
நேசம்-11
மதுரையின் வானம் வெறிச்சோடியிருந்தது. மேகங்கள் தூரம் போயிருக்க, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீலம் மட்டுமே நிறைந்து கிடந்தது.
மீனாட்சியம்மன் கோவில் கொஞ்சம் கொஞ்சமாய் இயல்புக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. பிரதீப்பையும், பவித்ராவையும் காணாமல், இராஜேந்திரன் கோபமாய் வெளியேறியிருந்தார். அதோடு அவர் மனைவி ஜெயந்தியும் இதற்கு உடந்தை என அறிந்ததும், அவருக்குப் பற்றிக்கொண்டு வந்தது.
“அவிங்க தப்பிச்சதுக்குப் பின்னாடி நீ தான் இருக்கேன்னு மட்டும் தெரிஞ்சுது, உன் உடம்பில் உசுரு இருக்காது!” எனக் கோபமாய் அதிவீரனிடம் உறுமிய இராஜேந்திரனிடம்,
“டீல் இஸ் அ டீல் சார்! ஞாபகம் இருக்குல்ல?” என வெறுப்பேற்றியே அவரை அனுப்பி விட்டிருந்தான்.
ஆனால், இங்கே அதிவீரனைப் பார்த்து பதற்றமும், பயமுமாய் நின்றிருந்தாள் அழகுநிலா.
அவனின் பார்வை அவளை ஏதோ செய்தது.
“ஏய், அழகி! உன் ஆளு உன்னைப் பார்த்தாரு தானே டி?”
“நீ வேற, சும்மா இருடி! அவர் எதேச்சையா பார்த்திருப்பாரு!”
“நம்பிட்டேன் டி!” என வாய்க்குள் சிரித்துக் கொண்டாள் கீர்த்தனா.
மீண்டும் அதிவீரன் நின்ற இடத்தைப் பார்த்தாள். அவன் இப்போதும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் இதயம் தாளம் தப்பித் துடித்தது.
கண்கள் தன்னைப்போல் அவன் நின்ற திசையை விட்டு நகர மறுத்தது. அவன் கொஞ்சம் கொஞ்சமாய் இவளை நெருங்கி வருவது தெரியவும் அவளின் படபடப்பு அதிகரித்தது.
“ஏய் அழகி! உன் ஆளு இங்கதேன் வர்ராரு டி! இதுவும் எதேச்சையா வர்ராருன்னு சொல்லுவியா டி?” என்ற கீர்த்தனாவின் கேள்விக்கு அவளிடம் பதிலில்லை.
அவன் கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கி வர, அவர்கள் இருவருக்குமான இடைவெளி, காற்றில் கற்பூரமாய்க் கொஞ்சம் கொஞ்சமாய்க் கரைந்து ஆவியாகிக் கொண்டிருந்தது.
தன் முன்னே மந்தகாசப் புன்னகையுடன் நிற்கும் அதிவீரனை நிமிர்ந்து பார்த்தாள். அவனின் அண்மை அவளுக்கு அவஸ்தையைத் தந்தது. தயக்கமாய் அவனை ஏறிட்டாள். அவனோ, துளியளவு விழி நகர்த்தாமல், அவளைத்தான் பார்த்திருந்தான்.
“டீச்சரம்மா என்ன இந்தப்பக்கம் வந்திருக்கீங்க?” அடர்ந்த மீசையின் கீழிருந்த அதரங்கள் அத்திப்பூவாய்ப் புன்னகைத்தது.
“ஏன் நாங்கெல்லாம் வரக்கூடாதா? மருதையும் மீனாட்சியும் உங்களுக்கு மட்டுந்தேன்னு பட்டா போட்டுருக்கா என்ன?” துடுக்குத்தனமாய்க் கேட்டுவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள்.
