23. நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன்
அந்த புதியவன் வேறு யாருமில்லை பெர்னாண்டஸின் தம்பியான மார்டின் தான். வினோதா நேற்று ஜெகதீஷிடம் சொன்னது போலவே இன்று மாலை தான் தன் உதவியாளர்களுடன் கொல்கத்தா வந்து சேர்ந்தான் மாஹித் மனோகரன்.
ஆம் மார்டின் வெளி உலகத்திற்கு தன்னை ஆராய்ச்சியாளனாக அடையாளம் கொள்வதற்காக தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பெயர் தான் மாஹித் மனோகரன். அவனின் சகோதரன் பெர்னாண்டஸ் எப்படி புகழ் பெற்ற பணக்காரன் என்ற பெயருடன் சுற்றிக் கொண்டிருந்தானோ அது போலவே மார்ட்டினும் தனக்கு இருந்த அதீத அறிவாற்றலால் மைக்ரோ பயாலஜி பிரிவில் ஆராய்ச்சி கட்டுரை வரைந்து அறிவியலில் டாக்டர் பட்டம் பெற்றான். சமுதாய நல்லாக்கத்திற்காக செய்யப்படும் ஆராய்ச்சிகள் அனைத்தும் இவன் கையில் இருந்தாலும் இருள் உலகில் இவன் செய்வது என்னவோ மனிதர்களை கொன்று குதறும் ஆராய்ச்சி தான்.
இதுவரை வெளி உலகத்திற்கு தெரியாமல் பதுங்கி பதுங்கி குற்றங்களை செய்பவன், இன்று சகோதரனுக்கு பழி தீர்க்கவே மதுராவை நெருங்கி இருக்கிறான்.
அவனின் பார்வை அழுத்தமாய் பதிந்தது என்று சொல்வதை விட, பல நாள் பட்டினி கிடந்து இரைதேடும் விலங்கின் வேட்டையாடும் பார்வையுடன் ஆக்ரோஷமாய் பதிந்தது என்றே சொல்லலாம்…
அதுவும் அவனின் கண்களில் தெரிந்த இரத்தவெறி… தன் சகோதரனின் பிடியிலிருந்து தப்பித்தது மட்டுமில்லாமல் இவளின் தந்தை தன் சகோதரனுக்கு நம்பிக்கை துரோகம் செய்து காப்பாற்ற முயன்றது இவளை தானே!
நர மாமிசத்தை சாப்பிடுபவர்களுக்கு பெண் ஆசை கூடாது என்று புரியாமல் இவளிடம் மயங்கி கிடந்த தன் சகோதரனின் மீது கோபம் தான் வந்தது. அவளைப் பார்க்க பார்க்க மண்டை சூடேற நரவென்று அவளைக் கடித்து குதறி தின்றால் என்ன? என்ற வெறி வர தனது கூரிய பற்களை கடித்து கையை முறுக்கிக்கொண்டு நின்றான் மார்ட்டின் என்னும் மாஹித் மனோகரன்.
ஆனால் மதுராவின் கவனம் அவன் மீது பதியவே இல்லை. அவள் கவனம் எல்லாம் இந்நேரத்தில் சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்கும் அவளது சகோதரர்களின் மீது தான் இருந்தது.
அவள் அருகில் நின்ற தேஜஸ்வினியோ மதுராவின் கைகளை சுரண்டி,
“மது இன்னைக்கு பாஸ பாக்க போக முடியாது போல நாளைக்கு பாத்துக்கலாம் டி”என்று எதிரில் இருப்பவர்களுக்கு கேட்காமல் மெல்லமாய் அவளின் காதிற்குள் முணுமுணுத்துவிட்டு,
“பாய் டி நாளைக்கு பாக்கலாம்”என்று அவளின் பதிலை எதிர்பார்க்காமல் விடைபெற்று செல்ல,
அவளை ஆர்வப் பார்வை பார்த்து வைத்தான் ஜெகதீஷ் .
அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியாமல்,
“என்னாச்சு திடீர்ன்னு…எதுக்கு ஆபீஸ் வந்து இருக்கீங்க? நான் என் ஃப்ரெண்ட் தேஜு கூட ஷாப்பிங் போயிட்டு தான் வருவேன்னு மெசேஜ் பண்ணேன் தான?” என்று குழப்பமாய் பார்த்தபடி இவள் கேட்க,
“ப்ச்ச் ஷாப்பிங் எல்லாம் நாளைக்கு போய்க்கலாம் .. அதவிட ஒரு முக்கியமான விஷயம் அதுக்காக தான் வந்தோம்”என்று சொன்னது சாட்சாத் ஜெகதீஷ் தான்.
மதுரா புரியாமல் பார்க்க
“உனக்கு ஒரு சர்ப்ரைஸ்… அதுக்காக தான் இவ்வளவு தூரம் வந்தோம்” என்றான் பிரகதீஷ்.
மதுரா திருத்திருவென்று விழித்தபடி ஜெகதீஷ் பிரகதீஷ் இருவரையும் பார்த்தாள்.
என்ன இவர்கள் உளறுகிறார்கள்? என்பது போல் தான் இருந்தது அவளின் பார்வை…
பிரகதீஷ் அடுத்து ஏதோ சொல்ல வர,
“பாவம் அவங்க டயர்டா இருக்காங்க போல…இங்க வச்சு பேச வேண்டாம் பக்கத்துல எதாவது ரெஸ்டாரன்ட் போகலாம்”என்றான் மாஹித்.
அப்பொழுதுதான் புதியவனை பார்த்த மதுரா இவர்களுடன் பணி புரிபவன் போல என்று மட்டுமே நினைத்தாள். அதற்கு மேல் யோசிக்க கூட இல்லை.
