17. நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன்
எப்பொழுதும் ஞாயிற்றுக்கிழமை இரவு சாப்பிட்டு முடித்தவுடன்..ஏதாவது ஒரு ஆங்கில படத்தையோ இல்லை பாட்டையோ ஓடவிட்டுக்கொண்டு மூவரும் வேலை இடத்தில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி சுவாரசியமாக பேசுவது உண்டு.
ஆனால் அன்றைய இரவு அது மதுராவின் திருமணத்தைப் பற்றிய பேச்சாக மாறி விட, ஜெகதீஷ் பிரகதீஷ் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் மதுராவை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க முயன்றனர். இவள் வேண்டாம் என்று மறுக்க அவர்கள் காரணம் கேட்க… கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் விவாதம் செய்தும் அதற்கான முடிவு தான் கிடைக்கவில்லை.
இரண்டு சகோதரர்களுக்கும் இடையே மாட்டிக் கொண்டு தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டவளால் அதற்கு மேல் முடியவில்லை.
“இப்ப என்னதான் சொல்ல வர மதுரா? கடைசிவர கல்யாணம் பண்ணிக்காம இருக்க போறியா?”
என்று கோபமாய் கேட்ட ஜெகதீஷின் குரலில்,
“ஜக்கு ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குற? எனக்கு இப்போதைக்கு எதுவும் வேண்டாம்.. நிம்மதி தான் வேணும்”என்று திரும்பத் திரும்ப சொன்ன பதிலையே சொல்லிக் கொண்டிருந்த மதுராவை பொறுமை இல்லாமல் பார்த்த பிரகதீஷ்,
“ஓய் குட்ட எனக்கு என்னமோ உன் மேல சந்தேகமா இருக்கு? ஒரு வேள நீ சொல்றதுக்கு அது காரணமா இருக்குமோ?”என்று அவளை மேலும் கீழும் சந்தேகமாய் பார்த்து கேட்கவும்,
தொண்டை குழிக்குள் முள் குத்திய உணர்வுடன்,
“என்ன சந்தேகம்? நான் என்ன பண்ணேன்?” என்று கேட்ட மதுராவின் பார்வை திருட்டு முழிக்கு மாறி இருந்தது.
‘ஒருவேளை நம்ம ப்ளாக்க மேரேஜ்ல மீட் பண்ணது இவனுக்கு தெரிஞ்சிருக்குமோ?’என்ற சந்தேகமே அவளுக்கு… கூடவே அதற்கு என்ன சொல்லப் போகிறார்கள் என்ற பயமும் தான்..
ஏனென்றால் அவளை விட அவளின் சகோதரர்களே பிளாக்கின் மீது அவ்வளவு கொதிப்பில் இருந்தனர்.
இவன் அண்டர் கவர் மெஷனில் ரகசியமாக உள்ள வந்தது கூட கடமை என்று வைத்துக் கொண்டாலும்.. வந்த வேலையை மட்டும் பார்த்துவிட்டு போக வேண்டியது தானே? எதற்கு வீணாக தங்கள் வீட்டுப் பெண்ணை உள்ளே இழுத்து அவளுக்கு தாலி எல்லாம் கட்ட வேண்டும்? அதை அப்போதைய பதற்றமான சூழ்நிலையில் யோசிக்காமல் விட்டாலும் மதுராவின் அமைதியும் அவள் மௌனமாய் கண்ணீர் வடிப்பதை அடிக்கடி பார்த்த இருவருக்கும் அவன் மேல் கோபத்துடன் இருந்தது கொலை வெறியே..!
அதை அறிந்திருந்த மதுராவிற்கு
‘தான் அவன் சந்தித்தது பற்றி தெரிந்தால் என்னவாகுமோ?’ என்ற பதற்றம் வந்து தொற்றிக் கொள்ள திருட்டு முழியுடன், அவள் பிரகதீஷைப் பார்க்க,
அவனோ, அவளை அசரவைக்கும் விதமாக வேறொன்றை சொன்னான்.
