2 நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன்
மதுரா தன் முட்டை கண்ணை விரித்து அவனை அதிர்ச்சியாய் பார்த்தது என்னவோ ஒரு நொடிதான், அதற்குள் ஆபத்தை உணர்ந்தவளாக, தன் நடுங்கிய குரலை மறைத்து
“மிஸ்டர் ப்ளாக் அவங்க.. போலீஸ்.. என்ன பண்றீங்க?” என்றாள்.
“நோ அவனுங்க போலீஸ் இல்ல. அவங்க ஜீப்ல நம்பர் பிளேட் இல்ல.. யூனிஃபார்ம்ல கவர்மெண்ட் பேட்ச் இல்ல..அவங்க ஃகன் கூட ஃபேக் தான் ” என்று அவன் அனுமாதித்ததை அவர்களைப் பார்த்துக் கொண்டே சொன்னவன் தனது துப்பாக்கியை கைகளுக்குள் தான் வைத்திருந்தான்.
அதற்குள் போலிஸ் ஜீப்பிலிருந்து இறங்கிய இருவரும் அவர்களின் காரின் அருகே வந்து விட்டனர்.
வந்தவர்கள் நேராய் மதுரா இருந்த பின்பகுதியை கண்ணாடியை தட்டி, “ஏய் கீழ இறங்கு செக் பண்ணனும்” என்று மிரட்ட, அவளுக்கு உடல் எல்லாம் பதறியது.
“நீ ஓபன் பண்ணாத.. கீழ குனிஞ்சுக்கோ..” என்றவன்,
தனது துப்பாக்கியை சுழற்சியப்படியே கீழே இறங்க முயல, பின்னிருந்து அவனின் தோளைத் தொட்டவள்,
“நோ நோ ப்ளீஸ் பிளாக் நீங்க வெளியே போக வேண்டாம்.. வெளியே போனா ரொம்ப டேஞ்சர் நீங்க உள்ளே இருந்துக்கோங்க” என்று மெல்லிய குரலில் மன்றாட,
“இட்ஸ் ஓகே ஐ வில் பி ஆல் ரைட்”என்று அவளின் கைகளை தட்டி விட்டு வெளியே சென்றிருந்தான் கருப்பசாமி.
அவன் இறங்கிய நொடி ஜீப்பில் இருந்து மேலும் இருவர் வெளியே வர, நால்வருக்கும் புரிந்து விட்டது அவன் தங்களை கண்டு கொண்டான் என்று.
ஆனால் அவர்கள் அடுத்த என்ன செய்ய? இவனைக் கொன்று விட்டு அந்தப் பெண்ணை தூக்கி விடலாமா? என்று யோசிப்பதற்குள், தன் அருகில் இருந்த இருவரையும் புயல் போல தாக்கி வீழ்த்தி இருந்தான். அடுத்து ஜீப்பில் ஏறி தப்பி செல்ல முயன்ற இருவரையும் பிடித்து மயங்காதவாறு அடிப் பிளந்து எடுத்தவன்,
அவர்களை துப்பாக்கி முனையில் நிற்க வைத்து,
“யார் உங்கள அனுப்புனா?”என்று கேட்க, அவர்கள் இருவரும் பயத்தில் புரியாமல் விழித்தனர்.
அதிலிருந்து அவர்களுக்கு தமிழ் தெரியாது என்று புரிந்து கொண்டவன்,
ஏதோ ஒரு கணிப்பில் தெலுங்கில் அதையே கேட்க, அவர்கள் புரிந்ததின் அடையாளமாக சொல்ல மறுக்க, அவர்களின் நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்ட பயந்தவர்களின் நாக்கு தங்களுக்கு தெரிந்ததை உலறி தள்ளியது.
அனுப்பியவன் யார்? என்று கடைநிலை அடியாட்களான அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.
அவர்களுக்கு மேல் உள்ள தலைவனுக்கு மட்டுமே அனுப்பியவன் யார் என்பது தெரியும்.
ஆனால் ஒரு விடயம் உறுதி அனுப்பியவன் யாராக இருந்தாலும் சரி அவனுக்கும் முத்து மாணிக்கத்திற்கும் ஏதோ பகை உள்ளது.
அதனால்தான் அவரின் மகளான மதுராவை கடத்த சொல்லி இருக்கிறான் என்பது வரை மட்டும் அவனுக்கு புரிந்தது. அதனால்தான் இவளை பாதுகாக்க தன்னை அனுப்பினாரோ?
என்று பலத்த யோசனையில் அவன் இருக்க,
அவனது கூர்மையான காதுகளில் கார் கதவு க்ரீச் என்று திறக்கும் சத்தம் மிக மெதுவாய் தான் கேட்டது.
