8. நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன்
மறுநாள் காலை,
முத்துமாணிக்கத்திற்கு விஷயம் தெரிந்து, குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு அவர் வந்து சேரும் வரை கூட மதுரா கண் விழித்திருக்கவில்லை.
காய்ச்சலில் உடலெல்லாம் கொதிக்க ஒரு இரவிலேயே சுருண்டிருந்தாள் பெண்.
நேற்றைய இரவில் தன் கை வளைவில் மயங்கி விழுந்தவளின் கன்னத்தை தட்டி எழுப்ப முயன்றான் கருப்பசாமி. எவ்வளவு தட்டியும் எழவில்லை.
அந்த நடுஇரவில் அவளை மருத்துவமனைக்கும் அழைத்து செல்ல முடியாமல்,
ஆபத்தாக இருண்டு கிடக்கும் இவ்விடத்திலேயே விட்டுவிட்டு செல்ல முடியாமல்,
சுற்றி இருந்த சூழ்நிலை தடுக்க, அலைபேசியில் யாருக்கோ அழைப்பு விடுத்தவன் அங்கிருந்த சூழ்நிலையை விளக்கி அவ்விடத்தையும் அங்கு அரை உயிர்களாக விழுந்து கிடந்தவர்களையும் அப்புறப்படுத்த சொல்லிவிட்டு,
மதுராவின் பாதுகாப்பிற்காக அவளை தான் தங்கி இருந்த அவுட் ஹவுஸிற்கு தூக்கி வந்திருந்தான்.
முதலில் சாதாரண மயக்கம் என்று நினைத்து தான்.. ஹாலில் இருந்த சோபாவில் அவளை படுக்க வைத்துவிட்டு, உடல் எங்கும்
இரத்த களரியாக இருந்தவன் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள குளியலறைக்குள் புகுந்தது.
ஆனால் அவன் குளித்து வந்த பிறகும் அவள் எழவில்லை.. தண்ணீர் தெளித்து எழுப்பியும் சிறு அசைவு தெரிந்தது தான். அவளால் விழி திறக்க முடியவில்லை. நேரம் போக போக அவளின் உடல் சூடு அதிகமாகி காய்ச்சலால் கொதிக்க ஆரம்பித்தது.
கருப்பசாமிக்கு தான் ஆயாசமாக இருந்தது.. இப்படி இழுத்து வைத்திருக்கிறாளே என்று..
உடல் சூடு குறைவதற்காக
ஈரத் துணியால் அவளின் நெற்றியில் பற்று போட்டு விட்டவன்,
அவளின் கால்களில் ஆங்காங்கே பீங்கான்கள் கண்ணாடி துண்டுகள் வேறு குத்தி கிழித்திருக்க அதற்கும் இயந்திரமாய் மருந்திட்டு கட்டு போட்டு விட்டான்.
காய்ச்சல் அதிகமாகி அவளது உளறல் முழுவதும் “வேணாம் பயமா இருக்கு பயமா இருக்கு..” என்பது மட்டுமே.. உடல் வேறு பயத்தில் அவ்வப்போது உதறியது. இவ்வளவு பயத்தை வைத்துக்கொண்டு இவளை யார் வெளியே வர சொன்னது? இப்பொழுது பாதிப்பு அவளுக்கு தானே? என்று ஒரு மனம் அவளுக்காக வருத்தப்பட,
அவனின் இன்னொரு மனமோ, தான் சொன்னதை மீறி …தன் எச்சரிக்கையை மீறி.. வெளியே வந்து விட்டவளின் மீது டன்டன்னாக கோபத்தில் இருந்தது.
அதற்காக காய்ச்சலின் வீரியத்திலும் மயக்கம் தெளியாமல் பிதற்றிக் கொண்டிருந்தவளிடமா அவன் கோபத்தை காட்ட முடியும்?
அதுவும் இன்று மாலை வரை அன்றலர்ந்த மலர் போன்ற சிரிப்புடன் வலம் வந்தவள் இப்பொழுது முகமெல்லாம் வாடி வதங்கி கசக்கிய மலர் போல அல்லவா படுத்திருந்தாள். அவளிடம் போய் அவன் கோபத்தை காண்பிப்பதா?
