
நேசம்-2
பிள்ளைகளை எல்லாம் பள்ளிக்கு கிளப்பியதும் வீடே அமைதியாக இருந்தது. வீட்டை ஒதுங்க வைத்துப் பாத்திரங்களை எல்லாம் தேய்த்துப் போட்டுவிட்டு தனக்கும் கணவருக்குமாய்க் காபியைக் கலந்து கொண்டு, கடையில் நின்றிருந்த கணவனிடம் கொடுத்துவிட்டு, தனக்கும் எடுத்துக்கொண்டு அமர்ந்தார் செல்வி.
முகம் முழுதும் யோசனையைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. ஏதோ ஒன்றை யோசித்துக் கொண்டிருக்கிறார். அவர் மனம் குழப்பத்தில் இருக்கிறார் என்பதை அறிந்தும் மனைவியின் செயலை அமைதியாய்ப் பார்த்திருந்தார் புவியரசன்.
“இந்தாருங்க! நாம பேசாமல் நம்ம அழகிக்கு வேற மாப்பிள்ளை பார்ப்போமா?” எனக் கேட்ட மனைவியை ஆராய்ச்சியாய் பார்த்தார் புவியரசன்.
“எல்லாம் தெரிஞ்சும் என்னத்துக்கு நீயே இப்படிப் பேசுற?”
“எனக்கு இது சுத்தப்பட்டு வராதுன்னு தோணுது!” யோசனையாய் கணவனுக்குப் பதில் சொன்னார் செல்வி.
“இந்தாரு செல்வி! நான் ஒண்ணு தெளிவா சொல்லிப்புடுறேன் கேட்டுக்க.. நான் முன்னே இருந்தே இது சரி வராதுன்னு சொல்லிட்டே இருக்கேன். நீதேன் கேட்க மாட்டேங்குறே! நாமளே ஒத்தை பொட்டைப் புள்ளையைப் பெத்து வச்சிருக்கோம். சொந்தம் விட்டுப் போகக் கூடாதுன்னு பொண்ணு குடுத்துப்புட்டு, அவள் கண்ணைக் கசக்கிட்டு நிக்கிறதை வேடிக்கைப் பார்க்கச் சொல்றியா.?” எனக் கேட்ட கணவனுக்குப் பதில் சொல்லாமல் அமைதியாய் இருந்தார் செல்வி.
“பதில் பேசு செல்வி! உன்னைத்தேன் கேட்கிறேன். நான் முன்னமே சொல்லிப்புட்டேன், உன் பக்க சொந்தமும் வேணாம்! என் பக்க சொந்தமும் வேணாம்! வெளியில் பொண்ணைக் குடுப்போம்ன்னு சொன்னேனா இல்லையா? இதெல்லாம் நீயே வலிய இழுத்துக்கிட்டதுதேன். முன்னால் பேசி வச்சதை என்ன செய்யப் போற? எதையுமே யோசிச்சு பேச மாட்டியா? இது ஒண்ணும் விளையாட்டு விஷயமில்லை செல்வி, நம்ம பிள்ளையோட வாழ்க்கை.!” அழுத்தம் திருத்துமாய்ச் சொன்னார் புவியரசன்.
பதில் பேசாது அமைதியாய் அமர்ந்திருந்த செல்விக்குத் தெரியும்.. கணவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மையென. புவியரசன் சொன்னதைப் போல் அத்தனையும் அவராக இழுத்துக் கொண்டது தான். ஆனால் இப்போதும் கூட, செல்விக்கு இரண்டு மனதாகத்தான் இருந்தது.
‘சொந்தம் விட்டுப் போகாது! மகளையும் கைக்குள்ளேயே வைத்துக் கொள்ளலாம்!’ என யோசனை ஓடினாலும், கதிரவனைப் பற்றிக் கேள்விப்படும் விஷயங்கள் சரியாக இல்லாததால், அவர் மூளைக்குள் யோசனை ஓடிக் கொண்டிருந்தது.
