
28. நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன்
ஏன்? என்று கேள்வியாக ஏறிட்ட மதுராவின் கண்களில் தெரிந்தே தான் என்னை காயப்படுத்தினீர்களா? என்ற கேள்வி தொக்கி நிற்க, கார்முகில் வர்ணனை ஒரு வித பார்த்தவன் நீயே சொல்லிவிடு என்பது போல அவன் பார்க்கவும்
ஒரு பெருமூச்சுடன் நடந்ததை சொன்னான் ஜெகதீஷ்.
“நான் இப்ப சொல்றத கேட்டு உனக்கு அதிர்ச்சியா இருக்கலாம் மதுரா…” என்று ஆரம்பித்தவனை எந்த பூகம்பம் கிளம்ப போகிறதோ? என்பது போல் பார்த்தவளின் கணிப்பை பொய்யாக்காமல் ஜெகதீஷ் அடுத்தடுத்து சொன்னது அமைந்தது.
“சரியா நம்ம கொல்கத்தா வந்து நாலு மாசத்துக்கு அப்புறம்.. அப்பா அவரோட இன்ஃபுளையன்ஸ யூஸ் பண்ணி அங்கிருந்த ஒரு போலீஸ் உதவியோட என்ன காண்டாக்ட் பண்ணினார்… அவர் மூலமா எனக்கு தெரிஞ்ச விஷயம் நம்ம பாடிகார்ட் கருப்பசாமி சாரி சாரி கார்முகில் ஒரு ஆக்சிடெண்ட்ல்ல நினைவு தவறி கோமா ஸ்டேஜ்ல இருக்கிறதாகவும் அவர் சரியாகணும்னா அதுக்கு மதுரா தேவை அப்படின்னும்… அதுக்காக அவள உதவி செய்ய சொல்லுன்னு சொல்றார் “
மதுரா நெஞ்சம் அதிர, ‘இது எப்போது?’ என்று கார்முகில் வர்ணனை பார்க்க, அவனோ புன்னகை முகமாக தான் நின்றான்.
கூடவே ஜெகதீஷ் சொல்வதை கவனி என்பது போல் செய்கை வேறு… ஷாலினியும் மாதேஷும் இருவரின் கண் ஜாடைகளையும் பார்த்து உதட்டை பிதுக்கியவர்கள் அங்கு நடப்பவற்றை மௌனமாகத்தான் வேடிக்கை பார்த்தனர்.
யாரையும் கண்டு கொள்ளாமல் இத்தனை நாள் மனதிற்குள் ரகசிய பாரமாய் மறைத்து வைத்திருந்ததை தொடர்ந்து சொன்னான் ஜெகதீஷ்.
“அப்பா சொன்னத கேட்டதும் எனக்கு சரியான கோபம்… அது எப்படி மகளோட வாழ்க்கையை நாசமாகிட்டு போன ஒருத்தனுக்கு உதவி செய்யணும்னு சொல்றீங்கன்னு.. நான் கத்த ஆரம்பிச்சதும், பொறுமையா கேட்டவர் ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னார் அந்த பெர்னாண்டஸ் தப்பிச்சுட்டான்னு அவனோட ஆளுங்க காப்பாத்திடாங்கன்னு… எனக்கு அவர் என்ன சொல்ல வரார்ன்னு கொஞ்ச கொஞ்சமா புரிஞ்சது… தன்னோட கையில அதிகாரமும் பவரும் வச்சிருந்த நம்ம அப்பாவே பெர்னாண்டஸ் பிடியிலிருந்து உன்ன தப்பிக்க வைக்க முடியாம அவ்வளவு பாடுபட்டார். இப்போ எதுவுமே இல்லாம இருக்குற நம்ம எப்படி அவன்கிட்ட இருந்து தப்பிக்க முடியும்? நான் அமைதியானதும் நான் புரிஞ்சுகிட்டேன்னு நெனச்சு தன்னோட எண்ணத்தை மறைக்காம சொன்னார்..”
என்றவன் என் குரலில் பிசிறில்லை.
