்க வாரோம்ன்னு சொல்றவுகளை எப்படி நிப்பாட்ட சொல்ற.? வந்தன்னைக்கே தாலியைக்கட்டி கூட்டிப் போயிருவாகளா என்ன? வந்து பார்த்துப்புட்டு போவட்டும்! பிறகு பொறுமையாய் பேசிப்போம்! நீ உன் தம்பிக்கிட்டே பொறுமையாய் எடுத்து சொல்லி வை! அவன் மட்டும் எதையாவது ஏடாகூடமா செஞ்சு பஞ்சாயத்தைக் கூட்டுனியான்னு வை.. நான் மனுஷனாவே இருக்க மாட்டேன் சொல்லிப்புட்டேன்.!” பொறுமையாய் துவங்கி, எச்சரிக்கும் தொனியில் முடித்தார் புவியரசன்.

என்னதான் கணவனின் பேச்சில் பிடித்தம் இல்லாவிட்டாலும், கதிரவனுக்கு ஆதரவாய்ப் பேச, அவரிடம் வலுவான காரணங்கள் இல்லாததால் அமைதியாய் நின்றார் செல்வி.

“அழகிம்மா! பொண்ணு பார்க்கதேன் வராக! ஒரே நாளில் எல்லாம் நடந்துடாது. உன் விருப்பந்தேன் இந்த அப்பனுக்கு முக்கியம். நான் சொல்றது விளங்குது தானே? பிடிச்சிருக்கோ, பிடிக்கலையோ எல்லாத்தையும் என்கிட்டே தயங்காமல் சொல்லணும்!” எனப் புவியரசன் கேட்க சம்மதமாய்த் தலையசைத்தாள் அழகுநிலா.

*******

“என்னடி அழகி, இந்நேரத்துக்கு ஃபோன் போட்டிருக்கிற?” கீர்த்தனாவின் குரல் அழகுநிலாவின் செவியோரம் கேட்டது.

“நாளைக்கு நான் ஸ்கூலுக்கு வர மாட்டேன்டி! அதைச் சொல்லத்தேன் கூப்பிட்டேன்.!”

“என்ன சங்கதி டி? எதாச்சும் சம்பவமாகிப் போச்சா? உனக்கும் உன் மாமனுக்கும் நாளைக்கே கல்யாணம்ன்னு சொல்லிப்புட்டாய்ங்களா?”

“ஏன்டி நீ வேற.. நாளைக்குப் பொண்ணு பார்க்க வராய்ங்களாம்! அதேன் அப்பா லீவு போட சொல்லிட்டாங்க!”

“இதென்னடி அதிசயம்? உன் மாமனுக்குதேன் கட்டி வைப்பாங்கன்னு புலம்பிக்கே திரிஞ்ச.. இதென்னடி புது ட்விஸ்ட்டு?” எனக் கேட்டாள் கீர்த்தனா.

தன் வீட்டில் நடந்த பிரச்சனைகளைச் சுருக்கமாகச் சொல்லி, தான் தன் தந்தையிடம் பேசியதையும் சொல்லி முடித்தாள் அழகுநிலா.

“என்னடி, ஒத்தை ராத்திரியில் இம்புட்டு நடந்திருக்கு? வேற மாப்பிள்ளைன்னா உனக்குக் கட்டிக்கிட சம்மதமா?” அழகுநிலாவின் மனதை அறிய முற்பட்டாள் கீர்த்தனா.