‘மதுரா?’ என்று கணித்து திரும்ப,
அவன் கணித்தது போலவே, காரிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள் மதுரவாணி.
அவளுக்கு அச்சூழலில் காண்பது அத்தனையும் பயம் தான் என்றாலும், மாறுவேடம் விட்டு வந்தவர்கள் தனது தந்தையின் எதிரிகளாக தான் இருக்கும் என்று ஓரளவு கணித்தவள்,
மீதம் இருந்த இருவராலும் கருப்பசாமிக்கு ஏதும் ஆபத்தோ.. அதனால்தான் ஏற்கனவே இருவரை வீழ்த்தி இருந்தாலும் இவர்களை எதுவும் செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறானோ? என்று பலதும் யோசித்தவள், அதற்கு மேல் காருக்குள்ளே அமைதியாக இருக்க முடியாமல், தன்னாலான உதவியை அவனுக்கு செய்வதகாக முடிவெடுத்து தன்னிடம் எப்பொழுதும் இருக்கும் பெப்பர் ஸ்பிரேயை எடுத்துக்கொண்டு வீரமங்கையாய் வெளியே வந்தாள்.
அவளுக்கு ஜீப்பின் மறுபுறம் நின்ற கருப்பசாமி மட்டுமே தெளிவாக தெரிய, மற்ற இருவரும் அவளுக்கு முதுகு காட்டியவாறு தான் நின்றனர். அவர்களின் முன் பக்கம் பார்த்தாலாவது அவர்கள் எதிர்க்கும் நிலையில் இல்லை என்பது அவளுக்கு தெரிந்திருக்குமோ என்னவோ?
நான்கடி தூரத்தில் நின்றவர்களின் சம்பாஷனைகளும் அவளுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை.
ஏதோ முடிவெடுத்தவளாக சட்டென்று அவளுக்கு முதுகு காட்டி நின்றிருந்தவர்களின் முன்னால் வந்து பயத்தில் கண்ணை மூடியவாறே, “அப்பாலே போ சாத்தானேய்ய்ய்” என்று பெப்பர் ஸ்பிரேவை அழுத்தி இரு பக்கமும் மாறி மாறி அடித்து தெறிக்க விட்டுவிட்டாள்.
ஏற்கனவே வாங்கிய அடியால் துவண்டு இருந்தவர்களுக்கு இதில் இன்னும் எரிச்சல் அதிகமாகி அலறித் துடித்து கத்தவும், கருப்பசாமி இவள் என்ன செய்கிறாள்? என்பது போல் ஆச்சரியமாய் பார்க்க, அவள் கவனித்தாள் தானே?
அவர்கள் அலறவும் கண்ணை திறந்தவள்,
“ஹப்பாடா நல்ல வேலை வெப்பன்ஸ் எதுவும் அவங்க வைக்கல.. அதனால தப்பிச்சேன்” என்று தனக்குத்தானே பேசிக் கொண்டு,
‘வா ஸ்ருதி’என்பது போல்
“வா ப்ளாக்” என்று அவனைக் காப்பாற்றுவது போல் இழுத்துக்கொண்டு வேறு அவர்களின் காரருகே வந்து விட்டு,
‘எப்பூடி?’என்பது போல், ஒற்றைப் புருவத்தைத் தூக்கி அவனின் பாராட்டுக்காக பார்த்து வைக்க,
கருப்பசாமியின் இதழ்கள் தன்னையும் மீறி லேசாக புன்னகையின் சுவடாய் வளைந்தே விட்டது.
“யுவர் சான்ஸ்லஸ்”என்றான் தன்னையும் மீறி வெளிவரத் துடித்த சிரிப்பை இதழ் மடக்கி அடக்கியவாறு.
ம்ம் என்று இல்லாத காலரை தூக்கிவிட்டு அதை பெருமையாய் அதை ஏற்றுக் கொண்டவளுக்கு அவன் சிரிப்பில் என்னவோ தவறாய் தோன்ற, ஆட்காட்டி விரல் நுனியை கடிப்பது போல் வாயில் வைத்தவள், கண்களை உருட்டி மண்டையைக் கசக்க நினைவு வந்தவளாக,
“ஆமா உங்கிட்ட கன் இருந்துச்சு தானே? அப்போ எப்படி நீ ..நீங்க அவங்க கிட்ட…மாட்..”என்று யோசித்தவளுக்கு, தன் அடிமுட்டாள் தனம் புரிய வெளிப்படையாய் தலையில் அடித்துக் கொண்டாள்.