மாதேஷ் வந்து அவரை சந்தித்ததாகவும், கார்முகில் வர்ணனை இங்குதான் சிகிச்சையாக கொண்டு வர இருப்பதாகவும் என்று அனைத்தையும் அவர் சொல்லிவிட்டு மாதேஷின் அலைபேசி எண்ணையும் கொடுத்ததாகவும், அதன் பிறகு தான் மாதேஷ்க்கு அழைத்து நிலவரத்தைக் கேட்டு கார்முகில் வர்ணனை சென்று பார்த்தது வரை சொன்னவன், பல ஒயர்கள் பொருத்திய உடலும் ஆங்காங்கே மானிட்டர்களும்…அரைகுறை சுவாசத்தில் வெறித்து கொண்டிருந்தவனின் இதழிலிருந்து மதுராவை தவிர வேற எந்த வார்த்தையும் வரவில்லை என்றும் சொன்னான்.
இது சாத்தியமில்லாத ஒன்றாயிற்றே! சிறிது காலமாகவே அவன் தன்னை பிடிக்கும் என்பது போல் உணர்த்திக் கொண்டிருந்தாலும் அவனுக்கு தன்னை முன்பே இத்தனை பிடிக்கும் என்பதை அவளால் நம்ப முடியவில்லை.
மதுரா ஜெகதீஷ் சொன்னதை நம்ப மாட்டாமல் தான் பார்த்தாள். ஆனால் வாயைத் திறக்கவில்லை.
“நேர்ல பார்த்ததுக்கு அப்புறம்… மாதேஷ் அவரோட நெலமைய சொன்னதுக்கு அப்புறம் ஏன்.. என்னன்னு தெரியல… என்னால மாதேஷ் கேட்ட எதுக்குமே மறுப்பு சொல்ல முடியல… அவர் உனக்காகத்தான்…”என்று
ஏதோ சொல்ல வந்து கார்முகில் வர்ணனின் கண்ணசைவில்,
பேச்சை மாற்றுவதற்காக
“அப்ராட்ல இருந்து வந்த மெடிக்கல் டீம்.. ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணதும்.. உன்ன தான் அழைச்சிட்டு வர சொன்னாங்க… ஆனா அவர பார்த்ததும் நீ எப்படி ரியாக்ட் பண்ணுவேன்னு எனக்கு தெரியல… எங்க முன்னாடி சிரிச்சுக்கிட்டாலும் நீயும் அப்போ ரொம்ப மன அழுத்தத்துல தான் இருந்த.. நைட் எல்லாம் சரியா தூங்காம ஏனோ தானோன்னு நடமாடிட்டு இருந்த..
ஒரு சேன்ஜ்காக மாதேஷ் ரெகமெண்ட் பண்ண அவங்களோட ரிலேட்டிவ் கம்பெனியில உன்ன ஜாயின் பண்ண வச்சேன்.. அங்கேயும் நீ எங்களோட கண்காணிப்புல தான் இருந்த…”
“நீ ஒர்க் பண்ண ஆரம்பிச்சதுக்கு அப்றம் உன்கிட்ட கொஞ்சம் சேஞ்சஸ்.. நீ கொஞ்சம் நார்மல் ஆன…சரி இப்ப உண்மைய சொல்லலாம்னு நான் உனக்கு நடந்த மேரேஜ் பத்தியும்.. அன்னைக்கு நடந்தத பத்தி லைட்டா பேச ஸ்டார்ட் பண்ணாலே இதை பத்தி பேசாதீங்க எனக்கு சுத்தமா பிடிக்கலன்னு அலறி அடிச்சுட்டு ஓடிடுவ..உன்கிட்ட போய் உன்ன கல்யாணம் பண்ணவர் இப்படி அரை உசுரா இருக்கார்ன்னு என்னால சொல்ல முடியல… நீ ஒத்துக்குவன்னு நம்பிக்கையும் இல்ல..ஆனா ட்ரீட்மென்க்கு உன்னோட ஃபிரசன்ஸ் தேவையாச்சே!
அதுக்கு தான் நானும் மாதேஷும் ஒரு பிளான் பண்ணி வீட்ல யாரும் இல்லாத சமயம் நம்ம பெட் ரூம்ஸ் பிரைவேட் ஏரியா தவிர,
ஹால், பால்கனி, கிச்சன் மத்த இடத்துல எல்லாம் ஹிட்டன் மைக்ரோ கேமராஸ் பிக்ஸ் பண்ண வச்சோம்… ஒருத்தங்க அனுமதி இல்லாம அவங்க ஆக்டிவிட்டீஸ ரெகார்ட் பண்றது தப்புதான் இருந்தாலும் அது உயிர காப்பாத்துற ட்ரீட்மென்ட்க்கு அவசியமா பட்டுச்சு”
இதை கேட்டதும் இம்முறை மதுரா மட்டும் தனியாக அதிரவில்லை. பிரகதீஷும் அதிர்ந்தான்.