அவனின் கரங்களோ மதுராவின் இங்கொன்றும் அங்கொன்றுமாய் சிதறி கிடந்த அவளின் முன் நெற்றி முடிகளை காதோரமாய் ஒதுக்கி விட
மனமோ, எங்கே? என்ன தவறு நடந்தது? என்று யோசித்தது.
முத்து மாணிக்கம் வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்பாகவே மதுராவின் பாதுகாப்பிற்காக அத்தனை ஏற்பாடுகளும் செய்துவிட்டு தானே சென்றார்? முதலில் அவர் இப்படி வெளியே செல்வதே யாருக்கும் தெரியாதே? எங்கே இப்படி ஒரு தவறு நடந்தது? வீட்டை பாதுகாக்க ஏற்பாடு செய்தவர்களையும் மீறி இத்தனை பேர் எப்படி உள்ளே நுழைந்தனர்.
அப்படி என்றால் தங்களின் எதிரிக்கு உதவும் கருப்பு ஆடு ஒன்று தங்களுடனே இருக்கிறது என்பதை சரியாக கணித்தான் கருப்பசாமி.
விடியலுக்கு முன்னேயே முத்துமாணிக்கத்திடம்
இரவில் நடந்த தாக்குதல் பற்றியும்
மதுராவின் நிலையையும் அவன் சொல்லி விட்டதால்,
விடிந்ததும் மதுராவை பரிசோதிக்க நம்பிக்கைக்குரிய மருத்துவர் ஒருவரை அனுப்பி வைப்பதாக சொல்லியிருந்தார்.
விடிந்ததும் மருத்துவரும் வந்துவிட,
மதுராவை பரிசோதித்து விட்டு, “அவங்க ஏற்கனவே ரொம்ப வீக்கா இருக்காங்க இதுல அவங்களுக்கு பிரஷர் வேற அதிகமாகி இருந்திருக்கு. சோ அத அவங்க பாடியால ஹேண்டில் பண்ண முடியாம தான் மயங்கி இருக்காங்க”
“டாக்டர் அவங்களுக்கு எப்போ கான்ஷியஸ் வரும்?”
“மோஸ்ட்லி நல்லா தூங்கி எழுந்தாலே அவங்க ஓகே ஆகிடுவாங்க.. இப்போதைக்கு பீவர்க்கு ஒரு இன்ஜெக்ஷனும் கால்ல உள்ள காயத்துக்கு ஒரு டீடீ மட்டும் போட்ருக்கேன்.. அண்ட் கொஞ்சம் டேப்லெட்ஸ் எழுதி தரேன்.. அவங்க எழுந்துட்டா கொஞ்சம் லைட் புட்டா சாப்பிட கொடுத்துட்டு டேப்லட் போட வைங்க..அவங்கள ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகாம மட்டும் பாத்துக்கோங்க போதும் சீக்கிரம் நார்மல் ஆகிடுவாங்க” என்று தேவையான மாத்திரைகளை எழுதி கொடுத்துவிட்டு சென்று விட,
அவரை வழி அனுப்பி வைத்துவிட்டு மதுராவிடம் வந்தவனுக்கு நிர்மலமாய் இருந்த அவளின் முகம் என்னவோ செய்தது.
கடைசியாய் அவனைப் பார்த்து பயந்தபடி, அவள் மயங்கியதை நினைத்தவனுக்கு, இனி அவள் தன்னிடம் முன் போல இயல்பாய் பேசுவாளா? குறும்புடன் சிரிப்பாளா? என்ற எண்ணமே வர, தலையை உலுக்கி கொண்டான் அவன்.
இது என்ன விடலை பையன் போல் தேவையில்லாத சிந்தனை?
அவள் தன்னிடம் பேசினால் என்ன பேசவில்லை என்றால் என்ன?
என்று தன்னையே கடிந்தவனின் பார்வை என்ன முயன்றும் மதுராவின் முகத்தை விட்டு பிரிய மறுக்க,
அவனின் பார்வையை உணர முடியாதவளோ,
உலகம் மறந்து அழகாய் துயில் கொண்டிருந்தாள்.
