Loading

நேசம்-10

அழகுநிலாவின் உடலும் மனமும் ஒருமாதியாய்ச் சோர்ந்து போயிருந்தது. தன்னைச் சுற்றி நடப்பவைகளைப் பார்த்து ஒருவித வெறுப்புச் சூழ்ந்திருந்தது அவளுக்குள்.

 

ஆண்டுவிழாவின் காரணமாக இரண்டுநாள் பள்ளி விடுப்பு விடப்பட்டிருக்க, பொழுதை நெட்டித் தள்ள முடியாமல் சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தாள். மனதை சிந்தனை மேகங்கள் ஆக்கிரமித்திருந்தது.

‘என்னைச் சுத்தி நடக்கிற எதற்கும் நான் காரணமில்லையே? நான் என்ன தப்பு செஞ்சேன்? ஒருவேளை கதிர் மாமாவுக்கும் எனக்கும் கல்யாணம்ன்னு பேசும் போது, நான் மறுத்து ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கணுமோ?’ என யோசித்துக் கொண்டிருந்த அவள் மனதில் கொஞ்சம் கொஞ்சமாய்க் கதிரவன் மேலிருந்த மரியாதை மறைந்து போய் வெறுப்பின் நிழல் விழத் துவங்கியிருந்தது.

சிறுவயதிலிருந்தே அழகு நிலாவிற்கு, தாய் மாமன் என்பவன், தந்தைக்குப் பின், தன்னை நேசிக்கும் நண்பனாகத் தான் தெரிந்தான். கதிரவனுக்கும் அழகுநிலாவிற்கும் வயது வித்தியாசம் அதிகமிருந்தாலும், ஒருமையில் அழைக்கும் அளவிற்கு, அவளுக்கு அவனைப் பிடிக்கும்.

 

அழகுநிலாவின் உடன் பிறந்தவனான இனியனிடம் கூட அவள் இலகுவாகப் பேசி பழகியதில்லை. ஆனால் கதிரவனிடம் அவள் கொஞ்சம் நெருக்கம் தான்.

அவளைத் தினமும் பள்ளியில், சென்று விடுவதும் கூட்டி வருவதும், அவளுக்குப் பிடித்த தின்பண்டங்களைச் செல்விக்குத் தெரியாமல் வாங்கித் தருவதாக இருக்கட்டும், யாராவது வம்பு செய்தால் மிரட்டுவதாக இருக்கட்டும், அவள் குறும்பு செய்து செல்வியிடம் மாட்டிக்கொள்ளும் தருணங்களாக இருக்கட்டும், அவளுக்கு முன் பாதுகவலனாய் நண்பனாய் நின்றிருந்தவன் கதிரவன் தான்.

கதிரவன் பக்கத்தில் இருப்பதாலேயே அழகுநிலா இதுவரை எதற்கும், யாருக்காகவும் பயந்ததே இல்லை. அவள் கல்லூரி படிக்கும் வரை கதிரவனுக்கும், அவளுக்குமான உறவு இயல்பான ஒன்றாகத்தான் இருந்தது. அவளின் தாய்வழிப் பாட்டியான சின்னத்தாய் கிளப்பிவிட்ட கல்யாண பூகம்பம் தான் இப்போது பஞ்சாயத்துவரை கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது.

ஆனால் இப்போதைய சூழ்நிலையோ அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. கதிரவனைப் பார்த்தே அவளுக்குப் பயமாக இருந்தது. அவனிடம் இயல்பாகப் பேச அவளால் முடியவில்லை. கதிரவனுக்கு இப்படியெல்லாம் பேசத் தெரியும் எனத் தெரிந்தபின் நிரம்பவே உடைந்துவிட்டாள் அழகுநிலா. எல்லாவற்றிற்கும் மேலாக, அவனின் தீய பழக்கங்கள், கெட்ட சகவாசங்கள் அவனிடமிருந்து அவளைச் சுத்தமாய் விலக்கியிருந்தது.

“பள்ளிக்கூடம் இல்லைன்னா இப்படி மொட்டு மொட்டுன்னு உட்கார்ந்திருக்கணுமா? இங்கண வந்து எதாவது சோலியைப் பாரேன்டி!”

“என்னத்தைச் செய்றது ரொம்பச் சடவா இருக்கும்மா! ஏம்மா இந்தக் கதிரு மாமா இப்படிச் செய்யுது?”

