Loading

3. நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன் 

கருப்பசாமி மதுராவின் வீட்டிற்கு அலுவல் சம்பந்தமாக மட்டுமே இருமுறை வந்திருக்கிறான். மற்றபடி அவன் வேலையெல்லாம் அரசியல்வாதிகள் சொல்லும் அண்டர் கிரவுண்ட் வேலைகள் தான். எங்காவது சுற்றிக் கொண்டே இருப்பான் அவனுக்கு ஓர் இடத்தில் இருந்து பழக்கம் இல்லை.
அப்படிப்பட்டவனின் மீது முத்துமாணிக்கத்திற்கு அளவு கடந்த நம்பிக்கை இருந்தது.
அந்த நம்பிக்கையில் தான் அவர் தன் மகளின் பாதுகாப்பை அவன் கையில் கொடுத்தது.
முழு விவரம் சொல்லவில்லை என்றாலும் அவனால் தன் மகளை பாதுகாக்க முடியும் என்று நம்பினார்.

அதன்படி அன்றே அவன் தங்குவதற்காக மாளிகையின் பின்புறத்தில் இருந்த அவுட் ஹவுஸில் இடம் ஒதுக்கப்பட்டது.

இது எதையும் அறியாத மதுரா, நாளை நடக்கவிருக்கும் பெண் பார்க்கும் படலத்தை நினைத்து வேதனையுடன் பால்கனியில்  நின்று, தன் வாழ்க்கையை போலவே இருண்டு கிடந்த வானத்தையை வெறித்திருக்க, ஏதோ சத்தம் கேட்டு கீழே பார்த்தாள்.

கீழே தோட்டத்தில்  கருப்பசாமி நின்றிருந்தான். அன்று காலையில் பார்த்த ஃபார்மல் உடையில் இல்லாமல், இலகுவாய் கருப்பு நிற டி ஷர்ட் ட்ராக் பேண்ட் அணிந்து அவ்விரவு ஒளியில் நிழல் போல தெரிந்தான் அவள் கண்களுக்கு.

இவன் எப்படி இந்நேரத்தில் இங்கே? என்று யோசிப்பதற்குள்,
அவன் கையில் இருந்ததைத் தூக்கி அவளிடம் காட்டினான்.
அது அவளது மொபைல் போன். காரை விட்டு இறங்கும் அவசரத்தில் மொபைலை சார்ஜ் போடுவதற்காக டேஷ் போர்டில் வைத்தவள் எடுக்க மறந்து இருந்தாள் போலும். அதை காட்டி அவளை வாங்க வரும் படி கீழே அழைத்தான்.

மதுராவோ அதை புரிந்தவளாக, நேரத்தை பார்க்க மணி பன்னிரண்டாகி ஐந்து நிமிடங்கள் கடந்திருப்பதைக் காட்ட, அவளுக்கு கீழே செல்வதில் இஷ்டமில்லை. அதோடு தான் இருக்கும் மனநிலையில் அவனிடம் பேசவும் இஷ்டமில்லை.

காலையில் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தால் காலை பத்து மணிக்கே அவளைப் பெண் பார்க்க  வருவதாக இருந்ததால் அதற்கும் வாய்ப்பில்லை.

தூக்கிப்போட்டு பிடிக்கும் தூரத்திலும் அவளது அறை பால்கனியும் இல்லை. பின்னே  அவள் அறை மூன்றாம் தளத்தில் அல்லவா இருந்தது.

என்ன செய்ய? கூடையில் கயிறு கட்டி கீழே இறக்கி பெற்றுக் கொள்ளலாமா?   என்றெல்லாம் இவள் இல்லாத மூளையைக் கசக்கி பிழிந்து யோசித்துக் கொண்டிருக்க,
அவளின் முதுகுக்கு பின்னால்
“தலைய எதுக்கு இப்போ தட்டிட்டு இருக்க ? வான்னு சொன்னா வரமாட்டியா?”என்று கேட்டபடி பால்கனி சுவரிலிருந்து உள்ளே குதித்து வந்தது சாட் சாத் கருப்பசாமியே தான்.