சத்தியமாய் இத்தனை தெளிவாய் ஜெகதீஷ் நேற்றைய தினம் அவனிடம் கூட உண்மையை விவரித்து சொல்லவில்லை.
மேலோட்டமாய் தான் இதற்கு தான் இப்படி செய்தேன்.. என்று மட்டும் சொல்லியிருந்தான். இப்பொழுது தெள்ளத் தெளிவாய் கேட்ட பொழுது இத்தனை நடந்தும் தன்னிடம் சொல்லவில்லையே! என்று முகத்தோடு மனமும் இறுக்கமாகிப் போனது.
மதுராவின் நிலையோ அதற்கு மேல்…அதுவரை கார்முகில் வர்ணனின் நிலையை கேட்டு இளக்கம் கொஞ்சமாய் குழப்பம் கொஞ்சமாய் இருந்தவளின் முகம் கன்றி சிறுத்தது. தனது தனிப்பட்ட நடவடிக்கைகளை தனக்கே தெரியாமல் மற்றவர்கள் உழவு பார்த்திருக்கிறார்கள் இது தெரியாமல் தானும் நடமாடிக் கொண்டிருக்கிறோமே? ஜீரணிக்கவே முடியவில்லை அவளால்.
ஆனாலும் உண்மையை புட்டு புட்டு வைத்துக் கொண்டிருந்தவனிடம் இடையில் பேசி இருவரும் தொந்தரவு செய்யவில்லை.
அவளின் முகம் மாற்றத்தை கவனத்தாலும், மொத்தமாய் சொல்லிவிட வேண்டும் என்று
ஜெகதீஷ் தொடர்ந்தான்.
“கேமராஸ் மூலமா ரெக்கார்ட் ஆகற ஃபுட்டேஜ்ல உன்னோட கிளிப்பிங்ஸ் மட்டும் கட் பண்ணி.. ட்ரீட்மெண்ட் நடக்கிற ரூம்ல ஒரு மானிட்டர்ல ஓடிட்டே இருக்கும்… கொஞ்சம் கொஞ்சமா முன்னேற்றம் ஆரம்பிச்சது… ஒரு நாள் அவர் பார்த்துட்டு இருந்த ஃபுட்டேஜ்ல நீ அழுற மாதிரி கிளிப்பிங்ஸ் பார்த்ததும் அவர்கிட்ட நிறைய அசைவுகள், உடல் அளவுல நிறைய மாற்றங்கள்.. கரெக்டா ஒரு வாரத்துல எழுந்து உட்கார்ந்துட்டார்… ஆனா அவருக்கு ரீசண்டா நடந்தது எதுவுமே ஞாபகத்துல இல்ல.. நினைவு திரும்புனதுக்கு அப்புறம் உன்னயே கூட மறந்துட்டார் தான்… உன்னையே அவருக்கு அடையாளம் தெரியல”
“ஆனா அதுக்கும் டாக்டர்ஸ் அவரோட நினைவுகள தூண்டுறதுக்கான மருந்துகள் மூலமா பழையபடி மாத்திடலாம்னு சொன்னாங்க… பட் அது ரொம்ப வீரியமானது..
ஆயிரம் யானைகள் ஒரே நேரத்துல மிதிச்சா எப்படி இருக்கும் அந்த அளவுக்கு மூளையே வெடிக்கிற வலியையும் கொடுக்கும்னு எச்சரிக்கை பண்ணாங்க. அதுவும் அன்கான்சியஸ்ஸா இருக்கும் போது அந்த மருந்துகளை எடுத்துக்க முடியாது.. கான்ஷியஸா இருக்கும்போதே அந்த மருந்த எடுத்தாகணும்… அதோட அத தாங்குற அளவுக்கு அவருக்கு மன வலிமை இருக்கனும்.. அந்த மன வலிமை இல்லைன்னா அவர் திரும்பவும் கோமா ஸ்டேஜ்க்கு போய்.. மூளை சாவு ஏற்பட கூட வாய்ப்பு இருக்குனு சொன்னாங்க..