“அவனுக்குக் கிறுக்கு பிடிச்சுக்கிச்சு டி! நல்லா இருந்த பய, என்ன நேரங்காலமோ, கண்டவன் கூடச் சேர்ந்துக்கிட்டு, கண்டதையும் பேசிக்கிட்டு திரியறான்.! கூடப் பொறந்த தம்பின்னு சோத்தைப் போட்டதுக்குதேன், தேரை இழுத்துத் தெருவில் விட்டுப்புட்டானே உன் மாமன்காரன்.! இன்னும் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கானோ தெரியலை! உங்க அப்பா வேற, அவன் பஞ்சாயத்தில் நிறுத்துனதுக்கு என்னைத்தேன் வைறாரு. உன் மாமன்காரனும் என்னைத்தேன் கேட்குறியான். எல்லாத்துக்கும் நடுவில் நான்தேன் மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்.!” மன ஆற்றாமையை வார்த்தைகளாய்க் கொட்டியிருந்தார் செல்வி.

“நீதேன் மாமாகிட்டே பேசி பாரேன்ம்மா! பொறுமையாய்ச் சொன்னால் மாமா கேட்கும் தானே?”

“அவந்தானே? நல்லா கேட்பான் டி! வீட்டை எழுதிக் கொடு, கடையை எழுதிக் கொடுன்னு நிலையா நிற்கிறவன், பொறுமையாய்ச் சொன்னதும் கேட்டுருவான் பாரு! உனக்கொரு கல்யாணத்தைப் பண்ணும் மட்டும், நானும் உங்க அப்பனும் என்ன பாடுபடப் போறோமோ?” எனக் கவலையாய் செல்வி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அழகுநிலாவின் அலைபேசி இடையூறாய் அலறியது.கீர்த்தனா தான் அழைத்திருந்தாள்.

“என்னடி ஃபோனெல்லாம் போட்டுருக்க? அதிசயமா இருக்கு!”

“வீட்டிலே இருக்கப் பொழுதே போக மாட்டேங்குது டி! வர்ரியா எங்கேயாவது போய்ட்டு வருவோம்!”

“எங்குட்டுப் போறது டி?”

“சும்மா புது மண்டபம் பக்கமா சுத்திட்டு, அப்படியே மீனாட்சியைப் பார்த்துட்டு வருவோம்!”

“கோயிலுக்கா?”

“என்னடி கோயிலுக்கான்னு இழுக்குற? கோயிலுக்கு வேணாம்னா விடு! அங்கண இருக்கிற கடை கண்ணியைச் சுத்திப்புட்டு, எதையாவது வாங்கித் தின்னுப்புட்டு வருவோம். வீட்டில் உட்கார்ந்து விட்டத்தைப் பார்த்துட்டு இருக்கிறதுக்கு, இது எம்புட்டோ பரவாயில்லை. நீ கிளம்பி இரு, நான் வீட்டில் வந்து உன்னைக் கூப்பிட்டுக்கிறேன்.!”

“நீ எப்படிடி வருவ?” அழகுநிலாவின் குரல் காற்றில் தான் கரைந்தது. அதற்குள் அழைப்பைத் துண்டித்திருந்தாள் கீர்த்தனா.

*******

காக்கி உடையை அணியாமல், வெள்ளை சட்டையும் காக்கி பேண்ட்டுமாய் வந்து நின்ற மகனை, குழப்பமாய்ப் பார்த்தார் மாதவி.

‘இன்னைக்கு ட்யூட்டி இல்லையோ? கலர் ட்ரெஸ்ஸில் வந்துருக்கான். கேட்டால் பதில் சொல்லுவானா தெரியலை? சின்னப் புள்ளையிலிருந்து, இப்போ வரை, இந்த யூனிபார்ம் துவைக்கிற வேலை மட்டும் ஓயவே மாட்டேங்குது. இன்னைக்கு ஒருநாள், யூனிஃபார்ம் துவைக்கிற வேலையிலிருந்து விடுதலை!’ எனத் தனக்குத் தானே பேசிக் கொண்டார் மாதவி.

‘உன் மயன் வீட்டுக்கு வந்தே ஒருவாரம் கூட ஆகலை.. என்னமோ வருஷக்கணக்கா துவைச்ச மாதிரி சடைச்சுக்கிற?’ எனக் கேட்ட மனசாட்சியைத் தலையில் கொட்டி அடைக்கி வைத்தார் மாதவி. அதற்கு அதிவீரன் கூடத்திற்குள் நுழைந்திருந்தான்.