“என்னைய என்ன செய்யச் சொல்றீக.? அன்றைக்கு இருந்த சூழ்நிலை அப்படி! எங்க அம்மா கேட்கும் போது, என்னால் இல்லைன்னு சொல்ல முடியலையே?”
“சொன்னவுக போய்ச் சேர்ந்துட்டாங்க செல்வி! வாழப் போறது நம்ம புள்ளைதேன்.!” எனச் சொன்ன புவியரசனின் வார்த்தைகளில் அர்த்தம் இருந்தது.
“என்னத்துக்கு இப்படிப் பேசுறீங்க? அன்றைக்கு உங்க முன்னாலதேன் அம்மா கேட்டாங்க! நான் இல்லாமல் போனால், என் புள்ளை தனிச்சு நின்னுடுவான். நம்ம அழகிக்கும் அவனுக்கும் கல்யாணத்தை முடிச்சு வச்சு கைக்குள்ள வச்சுக்கோன்னு சொன்னாங்க. நீங்க அப்போ அமைதியாகத் தானே நின்னீங்க? மறுத்துப் பேசியிருக்கலாம் தானே?” பதிலுக்குக் கணவனைக் கேள்வி கேட்டார் செல்வி.
“நான் பதில் பேசும் முன்னவே நீ சம்மதம்ன்னு சொல்லிப்புட்ட செல்வி.! அதன் பிறகு மறுத்துப் பேசுறது நல்லா இருக்காதுன்னுதேன் நான் அமைதியாய் இருந்தேன். உன் தொம்பி வேலைவெட்டிக்குப் போகாமல் மைனர் மாதிரி சுத்திக்கிட்டுத் திரியறான். சவகாசமும் சரியில்லை. நீ அவனுக்குதேன் பொண்ணைக் குடுப்பேன்னு நிக்கிற? நீ அவனுக்குப் பொண்ணு குடுக்குறதும், நம்ம பிள்ளையைக் குழிக்குள்ளே தள்ளுறதும் ஒண்ணுதேன்.!” எனச் சொல்லிவிட்டு மனைவியின் முகம் பார்த்தார் புவியரன்.
“இம்புட்டு நாளும், அமைதியாய் ஒண்ணும் பேசாமல் இருந்துப்புட்டு, இப்போ என்னைக் குழப்பிவிடப் பார்க்கிறீகளோ? கொடுத்த வாக்கை மீறினால் அது நல்லா இருக்காதுங்க! கல்யாணம் முடிச்சுப்புட்டா என் தம்பி தன்னைப்போல் மாறிருவானுங்க!” எனச் செல்வி சொல்ல, கோபமாய் மனைவியை முறைத்தார் புவியரசன்.
“நான் உன்னைக் குழப்பிவிடவெல்லாம் பார்க்கலை செல்வி! நீ கொடுத்த வாக்கு முக்கியமா? நம்ம பிள்ளை வாழ்க்கை முக்கியமான்னு நீதேன் யோசிக்கணும். அதோட நான் ஒண்ணும் சும்மா இல்லை..” எனறவர் எழுந்து சென்று, கடைக்குள் பெரிதாக மாட்டப்பட்டிருந்த முருகன் படத்தின் பின்னாலிருந்து, சிறிய மஞ்சள் நிறப் பையை எடுத்து மனைவியிடம் கொடுத்தார்.
தன் கையிலிருந்த பைக்குள் இருந்த புகைப்படங்களையும், ஜாதக நோட்டுகளையும் அதிர்வுடன் பார்த்திருந்தார் செல்வி.
“நான் நம்ம புள்ளைக்கு மாப்பிள்ளை பார்த்துக்கிட்டுதேன் இருக்கேன். நீ யாருக்கு வேணும்ன்னாலும் வாக்கு கொடுத்துட்டு போ! என் புள்ளைக்கு ஒரு அப்பனா நான் என்ன செய்யணுமோ, அதைச் செய்வேன்.! அதோட உன் தம்பி மாறுவியான்னு எனக்கு நம்பிக்கை இல்லை!” என அழுத்தமாய்ச் சொன்னக் கணவனை, ஆச்சர்யமாய்ப் பார்த்தார் செல்வி. இத்தனை வருடமாக, அமைதியாய் தன்னுடன் வாழ்ந்த மனிதரா இவர்? என்ற கேள்வி அவர் விழிகளில் தெரிந்தது.