அவன் துப்பாக்கியுடனா அவளது பெப்பர் ஸ்பிரே பெரியது? இதில் காப்பாற்றி விட்டேன் என்று பெருமை வேறு! என்று அவள் மனசாட்சியே அவளைப் பார்த்து கெக்கலித்து சிரிக்க, நீ ஓரமா கெட என்று அதை தூக்கிப் போட்டவள்.
‘சே! இப்டி மொக்க வாங்கிட்டேனே! என்ன பத்தி என்ன நினைப்பான்?’என்று கூச்சத்துடன் அவள் அவனைப் பார்க்க, அவனின் முகமோ பழைய கடினத் தன்மைக்கு மாறியிருந்தது.
மேலும் பேச்சை வளர்க்க விரும்பாமல்,
“லெட்ஸ் கோ… இது அவ்வளவு சேஃப் ஆன பிளேஸ் இல்ல” என்று விட்டு காரில் ஏறி அமர, மதுரவாணி சுற்றும் முற்றும் பயத்துடன் பார்த்துவிட்டு பின் இருக்கையில் அமர சென்றவள் என்ன தோன்றியதோ “பிளாக் உங்களுக்கு பிராப்ளம் இல்லன்னா நான் உங்க பக்கத்து சீட்ல உட்கார்ந்துகவா?ப்ளீஸ்” என்று தலையை சரித்து கண்களை சுருக்கி அவள் கேட்ட விதம் அவனுக்கு என்னமோ போல் இருக்க,
அதை வெளிக்காட்டாமல் மறைத்தவன், இயல்பாய், “யுவர் விஷ்” என்றுவிட, மதுராவின் முகத்தில் மத்தாப்பு சிரிப்பு.
பின் இருக்கையிலேயே லக்கேஜ் ட்ராலியை விட்டுவிட்டு தன் மொபைல் மற்றும் கைப்பையுடன் முன்னே வந்து அமர்ந்தாள் மதுரா.
இப்பொழுதுதான் அவளுக்கு ஆசுவாசமாக மூச்சே விட முடிந்தது.
ஏனோ அவன் அருகில் இருக்கும் போது பாதுகாப்பை அவளால் உணர முடிந்தது.
அது அவளுக்கும் புரிந்தது.
ஆனால் ஏன்? என்ற யோசனையுடன் கண்களை மூடிக்கொள்ள, அவன் அருகில் உறக்கமும் அவளைத் தாலாட்டி தழுவியது.
அருகில் அமர்ந்த உடனே உறங்கி விட்டவளை திரும்பி பார்த்தவனும் அவளை எழுப்பி தொந்தரவு செய்யவில்லை.
நண்பகல் நேரத்தில் ஆரம்பித்த அவர்களின் பயணம், மாலையை எட்டி இருக்க,
மதுராவும் அதற்குள் நன்றாக தூங்கி எழுந்திருந்தாள்.
அவளின் முகத்தில் சோர்வு கொட்டிக் கிடக்க, கூடவே ஒரு அசௌகரியம்..
அதை கவனித்தவன் சாலை ஓரத்தில் இருந்த பெட்ரோல் பங்கில் காரை நிறுத்தினான்.
“போய்ட்டு ரெஃப்ரெஷ் ஆகிட்டு வா” என்று சொல்ல, கண்களில் நன்றியோடு அவனைப் பார்த்தவள், சென்று வர அதுவரை அவளுக்காக காவலாய் வெளியவே நின்றான்.
அடுத்து அவர்கள் நின்றது. சாலையோர தேநீர் கடை.
“டீ யா காஃபியா?”என்று அவளிடம் கேட்க, அவனை அசர வைக்கும் விதமாய், “எனக்கு பால் வேணும் நான் பால் மட்டும் தான் எப்பவும் குடிப்பேன்” என்று பதில் சொன்னாள் அவள்.
அவள் பதிலில் ஒரு நொடி தேங்கி நின்றாலும்,
அவள் கேட்டது போலவே ஒரு பேப்பர் கப்பில் பாலை வாங்கி அவளிடம் கொண்டு வந்து கொடுத்தவன் தனக்கு ஒரு கட்டாச்சாயா வாங்கி வெளியே வேடிக்கை பார்த்தவாறே குடிக்க ஆரம்பித்தான்.
அதை கவனித்தவள் மனதோ,
அவனின் பெயர் முதல் உடை வரை அனைத்திலும் கருப்பு இருக்கிறது என்று நினைத்தால்
அவன் குடிக்கும் சாயா கூட கருப்பாகத்தான் இருந்தது.