“உனக்கே தெரியுமே டி, அம்மாச்சி இருந்த வரை, கதிருக்கும் உனக்கும்தேன் கல்யாணம்ன்னு சொல்லிக்கிட்டே இருப்பாக! அம்மாச்சிக்குப் பிறகு, எங்க அம்மா ஆரம்பிச்சுருச்சு. இந்தா இப்போ வரைக்கும், கதிரு மாமாவைத்தேன் கட்டணும்ன்னு சொல்லிட்டே இருக்கு. எங்க அம்மா வாயை வச்சிட்டு சும்மா இருக்காமல், கடைக்கு வர்ர நாலுபேருக்கிட்டேசொல்லி வைக்கன்னு, தெரிஞ்சவிங்க, தெரியாதவிங்கன்னு எல்லாரும் இதையே கேட்கும் போது, வெறுப்புதேன் வருது கீர்த்தனா. கதிர் மாமா பாதி நேரம் இங்கண, எங்க வீட்டுலதேன் கிடக்கும். ஒருநாள் ஒருபொழுது எனக்கு மாமா மேலே அப்படியொரு நினைப்பு வந்ததே இல்லை. இப்போ எனக்கு எப்படி இருக்குன்னா, கதிர் மாமா மட்டும் வேணாம்! வேற யாரை வேணும்ன்னாலும் கட்டிக்கலாம்ன்னு ஆகிப் போச்சு!” ஒளிக்காமல் மறைக்காமல் உண்மையைச் சொன்னாள் அழகுநிலா.

“புரியுது டி! விடு எல்லாம் நல்லதுக்குதேன்!”

“நான் சொல்றது உனக்குப் புரியுதுல்ல டி? அதுக்காக எனக்குக் கதிர் மாமா மேலே பாசம் இல்லாமல் இல்லை. என்ன நடந்தாலும் எனக்காக முன்னே நிக்கிற மாமாவை எனக்குப் புடிக்கும்தேன். அதைக் கல்யாணம் வரை கொண்டு போற எண்ணமெல்லாம் எனக்கு எப்போவும் இருந்தது இல்லை!” என அவள் சொன்னதில் தாய்மாமன் என்ற பாசத்தைத் தவிர வேறெதுவும் இல்லை என்பது கீர்த்தனாவிற்குப் புரிந்தது.

“சரி விடு டி! நீ ஏன் இம்புட்டையும் போட்டு மனசை உழப்பிக்கிட்டு திரியுற? ஆமா மாப்பிள்ளை பேரு என்னவாம்?” எனக் கேட்டு அழகுநிலாவின் மனதை மாற்ற முயற்சி செய்தாள் கீர்த்தனா.

“தெரியலையே டி? அப்பா ஒண்ணும் சொல்லலையே?”

“என்ன பேருன்னு யோசிச்சுக்கிட்டே தூங்கு! நாளைக்கு உன்னைப் பொண்ணு பார்க்க வந்த கதையை ஃபோன் போட்டு சொல்லு!” எனச் சொல்லிவிட்டு கீர்த்தனா இணைப்பை துண்டித்திருக்க, யோசனையோடே மொட்டை மாடியில் அமர்ந்திருந்தாள் அழகுநிலா.

******

அந்தக் காவல் நிலையம் எப்போதும் குடியிருக்கும் சோம்பலைத் தொலைத்துவிட்டு, சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.

“என்னய்யா! இன்னைக்கு ஸ்டேஷனே பரபரப்பா இருக்கு?” எனக் கேட்டபடியே உள்ளே வந்தார் குமாரசாமி.

“அதிவீரன் சார் நேத்தே சார்ஜ் எடுத்துட்டாரு குமாரசாமி. அவருக்குக் கீழே வர்ர நாலு ஸ்டேஷனில் நம்மளோடதும் ஒண்ணு! மனுஷன் இந்தப் பக்கம் வந்தாலும் வரலாம். ஏதோவொரு இரகசிய விசாரணைக்காக வந்தாகத்தான் பேச்சு அடிபடுது!” என அந்தக் காவல் நிலையத்தின் எழுத்தாளரான குமாரசாமியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் A2 க்ரேட் பொறுப்பில் இருக்கும் ஜெகதீசன்.

“ஆமா, இரகசிய விசாரணைன்னு உனக்கு எந்தக் கிளி சேதி சொல்லிச்சு?” குரலைத் தாழ்த்தி கேட்டார் குமாரசாமி.

“நம்ம இன்ஸ்பெக்டர் பேசினது காதில் விழுந்துச்சு! எனக்கு வேற யார் சொல்லப் போறா?” என அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, புகையைக் கிளப்பியபடி வாசல் முன்னால் வந்து நின்றது அந்த வாகனம். உறுமலுடன் நின்ற ஜீப்பிலிருந்து இறங்கினான் அதிவீரன்.

