Loading

14. நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன் 

முத்துமாணிக்கம் கைது செய்யப்பட்டு இதோ ஒரு மாதம் முடிவடைந்து விட்டது. 

இந்த ஒரு மாதத்தில் தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்…

ஒருவனுக்கு கஷ்டங்கள் வரும் பொழுது தான் அவனுக்கு தன்னை சுற்றியுள்ள மனிதர்களின் உண்மையான முகம் தெரியும் என்று சொல்வது எத்தனை உண்மை என்பதை கண்கூடவே பார்த்தனர் ஜெகதீஷ் பிரகதீஷ் இருவரும். 

தங்களது சொந்த அக்காவே புகுந்த வீட்டினர் தங்களுடன் இனி பேசக்கூடாது என்று சொன்னதால் இங்கே வராமல் இருந்து கொண்டதும், தாங்களே தொடர்பு கொண்டு பேசிய போதும் இனி இங்கெல்லாம் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று முகத்தில் அடித்தது போல் தொடர்பினை துண்டித்தது தான் அவர்களுக்கு முதல் பெரிய அடி!

கூடப் பிறந்தவர்கள் என்ற பாசமும் கூடவா போய்விடும்? ஆபத்து காலத்தில் அக்காவின் ஒதுக்கம் அவர்களின் உறவில் பெரும் விரிசலையும், உள்ளத்தில் பெரும் வடுவை உண்டாக்கி இருக்க, அதுவும் அன்னையின் ஸ்தானத்தில் அவளை வைத்துப் பார்த்த அவளின் சகோதரர்களை அவள் நினைக்கவில்லையே! என்ற மனக்கசப்பு இருவருக்கும்..

அதுமட்டுமல்லாமல், வெந்துப்போன காயத்தில் வேல்லை பாய்ச்சுவதற்காகவே.. ஆறுதல் அளிப்பது போல் தொடர்பு கொண்ட சில  உறவினர்களின் மறைமுக குத்தல் பேச்சுக்கள் வேறு… 

இது அனைத்தையும் சமாளிப்பதற்குள் அடுத்த பிரச்சனையாக, தங்கள் வீட்டை முற்றுகையிட்ட மீடியாக்காரர்களின் தொல்லையும்… வெளியே கூட நிம்மதியாக செல்ல முடியாமல் அத்தனை கொடுமை!

என்னதான் தந்தை தவறே செய்திருந்தாலும்.. இதுவரை அவர்களுக்கு எந்த குறையும் வைத்ததில்லையே! அதனாலேயே அவரை அப்படியே அம்போ என்று விட்டு விடவும் முடியாமல் அவரின் பக்கம் வாதாடுவதற்காக புகழ் பெற்ற வக்கீல் ஒருவரை ஏற்பாடு செய்திருந்தனர்.

இடையில் தந்தையை நேரில் சந்திக்க முயற்சி செய்தபோது அதற்கும் அனுமதி கிடைக்கவே இல்லை.. விசாரணை எல்லாம் முடிந்த பிறகு நேரடியாக நீதிமன்றத்திலேயே அவரை பார்க்க முடியும் என்று விட்டனர்.

மதுராவோ, அன்றைய திருமண நாளிலிருந்து பாதி நேரம் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள். இல்லையென்றால் தோட்டத்தில் அலைந்து திரிந்தாள். முகத்தில் பழைய துள்ளலும் குறும்பும் சுத்தமாய் இல்லாமல் எதையோ பறிக் கொடுத்தது போல் நாள் முழுவதும் சிந்தனையிலேயே சுற்றிக் கொண்டிருந்தாள்.

அன்று திருமண மண்டபத்திலேயே, அவள் செய்த செயல் அதிர்ச்சியாய் இருந்தாலும் தந்தையை உளவு பார்த்து கையும் களவுமாக பிடிப்பதற்காக வந்தவனின் நடிப்பாகவே அந்த திருமணம் தெரிய, மதுரா செய்தது சரிதான் என்று நினைத்தவர்கள் அன்றைய  நிகழ்வைக் கண்டு கொள்ளவில்லை…

ஆனால் ஒரு பெண்ணாக மணவறையில் ஒருவனிடம் தாலியை ஏற்றுக் கொண்டவளுக்கு அத்தனையும் பொய் என்று தெரியும் பொழுது எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று அவளின் முகத்தில் தெரிந்த கவலையும் சோர்வும் இந்த ஒரு மாதத்தில் சகோதரர்கள் இருவரையும் யோசிக்க வைத்திருந்தது.