‘ம்ம் கருப்பு ராசாக்கு கருப்பு தான் இஷ்டம் போல’
இன்று காலையில் கடுமையானவனாய் கோபக்காரனாய் தெரிந்தவன் இப்பொழுது பாதுகாவலனாய் தெரிந்தான் அவளின் கண்களுக்கு.
இன்று ஒரு நாளில் தான் எத்தனை மாற்றம்?
நேற்று வரை கல்லூரி..தோழிகள் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டமாய் இருந்தவளுக்கு இன்று தன் வாழ்க்கையே தலைகீழாக மாறியது போல் தான் இருந்தது.
வீட்டில் என்ன நடக்குமோ? என்று
ஏதேதோ யோசனை அவளை அலைக்கழிக்க, சூடான பாலை ஊதி ஊதிக் குடித்துக் கொண்டிருந்தவள், எதேச்சையாக சாலையின் அடுத்த பக்கம் பார்க்க,
அங்கு நின்ற ஒருவன் தங்களையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தாள். அதுவும் முக்கியமாய் அவளை தான் அவன் முறைத்ததே!
ஒருவேளை மீண்டும் அட்டாக் நடக்கப் போகிறதோ? என்று பயந்தவள்,
காரிலிருந்து வெகு கேஷ்வலாக இறங்கி கார் டோரில் சாய்ந்து நின்ற கருப்பசாமியின் அருகே சென்றவள், மெதுவாய் தான் பார்த்ததை சொல்ல,
அவள் சற்றும் எதிர்பாராத ஒன்றை அவன் பதிலாக சொன்னான்.
“பொண்ணு அழகா இருந்தா பசங்க பாக்க தான செய்வாங்க?”
அதில் அதிர்ந்து, “அப்போ உங்களுக்கு முன்னாடியே தெரியுமா அவன் என்னதான் பாக்குறான்னு? ” என்று கோபமாய் கேட்க,
“யெஸ்..அவன் உன் பக்கத்துல வந்து டிஸ்டர்ப் பண்ணல்ல தான? சோ காம்ப்ளிகேட் பண்ணிக்க வேண்டாம் ஜஸ்ட் ஒரு அட்ராக்ஷன்ல பசங்க பாக்குறது தான்” என்றதும், சரிதான் என்று நினைத்தவளும் சின்சியராக தலையை ஆட்டி வைக்க,
“சிஐடி மாதிரி யோசிக்க வேண்டாம் நார்மலா எல்லாரையும் பாரு.. உன்னோட சேப்டி என்னோட பொறுப்பு”என்று அவன் கூடுதல் அறிவுரையும் சொல்ல அதற்கும் அவள் தலையை ஆட்ட,
“ம்ம் போதும்.. ஆட்டுக்குட்டி மாதிரி தலையை ஆட்டாத.. கிளம்பலாமா? ஆல்ரெடி லேட்..”
என்றவனை முறைத்தவள்,
வெதுவெதுப்பாய் இருந்த பால் முழுவதையும் ஒரே கல்பில் குடித்து முடித்து அவன் மீது இருந்த கோபத்தை பேப்பர் கப்பில் காட்டி கசக்கி அருகில் இருந்த குப்பை கூடையில் போடச் செல்ல,
கீழே கருங்கல் ஒன்று கிடந்ததை கவனிக்காமல் தட்டி கீழே விழுந்திருந்தாள்.
கருப்பசாமி அதை கவனித்து, அவளை கை கொடுத்து தூக்கி விட,
எழுந்த மதுரா,
அவன் முன்பு போய் விழுந்து வாரி விட்டோமே என்று அவமானத்தில் முகம் சிவந்து அவனை விட்டு தள்ளி நிற்க முயல, முடியவில்லை
கால் பெருவிரலில் நகம் லேசாய் பெயர்ந்து காயமாகி ரத்தம் வடிந்தபடி இருந்தது.
அதைப் பார்த்ததும் தலை சுற்றி விட, அவளின் தலை தன்னால் பின்னால் சரிய ஆரம்பித்தது.
“ஹேய்” என்றபடி அவளை விடாமல் பிடித்தவன், அவளின் கன்னம் தட்டி “ஆர் யூ ஆல்ரைட்” என்று கேட்க, கண்கள் சொருக முகம் முழுவதும் வேர்வையால் நனைந்திருக்க, “என..க்கு ப்ளட் பார்..த்தா.. இப்டி” பதில் கூட சொல்ல முடியவில்லை.
கருப்பசாமியும் அதற்கு மேல் தாமதிக்காமல் அவளை லேசாக அணைத்து பிடித்த படி, காரில் அமர வைத்தவன், எப்பொழுதும் காரில் வைத்திருக்கும் முதலுதவி பெட்டியை தேடி எடுத்து அவள் காயத்திற்கு மருந்திட்டு கட்டு போட்டான்.