“ப்ளைட்ல இவ்வளவு தூரம் டிராவல் பண்ணி வந்து இருக்கீங்க…நீங்களும் தான டயர்டா இருப்பீங்க.. ஆனா நீங்க மதுராவை பத்தி யோசிக்கிறீங்களே?”என்று பிரகதீஷ் சிலாகித்து சொல்ல,
மாஹித் மனோகரன் வஞ்சமாய் சிரித்து,
“அப்டி இல்ல பிரகதீஷ் எப்பவுமே லேடிஸ் ரொம்ப சாப்டானவங்க… அதுவும் இவங்கள பாத்தாலே தெரியுது இவங்க எக்ஸ்ட்ரா சாஃப்ட்ன்னு.. அப்டி இருக்கும்போது டே ஃபுல்லா ஒர்க் பண்ணிட்டு டயர்ட் ஆகி இருப்பாங்க இவங்கள நிக்க வச்சு பேசிட்டு இருக்க முடியுமா? அதான் சொன்னேன்” என்றான். அவன் சாஃப்ட் என்று சொன்னது அவர்களின் மாமிசத்தை என்று தெரியாமல்,
பிரகதீஷோ, “வாவ் நீங்க எவ்ளோ யோசிக்கிறீங்க? உங்கள கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சவங்க” என்று சொல்லிவிட்டு ஜெகதீஷை பார்த்து சிரிக்க,
ஜெகதீஷ் பதில் எதுவும் சொல்லாமல் புன்னகைத்தபடி இருந்தான்.
இதில் அவர்களின் பேச்சில் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் மதுரா மீண்டும் என்ன நடக்கிறது இங்கே? என்பது போல் பார்த்து வைக்க,
” ஃபர்ஸ்ட் கார்ல ஏறு பொறுமையா உன்கிட்ட எக்ஸ்ப்ளைன் பண்றோம்” என்றான் ஜெகதீஷ்.
இவர்கள் இருவரும் தனக்கு வைத்திருக்கும் ஆப்பை பற்றி அறியாமல் காரில் ஏறி அமர்ந்தாள் மதுரா.
மதுரா பின்னால் அமர்ந்திருக்க, அவள் அருகில் ஜெகதீஷ் அமர்ந்து கொண்டான்.
ஓட்டுனர் இருக்கையில் பிரகதீஷ் இருக்க, அவன் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தான் மாஹித் மனோகரன்.
அவனின் கண்களோ பின் இருக்கையில் இருந்த மதுராவை இகழ்ச்சியாக பார்த்தது. ‘என் அண்ணனையா வேண்டாம்ன்னு சொன்னான் உன் அப்பன்.. அவனுக்கு சரியான தண்டனையா உன் தலைய வெட்டி பரிசா அனுப்பி வைக்கிறேன் டி’ என்று மனதிற்குள் சூளுரைத்துக் கொண்டவனின் இதழ்கள் வஞ்சமாய் விரிந்தது.
*******************
அன்றைய தினத்தில் விஐபிகளை அடைத்து வைத்து ராஜ மரியாதையோடு கவனிக்கும் மத்திய சிறைச்சாலையின் பார்வையாளர்களின் பகுதியில் தன்னை சந்திக்க வந்த தனது முன்னாள் கட்சித் தலைவரின் பேச்சைக் கேட்டு ஆக்ரோஷத்தோடு நின்றார் முத்துமாணிக்கம்.
“நான் தான் உங்களுக்கு எதிராக எந்த சாட்சியும் சொல்லலையே தலைவரே! இப்ப எதுக்கு தேவையில்லாம என் குடும்பத்தை பின் தொடர்ந்து போறீங்க? அவங்களாவது எங்க இருந்தாலும் நிம்மதியா இருந்துட்டு போகட்டும்”
“இங்க பாரு மாணிக்கம் என்னால எப்பவுமே நீ மனசு மாதிரி எப்ப என்ன பத்தி சொல்லுவியோனு யோசிச்சுட்டு இருக்க முடியாது…அதான்..”
“அதுக்காக என் பிள்ளைய கொல்ல ஆள் அனுப்புனத பத்தி என்கிட்டே சொல்ல வந்திருக்கீங்களா?”
“நான் சொல்றத முழுசா கேளு மாணிக்கம்… நான் ஒன்னும் கொல்லலாம் ஆள் அனுப்பல உன் மகளை கடத்த தான் ஆள் அனுப்பினேன்.. அதுவும் எதுக்காக? உன்கிட்ட என்ன பத்தின ஆதாரங்கள் இன்னும் இருக்குமே எனக்கு தெரியும் அந்த இடத்தை மட்டும் உன்ன சொல்ல வைக்க தான்…ஆனா அப்பதான் தெரிஞ்சுகிட்டேன் உன் மகளுக்கு ஏதோ பெரிய பாதுகாப்பு இருக்குன்னு… நான் அனுப்புன ஆளுங்க எல்லாம் திரும்ப வரவே இல்ல… விசாரிச்சு பாத்துட்டேன் போலீஸ் கேசும் எதுவும் ஆகல, சொல்லப்போனால் இப்படி ஒரு சம்பவம் நடந்ததை பத்தி வெளிய யாருக்குமே தெரியல”
என்றவர் நீண்ட பெருமூச்சுடன்,
“உண்மைய சொல்லு மாணிக்கம் நமக்குள்ள நடந்த டீலிங் பத்தி வெளியே யாருக்கெல்லாம் தெரியும்? உன்கிட்ட ஆதாரம் இருக்குனு எனக்கு தெரியும் அந்த மரியாதையா கொடுத்துடு இல்லன்னா… உன் குடும்பத்த கருவறுக்காமல் விடமாட்டேன்”
“யோவ் நிறுத்துயா..! சிபிஐ விசாரிக்கும்போது எல்லா தப்பும் என் மேல போட்டுகிட்டு உன்ன போய் காப்பாத்த முயற்சி பண்ணேன் பாரு..ச்ச..”
“மாணிக்கம் மரியாதையா பேசு… உன்ன வளர்த்து விட்டதே நான் தான்..”
