9. நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன்
தனக்கு பிடிக்காத ஒன்றை திணிக்கும் போது வேண்டாம் என்று மறுப்பது இயல்பு தானே ? அது போல தான்
மதுரா தன் மறுப்பை காட்டுவதற்காக முயன்று அவனின் பலத்தின் முன்னால் முடியாமல் போக, அவன் தன்னை விட்ட நொடி..எதைப் பற்றியும் யோசிக்காமல் அவனை
அறைந்து விட்டவள், மின்னல் வேகத்தில் வாயை மூடியபடி அவ்வறையிலேயே இருந்த குளியலறையை நோக்கி நொண்டியபடி விரைந்திருந்தாள்.
சூப்பில் இருந்து வந்த ஒரு விதமான மணம் அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை உமட்டிக் கொண்டு வந்து விட்டது.
இங்கோ மதுரா அடித்ததால் கருப்பசாமியின் முகம் கல்லென இறுகி போய்விட,
உள்ளே அவள் வாந்தி எடுக்கும் சத்தம் நன்றாகவே கேட்டது.
தன் மீது தான் தவறு என்று புரிய, அதே சமயம் அவள் அடித்தது அவனுக்குள் ஒரு வித பிரளயத்தை ஏற்படுத்தி இருக்க, அவனின் தாடைகள் இறுகி உடல் விரைத்து போய் நின்றான். அவனை இதுவரை யாரும் கை நீட்டி அடித்ததில்லை… சிறுவயதிலிருந்தே அவன் செய்யும் ஒவ்வொரு விடயங்களிலும் அத்தனை கவனமாக இருப்பான். அவன் அன்னை தந்தை உறவினர்கள் உட்பட அனைவருமே அவனை அத்தனை பாசமாய் பரிவாய் மரியாதையாய் நான் நடத்துவார்கள். வேலை விடயத்திலும் அவன் நெருப்பு.. அதனாலேயேஅவனுக்கென்ற ஒரு முக்கியத்துவம் இருக்கும் எதிலும்.. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவனின் பார்வையிலும் உடல் மொழியிலும் அவனை மரியாதையாக தான் நடத்துவார்கள். அப்படிப்பட்டவனை ஒரு சின்னப் பெண் அடித்து விட்டால்..?அவன் முகம் முழுவதும் ரௌத்திரம் நிறைந்தது.
இதை எதையும் அறியாத மதுராவோ, அவன் வலுக்கட்டாயமாக குடிக்க வைத்த மொத்த சூப்பையும் வெளியேற்றிவிட்டு சோர்வுடன் வாயை துடைத்தபடி குளியலறை கதவை திறந்து கால் காயத்தினால் நொண்டிக் கொண்டே வெளியே வந்தவள், கருப்பசாமி நின்ற நிலையை பார்த்து பயத்துடன் கதவில் பல்லியைப் போல் ஒட்டிக்கொண்டாள்.
‘ஆத்தாடி ஆத்தா! இந்தக் கருப்பு ஏன் செவத்த பாத்துட்டு இப்டி பயங்கரமா நிக்கறான்?’என்று நினைத்தவளுக்கு அவனை அடித்தது வேறு நினைவில் வர,
தன் கையை பார்த்து முறைத்தவள்,
சுட்டுவிரலை மட்டும் தன்னை நோக்கி நீட்டி,
“லூசு மது.. லூசு மது.. கைய கால வச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா? நேத்து அந்த கோலத்துல அவன பார்த்ததிலிருந்து கை கால் எல்லாம் டான்ஸ் ஆடிட்டு இருக்கு.. அவன்கிட்டயே திரும்பவும் வரண்ட இழுத்து வச்சிருக்கியே! லூசு ” என்று காலை உதைக்க, அது காயத்தில் பட்டு வலி உயிர் போய்விட்டது.
“அய்யோ பட்ட இடத்துலயே வந்து பன்ச் பண்றீங்களேடா” என்று தனக்கு மட்டும் கேட்குமாறு தன்னையே திட்டிக் கொண்டவள், கையை இறக்கிவிட்டு கருப்பசாமியை பார்க்க அவனோ இப்பொழுது திரும்பி அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். இல்லை இல்லை முறைத்துக் கொண்டிருந்தான்.