காலை 11 மணிக்கு போல் வந்து சேர்ந்த முத்துமாணிக்கம், அவரின் வீட்டுக்கு சொல்லாமல் மகளை பார்க்க நேரடியாக அவுட் ஹவுஸிற்கு வந்துவிட்டார். அங்கு
வாடிய கொடி போல் உணர்வற்று கிடந்த மகளைப் பார்த்து வருத்தப்பட்டாலும் அவரின் கண்களில் எச்சரிக்கை தான் அதிகமாக இருந்தது.
கருப்பசாமிவிடம் முழு விவரத்தை கேட்டவர், “அவன் எப்பவும் நேருக்கு நேரா மோதுறவன் இல்ல.. முதுகுல குத்துறது தான் அவனோட வழக்கம்.. நீ மட்டும் இல்லனா அவன் வாணிய எப்பவோ தூக்கி இருப்பான்”என்று எதையோ நினைத்து சொன்னவர்,
“வாணியோட நிச்சயதார்த்தம் முடிஞ்ச அடுத்த நாளே கல்யாணத்தையும் சிம்பிளா முடிச்சிடலாம்னு நெனைக்கிறேன்.. இதுக்கு மேல தள்ளிப் போட்டா.. என் பொண்ண யாராலையும் காப்பாத்த முடியாது” என்றதும் ஒரு நொடி புருவம் உயர்த்திப் பார்த்தாலும் அவன் பதில் எதுவும் பேசவில்லை. மௌனமாய் அவர் சொல்வதைக் கேட்டபடி இருந்தான்.
இங்கு இரவில் நடந்த கலவரம் பற்றி தெரியாமல் மதுரா உடல்நிலை சரியில்லை என்று நாடகமாடி தங்களை அவசர அவசரமாய் இங்கே வரவழைத்து விட்டதாக புலம்பிக்கொண்டே கோபமாக கணவனுடன் வீட்டிற்கு நுழைந்த வினோதா வீட்டின் நிலையை பார்த்து அதிர, அதே அதிர்ச்சி தான் அவளின் சகோதரர்களுக்கும்..
முத்து மாணிக்கம் விஷயத்தை சொல்லாமலேயே அழைத்து வந்திருந்தார் அவர்களை..
“இது என்ன நம்ம வீடு தானா?”என்று பிரகதீஷ் ஜெகதீஷ் காதில் கேட்க,
“எனக்கும் தெரியல டா நானும் உன் கூட தான் வந்து இருக்கேன்” என்று சொன்னவனுக்கும் வீட்டின் நிலையைப் பார்த்து அதிர்ச்சி தான். பொருட்கள் எல்லாம் கலைந்து சிதறி போய்க்கிடந்தது.
“மதுராவுக்கு உடம்பு சரியில்லன்னு தானே அப்பா அவசரமா கூட்டிட்டு வந்தார்? ஒருவேளை அவதான் எல்லாத்தையும் உடைச்சு போட்டுட்டாளோ? அவளள…”என்று கோபமாய் பல்லைக் கடித்துக் கொண்டு பிரகதீஷ் ஆரம்பிக்கவும்,
“டேய் மெண்டல்.. அவளுக்கு எதுக்குடா இந்த தேவையில்லாத வேல.. அவளே அப்பா முன்னாடி புள்ள பூச்சி மாதிரி இருப்பா.. அவளுக்கு இவ்வளவு தைரியம்லாம் இருக்காது” என்றவன் எதையோ யோசித்து,
“அப்பா காலைல இருந்து ரொம்ப டென்ஷனா இருக்குற மாதிரி இருந்துச்சே.. ஒருவேளை மதுராவுக்கு எதுவும் ஆகிட்டோ?”திடீரென்று முளைத்த பதட்டத்தில் சொல்ல,
மற்றவர்களுக்கும் அதே சந்தேகம் தான்.
அதுவும் தங்களுக்கு முன்னேயே டிரைவருடன் கிளம்பி வந்த விட்ட தந்தை வீட்டில் இல்லாமல் இருக்க, அவருக்கு அழைப்பு விடுத்தான் ஜெகதீஷ்.
அழைப்பை எடுத்தவர் மதுராவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும் தான் அவுட் ஹவுஸில் இருப்பதையும் சொன்னவர் அவர்களின் வீட்டை சுத்தம் செய்வதற்கு வேலை ஆட்களை வரச் சொல்லி இருப்பதாக சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்து விட.