“மதுரையைப் பட்டா போடுறதுக்கெல்லாம் ஆசை இல்லை மேடம். எனக்குப் பிடிச்ச பொண்ணோட மனசைப் பட்டா போடத்தான் முயற்சி பண்றேன். முடியலையே.. அந்தப் பொண்ணு தான் மனசு வைக்கணும்.!” என அவன் சொல்ல, அவனின் வார்த்தைகளில் அவள் கன்னக் கதுப்புகள் செம்மை பூசியது. இப்படி அவன் பேசினால், அவளும் தான் என்ன பதில் சொல்வது?
கண்கள் மினுமினுக்க, நாணத்தில், சின்னச் சிரிப்புடன் இமை தாழ்த்தி நின்றவளை, கண்களில் இரசனை தேக்கிப் பார்த்தான் அதிவீரன்.
குடையெனக் கவிழ்ந்த விழிகளில், மயில்தோகையாய் நீண்டிருந்த இமைகளும் அவனுக்குள் இரசனை சேர்த்தது.
“நிலா!” அவனின் மென்மையான அழைப்பில் உள்ளம் குழைந்தது அவளுக்கு.
“அடியேய்! கீழேயே குனிஞ்சு நின்னு, தரைக்குள்ளே புதைஞ்சு போயிறாதே! நான் இங்கிட்டு கடைப்பக்கமா நிற்கிறேன். நீ அண்ணேங்கிட்டே பேசிட்டு வா!” அவர்களுக்கு இடைவெளி கொடுத்து நகர்ந்திருந்தாள் கீர்த்தனா.
கீர்த்தனா அந்தப் பக்கமாய் நகர்ந்ததும், இருவருக்கும் இடையே மௌனம் மட்டுமே ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தது.
“என்கிட்டே பேசுறதுக்கு எதுவுமே இல்லையா நிலா?” அவனின் கேள்வியில் நிமிர்ந்து பார்த்தாள் அழகுநிலா.
“என்ன பேசுறதுன்னு தெரியலை!” என்றவள் அவனைப் பார்த்தள். அந்தப் பார்வையில் என்ன இருந்ததென அதிவீரனுக்குத் தெரியவில்லை. ஆனால் அவளின் ஒவ்வொரு பார்வைக்குமே அவனுக்குள் ஏதேதோ மாற்றங்கள். இருவருமே அந்தக் கணத்தை அனுபவித்தபடி நின்றிருக்க,
திடீரெனக் காதைப் பிளக்கும் இரைச்சலான சத்தம் அந்த இடத்தை நிறைத்தது. ரேஸ் பைக்கின் சத்தமெனப் புரிந்தாலும், எந்தத் திசையிலிருந்து வருகிறதென்பதே பிடிபடவில்லை.
“என்ன சத்தம் இது?” சுற்றும் முற்றும் பார்த்தாள் அழகுநிலா.
எங்கிருந்து சத்தம் வருகிறது? என்ன ஏதென்று சுதாரிக்கும் முன்னமே சாலையோரமாய் நின்றிருந்த அவர்களை உரசுவைதைப் போல், அதி வேகமாகக் கடந்து சென்ற இருசக்கர வாகனத்தின் வேகத்தில், பயந்து பதறி, தடுமாறி கீழே விழப் போனவள், அதிவீரனின் கரத்தை பிடிமானத்திற்காக இறுகப் பற்றியிருந்தாள். பயத்தின் விளிம்பில் சில்லிட்டுப் போயிருந்த அவள் கரத்தின் தீண்டல், அவனைச் சிலிர்க்க வைத்தது.
“நிலா! ஒண்ணுமில்லை! இட்ஸ் ஓகே!” அவளைத் தன் கை வளைவிற்குள் கொண்டு வந்திருந்தான். அவளின் இதயம் துடிக்கும் ஓசை அவனுக்குக் கேட்டது. பயத்தில் கண்களை இறுக மூடி, அவன் மார்பில் சாய்ந்திருந்தாள்.