முன்பு போல இருந்திருந்தால் இதெல்லாம் யோசித்து இருக்க மாட்டார்களோ? என்னவோ?  ஆனால் முதல் இரண்டு நாட்கள் அறைக்குள்ளையே அடைந்து கிடந்தவள்..‌ மூன்றாம் நாள் வீட்டில் வேலை செய்பவர்களின் மூலம் அன்றைக்கு மண்டபத்தில் ஏற்பட்ட காயத்தால் ஜெகதீஷிற்கு உடல்நிலை சரியில்லாமல் துவண்டு போய் இருப்பதும் பிரகதீஷ் தந்தையின் விஷயமாக நீதிமன்றத்திற்கும் குற்ற புலனாய்வு துறைக்கும் அலைந்து அவனுமே சரியாக சாப்பிடாமல் நோயுற்றவனைப் போல் இருப்பதை கேள்விப்பட்டவள் அதற்கு மேல் தானும் அறைக்குள்ளையே அடைந்து கிடந்து உடம்புக்கு ஏதாவது இழுத்து வைத்து அவர்களுக்கு வீண் பாரமாய் இருக்க விரும்பாமல் வெளியே வந்தவள், 

அவர்களுக்கு நேரடியாக எந்த உதவியும் செய்யவில்லை என்றாலும் ‘அவனாக மருத்துவமனைக்கு செல்ல மாட்டான்’ என்று ஜெகதீஷ் உடல் நிலையை பரிசோதிப்பதற்கு குடும்ப மருத்துவரை வீட்டிற்கே வரவழைத்தது முதல் ஜெகதீஷ் பிரகதீஷ் இருவரையும் வேலையாட்களின் மூலம் விரட்டி வேளா வேளைக்கு உணவு உண்ண வைத்தது வரை தள்ளி நின்றே செய்த சில உதவிகள் அவர்களுக்கு புரியாமல் இல்லை.

அக்காவை அன்னையின் ஸ்தானத்தில் வைத்திருந்தவர்கள் என்பதாலேயே அவள் சொல்லுக்கு இணங்க சிறு வயது முதலே மதுராவின் மீது அத்தனை வெறுப்பை வளர்த்திருந்தனர். ஆனால்  முதன்முறையாக உண்மையின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் பொழுது, அவளின் அன்னை என்ற அரக்கி செய்த தவறுக்கு தேவையில்லாமல் ஒன்றும் அறியா சிறு பிள்ளையை சிலுவை சுமக்க வைத்து விட்டோமோ? என்று அவளுக்கு சாதகமாக யோசித்தவர்கள் அதன் பிறகு மதுராவின் மனம் சங்கடப்படும் படியோ புண்படும்படியோ எந்த பேச்சையும்.. வம்பையும் அவளிடம்  வைத்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குள் அதிகமாய் பேச்சு வார்த்தைகள் இல்லை என்றாலும் பொதுவாய் ஒன்றிரண்டு வார்த்தைகள் அவளிடம் பேசவும் ஆரம்பித்திருந்தனர்.

இடையில் என்கொயரி என்ற பெயரில் சிபிஐ அதிகாரிகள் சிலர் முத்துமாணிக்கத்தின் தற்போதைய சொத்துக்களைப் பற்றியும் அவர் நடந்து கொண்டிருந்த அறக்கட்டளை நிறுவனத்தை பற்றியும் அவர்களின் கல்லூரியைப் பற்றியும் விசாரிப்பதற்காக அவர்களைத் தேடி வர, வந்தவர்களில் முக்கியமானவனைக் காணவில்லை. அவன் வருவான் என்று தான் எதிர்பார்த்தனர்.  ஆனால் வரவில்லை. விசாரணைக்கு வந்தவர்களிடம் அவனைப் பற்றி விசாரித்ததற்கு எந்தவித தகவலும் இல்லை.

மதுராவும் அவனை எதிர்பார்த்தாள் போல அவன் வராததை உணர்ந்ததும் அவளின் ஏமாற்றம் அடைந்த பார்வையிலேயே புரிந்தது. ஒரு வேகத்தில் அவன் கட்டிய தாலியை கழற்றி கையில் கொடுத்து விட்டாலும் உள்ளுக்குள் தவறு செய்து விட்ட தவிப்பு ஏன் அவளுக்கு இருந்தது என்று அவளுக்கே தெரியவில்லை.

அன்றைய கைது நடவடிக்கைக்கு பிறகு அவனைப் பற்றிய எந்த ஒரு தகவலும் இல்லை. 