அதனால இந்த ரிஸ்க்கே வேண்டாம் கொஞ்ச நாள் பொறுக்கட்டும்ன்னு வெயிட் பண்ணோம்.. அவர்கிட்ட உங்களுக்கு பழசு எல்லாம் மறந்துட்டிங்கன்னு மட்டும் சொல்லி வச்சோம்”
“அந்த டைம்ல தான் நீ அந்த மேரேஜ் பங்க்ஷன்ல அவர பார்த்தது எல்லாமே.. ஆனா உன்ன பார்த்ததுக்கு அப்புறம் நிறைய சேஞ்சஸ்… நான் மறந்தது எல்லாத்தையும் என்னோட நினைவுக்கு கொண்டு வரணும்னு சொல்லி ஒரே பிடியா நின்னு அதுக்கான ஸ்டெப்ஸ் ஆரம்பிச்சது… ஆனா ட்ரீட்மெண்ட் நடந்துட்டு இருந்தப்போ பாதியிலேயே உன்ன பாக்கணும்..பாக்காம இருக்க முடியலன்னு உன்னோட கம்பெனில வந்து ஜாயின் பண்ணிட்டார்… அதுக்கப்புறம் எல்லாம் உனக்கு தெரிஞ்சது தான் அவருக்கு கொடுத்த மருந்து வேல செஞ்சது.. மறந்து போன மெமரிஸும் திரும்பிட்டு..
அதுலருந்து இப்ப வர உன்னோட அத்தனை ஆக்டிவிட்டீஸும் அவரோட கைவசமா தான் இருக்கு… உனக்கே தெரியாம உன்னை நிழல் மாதிரி பின் தொடர்ந்தார்… உனக்கு வந்த நெறைய ஆபத்துல இருந்து உனக்கே தெரியாம உன்னை பாதுகாத்தார் ..ஆனா இப்போ ஆபத்து வினோ அக்கா மூலமா வீட்டுக்குள்ளேயே வந்திருக்கு… இதுக்கு மேல உன்ன அந்த வீட்டுல விட்டு வைக்க எங்களுக்கு மனசு இல்ல…அதனால் தான்.. வினோ அக்காக்கு சந்தேகம் வராமல் உன் அனுப்புறதுக்காக தான்… நானும் பிரகதீஷ் கூட சேர்ந்து நடிக்க வேண்டியது தான் போச்சு” என்று சொல்லி முடித்தவனை கொலைவெறி உடன் தாக்கினான் பிரகதீஷ்.
“இவ்வளவு நடந்தும் என்கிட்ட ஒரு வார்த்தை ச்ச மூச்சு கூட விடல்லையே டா? என்ன பாத்தா உனக்கு எப்படி இருக்கு? ஜோக்கர் மாதிரி இருக்கா? நானும் மதுராவுக்கு அண்ணன் தான் மறந்துடாத… ஒரு வார்த்தை சொல்லி இருந்தா இப்படி, வார்த்தைய விட்டு இருக்க மாட்டேனே டா… எல்லாம் உன்னால தான் ” என்று கோபத்தின் தூரல் எரிமலையாக வெடிக்க
பிரகதீஷ் ஆத்திரமாய் சகோதரனின் சட்டையை பிடித்து இழுத்து இரண்டு கன்னத்திலேயும் அறைய, அதை அமைதியாக வாங்கிக் கொண்டான் ஜெகதீஷ்.
ஆனாலும் பிரகதீஷிற்கு ஆத்திரம் அடங்கிய பாடில்லை.
பின்னே முன்கூட்டியே இவ்விடயத்தை பற்றி தனக்கு சொல்லியிருந்தால் இல்லையென்றால் குறிப்புக்காட்டியாவது இருந்தால் அவன் மதுராவிடம் இப்படி கோபப்பட்டு வார்த்தைகளை சிதற விட்டிருக்க மாட்டானே! நரம்பு இல்லாத நாக்கு எப்படி எல்லாம் பேசி விட்டது அவளை… கொஞ்சம் கூட தன்னை தடுக்காமல் அவனும் அல்லவா பேசினான். தப்புதான்! இருந்தாலும் மனது கேட்கவில்லை.
“உன்னால எமோஷன்ஸ கட்டுப்படுத்த முடியாது டா.. கண்டிப்பா நீ இந்த உண்மை எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாலும்.. உன் ஓட்ட வாய்க்கு மதுரா கிட்ட சொல்லிடுவ… இல்ல அக்கா கிட்டயே நேரடியா கோபத்த காமிச்சிடுவ… அது அடுத்தடுத்த பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதான்..”
“வாய மூடுடா…”என்று அதற்கும் இரண்டு அடிகள் சேர்த்து அடித்தான்.