“நிலா! நான் இருக்கேன்! பயப்படாதே!” அவனின் குரல் நெருக்கமாய் அவளின் செவிக்குள் நுழைய, அத்தனை நெருக்கத்தில் அவனின் வாசம் அவள் நாசிக்குள் நுழைந்தது. அவனின் மூச்சுக்காற்றின் நெருக்கத்தில், நிதர்சனம் உரைக்க, சட்டென அவனிலிருந்து விலகினாள்.
“ஹேய்! எதுக்கு இவ்வளவு அவசரம்?” அவளின் வேகம் கண்டு பதறி, அவனே அவளிலிருந்து விலகியிருந்தான்.
“ஸாரி.. ஸாரி.. தெரியாமல்!” வார்த்தைகள் பிடிபடாமல் தடுமாறினாள் அவள்.
“டீச்சரம்மாவுக்கு எதுக்கு இவ்வளவு பயம்? பயம் என்னைப் பார்த்தா? இல்லை பைக்கை பார்த்தா?!” அவளை உற்றுப்பார்த்துக் கேள்வி கேட்டான் அவன்.
“நீங்க கிளம்பலையா? உங்களுக்கு வேலை இல்லையா?” பதில் சொல்லாது கேள்வி கேட்டவளை புன்னகையுடன் பார்த்தான். நிலா அவன் வாழ்க்கைக்குள் வந்த பிறகு, சிரிக்கவே யோசிப்பவன், அடிக்கடி சிரிக்கிறான். எல்லாம் அவனவள் செய்த மாயமோ என்னவோ?
“ம்ம்ம்! வேலையெல்லாம் இருக்கு தான்! உன்னைப் பார்த்தால், எல்லாம் மறந்துடுதே.. நான் என்ன செய்யட்டும்?” என அவன் முன்னே நடக்க, அவனின் பாத தடம் பற்றிப் பின்னால் நடந்தாள் அழகுநிலா.
“நான் என்ன செஞ்சேன் உங்களை? என்னைச் சொல்றீங்க?” அவனுடன் நடந்தபடியே அவள் பேசிக் கொண்டே வர,
“நீ தான் நிலா எல்லாம் செய்ற! இங்கே உள்ளுக்குள்ளே ஏதோ மேஜிக் பண்ணுற!” மார்பைத் தொட்டுச் சொன்னவனை அண்ணாந்து பார்த்தாள் அவள்.
” ஏன் எனக்கு உன்னை இவ்வளவு பிடிக்குதுன்னு எனக்குச் சொல்லத் தெரியலை. முதன்முதலில் உன்னை ஃபோட்டோவில் தான் பார்தேன். உன்னைப் பிடிக்கலைன்னு சொல்லணும்ன்னு தான் உன் வீட்டுக்கு லேட்டா வந்தேன். ஆனால், அன்னைக்கு நீ ஜன்னல் வழியே என்னைப் பார்த்தியே, பாதி முகம் மட்டும் தெரிய, கொஞ்சம் குழப்பம், கொஞ்சம் சிரிப்பு எல்லாம் சேர்ந்த உன் முகம், கல்வெட்டா உள்ளுக்குள்ளே பதிஞ்சு போச்சு. நான் இப்படியெல்லாம் பேசுவேனான்னு எனக்கே தெரியலை! நீ என்னைப் பேச வைக்கிற! சிரிக்க வைக்கிற.. என்னமோ பண்ணிட்ட போ!”
இதயத்தைத் தொட்ட நிமித்தமாய் அவன் சொன்ன சங்கதியில் ஸ்தம்பித்து நின்றாள் அழகுநிலா.
பிரபஞ்சமே ஒருநொடி நின்றதைப் போல் உணர்ந்தவள், கோயிலின் மணியோசையில் இயல்புக்கு மீண்டாள்.
“நீங்க என்னைப் பார்க்கலைன்னு நினைச்சேன்.!”