அத்தனை பேரையும் பிடித்தேன் என்று தம்பட்டமடித்துக் கொள்வான் என்று நினைத்திருக்க,செய்தித்தாள்களிலும் நியூஸ் சேனல்களிலும் ‘இது யாருக்கும் தெரியாத ஒரு அண்டர் கவர் மிஷன்.. சமுதாயத்திற்கு விஷச்செடிகளாக இருக்கும் சிலரை பிடுங்கி எறிவதற்கான திட்டம்’ என்றார்களே தவிர அதை யார் செய்தார்கள் என்று எல்லாம் ஒளிபரப்பவில்லை. பொத்தாம் பொதுவாக, இது குற்றப்புலனாய்வு துறையின் சாதனை என்று தம்பட்டமடித்தது தான் மிச்சம்.

மதுராவின் மனம் அவன் தன்னை தேடி வருவான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்க, ஆனால் அதற்கு மாறாய் கருப்பசாமி என்ற ஒருவன் அவள் வாழ்க்கையிலேயே இல்லை என்பது போல் அத்தனை எளிதாய் வந்த வேகத்திலேயே காணாமல் போய்விட்டான்.

நாட்கள் மாதங்களாய் கடக்க,

அவர்களின் தந்தையின் மீதான விசாரணை முடிந்து அவரது வழக்கும் கோர்டிற்கு வந்தது‌. ஆனால் தீர்ப்பு அவர்கள் எதிர்பார்த்தது போல் இல்லாமல், முத்துமாணிக்கத்திற்கு மக்களுக்கு நல்லது செய்யும் இடத்தில் இருந்து கொண்டு பணத்திற்காக போதை பொருள் முதல் ஆட்கடத்தல் வரை அணைத்திற்கும் துணை போயிருக்க,

கடுமையான எச்சரிக்கையோடு அவரின் வயதின் காரணமாக அதிகபட்சமாக பதினெட்டு வருட சிறை தண்டனையுடன் அவரின் அத்தனை சொத்துக்களும் முடக்கப்பட, கல்லூரி முதல் அறக்கட்டளை நிறுவனம் வரை அத்தனையும் அரசாணையால் மூடப்பட்டது. 

அவர்களின் பரம்பரை சொத்தை தவிர மிஞ்சியது அனைத்தையும் அரசே கையில் எடுத்துக் கொள்ள, அந்த பரம்பரை சொத்திலும் வினோதா என் பங்கை எனக்குப் போடு என்று தன் கணவனோடு வர, மறுப்பு சொல்லாமல் ‘சரி தருகிறோம்’ என்று சம்மதித்து சொத்துக்கள் உரிய பங்குடன் பிரித்து கை மாறுவதற்காக.. இதோ ரிஜிஸ்டர் ஆபீஸில் கடைசி கட்ட கையெழுத்திடும் பணிக்காக வந்திருந்தனர்.

உள்ளே இன்னொரு இடத்திற்கு ரிஜிஸ்ட்ரேஷன் நடந்து கொண்டிருக்க, இவர்கள் சற்று காத்திருக்க வேண்டிய நிலை..!

சகோதரர்கள் இருவரும் கோபத்தில் வினோதாவை பார்க்க இஷ்டம் இல்லாமல் ஆளுக்கு ஒரு பக்கம் திரும்பி நின்று கொண்டிருக்க, வினோதாவின் கண்களோ தன் சகோதரர்கள் இருவரின் நடுவில் அமைதியே உருவாக நின்று கொண்டிருந்த மதுராவை தான் முறைத்தது. 

இவளால் தானே எல்லாமே? 

இவள் மட்டும் இல்லை என்றால் தந்தைக்கு இப்படி ஒரு ஆபத்து வந்து இருக்காதே…!

தானும் தனது புகுந்த வீட்டினரின் கட்டாயத்தால் தன் தம்பிகளிடமிருந்து பிரிந்திருக்க வேண்டாமே!

என்று மதுராவை பார்க்க பார்க்க ஆத்திரம் தாங்காமல் வார்த்தைகளால் குத்தி கிழிக்க ஆரம்பித்தாள்.

“ஏய் எப்படி டி கூச்சம் நாச்சம் இல்லாம நிம்மதியா இருக்க? என் குடும்பத்தை இப்டி பிரிச்சிட்டியே.. உனக்கும் உங்க அம்மா புத்தி தானே இருக்கும்? நீ எல்லாம் நல்லா இருப்பியா?”என்று ரிஜிஸ்டர் ஆபீஸ் என்றும் பாராமல் மதுராவை பார்த்து கோபத்தில் அவளை வார்த்தைகளால் குத்தி கிழிக்க,

எப்பொழுதும் வினோதா திட்ட வாயை திறந்தாலே அமைதியாக இருக்கும் மதுரா, இம்முறை அப்படி இருக்கவில்லை. மாறாக,

“நீங்க சாபம் விடுற அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணிட்டேன் க்கா அப்டி?” என்று கேட்டிருந்தாள்.