“அதுக்காக தான்யா… அதுக்காக மட்டும் தான் இவ்வளவு நாளு இவ்வளவு மாசம் அந்த நன்றிக்காக மட்டும் தான் நான் எதை பத்தியும் வாய் தொறக்கல…”
“இவ்ளோ பேசுற நீ அப்போ அந்த ஆதாரத்தை மட்டும் எதுக்கு தர மாட்டேங்குற?”
“ஐயா எல்லாமே என் ஆபீஸ்ல தான் இருந்துச்சு ஆனால் நான் கடைசியாக பார்க்கும் போது அந்த டாக்குமெண்ட்ஸ் எதுவுமே அங்க இல்ல என்ன ஆச்சு என்ன நடந்துச்சு எனக்கு எதுவுமே புரிய மாட்டேங்குது..”
“இதை என்ன நம்ப சொல்றியா? உண்மைய சொல்லு எங்க வச்சிருக்க?”
“ஐயா நான் சொல்றது எல்லாமே உண்மைதான்…. உங்க பேச்சை கேட்டு தேவையில்லாம பேராசைப்பட்டு பண்ண பாவத்துக்கு எல்லாம் பெத்த பிள்ளைங்களே என்ன காரி துப்பாத குறையா ஊர விட்டு போறதுக்கு முன்னாடி பாத்துட்டு போனது தான்… அதுவும் என் மூத்த மக என்ன பாக்க கூட வரல.. எல்லாத்துக்கும் காரணம் என்னோட பேராசை ஆனா அது இப்ப என்கிட்ட இல்ல”
“நான் திரும்பத் திரும்ப கேட்க கேட்க கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி அதே பதிலையே சொல்றியே மாணிக்கம்… உனக்கு ஒன்னு தெரியுமா? அந்த பெர்னாண்டஸ் இன்னும் சாகல உயிரோட தான் இருக்கான் அவனோட தம்பி அவனை காப்பாத்தி வச்சிருக்கான்.. கூடிய சீக்கிரமே உன் மகள நான் தூக்கலனாலும் அவன் தூக்குவான்”
முத்து மாணிக்கம் ஒரு நொடி அதிர்ந்து பின் மெதுவாய் சிரிக்க ஆரம்பித்தார்.
“என்ன மாணிக்கம் திடீர்னு பைத்தியம் புடிச்ச மாறி சிரிக்கிற பைத்தியமே ஆகிட்டியா?”
“இல்லையா நீங்கதானே சொன்னீங்க என் மகளை யாரோ காப்பாத்துறாங்கன்னு அவங்க இருக்கிற முடியும் உங்களால மட்டுமில்ல எவனாலையும் என் மகளையும், என் குடும்பத்தையும் எதுவும் செய்ய முடியாது”
“இதோ இந்த தைரியம் தான் என்னை யோசிக்க வைக்குது மாணிக்கம்.. உண்மையை சொல்லிடு மாணிக்கம் உன் குடும்பத்துக்கு எதுவும் ஆகாம நான் பாத்துக்குறேன்”
“ஐயா நீங்க எத்தனை தடவை கேட்டாலும் என்னோட பதில் மாறாது என்கிட்ட வந்து ஆதாரம் இல்ல..”
அதில் கோபமான அந்த கட்சித் தலைவரோ,
“இதற்கான பின் விளைவுகளை நீ சீக்கிரமே சந்திப்ப மாணிக்கம்.. உன்னையும் உன் குடும்பத்தையும் நான் சும்மா விடறதா இல்ல… அவங்களுக்கு பாதுகாக்க என்னை எதிர்க்க எந்த கொம்பன் வர்றானு நானும் பாக்குறேன்” என்று அந்த வயதிலும் மிரட்டலாய் கர்ஜித்தவர்..
அங்கிருந்து அகல,
‘ஆனா தலைவரே விதி பொல்லாதது… உங்களுக்கு எதிரா தான் இனி எல்லாமே நடக்க போகுது… நீங்க துடி துடிச்சு சாகப் போறீங்க ‘ என்று மனதிற்குள் வெறுப்போடு நினைத்த முத்துமாணிக்கம் கண்களை மூடியபடி நடந்ததை எல்லாம் நினைத்து பார்த்தார்.
அன்று மண்டபத்தில்,
மதுராவை திருமணம் செய்ய சொல்லி கேட்டபோது கருப்பசாமி உடனே ஒத்துக் கொண்டாலும், மதுரா மயங்கி விழுந்தது போல் நடித்துக் கொண்டிருந்த வேளையில் அவரை தனியாய் அழைத்து சென்றவன்
“உங்களோட பொண்ணுக்கு எந்த ஆபத்து வராமல் நான் பாத்துக்குறேன்… ஆனா அதுக்கு நீங்க அரெஸ்ட் ஆகணும்”
ஒரு நொடி அதிர்ந்து போன முத்துமாணிக்கம்,
“என்ன சொல்ற கருப்பசாமி? எனக்கு எதுவும் புரியலையே..”
“இங்க பாருங்க சார்.. இனிமே இங்க நடக்க போறது எல்லாம் உங்களுக்கு புரிய போறது இல்ல தான் ஆனா அந்த பெர்னாண்டஸ் இன்னும் கொஞ்சம் நேரத்துல இங்க வர போறான்… அவன பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம் அவனை நான் பார்த்துக்கிறேன்”
“அதுக்கும் நான் அரெஸ்ட் ஆகுறதுக்கு என்ன சம்பந்தம்?
“ஏன்னா உங்கள பத்தின ஆதாரங்கள் போலீஸ் கைல கிடைச்சுட்டு”
“அது உனக்கு எப்படி தெரியும்..?”
அவருக்கு ஒன்றும் புரியாத நிலை.. ஏற்கனவே சொந்தம் என்று நம்பி தங்கை மகனான பத்ரிக்கு மகளைத் திருமணம் செய்து கொடுத்து கூடவே அவர்கள் வாழ்நாள் முழுவதிற்கும் தேவையான சொத்தையும் கொடுத்து அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பும் திட்டம் நின்று போயிருக்க.. திடீர் மாப்பிள்ளையாக தனது நம்பிக்கைக்குரிய இவனை கொண்டு வரலாம் என்று பார்த்தால்… என்ன இவன் என்னென்னமோ சொல்கிறான்?