“உன்னைப் பார்க்கும் வரை நான் எப்படி இருந்தேன்னு எனக்குத் தெரியலை. ஆனால் உன்னைப் பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கு நான் உன்னைத் தவிர வேற எதையுமே பார்க்கலை!” என நிமிடத்திற்கு நிமிடம் அவளைத் தள்ளாடவும், தடுமாறவும் வைப்பவனிடம் அவளால் பதில் பேசவே முடியவில்லை.
“எனக்கு உங்களை மாதிரியெல்லாம் பேசத் தெரியாது!” என அவள் சொல்ல,
“உனக்குத் தெரிஞ்சதை பேசு!” அதற்கும் பதில் வைத்திருந்தான் அவன்.
“எனக்குப் பயமா இருக்கு!”
“ஏன்?”
“எனக்கு உங்களைப் பிடிச்சுடுமோன்னு ரொம்பப் பயமா இருக்கு. உங்களுக்கு என் சூழ்நிலை முழுசா தெரியாது!” என அவள் சொல்ல,
“இப்போ வரை என்னை உனக்குப் பிடிக்கலை, அப்படித்தானே? உன் வாய் மட்டும் தான் என்னைப் பிடிக்கலைன்னு சொல்லுது! ஆனால் செயல் வேற மாதிரி இருக்கே?” என அவன் சொல்ல புரியாமல் பார்த்தாள் அழகுநிலா. அவளின் கரம் அவன் கரத்தோடு பிணைந்திருந்தது. அவளின் கைப்பை அவனிடம் அடைக்கலமாகியிருந்து. பட்டென அவன் கரத்தினை உருவிக் கொண்டாள்.
இதெல்லாம் எப்போது நடந்தது.? அவளுக்கே புரியவில்லை.
“பிடிக்காதவங்களோட தான் கைக்கோர்த்து நடப்பீங்களா டீச்சரம்மா?”
அவன் கேட்க, இது எப்படி நடந்தது என யோசித்துப் பார்த்தாள்.
மணியோசையின் சத்தத்தில் இயல்புக்கு மீண்டதும், அவன் முன்னால் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து, எதேச்சையாக ஓடிப்போய்க் கையைக் கோர்த்ததும், அவளின் கைப்பை தவறி விழ, அவன் கையிலெடுத்ததும் மங்கலாய் மனத்திரையில் ஓடியது.
“இல்லை.. நான் அது வந்து.. உங்க கிட்டே நான் ஏன் இப்படி நடந்துக்கிறேன்? எனக்கே புரியலை! நீங்க ஆசையை வளர்த்துக்காதீங்க! எங்க வீட்டில் இன்னும் எந்த முடிவும் எடுக்கலை! அப்பறம் ரொம்பச் சங்கடமாகிரும்!” என அவள் சொல்லிக் கொண்டிருக்க,
“நம்ம கல்யாணம் நடக்கும் நிலா! நான் நடத்துவேன். உன் மாமா மட்டுமில்லை, எந்தக் கொம்பனாலும் என்கிட்டே இருந்து உன்னைப் பிரிக்க முடியது.” எனச் சொன்னவனைப் பார்த்து ஆச்சரியத்தில் விழி விரித்தாள் அழகுநிலா.
அதிவீரன், அன்று இரவு சொன்ன போதே, கதிரவனைப் பற்றிய அனைத்து விபரங்களையும் சேகரித்திருந்தான். ஆனால், அழகுநிலாவின் மனதில் என்ன இருக்கிறது? என்பதைத் தான் அவன் தெரிந்து கொள்ள வேண்டுமென நினைத்தான். அவன் கரத்தோடு அவள் கரம் கோர்த்ததிலேயே அவள் மனம் அவனுக்குப் புரிந்துவிட, உறுதியான முடிவை எடுத்திருந்தான் அதிவீரன்.
“முதலில் உங்க மனசை நீங்க புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க டீச்சரம்மா! உங்க மனசு என்னைத் தான் தேடுது.!” என அவன் சொல்ல, அழகாய் இதழ்விரித்துச் சிரித்தாள் அழகுநிலா.