“அதி!” பணிக்குத் தயாராகி வெளியே வந்த மகனை அழைத்தார் மாதவி. அவருக்கு அவனிடம் பேசவே ஒருமாதிரியாக இருந்தது. எந்த விஷயமாக இருந்தாலும், இப்படிக் கோபப்பட்டுத் தன் இயல்பைத் தொலைத்து பேசியதே இல்லை.

 

ஏதொவொரு மனநிலையில் மகனிடம் அப்படிப் பேசிவிட்டார். யாருக்கும் எல்லா நாளும் ஒரே மாதிரியான மனநிலை இருப்பதில்லை. ஆனால் இப்போது, அவனிடம் இயல்பாகப் பேச முடியாமல், தயக்கம் வந்து ஒட்டிக் கொண்டிருந்தது.

“சொல்லுங்கம்மா!”

“ம்மா! என்ன ஆச்சு?” என அதிவீரன் அழைத்தும் யோசனையில் இருந்தவரை,

“ம்மா! நின்னுட்டே கனவு காணுறீங்களா? காலேஜுக்கு டைம் ஆச்சும்மா!” என்ற ஹரீஷின் குரல் இயல்பிற்கு மீட்டுக் கொண்டு வந்தது.

“அடேய்! கரீஷு, உன் அண்ணனை எங்கே டா?” என அவசரமாய் மூத்த மகனைத் தேடினார் மாதவி.

“அந்தக் காலத்து ஹீரோயின் மாதிரி நின்ன இடத்திலேயே கனவு கண்டீங்கன்னா, அவன் கிளம்பிட்டான்!” எனச் சொல்லவும், வாசலை நோக்கி ஓடிப் போனார்.

வாசலில், அதிவீரன் ஜீப்பில் ஏறப் போன நேரம், மகனின் முன் சென்று நின்றார். அவன் கேள்வியாக அன்னையின் முகத்தை நோக்க,

“நேத்து ஏதோ நெனைப்பில், உன் மனசில் என்ன இருக்குன்னு புரியாமல் ஏதேதோ பேசிட்டேன்.!” என அவர் சொல்ல,

“விடுங்கம்மா! நீங்க என்னதான் பேசியிருந்தாலும், என் முடிவை நான் மாத்திக்க மாட்டேன். ஏன்னா இது என் வாழ்க்கை! நீங்க சம்மதிச்சால், ஊரறிய கல்யாணம் நடக்கும். இல்லைன்னா, அதை எப்படி நடத்திக்கணும்ன்னு எனக்குத் தெரியும். என்ன நடந்தாலும், யார் என்ன நினைச்சாலும், நிலா என் மனைவியாகுறதைத் தடுக்க முடியாது.” உணர்ச்சிகள் வெளிப்படாத அழுத்தமான குரலில் சொன்னவன், ஜீப்பில் ஏறியிருந்தான்.

“அவசரப்பட்டு எதுவும் செஞ்சுறாத சாமி! பொண்ணு வீட்டில் உங்க அப்பாவைப் பேசச் சொல்றேன்! சீக்கிரம் நாள் குறிச்சுப்புடுவோம்! சொந்தக்காரய்ங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியலை அதி! ஒரு பொண்ணு பார்க்கப் போனதுக்கே அம்புட்டு அக்கப்போரா இருக்கு.!” என மாதவி தன்னைப்போல் புலம்ப, இதழோரம் துடித்த சிரிப்புடன் விடைபெற்றுக் கிளம்பினான் அதிவீரன்.

ஜீப்பில் ஏறியமர்ந்ததும், அலைபேசி திரையை உயிர்ப்பித்து யாருக்கோ அழைத்தான்.

“சுதீஷ்! நான் அதிவீரன் பேசுறேன். நான் கேட்டிருந்தேனே, அந்த நம்பர்ஸோட டீட்டெய்ல்ஸ் எடுக்க முடிஞ்சுதா? இஸ் தேர் எனி லீட்?” எனக் கேட்டான் அவன்.

“இதில் லீட் கிடைக்குமா என்னன்னு எனக்குத் தெரியயலை சார்! பட், நீங்க சொன்ன டீட்டெய்ல்ஸ் நான் எடுத்துட்டேன். நீங்க கொடுத்த மூணு நம்பருமே மதுரைக்குள்ளே தான் ட்ராவல் ஆகிட்டு இருக்கு. வெளியில் எங்கேயும் போன மாதிரி தெரியலை சார்.!”