இத்தனை வருட வாழ்க்கையில் முக்கால்வாசி முடிவுகள் செல்வி எடுத்தவையாகத்தான் இருக்கும். சண்டை சச்சரவென வந்தாலும், செல்வி தான், சத்தம் போட்டு ஊரைக் கூட்டுவார். புவியரசன் எப்போதும் அமைதியாய் கடந்துவிடுவார். சில தருணங்களில் மட்டுமே புவியரசனின் முடிவுகள் செல்வியால் ஏற்றுக்கொள்ளப்படும்.
அழகுநிலா எட்டாம் வகுப்பில் படிக்கும் போது தான், எதிர்பாராவிதமாய்ச் செல்வி கருவுற்றிருந்தார். மூத்தவன் இனியனோ பதினைந்து வயதில் இருந்தான்.
“வயசுக்கு வந்த புள்ளையை வீட்டில் வச்சுக்கிட்டு இதெல்லாம் வேணாம்ங்க! ஊருக்குள்ளே நாலுவிதமா பேசுவாங்க! யாரு கண்ணுக்கும் தெரியும் முன்னவே ஆஸ்பத்திரியில் போய்க் கலைச்சுப்புட்டு வந்துருவோம்!” என உறுதியாய் சொன்னார் செல்வி.
“யாரு என்ன வேணும்னாலும் சொல்லட்டும் செல்வி, நம்மளை நம்பி வந்த உசுரை நான் அழிக்க விடமாட்டேன்!” அமர்த்தலான குரலில் சொன்னாலும் புவியரசனின் வார்த்தையைச் செல்வியால் மீற முடியவில்லை. இப்போது நினைத்தாலும், கவினை மூன்றாவதாகப் பெற்றெடுத்தது பேரதிசயமாகத் தான் தோன்றியது செல்விக்கு.
அன்று கணவனின் வார்த்தைகளில் இருந்த அதே உறுதி, இன்றும் இம்மி குறையாது இருப்பதைக் கண்டு, கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது செல்விக்கு.
“எங்க அம்மாதேன் போய்ச் சேர்ந்துட்டாக! என் தம்பி கதிரவன் வந்து கேட்டால் நான் என்ன சொல்லட்டும்?”
“அக்காவும் தம்பியும், ஆயிரம் பேசிக்கிடுங்க! ஆனால் நான் எம் மவளை உன் தம்பிக்கு கொடுக்க மாட்டேன்.! உன் தம்பிக்கு நீ வேற பொண்ணைப் பார்த்துக் கட்டி வை! என்னைக் கேட்டால் உன் தம்பி கல்யாணமே பண்ணாமல் இருக்குறதுதேன் நல்லது. வேலைவெட்டி இல்லாமல் சுத்திக்கிட்டு திரியறவனுக்கு, என்னத்துக்குக் கல்யாணம்?” எதுவுமே நடக்காதது போல், சர்வசாதரணமாய்ச் சொல்லிவிட்டு அமைதியாய் அமர்ந்து கொண்டார் புவியரசன்.
இங்கு, செல்வியின் நிலைதான் இருதலைக் கொள்ளி எறும்பாய் மாறிப் போனது. ‘கதிரவனுக்குப் பதில் என்ன சொல்வது? தன் தாயிடம் சொன்ன வார்த்தைகளைக் காப்பாற்ற முடியுமா?’ எனக் குழப்பமாய் அமர்ந்திருந்தார் செல்வி.