‘ஆத்தி இவன் எப்ப திரும்புனான்?’என்று மனதிற்குள் நினைத்தவள்,
வெளியே உடல் நடுங்க பயத்துடன், அவனைப் பார்க்க, அவன் அப்பொழுதும் இளகாமல் முறைப்புடன் தான் நின்றான்.
‘அய்யோ முறைக்கிறானே! முறைக்கிறானே! இப்ப என்ன பண்ண? யோசி யோசி..’என்று மண்டையை ஒரு கிண்டு கிண்டி யோசித்தவளுக்கு ஒரு ஐடியா வந்து சிக்க,
‘இது படும் மட்டமான திட்டமா இருக்கே மது’ என்று உள் மனம் வேறு கவுண்டர் கொடுத்தது.
‘ச்சு ச்சு போ போ’என்று மனதிற்குள்ளேயே அதைப் பத்தி விட்டவள்,
தனது திட்டத்தை செயல்படுத்துவதற்காக.. மனதிற்குள்ளேயே
ஒன்..
டூ…
த்ரீ … என்று சொன்னவள்,
அடுத்த நொடி
மயங்கியதை போல் தரையில் சரிந்திருந்தாள்.
அவளின் உள்மனக்குரலோ மீண்டும் ‘ஏய் ச்சி கேவலமா நடிக்காதே எந்திரி’ என்று விஜய் சேதுபதியின் வாய்ஸில் கமெண்ட் கொடுக்க,
‘கொய்யால போறியா இல்ல காத கடிச்சு துப்பவா?’என்று அதைக் கடிந்தவளின் இடையில் ஒரு கை அழுத்தமாய் நுழைய, ஆஆஆ என்று பதறிப்போய் கண் திறந்தவள் அதிர்ந்தாள். அவள் கருப்பசாமியால் தூக்கப்பட்டிருந்தாள்.
அதில் பயந்து போனவளாய்..
“சாரி சாரி தெரியாம அடிச்சுட்டேன்.. என்னை விட்ருங்க ப்ளாக்..” என்று அவன் கைகளில் துள்ளியபடி இவள் மன்னிப்பு வேண்ட,
அதே சமயம் அவர்கள் இருந்த அறைக் கதவு திறக்கப்பட்டு, “மது டார்லிங்” என்றபடி பத்ரிநாத் உள்ளே வர,
அப்பொழுது மதுரா நின்ற நிலையை பார்த்து, “ஆர் யூ ஓகே பேபி?”என்று கேட்டிருந்தான்.
‘அது எனக்கே தெரியலையேடா வெள்ள காக்கா!’என்றபடி பேவென விழித்துக் கொண்டிருந்தாள் மதுரவாணி.
அதன் பிறகு பத்ரிநாத் பேசியது கொஞ்சியது எதுவும் அவள் காதில் விழவில்லை.
கைகளில் இருந்தவளைக் கதவு திறக்கும் ஓசையில் பொம்மை போல கைகளில் சுழற்றி தூக்கி.. நின்றவாறு நிறுத்திவிட்டு அவளை விட்டு காற்றாய் விலகிப் போய் விட்ட நிழலே அவளின் நினைவாய்!
****************
தன் கட்சித் தலைவரின் முன் கைகட்டியவாறு நின்று கொண்டிருந்தார் முத்துமாணிக்கம்.
பின் எழுபதுகளில் இருந்த அந்த பெரிய மனிதரோ அரசியல்வாதிக்குரிய சர்வ லட்சணத்துடன் சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி, எதிரில் நின்ற முத்துமாணிக்கத்தை முறைத்தபடி
“என்ன கெட்டுப் போச்சுன்னு ஹார்பர்ல சரக்கு இறக்க வேண்டாம்னு சொன்னியாம்..” என்றார் கோபமாய்.
அதற்கு முத்துமாணிக்கம் பவ்யமாகவே,
“ஆமா தலைவரே இதுக்கு மேல அவன் கூட சங்காத்தம் வைக்க எனக்கு இஷ்டம் இல்ல.. அங்க கை வச்சு இங்க கை வச்சு.. என் பொண்ணு மேலேயே கை வைக்க பாக்கறான் …”
“என்ன மாணிக்கம் திடீர்னு மவ மேல பாசம் பொங்குது… அந்தப் பொண்ணு உன்னோட ரெண்டாம் தாரத்து பொண்ணு தான.. ஆசைப்பட்டு தானே கேட்கிறான் கொடுத்துட்டு போ.. அவன வச்சு நம்ம கோடி கணக்குல லாபம் பாக்குறோம்.. அவனுக்காக இத கூட செய்ய முடியாதா?” என்றவரைப் பார்த்து கோபம் கோபமாய் வந்தது முத்துமாணிக்கத்திற்கு.