“குட்! நான் எக்ஸ்பெக்ட் பண்ணினது தான். இப்போ லைவ் லொக்கேஷன் எங்கே இருக்குன்னு பார்த்து சொல்ல முடியுமா சுதீஷ்?” என அதிவீரன் கேட்க,

“பிரதீப்போட நம்பர் ஸ்டேபிளா ஒரே இடத்தில் தான் சார் இருக்கு. பவித்ரா, ஜெயந்தி இவங்க நம்பர் தான் மூவிங்கில் இருக்கு! நான் உங்களுக்கு லொக்கேஷன் டீட்டெய்ல்ஸ் சென்ட் பண்ணுறேன் சார்.!” எனச் சொல்லிவிட்டுச் சுதீஷ் இணைப்பைத் துண்டித்த ஐந்தாவது நிமிடத்தில், அவனுக்குத் தேவையான தகவல்கள்தகவல்கள் அவன் அலைபேசிக்கு வந்து சேர்ந்திருந்தது.

“ஏழுமலை! நான் சொல்ற இடத்துக்குப் போங்க!” என ஓட்டுநரை விரட்டியடி அவன் வந்து சேர்ந்த இடம், மீனாட்சி அம்மன் கோவில் சுற்றுவட்டாரப் பகுதி. அதே பகுதியில் தான் அழகுநிலாவும் கீர்த்தனாவுடன் சுற்றிக் கொண்டிருந்தாள்.

“ஏழுமலை! நீங்க ஜீப்பை ஓரமாக நிறுத்திட்டு, அந்தக் கடையில் ரெண்டு சர்பத் வாங்கிட்டு வாங்க!” எனப் பணித்தவனின் கண்கள், சுற்றுப்புறத்தை உன்னிப்பாய் ஆராய்ந்தது. யார் கண்ணிலும் படாமால் இருக்க, எந்தப்பக்கமாக அவர்கள் வருவார்கள் என அனுமானித்துக் கொஞ்சம் மறைவாகவே நின்று கொண்டிருந்தான்.

“ஏன் சார், அந்தப் பொண்ணையும், அந்தப் பையனையும் பிடிச்சுக் கொடுக்கப் போறீங்களா?” எனத் தயக்கமாகக் கேட்டார் ஏழுமலை.

“வேற என்ன செய்யணும்? அதானே அந்த இராஜேந்திரன் போட்ட டீல்!”

“பாவம் சார் அந்தப் பொண்ணு! இந்தாளு சரியான சாதி வெறி புடிச்சவன் சார், அந்தப் பிள்ளையும், பயலும் கிடைச்சாங்கன்னா கொன்னு போட்டுருவாரு சார். பாவம் பொழைச்சுப் போகட்டும் விட்டுருவோம் சார்!”

“இப்படி ஒவ்வொருத்தருக்கும் பாவம் பார்த்து தான், கிடைக்க வேண்டிய ப்ரமோஷனும் இல்லாமல் போய் இப்படி நிற்கிறேன். யாரையும் பாவம்ன்னு நினைக்காதீங்க ஏழுமலை! நமக்கு நாம பாவம் பார்த்தால் போதும்!” எனச் சொன்னவன்,

“வெயில் இன்னைக்கு அதிகமா இருக்குல்ல?” என்றபடியே கையிலிருந்த சர்பத்தை உறிஞ்சத் துவங்கினான். ஏழுமலையோ, அதிவீரனையே புதிராய் பார்த்தபடி நின்றார்.

“நான் கேள்விப்பட்ட அதிவீரன் நீங்க இல்லை சார்! அவரு வளையாத இரும்பு மாதிரி! நீங்க அப்படி இல்லையே சார்!”

“இரும்பு 1538 டிகிரி செல்ஷியசில் உருகிடும் ஏழுமலை! இந்தப் போலீஸ் டிப்பார்மெண்ட் பொருத்தவரை, நீங்க வளைஞ்சு கொடுக்கிற நாணலா இருக்கணும். நான் நிமிர்ந்தே தான் நிற்பேன்னு இருந்தால், ஒரேடியா உடைஞ்சு போக வேண்டியது தான். இதை நான் இப்போதான் புரிஞ்சுக்கிட்டேன். நீங்களும் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க!” என அவன் பேச, புரியாமல் பார்த்தார் ஏழுமலை.