*******
ஆதவனின் ஒளி மெல்ல மெல்ல மயங்கி, மாலை நேரமாகியிருந்து. ஆதவனின் பொற்கிரணங்கள் வானில் நிகழ்த்திக் கொண்டிருந்த வர்ணஜாலத்தைப் பார்க்க கூட மனமில்லாது கடையில் அமர்ந்திருந்தார் செல்வி. மனம் முழுதும் கணவன் சொன்னதே திரும்பத் திரும்ப ஓடிக் கொண்டே இருந்தது. கணவன் சொன்னபடியே வெளியில் மாப்பிள்ளை பார்த்துவிடலாம் என்றாலும் கூட, கதிரவனை எப்படிச் சமாளிப்பது என்பதை நினைத்தாலே பயமாக இருந்தது. தலைமேல் மலையையே பெயர்த்து வைத்தாற் போல் பாரமாய் இருந்தது.
எல்லாவற்றிகும் மேலாகக் கதிரவனைப் பற்றி அழகுநிலாவின் மனதில் என்ன இருக்கிறதென்பதே அவருக்குத் தெரியவில்லை. திருமணம் பற்றிப் பேச்செடுத்தாலே, கல்லையும் மண்ணையும் பார்ப்பது போன்ற அவளின் பார்வை வேறு இவருக்குள் புளியைக் கரைத்தது.
“அக்கா! அக்கா!” யோசனையிலிருந்த செல்வியின் மனநிலையைக் கலைக்குமாறு வந்து சேர்ந்தான் கதிரவன். செல்வியின் உடன் பிறந்த தம்பி. தன் தாய், தவறியதற்குப் பின், தந்தை உயிரோடு இருந்தாலும் கூட, தாயாய் தம்பியை வளர்த்தவர் செல்வி தான்.
செல்வியின் தந்தை சில வருடங்களுக்கு முன்பு தான் காலமாகியிருந்தார். ‘இப்போது தன் கையை மீறிப் போய்விட்டானோ?’ என்ற வருத்தமும் செல்விக்குத் தம்பியின் மீது உண்டு.
“வாடா!” உள்ளிருந்தே குரல் கொடுத்தார்.
“சாப்பிட்டியா டா? ஏன் சாப்பிடாமல் ஊர் சுத்திக்கிட்டு திரியுற?” வாஞ்சையாய் தான் அண்ணாந்து பார்க்கும் உயரத்திலிருந்த தம்பியைப் பார்த்து வினவினார் செல்வி.
“பயலுக கூப்பிட்டாணுங்கன்னு போனேன்க்கா.. நேரமாகிருச்சு.!” சாவதானமாய்ப் பதில் சொன்னான் கதிரவன்.
“கொஞ்சமாச்சும் பொறுப்பா இருக்கப் பழகு டா! நாளை பின்னே பொண்டாட்டி பிள்ளைன்னு வந்த பின்னாலும், இப்படியே இருந்தால் சரி வருமா சொல்லு?”
“என்னக்கா பொடி வச்சு பேசுற? என்ன சங்கதி? எவனாச்சும் எதாச்சும் சொன்னானா? ஊரில் வேலை பொழப்பு இல்லாமல், ஆயிரம் பேர், ஆயிரம் சொல்லுவான். அதைக்கேட்டு நீயும் பேசுவியா? உன் தம்பிக்கா நானு.. என்னை நம்ப மாட்டியா நீயி.?” எனக் கேட்ட கதிரவனிடம், கோபமாய்ப் பேச முடியவில்லை செல்வியால்.
ஒருபுறம் மகளின் வாழ்க்கை, மறுபுறம் உடன் பிறாந்த தம்பியின் வாழ்க்கை, இன்னொருபுறம் புவியரசனின் முடிவு என மனதால் மருகித் தவித்துக் கொண்டிருந்தார். கதிரவனைப் பார்த்த மாத்திரத்தில் செல்வியின் கண்கள் தன்னைப்போல் கலங்கியது.
“என்னக்கா பதிலே பேச மாட்டேங்குற? உன் மூஞ்சியே சரி இல்லையே.? எவன் என்ன சொன்னான்னு சொல்லு?”
“யாரும் என்னமும் சொல்லட்டும் கதிரு! நீ வா, வந்து சாப்பிடு!” என அழைத்துப் போனார் செல்வி.