“உண்மைய சொல்லு குட்ட… ஏற்கனவே நீ இந்த ஜெனரேஷன் பொண்ணு மாதிரியான டைப் இல்ல.. பாரம்பரியம் பண்பாடுனு கூப்பாடு போட்டுட்டு திரியுறவ.. இதுல ஒருத்தன் உனக்கு தாலி வேற கட்டிட்டு போயிட்டான்.. சோ அந்த தாலி சென்டிமென்ட்ல தான் நீ மேரேஜ்க்கு நோ சொல்றியா? உண்மைய சொல்லு இதுதான நீ நோ சொல்ல காரணம்”
அவன் பேசும் வரை பிடித்து வைத்திருந்த மூச்சினை,
“ஊஃப்ப்”என்று வெளியேற்றி விட்டு,
“அய்யோ..எனக்கு தாலி சென்டிமென்ட் எல்லாம் இல்ல.. ஜஸ்ட் மேரேஜ்ல தான் இன்ட்ரஸ்ட் இல்ல ப்ரக்கு” என்று அவன் சொன்னதை மறுக்க,
ஜெகதீஷிற்கு கோபம் வந்துவிட்டது..
“அதான் கேக்கறேன்.. உனக்கு ஏன் இப்ப இன்ட்ரஸ்ட் இல்ல? இப்போ இல்லன்னா எப்ப இன்ட்ரஸ்ட் வரும்ன்னு சொல்லு..இல்ல காலம் ஃபுல்லா தனி மரமா இருக்கலாமாம்னு முடிவு பண்ணிட்டியா? நீ இப்படி தனியா இருந்தா நாங்க சந்தோஷப்படுவோமா? இல்ல உனக்கு அண்ணன்களா எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற உரிமையே இல்லன்னு சொல்ல வர்றியா? அப்படி சொல்றதா இருந்தா ஓபனா சொல்லிடு… நாங்க தலையிடாம விலகிக்கிறோம்”
என்றதும், மதுராவிற்கு சுருக்கென்று வலித்தது. இங்கு வந்த நாட்களில் இருந்து அன்போடு அக்கறையோடு சகோதரர்களுக்கு உண்டான செல்ல சண்டைகளோடு மட்டுமே பேசிக் கொண்டிருந்தவனின் திடீர் முகத்தில் அடித்தது போலான பேச்சு… அதுவும் யாரோ போலான பேச்சு அவளுக்கு ரொம்பவே வலித்தது.
முகம் அப்படியே சுருங்கி விட, கண்களை நீர் முட்டியது. அதை வெளியே சிந்தவிடாமல் தடுப்பணையை போட்டவள், தன் மனதை சொன்னாள் தெளிவாக,
“ஜக்கு உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கு எல்லா உரிமையும் இருக்கு… சொல்லப்போனா உங்கள தவிர யாருக்குமே அந்த உரிமை இல்லைன்னு தான் சொல்லுவேன் பட் ஒரு தடவ மணமேடை ஏறி நான் பட்டதே போதும்.. என்னால திரும்பவும் மணமேடை ஏற முடியும்னு தோணல..ப்ளீஸ் சொன்னா புரிஞ்சுக்கோங்க” என்றாள் வருத்தமாய் எங்கோ பார்த்துக் கொண்டு..
அவள் சொல்ல வருவதை அரைகுறையாக புரிந்து கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட சகோதரர்கள் அவளுக்கு ஆப்பு அடிக்கும் விதமாக ஒரு ஐடியா ஒன்றை சொன்னார்கள்… அது என்னவென்றால்
அவளின் திருமணத்தை இம்முறை மண மேடையில் அல்ல… சிம்பிளாக கோவிலில் வைத்துக் கொள்ளலாம் என்பதுதான் இந்த அரிய வகை ஐடியா…
சோபாவில் இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்தவள் இருவரின் முகத்தையும் மாறி மாறி கவுண்டமணி செந்திலை அடிப்பதற்கு முன் பாசமாய் பார்ப்பது போல் பார்க்க…
‘எப்படி எங்க ஐடியா?’என்பது போல் இருவரும் ஒன்று போல் புருவத்தை தூக்கி பெருமையாய் வேறு பார்த்து வைக்க, அதில் இன்னும் கடுப்பாகி போனவள்,
டீபாயில் மீதிருந்த பிளாஸ்டிக் பூஞ்சாடியை தூக்கிக் கொண்டு இருவரையும் அடிக்க வர, அவர்கள் தெறித்து ஓட,
“டேய் மாங்கா மடையன்களா! உங்க ரெண்டு பேரு மண்டையையும் இன்னைக்கு உடைக்காம விடமாட்டேன் டா..”என்று துரத்தவும், அவ்வளவு நேரம் இருந்த இறுக்கமான சூழ்நிலை அப்படியே தலைகீழாய் மாறியது.