“என்னமோ சொல்றீங்க! ஆனாலும் எனக்கு ஒண்ணுமே புரியலை சார்!” என அவர் சொல்ல, அவனோ நிதானமாய், அந்த மேஜையில் காலி தம்ளரை வைத்தவன், தாங்கள் பருகிய சர்பத்திற்குப் பணம் கொடுத்துவிட்டு, வந்தான்.

“அது ஒண்ணுமில்லை ஏழுமலை, நாம சினிமாவில் பார்க்கிற போலீஸ்காரனும், நிஜ வாழ்க்கையில் இருக்கிற போலீசும் வேற வேறன்னு சொல்றேன். எதார்த்தம் சில நேரங்களில் ஏத்துக்க முடியாததாக மாறிடுது ஏழுமலை. துப்பாக்கி, அதிகாரம் எவ்லாம் நம்ம கையில் தான் இருக்கிற மாதிரி இருக்கும். ஆனால், நாம யாரை சுடணும்? எப்போ சுடணும்? எங்கே சுடணும் எல்லாத்தையும் நமக்குச் சம்மந்தமே இல்லாத ஒருத்தன் சொல்றதைக் கேட்டு செய்யணும். அதில் சில நேரங்களில் நல்லவங்களும் கூடப் பலியாகலாம்.!” என அவன் பேசியது, சாதாரணக் கடைநிலைக் காவலர் பணியிலிருக்கும், ஏழுமலைக்குப் புரியவில்லை தான்.
ஏழுமலையோ, புரியாமல் தலையைச் சொறிந்தபடி நின்றிருக்க, அதிவீரனிடம் தீடீரென, ஒருவித பதட்டமான பாவம் வெளிப்பட்டது.

“ஏழுமலை! இப்போ நீங்க என்ன செய்றீங்கன்னா, அந்தப் பிரதீப்போட நம்பருக்கு கால் பண்ணி, பவித்ராவோட உயிருக்கு ஆபத்துன்னு சொல்லணும். உங்க ஃபோன்ல இருந்து பேசாதீங்க! கொஞ்சம் தள்ளிப் போய் வேற யார்க்கிட்டேயாவது வாங்கிப் பேசிட்டு வாங்க! முழுசா எதையும் சொல்லிடாதீங்க!” என அதிவீரன் சொல்ல, குழப்பமாய் அவனைப் பார்த்தார் ஏழுமலை.

“பவித்ராவையும், பிரதீப்பையும் சேர்த்தே ஒப்படைக்கிறதாகத் தானே டீல்! செய்றதை சரியா செய்யணுமா இல்லையா?” என அவன் சொல்ல, அவன் சொன்னதைச் செய்வதில் விருப்பம் இல்லாவிட்டாலும், அவன் சொன்படியே முன்பின் தெரியாத யாரோ ஒருவனிடம், மிரட்டி அலைபேசியை வாங்கிப் பேசியவர்,

“இந்த நம்பரிலிருந்து மறுபடியும் ஃபோன் வந்துச்சுன்னா நீ எடுக்கவே கூடாது!” என மிரட்டிவிட்டும் வந்தார்.

“இப்போ என்ன செய்யணும் சார்? ஆனால் நீங்க செய்றது சரியில்லை சார்.!”

“புரியுது ஏழுமலை! ஆனால், சரியானதை மட்டுமே செஞ்சால் டிப்பார்ட்மெண்டில் இருக்க முடியாதே!” எனச் சொன்னவன், தன் அலைபேசியை எடுத்து, இராஜேந்திரனுக்குத் தான் அழைத்தான்.

“சொல்லுய்யா!” என அந்தப்புறமாய்க் கேட்டபடியே அழைப்பை ஏற்றார் இராஜேந்திரன். சார் என்று மரியாதையாக ஆரம்பத்தில் அழைத்துக் கொண்டிருந்த இராஜேந்திரன், சில முறைகளாய் ஒருமையில் அழைப்பது, அவனுக்குக் கோபத்தைத் தூண்டினாலும், அவரை அடித்து வெளுக்க வேண்டுமென ஆத்திரம் மிகுந்தாலும், அமைதியாகப் பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டான் அதிவீரன்.

“என்னய்யா! பதிலே பேசாமல் இருக்க? சொன்ன வேலை என்னாச்சு?”

“கிட்டத்தட்ட முடிஞ்சாச்சு! மீனாட்சி அம்மன் கோயில் வந்தால், உங்க மகளும், மருமகனும் கிடைப்பாங்க! ஆசை தீரக் கொஞ்சிக்கலாம். உங்க கிட்டே அவங்களை ஒப்படைச்சதோட நாம போட்ட டீல் முடியுது.!” தெளிவாகச் சொன்னான் அதிவீரன்.