இப்பொழுது ஒரு நொடி முன்பு கூட கீழே தானே நின்றான் அதற்குள் எப்படி இங்கே? என்று மந்திரம் போட்டது போல் வந்திருந்தவனைப் பார்த்து வாயைப் பிளக்க,
அவள் கையில் மொபைலை கொடுத்தவன்,”இன்னும் தூங்காம என்ன பண்ணிட்டு இருக்க?”என்று கேட்டான் நிதானமாக அவ்விடத்தை சுற்றிலும் பார்த்துக் கொண்டே!

மதுராவோ இன்னுமே அவன் எப்படி மேலே வந்தான்? என்றே யோசித்தவளுக்கு, அவன் கேட்ட கேள்வி தெளிவாக காதில் விழாததால் புரியாமல், “ஹான்? என்ன சொன்னீங்க இப்போ?” என்று கேட்டு வைக்க,

அலை பாய்ந்து கொண்டிருந்த அவளின் கண்களைப் பார்த்தவன்,
“என்னாச்சு உனக்கு? இன்னும் என் மேல கோவமா இருக்கியா?” என்றான் சம்பந்தம் இல்லாமல்.

அவன் கேள்வியில் ஒரு நொடி அதிர்ந்தாலும்,”கோபப்படுற அளவுக்கு நம்ம ரெண்டு பேருக்கும் இடையில சொல்லிக்கிற மாதிரி எந்த ரிலேஷன்னும் இல்லையே மிஸ்டர்? எனக்கு எப்பவுமே எனக்கு நெருக்கமா உள்ளவங்க கிட்ட மட்டும் தான் கோபம் வரும்! கண்டவங்க மேல எல்லாம் கோவப்படுறதுக்கு நான் கர்ணன் பரம்பரை இல்ல”என்று அவனை நேர் பார்வை பார்த்துச் சொல்லிவிட்டாள்.

அவள் உபயோகித்த வார்த்தைகளோ அவள் உடல் மொழியோ எதுவோ ஒன்று அவனைப் பாதிக்க, அவன் முகம் இறுகியது. ஆனாலும் வெளியே கோபப்படாமல் அமைதியாக தான்  அவளைப் பார்த்தான். ஆனால் அதில் அழுத்தம் அதிகமாக இருந்தது.

அவனின் அமைதியில் மதுராவிற்கே தான் கொஞ்சம் அதிகப்படியாக தான் பேசி விட்டோம் என்று தோன்றி விட,
“மொபைலை கொண்டு வந்து கொடுத்ததுக்கு தேங்க்ஸ் மிஸ்டர் பிளாக்.. அதோட இப்போ ஓவரா பேசினதுக்கு மன்னிச்சு ப்ளீஸ்.. நான் வேற டென்ஷன்ல இருந்தேன். அது அப்படியே உங்க கிட்ட காமிச்சிட்டேன்” என்றாள் வார்த்தைகளுக்கு வலிக்காமல் மெதுவாய்.

அவள் உபயோகித்த மிஸ்டர் பிளாக் என்ற வார்த்தையே அவனின் முகத்தில் இருந்து இறுக்கத்தை போதுமான அளவுக்கு குறைத்திருக்க,   “ரொம்ப நேரம் முழிச்சிருக்காதே தூங்கு… குட் நைட்.. ஏதாவது ஹெல்ப்னா கூப்டு” என்றபடி எவ்வழி வந்தானோ அந்த வழியாகவே குதித்தான்.. தாவினான்.. பைப்பின் மீது சறுக்கியும் ஜாக்கி சான் போல சாகசம் செய்தவாறு அவன் கீழிறங்க,

‘இவன் என்னடா குரங்கோட மோசமா இப்படி தவ்வுறான்.. இத பாத்தா குரங்குகள் எல்லாம் சூசைட் பண்ணிக்குமே’என்று வடிவேலு பாணியில் நினைத்தவளுக்கு தன்னாலே சிறுமுறுவல் இதழ்களில் படர்ந்தது.

“ஏதாவது ஹெல்ப்னா கூப்பிடுன்னு சொன்னானே? கூப்ட்டா உடனே பறந்து வந்துடுவானா?”என்று கிண்டலாய் நினைத்தவளுக்கு தெரியாது! அவன் அவளை நிழல் போல.. அவன் தொடர போகிறான் என்று!