ஆனால் அடிநிலைத் தொண்டனாக கட்சிக்குள் வந்தவரை அமைச்சர் பதவி வரை தூக்கி வைத்த மனிதரை தூக்கி எறிந்து பேச அவரால் இயலவில்லை.
“தலைவரே எந்த தாரமா இருந்தா என்ன? அவ என் பொண்ணு தானே என் சொந்த ரத்தம்… பாழங்குழினு தெரிஞ்சே அவள அதுல தள்ள முடியுமா? எனக்கு மனசுக்கு ஒப்பல”
என்றார் நிதானமாக.
“யோவ் அது பாழாங்குழி இல்ல..பணக்குழி யா..”
“வேணாம் தலைவரே எனக்கு எந்த குழியும் வேண்டாம்.. என் கண்ணு முன்னாடியே ஒரு பொண்ணோட தொட கறிய வெட்டி தின்ன பயலுக்கு என் பொண்ண தாரவாத்து குடுக்க சொல்றீங்களா?
அந்த விளங்காத பயலால என் வீட்ல நிம்மதியே போச்சு.. என் பசங்க கிட்ட கூட என்னால முழுசா உண்மைய சொல்ல முடியல.. நேத்து நா வீட்ல இல்லன்னு தெரிஞ்சு என் பொண்ண தூக்க நைட்டோட நைட்டா ஆள் அனுப்பி வச்சிருக்கான்.. வேண்டாம்னு சொன்னா விட வேண்டியது தானே? விடாம துரத்துறான் என் பொண்ண.. ” என்றார் அவரின் குரலில் அத்தனை ஆத்திரம்.
“உன் பொண்ண அவனுக்கு ரொம்ப புடிச்சிட்டு போல.. என்கிட்டயும் உன் கிட்ட பேச சொல்லி சொல்லி இருக்கான்.. நான் சொன்னா நீ மறுத்து பேச மாட்டியாம்” என்றார் தன் தாடியை நீவிக்கொண்டே,
“வேணாம் தலைவரே அவனுக்காக நீங்க என்கிட்ட பேசாதீங்க.. நான் என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாண தேதியே குறிச்சிட்டேன்… அவ இங்க இருந்தா தானே குடைச்சல் கொடுப்பான் அவளை நான் வெளிநாடு அனுப்ப போறேன்”
“கல்யாணத்துக்கு எல்லாம் எனக்கு அழைப்பு உண்டா?” என்று கேட்டவரிடம் சங்கடமாய் புன்னகைத்த முத்துமாணிக்கம்,
“தலைவரே காதும் காதும் வச்ச மாதிரி தான் கல்யாணம்.. நீங்க வந்தா அது அப்படி இருக்காதே” என்றதும்
“அது சரி..அவன்கிட்ட சரக்க மாத்தி விட சொல்லுறேன் நீ போ உன் பொண்ண பாரு” என்று விட்டார்.
“தலைவரே கோச்சுக்கிட்டீங்களா?”
“உன் மேல கோவம் இல்ல சரக்கு கைமாறாமல் நின்னு போனது தான் கோபம்” என்றதும்,
நிம்மதியாய் தலையசைத்து விட்டு அவரிடம் விடை பெற்று முத்து மாணிக்கம் கிளம்பி விட,
“கேட்டியா பெர்னாண்டஸ்? அவன் பொண்ணுக்கு கல்யாணமாம்.. தனக்கு பொண்ணு தர மாட்டானாம்…”என்றபடி அவ்வளவு நேரம் தொடர்பில் வைத்திருந்த தனது அலைபேசியை கையில் எடுத்தார் அந்த எழுபது வயது எட்டப்பன்.
அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ..