“இப்படியே சோத்தைப்போட்டு நடுவீட்டில் உட்கார வச்சு கொஞ்சிக்கிட்டே திரி! அவன் நல்லா உருப்படுவான்.! இந்தாரு கதிரு! இப்போவும் ஒண்ணும் குறைஞ்சு போகல.. பெரியகடைவீதியில் உனக்குன்னு ஒரு வேலைக்குச் சொல்லி வச்சிருக்கிறேன்.. டூ வீலர் மெக்கானிக் வேலைதேன்.. ஒழுங்கா சோலியைப் பார்த்தோமா.. வாழ்க்கையில் முன்னேற. வழியைப் பார்த்தோமான்னு இருந்தேன்னு வையி.. நானே நல்ல பொண்ணா பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.!” வாசல்புறமாய்க் கேட்ட சத்ததில், அதிர்ந்து பார்த்தார் செல்வி. பேச்சில் நிதானமிருந்தாலும், கோபத்தைத் தொண்டைக் குழிக்குள் அடக்கியபடி நின்றிருந்தார் புவியரசன்.
“என்ன மாமா என்கிட்டேயே ரூட்டைக் குடுக்குறீகளா? என்ன சொன்னீக? பொண்ணு பார்த்து கட்டி வைக்குறீகளா? எனக்கா? எனக்குதேன் அழகி இருக்காளே? என் அக்கா மவளை விட்டுப்புட்டு, நான் என்னத்துக்கு யாரையோ கட்டணும்? இதெல்லாம் சுத்தப்படாது மாமா! அம்மா இருக்கும் போது ஒண்ணு சொல்லிப்புட்டு, அம்மா போய்ச் சேர்ந்ததும், தட்டிக் கழிக்கப் பார்க்குறீகளோ?” சாப்பிட அமர்ந்தக் கதிரவன் எழுந்து, தன் உயரத்திற்கு முழுதுமாய் நிமிர்ந்து நின்றான்.
“கதிரு! பேசாமல் இருடா!”
“இந்தாருங்க! நீங்களாச்சும் சும்மா இருங்களேன்!”
“என்னடா முறைக்கிற? நான் உங்க அம்மாகிட்டே நான் வாக்கு கொடுத்தேனா? எம் மவளை உனக்குக் கொடுக்க எனக்கு விருப்பம் இல்லை!” தெளிவாய்ச் சொல்லிவிட்டார் புவியரசன்.
“பெத்தவங்க நீங்களா இருக்கலாம் மாமா! அவ என் அக்கா மவ.. அவளைத் தூக்கிட்டுப் போய்த் தாலி கட்டுற உருத்தும் உரிமையும் எனக்கு இருக்கு. உங்க சம்மதமும், அனுமதியும் எனக்குத் தேவையில்லை. நான் நினைச்சால், இன்னைக்கே, இந்த நிமிஷமே அவளைத் தூக்கிட்டுப் போய்த் தாலி கட்ட முடியும்! செய்யவா? செஞ்சு காட்டவா?” வீம்புக்கு மல்லுக்கட்டிக் கொண்டு நின்றான் கதிரவன்.
“யார் மவளை, யார் துக்கிட்டுப் போய்த் தாலி கட்டுறது? கொன்னேபுடுவேன்! என் புள்ளை மேலே கை வச்சிருவியா நீயி? என் மவ விரல் நுனியைத் தொட கூட உனக்குத் தகுதி இல்லை!” எனக் கதிரவனின் சட்டையைப் பிடித்திருந்தார் புவியரசன்.
“அக்கா! ஒழுங்கா இந்த ஆளைச் சட்டையிலிருந்து கையை எடுக்கச் சொல்லு! அப்பறம் மரியாதைக் கெட்டுப் போவும் சொல்லிப்புட்டேன். இவரு மட்டும் இப்போ கையை எடுக்கலன்னு வையி.. அக்கா புருஷன்னு பார்க்க மாட்டேன்.. கை நீட்டிப்புடுவேன்..!” எனக் கதிரவன் சொல்ல, ஆங்காரத்துடனும், ஆக்ரோஷத்துடனும் நிற்கும் தம்பிக்கும், கோபமும், அழுத்தமுமாய் நிற்கும் கணவருக்கும் நடுவே தவிப்புடன் நின்று கொண்டிருந்தார் செல்வி.