அவள் சிரித்த அந்த நொடி, அதிவீரன் ஏனோ நிம்மதியாய் உணர்ந்தான்.
“இப்படிச் சிரிச்சா… நான் சாதாரணமா இருக்க முடியாது டீச்சரம்மா!”அவன் மெதுவாய்ச் சொன்னான்.
“நீங்க என்கிட்டே சாதாரணமாகத்தான் பேசுறீங்க!” விளையாட்டாகவே பதில் சொன்னாள் அவள். அவள் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.அவன் அவளுக்குச் சமமாக மெதுவாக நடந்தான்.
“நான் ஒரு கேள்வி கேட்கலாமா?”
“கேள்யாத்தேன் கேப்பீகளோ?”அவள் கண்களைப் பெரிதாக்கினாள். அந்தக் கண்களுக்குள் அவன் தொலைந்தான்.
“என்னைப் பார்த்தால் நிஜமாவே உனக்குப் பயமா இருக்கா? நீயே வந்து கையைக் கோர்த்துக்கிற! சட்டுன்னு இழுத்துக்கிற! நொடிக்கு நொடி என்னைக் குழம்ப வைக்கிற நிலா!” அந்தக் கேள்வி அவளின் நடையைச் சட்டென நிறுத்தியது.
“பயமாதேன் இருக்கு!” அவள் மெதுவாய் சொன்னாள். அவன் முகம் சற்றே இறுகியது. வேகமாய் அவளுக்கு முன்னே நடந்தான்.
“ஆனா..” அவளே காற்புள்ளியிட்டு தொடர்ந்தாள். அவன் திரும்பிப் பார்த்தான்.
“அந்தப் பயம் உங்களைப் பார்த்து இல்ல, உங்களோட அண்மை எனக்குப் பிடிச்சுடுமோன்னு பயம். உங்களோட ஒவ்வொரு செயலும் காரணமே இல்லாமல் எனக்குப் பிடிக்குது. மொத்தமா பிடிச்சுடுமோ? நான் ஆசைப்பட்டு ஒருவேளை அது நடக்காமல் போய்ட்டா?” அவன் நின்ற இடத்திலே உறைந்து போனான்.
“நிலா!” பட்டைவிட மென்மையாய் வருடியது அவன் குரல்.
“நீ என்னை வெட்கப்பட வைக்கிற. நீ ம்ம்ன்னு சொன்னா மட்டும் போதும்! உன்னை நான் எனக்குள்ளே பதுக்கி வச்சுப்பேன்.!” லேசான நாணம் அவனிடம் எட்டிப்பார்த்தது. அதற்குக் கம்பீர முலாம் பூசி தோரணையாய் நிமிர்ந்து நின்றான் அவன். அவன் செய்கைளில் அவள் மெதுவாய் சிரித்தாள்.
“நான் எதுவும் பண்ணல. நீங்கதான் அதிகமா யோசிக்கிறீங்க. போலீஸ்காரரே!”அவன் அவள் முன்னால் நின்று வழியை மறைத்தான்.
“கீர்த்தனா ரொம்ப நேரமா காத்துக் கிடக்கா! நான் போவணும் வழியை விடுங்க! நான் இங்கண இன்னும் கொஞ்ச நேரம் நின்னேன்.. நானே மனசில் இருக்கிற அம்புட்டையும் உளறிருவேன்.!” என அவள் சொல்ல சத்தமாய்ச் சிரித்திருந்தான் அவன்.
“என் வாழ்க்கை முழுக்கக் கூட இருக்கணும்னு நான் நினைக்கிற பொண்ணு நீ மட்டும் தான் நிலா! என்னோட வானத்தின் நிலா.”அவள் இதயம் மீண்டும் தாளம் தப்பியது.
“பேசியே மயக்குறீங்க போலீஸ்காரரே! பேசாமல் காதல் வசனம் எழுத சினிமாக்குப் போலாம் நீங்க!”