“இப்ப எதையும் என்னால சொல்ல முடியாது சார் கொஞ்சம் பொறுமையா இருங்க வாங்க மதுராவ பாக்க போகலாம்”என்று அழுத்தம் திருத்தமாய் சொன்னவன் முன்னே நடக்க ஆரம்பிக்க,
உடலும் மனதும் சோர்ந்து முத்து மாணிக்கம் அவன் பின்னே சென்றார். அவனின் அழுத்தமான வார்த்தைகளுக்கு பின்னால் அதை திரும்ப கேட்க அவருக்கு அப்போதைய மனநிலையில் தோன்றவில்லை.
ஆனால் பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல தன்னைப் பற்றிய தகவல்கள் எதுவோ அதிகாரிகளுக்கு கிடைத்திருக்கலாம் என்ற அனுமானம் மட்டுமே அவருக்கு.. ஆனால் அதைக் கூட தான் சமாளித்துக் கொள்ளலாம் என்றே நினைத்தார்.
ஆனால் அடுத்தடுத்த சம்பவத்தில் கருப்பசாமியின் உண்மையான அடையாளம் தெரிந்து அதிர்ந்து போனவர், அதன் பிறகு எந்த எதிர்வாதமும் புரியாமல் பிள்ளைகளின் முன்னால் அவமானப்பட்ட விட்டோமே என்ற குற்ற உணர்வில் அவர்களின் கைது நடவடிக்கைக்கு உடன்பட்டார்.
மகன்கள் இருவரும் வெறுப்போடு அவரை பார்த்திருக்க, வினோதாவோ அவரைப் பார்க்கவே விரும்பாதது போல் கணவனின் கையை பிடித்தபடி மறுபக்கமாக திரும்பி நின்றிருந்தாள். ஆனால் மதுராவின் முகமோ தன் தந்தையா இப்படி என்று அதிர்ச்சியும் கலக்கமும் சுமந்த விழிகளோடு அவரை ஏறிட்டு பார்த்திருக்க இவருக்கு தாங்க முடியவில்லை.
அவர் ஒன்றும் பிறந்த உடனே செல்வ செழிப்பில் ஒன்றும் வாழவில்லை.. பிறந்த சில வருடங்களிலேயே தந்தை நோயுற்று இறந்துபோக.. தாய் மட்டுமே… அவரின் தாய் செல்வ வாணி.. அவர்கள் ஊரில் சத்துணவு கூடத்தில் ஆயாவாக பணிபுரிந்தவர்… இரவில் தனியாக தள்ளுவண்டியில் இட்லி கடை வைத்திருந்தார்.அவரின் இடைவிடாத உழைப்பில் மட்டுமே அவருக்கு உண்ணுவதற்கும் உடுப்பதற்கும் போஜனம் கிடைத்தது. தாயின் உழைப்பில் ராஜாவாக வாழ்ந்த முத்து மாணிக்கம் பள்ளி படிப்பை முடிக்கும் தருவாயிலே சாலை விபத்தில் அவரின் தாய் தவறி இருக்க, போஜனம் இல்லாமல் இருக்கும் வீட்டை மட்டுமே நம்பி சிறு சிறு வேலைகளை செய்து கொண்டு தாயின் நினைவில் இருந்தவர் ஒரு கட்டத்தில் பிழைக்க வேண்டும் என்றே தன் இளம் வயது ஆர்வக்கோளாறில் அரசியலில் ஈடுபட்டு அதற்குப் பிறகு வந்ததே இந்த பேரு பணம் செல்வாக்கு எல்லாம்.. அதன் பிறகு பெரிய இடமாக பார்த்து திருமணம் செய்து பிள்ளைகள் பிறக்க பிள்ளைகள் மூவரும் அப்படியே அவர் முதல் மனைவியின் சாயலில் இருந்தனர். அதற்காக அவர்கள் மீது பாசம் இல்லை என்று இல்லை.
இறந்த தாயின் மீது அவருக்கு அத்தனை பாசம்.. அதனாலயே அவர் சாடையில் ஒரு பிள்ளை பிறந்தால் நன்றாக இருக்குமே என்று அவர் நினைக்காத நாளில்லை… அவரின் எதிர்பார்ப்பிற்கு கிடைத்த வரம் போல் அவரின் தாயின் சாயலில் தான் மதுரா பிறந்திருந்தாள்
அதனாலயே அவளை அனாதை ஆசிரமத்திற்கு அனுப்ப சொல்லி சுற்றி இருந்தவர்களின் தூண்டுதலைப் பொருட்படுத்தாமல் அவளை தன் மூத்த தாரத்தின் பிள்ளைகளோடவே வளர விட்டார்.
ஆனால் அதுவே அவளுக்கு ஆபத்தாகி விட்டதும் துடித்தவர் தன் மகள் எங்கிருந்தாலும் சரி பாதுகாப்பாக இருந்தால் மட்டும் போதும் என்றுதான் அவளைத் தங்களது வீட்டில் இருந்து விலக்கி அச்சிறு வயதிலேயே விடுதியில் தங்கி படிக்க வைத்தார்.
அவளிடம் பாசமாய் பேசவில்லை என்றாலும் அடிக்கடி இல்லை என்றாலும் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது அந்தப் பக்கம் வருவது போல் வந்து தூரத்திலிருந்தே மகளின் நலனை பார்ப்பவர் ஆயிற்றே அவர்..
அப்படிப்பட்ட மகளுக்கு தனது கூடாத பழக்கத்தினாலும் தன் துர் வேலைகளின் பிரதிபலிப்பாலும் வந்த ஆபத்தே மாமிச உண்ணி பெர்னாண்டஸ். அதிலிருந்து அவளை மீட்டே ஆக வேண்டும்… அதுவும் தன் தாயை மீட்டே ஆக வேண்டும் என்று இந்த அவசர கல்யாணத்தை ஏற்பாடு செய்து அதில் தானே சிக்கி கொண்டதை எண்ணியவரின் மகளின் கண்ணீரை கண்டதும் துக்கத்தினால் நெஞ்சம் விம்மி வெடித்தது.