இருவரும் இப்படி அடித்துக்கொள்வார்கள் என அவர் கனவிலும் நினைத்ததில்லை. கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது அவருக்கு.
இப்படியே விட்டால், ‘இது எதில் போய் முடியும்? ஒருவேளை கதிரவன் மட்டும் கைநீட்டி அடித்துவிட்டால் மிகவும் விபரீதமாகிவிடும்’ எனப் புரிந்தவராய்,
“அவன் மேலே இருந்து கையை எடுங்க! எடுங்கன்னு சொல்றேன்ல்ல?!” கணவனை அதட்டி, கதிரவனை அவர் பிடியிலிருந்து விடுவித்த செல்வி,
“நீ என் தம்பியா இருக்கலாம்! ஆனால் அவரு என் புருஷன்! அவரையே அடிப்பேன்னு என் கண்ணு முன்னாலேயே சொல்லுவியா? இங்கிருந்து போ கதிரு! போன்னு சொல்றேன்ல்ல?!” எனக் கோபமாய்க் கத்தி கொண்டிருந்த செல்வி எதேச்சையாய் வாசலைத் திரும்பிப் பார்க்க, அங்கே தன் தம்பி கவினுடன், குழப்பம் சூழ்ந்த முகத்துடன் நின்றிருந்தாள் அழகுநிலா.
*******
அந்தகாரமான இரவுப்பொழுது.. நட்சத்திரங்கள் ரத்தினக் கம்பளம் விரிக்க, ஒய்யாரமாய் உலாப் போய்க் கொண்டிருந்தது பிறைநிலா.
தனது மூத்த மகனின் வருகைக்காக வரவேற்பறையிலேயே காத்திருந்தார் மாதவி.
“மாதவி! அவன் எப்போ வர்ரானோ தெரியலை! பேசாமல் வந்து தூங்கு! எதுவா இருந்தாலும் காலையில் பேசிக்கலாம்.!”
“இப்போ விட்டால் பேச முடியாதுங்க! அவன் சம்மதிச்சதே பெரிய விஷயம். இப்போ விட்டோம் உங்க மயனைப் பிடிக்கவே முடியாது.!” மகனிடம் பேசிவிடும் உறுதியோடு அமர்ந்திருந்தார் மாதவி.
“இன்னைக்குதேன் அவன் வந்துருக்கான். இன்றைக்கே பேசியே தீரணுமா? அவன் எனக்கு மட்டும் மயன் இல்லை! உனக்கும்தேன்!”
“பேசித்தேன் தீரணும்.! இந்த வருஷம் சின்னவனும் படிப்பை முடிச்சிருவான். இந்த வருஷத்துக்குள்ளே பெரியவனுக்கு முடிச்சாதேன், ரெண்டு மூணு வருஷத்தில் சின்னவனுக்குப் பண்ண முடியும்! ஆம்பிள்ளை பிள்ளையைப் பெத்துட்டோம், அவிங்க இஷ்டத்துக்கு என்னைக்கும் கல்யாணம் பண்ணட்டும்ன்னு விடச் சொல்றீகளா? அவிங்களுக்குன்னு குடும்பம்ன்னு ஒண்ணு வேணாமா? உங்க பெரிய மயன், வேலை மட்டும் போதும்ன்னு தான்தோன்றித் தனமா ஊரைச் சுத்திட்டுத் திரியறான். பொண்டாட்டின்னு ஒருத்தி இருந்தால் வீட்டைத் தேடி வருவான் தானே? நான் என் முடிவில் உறுதியா இருக்கேன். நீங்க போய்ப் படுங்க! அவன் வரட்டும் நான் பேசிட்டு வர்ரேன்.!” எனத் தீர்க்கமாய் மாதவி சொல்ல, மனைவிக்குத் துணையாய் அங்கேயே அமர்ந்துவிட்டார் இந்திரன்.
“போய்ப் படுக்க வேண்டியது தானே?”