அவ்வளவு நேரம் இருந்த மனநிலை தலைகீழாய் மாற,
அவனைப் பற்றிய யோசனையிலேயே உள்ளே சென்று படுத்தவள் தூங்கியும் விட்டாள்.

மறுநாள் காலை பெண் பார்க்கும் படலம், வினோதா அவளின் தந்தையின் ஆணைக்கேற்ப அழகு நிலைய பெண்களை மதுராவிற்காக ஏற்பாடு செய்திருக்க, உடை முதல் நகைகள் வரை எல்லாமே வினோதாவின் ஏற்பாடு தான்.

வினோதா பேஷன் டெக்னாலஜி படித்தவள். அவளுக்கே சொந்தமாக கைத்தறி தொழிற்சாலை ஒன்றும் மிகப்பெரிய டெக்ஸ்டைல்ஸ் ஷோரூம்  ஒன்றையும் அமைத்துக்  கொடுத்திருந்தார் முத்துமாணிக்கம். அங்கிருந்தே மதுராவிற்கு தேவையான உடைகள் அனைத்தும் வந்திறங்கியது.

வினோதா அதிகமாய் மதுராவிடம் பேசிக்கொள்ள மாட்டாள் தான் என்னவென்றால் என்ன? அப்படி தான் இருக்கும் அவர்களின் உரையாடல்.

இன்றும் அப்படியே! அவளுக்கு தேவையான உடைகள் மற்றும் அணிகலன்களை மட்டும் எடுத்துக் கொடுத்தவள், “ரெடி ஆகிட்டு வெயிட் பண்ணு நான் வந்து கூப்ட்டு போறேன்” என்றவள்
அழகு நிலைய பெண்களிடம் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு கீழே சென்று விட்டாள்.
அவள் செல்வதையே  பார்த்திருந்த மதுராவிற்கு  பழைய ஞாபகங்கள் நெஞ்சில் அலை அலையாய்..

சிறு வயதில் “வினோ க்கா வினோ க்கா”என்று மழலை குரலில் காலை சுற்றி வரும் ஐந்து வயது மதுராவை ஒரு முறை இரக்கமே இல்லாமல் கீழே தள்ளிவிட்டு சென்றிருக்கிறாள் வினோதா.

அந்த வயதிலேயே “எப்படி அடிபட்டுச்சு பாப்பா? என்று யாரும் கேட்டால்,
“விளையாடும் போது தெரியாம விழுந்துட்டேன்” என்று சொல்லி அழகாய் புன்னகைப்பாள் மதுரவாணி.

இதே போல அடிக்கடி ஜெகதீஷ் பிரகதீஸ் மூலமாக காயப்பட்டால், புன்னகையால் மறைத்தாள்.
வளர வளரதான் வீட்டில் உள்ளவர்களின் ஒதுக்கம் புரிந்தது. ஆனால் ஏன் என்ற காரணம் தான் தெரியவில்லை. எதுவும் தப்பு செய்து விட்டேனா? நான் என்று மட்டும் தான் யோசிப்பாள்.
அச்சிறு  பெண்ணிற்கு அதற்கு மேலும் யோசிக்கத் தெரியவில்லை.

அப்படி இருந்த சமயத்தில் ஒரு முறை தோட்டத்தில் இருந்த ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த பத்து வயது மதுராவை அவளுடன் விளையாடுவது போல் ஜெகதீஷ் பலமாய் கீழே தள்ளிவிட்டு விட்டான்.கீழே கிடந்த கல் அவளின் தலையில் ஆழமாய் குத்தி இறங்கி விட, அளவுக்கதிகமாய் உதிரம் போக, மதுரா துடித்துப் போய் அழ ஆரம்பித்தாள். ரத்தத்தை பார்த்து
பயந்து போனவன் அங்கிருந்து ஓடி விட, பாவம் குழந்தை! வலியில் அழுதழுது அதிகளவு இரத்தப்போக்கின் காரணமாக மயங்கி இருந்தாள்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு அப்புறமாக தான் தோட்டத்தில் வேலை செய்பவர்களால் பார்க்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். இன்னும் சில நொடிகள் தாமதமாக கொண்டு வந்திருந்தாலும் அவளை உயிரோடு பார்த்திருக்க முடியாது என்றனர் மருத்துவர்கள். ஆனால் இன்னுமே ஆபத்து கட்டம் தாண்டாமல் மதுரா கோமாவிற்கு செல்ல, ஓஞ்சானாய் இருந்தவள் பிழைப்பாளா மாட்டாளா என்று சந்தேகமே வந்துவிட்டது.