“ம்ம் அவன் யாருன்னு விசாரிச்சு சொல்றேன்.. நீ எனக்கு அனுப்ப வேண்டியது மட்டும் அனுப்பி விடு.. மாணிக்கத்த எப்படி பல் புடுங்குன பாம்பாக்கனும்னு எனக்குத் தெரியும்” என்று தான் கைதேர்ந்த அரசியல்வாதி என்று காட்டியவர் அழைப்பை துண்டித்திருக்க,
இந்தப் பக்கம் பெர்னாண்டஸின் கண்கள் எதிரே மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தில் இருக்க, அதிலிருந்த அவளின் முகத்தையும் இதழையும் வருடியவன்,
“ம்ம் உனக்கு கல்யாணமா? மதூ..மதூ.. உன்னை எப்ப பாப்போமாம்னு இருக்கு..வரவா? நான் கூப்பிட்டா என் கூடவே வந்துருவதான?” என்று கேட்டிருந்தான்.
மற்றொரு அறையில் யாரோ கதவை உடைக்கும் சத்தமும் யாரோ ஒரு பெண் கதறும் சத்தமும் கேட்க,
“ஸ்ஸ்…டிஸ்டர்ப்பன்ஸ்..டிஸ்டர்ப்பன்ஸ் ” என்றபடி காதை குடைந்தவன்,
“நான் அப்புறம் வந்து உன்ன பாக்குறேன் மதூ” என்றபடி புகைப்படத்திலிருந்தவளை வருடிவிட்டவன், கையில் இருந்த மிகப்பெரிய சூட்கேஸுடன் சத்தம் கேட்ட அறைக்குள் சென்றவன்.. கதவை மூடி இருந்தான்.
அதன் பின் மரம் அறுக்கும் எலக்ட்ரிக் ரம்பத்தின் ஓசையும்
அப்பெண் உயிர் வலியில் துடிதுடிக்கும் சத்தமே அவ்வறையை நிறைக்க, பூட்டிய கதவின் இடைவெளியில் குளமாய் தேங்கி நின்றது அப்பெண்ணின் உதிரம்.
***************
நாட்கள் நகர,
நாளை விடிந்தால் நிச்சயதார்த்தம் என்ற நிலையில், உறக்கமற்ற விழிகளுடன் தன்னறையின் பால்கனியில் நின்றிருந்தாள் மதுரா.
இரண்டு நாட்கள் முன்பு தான் நிச்சயதார்த்த உடைகள் எல்லாம் எடுக்கப்பட்டது. இவள் எல்லாவற்றிலும் ஒதுங்கி நிற்க வினோதா தான் அவளுக்கு உடை எல்லாம் தேர்வு செய்தது.
மதுரா அதில் தலையிடவில்லை.
என்னமோ செய்து கொள்ளுங்கள் என்று இருந்தவளுக்கு நாளை நிச்சயதார்த்தம் என்று நினைத்ததும் இனம் புரியாத பதட்டம்.
ஒருபுறம் தோட்டத்தில் மேடை அமைக்கப்பட்டு அதில் அலங்கார வேலைகள் களைக் கட்டி கொண்டிருக்க, கீழிருந்தபடி அதை பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்கள் மற்றொரு புறம் இருந்த பூக்கள் நிறைந்த தோட்டப்பகுதியை பார்த்ததும் சற்று நேரம் தோட்டத்தில் உலாவினால் என்ன? கொஞ்சமாவது மனது சமன்படுமே.. என்று தோன்ற யாரும் அறியாமல் மெதுவாய் கீழ் இறங்கி தோட்டத்தின் மறுபகுதிக்கு வந்துவிட்டாள்.
பூச்சிகளின் ரீங்காரமும், தவளைகள் எழுப்பும் ஒரு வித ஒலியும் தவிர வேறெந்த சத்தமும் அங்கு இல்லை. கிட்டத்தட்ட இருபது விதத்திற்கும் அதிகமான ரோஜா செடிகள் தண்ணீர் ஊற்றெடுத்து கொண்டிருந்த செயற்கை நீரூற்றை சுற்றி மிகத்துல்லியமாக வட்ட வடிவத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அங்கு அருகிலேயே உட்காரும் மேடை இருக்க, அதன் அருகிலேயே மின் கம்பத்தின் மேல் மஞ்சள் நிறத்தில் விளக்கு ஒன்று எரிந்து அவ்விடத்தின் அழகை பெருக்கி கொண்டிருந்தது.
அங்கிருந்த உட்காரும் மேடையில் மஞ்சள் நிற தேவதையாய் அமர்ந்தவள் பாதியாய் தெரிந்த நிலாவையும் வானில் ஆங்காங்கே தன்னைப் பார்த்து கண்சிமிட்டிக் கொண்டிருந்த நட்சத்திரங்களையும் ரசித்தாள்.