“நீ ஒத்தைக்கு உட்கார்ந்திருப்பியே மாதவி!”
“ரொம்பத்தேன் அக்கறை! என்னைப் பேய் ஒண்ணும் தூக்காது.. நீங்க பயப்படாமல் போங்க!”
“நீ இல்லாமல் நான் என்னைக்குத் தூங்கியிருக்கேன் மாதவி?”
“இம்புட்டு வயசான உங்களுக்கே, கொஞ்சுறதுக்கு இல்லாட்டியும், கூட இருக்காளேங்கிற மன நிம்மதிக்காகவாது பொண்டாட்டி தேவைப்படும் போது, நம்ம மயனைக் கொஞ்சம் யோசிச்சு பாருங்க! இருவத்தொன்பது வயசில், பிரம்மச்சாரியா சுத்தணும்ன்னு அவனுக்கென்ன தலையெழுத்தா?” என மாதவி கேட்க, பதில் சொல்ல முடியாது விழித்தார் இந்திரன்.
“என்ன சத்ததையே காணோம்? பதில் சொல்ல முடியலைல்ல? சத்தம் காட்டாமல் உட்காருங்க!” என மாதவி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சாத்தியிருந்த கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே வந்தான் அதிவீரன்.
தூங்காமல் விழித்திருந்த பெற்றோரைப் பார்த்து, அவனுக்குப் பெரிய ஆச்சரியமெல்லாம் ஒன்றுமில்லை. அவன் இதையெல்லாம் எதிர்பார்த்து தானே இங்கே வந்தான். அவர்கள் எதற்காக அமர்ந்திருப்பார்கள் என்பதை வரை அவன் ஏற்கனவே கணித்தவை தான்.
“இன்னும் தூங்காமல் என்ன செய்றீங்? நான் நைட் லேட்டாக வந்தால், வெளியிலேயே சாப்பிட்டு வந்துருவேன். எனக்காகவெல்லாம் காத்திருக்க வேணாம்!” எனச் சொல்லிவிட்டு, கடமை முடிந்தது என்பது போல், அவன் அறையை நோக்கி நடக்க,
“அதி! உன்கிட்டே பேசணும்!” என்ற மாதவியின் குரலில் நடந்தவாக்கிலேயே திரும்பினான் அதிவீரன்.
“இன்னும் என்ன.?” அவன் கேட்க,
“சொல்லுங்களேன்!” எனக் கணவனை இடித்தார் மாதவி.
“அது வந்து.. உனக்குப் பொண்ணு பார்க்கணும்ன்னு அம்மா சொன்னாள்.. அதேன் என்னன்னு கேட்கலாம்ன்னு..!” இடை நிறுத்தினார் இந்திரன்.
“ஓகேன்னு சொல்லிட்டேனே? இன்னும் வேற என்ன சொல்லணும்?”
“தரகர் கிட்டே சொல்லி சில ஃபோட்டோஸ் வாங்கியிருக்கேன் அதி! எந்தப் பொண்ணுன்னு நீ பார்த்துச் சொன்னால் நல்லா இருக்கும்.!” எனச் சொன்ன மாதவி, அவன் புறமாய்க் கையிலிருந்த புகைப்படங்களை நீட்டினார்.
“ஒரு முடிவோட தான் இருக்கீங்க.. அப்படித்தானே?” அசையாத பார்வையோடு தாய் தந்தையரைப் பார்த்தவனின் மீசையோரம் சிரிப்பில் துடித்தது.
“ஏங்க! இவனுக்குக் கல்யாணம் பண்ணுற எண்ணம் இருக்கா? இல்லையா? ஒரு முடிவோட இருக்கீங்கன்னு நம்மளை கேட்கிறான்.. முதலில் இவன் என்ன முடிவோட இருக்கான்? ஒண்ணுமே புரியலையே?” எனக் கணவனின் காதுக்குள் கிசுகிசுத்தார் மாதவி.