ஜெகதீஷ் தந்தை சொன்னதை மற்றவர்களிடம் சொன்னான்.
பிரகதீஷோ, “ஏதோ பிராப்ளம்ன்னு தோணுது? ஒருவேளை நேத்து நைட் எதுவும் அட்டாக் நடந்திருக்குமோ? அப்போ மதுராவுக்கும்.. ஏதோ ஆகியிருக்கு” என்று தான் கணித்ததை சொல்ல,
ஜெகதீஷ் அதை ஆமோதிப்பது போல் தலையசைத்தான்.
வினோதாவிற்கு வீட்டின் நிலையை பார்த்து வருத்தமே தவிர மதுராவை பற்றிய கவலையெல்லாம் அவளுக்கு இல்லை.
அவளின் கணவன் ரூபன் வேறு அவளிடம், “வினோ டிராவல் பண்ணி வந்தது ரொம்ப டயர்டா இருக்கு.. நம்ம நம்ம வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கலாம் இங்கே எவ்வளவு நேரம் வேடிக்கை பார்க்க?”என்று சொல்ல,
வினோதாவும் வீட்டை சுத்தம் செய்வது தாமதமாகும் என்பதால் அது ஒப்புக்கொண்டு சகோதரர்களிடம் விடை பெற்று தனது மாமியார் வீட்டிற்கு கிளம்பி விட்டாள்.
வீட்டின் நிலை மதுராவின் நிலை எதைப்பற்றியும் கவலையில்லாமல் சகோதரி சென்றதும் அக்காவின் மேல் சிறு அதிருப்தி ஏற்பட்டது ஜெகதீஷுக்கு.
ஆனால் பிரகதீஷ் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் கணவனுடன் தமக்கையை வழி அனுப்பி வைத்துவிட்டு வந்தவன்,
“சரி.. இப்ப நம்ம இங்க என்ன பண்ண டா?” என்றான் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே..
அவன் கேட்ட தினுசில் கடுப்பாகி
“போய் துடைப்பம் எடுத்து சுத்தம் பண்ணு”என்றான் ஜெகதீஷ்.
“டேய் லூசா நீ.. அதுக்கு தான் ஆள் வராங்கன்னு அப்பா சொன்னாங்களே.. நான் எதுக்கு பண்ணனும்?”
“தெரியுது தானே? அப்ப எதுக்கு டா இப்ப நம்ம என்ன பண்ணனு கிராஸ் கொஸ்டின்லாம் கேக்கற?”
“ஏண்டா இப்படி? என்னாச்சு உனக்கு? சும்மா கேட்டதுக்கு எல்லாம் கோவப்படுற”
“எனக்கு ஒன்னும் ஆகல.. நீதான் லூசு தனமா கொஸ்டின் கேட்டுட்டு இருக்க…இப்போ அப்பா எங்க இருக்காங்களோ அங்க போய்தான் நம்ம விஷயம் என்னன்னு கேட்க முடியும்..வா போகலாம்” என்ற ஜெகதீஷ் பிரகதீஷை இழுத்துக் கொண்டு அவுட் ஹவுஸிற்கு வந்தான்.
இங்கு மதுராவோ முன் தினம் இருந்த காய்ச்சல் குறைந்து உடல் குளிர்ந்து நன்றாக தூங்கி எழுந்ததால் பதட்டம் குறைந்து மெதுவாய் கண் விழித்த போது, முத்துமாணிக்கம் அவள் எதிரில் இருக்க, “ப்பா” என்று தலையை பிடித்தபடி எழுந்தவளுக்கு, இரவில் நடந்ததெல்லாம் பயங்கரமான கெட்ட கனவு போல தான் இருந்தது.
அவள் எழுந்ததுமே முத்துமாணிக்கம், “வாணி எழுந்துட்டியா மா?”என்றவர் அவளுக்கு ஆறுதலாக எல்லாம் பேசவில்லை.
அவரின் குணமே அது தான் என்பதால் மதுராவும் ஆம் என்பது போல் தலையசைக்க,
“நம்ம வீட்டுக்கு போலாமா? நடந்துடுவியா?”என்று கேட்ட போதுதான்,
தான் தன் வீட்டில் இல்லை என்று உணர்ந்தவளுக்கு,
இரவில் நடந்ததெல்லாம் அடுத்தடுத்து நினைவில் வர, அவளின் உடலில் மீண்டும் நடுக்கம் பரவியது.