“பொண்டாட்டி சொல்லி கேட்காமலா? வசனம் எழுதிட்டா போச்சு!” எனப் பதில் தந்தான் அவன்.
“நிஜமாவே என்னை உங்களுக்கு அம்புட்டு பிடிக்குமா?” மீண்டும் அவளே கேள்வி கேட்டாள்.
“இப்போவெல்லாம் எதுவும் சொல்லமாட்டேன். என்னை நம்பி வா! வாழ்ந்துக் காட்டறேன்.!” அவன் சொல்ல, மௌனம் சுமந்து நிற்பது அவள் முறையானது.
“என்னோட சூழ்நிலை உங்களுக்குத் தெரியாது!” மீண்டும் அவள் சொல்ல,
“தெரியாம இருந்தால் தெரிஞ்சுக்கறேன். பிரச்சனை இருந்தால் சரி பண்ணறேன். ஆனால் உன்னை விட்டுடறது மட்டும் என்னால் முடியாது!.” அவன் வார்த்தைகளில் தெரிந்த உறுதியில், அவள் தலையை உயர்த்தி அவன் கண்களை நேராகப் பார்த்தாள். அந்தப் பார்வையில் இப்போது தயக்கம் துளியும் இல்லை.
“நீங்க இம்புட்டு நம்பிக்கையா பேசுறது,எனக்குக் கொஞ்சம் தைரியமாத்தேன் இருக்கு.!” அவன் மீதான பிடித்தம் காதலாக மாறிவிடுமோ என்ற தடுமாற்றம் அவள் குரலில் தெரிந்தது.
அவன் மெதுவாய் அவள் கரத்தினைத் தேடினான். இந்த முறை அவள் பின்னுக்கு இழுக்கவில்லை. தன் கரத்தினை அவன் கரத்தோடு விரும்பியே கோர்த்தாள் அழகுநிலா. அவன் கேட்காமலே அவளே அனுமதி தந்தாள்.
“எனக்கு உங்களைப் பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்.!”அவள் இப்போது தெளிவாகச் சொன்னாள். கோர்த்திருந்த கரத்தினில் அழுத்தம் தந்தான் அவன்.
கோவிலின் மணி மீண்டும் ஒலித்தது. கோவில் மணியோசையை உள்வாங்கி இருவரும் அமைதியாய் நின்றனர்.
இருவரின் மனதிலும் இனம் புரியா ஏதொவொரு உணர்வு. பெயரிடப்படாத உணர்வில், அவன் மீதான நம்பிக்கையில், அவன் கரத்தோடு கரம் கோர்த்து அவள் நின்றிருக்க,
“அழகி!” ரௌத்திரமான அந்தக் குரலில் பயத்துடன் திரும்பிப் பார்த்தாள் அழகுநிலா. கதிரவன் தான் குரல் வந்த திசையில் நின்றிருந்தான்.
“மாமா!” நடுக்கத்துடன் அவள் இதழ்கள் உச்சரிக்க,
“இவன் கூட ஊர் சுத்துறதுக்குத்தேன் என்னைய வேணாமுன்னு சொன்னியா? கையைக் கோர்த்துக் கனா கண்டுக்கிட்டு நிற்கிற.?” என அவன் நக்கலாய் கேட்க, அதிவீரனிடமிருந்து விலகி நின்றாள் அவள்.
“நிலா! நான் இருக்கேன்!” அவள் செவிக்குள் சொன்னவன், அவளை இழுத்து தன் கை வளைவிற்குள் வைத்துக் கொண்டான்.
“பார்ரா! யார் வீட்டு புள்ளைக்கு யாரு தைரியம் சொல்றது. அவ எங்க வீட்டுப் பொண்ணு! உனக்குப் பொண்ணும் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது! ஒழுங்கா போயிரு!” என ஆக்ரோஷமாய் உறுமினான் கதிரவன்.