அது தேர்தல் சமயம் என்பதால் முத்து மாணிக்கம் வேறு தேர்தலுக்கான பிரச்சாரம், கட்சி மீட்டிங் என்ற நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தார்.

அவருக்கும் விஷயம் சொல்லப்பட, நடு இரவில் உரிய பாதுகாப்போடு மருத்துவமனைக்கு அவளை வந்து பார்த்தவர்,
அவள் அருகில் குற்ற உணர்ச்சியாய் நின்று கொண்டிருந்த ஜெகதீஷையை முதல் முறையாக அடித்திருந்தார்.

தோட்டக்காரன் ஏற்கனவே மதுராவும் ஜெகதீஷும் ஒன்றாக விளையாடியதாக சொல்லி இருந்தான்.
இப்பொழுது அவன் முகமே அவன் தான் இதற்கு காரணம் என்று வெளிச்சம் போட்டு காட்டி விட அதற்கு தான் வசமாய் கொடுத்தார் ஒரு அடி. அவன் கீழே சுருண்டு விழுந்தான்‌.
அதை பொறுக்க முடியாமல்,
“அப்பா போயும் போயும் அவளுக்காக அந்த பொம்பளையோட பொண்ணுக்காக என் தம்பியை நீங்க எப்படி அடிக்கலாம்?”என்று பதினைந்து வயது நிரம்பிய வினோதா அவரை எதிரியை பார்ப்பது போல் பார்த்தாள். பிரகதீஷும் தன் அக்காவை ஒட்டியபடி பயந்து போய் நின்றான்.

“அவ சின்ன குழந்தை அவள போய் இப்படி தள்ளிவிட்டு இருக்கானே? இவனை கொஞ்சவா செய்யணும்?”
என்று கேட்ட முத்துமாணிக்கத்திற்கு முகம் கோபத்தில் சிவந்து போனது.

“இவனும் சின்ன பையன் தான் அவளோட ஒரு வயசு தானே கூட? ஏதோ தெரியாம விளையாட்டுக்கு பண்ணிட்டான்” என்று கொஞ்சமும் இரக்கமில்லாமல் பேசும் மூத்த மகளை பார்த்தவருக்கு தெரிந்துவிட்டது.

இனி மதுரா இந்த வீட்டில் இருந்தால் அவளுக்கு நிம்மதி என்பதே கிடைக்காது என்று,
அதனால் ஏதோ முடிவு எடுத்தவராக அங்கிருந்து சென்றவர், மதுரவாணி உடல்நிலை தேறி சரியானதும் அவளை ஊட்டி கான்வென்டில் சேர்த்து விட்டார்.

பத்து வயது நிரம்பிய பிள்ளைதான் என்றாலும் அவளிடம் அப்படி ஒரு பக்குவம் இருந்தது. அழவில்லை.. அரற்றவில்லை.. அதே சமயம் சிரிப்பும் இல்லை. ஒன்றும் சொல்லாமல் சரி என்று சொல்லிவிட்டு போனாள்.

பள்ளி படிப்பு முடிந்ததும் அழைத்துக் கொள்ளலாம் என்று தான் நினைத்தார். ஆனால் அவளோ கல்லூரியையும் தோழிகளோடு முடித்து வருவதாக சொல்லி கவுன்சிலிங்கில் கோயம்புத்தூரில் மிகப்பெரிய கல்லூரியில் சேர்ந்தாள். அங்கேயே முதுகலை படிப்பையும் முடித்துவிட்டு, இதோ தந்தையின் ஆணைக்கிணங்க… வந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் வந்திருக்கிறாள் மதுர வாணி.

பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தவளுக்கு அத்தனை அழகாய் அலங்காரத்தை முடித்திருந்தனர் அழகு நிலைய பெண்கள்.

“வாவ் உங்க ஹேர் இவ்வளவு திக்கா இருக்கு இந்த காலத்துல யார் இடுப்புக்கு கீழ முடி வளர்க்கிறா.. உங்களுக்கு சவுரியே தேவப்படல”என்று யூ பின்னால் அவளின் நெத்தி சூட்டியை சரியாக குத்திவிட்டு நிமிர்ந்தாள்.