“நீ என்ன தப்பு தாண்டி பண்ணல.. உன்னால எங்க அப்பா இப்போ ஜெயில்ல இருக்கார்..”

“அப்பா தப்பு பண்ணி இருக்கார் அதனால தண்டனை கிடைச்சிருக்கு..? இதுல நான் எங்க இருந்து வந்தேன் க்கா?” என்று தெள்ளத் தெளிவாய் கேட்டவளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஒரு நொடி திணறி போன வினோதா, “என்னடி என்னையே எதிர்த்து பேசுறியா?”என்ற குரலை உயர்த்த,

மதுரா இம்முறையும் பொறுமையாகவே, “நான் எதிர்த்தெல்லாம் பேசல உண்மைய தான் சொன்னேன்” என்றாள்.

“ஆமா அப்படியே பெரிய உண்மை விளம்பி… உண்மைய மட்டும் தான் பேசுவா? உன்னோட அம்மா சொத்துக்கு ஆசப்பட்டு உள்ள வந்தா… நீயும் இப்ப அதே சொத்துக்காக தானே எங்க வீட்ல இருக்க” என்று இருக்கும் இடத்தை மறந்து வினோதா கத்த,

“வினோ அமைதியா இரு.. வந்த வேலைய மட்டும் பாக்கலாம்” என்று ரூபேஷ் சுற்றும் முற்றும் தங்களை வேடிக்கை பார்த்தவர்களைப் பார்த்து சங்கடப்பட்ட படி மனைவியை அடக்க முயல, அவள் கேட்ட பாடில்லை.

“எத வச்சு நான் சொத்துக்கு ஆசைப்பட்டேன்னு சொல்றீங்க? இதுவரைக்கும் அப்படி எந்த ஆசையும் எனக்கு இல்ல… இனியும் வராது” என்று எப்பொழுதும் பொறுத்து போகும் மதுராவும் விடாமல் பேசிவிட,

இவள் எல்லாம் தன்னை எதிர்த்து பேசுவதா? என்று அவளுக்குள் இருந்த வஞ்சமும் கோபமும் போட்டி போட்டபடி உச்சிக்கு ஏற, மதுராவை காயப்படுத்தி வீழ்த்திவிடும் நோக்கத்திலேயே,

“பின்ன சின்ன வயசுல இருந்து உன்ன அவ்வளவு பாடுபடுத்தியும் இன்னும் எங்க வீட்ட விட்டு  போகாம எங்களையே தொத்திட்டு இருக்கறதுக்கு காரணம் சொத்து தானே.. எங்க கிட்ட சொத்து இல்லனா மான ரோசம் பாக்காம எங்க வீட்டிலேயே வந்து இருப்பியா நீ? ச்சை எங்க குடும்பத்துக்கு பிடிச்ச பீடை நீ..  உனக்கு பாதுகாப்புக்குன்னு ஒருத்தன வீட்டுக்கு கூட்டிட்டு வந்து தான அப்பாவும் தேவையில்லாம சதில மாட்டிக்கிட்டார்..என்னத்த வச்சு அந்த சைக்கோவ மயக்கினியோ? அப்படியே அம்மா புத்தி.. உன்னோட இந்த சின்ன புத்திக்கு தான் தாலி கட்டுன அன்னைக்கே அத அறுத்தறிஞ்சுட்டு மூளியா வந்து நிக்கற… உன் மூஞ்சில முழிச்சாலே தரித்திரம் தான்” என்று கத்தி விட,

அவ்வளவு நேரம் பெண்கள் இருவரின் வாக்குவாதத்தில் தலையிட வேண்டாம் என்று கண்டு கொள்ளாமல் தள்ளி நின்ற ஜெகதீஷ் பிரகதீஷ் இருவரும் வினோதாவின் கடைசி வரம்பு மீறிய வார்த்தைகளில்,

“அக்கா.. தப்பு தப்பா பேசாத..” 

“என்ன வார்த்தை இது? படிச்சவ மாதிரி பேசுக்கா” என்று இருவருமே ஒன்று போல் கத்தியிருந்தனர். 

அவர்களது வினோ அக்காவிடம் இருந்து இத்தகைய கீழ்தரமான மோசமான வார்த்தைகளை கிஞ்சித்தும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

சகோதரர்கள் இருவரின் முகமும்  அருவருப்பில் இருந்தது என்றால் மதுராவோ உயிரற்ற பார்வையுடன் கலங்கிய கண்களை மற்றவர்களுக்கு காட்ட விருப்பம் இல்லாமல் இமைதட்டி  மறைத்தவாறே,

“எனக்கு உங்ககிட்ட இருந்து எதுவுமே வேண்டாம்… நீங்க சொல்லாட்டாலும் நான் இந்த ஊரை விட்டு போக தான் போறேன்..” என்றாள் தீர்க்கமாய்!