வசமாய் முதலில் பிரகதீஷ் சிக்கிக் கொள்ள,
“ஓய் குட்ட என்ன அடிச்சா… பின்விளைவுகள் மோசமாக இருக்கும் சொல்லிப்புட்டேன்” என்று சொன்ன பிரகதீஷ் பின்னாலேயே பூஞ்சாடியால் அவள் நாலு அடி போட, “ஐயோ அம்மா! குட்ட ராட்சசி” என்றவன் இடுப்பை பிடித்துக் கொண்டு அப்படியே சோபாவில் சாய்ந்து விட… இப்பொழுது மதுராவின் கவனம் ஜெகதீஷிடம் திரும்பியது.
அவள் தன்னிடம் தான் அடுத்து வருவாள் என்று தள்ளி நின்ற ஜெகதீஷ் மதுராவிடம் அடி வாங்காமல் ஓடி ஓடி தப்பித்தாலும் இறுதியாய் மாட்டிக் கொள்ள, வலிக்காதது போல் தோள்பட்டையிலும் கைகளிலும் நாலு போடு போட..
சோபாவில் இடுப்பை பிடித்துக் கொண்டு கிடந்தவன்,
“ஏய் குட்ட இதெல்லாம் ஓரவஞ்சன சொல்லிட்டேன் என்ன மட்டும் அந்த அடி அடிச்ச?” என்று நியாயம் கேட்டவன், “என்ன மாதிரியே அவனுக்கும் வலிக்கிற மாதிரி நாலு போடு சொல்லிட்டேன்”என்று அன்பாய் கட்டளை இட,
“அடப்பாவி! நீ அடி வாங்குனது மட்டும் இல்லாம என்னையும் கோர்த்து விடுறியே டா…”என்று ஜெகதீஷ் திட்ட,
மதுராவும் ஓரவஞ்சனை செய்யாமல், பிரகதீஷின் வேண்டுதலுக்கு ஏற்ப,
ஜெகதீஷை ஓங்கி நாலு போடு போட… பிரகதீஷிற்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.
“போதும் போதும்… இதுக்கு மேல பாடி தாங்காது..இப்ப நார்மல் ஆயிட்டியா மது?” என்றவனின் கேள்வியில் அவனின் நோக்கம் புரிந்து அதற்கு மேல் அடிக்காமல் கையை இறக்கி கொண்டாள்.
பிரகதீஷும் ஜெகதீஷின் அருகே வந்து விட, இருவரின் முகத்திலும் அவளின் மீதான அன்போடு அதரங்களில் அவள் செய்த கலாட்டாவால் சிரிப்பும் இருந்தது.
“நீ நார்மல் ஆகணும்ன்னு தான் அப்டி பேசுனோம்.. இப்போ ஓகே தானே நீ?” என்றதும் தான் செய்த கலாட்டாவை நினைத்து மதுராவிற்கும் சிரிப்புதான்..