இள மஞ்சள் நிற பட்டில் குங்கும நிற பார்டர் வைத்த புடவை, அவள் நிறத்தோடு அத்தனை அழகாய் பொருந்தியது. எளிமையான ஆபரணங்கள் அவளின் அழகை எடுத்துக்காட்ட, ஒரு இள மஞ்சள் நிற ரோஜாவை போல மின்னினாள் மதுர வாணி.

அதற்குள் வினோதாவும் அவளை அழைக்க வந்து விட, ஒரு நொடி அவளை நின்று பார்த்தவள்,
“கீழ கூப்பிடுறாங்க வா”என்று அவளின் கையை மட்டும் படாமல் பிடித்தபடி அவளை அழைத்து சென்றாள்.

கீழே முத்துமாணிக்கத்தின் தங்கை குடும்பம் அவர்களின் உறவுகள் என்று ஒரு கூட்டம் வந்திருந்தது.

மதுராவை கீழே அழைத்து வந்த வினோதா, அனைவரையும் நமஸ்காரம் செய்யும்படி சொல்ல, அவள் சொன்னபடி செய்ததும் அவளின் கையில் தேநீர் கோப்பைகள் நிறைந்த சர்விங் பிளேட் கொடுக்கப்பட்டது.

“போய் எல்லாருக்கும் கொடு”என்று வினோதா அவளின் முதுகில் தட்டி சொல்ல, கூச்சமாக இருந்ததால் அங்கிருந்தவர்களின் முகத்தைக் கூட பார்க்காமல் டீ கப்பை கொடுத்தவள், ஒருவனுக்கு கொடுக்கும் பொழுது மட்டும், கப்பை பிடிக்கும் சாக்கில் அவளின் கையை அவன் பிடித்து அழுத்தியதும்‌ பதறி தான் போனாள் மதுரா.

அதில் அவள் கைகளில் இருந்த கப் தவறி மதுராவின் காலில் விழப் பார்க்க, ஒரு நீண்ட வலிய கரம் வந்து சூடாக இருந்த டீ கோப்பையை சிந்தாமல் சிதறாமல் உடையாமல் பிடித்திருந்தது.

ஏற்கனவே பழக்கப்பட்ட கை என்பதால் மதுரா அந்தக் கையின் சொந்தக்காரனை நிமிர்த்து பார்க்க, கருப்பசாமி தான் தேநீர் கோப்பையை பிடித்தபடி நின்றிருந்தான். இவன் எப்படி இங்கே? என்று மதுரா அவனையே வாய் பார்க்க,

“என்ன பொண்ணுக்கு பையன பார்த்து தான் வெட்கம் போல காஃபிய கூட கீழ் கொட்ட பாத்துட்டாளே”என்று வந்திருந்தவர்களில் ஒரு பெருசு வேடிக்கையாக சொல்ல, மதுரா விழித்தாள்.

அவளை பெண்பார்க்க வந்திருந்த பத்ரிநாத் அவளைக் கேள்வியாக பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் தான் தன் கையை பிடித்து அழுத்தி இருக்கிறான் என்று தெரிந்துவிட, மதுரா அவனை அனைவரின் முன்னிலையிலும் முறைக்க முடியாமல் உள்ளுக்குள் எரிச்சலோடு தான் அவனைப் பார்த்ததே!

அதற்குள் கருப்பசாமியும் கையில் பிடித்திருந்த தேநீர் கோப்பையை அவளது சர்விங் பிளேட்டில் வைத்தவன், “கவனம்” என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு எச்சரித்துவிட்டு நிழல் போல அங்கிருந்து மறைந்தான்.

அதற்குள் பத்ரிநாத் தன் மாமன் முத்துமாணிக்கத்திடம் இப்பொழுது சென்றவனைப் பற்றி விசாரிக்க, அவரும் நம்ம பாடிகார்ட் தான் என்று மட்டும் பொத்தாம் பொதுவாய் சொல்லி வைத்தார்.

பத்ரிநாத்தும், “ஓ அப்படியா?”என்றதோடு முடித்துக் கொண்டான்.