 

அண்ணாந்து பார்க்கும் உயரம், மாநிற தேகம், அழுத்தமான உதடுகள், திண்ணிய உடல்வாகு, ஆளைத் துளைக்கும் கண்கள் என அழகாகவே இருந்தான்.
அவன் இறங்கி வரும் தோரணையே சிங்கத்தின் கம்பீரத்துடன் இருந்தது. அவனின் மாநிற தேகத்தில் பகலவனின் கதிர்கள் பட்டு எதிரொளித்தது. தொப்பியைக் கழற்றி வாகனத்தின் முன்னிருக்கையில் வைத்துவிட்டு, கண்ணை அலங்கரித்திருந்த குளிர் கண்ணாடியை கழற்றி சட்டையில் மாட்டியவனின், உடல்வாகும், உயரமும் இன்னொருமுறை இரசனையோடு திரும்பிப்பார்க்க வைத்தது.

“பார்க்க சாதாரணமாகத் தான் தெரியுறாரு! இவருக்கா இப்படிப் பயந்து சாகுறீங்க?”

“இதுக்கு முன்னாடி நாகர்கோயிலில் வேலை பார்த்திருக்காரு! அங்கே ஒருத்தனை என்கௌண்டரில் போட்டுத் தள்ளிட்டு, சஸ்பென்ஷன் முடிஞ்சு இங்கே வந்து ஜாய்ன் பண்ணிருக்காரு.! அது மட்டுமில்லை.. இதுக்கு முன்னே இருந்த இடங்களிலேயும், நிறைய மாற்றல் வாங்கினதா கேள்விபட்டேன். இன்னொரு விஷயம் தெரியுமா? மதுரை அவரோட சொந்த ஊரு!” என ஜெகதீஷன் சொல்ல,

“என்னய்யா உள்ளே நுழையும் முன்னமே இப்படிப் பயமுறுத்துறீங்க?” எனக் கேட்ட குமாரசாமியின் குரல், அருகில் வந்த அதிவீரனைப் பார்த்ததும் அப்படியே உள்ளடங்கிப் போயிருந்தது.

“சார்! வாங்க சார்! வெல்கம்!” பதற்றத்துடன் அவனை வரவேற்றார் காவல் ஆணையர் சுதர்சன்.

“ரொம்ப நாளைக்குப் பிறகு ஸ்டேஷனை தூசி தட்டிருக்கீங்க போல.?” என்றவனின் பார்வை அங்குலம் அங்குலமாய் ஆராய்ந்தது.

அடுத்து இரண்டு மணி நேரத்திற்கு, அதிவீரனின் குரல் மட்டும் தான் அந்தக் காவல் நிலையம் முழுதையும் ஆட்சி செய்திருந்தது. ஏதேதோ விபரங்கள் கேட்டான். கோப்புகளைப் புரட்டினான். அதட்டியும், தட்டிக் கொடுத்தும் தனக்குத் தேவையானதை வாங்கிக் கொண்டான். என்ன நடக்கிறது எனப் புரியாமலே அவன் கேட்டதைச் செய்து கொண்டிருந்தனர்.

“என்னய்யா, இந்த ஆளு வந்த அன்னைக்கே ஸ்டேஷனை இந்த உலுப்பு உலுப்புறான்.?”

“மணி ரெண்டாகுது.. ரெண்டு நேரம் டீயை மட்டும் குடிச்சுப்புட்டு அசையாமல் உட்கார்ந்திருக்கான்யா மனுஷன்!” என்ற புலம்பல் குரல்களின் நடுவே,

“என் முன்னாடி இருக்கிறது எல்லாம், இந்த ஸ்டேஷன் லிமிட்டில் வந்து முடிக்காமல் இருக்கிற கேஸஸ்!” உட்கார்ந்திருந்த அதிவீரனின் தலையை மறைக்கும் அளவிற்கு அடுக்கப்பட்டிருந்த அந்தக் கோப்புகளைப் பார்த்தபடியே சொன்னான். ஊசி விழுந்தால் கூட, சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதியாக இருந்தது அந்த இடம்.