கூடவே அவளுக்கும் தண்ணீர் பருகக் கொடுக்க, கொஞ்சம் கொஞ்சமாக முகம் தெளிந்தது மதுராவுக்கு.
“இப்ப ஓகே வா” என்று கேட்டதற்கு தலையசைத்தாள்.
“உனக்கு ரெஸ்ட் வேணுமா? ஆர் கிளம்பலாமா?”
“போலாம்” என்றாள் உடனே.
ஆராய்ச்சியாக அவளைப் பார்த்தாலும்,
அவள் ஒன்றும் இல்லை என்று சொன்ன பின் அவனால் என்ன செய்ய முடியும்?
அவர்களின் கார் கிளம்பியது.
மௌனமாய் ஒரு பயணம்.
அவன் பேசவில்லை என்றாலும் ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை வளவளவென்று ஏதாவது பேசிக்கொண்டே வந்தவள் இப்பொழுது வாயைத் திறக்கவில்லை.
ஏதோ யோசனையிலேயே வருவது போல் இருந்தது.
இதே வேகத்தில் சென்றால் இன்னும் சரியாக ஒரு மணி நேரத்தில் அவளின் ஊரான தூத்துக்குடி வந்துவிடும். அவளது வீடும் வந்துவிடும் என்ற நினைவே மதுராவிற்கு நிம்மதியை கொடுக்கவில்லை.
அதற்குள் எதையோ பார்த்து துவண்டிருந்த கண்கள் மின்னலாய் பளிச்சிட, “பிளாக் பிளாக் கார கொஞ்சம் ஸ்டாப் பண்ணு”என்று காரில் இருந்து வெளியே குதிக்காத குறையாக அவள் சொல்ல,
சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தியவன்
என்ன? என்பது போல் பார்க்க,
“அங்க பாரு ப்ளாக் கோவில் திருவிழா எனக்கு அங்க போகணும்னு ஆசையா இருக்கு”
“இல்ல இப்ப முடியாது..இன்னும் கொஞ்ச நேரத்துல ஊருக்கு போகலாம் இங்க நம்ம சேஃப்டி எப்படி இருக்கும்னு தெரியல”என்றான் மறுப்பாய்.
“ப்ளீஸ் பிளாக் எனக்கு ராட்டினம் ஏறணும் போல இருக்கு.. என்னோட சின்ன வயசுல இருந்தே எனக்கு ஆச இதே மாதிரி திருவிழாக்கு போகணும் ராட்டினம் பஞ்சு மிட்டாய் நிறைய வளையல்கள் வாங்கனும்னு ஆச”என்று தனது ஆசையை கண்களில் தேக்கி கேட்டவளிடம்,
“இப்ப வேண்டாம் இன்னொரு நாள் உங்க ஃபேமிலியோட வந்துக்கோ”என்றான் இளகாமல்.
கண்களில் பரிதவிப்பை காட்டியவள்,
“ப்ளீஸ் ப்ளீஸ் எனக்கு இந்த மாதிரி சான்ஸ் எனக்கு கிடைக்கவே கிடைக்காது.. எங்க ஃபேமிலில என்ன இங்கெல்லாம் கூட்டிட்டு வர மாட்டாங்க.. என்ன தனியாவும் அனுப்ப மாட்டாங்க.. ஒரு பிஃப்டின் மினிட்ஸ் தான்.. “என்று கிட்டத்தட்ட கெஞ்ச,
அவனோ அவள் பேச்சை காதில் கேட்காதவனாய் மீண்டும் காரை ஸ்டார்ட் செய்துவிட்டான்.
அதில் கண்கள் கலங்கிவிட்டது மதுராவுக்கு.. உதடுகள் துடிக்க, அவனை ஒரு பார்வை பார்த்தவள்,
கண்களை இறுக்கமாய் மூடி கொண்டாள். இமைகளைத் தாண்டி கண்ணீர் கன்னத்தைத் தொட்டது.
அவன் தன் தந்தையின் கீழ் வேலை செய்பவன் தன் தந்தை சொல்லை கேட்டு நடப்பவன் அவனிடம் போய் இதை கேட்டது தன் தவறுதான்.. என்று அவள் தன்னையே நிந்தித்து கொள்ள,
அவள் கண்ணீர் வடிப்பதை உணர்ந்தாலும் முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டு காரின் வேகத்தை அதிகப்படுத்தினான் அவன்.
அவன் வேண்டாம் என்று சொன்னதற்கு காரணமே அவர்களின் காரை வெகு நேரமாய் பின் தொடர்ந்து வந்த இரண்டு கார்கள் தான். ஆனாலும் அவளிடம் விளக்கம் சொல்லவில்லை.