இப்பொழுது மீண்டும் மதுரா பத்ரிநாத்திடம் டீ கோப்பையை நீட்ட, “தேங்க்ஸ்” என்று சொல்லி டிசென்ட்டாக எடுத்துக் கொண்டவனின் கண்கள் மதுராவின் மேனியை வலம் வர, அதை உணர்ந்தவளுக்கு நெருப்பின் மேல் நிற்கும் நிலைதான்.

அதற்குள் பெரியவர்கள் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு செல்ல, முத்துமாணிக்கத்தின் தூரத்து தங்கையும் பத்ரிநாத்தின் அம்மாவும் ஆன கஜலட்சுமி மதுரவாணிக்கு தாங்கள் கொண்டு வந்திருந்த தாம்பூலத்தில் இருந்த பூவை எடுத்து வைத்து விட்டார். கூட இன்னும் சில தங்கை முறை பெண்களும் அவருக்கு உதவி செய்ய, பூ வைக்கும் நிகழ்ச்சி முடிவுற்றது. அடுத்து நிச்சயதார்த்த தேதி குறிக்கப்பட்டு, பெரியவர்களின் பேச்சு வார்த்தைக்கு அட்சரமாய் வெற்றிலை பாக்கு தட்டு மாற்றப்பட, பத்ரிநாத் மதுரவாணி இருவரையும் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க சொன்னார்கள் பெரியவர்கள்.
அதன்படி இருவரும் அருகருகே நின்று ஆசிர்வாதம் வாங்க ஒவ்வொரு முறை தரையில் விழும்போதும் பத்ரி அவளின் கைகளை உரசுவதும் பிடிப்பதுமாக இருக்க, மதுரா முயன்று அவனிடம் இருந்து கைகளை பிரித்துக் கொண்டாள் அவள் முகமே கலங்கிப் போய் இருந்தது.

அதை சற்று தள்ளி நின்ற பிரகதீஷ் பார்த்து விட்டான். கூடவே மதுராவின் மேலையே கண்களை வைத்திருந்த அவளின் கருப்பு நிழலான கருப்பசாமியின் கண்களும் பார்த்துவிட்டது.

பிரகதீஷுக்கு என்னதான் மதுராவை பிடிக்காது என்றாலும் பத்ரிநாத் மீது கோபம்தான் வந்தது.
என்னதான் இருந்தாலும் அவள் தங்கள் வீட்டுப் பெண், இப்பொழுதுதான் பூவைத்து இருக்கிறார்கள் அதற்குள் அவன் இப்படி சில்மிஷம் செய்வது சரியில்லை என்று நினைத்தான்.

ஆனால் அத்தனை பேரின் முன்னிலையில் எதையும் சொல்ல முடியாமல் பத்ரிநாத்தை முறைத்துக் கொண்டிருந்தான்.

ஆனால் கருப்பசாமி அவனைப் போல் அமைதியாக இருக்காமல், தன்னிடம் இருந்த சிறு கல்லை சுண்டி விட அது சரியாக பத்ரிநாத்தின் இடது கை மணிக்கட்டில் சுள்ளன்று சென்று அடித்தது.

அதில் அவன் வலியில் துடித்து கையை உதற மதுரா அவனிடமிருந்து தள்ளி நின்று கொண்டாள்.

பத்ரிநாத் எங்கிருந்து கல் வந்து தன் மேல் விழுந்தது என்று சுற்றும் முற்றும் பார்க்க அவன் கண்ணுக்கு வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை.

அதற்குள் அவன் சித்தப்பா முறையில் இருந்தவர் “என்னாச்சு பத்ரி? கைய தேச்சுக்கிட்டு அங்குட்டு இங்கிட்டு பாத்துட்டு இருக்க என்ன ஆச்சு?” என்று கேட்க,
“ஒன்றும் இல்லை” என்று சமாளித்தான் அவன்.
அதற்குள் மதுராவை உள்ளே கூட்டி சென்று விட, ஏமாற்றமாய் உணர்ந்தாலும்
‘சரி எப்படி இருந்தாலும் அவள் தனக்குத்தானே?’ என்று மனதை தேற்றிக்கொண்டான்.

**********

ஆனால் மறுநாளே பெரிய பூங்கொத்துடன் மதுராவை காண்பதற்காக வந்துவிட்டான் பத்ரிநாத்.