மதுராவின் இந்த அதிரடி முடிவால் சகோதரர்கள் இருவரும் அதிர்ந்தார்கள் என்றால் வினோதாவும் அதிர்ந்தால்தான் ஆனால் இன்பமாய்! 

ஆனால் அவளின் இன்பம் எல்லாம் அவளின் சகோதரர்கள் சொன்ன வார்த்தையால் துன்பமாய் மாறிப் போனது. 

“மதுரா மட்டும் இல்ல நாங்களும் தான் ஊர விட்டு போக போறோம் க்கா” என்றான் ஜெகதீஷ். 

“என்னடா சொல்ற? நீங்க எதுக்குடா ஊர விட்டு போகணும்? அதுவும் அவளோட..” என்று அதிர்ந்து போய் கேட்ட வினோதாவிற்குள் பதட்டம்.

எங்கே தன் தம்பிகள் மதுராவை தங்களுடன் சேர்த்துக் கொண்டு தன்னோடான உறவை மொத்தமாய் அத்து விட்டு போய்விடுவார்களோ? என்று…

” நம்ம ஃபேமிலியால உன்னோட புகுந்த வீட்டுக்கு அவமானம்ன்னு நீதானக்கா சொன்ன? எங்க கிட்ட கூட நீ பேசறது இல்லையே? கூட பிறந்த நீயே எங்கள ஒதுக்கும்போது மத்தவங்க ஒதுக்காமலா இருப்பாங்க? அதான் புது மனுஷங்க புது எடத்த தேடி போலாம்னு இருக்கோம்” என்று  ஜெகதீஷ் விட்டேந்தியாக சொல்ல,

“அதுக்குன்னு பொறந்து வளந்த ஊர விட்டு போலாமா? இப்ப நடந்த விஷயத்தால என் அத்த மாமா நம்ம குடும்பத்து மேல கொஞ்சம் வருத்தத்துல இருக்காங்க ..அவங்க சரியானதும் உங்க கிட்ட பேசாமலா இருக்க போக போறேன்? டேய் பிரகா நீயாவது அவன் கிட்ட எடுத்து சொல்லுடா..”

“ப்ச்ச் எனக்குமே இவ்வளவு பெரிய அவமானத்துக்கு அப்புறமும்  இந்த ஊர்ல நிம்மதியா முன்ன மாதிரி இருக்க முடியும்னு தோணல க்கா…” என்றான் பிரகதீஷும்.

அவளிடம் மட்டும் படாமலும் தான் இருந்தது அவனது பேச்சும்..

இடைப்பட்ட காலத்தில் அவர்கள் பட்ட அவமானமும் கொஞ்சம் நஞ்சம் இல்லையே! தங்கள் முன் கைகட்டி நின்றவர்கள் எல்லாம் கைக்கொட்டி சிரிக்கும்படி ஆனதோடு தாங்கள் அத்தனை அன்பு வைத்திருந்த அக்காவின் பேச்சும் ஒதுக்கமும் தானே அவர்களுக்கு பெரிய அடியாய் இருந்தது. மறக்க முடியவில்லை அதற்காக நேரடியாய் அவனால் அக்காவை காயப்படுத்தியும் பேச முடியவில்லை…

வினோதாவிற்கு தம்பிகளின் ஒதுக்கம் புரிந்தது. ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாது நிலை!

வினோதாவின் கணவன் ரூபேஷிற்கு அவர்களின் வீட்டில் அப்படி ஒன்றும் செல்வாக்கு இல்லை திருமணத்திற்கு முன்பு அன்னையின் பேச்சை மட்டுமே கேட்டு நடப்பவன் திருமணமான பின் மனைவியின் பேச்சைக் கேட்டு நடந்து கொண்டிருந்தான். அதுவும் இத்தனை நாட்கள் வினோதா தன் தந்தையின் பெருமையையும் பிறந்த வீட்டின் பெருமையையும் சொல்லி சொல்லியே தனக்கு தேவையான காரியத்தை சாதித்துக் கொண்டு அவர்கள் வீட்டின் மூத்த மருமகள் மாமியார் நாத்தனார் என்று அனைவரையும் தனக்கு கீழே ஆட்டி படைத்துக் கொண்டிருக்க, இப்பொழுது எல்லாம் தலைகீழானது.

யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல்  அவளது குடும்பமே இங்கு சரிக்கி இருக்க, இப்பொழுது பொம்மை போல் ஆட்டி வைக்கப்படுவது அவளாய் போனாள்.