அவ்வளவு நேரம் எதிரில் இருந்த முத்து மாணிக்கத்தை மட்டுமே பார்த்தவளின் கண்கள் தன்னை சுற்றி யார் யார் இருக்கிறார்கள்? என்று பார்க்க, முத்துமாணிக்கத்தின் இடப்புறம் இருந்த சோபாவில் ஜெகதீஷ் பிரகதீஷ் இருவரும் அமர்ந்தபடி அவளை பார்த்திருக்க, அவளின் கண்கள் மீண்டும் சுழன்று யாரையோ தேடியது..
அவள் யாரை தேடினாளோ, அவன் அவ்வறையின் வலப்பக்க சுவற்றில் கைகளை கட்டியவாறு சாய்ந்து நின்று அவளை தான் ஆழ்ந்து பார்த்து கொண்டிருந்தான்.
அவன் பார்வை தீட்சையத்தில் துணுக்குற்று தலையை குனிந்து கொண்டவள் தான் அதன் பிறகு நிமிரவே இல்லை..
முத்து மாணிக்கம் “மீண்டும் வீட்டுக்கு போலாமா வாணி?” என்று அழுத்தி கேட்டதும்,”போலாம் பா” என்று விட்டாள் வேகமாய்.
தன்னை ஆழ்ந்து பார்த்தவனின் பார்வையிலிருந்து தப்பிப்பதற்கே அவளிடம் அத்தனை வேகம்!
ஆனால் ஜெகதீஷோ, “ப்பா நம்ம வீட்ல இன்னும் கிளீன் பண்ணி முடிக்கலையே? அதோட கரண்ட் வேற கட் ஆகி இருக்கு.. அங்க எப்படி இவ ரெஸ்ட் எடுக்க முடியும்”
என்றான் தந்தையிடம்.
“இன்னுமா ஆட்கள் வரல?”என்று கேட்டவர் மீண்டும் யாருக்கோ அழைத்து, “சீக்கிரம் அனுப்பிவிடு..” என்று கட்டளை இட்டு விட்டு வைக்க,
“அப்பா இப்ப சொல்லுங்க என்னதான் ஆச்சு? நம்ம வீட்ல ஆல்ரெடி இருந்த ஒர்க்கர்ஸ் யாருமே இல்லையே எல்லாரும் எங்க?”என்று ஜெகதீஷ் கேட்க,
ஒரு நொடி யோசனைக்கு பிறகு,
“நேத்து நைட் நம்ம வீட்ல அட்டாக் நடந்திருக்கு அதுல அடிபட்டு ஹாஸ்பிடல்ல இருக்காங்க” என்றார்.
“என்னப்பா சொல்றீங்க யார் நேத்து அட்டாக் பண்ணது?”என்று கேட்டது பிரகதீஷ் தான்.
“மதுராவ பொண்ணு கேட்டானே ஒருத்தன் ஞாபகம் இருக்கா அவன் தான்..”
“அவர் உங்க பிசினஸ் பார்ட்னர் தானே.. நீங்க கூட அவரோட பார்ட்னர்ஷிப்ப பிரேக் பண்ணிட்டேன்னு சொன்னீங்களே?..ஆனா அவர் எதுக்கு இந்த அளவுக்கு இறங்கி அடிக்கணும் ” என்று தந்தையைப் பார்த்து சந்தேகமாய் கேட்டான் ஜெகதீஷ்.
சாதாரண பிஸ்னஸ் பார்ட்னர் எதற்கு இந்த அளவிற்கு லோக்கலாக இறங்கி அடிக்க வேண்டிய அவசியம் இல்லையே! என்ற சந்தேகம் தான் அவனுக்கு… பழி தீர்க்க வேண்டுமென்றால் தொழிலில் பிரச்சனை செய்யலாம் அதை விட்டுவிட்டு கூலிப்படை மூலம் ஆட்களை அனுப்புவது எல்லாம் அவனை சாதாரண ஆளாக காட்டவில்லை.