“என்கிட்டே இப்படிச் சத்தமில்லாமல் கேட்கிறதை, கொஞ்சம் சத்தமாகக் கேளு! உன் மயனே பதில் சொல்லுவான்.!” என இவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க, தன்புறமாய்க் கிடந்த அத்தனை புகைப்படங்களையும் வரிசையாக உணவு மேஜையில் கவிழ்த்து வைத்திருந்தான் அதிவீரன்.
“என்னங்க இவன், எந்தப் பொண்ணு பிடிச்சுருக்குன்னு பார்க்க சொன்னால், ஒரு ஃபோட்டோவைக் கூடப் பார்க்காமல் கவிழ்த்து வச்சுட்டு இருக்கான்?” என மாதவி மீண்டும் புலம்ப,
“இந்தா எதிரில்தேன் உன் மயன் நிற்கிறான்! நீயே கேளு! அவன்கிட்டே கேட்க வேண்டிய கேள்வியெல்லாம் என்கிட்டே ஏன்டி கேட்கிற? எனக்கா பொண்ணு பார்க்கிறே?” எனச் சடைத்துக் கொண்டார் இந்திரன்.
“ம்க்கும்! மீசை நரைச்சுப்போன வயசில், ரொம்பத்தேன் ஆசை!” கணவனை முறைத்தபடியே நாடியைத் தோளில் இடித்துக் கொண்டவர்,
“எந்தப் புள்ளையைப் புடிச்சிருக்குன்னு கேட்டால், நீ என்ன கவிழ்த்து வச்சு விளையாடிட்டு இருக்கிறே அதி? எந்தப் பொண்ணையும் பிடிக்கலைன்னா பரவாயில்லை. வேற ஃபோட்டோ கொண்டாரச் சொல்லுவோம்!” என மாதவி சொல்ல, சில நொடிகள் கவிழ்ந்திருந்த புகைப்படங்களில் பார்வையை நிலைக்கவிட்டவன், பெண்ணின் முகத்தையே பார்க்காமல், ஏதோவொரு புகைப்படத்தை எடுத்து தன் அன்னையின் கையில் கொடுத்தவன், வேலை முடிந்தது என்பது போல், அறைக்குள் நுழைந்திருந்தான்.
“என்னங்க இவன், கிளி சீட்டெடுத்து போடுற மாதிரி பொண்ணு மூஞ்சியைக் கூடப் பார்க்காமல் குடுத்துடுட்டுப் போறான்? என்னங்க இவன்.. இப்படி இருக்கான்? இவன் என்னத்துக்குப் போலீஸ் வேலையில் சேர்ந்தான்னு இருக்கு? சிரிக்கக் கூட மாட்டேங்குறான்.!” வழக்கம் போலக் கணவனிடம் தான் புலம்பி தீர்த்துக் கொண்டிருந்தார் மாதவி.
“அவனுடைய சூழ்நிலை அப்படி அமைஞ்சு போச்சு மாதவி! படிப்புக்காகன்னு ஹாஸ்டல் எப்போ போனானோ, அப்போ இருந்து இப்போ வரைக்கும், தனியாவேதேன் இருந்துருக்கான். வேலையும் அவனுக்கு அப்படியே அமைஞ்சு போச்சு. அதுவே அவனுக்குப் பழகிடுச்சு!” எனக் கணவர் சொன்னதைக் கேட்டபடியே, மகன் கையில் தந்துவிட்டுப் போன புகைப்படத்தைத் திருப்பிப் பார்த்தார் மாதவி.
“பார்க்காமல் எடுத்துக் கொடுத்தாலும், நல்ல புள்ளையாதேன் தெரியுது! நல்லா லட்சணமாகத்தேன் இருக்கா பொண்ணு! நல்ல நிறமாத்தேன் இருக்கா! அதிக்குப் பொருத்தமாக இருப்பாளா பாருங்களேன்?”
எனக் கணவனிடம் காட்டியபடி அவர் சொல்ல, அந்தப் புகைப்படத்தில், ஆகாய வர்ண நிறப் புடவையில் அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள் அழகுநிலா. அதிவீரனைக் கொள்ளைக் கொள்ளப் போகும் அழகுநிலா.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

மாதவி செம.