அவளது குடும்பத்தோடு இனி பேசினால் நீங்கள் இருவரும் உங்களுக்கான சொத்துகளை பிரித்து எடுத்துக் கொண்டு தனி குடித்தனம் போய்விடுங்கள் என்று நேரடியாக அவளின் மாமானார்  திட்டியே விட,

சாதுரியம் இல்லாத கணவனை வைத்துக்கொண்டு எங்கே அவள் தனிக்குடித்தனம் செல்ல? இங்கு குடும்பமாய் நடக்கும் தொழில் மூலமாகதானே வருமானம் வந்து கொண்டிருக்கிறது தன் கணவனை நம்பினால் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும் என்று நினைத்தவள் மாமனாரின் சொல்படி கேட்டுக் கொள்வதாக சொல்லிவிட்டாள்.

இதெல்லாம் நினைத்து அவள் பெருமூச்சு விட அப்பொழுதுதான் அவளின் கண்களில் விழுந்தது அந்த காட்சி. 

மதுரா ஏதோ சிந்தனைவயப் பட்டவளாக நிற்பதை பார்த்து ஜெகதீஷ் அவளிடம் சென்று ஏதோ பேச்சு கொடுக்க, எப்பொழுதும் அவளிடம் வம்பு இழுக்கும்

பிரகதீஷும் “ஏய் குட்ட..” என்று ஏதோ சொல்வது அவளது காதிற்குள் கேட்க, ஏனோ தனக்கு சொந்தமான உறவுகளை மதுரா பறித்துக் கொண்டதாக எண்ணியவளுக்குள் அவளைக் கொல்லும் வெறியே வந்தது.

ஆனால் ஏற்கனவே தம்பிகள் முன்பு தரம் இறங்கி பேசி விட்டோம் என்ற எண்ணம் இருக்க, அதனால் இதற்கு மேல் அவர்கள் முன் தாழ்ந்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் மதுராவிடம் அவள் எதுவும் பேசவில்லை.

அதற்குள் அவர்களின் முறை வந்து விட, ஆபீஸ் பியூன்  வந்து அவர்களை உள்ளே அழைத்தான்.

அதன் பிறகு அத்தனை வேகமாய் வேலைகள் நடக்க, முறைப்படி பத்திரத்தை பதிவு செய்து வினோதாவிற்கு சேரும் பங்கினை சரியாக பிரித்து கொடுத்துவிட்டனர்.

அனைவரும் கிளம்புவதற்கு முன், காரில் ஏறி அமர்ந்த அக்காவிடம் வந்தவர்கள்,

ஏதோ அன்றுதான் அவளை பார்க்கும் கடைசி நாள் என்பது போல், “உடம்ப பாத்துக்கோ வினோ அக்கா…” என்று  மதுராவுடன்  கிளம்பி விட, 

“என்ன திடீர்னு ஒரு மாதிரி பேசிட்டு போறானுங்க… இவனுங்கள வரவர புரிஞ்சிக்க முடியலையே” என்று கணவனிடம் புலம்பினாள் வினோதா. 

அவனோ எப்போதும் போல், “டோன்ட் வொர்ரி எல்லாம் சரியாகிடும்.. போன்லையாவது அவங்க கிட்ட பேசு.. அப்பா கிட்ட நான் பேசிக்கிறேன்” என்றான் சமாதானமாக.

சரி என்ன கெட்டுப் போகப் போகிறது? தங்களது வீட்டில் பிரச்சனை முடிந்தவுடன் அவர்களை தொடர்பு கொண்டு பேசிக் கொள்ளலாம்… தன் தம்பிகள் தானே! தன்னிடம் சொல்லாமல் எங்கே போய் விடப் போகிறார்கள்? என்று நினைத்து  சிறு நம்பிக்கையுடன் வினோதாவும் கணவனுடன் செல்ல…

அடுத்த வாரத்திலேயே, யாரிடமும் தகவல் சொல்லாமல் ஊரைவிட்டே சென்று விட்டனர் மூவரும்..

***********************

இதோ மூவரும் கொல்கத்தாவிற்கு வந்து முழுதாய் ஏழு மாதங்கள் கடந்து விட்டது. 

தமிழ்நாட்டை விட்டு வேறு மாநிலத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு கொல்கத்தா தான் அடைக்கலம் கொடுத்தது. 

ஏற்கனவே கல்லூரியில் அவர்களுடன் படித்த நெருங்கிய நண்பன் ஒருவன் தங்கள் குடும்பத்துடன் அங்கே செட்டிலாகி இருந்தான்.

அவனைத் தொடர்பு கொண்டு பேசியவர்கள் தங்குவதற்கும் வேலை செய்வதற்கும் ஏற்பாடு செய்துவிட்டதால் அவர்களுக்கு அங்கே எந்த சிரமமும் இல்லை.