“இந்தாரு மாமா! நீ முதலில் போ! நான்தேன் பஞ்சாயத்திலேயே தெளிவா சொல்லிப்புட்டேனே? அப்பறமும் ஏன் இப்படிச் செய்ற?!” கதிரவனுக்கும், அதிவீரனுக்கும் குறுக்கே வந்து நின்றிருந்தாள் அழகுநிலா.
“பஞ்சாயத்தில் சொல்லிப்புட்டா நாங்க அப்படியே விட்டுருவோமா? எவஞ்சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். உன்னை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன்!” அழகுநிலாவின் கரத்தினைப் பிடிக்க, வந்த கதிரவனின் கரத்தை குறுக்கே புகுந்து பிடித்திருந்தான் அதிவீரன்.
அதிவீரனின் இரும்பு பிடிக்குள் கதிரவனின் கரம் கழன்றுவிழும் போல் வலித்தது.
“கையை விட்றா! போலீஸ்காரன்னு என்கிட்டேயே காட்டுறியா? அழகி என் அக்கா மவ! அவள் மேல் எனக்கு முழு உரிமை இருக்கு.!” எனச் சீறினான் கதிரவன்.
“உன் விரல் நுனி நிலா மேலே பட்டுச்சு! ,உன் உயிர் உன்கிட்டே இருக்காது!” என்ற அதிவீரனின் கர்ஜனையான குரலில், உள்ளம் நடுங்கினாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாத கதிரவனோ,
“அதைச் சொல்ல நீ யாரு டா?” தெனாவட்டாய் கேட்டான்.
“அவளோட வாழ்க்கை முழுசும் பயணிக்கப் போறவன்!” என்ற அதிவீரனின் வார்த்தைகள் கதிரவனின் கோபத்தை இன்னும் கொஞ்சம் தூண்டியது.
“அழகி! நான் சொல்றதைக் கேளு! அவன்கிட்டே இருந்து விலகு! அவன் உனக்குத் தேவையில்லை!” என்றவன் அதிவீரனின் பிடியிலிருந்த கரத்தை உதறியிருந்தான்.
அழகுநிலா இருவருக்கும் நடுவே நின்றாள். ஒருபுறம் கோபமாய் நிற்கும் கதிரவன், இன்னொருபுறம், அவளுக்குப் பிடித்த அதிவீரன். இப்படியொரு சூழ்நிலை வரக் கூடாதென்பதற்காகத் தானே, அவள் மனதிலிருந்த எதையுமே வெளிக்காட்டாமல் இருந்தாள்.
“நான் ஒண்ணும் குழந்தை இல்லை மாமா! நான் என்ன செய்றேன்னு எனக்குத் தெரியும்!” என அவள் சொன்னதும், அதிவீரனின் விழிகளில் திடீர் பளிச்சிடல்.
“அவன் என்னை விட உசத்தியா அழகி?”
“யார் உசத்திங்கிறது இங்கே விஷயம் இல்லை மாமா! எனக்கு யாரைப் பிடிச்சிருக்கு அப்படிங்கிறது தான் விஷயம்! எனக்கு அதிவீரனைத் தான் பிடிச்சிருக்கு!” அவள் சொன்ன வார்த்தைகள் கதிரவனின் இதயத்தில் இடியாய் இறங்கியது.
“அவன்தேன் உசத்தின்னு சொல்லாமல் சொல்றியா.?” அவன் கண்கள் இரத்தமெனச் சிவந்திருந்தது. அழகுநிலா கதிரவனின் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. அவளின் அமைதி கதிரவனை இன்னும் கொஞ்சம் ஆக்ரோஷமாக்கியது.
“அந்தப் போலீஸ்காரன் உன்னைப் பொம்மையாய் ஆட்டி வைக்கிறான் அழகி.!”