“டீல் இப்போ ரொம்ப முக்கியமாய்யா? நெசமாவே அந்தப் பரதேசிங்க ரெண்டும் அங்கதேன் இருக்குதுங்களா.?” என உறுதிபடுத்திக்கொள்ளக் கேட்டார் அவர்.

“வந்தால் தெரிஞ்சுடப் போகுது!” எனச் சொன்னவன், அலைபேசி அழைப்பைத் துண்டித்து விட்டு,

“ஏழுமலை கோயிலுக்குப் போய்ட்டு வருவோமா?” என அவன் முன்னே நடக்க, அவன் பின்னே ஓடினார் ஏழுமலை.

“இது அநியாயம் சார்! என் வீட்டிலும் ரெண்டு பொம்பளப் புள்ளைங்க இருக்குதுங்க! இப்படிச் செஞ்சு, பாவத்தைச் சேர்க்காதீங்க சார்!”

“உங்களோட நியாய அநியாயங்களை உங்களோட மட்டுமே வச்சிக்கோங்க ஏழுமலை! எனக்கான நியாயத்தை நான் பெறணும்ன்னா, இது மாதிரி சில விஷயங்களைச் செய்து தான் ஆகணும்.!” உறுதியும் தீர்க்கமும் அவனின் குரலில் தெரிந்தது.
காவலர்கள் என்பதைக் கவனமாக மறைத்து, சாதாரண உடையில் வந்திருந்ததால், யாருடைய பார்வையும் இவர்களின் மேல் விழவில்லை.

 

ஏழுமலைக்கும் முன்னரே சாதாரண உடையில் வரும்படி அறிவுறுத்தியிருந்தான். பிரதீப்பும் பவித்ராவும் மதுரையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்த பின், முன்னதாகவே சில திட்டங்களைச் செயல்படுத்தியிருந்தான் அதிவீரன்.

கோயிலின் கிழக்கு வாசல் வழியாக, ஏழுமலையுடன் உள்ளே நுழைந்தவன், கவனமாய்ச் சுற்றுப்புறத்தை அவதானித்தபடியே ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்தான்.

 

கோயில் முழுதையும் ஒருமுறை சுற்றி வந்தவன், கடைசியாய் அவர்களைக் கண்டுபிடித்திருந்தான்.

 

கல்யாண சுந்தரேஷ்வர் சன்னதியில் அவர்கள் நின்றிருப்பதையும், பிரதீப் பவித்ராவுடன் பற்றமாய்ப் பேசிக் கொண்டிருப்பதையும் கவனித்தபடியே ஓரமாக நின்றிருந்தான்.

“சார்! வேணாம் சார்! இங்கணதேன் இருந்தாங்க! கூட்டத்தில் மிஸ் ஆகிட்டாங்கன்னு அந்த இராஜேந்திரன் கிட்டே சொல்லிருவோம் சார்! அந்தப் பொண்ணு முகத்தைப் பாருங்க சார்! பாவம் சார்!”

“கொஞ்சம் அமைதியாய் இருங்க ஏழுமலை. டென்ஷன் ஆகாதீங்க, பிளட் ப்ரஷர் அதிகமாகிடப் போகுது!” என அவன் சாதாரணமாய்ச் சொல்ல, இயலாமையுடன் நின்றிருந்தார் ஏழுமலை.

‘இவனெல்லாம், ஒரு மனுஷனா.? மனசாட்சி இல்லாதவன்! கொஞ்சம் கூட இரக்கமே இருக்காதா இவனுக்கு? இவனைப் போய் ஆஹா ஓஹோன்னு சொன்னானுங்க!’ என அவர் மனதிற்குள் அதிவீரனை வசைபாடிக் கொண்டிருந்த அதே நேரம், ஆங்காங்கே ஆட்களை நிறுத்திவிட்டு அதிவீரனிடம் வந்திருந்தார் இராஜேந்திரன்.

“எங்கேய்யா அந்தப் பரதேசிங்க?” என அவர் கோபமாய் வினவ,

“எது செய்றதா இருந்தாலும் கோயிலுக்கு வெளியில் வச்சுக்கோங்க! இது மக்கள் புழங்குற இடம். இங்கே எதுவும் நடக்கக் கூடாது!” என அவன் அழுத்தமாய்ச் சொல்ல,

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்! எங்கேன்னு மட்டும் சொல்லுய்யா நீயி!” கோபத்தில் கண்கள் சிவக்க வினவினார் இராஜேந்திரன்.