ஏற்கனவே பயந்திருப்பவள் இன்னும் பயப்படுவாள் என்று நினைத்து மறைத்து விட்டான்.
நிமிடங்கள் கரைய, அவள் மீண்டும் கண்களைத் திறக்கும் பொழுது, மிகப்பெரிய மாளிகையின் கதவின் முன் கார் நின்றது.
முத்து பேலஸ் என்ற பெயரில் தான் சுற்றுவட்டாரத்தில் அவர்களின் மாளிகையை அழைப்பார்கள். அந்த அளவிற்கு ராஜாவின் அரண்மனையைப் போல் எக்ஸ் மினிஸ்டர் முத்துமாணிக்கத்திற்கு அரண்மனையாக முத்து பேலஸ் இருக்க, உள்ளே பாதுகாப்பிற்காக அத்தனை கட்டுப்பாடுகள். இதோ இப்போது கூட உள்ள இருப்பவள் தங்கள் முதலாளியின் மகள் என்று தெரிந்த பின் தான் அவர்களின் கார் சோதனைக்கு உட்படுத்தப்படாமல் உள்ளேயே அனுப்பப்பட்டது.
காரை பார்க் செய்துவிட்டு காரில் இருந்து வெளியே வந்த கருப்பசாமி இன்னும் இறங்காமல் இருக்கும் மதுராவை பார்க்க,
தனது கைக்குட்டையால் முகத்தை நன்றாக துடைத்து தன்னை சரி படுத்திக் கொண்டவள், அதன் பிறகு தான் இறங்கினாள்.
“ரொம்ப தேங்க்ஸ் மிஸ்டர்.. என்ன சேஃபா கொண்டு வந்து விட்டதுக்கு.. உங்கள ரொம்ப தொந்தரவு பண்ணி இருந்தா மன்னிச்சிடுங்க”என்று அவனிடம் ஃபார்மாலிட்டிக்காக பட்டும் படாமல் பேசிவிட்டு, தனது ட்ராலிய உருட்டியவாறு உள்ளே சென்று மறைந்தாள் மதுரவாணி.
அவள் மறையும் வரை அவள் முதுகையே பார்த்துக் கொண்டிருந்தவன் எதையோ நினைத்து, தலையை அழுத்தக் கோதிக் கொண்டான்.
மதுரவாணி யார் கண்ணிலும் படக்கூடாது நேரே தன்னறைக்கு சென்று கதவை மூடி விட வேண்டும் என்று விறுவிறுவென உள்ளே வர, வீட்டு ஹாலில் நடுநாயகமாக போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்து தீவிரமாய் பேசிக் கொண்டிருந்தனர் அவ்வீட்டின் இரட்டையர்களான ஜெகதீஷ் பிரகதீஷ். மதுராவை ஜென்மவிரோதியாய் பார்ப்பவர்கள்!
இன்னொரு சோஃபாவில் என்றும் இல்லாத அதிசயமாக முத்து மாணிக்கம் அமர்ந்திருக்க, அவர் அருகில் அவ்வீட்டின் மூத்த மகள் வினோதா சிரித்தவாறு அமர்ந்திருந்தாள். அவள் அருகிலேயே அவள் கணவன் ரூபன்.
அனைவரையும் ஒரே இடத்தில் பார்த்ததுமே மதுரவாணியின் கால்கள் நகர மறுத்தது.
“வந்துட்டியா வாணி.. உள்ள வா”என்று தந்தை அழைக்க, அதற்கு மேல் உள்ளே சொல்லாமல் இருக்க முடியாது என்பதால் தயக்கத்துடன் தான் வந்தாள் மதுரா.
அவள் உள்ளே வந்ததும் இரட்டையர்கள் இருவரும் முறைப்புடன் கால் மேல் கால் போட்டு அமர, வினோதாவின் முகம் இறுக்கமாய் ஆனது.
மதுரா அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தந்தை அருகில் சென்றாள்.
“பரீட்சை எல்லாம் முடிஞ்சுதா?”என்று முத்து மாணிக்கம் கேட்டதற்கு, “ஆமா ப்பா”என்று சமத்தாய் தலையை ஆட்டி பதில் சொன்னவளை ஆராய்ச்சியாக பார்த்தவர்,
“நாளைக்கு பத்ரி வீட்லருந்து உன்ன பொண்ணு பாக்க வராங்க வாணி. இந்த வார கடைசில நல்ல சுபமுகூர்த்த நாள் வருது அன்னைக்கே நிச்சயத்தை வச்சுக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்” என்றார் அறிவிப்பது போல்.