அவர்களுக்கு என்று ஒரு அப்பார்ட்மெண்ட்… ஆர்ப்பாட்டம் இல்லாமல் அழகாக அமைதியாக நகர்ந்தன நாட்கள்..

ஜெகதீஷ் பிரகதீஷ் அங்கிருந்த மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிய, மதுராவும் தான் மட்டும் வீட்டில் இருப்பதா? என்று புகழ் பெற்ற தனியார் நிறுவனம் ஒன்றில் அக்கவுண்ட் செக்ஷனில் பணியில் சேர்ந்தாள்.

முன்பு போல வெட்ட வா குத்த வா என்று சண்டை போடவில்லை என்றாலும்… மூவருக்கும் அவ்வப்பொழுது சண்டை வராமல் எல்லாம் இல்லை..

சண்டை வந்தாலும் சமாதானமாக போக கற்றுக் கொண்டனர்.

மூவரும் சேர்த்து சமைப்பது ஒருவருக்கொருவர் ஏதேனும் சிறு சிறு வேலைகளில் உதவுவது… என்று பாசப்பயிறும் அவர்களுக்குள் வளர்ந்தது என்னவோ உண்மை! 

மதுராவும் சிறுவயதில் அவர்களிடம் கிடைக்காத பாசம் இப்பொழுது கிடைக்க, தன் கூட்டில் இருந்து வெளியே வந்து சாதாரணமாக அவர்களிடம் பேச ஆரம்பித்தாள். சிரிக்க ஆரம்பித்தாள்.

ஆனாலும் அவ்வப்போது யாரிடமும் சொல்ல முடியாத சோகம் அவள் கண்களிலும், முகத்திலும் வந்துவிடும்… கருப்பு என்ற நிறத்தை பற்றி பேசினாலோ முக்கியமாக யாராவது கருப்பு உடையில் சென்றாலோ… அவளது கவனம் முழுவதும் அவர்களிடம் சென்று விடும்…”பிளாக் …பிளாக் எங்க இருக்க?”என்று இரவில் தூங்குவதற்கு முன் ஒரு நேரமாவது அவளது உதடுகள் முணுமுணுக்கும்..

மனதின் ஆழத்தில் இன்னுமே அவளின் பிளாக் இருப்பதை உணர்ந்தாள்… ஆனால் இருந்து என்ன பயன்? எதற்கும் பிரயோஜனம் படாத நினைவுகள் தான் இவை என்று மனதின் எண்ணங்களை ஒதுக்க முயல்வாள்.

அவன் அருகில் இருக்கும் பொழுது உணராதது இப்பொழுது மட்டும் எதற்கு? என்ற எண்ணம் தான். 

இருந்தும் உள் மனதின் ஆசை அவன் தன்னை தேடி வந்து விட மாட்டானா என்று…

ஆனால் அது தான் இத்தனை மாதங்கள் கடந்தும் நடக்கவில்லையே!

அன்றைய நாள் எப்பொழுது போல் தான் தொடங்கியது. 

ஜெகதீஷ் காலையில் எழுந்ததும் பார்த்தது அரக்க பரக்க ஓடி ஓடி தயாராகிக் கொண்டிருந்த மதுரவாணியை தான்.

எழுந்து கொட்டாவி விட்டபடியே அறையில் இருந்து வெளியே வந்தவன், அவள் தயாராகி இருப்பதை பார்த்து,

“ஏய் குட்டச்சி எங்க போற? இன்னைக்கு சண்டே ஆபீஸ் லீவ் தானே? புதுசா சேரி எல்லாம் கட்டி இருக்க..”

“ஜக்கு நான் தான் போன வாரமே சொன்னேன்ல இந்த சண்டே என்னோட பாஸோட பொண்ணுக்கு மேரேஜ் இருக்குனு.. எங்கள சீக்கிரமே வர சொல்லி இருக்காங்கன்னு”

“ம்ம்‌ சொன்ன சொன்ன.. நான் தான் மறந்துட்டேன்”. என்று தலையில் தட்டிக் கொண்ட ஜெகதீஷ் மணியை பார்க்க மணி ஏழாக பத்து நிமிடம் இருப்பதாக காட்டியது.

“கேப்ல போறியா இல்ல நான் ட்ராப் பண்ணவா?”

“ரெண்டுமே வேண்டாம்..என் கூட வேலை பாக்குற கொலிக் என்ன போற வழியில பிக்கப் பண்ணிக்கிறதா சொல்லி இருக்காங்க”

“ஓகே பைன் பார்த்து பத்திரமா போய்ட்டு வா”

நேற்று பிரகதீஷிற்கு நைட் ஷிப்ட் என்பதால் அவன் இன்னும் அலுவலகத்தில் இருந்தே வந்திருக்கவில்லை.