மதுரா அப்படித்தான் எத்தனை கவலை இருந்தாலும் தன் சிறு சிறு ரசனைகளால் தன்னை உயிர்ப்புடன் வைத்திருப்பாள். ஏனோ சிறுவயதில் ஆறுதல் சொல்லக் கூட யாரும் இல்லாத தனிமையில் வளர்ந்தவளுக்கு அதுவே ஆறுதல்.
இன்றும் அதுப்போல தான்!
தோட்டத்தில் வீசிய சில்லென்ற காற்று.. முகத்தில் விழுந்த முடியை கலைக்க அது காதோரமாய் ஒதுக்கியவளுக்கு, காற்றில் கலந்து வந்த ரோஜாவின் மணம் அவள் மனதை அப்படியே அள்ளிக் கொண்டது.
அவள் மனம் சோகத்தை மறந்து மகிழ்ச்சியை அடைய,
ரங்கநாயகியிடம் தீபாவளி பரிசு வாங்க சென்ற முத்துவின் மனநிலைக்கு மாறியது.
“பி ஹேப்பி மது”என்று எப்பொழுதும் போல் தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள்,
திடீரென்று துள்ளி ஓடியபடி
“ல…ல..ல..லா ..ல..ல..ல..லா…” என்று முத்து படத்தில் வரும் ரஜினிகாந்தின் தோரணையுடன், அவள் மகிழ்ச்சியாய் செயற்கை நீரூற்றை சுற்றிவர, எதிரில் முறைத்துக் கொண்டிருந்த கருப்பசாமியை பார்க்காது அவன் மீது மோதிக்கொண்டாள்.
கல் போன்று எதிரில் நின்றவனின் மார்பு உயரமே மொத்தமாய் இருந்தவள், ஸ்ஸ்ஆ என்று தன் வலித்த நெற்றியை தடவிக் கொண்டே “யார்ரா நம்ம சங்கீதத்துக்கு சடன் பிரேக் போட்டது?” என்று அதிர்ச்சியுடன் நிமிர்ந்தவள்,
தன் எதிரே முறைத்துக் கொண்டிருந்தவனைப் பார்த்ததும்,
“அட நம்ம கருப்பு” என்று நிம்மதி பெரும் மூச்சுடன் அவள் விலக,
“வாட்?”என்றான் கோபமாய்.
அப்பொழுதுதான் தான் வெளிப்படையாய் சொல்லிவிட்டது புரிய,
“நான் கூட காத்து கருப்புன்னு நெனச்சு பயந்துட்டேன் அதான் கருப்புன்னு சொன்னேன்” என்றாள் அவனின் மிரட்டும் தோரணையில் பயந்தவளாய்.
அவனின் அன்றைய இரவிலான முகம் பற்றி நினைத்தால் இப்பொழுதும் அவளுக்குள் அப்படியொரு நடுக்கம். அதனாலேயே அதை நினைக்க கூடாதென்று மறக்க முயன்றாள்.
அவள் பயத்தில் சொன்னதை கிடப்பில் போட்டவன்,
“இந்த நேரத்துல இங்க என்ன பண்ற?” என்று கேட்டான் கோபமாய்.
அவனின் கோபத்தில் முகத்தில் மீதமிருந்த உற்சாகமும் மில்லி மீட்டராய் குறைந்து விட,
“தூக்கம் வரல பிளாக்.. அதான்.. சும்மா ஒரு வாக்..” என்றவளின் குரல் உள்ளே சென்று விட்டது.
அவளுக்கு தெரிய தான் செய்தது தனக்கு இருக்கும் ஆபத்தில் இந்நேரத்தில் இங்கே வந்தது தவறு என்று..
அவளின் முகம் சோர்வதை உணர்ந்தவன் தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர முயன்றான்.
“அட்லீஸ்ட் என்கிட்ட சொல்லிட்டாவது வந்து இருக்கலாமே? ஐ மீன் நான் உன்னோட பாடிகார்ட்.. உன்னோட பாதுகாப்பு தான என்னோட ஃபர்ஸ்ட் ப்ரியாரிட்டி..இப்ப நா ஏதேச்சையா உன்ன இங்க பார்க்கலனா? உனக்கு இங்க ஆபத்துனா எனக்கு எப்டி தெரியும் நீயே சொல்லு?” என்றவனின் குரலில் கோபம் சற்று குறைந்திருந்தது.