சரி கெட்டதிலும் ஒரு நல்லதாக அந்த கருப்புசாமி நல்லவன் என்பதற்காகவே திருமணம் செய்ய சொல்லி கேட்டவருக்கு இப்பொழுது ஒரு ஒழுக்கமான பதவியில் மிக நல்லவனாகவே இருக்கவும் மதுராவின் வாழ்க்கை நல்லதாக இருக்க வேண்டும் என்று அவர் மனம் எண்ணியது. அதோடு அந்த பெர்னாண்டஸ் உயிருக்கு போராடிய நிலையில் கைது செய்யப்பட்டதையும் அவர் பார்த்தார் தானே? இனி மதுராவிற்கு என்ன ஆகுமோ என்ற பயம் இல்லை.. என்ற நிம்மதி இருக்க என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில் தான் தன்னை கைது செய்தவர்களுடன் பயணித்தார்.
ஆனால் தன்னை விசாரிப்பதற்காக சிபிஐ அவர்களின் துறையில் விசாரிப்பு அறையில் வைத்திருக்க… சில மணி நேரத்தில்
அவ்வறையில் தனது அக்மார்க் வேகம் நடையுடன் நுழைந்தான் கருப்பசாமி.
“வணக்கம் மிஸ்டர் முத்துமாணிக்கம்… ஐ அம் கருப்பசாமி அலைஸ் கார்முகில் வர்ணன்… ப்ரம் சிபிஐ”
“வணக்கம் மாப்பிள்ளை” என்றார் முத்து மாணிக்கம்.
“இந்த சொந்தம் கொண்டாடுற வேலையெல்லாம் இங்க வேண்டாம் மிஸ்டர்.. உங்க பொண்ணு எப்பவோ இந்த கல்யாணம் வேண்டாம்னு தாலியை கழட்டி தந்துட்டா..
அதிர்ந்து போனவர் அதன் பிறகு பேசவில்லை மௌனமாய் என்ன கேட்க வேண்டுமோ கேளு என்பது போல் பார்த்திருந்தார்.
அவரின் அதிர்ச்சியை அவதானித்தப்படியே அவரின் எதிரே இருந்த நாற்காலியில் கால் மீது கால் போட்டு அமர்ந்தவன்,
“சொல்லுங்க மிஸ்டர் முத்து மாணிக்கம் உங்க கூட பார்ட்னர்ஷிப்ல பெர்னாண்டஸ் மட்டும் இல்லாம இன்னும் ஒரு பெரிய தலையும் இருக்கான் அவன் யாருன்னு சொல்லுங்க”
“நீங்க என்ன கேக்குறீங்கன்னு எனக்கு தெரியல… தப்பு முழுசா என் மேல தான் இருக்கு” என்று தன் தலைவரை காட்டிக் கொடுக்காமல் அத்தனை தவறுகளும் தன் மீது தான் என்று சொன்னவரை நக்கல் ததும்பும் விழிகளோடு பார்த்தவன்,
ரிமோட்டினால் கண்ணாடி கதவிற்கு வெளியே இருந்த எல்இடி டிஸ்ப்ளேவை ஆன் செய்ய, அதில் முத்து மாணிக்கம் கைது செய்யப்பட்டது ஒளிபரப்பாக அவரின் கட்சியில் பெரிய பெரிய பதவிகளில் இருக்கும் அனைவரும் இது தங்களது கட்சிக்கே அவமானம் சாபக்கேடு இவரை போன்றவர்களெல்லாம் என்கவுண்டரில் போட்டுத் தள்ள வேண்டும்… இப்படி ஒரு குள்ளநரி தங்களது கட்சிக்குள் இருந்தது தங்களுக்கு தெரியாது .. இப்படி பாவம் செயல்களை செய்தவர்கள் எல்லாம் குடும்பத்தோடு தூக்கில் தொங்க வேண்டும் என்று வாய்க்கு வந்தபடி அவரை மட்டுமின்றி அவரின் குடும்பத்தையே சாட, இறுதியாக பேட்டி கொடுக்க வந்தவர் முத்துமாணிக்கத்தின் கட்சித் தலைவர்,
அவரைப் பார்த்ததும் கார்முகில் வர்ணனின் முகம் இறுக ஆரம்பிக்க, தனது தலைவர் தன்னை விட்டுக் கொடுக்க மாட்டார் தன்னை இந்த பிரச்சனையிலிருந்து வெளிக்கொண்டு வந்துவிடுவார் என்ற நம்பிக்கையோடு தான் முத்துமாணிக்கம் அந்த பேட்டியை பார்த்தார்.
ஆனால் அவர் எதிர்பார்ப்பை பொய்யாக்கி,
மற்றவர்களின் சாடலை விட, பல மடங்கு ஆக்ரோஷத்தோடு பொய்யான வேதனையோடும் பேசினார் பெரியவர்.
“முத்துமாணிக்கம் நல்லவன் போல நடிச்சு என்னை ஏமாத்திட்டான். பொண்ணுங்க தான் நம்ம நாட்டோட கண்கள் அவங்களே விக்க பார்த்திருக்கான்…ச்சீ சொல்லவே வாய் கூசுது… அவனை என் சொந்த தம்பி மாதிரி பார்த்தேன்”என்று போலியாக கண்ணை கசக்க
” சார் உங்க கட்சியில இன்னும் யார் யாரெல்லாம் இதுல ஈடுபட்டு இருக்காங்கன்னு தெரியுமா?”என்று பத்திரிக்கை நிருபர் ஒருவர் சத்தமாய் கேட்க,
“என்னோட கட்சிக்கும் அந்த கழிசடைக்கும் இனிமே சம்பந்தம் இல்ல அதே மாதிரி அவன மாதிரி என் கட்சிக்குள்ள யாருமே கிடையாது…
அத நான் எந்த கோயில்லனாலும் கற்பூர அடிச்சு சத்தியம் பண்ணி சொல்லுவேன்”
முத்து மாணிக்கத்தின் கண்கள் நம்ப முடியாமல் கலங்கிப்போய் தன் தலைவரை கொலை வெறியோடு நோக்க,
அதோடு டிவியை ரிமோட்டினால் அமர்த்தியவன்,
“இப்ப சொல்லுங்க மிஸ்டர்… உங்க கூட யார் யாரெல்லாம் இருக்கா?”