“இல்லை மாமா! இது நானாக எடுத்த முடிவுதேன்.! ஏன் மாமா நீ நிதர்சனத்தைப் புரிஞ்சுக்க மாட்டேங்குறே! என்னால் உன்னை என் வாழ்க்கைகக்குள்ளே அனுமதிக்க முடியாது. அதிவீரன் இல்லைன்னாலும் யாரோ ஒருத்தனை நான் கல்யாணம் பண்ணத்தானே செய்யணும்? நீ இதெல்லாம் எதுக்காகச் செய்ற? எனக்குப் புரியவே இல்லை!” அவள் குரல் உடைந்தது.
அழகுநிலாவின் உடைந்த குரல், கதிரவனை ஏதோ செய்தது. அவள் சொன்ன வார்த்தைகள் கதிரவனின் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது.
“என்னால உன்னை என் வாழ்க்கைக்குள்ளே அனுமதிக்க முடியாது மாமா!”
அவளின் வார்த்தைகளில், அவன் ஆண்டுகளாகக் கட்டியிருந்த உரிமை கோட்டையைத் துகள் துகளாய் நொறுங்கி தரைமட்டமானது.
அவளின் திருமணப் பேச்சு எடுத்ததிலிருந்தே அவள் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறாள். ஆனால் அதிவீரனின் முன்னால் சொன்னது அவளுக்குப் பெருத்த அவமானமாக இருந்தது.
கதிரவன் அவளைப் பார்த்தான். அவன் பார்வையில், கோபமும் அவமானமும் மேலோங்கியிருந்தது. ஆனால் அதைவிட அதிகமாய்த் தோல்வி.
“நீ இப்படிப் பேசுவியேன்னு நினைக்கல அழகி! என்னை அவன் கிட்டே விட்டு கொடுத்துட்டல்ல? சின்ன வயசிலிருந்து உன்னைத் தூக்கி வளர்த்தவன் நான். ஒருகாலத்தில் உனக்கு எல்லாமுமாய் நான்தேன் இருந்தேன்.!”
அவன் குரல் இப்போது ரௌத்திரமில்லை. மாறாகக் கரகரப்பை சுமந்திருந்தது.
“நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன் மாமா! அது நான் உன்மேலே வச்சிருந்த பாசம் மட்டுந்தேன். அதுக்காக நன்றி வேணும்ன்னா சொல்லலாம். உன்னைக் கல்யாணமெல்லாம் பண்ணிக்க முடியாது மாமா!”
அதிவீரன் மார்பின் குறுக்கே கைக்கட்டிய படி, வேடிக்கை மட்டும் பார்த்தான்.
“நான் உன்னைக் காப்பாத்தணும்னு தான் நினைச்சேன்!”கதிரவனின் வார்த்தைகள் சற்றே சிதறின.
“காப்பாத்துறதுக்கும் கட்டிப்போடுறதுக்கும் வித்தியாசம் இருக்கு மாமா!”அழகுநிலாவின் குரலில் மென்மை இருந்தாலும், வார்த்தைகளில் அழுத்தம் இருந்தது.
“வெறும் ரெண்டு நாள் பழகினவனுக்காக நீ இம்புட்டு பேசுறியா அழகி?”
“விருப்பமும் பிடித்தமும் வர்ரதுக்கு விநாடிகள் போதும் யுகங்கள் தேவையில்லை!” அவளுக்காக அதிவீரன் பதில் சொன்னான்.
அவள் அவன் கண்களை ஊடுருவிப் பார்த்தாள். அவள் பார்வைக்கான அர்த்தம் அவனுக்குப் புரிந்தது. இருவரும் பேசிக்கொள்ளவில்லை. இப்போது அவனுக்கு எதிரே அவள் நின்றிருந்தாள். விழிகள் பேசிக்கொண்டன. மௌனங்கள் மொழியாகின. அவர்கள் இருவருக்கும் இடையேயான இடைவெளி நேசத்தால் நிரம்பியிருந்தது.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நிலா வாவ். போலீஸ் பேசியே சொல்ல வைச்சுட்டான்.