அவளின் சிரிப்பை உணர்ந்த ஜெகதீஷும்,
“அப்போ..பைன்…சோ.. திரும்பவும் மணமேடை ஏற உனக்கு தயக்கம் அவ்வளவுதான? உனக்கு ஏத்த மாப்பிள்ளையா கொண்டு வந்து நிப்பாட்டுறோம்.. கண்டிப்பா உனக்கு புடிச்சா தான் கல்யாணம்.. அதுல நோ காம்ப்ரமைஸ்.. நீ மேரேஜ்க்கு மட்டும் ஓகே சொல்லு போதும்… மீதி எல்லாம் எங்க பொறுப்பு.. நல்ல ஞாபகம் வச்சுக்கோ உன் இஷ்டம் இல்லாம இங்க எதுவும் நடக்க போறது இல்ல மது குட்டி..”என்று சொல்ல,
பிரகதீஷும் தன் பங்கிற்கு “நீ இதுக்குலாம் பயப்படவே கூடாது குட்ட.. அதுவும் அண்ணனுங்க ஒன்னுக்கு ரெண்டு பேரு இருக்கும்போது உனக்கு என்ன பயம்? சம்மதம் மட்டும் சொல்லு டா” என்று ஒருவர் மாற்றி ஒருவர் அன்பாய் அனுசரணையாய் அவளுக்கு புரியுமாறு எடுத்து சொன்னவர்களிடம் அதற்கு மேல் மறுக்க முடியவில்லை அவளால்…
ஆனால் சரி என்று சொல்ல முடியவில்லை.
அவள் மனதில் பிளாக் கணவனாய் குடியேறி இருக்க, இன்னொருவனை தன் அருகில் மனதால் கூட வைத்து பார்க்க முடியவில்லை.
அதே சமயம் சிறுவயதில் இருந்து ஏக்கமாய் எதிர்பார்த்த சகோதர பாசம் இப்பொழுது முழுவதுமாய் அவளுக்கு கிடைத்திருக்க அதை இழக்கவும் …அவர்களின் அக்கறையை ஒதுக்கவும் அவளால் முடியவில்லை.
இரண்டு கெட்டான் மனநிலையில், இருந்தவளுக்கு திடீரென்று பிளாக்கின் முகமும் அவனது பியான்சி என்று அவனை கட்டிக் கொண்டவளின் முகமும் ஞாபகத்திற்கு வர, அந்த நொடி என்ன நினைத்தாலோ…
“சரி உங்க இஷ்டம்…” என்று விட்டாள்.
அவள் சம்மதித்த மகிழ்ச்சியோடு அவளைத் தூக்கி சுற்றி ஆரவாரம் செய்த சகோதரர்கள் இருவரும் ஆளுக்கு ஒரு புறம் நின்று அவளைத் தோளோடு அணைத்து தட்டிக் கொடுக்க, கண்களுக்கு எட்டாத சிறு புன்னகை அவளிடம்!
ஆனால் மனது இன்னும் ஏன் அப்படி சொன்னாய்? என்று குறுகுறுக்க, ‘அதுதான் சொல்லிவிட்டாங்களே தனது சம்மதமில்லாமல் எதுவும் நடக்காது என்று.. பிறகென்ன கவலை? என்று நினைத்தவள் மனதை தேற்றிக் கொண்டாள்.
அது எவ்வளவு பெரிய ஆபத்தை தனக்கு தரவிருக்கிறது என்பதை அறியாதவளாய்!
மறுநாள் காலை தனது அலுவலகத்திற்கு கிளம்பி வெளியே வந்த மதுரா, சமையலறையில் தோசையோடு போராடிக் கொண்டிருந்த பிரகதீஷை பார்த்து நமட்டு சிரிப்பு சிரிக்க,
அவளைப் பார்த்து விட்டவனும்,
“என்ன குட்ட காலையிலேயே பல்ல பல்ல காட்டுற? இன்னைக்கு தான் ஃபர்ஸ்ட் டைம் ஃப்ரஷ் பண்ணியா என்ன?”என்று வம்பு இழுத்து அவளின் முறைப்புக்கு ஆளானாலும்,
“தோசை சாப்பிடுறியா குட்ட? சூடா ரெண்டு சுட்டு தரேன்” என்று அக்கறையாக கேட்டு வைக்க,
“எனக்கு என் உயிர் மேல பயம் அதிகம்.. எனக்கெல்லாம் வேண்டாம் பா…”
“என்ன லந்தா?”