“எப்டி சொல்ல ப்ளாக்? எனக்கு நீங்க எப்போ எங்க இருக்கீங்கன்னு தெரியாதே?” என்று மழலையாய் அவள் கேட்டதும் மிச்சம் மீதி இருந்த கோபமும் நன்றாய் குறைந்து விட,
“கால் பண்ணி இருக்கலாமே” என்றான் அமர்த்தலாய்.
“ஹான் உங்க நம்பர் தான் என்கிட்ட இல்லயே மிஸ்டர் பிளாக்?” என்றவளிடம்,
“நீ கேட்கவே இல்லையே?”என்றவன் குறித்துக் கொள் என்று சொல்ல,
அவன் சொன்னதை நொடியில் மனதிற்குள் மனனம் செய்தவள்,
“தேங்க்ஸ் ப்ளாக்” என்றாள் புன்னகையுடன்.
அவள் முகத்தில் மீண்டும் முகிழ்ந்த புன்னகையில் கருப்பசாமி இதழ்களும் மெலிதாய் வளைந்ததனவோ?
சற்று நேரத்திற்கு அமைதி நிலவ, செயற்கை நீரூற்று அருகில் போடப்பட்டிருந்த கல்மேடையில் அமர்ந்தனர் இருவரும்.
சில்லென்ற குளிர் காற்று வீச, மதுராவின் மேனி சிலிர்க்க, தனது சுடிதார் துப்பட்டாவினால் தன்னை மூடிக்கொண்டாள் அழகாய்.
நேரம் பன்னிரெண்டை கடந்திருக்க, தனிமை குளிர்ந்த ஈரக்காற்றின் குளுமை.. காற்றில் பூக்களின் நறுமணம் பரவ,
மதுரா அந்த நறுமணத்தை ஆழ்ந்து சுவாசிப்பது..
அவள் அருகில் அமர்ந்திருந்தவனுக்கு அவளைப் பார்க்காமலேயே உணர முடிந்தது.
இந்த ஒரு வாரத்தில் அவளை அடிக்கடி இது போன்ற சூழ்நிலையில் பார்த்திருக்கிறான்.
அவளின் ரசனையையும் ரசித்திருக்கிறான்…
இன்றும் அவளின் ரசனையான முகத்தை பார்ப்பதற்காக திரும்பியவன்,
கண்களை மூடியபடி ஆழ்ந்த மூச்செடுப்பில் இருந்தவளைப் பார்க்க, “இன்னும் முழுசா ரெண்டு நாள் கூட இங்க இருக்க முடியாதுல..” என்றாள் ஏக்கமாய்.
கருப்பசாமி அதற்கு பதில் சொல்லாமல் அவளையே பார்த்திருக்க,
அவளை மூடிய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
அதைத் துடைக்க கட்டுப்பாடற்று எழுந்த தன் கைகளை இறுக்கிக்கொண்டு,
“மதுரா” என்றான் தன்னையும் மீறி,
“ஹான்” என்று கண்ணைத் திறந்தவள் தன்நிலை உணர்ந்து கண்ணைக் துடைத்துக் கொண்டு,
“ரொம்ப போர் அடிக்குறேன் ல?” என்று சிரித்தாள்.
என்ன பெண் இவள்? முறைக்கிறாள்.. ரசிக்கிறாள்…அழுகிறாள்… சிரிக்கிறாள்..ஓரிரு நிமிடத்தில் எத்தனை எத்தனை முகபாவனைகள்?
“மதுரா ஆர் யூ ஓகே?” என்று கரிசனமாய் கேட்டவனை இதழ்ப்பிரியா சிரிப்புடன் பார்த்தவள்,
“ஐ அம் பெர்பெக்ட்லி ஓகே ப்ளாக்” என்றாள்.
‘பின்ன ஏன் இங்க இப்படி இருக்கிறாய்?’ என்று அவன் கண்களாலேயே கேட்டபோது, அவளின் முகம் உணர்வற்று போய் இருந்தாலும் அவள் கட்டுப்பாடற்று கண்களில் கோடாய் இறங்கி வழிந்து சிதறிய கண்ணீர்...கருப்பசாமிக்குள் ஏதோ ரசாயன மாற்றங்களை நிகழ்த்த, அவனை அறியாமலேயே அவளை நெருங்கி அமர்ந்தவன்.. ஆறுதலாய் அவளின் தளிர் இளம் கரங்களை தன் முரட்டு கரங்களால் இறுகப்பற்றி இருந்தான்.