“ப்பா ஏன் இவ்வளவு அவசரமா…?”என்று ஏதோ கேட்க வந்தவள் அவரின் பார்வையில் பயந்து வாயை மூடி கொண்டாள்.
“ஏற்கனவே முடிவு பண்ணது தானா? ஏன் என்னோட முடிவுல உனக்கு இஷ்டம் இல்லையா? “என்று முறைப்பாய் அவர் கேட்ட விதத்தில், பதறிவளாக
“இல்லப்பா இல்லப்பா என்னோட கல்யாணம் உங்க இஷ்டப்படி தான் நடக்கும்..பட் எல்லாமே ரொம்ப சீக்கிரமா நடக்கிற மாதிரி இருக்கு அதான் பா”என்றாள் மதுரா விளக்கமாக.
“அதுக்கு என்ன? எப்ப கல்யாணம் வச்சாலும் நீ தான பண்ணிக்க போற இப்பவே பண்ணிடு”என்றார் அவர்.
அவர் சொன்னது சரிதான் என்றாலும் ஏன்? எதற்காக இத்தனை அவசரம்? என்று புரியாமல் குழம்பினாள் மதுரா, ஆனால் வெளியே கேட்டுக் கொள்ளவில்லை.
இன்னும் பேச்சை நீட்டித்து அனைவரின் முன்பும் காட்சி பொருளாக நிற்க விரும்பாமல் “சரி ப்பா உங்க இஷ்டம்” என்று சொல்லிவிட்டாள்.
அதன் பிறகு “சரி ரொம்ப நேரம் பிரயாணம் பண்ணிட்டு வந்து இருக்க நீ போய் நல்லா ஓய்வெடு” என்று அவளை அனுப்பி விட,
“சரிப்பா” என்றவள் தனது பொருட்களை எடுத்துக் கொண்ட நகர்ந்து விட்டாள்.
அவள் நகர்ந்ததும், இரட்டையர்களையும் வினோதாவையும் முறைத்த முத்துமாணிக்கம், “வாணிக்கு இங்க நடந்த விஷயம் தெரிய கூடாது யாராவது அவகிட்ட சொன்னதா கேள்விப்பட்டேன் தொலைச்சிடுவேன்?”என்றார் எச்சரிப்பது போல்.
இங்கோ தனது பொருட்கள் நிறைந்த ட்ராலியை மாடிப்படிகளில் உருட்ட முடியாமல்.. தூக்கி கொண்டு செல்லும் அளவிற்கு தெம்பும் இல்லாமல் அடிபட்ட கால் வேறு வேதனையாக இருக்க, தன்னால் இதைக் கூட செய்ய முடியாதா? என்ற கழிவிரக்கம் எழ, வீட்டில் அத்தனை வேலைக்காரர்கள் இருந்தாலும் அவள் அவளுக்காய் எந்த வேலையும் வாங்கிக் கொண்டதில்லை.
என்ன செய்ய இப்பொழுது? என்று முயற்சி செய்ததன் விளைவாய் மூச்சு வாங்க பரிதவிப்போடு அவள் நிற்க, “ஏய் குட்டி சாத்தான் திரும்ப வர மாட்டேன்னு நெனச்சேன் வந்துட்டியே” என்றபடி ஜெகதீஸ் வர, அவனோடு வந்திருந்த பிரகதீஷ் முறைப்போடு,
“பாவமா மூஞ்ச வச்சே காரியம் சாதிக்கிறவ இந்த வீட்டை விட்டு அவ்வளவு சீக்கிரம் போய்டுவாளா? என்ன இருந்தாலும் அவங்க ரத்தம் தானே இவளுக்கும் ஓடுது”என்றான் குத்தல் நிறைந்த குரலில்.
இருவரின் பேச்சும் எப்பொழுதும் போல் இதயத்தை தாக்க, அழுகையை முழுங்கி கொண்டு, முகம் சிவக்க நின்றவள்,
மீண்டும் ட்ராலியை தூக்கி அடுத்தபடியில் வைக்க முயல,
“இவ கிட்ட பேசி டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்”என்று அசிங்கத்தை பார்ப்பது போல் பிரகதீஷ் அவளை முறைத்து விட்டு முன்னே சென்று விட,
ஆனால் அவளின் அடிபட்ட காலில் அதிகளவு அழுத்தத்தின் காரணமாக ரத்தம் கசிவதை பார்த்த ஜெகதீஷ்,
என்ன நினைத்தானோ அவளது கைகளில் இருந்து ட்ராலியை பிடுங்கி மேல் படிவரை தூக்கி வைத்து விட்டு வேகமாய் சென்று விட்டான்.