“ஈஈஈ அப்படியே வச்சுக்கோ…ப்ரக்கு..” என்று சிரிப்புடனையே டைனிங் டேபிளில் வந்து அவள் அமர,
அதில் கோபமாய் கழுத்தில் கிடந்த துண்டை எடுத்து தலையில் கட்டியவன், அதில் தோசை கரண்டியை சொருகி கொண்டு தான் சுட்ட தோசைகளையும் ஹாட் பாக்ஸில் எடுத்து வைத்து அவளிடம் வந்தான்.
“வர வர ரொம்ப ஓவரா தான் போற குட்ட.. நீ பண்ற அந்த வரட்டி மாதிரி இருக்கிற சப்பாத்திக்கு இது எவ்வளவோ மேல.. அதையே உனக்காக நானும் ஜெகாவும் அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடலயா? என் பஞ்சு மாதிரி இருக்கற தோசைக்கு என்ன குட்ட கொற? எவ்வளவு அழகா நிலா ஷேப்ல சுட்டு இருக்கேன்.. என் கண்ணே பட்டுடும் போல ” என்று எகிறிக் கொண்டே, தான் சுட்ட தோசையில் ஒன்றை பெருமையாய் தூக்கி காட்ட , அதுவோ அவனுக்கு சதி செய்து அவன் கையில் இருந்து கிழிந்து துண்டு துண்டாய் கீழே விழுந்து விட, அதைப் பார்த்து அவன் முழித்த முழியும் .. அவனின் கெட்டப்பையும் பார்த்த மதுராவுக்கு சிரிப்பு தாளவில்லை.
‘இதுகளும் சதி பண்ணதே!’என்று மனதிற்குள் நினைத்தவன், விடாமல் சிரித்துக் கொண்டிருந்த மதுராவை முறைக்க,
அவளோ கண்ணில் நீர் வரும் வரை சிரித்தவள், “ப்ரக்கு உனக்கு இருக்கிற திறமைக்கு நீ இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல யா…ஹான் ஐடியா.. பேசாம நீ குக் வித் கோமாளிக்கு போய்டு” என்று சொல்ல,
அதில் கோபத்தை ஒதுக்கி வைத்த பிரகதீஷ், “குக் வித் கோமாளிக்கு பார்ட்டிசிபேண்ட்டா போகிற அளவுக்கா நான் நல்லா சமைக்கிறேன்?”என்று ஆர்வமாய் வினவ,
“ஏத..பார்ட்டிசிபேண்ட் டா.. என்ன வார்த்த சொல்லிட்ட வாயில அடிச்சுக்கோ.. வாயில அடிச்சுக்கோ.. நான் சொல்ல வந்தது என்னன்னா குக் வித் கோமாளில கோமாளியா போறதுக்குள்ள பத்து பொருத்தமும் உனக்கு பக்காவா இருக்கு” என்று மதுரா அவனையும் காலை வாரி விட,
கடுப்பாகிப் போன பிரகதீஷ், “வர வர..என்கிட்ட பயமே இல்லாம போச்சு உனக்கு ..” என்று அவளின் காதைத் திருக, “நான் எதுக்கு பயப்படணும்? கோமாளிய பார்த்து சிரிக்க தானே செய்யணும்..” என்று கேட்டு மதுராவும் விடாமல் சிரிக்க, “கொழுப்பு கொழுப்பு” என்று தங்கையின் மண்டையில் நாலு கொட்டு கொட்டினான் அவன்.
“என்னடா காலங்காத்தாலேயே அவ கிட்ட சண்டை போட்டுட்டு இருக்க?” என்றபடி ஜெகதீஷும் அலுவலகத்திற்கு கிளம்பி வந்து விட்டான்.