என்று மீண்டும் நிதானமாக கேட்டான் அவன்.
ஆனால் இப்பொழுதும் அவர் மௌனமாய் இருந்தாரே தவிர பதில் சொல்லவில்லை.
“இங்க பாருங்க நான் உங்கள நோட் பண்ணதுல இருந்து நீங்க அப்படி ஒன்னும் கெட்டவரா எனக்கு தெரியல… ஆனா கண்டிப்பா உங்களுக்கு பணம் மேல அதிகமா மோகம் இருக்கிறத நான் கவனிச்சேன்.. உண்மைய சொன்னா உங்கள இதுல இருந்து காப்பாத்துறதுக்கு ஒரு பர்சன்டேஜாவது வாய்ப்பிருக்கு.. அதுக்கப்புறம் நீங்க உங்க குடும்பத்தோட சந்தோஷமா இருக்கலாம்” என்று ஆசை வார்த்தை காட்ட..
அதில் நிமிர்ந்த அமர்ந்த
முத்துமாணிக்கம் மௌனம் கலைத்தார்.
ஆனால் அவன் எதிர்பார்த்ததைப் போல் அவர் எழுதும் சொல்லவில்லை.
“இங்க பாருங்க எனக்கு அவர் மேல கோபம் இருந்தாலும் ஒரு காலத்துல எனக்கு உதவி பண்ணவர காட்டி குடுக்க எனக்கு மனசு வரல.. என்னைக்குமே நான் அவருக்கு விசுவாசமா தான் இருப்பேன்”
எங்கேயும் எதிலும் தனது கட்சித் தலைவரின் பெயரையோ அவரையோ குறிப்பிட்டு அவர் சொல்லவில்லை ஏனென்றால் சுற்றிலும் கேமராக்கள் இருந்ததை அவர் கவனித்தார்.
அதை புரிந்து கொண்டவன் கசப்பாய் ஒரு புன்னகையுடன்,
தன் கையில் இருந்த மொபைலில் ஒரு வீடியோவை ஓட விட்டு அவரிடம் காட்ட,
அதில் அவரின் கட்சித் தலைவர், ஒரு விருந்து நிகழ்ச்சியில் தனியறையில் மதுராவின் அழகை வர்ணித்து பேசிக் கொண்டிருந்த காணொளி ஒளிபரப்பானது.
“இப்படி ஒரு அழகானகுட்டிய பெத்து வச்சிருக்கானே மாணிக்கம்… ஒரு நாளும் கண்ணுல காட்டினது இல்ல.. அந்த பெர்னாண்டஸ் மட்டும் அவளோட போட்டோவை எனக்கு காட்டலனா இப்படி ஒரு அழகி இருக்கறது எனக்கு தெரியாம போயிருக்கும்.. என்ன இருந்தாலும் அந்த பெர்னாண்டஸ் நம்ம ஆளுங்கள தானே கூட்டிட்டு போறான்.. எப்படியும் அந்த குட்டிய கடத்தி நம்முடைய கெஸ்ட் ஹவுஸில் தான் ஒரு நாள் நைட் வைப்பான் அப்ப கவனிச்சிக்கிறேன் அந்த குட்டிய”
என்று ஒரு வித கேவலமான இளிப்போடு சொல்ல,
“ஐயா முத்துமாணிக்கத்துக்கு விஷயம் தெரிஞ்சா…”என்று அவருக்கு கால் கை அமுக்கிக் கொண்டிருந்த அல்லக்கை கேட்க,
“அவனுக்கு தெரிஞ்சா மட்டும் என்ன புடுங்கிடுவான்… அவன பொருத்த முடியும் நான் தான் அவனுக்கு தெய்வம்.. தெய்வத்துக்கு காணிக்கையா பெத்த பிள்ளைய குடுக்கறதுல என்ன தப்புங்குறேன்”என்று அந்த காணொளி முடிந்திருக்க,
முத்து மாணிக்கம் விழிகள் கலங்க அவனைப் பார்க்க,
கார்முகில் வர்ணனின் முகமோ தன் மனையாளை வர்ணித்து பேசிய அந்த கிழட்டு நாயை கொல்லும் கொலை வெறியில் இறுகிக் கிடந்தது.
உஷ்ணமான மூச்சோடு அவரிடம் திரும்பியவன்,
“இப்பவாது அப்ரூவர் ஆகுறீங்களா?”
முத்து மாணிக்கத்திற்கு தன் தலைவரா இப்படி என்று நம்ப முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை.
அவருக்கு யோசிக்க நேரம் தேவைப்பட்டது கூடவே அப்படியே உன் பேச்சை நம்பி காட்டிக் கொடுத்து விட்டால் சும்மா இருப்பவர் அல்ல அவர் கண்டிப்பாக தன்னை மிரட்டுவதற்காக தன் குடும்பத்தின் மீதுதான் கை வைப்பார் என்று அறிந்தவர் அதற்காகவே தனக்கு யோசிக்க நேரம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அவரை அழுத்தமாய் பார்த்தவன், தான் நாளை வருவதாய் சொல்லிவிட்டு கிளம்பினான்.
ஆனால் வரவில்லை.. மறுநாளும் அவன் வராததால், அங்கிருக்கும் மற்ற அதிகாரிகளிடம் இவர் என்னவென்று கேட்க,
விபத்து என்று மட்டுமே சொல்லப்பட்டது கார்முகில் எங்கே இருக்கிறான் என்று யாருக்குமே தெரியவில்லை.
அவனுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்திருக்கிறது என்று புரிந்து கொண்டார். அதில் அவருக்கு இன்னும் பயமாகி போனது.
இதற்கிடையில் தான் மற்ற அதிகாரிகள் இவரை விசாரிக்க, ஏனோ வெளியே இருக்கும் தங்களது குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமே… என்ற பரிதவிப்பில் அவர் இம்முறையும் கட்சித் தலைவரின் பெயரை வெளியே சொல்லவில்லை தவறு தன்மீது தான் என்று சொல்லிவிட்டார்.
வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் சமயம் மகன்கள் இருவரும் பேருக்கு வந்து சென்றாலும் அவரிடம் பேச்சு வைத்துக் கொள்ளவில்லை. மதுரா அவரைப் பார்க்கவே வரவில்லை.
ஆனால் ஊரை விட்டு கிளம்புவதாக சொல்வதற்கு மட்டும் ஒரு நாள் பிரகதீஷ் ஜெகதீஷ் மதுரா மூவரும் வந்திருந்தனர். மகன்கள் இருவரும் தந்தையிடம் முகம் கொடுத்து பேசவில்லை என்றாலும் உங்களால்தான் எங்கு சென்றாலும் அவமானப்படுகிறோம் என்று நன்றாக வாய்க்கு வந்தபடி திட்டியவர்கள்.. இனி இந்ந ஊரில் இருக்க முடியாது கொல்கத்தா போய் வருகிறோம் என்று சொல்ல,
மதுரா மௌனமாய் நின்றாள். ஒரு வார்த்தை கூட பேசவில்லை அவரிடம் .. அவளின் கண்கள் கலங்கி இருந்தது.
“அப்பாவ மன்னிச்சுடுடா” என்றார் மெதுவாய்.
மதுரா மன்னிக்க மாட்டேன் என்பது போல் முகத்தை திருப்பிக் கொண்டாள். பார்வையாளர்களின் நேரம் முடிந்து இருக்க
எதுவும் பேசாமல் கிளம்பி விட்டார்கள் மூவரும்.
அதுதான் அவர் பிள்ளைகளை கடைசியாக பார்த்தது.
அதன் பிறகு சுமார் 4 மாதங்கள் கழித்து, அவரைப் பார்க்க வந்தான் கார்முகில் வர்ணன்.
நெற்றியில் தழும்போடு கண்ணில் கருவளையத்தோடு ஆளே மாறி போயிருந்தான். அதோடு அவன் எழுந்து நிற்கவில்லை வீல் சேரில் அமர்ந்திருந்தான்.
அவன் பின்னால் நின்றவன் தன்னை மாதேஷ் என்று அறிமுகப்படுத்தியதோடு,
“சார் இவன் முதல் என்னோட ஃப்ரெண்ட் கிட்டத்தட்ட மூணு மாசமா கோமால இருக்கான்.. லாஸ்ட் டைம் இவனுக்கு சுய நினைவு வந்தப்போ மதுரா மதுரான்னு மட்டும் சொன்னான்.. பழசு எதுவும் அவனுக்கு ஞாபகம் இல்ல… இவனுக்கு மருந்து மதுரா கிட்ட தான் இருக்கு… அவங்கள பத்தி எந்த டீடைல்லும் கிடைக்க மாட்டேங்குது.. உங்க பொண்ணு எங்க இருக்காங்கன்னு சொல்லுங்க சார்”
கார்முகில் வர்ணன் அவரை நினைவின்றி பார்த்தாலும் அவனின் கண்கள் அவரை ஆழ்ந்து பார்ப்பது போல் இருக்கவும்…
தலையே உலுக்கி கொண்டவர்,
தன் குடும்பம் இருக்கும் இடத்தை காட்டிக் கொடுக்கவில்லை.
“இங்க பாருங்க தம்பி எனக்கு அவ எங்க இருக்காங்கன்னு தெரியாது”என்று சொல்லிவிட்டார்.
மாதேஷ் எவ்வளவோ கேட்டும் அவர் சொல்லவே இல்லை. தன் பிடியில் உறுதியாக இருந்தார். என்ன ஆனாலும் சொல்லக்கூடாது என்று.. தன் பிள்ளைகள் எங்கிருந்தாலும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று…
ஆனால் இறுதியாக மாதேஷ் சொன்னது அவரை திகைக்க வைத்தது.
“சார் எஸ்கே குரூப்ஸ் கேள்விப்பட்டு இருக்கீங்களா? கனடாவில் ரொம்ப ரொம்ப ஃபேமஸ்…அதோட ஓனர் சிவதேவ் பிரபாகர் அவரோட ஒரே சன் கார்முகில் வர்ணன்… இப்பவாது தெரிஞ்சிருக்கும் இவனோட வேல்யூ… சோ ப்ளீஸ் சொல்லுங்க மதுரா எங்க இருக்காங்கன்னு”
இதைக் கேட்ட முத்துமாணிக்கத்திற்கு அதிர்ச்சி என்பதை விட பேரதிர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும்…!
முதலில் டிடெக்டிவ் கம்பெனி என்ற பெயரில் இருள் உலகிற்கு உதவி செய்யும் ஒருவனாக அறிமுகமாகி பின் தன் வீட்டில் பாடிகார்ட் என்னும் பாதுகாவலனாகி.. அதன் பிறகு குற்றத்தை களைய மாற்று வேடம் தரித்து வந்த சிபிஐ அதிகாரியாக… என்று அவனின் ஒவ்வொரு பரிணாமமும் அவர் அறிந்திருக்க,
அவனின் உண்மையான முகம் இத்தனை பெரிதாக எத்தனை முக்கியத்துவமாக இருக்கும் என்று அவர் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை.