 

கல்யாண சுந்தரேஷ்வரர் சன்னதியிலிருந்து வெளிவரும் அவர்களைக் கண்ணைக் காட்டிவிட்டு ஓரமாய் நின்று கொண்டான். பவித்ரா மற்றும் பிரதீப்புடன் வரும் தன் மனைவி ஜெயந்தியைப் பார்த்துக் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தார் இராஜேந்திரன்.

இராஜேந்திரனைச் சேர்ந்த ஆள்கள் அத்தனை பேரும், கோபமும் ஆத்திரமுமாக, நிற்க, அவர்களைப் பொறுமையாய் இருக்கும்படி சைகை செய்தார் அவர்.

கல்யாண சுந்தரேஷ்வரர் சன்னதியிலிருந்து வெளியே வந்த பிரதீப், பவித்ரா, ஜெயந்தி மூவரையும் கண் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அதிவீரன்.

“அவங்க வெளியே வரட்டும்” என்ற இராஜேந்திரன், பல்லைக் கடித்து நின்றார்.

“சரிதான்! ஆனா இங்க எந்தப் பிரச்சனையும் வேண்டாம்,” என்று குளிர்ந்த குரலில் சொன்னவன், ஓரமாக நின்று கைப்பேசியைக் காதில் வைத்துக் கொண்டான்.

அதே நேரத்தில்,
பிரதீப்பின் ஃபோன் அதிர்ந்தது. அவன் அலைபேசியின் திரையைப் பார்த்தான்.
அறியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்திருந்தது.

“ஹலோ?”

“பவித்ராவோட உயிருக்கு ஆபத்து. உடனே கோயிலிலிருந்து வெளியேறுங்க. கிழக்கு வாசல் கூட்டமா இருக்கும். தெற்கு வாசல் வழியா போங்க.” பிரதீப்பை வரச் சொன்ன போதே அவர்களைக் காப்பாற்றவும் முடிவு செய்துவிட்டான் அதிவீரன்.

அறிமுகமில்லாத குரல். அழைப்புத் துண்டிக்கப்பட்டது. பிரதீப் சூழ்நிலையைப் புரிந்துக்கொள்ள முயன்றான். பயம் அவன் மென்னியைப் பிடித்தது. அவன் இதயம் அதி வேகமாய்த் துடித்தது.

“என்ன ஆச்சு பிரதீப்?” என்றாள் பவித்ரா.

“இங்க இருந்து கிளம்பணும்,” என்றான் அவன், அவளின் கையை இறுக்கிப் பிடித்தபடி. அதே நேரம் அவர்களை நோக்கி நகர்ந்தார்கள் இராஜேந்திரனின் ஆட்கள்.

அதே நேரம்,

“ஐயோ என் செய்னு! போச்சு! போச்சு! அத்துட்டு ஓடுறான்! அந்தக் களவாணிப் பயலைப் பிடிங்க!” என்ற ஏதோவொரு பெண்ணின் குரலில் கூட்டம் முண்டியடித்து முன்னால் வந்தது.

அதிவீரன் குரல் கர்ஜனையாய் முழங்கியது.
“ஏழுமலை! க்ரௌடை கண்ட்ரோல் பண்ணுங்க! யாரோ ஒரு பெண்ணோட செய்ன் ஸ்னாட்ச்சிங் அட்டம்ப்ட் நடந்திருக்கு!”
கோயில் வளாகத்தில் குழப்பம் பரவியது.

மக்கள் தள்ளுமுள்ளில் நெரிசல் அதிகமாகி, பிரதான வாயில் வரை கூட்டம் அடர்த்தியாய் நின்றது.

“ஏன் இன்னும் நிக்கிறீங்க? போங்கடா!” எனக் கத்தினார் இராஜேந்திரன்.

ஆனால் அதிவீரன் அவர்களுக்கு முன்னே நின்றிருந்தான்.

“சார், உள்ளே கலவரம் வேண்டாம் சொன்னேனே. சிசிடிவி இருக்கு. பிரச்சனை பெரியதாக மாறிடும்!” என்றான் மெதுவாய்.

“நீ ஒதுங்கி நில்லுய்யா! அவிங்களைக் காட்டினதோட உன் டீல் முடிஞ்சுது.!” என்றார் அவர்.