“இது கடைசி ரெண்டு வருஷத்தோடது மட்டும் தான். இன்னும் தோண்டினால் பெரிய புதையலே எடுக்கலாம் போல..!” நக்கலாய் சொன்னவன், எதிரில் அமைதியாய் நின்றவர்களைப் பார்த்தான்.

“அப்படியெல்லாம் இல்லை சார்! ஆதாரம் இல்லாத, ஆதாரம் கிடைக்காத கேஸ் மட்டும் தான் சார் முடிக்காமல் இருக்கும். போன மாசம் நடந்த செய்ன் ஸ்னாட்சிங் கேஸ் கூட முடிச்சு ஆளைப் பிடிச்சாச்சு சார். அவங்க நகைதான்னு ஆதாரம் காட்டி வாங்கிட்டுப் போகச் சொல்லியிருக்கோம் சார்.!” எனப் பணிவாய் சொன்னார் சுதர்சன்.

“ஆதாரம் அதுவா கிடைக்காது சுதர்சன்.. நாம தான் தேடணும். பத்து பதினைஞ்சு மிஸ்ஸிங் கேஸ் இருக்கு! அதையெல்லாம் என்ன ஏதுன்னு பாருங்க! தேதிப்படி எல்லாக் கேஸையும் முடிச்சு எனக்கு ரிப்போர்ட் அனுப்பணும்.!” அழுத்தமாய் அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

 

அதிவீரனின் அலைபேசி தன் இருப்பைக் காட்டி, அவன் பேச்சை இடைநிறுத்தியது.

அலைபேசியை எடுத்துத் திருப்பிப் பார்த்தான். மாதவி தான் அழைத்திருந்தார். எதற்கு அழைக்கிறார் என்பது அவனுக்குச் சொல்லாமலே தெரிந்தது. அழைப்பை துண்டித்துச் சட்டைப்பைக்குள் போட்ட மறுநொடியே மீண்டும் அழைத்திருந்தார். வேறு வழியின்றி, அழைப்பை எற்றுக் காதில் வைத்தான்.

“அதி! சாப்பிட்டியா?”

“எதுக்குக் கூப்பிட்டீங்க? நேரடியாய் சொல்லுங்க?” பட்டுக் கத்தரித்தார் போல் அவன் கேட்க, சில நொடிகள் சொல்வதறியாமல் திணறினார்.

“சாயங்காலம் வரச் சொன்னேனே? பொண்ணைப் போய் நேரில் பார்த்துட்டு வந்துடுவோம்!” எனச் சொல்லிவிட்டு அவனின் பதிலுக்காகக் காத்திருந்தார் மாதவி.

“அதி! லைனில் இருக்கியா?”

“வந்துருவ தானே? நீ சொன்னால் தான் எல்லா ஏற்பாடும் பண்ண முடியும். உனக்கு விருப்பம்ன்னா புள்ளைக்குப் பூமுடிச்சுட்டு வந்துரலாம்ன்னு அப்பா சொல்றாக. வீசுன கை வெறுங்கையோடு போக முடியாது. நீ எதையும் உறுதியாய்ச் சொன்னால் தான், நாங்க எதையும் செய்ய முடியும்!” மகன் கேட்கிறானா.? இல்லையா? என்பதைக் கூட யோசிக்காமல் பேசிக்கொண்டே இருந்தார் மாதவி.

“ம்ம்! புரியுது! வைங்க வந்துருவேன்.!” எனச் சொல்லிவிட்டு அவன் அலைபேசியைத் துண்டிக்கப் போகும் முன்,

“பொண்ணு பார்க்கும் முன்னேயே இந்தப் பாடாய் இருக்கு. கல்யாணத்தை நடத்தும் முன்னே என்ன பாடுபடப் போறேனோ?” எனப் புலம்பிய மாதவியின் குரல் அவன் செவிகளில் விழுந்தது.

“ம்மா!” காதில் அலைபேசியை வைத்த மாத்திரத்திலேயே புலம்பிக் கொண்டிருந்தவரின் செவிகளுக்குள் திடீரெனக் கேட்டக் குரலில் பதறித்தான் போனார் மாதவி.