“ஏண்டா தெரிஞ்சுக்கிட்டே கேக்குற அவ தாண்டா வம்பு பண்றா..” என்றான் பிரகதீஷ் அலுப்பான குரலில்…
அவன் இன்னும் தலைப்பாகையுடன் தோசை மாஸ்டர் கெட்டப்பிலேயே இருக்க, ஜெகதீஷ் தான், “டேய் லூசு தலையில உள்ளத ஃபர்ஸ்ட் கழட்டி வைடா..”என்று திட்ட, பிரகதீஷும் முறைத்துக் கொண்டு தலைப்பாகையும் அதில் சொருகி வைத்திருந்த தோசை கரண்டியும் கழட்ட,
மதுராவோ,”என்ன தோசை மாஸ்டர் கெட்டப் போச்சா..” என்று அதற்கும் சிரிக்க,
‘இவ்ளோ சேட்டையை எங்கதான் ஒளிச்சு வச்சிருந்தாளோ! ‘ என்று நினைத்து பெருமூச்சு விட்ட ஜெகதீஷ்,
“சரி சரி ரெண்டு பேரும் அரட்டை அடிச்சது போதும் டைம் ஆகுது சாப்டலாமா?” என்று கேட்டவாறு அவன் அமர, அவனைத் தொடர்ந்து சமத்துப் பிள்ளைகளாய் இருவரும் அமர்ந்து விட, மூவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.
தனக்கு தெரிந்த அளவில் தாளிக்காத தக்காளி சட்னி, தேங்காய் சட்னியுடன் இட்லியும் தோசையும் மூவருக்கு தான் என்பதால் கொஞ்சமாய் செய்திருந்தான் பிரகதீஷ்.
அதுவும் மதுராவிற்கு தோசை பிடிக்கும் என்றுதான் அவளுக்காய் தனியாக சுட்டு வைத்தான். இட்லி என்றாலும் மறுக்காமல் சாப்பிடுவாள் தான் ஆனால் இரண்டிற்கும் மேல் உள்ளே செல்லாது. தோசை என்றால் தாராளமாய் மூன்று நான்கு உள்ளே போகும்.
மதுராவும் அவனிடம் பேச்சுக்கென்று வம்பு செய்தாலும் தனக்காய் சுட்டு வைத்திருந்த தோசையை ஆசையாய் சாப்பிட, அதை புன்னகையுடன் பார்த்தவாறு தனக்கு மூன்று இட்லியை எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிட்டான் பிரகதீஷ்.
ஜெகதீஷ் ஏதோ யோசனையாய் இருந்தவன், “பிரகா உனக்கு இன்னைக்கு நைட் டியூட்டியாடா?” என்று கேட்க,
“இல்லடா இன்னைக்கு ஒர்க் ப்ரம் ஹோம் தான் …ஒரு புது ப்ராஜெக்ட் ஸ்டார்ட் பண்ண போறோம் அதனால ஒரு குட்டி பிரேக்”என்று சொல்ல,
“ஓகேடா ஈவினிங் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..” என்று ஏதோ சொல்ல வந்தவன், மதுராவும் அங்கு இருப்பதை உணர்ந்து, பேச்சை அத்துடன் நிறுத்திக் கொண்டான்.
மதுராவும் என்ன ஏது என்று கேட்டுக் கொள்ளவில்லை. சொல்ல வேண்டும் என்றால் சொல்வார்கள் என்று அமைதியாக இருந்து கொண்டாள்.
ஜெகதீஷ் மதுராவை அவளது அலுவலகத்தில் விட்டு விட்டு தனது அலுவலகத்தை நோக்கிச் செல்ல,
அவளுக்கு அன்றைய தினம் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் விஷயங்கள் நடக்கப் போவது தெரியாமல் சந்தோஷமாக உள்ளே சென்றவள், தன் அருகே இருக்கும் இருக்கையில் எப்பொழுதும் தனக்கு முன்னையே வந்து மற்றவர்களுடன் கதை அடித்துக்கொண்டிருக்கும் தேஜுவை தேட, அவளைக் காணவில்லை.