முத்து மாணிக்கம் இன்னும் கருப்பசாமியை தவிர மற்ற யாரிடமும் முழு உண்மையை சொல்லாததால்,
அவர் கேள்வி கேட்ட மகனிடம் சமாளிக்கவே முயன்றார்.
“நான் தான் சொன்னேன்ல.. அவன் நெனச்ச எல்லாத்தையும் அடையணும்னு நெனைக்கிறவன்.. அவனோட கண்ணு இப்போ நம்ம வீட்டு பொண்ணு மேல விழுந்திருக்கு… ஒரு பொருள் கிடைக்கலன்னா அத எப்படி அபகரிக்கிறதுன்னு தான் பாப்பான்.. நல்லது கெட்டது எல்லாம் பார்க்க மாட்டான்” என்றார்.
அதில் வெகுண்டெழுந்த பிரகதீஷ்,
“எவ்வளவு தைரியம் இருந்தா நம்ம வீட்டுக்கே ஆள் அனுப்பி நம்ம வீட்டு பொண்ணு கிட்டயே கைவரிசைய காட்டி இருப்பான்.. நான் மட்டும் அந்த டைம் வீட்ல இருந்தா அவனுங்கள எல்லாத்தையும் போலீஸ்ல புடிச்சு குடுத்துருப்பேன். இப்பவும் ஒன்னு கெட்டு போகல..பேசாம போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிடலாமா ப்பா?”என்று கேட்டான் பிரகதீஷ்.
‘இவன் ஒருத்தன் முட்டா பய.. என்னையும் சேர்த்து மாட்டி விட்டுடுவான் போலயே’ என்று அவனை முறைத்தவர்,
“எனக்கு தமிழ்நாட்டில் மட்டும் தான் அரசியல் செல்வாக்கு இருக்கு.. ஆனா அவனுக்கு சென்ட்ரல் கவர்ன்மெண்ட் வர இன்ஃப்ளையன்ஸ் இருக்கு.. போலீஸ் வச்சி எல்லாம் அவன எதுவும் பண்ண முடியாது” என்றதும்,
“போலீசுக்கும் போக முடியாதுன்னா அந்த ஆள என்னதான் செய்ய? அவனுக்கு பயந்து இந்த குட்டச்சிய அந்த ஆளுக்கு கல்யாணம் பண்ணியா கொடுக்க முடியும்?”என்று தன் முட்டை கண்ணை விரித்து அவர்கள் பேசுவதையே வாய் பார்த்துக் கொண்டிருந்த மதுராவை சுட்டிக்காட்டி பிரகதீஷ் கேட்க,
அப்போதுதான் மதுராவை வைத்துக்கொண்டு அவர்கள் அனைத்தையும் பேசியது அவர்களுக்கு உரைத்தது.
முத்து மாணிக்கம் மதுராவிடம் எதையும் சொல்லக்கூடாது அவளுக்கு விஷயம் தெரிவதற்குள் அவளை திருமணம் செய்து வெளிநாட்டிற்கு அனுப்பி விட வேண்டும் என்று நினைத்து இருந்தார். அதையே மகன்கள் இடமும் சொல்லி வைத்திருந்தார்.
ஆனால் இப்பொழுது அந்த கயவனின் சூழ்ச்சியால் அவளுக்கு உண்மை தெரிந்தாக வேண்டிய கட்டாயம். சரி இதற்கு மேல் மறைத்து எந்த பயனும் இல்லை.
மகள் பயந்திருப்பாள் என்று நினைத்தவர், மேலோட்டமாய் நடந்ததை சொல்லி,
“நீ பயப்படாத வாணி அப்பன் நான் இருக்கும் போது உனக்கு எதுவும் வர விட்டுருவேனா? “என்று வீரமாய் சொன்னாலும்,
அவருக்குமே உள்ளுக்குள் பயம் தான்… வெளிக்காட்டி கொள்ளாமல் மறைத்தார்.
ஏற்கனவே தனக்கு வந்திருக்கும் ஆபத்தை பற்றி தெரிந்திருந்ததால், மதுராவினால் தைரியமாய் “நீங்க பார்த்திருப்பீங்கன்னு தெரியும்பா” என்று சொல்ல முடிந்தது.
மகள் தைரியமாய் இருப்பதை பார்த்ததும் தெளிந்தவர், தன் திட்டத்தை சொல்லலானார்.