பேசினதைக் கேட்டிருப்பானோ?’ மனதிற்குள் புலம்பியவர்,

“அது ஒண்ணுமில்லை அதி! நான் என்னத்தையோ புலம்பிட்டு போறேன். அதுக்காகக் கல்யாணம் வேணாம்ன்னு சொல்லிர மாட்டியே?” என அவர் அவசரமாய் விளக்க,

“அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா!” என்றவன்,

“ம்க்கும்!” எனத் தொண்டையைச் செருமிக் கொண்டான்.

மகன் தன்னிடம் எதையோ கேட்க நினைக்கிறான் என்பது மாதவிக்குப் புரிந்தது.

“பொண்ணு போட்டோவை அனுப்பி வைக்கவா அதி?” இதுவாகத்தான் இருக்கும் என அனுமானித்துக் கேட்டார் மாதவி. தாயறியாத சூலா?

“ம்ம்!” எனச் சொன்ன மறுநொடியே அலைபேசி இணைப்பைத் துண்டித்திருந்தான் அதிவீரன்.

ஒரு சாதாரண விஷயத்தைக் கேட்க கூடத் தயங்கும் மகனை நினைத்து மாதவிக்கு வேதனையாய் இருந்தது. இந்த இடைவெளிக்கு தாங்களும் காரணமாகிப் போனோமே? என்ற எண்ணம் நெருஞ்சி முள்ளாய் நெஞ்சைத் தைத்தது. விரிசலிட்ட கண்ணாடியாய் விழுந்த இடைவெளியை நிரப்புவதற்காகத் தான் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார் மாதவி.

 

ஆனால், அவர் பெற்ற மகனே அந்த இடைவெளியை நிரப்ப வாய்ப்பளிக்காது, தனியாக விலகி நிற்கும் போது, அவராலும் என்ன செய்துவிட முடியும்?

அதே நேரம்,

“க்ளிங்!” என்ற ஓசை கேட்டு, அலைபேசியை எடுத்துப் பார்த்தான் அதிவீரன்.

 

அழகுநிலாவின் புகைப்படம் அவனின் அலைபேசி திரையை நிறைத்திருந்தது. ஆகாய நீல வர்ணத்தில், ஆங்காங்கே மஞ்சளும் சிவப்புமாய்ப் பெரிய பெரிய பூக்கள் விரவியிருந்த புடவை அணிந்திருந்தாள். பிறை நிலா நெற்றியில் குண்டூசி முனையளவு பொட்டு, காதிலே சின்ன ஜிமிக்கி, உற்றுப்பார்த்தால் தான் தெரியுமளவிற்குச் சின்னக் கல் வைத்த மூக்குத்தி, என அடக்கமான அழகுடன் இருந்தாள் பெண். கூந்தலின் ஒருபுறமாய் வழிந்த நெருங்கத் தொடுத்த மல்லிச்சரம் அவளுக்கு இன்னும் அழகு சேர்த்தது. இரண்டு நிமிடங்களுக்கு மேலேயே தன்னையறியாமல் அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தவன், நினைவு வந்தவனாய் தலையை உலுக்கி நிமிர்ந்தான்.

அப்போது தான் காவல் நிலையத்தில் இருப்பவர்கள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது புரிய, தனது தனிப்பட்ட வேலையை ஒதுக்கி வைத்தவன், அவர்களுக்கான உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டு, தேவையான கோப்புகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறியிருந்தான்.

காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தவன், வாகனத்தில் ஏறி அமர்ந்தான். ஓட்டுநர் வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருக்க, தன் கையிலிருந்த கோப்புகளோடு, ஏற்கனவே வைத்திருந்த கோப்புகளையும், ஒப்பிட்டு, ஏதேதோ தகவல்களைக் குறிப்பெடுத்துக் கொண்டவனின் புருவம் யோசனையில் சுருங்க, இருபத்தி இரண்டு என்ற எண்ணை எழுதி வட்டமிட்டவனின் முகம் தீவிர யோசனையில் இருந்தது.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
14
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அதி அழகு செம. அப்பா செம.

    1. Author

      மிக்க நன்றி கலை மா 💛