இங்கு சகோதரர்கள் இருவரும் வாய் சண்டையோடு அடிபிடி சண்டைப் போட்டுக் கொண்டிருக்க,
மதுராவிற்கோ ஒன்றும் புரியாத நிலை தான். என்னடா நடக்குது? என்ன சுத்தி என்னதான் நடக்குது? தலையில் கை வைத்து சோபாவில் அமர்ந்து விட்டாள். கார்முகில் மனைவியின் முகத்தை பார்த்தவன், அவள் உடல் நிலையை கருத்தில் கொண்டு மெதுவாகவே தெளியட்டும் என்று சமையலறை நோக்கி சென்றான்.
மதுராவிற்க்கோ அதிர்ச்சி ஒரு பக்கம் என்றால் கலக்கம் குழப்பம் மறுபக்கம்… இப்போதைக்கு எதையும் தெளிவாக யோசிக்கும் மனநிலையில் அவள் இல்லை. இவர்கள் தன்னை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் தன்னை சுற்றி என்னென்னமோ செய்து கொண்டிருக்கிறார்கள்… எதுவுமே தெரியாமல் முட்டாள் மாதிரி இருந்திருக்கிறோமே! என்று சுயபச்சாதாபம் மட்டுமே எழுந்தது. நேற்று அவள் கேட்ட பேச்சால் ஏற்பட்ட மரண வலி இப்பொழுதும் பானக துரும்பாக நெஞ்சுக்குள் வலியெடுத்துக் கொண்டிருக்க,
“ரொம்ப ஓவர் திங்க் பண்ணாத… வயித்துக்குள்ள எதையாவது அனுப்பு அப்பதான் யோசிக்க முடியும்”என்று அவளுக்காக கொண்டு வந்திருந்த தேநீரை அவள் முன்னால் வைத்தான்.
மதுரா நிமிறவில்லை தலை குனிந்தபடி அமர்ந்திருந்தாள். தலைவலி வேறு விண்ணென்று தெறித்துக் கொண்டிருந்தது. கார்முகில் வர்ணன் அவளின் கையைப் பிடித்து சாமாதனப்படுத்த வர,
சடாரென்று கார்முகில் பிடித்திருந்த கைகளை தட்டி விட்டு இருவருக்கும் இடையில் நந்தியாக வந்தமர்ந்தான் பிரகதீஷ்.
சற்று தள்ளி நின்றிருந்த ஜெகதீஷை கைகாட்டியவன்,
“குட்ட அவன் சொல்றத கேட்டியா எல்லாம் இவனால தான் இவன் சொல்லிட்டு செஞ்சிருந்தா நான் இவ்வளவு ஆத்திரப்பட்டு இருக்க மாட்டேன்… உன்ன அடிச்சு அப்டி பேசி இருக்க மாட்டேன்ல்ல.. செய்யறது எல்லாத்தையும் செஞ்சுட்டு அவன் நல்லவனா ஆயிட்டான் நான் கெட்டவன் ஆகிட்டேன்… நீயும் என்ன மன்னிக்க மாட்டியா? ப்ளீஸ்” என்று அழாத குறையாக மீண்டும் பிரகதீஷ் தோப்புக்கரணம் போடாத குறையாக மன்னிப்பு கேட்கும் படலத்தை ஆரம்பிக்க, மதுரா அயற்சியாக அவனைப் பார்த்தாலானால்,
கார்முகிலோ, தங்களுக்கு இடையே குறுக்கே வந்த எருமை மாடாக அமர்ந்தவனை ‘நமக்கு ஒரு மச்சான் போதும்..பேசாம இவன கொலை பண்ணிடலாமா?’என்ற ரேஞ்சில் முறைத்துக் கொண்டிருந்தான்.
மௌனமாய் அமர்ந்திருந்த மதுராவை போட்டு உலுக்கியவன், மீண்டும், “அப்போ என்ன மன்னிக்க மாட்டியா குட்ட? நா பாவம்ல” என்றதும்,
‘இவன் விடமாட்டான்’ என்று புரியவும்,
ஒரு ஆழ்ந்த மூச்சுடன்,
“சரி மன்னிச்சிட்டேன் என்ன விடு..”
“இல்ல இல்ல நீ மனசுல இருந்து என்னை மன்னிக்கல…ப்ரக்குன்னு என்ன கூப்ட்ருப்ப” என்று இன்னும் அவன் விடவில்லை.