“நான் ஒதுங்க முடியாது,” அவன் குரல் இப்போது உறுதியானது.

“இது கோயில். வெளியில் போய் என்ன வேணும்ன்னாலும் பண்ணுங்க பண்ணுங்க!”
அந்தச் சில விநாடிகள் இடைவெளியை கொடுப்பதற்காகவே பேச்சை வளர்த்தான் அதிவீரன்.

பிரதீப், பவித்ரா கூட்டத்தைப் பயன்படுத்தித் தெற்கு வாசல் வழியாக மறைந்துவிட்டிருந்தனர். அதிவீரன் ஏற்படுத்திக் கொடுத்த இடைவெளி அவர்கள் உயிரை அப்போதைக்குக் காப்பாற்றியிருந்தது.

“அவங்க எங்கே?” வினவிய இராஜேந்திரனின் கண்கள் சிவந்தன.

அதிவீரன் ஓரமாய்ப் பார்த்தான். அவர்களைக் காணவில்லை. மனதினோரம் நிம்மதியாய் உணர்ந்தான். எதையோ சாதித்ததைப் போன்ற உணர்வு அவன் முகத்தை மலரச் செய்தது.

“கூட்டத்தில் மிஸ் ஆயிட்டாங்க போல.”

“நீ என்ன ரெட்ட ஆட்டம் ஆடுறியா?” என்று அவர் முன்னே வந்தார்.

அவன் நேராகக் கண்ணைப் பார்த்துப் பேசினான். அவன் கண்களில் தெளிவும் உறுதியும் தெரிந்தது.

“டீல் முடிஞ்சது! நான் லொக்கேஷன் சொன்னேன். பிடிக்க முடியலன்னா அது என் ஃபால்ட் இல்லை இராஜேந்திரன்.”
ஒரு நொடி இருவரின் பார்வையும் மோதியது. பார்வையின் உரசலில் தீப்பொறி உள்ளுக்குள் தெறித்தது. அவன் பார்வை அவரிடம் சவால்விடும் விதமாகத் தான் இருந்தது.

 

அதற்குள் அந்தச் செய்ன் திருடிய ஆசாமியைக் கையோடு இழுத்து வந்திருந்தார் ஏழுமலை.

ஏழுமலை அருகே வந்து மெதுவாய் கேட்டார்,

“சார்… இது…”
அதிவீரன் கம்பீரமாய்ச் சிரித்தான்.

அவன் புன்னகை ஏழுமலையையும் தொற்றிக் கொண்டது. அவருமே வெகு நிம்மதியாய் உணர்ந்தார்.

“இரும்பு 1538 டிகிரியில் உருகும் ஏழுமலை. ஆனா முழுசா கரையாது. வடிவம் மட்டும் தான் மாறும்.” அவன் சொன்னதன் அர்த்தம் இப்போது அவருக்குப் புரிந்தது.

அவன் ஜீப்பை நோக்கி நடந்தான்.
அதே நேரம்,
கோயிலின் மற்றொரு பக்கம், அழகுநிலா கீர்த்தனாவுடன் நின்றபடி அந்தக் குழப்பத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஏய்! உன் ஆளு டி! சொல்லி வச்சுட்டு வந்தீங்களா டி ரெண்டு பேரும்?” கீர்த்தனா அழகுநிலாவின் தோளில் இடித்தாள்.

“வாயை மூடுடி!” பேச்சுத் தோழியிடம் இருந்தாலும் பார்வை அதிவீரனிடம் தான் இருந்தது.
அவள் பார்வை தூரத்தில் நின்ற அதிவீரனைத் தொட்டது. அவள் அவனைப் பார்த்ததும் மனதிற்குள் பட்டாம்பூச்சிகள் பறந்தன.

 

அதே நேரம் தன்னைத் துளைக்கும் எதையோ உணர்ந்த அவன் பார்வை அழகுநிலாவைத் தழுவி நழுவியது.

ஒரு கணம், அவளை உற்றுப் பார்த்தான் அதிவீரன். அவளைப் பார்த்ததும் அகமும் முகமும் மலர்ந்தது அவனுக்கு. அவளோ, அவனின் பார்வை உருகிக் கரைந்துக் கொண்டிருந்தாள்.

 

அவள் மனதிற்குள் தித்திப்பாய் இறங்கிக் கொண்டிருந்தான் அதிவீரன்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. சந்திப்பு தொடர்வது செம.