முத்து மாணிக்கம் அந்த சமயத்தில் வீட்டில் இல்லை.
ஜெகதீஷ் பிரகதீஷ் இருவரும் தங்களது ஆஃபீஸிற்கு சென்றிருக்க, வினோதா தன் கணவனுடன் மாமியார் வீட்டிற்கு சென்றிருந்தாள்.

வீட்டில் மதுரவாணி மட்டும் தனியாக இருக்க,
அது வசதியாய் போனது அவனுக்கு.

மதுராவை காண வேண்டும் என்று சொல்ல, அவ்வீட்டின் மாப்பிள்ளையாகப் போகிறவன் என்ற மரியாதையால் பணியாளர்களும் அவனை உபசரித்து ஹாலில் அமர வைத்தனர்.

அவன் வந்திருப்பதைப் பற்றி மதுரவாணிக்கும் தகவல் சொல்லப்பட, “இவன் எதுக்கு இந்நேரத்தில் வந்திருக்கிறான்?”
எரிச்சலாக கீழே வந்தவளிடம் ஆங்கில பாணியில் முட்டிப் போட்டு பெரிய பூங்கொத்தை கொடுத்தவன், அவளின் அனுமதி இன்றி அவளின் கைகளைப் பிடித்து முத்தமிட போக, அவள் கைகளை அவனிடமிருந்து பிடுங்க, அவன் மீண்டும் அவளின் கையை பிடிக்கும் ஒரு நொடியில் அவளின் கைகளுக்கு பதிலாக மற்றொரு முரட்டுத்தனமான கை அவனின் கைகளுக்குள் சிக்கியது.

பத்ரிநாத் யார்? என்று பார்க்க நின்று கொண்டிருந்தது கருப்பசாமி.

ஒரு நொடி அதிர்ந்தாலும் மதுராவின் வருங்கால கணவன் என்ற மிதப்பு அவனுக்கு வர, “ஹே பாடிகார்ட் கெட் லாஸ்ட்.. அது என்ன இன்டீசண்டா எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வர்றது”

கருப்பசாமி நூல் அளவு கூட அசையாமல் அவனை உறுத்து விழிக்க, அவனின் உயரமும் தோற்றமும் பத்ரிநாத்தை கொஞ்சம் அதிகமாய் பயம் தான் காட்டியது.

“மதுரா என்ன இது? இவனோட ஆட்டிட்யூட் எனக்கு பிடிக்கல.. அவன போக சொல்லு” என்று அவளைத் துணைக்கு அழைக்க, மதுரா இருவருக்கும் இடையில் என்ன சொல்வது என்று தெரியாமல் திருதிருவென விழித்தாள்.

ஆனால் அவளுக்கு பதிலாய்,
“நான் மதுராவோட பர்சனல் பாடிகார்ட். என் முன்னாடி தான் நீங்க மதுராவை மீட் பண்ண முடியும் மிஸ்டர் …அண்ட் இனி நீங்க மீட் பண்ணும் போது மதுராவோட பர்மிஷன் இல்லாம அவங்கள டச் பண்ணாதீங்க” என்றான் கருப்பசாமி அழுத்தமாய்.

அதில் வெகுண்டெழுந்த பத்ரிநாத்,
“மேன்.. கமான் நீ என்ன ஸ்டோன் ஏஜ்லையா இருக்க? சி இஸ் மை ஃபியான்சி. ஒய் காண்ட் ஐ டச் ஹேர்?ஷீ இஸ் மைன்” என்றவன்,

கருப்பசாமியின் முறைப்பில்
“வாட் த ஹெல் ஆர் யூ மேன்?”என்று டென்ஷனாகி கத்த,

“மஞ்ச சாமி

சிவப்பு சாமி.. 

நெருப்பு சாமி..

நான் தான்டா..

கருப்புசாமி”

என்று அவன் ஆறுச்சாமி டயலாக்  சொல்ல,

மதுராவோ, “ஏய் இது நான் சொன்ன டயலாக்ல?”என்று அதிர்ச்சியாய் வாயைப் பிளக்க, அவளைப் பார்த்து குறும்பாய் கண்சிமிட்டினான்  கருப்பசாமி.

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
38
+1
5
+1
6

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்