“அப்பா சொல்றத நல்லா கவனிச்சுக்கோ வாணி, இந்த வார கடைசில உனக்கு நிச்சயதார்த்தம்ன்னு தெரியும். ஆனா அடுத்த நாளே இன்னொரு முகூர்த்த நாள் வருது அதுலையே சிம்பிளா கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்.. அன்னைக்கு ஈவினிங் பத்ரி கூட நீ டெல்லி கிளம்புற.. அங்கிருந்து அடுத்த நாள் உங்களுக்கு ஜெர்மனிக்கு பிளைட்” என்று தன் திட்டத்தை சொல்ல, மதுராவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
அவரின் இத்தனை வேகம் தனக்காகவும் தன்னை பாதுகாக்கவும் என்று புரிந்தாலும் அந்த பத்ரியை நினைத்தாலே அவனின் பார்வையும் பேச்சும் நினைவில் வர அவளுக்கு உடல் எல்லாம் ஒருவகை அசூகையால் கூசியது.
பிரகதீஷோ, “அப்போ கல்யாணத்துல மட்டும் அந்த ஆளு வந்து பிரச்சனை பண்ண மாட்டானா? அப்ப என்ன செய்விங்க அப்பா” என்று கேட்டு வைக்க,
“டேய் உனக்கெல்லாம் வாயில நல்ல வார்த்தையே வராதாடா”என்று மகனை அதட்டினாலும், அவன் கேட்டதற்கு பதில் சொல்லத்தான் செய்தார்.
“அப்படி எதுவும் நடக்க கூடாதுன்னு தான் கருப்பசாமிய இவளுக்கு பாதுகாப்பா கூட வச்சிருக்கேன்..”என்று அவ்வளவு நேரம் தன் இருப்பை காட்டிக் கொள்ளாமல் சுவரோடு சாய்ந்து நின்றவனைக் சுட்டிக் காட்டினார்.
“இவன் என்ன பெரிய பிஸ்தாவா? ஜஸ்ட் ஒரு பாடிகார்ட் தானே.. இவன தாண்டி எதுவும் பண்ண முடியாதா?”என்று அலட்சியமாய் அவனைப் பார்த்தபடி கேட்டு வைக்க,
“இதுவரை இவன் கிட்ட ஒரு பொறுப்ப ஒப்படைச்சா அது இம்மி அளவு கூட பிசங்கியதில்ல… இதுக்கு முன்னாடி ஒரு மிகப்பெரிய கம்பெனில பிரைவேட் டிடெக்டிவ்வா இருந்தவன். பெரிய பெரிய ஆளுங்களுக்கு பாதுகாப்பா அவங்களுக்காக நிறைய விஷயம் பண்ணி கொடுப்பான்.. இவன்கிட்ட புத்தியும் இருக்கு சக்தியும் இருக்கு… இப்போதைக்கு இவன் நம்ம கிட்ட இருக்கிறது தான் நம்மளோட பெரிய பலம்” என்று கருப்பசாமியின் அருமை பெருமைகளை அவர் அவிழ்த்து விட, அதுவரை எகத்தாளமாய் பேசிக் கொண்டிருந்த பிரகதீஷ் கூட, ‘ஓஹோ அவ்வளவு பெரிய ஆளா இவன்?’ என்றபடி கருப்பசாமியை புதிதாக பார்ப்பது போல் பார்த்தான்.
மதுராவோ தலையை குனிந்தபடி அவனை பார்ப்பதை தவிர்த்தாள்.
ஆனால் இத்தனை பேச்சில் ஜெகதீஷ் மட்டும் வாயே திறக்கவில்லை. தந்தையின் நடவடிக்கைகளை மட்டுமே கவனித்தபடி இருந்தான். அவனுக்கு தந்தை தங்களிடம் எதுவோ மறைப்பது போல் தோன்றியது.
அதற்குள் சுத்தம் செய்வதற்கும் மின் இணைப்பை சரி செய்வதற்கும் ஆட்கள் வந்துவிட்டதாக தகவல் சொல்லப்பட, மேற்பார்வையிட ஜெகதீஷ் பிரகதீஷ் இருவரும் சென்றனர்.