அவள் மட்டும் இல்லை அவர்களது அக்கவுண்ட்ஸ் செக்ஷனில் பணிபுரியும் மற்ற ஊழியர்களையும் காணாமல் ஆபீஸ் பாயிடம் விசாரிக்க, முக்கியமான கிளையன்ஸ் சிலர் வந்ததாகவும் அவர்கள் வந்ததும் வராததுமாய் அனைவரும் அவசரமாக மீட்டிங் ஹாலிற்கு சென்றுள்ளதாய் சொல்ல, என்ன திடீர் மீட்டிங்? தாமதமாய் வேறு போகிறோமே என்ற பயத்துடன் அடித்துப் பிடித்து வந்தவள் ஒரு நீண்ட பெருமூச்சு எடுத்து விட்டுக்கொண்டு….மீட்டிங் ஹாலின் கதவை தட்டி அனுமதி கேட்க, உள்ளே “கம் இன்” என்ற மேனேஜரின் குரல் பதிலாய் கிடைத்ததும் அவர் ஒன்றும் சொல்ல மாட்டார் என்று தைரியத்தில் உள்ளே போனவள்,
“வெரி குட் மார்னிங் சார் … ஹவ் எ பிளஸெண்ட் டே” என்று சிரித்த முகத்துடன் பொதுவாய் வாழ்த்து சொல்லிவிட்டு தேஜுவின் அருகே இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து.. அவளுக்கு மட்டுமே கேட்குமாறு “என்னடி மீட்டிங்னு சொல்லவே இல்ல?” என்று கேட்க, அவளின் தோழியோ சொல்லவோ மெல்லவோ முடியாமல் ஒரு மார்க்கமாய் முழித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன மேடம் மீட்டிங்கு லேட்டா வந்துட்டு ஒரு எஸ்கியூஸ் கூட கேட்காம போய் உட்காரிங்க?”என்ற பரீட்சையப்பட்ட குரல் கேட்ட திசையைப் பார்க்க,
மேனேஜிங் டைரக்டர் இருக்கையின் அருகே அமர்ந்து அவளை வசீகரமாக பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து பதறி எழுந்தே நின்று விட்டவள்,
‘இவன் எப்படி இங்கே? எதற்காக வந்திருக்கிறான்?’ என்று மனம் ஒருபுறம் சிந்திக்க… கண்கள் அதிர்ச்சியில் பெரிதாய் விரிய, முகமோ நொடிப் பொழுதில் ஆயிரம் பாவனைகளை காட்ட,
கார்முகில் வர்ணனின் கண்கள் அவளின் அத்தனையும் படம்பிடிக்க,
‘வாவ்வ்வ் …மிஸ் கேட் ஃபேஸ் எவ்வளவு எக்ஸ்பிரஸிவ் வா இருக்கு… ஒவ்வொரு செகண்டுக்கும் ஒவ்வொரு மாதிரியா.. ரொம்ப க்யூட்டா..ரொம்ப ஃபிளசண்டா…’ என்று ரசனையாய் நினைத்தவனுக்குள் அதை ஏற்கனவே பலமுறை பார்த்த உணர்வு..!
கருப்பாய் சில நிழற்படங்கள்.. நினைவடுக்குகளில் எழ, கூடவே அழையாத விருந்தாளியாய் தலைக்குள் சுளீர் என்ற வலி.. அதை மற்றவர்கள் கவனிக்காத வகையில் மறைத்தவனின் பார்வை மதுராவை விட்டு விலகவே இல்லை.
அதற்குள் நிற்கும் இடம் புரிந்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்ட மதுரா,
“சாரி சார் மீட்டிங்ன்னு எனக்கு எந்த இன்பர்மேஷனும் வரல.. அதான் லேட்” என்று காரணம் சொல்ல,
அவன் அருகிலேயே அமர்ந்திருந்த மாதேஷ், “டேய் அந்த பொண்ணு உனக்கு தாண்டா பதில் சொல்லுது? இப்படி ஓபனா சைட் அடிச்சு எல்லாரும் முன்னாடியும் மானத்த வாங்காத டா” என்று அவனுக்கு மட்டும் கேட்குமாறு சொல்ல,
உடனே குரலை செறுமிக் கொண்டவன், “இனி நான் தான் இங்க ஃபுல் இன் சார்ஜ்.. இனி இப்டி அடிக்கடி மீட்டிங்ஸ் நடக்கும்.. நான் அடிக்கடி கூப்பிடுவேன் நீங்க எல்லாத்துக்கும் கோ-ஆப்ரேட் பண்ணி தான் ஆகணும்..மிஸ்?” என்று அவளின் பெயர் தெரியாதது போல் நிறுத்த,
அவனின் நோக்கம் புரிந்தவளாய், பல்லை கடித்துக் கொண்டு,
“ஐ அம் மதுரவாணி சார்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள,
“ஓகே மிஸ் மதுரவாணி இனி கவனமா இருங்க..யூ மே சிட்” என்று அனுமதி அளிக்க,
அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே அவள் அமர,
இதற்கே இப்படி ஒரு முறைப்பா? என்று அவளைப் பார்த்து கள்ளமாய் புன்னகைத்தான் அந்த கருப்பு கள்வன்.