அதுவரை அவர்களின் குடும்ப விஷயம் என்று தள்ளி அமர்ந்திருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஷாலினியோ,
‘குறுக்கால குறுக்கால இந்த கௌஷிக் வேற அடிக்கடி நுழையிறானே!’ என்ற ரீதியில் அவனை முறைத்தவள், அவனின் அருகே வந்து தோள்பட்டையை அழுத்தப் பிடித்துஅவர்களின் நடுவில் இருந்து எழுப்பி விட்டவள் “ஏய் தம்பி …நீ கொஞ்சம் ஓரமா நில்லு.. அப்றமா மன்னிப்பாங்க” என்று சொல்ல,
“நா தம்பியா? அப்ப நீங்க என்னோட அக்காவா.. ஒரு அக்காவையே என்னால சமாளிக்க முடிய
லையே!” என்று பிரகதீஷ் அதைவிட கவலையாக அவளைப் பார்க்க,
ரொம்ப முக்கியம் என்பது போல அவனை முறைத்து வைத்த
ஷாலினியை அப்பொழுது தான் கவனித்த மதுராவோ,
“நீங்க எப்படி இங்க?”என்று கேட்டாள் குழப்பமாக… நடந்த வாக்குவாதத்தில் அவளை கவனிக்கவில்லை.
“ஓஹோ மேடம்க்கு இப்பதான் நான் கண்ணுக்கு தெரியுறனோ?” என்று நக்கலாக கேக்க,
“நான் கவனிக்கல..” என்றவளின் குரலில் சுருதி இறங்கி இருந்தது.
மதுராவிற்கு அவளைப் பார்த்ததும் அவர்களின் எங்கேஜ்மென்ட் புகைப்படம் நினைவுக்கு வர, இன்னொருத்தியை நிச்சயதார்த்தம் செய்துவிட்டு தன்னை திருமணம் செய்தவனின் மீது அமிழ்ந்து போய் இருந்த, கோவமும் அதோடு வெட்கம் கெட்டு போய் அவனுக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் அவனைத் தேடிய தன் மனதையும் …அவனுடனான நெருக்கத்தை ஏற்றுக்கொண்ட தன் உடலையும் நினைத்து ஒவ்வாமை தான் வந்தது.
‘அவ்வளவுதானா நீ! உன் மனதை புரிந்து கொள்ள இங்கு யாரும் இல்லையே!’ என்பது போல் உள்ளுக்குள் வலியெடுக்க, அழுத்தமாய் கண்களை மூடி திறந்தாள்.
உணர்வுகளற்று வெறித்தாள் ஒவ்வொருவரையும்..
அங்கே இருக்கும் ஒவ்வொரு நொடியும் முள் இருக்கையில் இருப்பது போல் தவிப்பாய் கடக்க, அதன் பிறகு அவளுக்கு ஆறுதலாய் ஏதோ சொன்ன ஷாலினியின் பேச்சை கேட்கும் மனநிலையில் அவள் இல்லை.
எதையோ யோசித்து சட்டென்று எழுந்த மதுரா வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
அங்கிருந்த யாரும் இதை எதிர்பார்க்கவில்லை.
“எங்க போற நீ?”என்று கார்முகில் அவளை விடவில்லை. கையை பிடித்து நிறுத்தி வைத்தான்.
“ப்ச்ச் கைய விடுங்க நான் வெளியே போகணும்”
“இன்னைக்கு பேசி முடிக்கணும்னு தான் உன்ன கூட்டி கொண்டு வந்து உட்கார வச்சிருக்கேன்… எங்க போக போற நீ?”
“நான் எதையும் பேச தயாரா இல்ல..நான் எங்கேயோ போறேன் உங்களுக்கு என்ன?”
“வெளியில உனக்கு ஆபத்து இருக்கு அதனால தான் உன்னை இங்க வர வச்சதே? நீ எங்கேயும் போக முடியாது” என்ற அழுத்தமாக கார்முகில் வர்ணன் சொல்லியும் உணர்ச்சியின் பிடியில் தவித்தவளுக்கு எதுவும் மனதில் ஏறவில்லை.
இங்கிருந்து செல்வதே தனது ஒரே குறி என்பது போல் அவனின் கைகளை தட்டி விட தான் முயன்றாள்.