அவளை அவனுக்கு நன்றி சொல்லக் கூட அவன் வாய்ப்பு அளிக்கவில்லை.
அதைப் புரிந்து கொண்ட மதுராவின் இதழ்களில் ஒரு கசந்த முறுவல் மலர்ந்தது.
அதே சமயம், கீழே தன் தனியறையில் கருப்பசாமியிடம்,
“என் பொண்ணு கல்யாணம் முடியற வர அவளுக்கு காவலா அவளோட நிழலா தொடர்ந்து, அவளுக்கு எந்த ஆபத்தும் வராம பாதுகாப்பா அவள வச்சிருக்கணும் .. “
“ஏன் சார் உங்க கிட்ட இல்லாத ஆட்களா?”
“என்கிட்ட இருக்கிறவங்க எல்லாம் அடியாளுங்க.. அவங்களுக்கு உன்ன மாதிரி இந்த சூட்ச நாச்சம் எல்லாம் தெரியாது. யாருன்னு சொன்னா அடிச்சுட்டு வருவாங்க அவ்வளவுதான்.. அவளுக்கு இப்ப வந்திருக்கிறது மிகப் பெரிய ஆபத்து அத தடுக்க உன்ன மாதிரி ஒரு ஆள் வேணும்.. அவன்கிட்ட யாராலயும் நேரடியா மோத முடியாது”என்று சொல்லும் போதே அவர் கண்களில் அளவு கடந்த மிரட்சி தெரிந்தது.
“யார் அவன்?”என்று கருப்பசாமி கேட்க,
“இன்னும் சொல்ல வேண்டிய சூழ்நிலை வரல கண்டிப்பா சொல்றேன். ஆனா என் பொண்ணு கூட 24 மணி நேரமும் நீ இருக்கணும் இந்த கல்யாணம் மட்டும் முடிஞ்சிட்டா மாப்ள கூட அவள நிம்மதியா வெளிநாடுக்கு அனுப்பி வச்சுருவேன்..”
‘ஏன் கல்யாணத்துக்கு அப்புறம் மட்டும் அவளுக்கு எந்த ஆபத்தும் வராதா?’என்ற கேள்வி மனதில் எழுந்தாலும் அவன் வெளியே கேட்டுக் கொள்ளவில்லை.
“இதுக்காக எவ்வளவு பணம் செலவானாலும் பரவால்ல உனக்கு எவ்வளவு வேணாலும் கேட்டு வாங்கிக்கோ.. ஆனா எனக்கு என் பொண்ணு பாதுகாப்பு முக்கியம்”
அவரை யோசனையாகப் பார்த்தாலும் மதுராவின் முகத்தை நினைத்து பார்த்தவனின் தலை தன்னால் சம்மதமாய் ஆடியது.
அதே சமயம் மதுரா தங்கள் கைகளில் அகப்படாமல் அவளின் வீட்டிற்கு பத்திரமாகச் சென்று விட்ட செய்தியை ஒருவன் வந்து சொல்ல,
“ம்ம்ம் கிரேட் முத்துமாணிக்கம் ரொம்ப அலர்ட்டா இருக்கான் போல..”என்று சிரித்தவனின் முகம் கொடூரமாய் ஆனது.
பஞ்சு மெத்தையில் அவனுடன் அரைகுறையாய் அமர்ந்திருந்த அழகியோ “டார்லிங் ஏன் டல்லா இருக்கீங்க? அவ இல்லன்னா என்ன நான் இருக்கேன்னே” என்று அவனைக் கொஞ்ச,
சற்றும் யோசிக்காமல் அவள் முகத்தில் ஓங்கி அறைந்தவன்,
“கெட் அவுட் பிச்” என்று கர்ஜித்தான். அதில் பயந்தவளாக அவள் வெளியே ஓடிவிட்டாள்.
அவளின் பேச்சில் மண்டை சூடாக சிகரெட்டை பற்ற வைத்தவனின் கையில் இருந்த மொபைலின் திரையில் மதுராவின் புகைப்படம்.
அதை அணு அணுவாக ரசித்துப் பார்த்தான் அந்த கயவன்.
அப்புகைப்படத்தில் பதின்ம வயது நிரம்பிய பாவையாக பாவாடை தாவணியில் மதுரா கன்னத்தில் குழி விழ அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள்.
ஒரு கையில் மொபைல் இருக்க, மற்றொரு கையில் சிகரெட் இருக்க அதை உறிஞ்சி புகையை வெளியிட்டவன், மொபைலை நெஞ்சோடு அழுத்தி.. “மதூதூ…”என்றான் போதையாக.
தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
36
+1
2
+1
3