அன்றைய மீட்டிங்கின் சாரம்சம் இது தான், அந்தக் கம்பெனியின் முக்கிய பங்குதாரரானவர் தன்னுடைய பங்குகளை விற்று விட்டதாகவும் அதனால் அதிகமான பங்குகளை வைத்திருக்கும் கார்முகில் வர்ணன் இப்பொழுது தலைமை ஏற்றிருப்பது பற்றியும், நீண்ட நேரம் அறிமுக படலம் நடக்க..கொட்டாவி விட்டபடி அதை கேட்டுக் கொண்டிருந்த மதுராவிற்கும் தேஜுவிற்கும் அத்தனை சந்தேகம் அதில்.. எப்படி ஒரே இரவில் ஜீம் பூம் பாய் போட்டது போல் இவன் பொறுப்பு ஏற்க முடியும் என்று… இருவரும் ஒருவரை ஒருவர் இப்பொழுது என்ன செய்ய? என்பது போல் பார்த்துக் கொண்டனர்.
அதன் பிறகு மீட்டிங் முடிவிற்கு வர எப்பொழுதும் போல் அலுவலக வேலை நேரம் தொடங்க, அனைவரும் விடைபெற்று அவரவர்கள் வேலையை பார்க்க கிளம்பினார்கள்.
மதுராவும் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க, அதற்குத் தடைவிதிப்பது போல் அவளை எம்டி அழைப்பதாக ஆபீஸ் பாய் வந்து அழைக்க, வேலை மும்முரத்தில் இருந்தவள், ‘தன்னை தொல்லை செய்வதற்காகத்தான் இங்கே வந்திருக்கிறான் அவன்’ என்று முடிவெடுத்தவளாய் எரிச்சலோடு தான் அவனைப் பார்க்க கிளம்பினாள்.
தேஜுவோ, “என்ன மது ஆபீஸ்லயே ஹஸ்பண்ட் கூட ரொமான்ஸா? சும்மா கலக்குற போ” என்று கண்ணடிக்க,
“நீ வேற ஏண்டி என் வயித்தெரிச்சல கொட்டிக்கிற?” என்று கடுப்பாய் தோழியிடம் காய்ந்தவள், அவனின் கேபினுக்குள் அனுமதி கேட்டுப் போக, அங்கோ அவன் தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தான்.
அதில் பயந்தவளாய்,
“அச்சோ பிளாக் என்னாச்சு உங்களுக்கு? திரும்பவும் தலவலிக்குதா?” என்று பதறியபடி அவன் அருகில் வந்த மதுராவை அடுத்த நொடி அவன் பிடித்து இழுத்திருக்க, தன் மடியில் வந்து விழுந்தவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான் அவன்.
அவனின் இறுக்கமான பிடியில் மூச்சு கூட விட முடியாமல் பேச்சை இழந்தவளாய் திரு திருத்தாள் மதுரவாணி.
தொடரும்…
போன அத்தியாயத்திற்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்…😊♥️
இந்த பதிவிற்கும் கமெண்ட்ஸ் போட்டு போங்க நட்பூஸ்🙂♥️
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
43
+1
3
+1
5
சூப்பர் எபி ♥️
கார்முகிலுக்கு நியாபகம் வந்துட்டா?
Super epi sis…
Brothers sister bonding super sis… 🙂
👌👌👌👌👌மிகவும் அருமை