ஜெகதீஷும், “மது உன்னோட நல்லதுக்கு தான்…”
என்று ஏதோ சொல்ல வர,
“நான் உன்கிட்ட நல்லது செய்ய சொன்னேனா டா?” என்றவளின் எதிர் கேள்வி அவனை தாக்கியிருக்க,
“உனக்கு ஆபத்து வரக்கூடாதுன்னு தான் இவ்வளவு ரிஸ்க் எடுத்தோம்னு.. ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது. எங்க மேல உண்மையான பாசம் இருந்தா நீ இங்க இருந்து எங்கேயும் போகக்கூடாது இது என் மேல சத்தியம்.”என்று ஜெகதீஷ் அவளைப் பிடித்து வைப்பதற்காக மீண்டும் வார்த்தையை விட,
“சூப்பர் பிரமாதம்..! அடுத்த நாடகம் போட போறியா? ஸ்கிரிப்ட் எல்லாம் ரெடி பண்ணியாச்சா? யார் யாரெல்லாம் நடிக்க போறீங்க? சொல்லிடுங்க நானும் தயாரா இருக்கேன்.. ஏமாந்து போறதுக்கு” என்று சுள்ளென்று கேட்டு விட, கலங்கி போன முகத்துடன் அதிர்ந்து நின்றான் ஜெகதீஷ்.
அவனுக்கு அடுத்து பேச வார்த்தைகள் வரவில்லை.
மதுராவிற்கும் அவனை நாம் காயப்படுத்துகிறோம் என்று புரிய அவளுக்கும் கண்ணெல்லாம் கலங்கிவிட்டது.
பிரகதீஷும் உனக்கு இது தேவைதான் என்பது போல நிற்க,
“நீ அவன ஹர்ட் பண்றதா நெனச்சுட்டு உன்ன நீயே ஹர்ட் பண்ணிக்கிற..மது” என்று அவளை உணர்ந்தவனாய் கார்முகில் வர்ணன் சொல்ல,
சுயம் தெளிந்த மதுராவோ வெறுத்துப் போய் தன்னை பிடித்திருந்தவனின் கையை உதறினாள்.
“ப்ப்ச்ச் கைய விடுங்க முதல்ல.. உங்ககிட்ட யாரும் இப்ப அட்வைஸ் கேட்கல”
“சரி நானும் உனக்கு அட்வைஸ் பண்ணல..ஃபர்ஸ்ட் உட்காரு பேசலாம் கேட்… நீ தெரிஞ்சுக்க வேண்டியது இன்னும் இருக்கு”
“நான் எதையும் கேட்க தயாரா இல்ல பிளாக்… தயவு செஞ்சு என்னை தனியா விடுங்க ப்ளீஸ்”
அவளின் முகமே அழுததினால் சிவந்துவிட்டது.
அவளின் தவிப்பையும் அழுகையையும் பார்த்த கார்முகில் வர்ணனின் கைகள் அவளின் மீதான தன் பிடியை தளர்த்தியது. ஒரு கட்டத்தில் விட்டு விட,
அதைக் கூட உணராமல் நின்றிருந்த மதுராவிடம்
“உன்ன தனியா விட்டா உனக்கு ஆபத்துன்னு தான்..
இத்தனை பேர் உனக்காக இருக்கோம்.. நீ ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குற மா?”என்று அவ்வளவு நேரம் தள்ளி நின்ற மாதேஷும் அவளிடம் கேட்டு விட்டான்.
“இங்க பாரு மதுரா சில நேரங்களில் சில விஷயங்கள் நமக்கு தெரியாம இருக்குறது தான் நல்லது.. உனக்காக தான் முகில் இவ்வளவு தூரம் மெனக்கடறார் அதை ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குற?”
இதை சொன்னது ஷாலினி,
“குட்ட கொஞ்ச நேரம் பேசலாம் டா.. இங்கிருந்து போக வேண்டாம்” என்று பிரகதீஷும் தன் பங்கிற்கு சொன்னான்.
ஜெகதீஷும் அதையே சொல்ல,
அடுத்தடுத்தது அனைவருமே மாறி மாறி மதுராவை சமாதானப்படுத்துவதற்கே முயன்றுக் கொண்டிருக்க,
இரண்டு கைகளாலும் காதுகளை இறுக்கமாய் மூடி கொண்டவள்,
“கொஞ்ச நிறுத்துரீங்களா எல்லாரும்…”
“உங்க எல்லாருக்கும் இப்ப என்னதான் பிரச்சனை? என்ன எதுக்கு போட்டு ஆள் ஆளுக்கு டார்ச்சர் பண்றீங்க? எனக்கு நிம்மதியே கிடைக்காதா? எனக்காக எனக்காகன்னு சொல்லி சொல்லி.. இங்க இருக்கற யாருமே எனக்கு உண்மையா இல்லையே! ஏன் உங்க எல்லாருக்கும் ஒரு விஷயம் புரிய மாட்டேங்குது.. என்ன பாதுகாக்கிறதா நெனச்சுட்டு என்ன அதிகளவு காயப்படுத்துறது நீங்கதான்னு..”