“சிவதேவ் சார் உங்க கிட்ட பேசணுமாம்…”என்று மாதேஷ் தனது தொலைபேசியையும் அவரிடம் கொடுத்து விட,
அதைக் கையில் வாங்கிய முத்துமாணிக்கத்திற்கு எதிர்பக்கம் கேட்ட குரலில் கைகள் நடுங்கியது.
“வணக்கம் முத்து மாணிக்கம்…”
என்ற அழுத்தமாய் தொடங்கிய அந்த கம்பீரமான குரல்,
“என் பையன் மிகப்பெரிய ஆபத்தில் இருந்து வெளியே வந்து இருக்கான் .. அவனுக்கு கோடி கோடியா செலவு பண்ணி சிகிச்சை பண்றதுக்கு என்கிட்ட காசு இருந்தாலும்… அதுக்கு தேவையா உங்க பொண்ணு இருக்கா…”
ஏற்கனவே அவரைப் பற்றி முத்துமாணிக்கம் கேள்விப்பட்டிருக்கிறார்… உழைப்பு உழைப்பு என்று அதையே தாரக மந்திரமாக கொண்டு சுற்றுபவருக்கு தனக்கு துணை வேண்டும் என்று ஐம்பது வயதில் தான் திருமணம் நடந்து மகன் ஒருவன் இருக்கிறான் அவன் வெளிநாட்டில் படிக்கிறான் என்பது மட்டுமே வெளி உலகம் அறிந்தது.
ஆனால் அது கார்முகில் வர்ணன் என்பதை தான் அவரால் நம்ப முடியவில்லை.
“இங்க பாருங்க என் கூடவா நிம்மதிக்காக தான் இந்த ஊரை விட்டு போய் இருக்காங்க… அவங்களுக்கு என் மூலமா தொந்தரவு வர்றதுல்ல எனக்கு இஷ்டம் இல்ல” என்றார்.. விட்டுக் கொடுக்காமல்..
“என்னோட பையனோட இந்த நிலைக்கு காரணமானவன் அடுத்து தேடிப் போக போறது உங்க பொண்ண தான்.. நான் இப்போ கேட்கிறது உங்க பொண்ணுக்காக மட்டும் இல்ல என்னோட மருமகளுக்காகவும் தான்”என்று சிவதேவ் அழுத்தமாய் சொல்ல, நிச்சயமாய் அதில் பொய்யில்லை.
அத்தனை பெரும் பணக்காரருக்கு தன் மகளின் இருப்பிடத்தை கண்டுபிடிப்பது அப்படி ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று புரிந்ததால் வேறு வழி தெரியவில்லை.
இருப்பிடத்தை சொல்லிவிட்டார்.
“கவலைப்படாதீங்க எல்லாமே நல்லதா நடக்கும்.. என் மகனுக்கு சரியாகிட்டா அவனே எல்லாத்தையும் பார்த்துப்பான்.. கவலைப்படாதீங்க சம்பந்தி” என்றதோடு அழைப்பு துண்டிக்கப்பட,
மாதேஷ் கார்முகில் வர்ணனோடு விடை பெற்றான்.
இத்தனை மாதங்களில் எத்தனையோ மாற்றங்கள் நடந்தாலும் முத்துமாணிக்கத்தின் கட்சித் தலைவர் தனது அடியாட்களை அனுப்பி விதவிதமான பாணிகளில் அவரை மிரட்டியபட்டி தான் இருந்தார்.
தன்னைப் பற்றிய ஆதாரங்களை முத்து மாணிக்கம் மறைத்து வைத்து இருப்பதாய் நினைத்து அதை அழித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்… ஆனால் முத்து மாணிக்கம் அவ்வளவு எளிதில் வாயைத் திறக்கவில்லை.
மாதங்கள் கடக்க, வினோதாவின் கொல்கத்தா பயணத்திற்கு பிறகு தான் புகுந்த வீட்டினர் மூலமாக மதுரா இருக்கும் இருப்பிடம் தெரிய வந்திருக்க, முத்துமாணிக்கத்திடம் ஆதாரங்கள் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்வதற்காக மதுராவை கடத்தும் முயற்சியில் ஈடுபட்டதோடு அதை இன்று தன் முன்னாலேயே சொல்லவும் வந்து விட்டார்.
அவரின் பேச்சிலிருந்து தன் மகளை காப்பாற்றுவதற்காக அங்கு கார்முகில் வர்ணன் இருக்கிறான் என்ற நம்பிக்கை வர நிம்மதி பெருமூச்சோடு சிறைச்சாலையில் தனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சொகுசு நாற்காலியில் சரிந்து அமர்ந்தார் முத்துமாணிக்கம்.
அவரது மகன்களே மதுராவை ஆபத்தில் சிக்க வைக்க போவதை அறியாமல்!
இங்கு அதே நேரம் ஐந்து நட்சத்திர உணவு விடுதியில், வட்ட வடிவ கண்ணாடி மேஜையில் அமர்ந்திருந்தவர்கள்,
நீ திருமணம் செய்ய நாங்கள் பார்த்திருக்கும் மாப்பிள்ளை இவர்தான் என்று தங்களுடன் அந்த புதியவனைக் கை காட்டி அறிமுகப்படுத்திய சகோதரர்கள் இருவரையும் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தாள் மதுரா.
மாஹித் தன் திட்டப்படி மதுராவை திருமணம் செய்து அவளின் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக பறிக்க வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருக்க…
அவர்களையே பின்னால் அமர்ந்திருந்த உருவமும் அவர்களின் பேச்சு வார்த்தையை தான் கவனித்தபடி இருந்தது.
தொடரும்..
நாளை அடுத்த பதிவு தருகிறேன்…
போன பதிவிற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!🙂♥️
அவசரமாக டைப் பண்ணது பிழைகள் இருந்தா சொல்லுங்கள் திருத்திக்கிறேன்✍🏻
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
30
+1
4
+1
Super epi sis… பின்னாடி இருந்த உருவம் black thana sis…
அப்போ ஆபிஸ்ல மதுராவ கடந்த வந்தார்களா?
முட்டாள் அண்ணன்கள்
சூப்பர் எபி ♥️