முத்து மாணிக்கமும் ஒரு முக்கியமான விடயமாக தங்கள் கட்சித் தலைவரை பார்த்து விட்டு வருவதாக சொன்னவர்,
அங்கு வீட்டை சுத்தம் செய்து முடித்ததும் மதுராவை அழைத்து செல்லலாம் அதுவரை அவள் இங்கேயே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு தான் கிளம்பினார்.
மறுத்து பேச முடியாத மதுராவிற்கு கருப்பசாமி உடன் தனியாக இருப்பது நெருப்பின் மேல் நிற்கும் நிலை தான்! அவனின் நேற்றைய கொடூர அரக்க முகமே மீண்டும் மீண்டும் நினைவில் வர அவளுக்கு பயம் தான் அதிகமாகியது.
ஆனால் அவனோ, அவளை கண்டுகொள்ளாமல்
சமையலறை பக்கம் சென்றவன், சிறிது நேரத்தில் காய்ச்சலுக்கு இதமாக முருங்கைஇலை சூப் செய்து சுடச்சுட ஆவிப்பறக்க பவுலில் கொண்டு வந்து அவள் முன்னால் வைத்தான்.
கூடவே அவள் போட வேண்டிய மாத்திரைகளை பிரித்து வைத்தவன் அவளிடம் எதுவும் பேசவில்லை. அங்கிருந்து செல்லவும் இல்லை. அவள் அருகில் தான் நின்றான் அவளையே பார்த்தபடி..
கீரை என்றாலே மூச்சிரைக்க மூன்றரை கிலோமீட்டர் ஓடிவிடும் மதுராவிற்கு அவன் கீரையை வைத்தே சூப் செய்து கொண்டு வந்திருந்தான்.
அடக்கொடுமையே! என்ன இது? பச்சை நிறத்தில்… என்பது போல் அதை ஒருமாதிரி வினோதமாய் பார்த்தவளுக்கு, அதை குடிக்க சுத்தமாக பிடிக்கவில்லை.
ஆனால் பக்கத்தில் நின்று தன்னையே உற்று பார்த்துக் கொண்டிருந்தவனிடம் அதை நேரடியாய் சொல்லவும் முடியாமல், பவுலில் இருப்பதை பார்த்து மெல்லவும் முடியாமல், மதுரா பரிதாபமாய் முழிக்க, அவனோ அசராமல் ‘நீ குடித்து முடிக்காமல் நான் செல்வேனா?’ என்பது போல் அவள் முன்னாலேயே நிற்கவும், வேறு வழியின்றி பவுலை கையில் எடுத்தவள், சுடச்சுட இருந்ததை ஒரு ஸ்பூன் எடுத்து ஊதோ ஊதென்று ஊத… நேரம் தான் கடந்ததே தவிர இன்னும் ஒரு வாய் கூட உள்ளே போகவில்லை. பெரிய பவுலில் இருந்த சூப்பே ஆறிப்போய் குளிர்ந்தாலும் இவள் நான் இன்றைக்குள் இந்த ஸ்பூனில் இருப்பதை வாய்க்குள் வைத்து விடுவேனா? என்பது போல் தொடர்ந்து ஊதிக் கொண்டிருக்க, அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த
கருப்பசாமிக்கு கடுப்பாகி போனது. அவளே பேசாமல் தான் பேசக்கூடாது என்று நினைத்திருந்தவனின் பொறுமை அவளின் ஆமை வேகத்தில் காற்றில் பறந்து எல்லையே கடக்க,
சட்டென்று பவுலை கையில் எடுத்தவன், அவளின் தலையை தாடையோடு இறுக்கிப் பிடித்து சிறு பிள்ளையை மருந்து குடிக்க வைப்பது போல், அவள் திமிரத் திமிர சூப்பை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தான் அவன்.
அவனின் இத்தகைய செயலை கிஞ்சித்தும் எதிர்பாக்காதவளின் கண்கள் பேரதிர்ச்சியில் விரிய, முழுவதுமாய் குடிக்க வைத்த திருப்தியுடன் நிமிர்ந்தவனின் கன்னத்தை ஓங்கி அறைந்திருந்தாள் மதுரா.
தொடரும்…
மதுரா அடிச்சிட்டாளா?
Haha ama sis😅
Haha ama sis😅
மதுரா?.
😅😅