 “ஜக்கு பிரஷ் பண்ணிட்டியா?” என்று மதுரா கேட்க,

“இல்லையே இனி தான் பண்ணனும்” என்றான் அவன்.

“ம்ம் இந்த ஊத்த வாய வச்சுட்டுதான் விசாரிக்க வந்தியா? போய் பிரஷ் பண்ணிட்டு வா.. டீ போட்டுட்டேன்.. பிரேக் பாஸ்ட் நீயே பண்ணிடு பிரிட்ஜ்ல தோசை மாவு இருக்கு அப்புறம் நைட் வச்ச தக்காளி சட்னி பேலன்ஸ் இருக்கு காலி பண்ணிடு… முக்கியமா அந்த கும்பகர்ணன் வந்ததும் சாப்ட்டுட்டு தூங்க சொல்லு” என்றவளின் மொபைல் சத்தம் எழுப்ப,

அதை எடுத்துப் பார்த்தவள், 

“அவங்க வந்துட்டாங்க போல நான் போயிட்டு வரேன்..” என்று கிட்டத்தட்ட ஓடாத குறையாக வெளியே போக, அவளுக்கு பின்னேயே வந்தவன்,

“ஏய் குட்டச்சி எங்கேயும் கீழ விழுந்து சில்லறைய வாங்கிடாத மெதுவா போ” என்று எச்சரித்தவனுக்கு, 

“எல்லாம் எனக்கு தெரியும் நீ ஃபர்ஸ்ட் போய் பல்ல விலக்கு டா பக்கோடா”என்று கத்திக்கொண்டே அவள் லிப்ட்டில் ஏறியிருந்தாள். பின்னாடியே அவன் அதற்கு கத்திய சத்தத்தை அவள் கண்டு கொள்ளவில்லை.

தங்களது ஃப்ளாட் இருக்கும் பன்னிரண்டாம் தளத்திலிருந்து லிஃப்ட்டின் மூலம் கீழே வந்தவள், கார் பார்க்கிங்கில் அவளுக்காய் காத்திருந்த தேஜுவுடன் அவர்களுடன் வேலை பார்க்கும் இன்னொரு பெண்ணும் இருக்க மூவரும் பேசியபடியே பயணம் செய்ய நான்காவதாக அவர்களுடன் பணி புரியும் சரத்தும் வந்து சேர்ந்து கொள்ள அங்கு கலகலப்பிற்கு பஞ்சம் இல்லை. 

சிரிப்பும் கிண்டலுமாக நண்பர்களுடன் ஆன அந்த பயணத்தை ரொம்பவே ரசித்த மதுரா, சிக்னல் ஒன்றில் வண்டி நிற்கும் போது… கூட்டத்தை பார்த்தால் திருமணம் நடக்கும் இடத்திற்கு செல்ல தாமதமாகுமோ? என்ற யோசனையுடன் எதேர்ச்சையாக திரும்பி பார்க்க, 

அவர்களை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த கருப்பு நிற காரில் ஓட்டுனரின் இருக்கையில்… தனது அக்மார்க் கருப்பு நிற உடையில் அமர்ந்திருப்பது கருப்பசாமி தானே?

தன் கண்களையே நம்ப முடியாமல் இமைக்காமல் அவனையே பார்த்தவளின் கண்கள் கலங்கிவிட்டன. இயல்பாய் இருக்க, நினைத்தாலும் முடியவில்லை.

மதுராவிற்கு அவனைப் பார்த்ததில் அதிர்ச்சி கலந்த ஆனந்தம் ஏற்பட,

“பிளாக்…”என்று தன்னையும் மீறி அவள் கத்தியிருந்தாள்.

அந்தப் பக்கம் இருந்தவனும் அவளைப் பார்த்து விட்டான் தான்.. ஆனால் அவளைப் பார்த்தவனின் கண்களில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருக்க, யாரோ ஒருவரை பார்ப்பது போல் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டான்.

அவனின் கண்டுகொள்ளாத தன்மையால் மனதில் அடிபட்டு போனவளாய் தவித்துப் போனாள் மதுரவாணி.

தொடரும்…

இந்த யூடி எப்டி இருக்குன்னு கமெண்ட்ஸ் போட்டு போங்க…🥰♥️♥️

போன யூடிக்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊 ♥️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
39
+1
2
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    6 Comments

    1. மூன்று பேரும் கியூட். கருப்பு மதுரா கண்டுக்க மாட்டேங்கிறான்.