கார்முகில் வர்ணன் ஏதோ சொல்ல வர,
“போதும்டா சாமி போதும்… உங்க காதல் கரிசனம் எதுவுமே எனக்கு வேண்டாம் நேத்து நடுரோட்ல நின்ன எனக்கு இவ்வளவு நேரம் அடைக்கலம் குடுத்ததுக்கு ரொம்ப நன்றி!”
தன் சகோதரர்களின் பக்கம் பார்வையை திருப்பியவள்,
“இனிமே எனக்கு சொந்தம்னு சொல்லிக்கிட்டு யாரும் என்கிட்ட வந்துடாதீங்க போதும்.. பிறந்ததிலிருந்து குடும்பத்தோட வெறுப்பையும் அலட்சியத்தையும் அருவருப்பையும் மட்டுமே பார்த்து வளர்ந்து வந்து இருக்கேன்.. எனக்குன்னு பாசம் வைக்க யாருமே இல்லைன்னு ஏங்கி இருக்கேன்.. அதெல்லாம் இந்த கொஞ்சம் மாசத்துல எனக்கு கிடைச்சுட்டுன்னு நெனச்சேன்..ஆனா.. எல்லாமே வேஷம்..”என்று வழிந்து கொண்டிருந்த விழிநீரை சுண்டி விட்டாள்.
சமாதானப்படுத்த முயன்ற அத்தனை பேர் பார்வையையும் வெறுத்து முகத்தை திருப்பிக் கொண்டவள்,
“இனிமே இந்த மதுராவுக்கு யாரும் தேவையில்ல.. யாரும் இந்த மதுராவ பாதுகாக்கணும்னு அவசியமும் இல்ல.. பாதுகாக்கிறேன்னு சொல்லிட்டு செய்ற நம்பிக்கை துரோகத்த விட சாவே மேலன்னு தோணுது…”அதைக் கேட்டதும் அவள் சகோதரர்கள் துடிக்க, கார்முகில் வர்ணன் உயிர் வலியோடு அவளைப் பார்க்க,
அவளுக்குமே சொல்லிவிட்ட சொல்லின் வீரியம் புரிந்ததால், ஒரு நொடி மௌனமாகி,
“சாரி..உங்கள காயப்படுத்தனும்னு பேசல… என்னால முடியல.. எனக்கு நிதர்சனத்த ஏத்துக்க கொஞ்ச நாள் தனிமை தேவை …என்ன விட்ருங்க..”
“ஆ..ஆ..ஆனா நான் எங்க போவேன்? என..எனக்கு யார் இருக்கா?” என்று அதற்கும் முகத்தை மூடி தேம்பியவளை..
அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு உணர்ச்சியுடன் பார்த்திருக்க, கார்முகில் வர்ணன் அவளை ஆதரவாய் அணைத்து கொண்டான்.
அந்த அணைப்பு கூட, அவளுக்கு நெருப்பாய் தகித்ததே! அவனை விட்டு விலகி விட்டாள்.
அதற்குள் “மது…”என்றபடி அங்கு வந்து சேர்ந்திருந்தாள் தேஜு.
இருட்டுக்குள் மாட்டிக் கொண்ட மான்குட்டி போல் அரண்டு அழுது கொண்டிருந்தவள் தோழியை பார்த்ததும், அவளைக் கட்டிக் கொண்டு என்னை இங்கிருந்து கூட்டிட்டு போ என்று கதறி விட, சுற்றி நின்ற அனைவரும் அவளைத் தடுக்க முடியாமல் நின்றிருக்க, தேஜஸ்வினியும் மறுக்காமல் அங்கிருந்து அழைத்து சென்றாள் தோழியை…
ஆனால் அடுத்த நாளே, மதுரா அவள் மூலமாகவே கடத்தப்பட்டு,
ஆராய்ச்சி கூடத்தில் அடைக்கப்பட்டு.. மார்ட்டினின் முன்னால் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டிருந்தாள்.
தொடரும்..
அடுத்த பதிவு இரவு..
HAPPY READING ♥️🙂
போன அத்தியாயத்திற்கு விருப்பங்களும் கருத்துக்களும் தெரிவித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்😊♥️
இந்த பதிவிற்கும் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் தோழமைகளே!
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
12
+1
1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

மது உணர்வு சரிதான் ஆனால் மற்றவங்களின் நிலையும் புரிய வேண்டும்