ஏனோ அச்சிறு ஆறுதல் மதுராவிற்கு அப்போதைக்குத் தேவையாகவே இருக்க, அவளும் ஒரு நொடி அமைதியாகி அவன் முகம் பார்த்தவள் “என்ன ப்ளாக் சென்டி ஆகிட்டிங்க.. கல்லுக்குள் ஈரமா?” என்று கேட்டு குறும்பாய் சிரிக்க,
அவளின் சிரிப்பில் இயல்பிற்கு வந்தவன், தன்னிலை உணர்ந்து அவளை விட்டு நகர்ந்தவாறே கோபமாய் “நான் என்ன கல்லா?” என்று முறைக்க, மதுராவிற்கு இன்னும் சிரிப்பு…
“பின்ன ஆல்வேஸ் நோ ரியாக்ஷன் ஃபேஸ், ரக்கர்ட் மூவ்ஸ் .. நீங்க ஒரு இடத்துல இருந்தா கூட ஏதோ அசையாத ஸ்டோன் மாதிரி இருப்பீங்க… அதுவும் அப்படி நிக்கும்போது உங்க ஐலிட்ஸ் கூட அசையாது” என்று தான் இத்தனை நாள் அவனைப் பற்றி கவனித்ததை அவள் சொல்ல,
“என்னோட ப்ரொபஷன் அப்படி” என்றான் முறைப்பை மாற்றாத முகத்துடன்..
“ம்ம் நீங்க டிடெக்டிவ்னு அப்பா சொன்னாங்களே.. டிடெக்டிவ்னா அப்படித்தான் இருப்பாங்களா?” என்று மதுரா மீண்டும் அவனின் வாயைக் கிளற,
அவனோ, அவள் கேட்டதற்கு பதில் சொல்லாமல், தன் கை கடிகாரத்தை ஒருமுறை பார்த்தவன், எழுந்துவிட்டான்.
“டைம் ஒன் ஓ கிளாக் தாண்டிடுச்சு மிஸ் மதுரா .. இன்னைக்குள்ள தூங்குற ஐடியா இருக்கா?இல்லையா? நாளைக்கு எங்கேஜ்மென்ட் தான? போய் தூங்கு “என்று சொல்லி விட,
உற்சாகம் தொலைந்து போய் மீண்டும் பியூஸ் போன பல்பாக மாறிப்போன மதுரவாணியோ, அவனை அடுத்து எழுந்து கொண்டே,
“ம்ம் போறேன் போறேன் காத்துகருப்பு” என்றாள் முணுமுணுப்பாய்…
“என்ன சொன்ன?”என்று அவள் சொன்னது அரைகுறையாய் கேட்டும் அவன் மீண்டும் கேட்க,
“பாத்து பத்திரமா போங்க ப்ளாக்.. காத்து கருப்பு ஏதும் அடிச்சிட்டாமன்னு சொன்னேன்” என்று சொல்லிவிட்டு ஓடிவிட,
மனதிற்குள், ‘சரியான வாயாடி’ என்று நினைத்தவனின் இதழ்கள் விரியவும், கைகளில் இருந்த மொபைல் ஒலி எழுப்பவும் சரியாக இருக்க, திரையில் வந்த எண்களைப் பார்த்ததும், அவனின் இதழ்கள் அழுத்தமாய் மூடிக்கொள்ள, உடல் விரைப்பாய் நிமிர்ந்தது.
அலைப்பேசியில் அழைப்பை ஏற்று அந்தப் பக்கம் சொல்லப்பட்ட செய்தியை புருவம் சுழித்தப்படி கேட்டவனின் முகமும் மனமும் பாறாங்கல்லாய் இறுகிப் போய் விட,
“இந்த கேம் ஓவர் ஆக… இதான் பெர்பெக்டான டைம்..நம்ம ஃப்ளான் படி ப்ரொசீட் பண்ணிடலாம்” என்றான் அழுத்தமாய்…
அவன் இறுகிப்போன மனதிற்குள் மதுரா குறும்பு சிரிப்புடன் வலம் வர, ‘இத்தனை பெரும் அதிர்ச்சியை அவளால் தாங்க முடியுமா?’என்ற மாபெரும் கேள்வி அவனுள்…!
தொடரும்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
33
+1
+1
2
மது கருப்பு கியூட்
Thank you sister 😊