நீல கண்களின் காதல் பயணம் 💙
பாதி வழி வரை சென்றவன் என்ன நினைத்தானோ இசையை ஒரு ஆட்டோ பிடித்து கயல் வீட்டிற்கு வர சொல்லிவிட்டு மீண்டும் அவளின் வீட்டிற்கே சென்றான் அர்ஜூன்.
உள்ளே சென்றவள் ‘அப்பாடா’ என்று ஷோபாவில் அமர்ந்து சற்று இளைப்பாற, அதிரடியாய் அழைத்தது அழைப்பு மணி.
‘அதுக்குள்ள யாருடா அது ‘ என்று எண்ணியவள் கதவை திறக்க அட்டகாசமாக நின்றிருந்தான் அர்ஜூன்.
” அர்ஜூன் நீயா? இப்போ தான போனீங்க.”
” ம்ம், நீ தனியா இருப்பியா, அதா மனசு கேட்காம வந்துட்டேன். இசை வந்துட்டு இருக்கா அவ வந்ததும் போயிடுவேன்” என்றவனை என்னதான் சொல்வது.
இந்தக்காலத்தில் யார் இப்படியெல்லாம் பெண்களுக்கு பாதுகாப்பாய் இருப்பார்கள்.அதுவும் யாரென்றே தெரியாத ஒரு பெண்ணிற்கு.
மென்னகை புரிந்தவள் உள்ளே அழைத்து சென்று, அவனை அமர சொல்லிவிட்டு சமையலறை சென்றாள் காபி கலப்பதற்கு.
இவன் வீடு முழுவதும் சுற்றி பார்க்க உறைந்து நின்றான் சிலைபோல அங்கிருந்த படத்தை பார்த்து.
திடீரென பார்த்ததும் ஸ்தம்பித்து நிற்கும் தோற்றம்.
நீல விழிகள் கொண்ட சிறுவனின் புகைப்படம் அது.
பார்த்தவனின் கண்கள் அதை நம்ப மறுக்க, நிஜமென நின்றிருந்தன அப்புகைபடம் அவன் முன்னிலையில்.
அதனை அர்ஜூன் தடவி கொடுத்துகொண்டிருக்க கையில் காபியுடன் வந்தாள் பெண்ணவள்.
அவனை பார்த்தவள்
” என்ன ஆச்சி அர்ஜூன், இதை பார்த்து இசை தான் இடி விழுந்த மாதிரி நின்னான்னா நீ சிலைமாதிரி சமைஞ்சி நிக்கிற. ஏன்?”
புருவ சுழிப்புடன் அவளை பார்த்தவன்
” யார் நீ?” என்று வினவிட
” ஹே, என்ன விளையாடுறியா? நான் யாருனு உனக்கு தெரியாதா?” கிண்டல் தொனியில் அவள் கேட்க,
அவளை கூர்மையாக பார்த்தவன்
” நீ யார்னு கேட்டேன்?”.
” அர்ஜூன் என்ன திடீர்னு இப்பிடி கேட்கிற? என்ன ஆச்சி?”
” இது யாருனு உனக்கு தெரியுமா?” என்றான் அப்புகைபடத்தை பார்த்து.
” ம்ம். இது என்னோட சின்ன வயசு கிரஷ். அவனுக்காக தான் நான் இங்க வந்ததே. பல வருஷம் ஆச்சி இவன பார்த்து. இப்போ எப்படி இருப்பான்னு கூட தெரியாது. பட் எப்படியாவது கண்டுபிடிக்கணும்னு ஆசை. ஒரே ஒரு தடவ இவன பார்த்தாகூட போது. அதுக்குஅப்புறம் எனக்கு என்ன ஆனாலும் கவலை இல்ல.”
அவளின் உணர்வுகள் என்னவென பிரித்தறிய முடியாது குழம்பி நின்றிருந்தான் அர்ஜூன்.
யார் இவள் என்ற கேள்வி மட்டும் அவனுள் ஓடி கொண்டே இருக்க, அவள் சொன்ன கடைசி வரியில் தான் சுயம் பெற்றான்.
‘எனக்கு என்ன ஆனாலும் கவலை இல்ல,’ என்றால் என்ன அர்த்தம்?.
என்ன பிரச்சனை இவளுக்கு?
ஏன் இப்படி இருக்கிறாள்?……
மிதமிஞ்சிய அனைத்து கேள்விக்கும் பதில் அவளிடம் மட்டுமே.
” இந்த போட்டோ உனக்கு எப்படி கிடைச்சது?”
” நீ என்ன இத பத்தியே கேட்டுட்டு இருக்க? உனக்கு இவன பத்தி ஏதாவது தெரியுமா?”
ஆர்வமாக அவள் கேட்க அவனோ நான் கேட்டதற்கு பதில் என்ற நிலையில் நின்றிருந்தான்.
” உனக்கு இப்போ என்ன வேணும்?”
அவன் பார்வை தாங்காமல் அவள் கேட்க அவனோ,
“இந்த போட்டோ பத்தி சொல்லு ” என்றான் மென்மையாக அவளின் கண்களை பார்த்தவண்ணம்.
அதில் என்ன கண்டாலோ நினைவுகள் மீட்டிட. கண்களின் ஓரம் சிறுதுளி நீர்.
அதை பார்த்தவன் அவள் அருகில் சென்று அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன் அவளின் கண்களை நேருக்கு நேராக பார்த்து,
” எதைநினைச்சும் கவலை படாத , நான் இருக்கேன் உனக்கு. கலங்காத விழி . எதையும் மறைக்காம சொல்லு, எனக்காகவும் உனக்காகவும். பிளீஸ் டீ.”
இதுவரை அறியாபெண் தெரியா நிலை என்று இருந்தவன் இப்போது தன்னால் உரிமையுடன் நோக்கினான் அவளை.
அதற்கு காரணம் அந்த போட்டோ.
ஏனெனில் அது அர்ஜுனின் சிறுவயது படம்.
அதற்கு அவள் கூறிய விளக்கமும், அவளின் கிரஷ் என்ற விழிப்பும் , அவனின் மனதில் புதிதாக வேரூன்றி இருந்த காதலும் என அனைத்தும் ஒரு காரணம் தான்.
யாருமின்றி தன்னந்தனியாக இருந்தவள், பாசத்திற்கு ஏங்கி வாடியவள் இப்போது மழையென அன்பும் பாசமும் ஒருவன் பொழிகையில் அவளும் என்னதான் செய்வாள் பாவம்.
இருப்பினும் அவளின் நிலையை கருதி,
” எனக்குன்னு யாருமே வேண்டாம். எல்லாரும் தள்ளியே இருங்க. என்னால உங்களுக்கு எதுவும் ஆகிட கூடாது. போயிடு அர்ஜூன். போ” என்று மண்டியிட்டு அழுகையில் கரைந்தாள் மங்கை.
அவளின் அழுகை அவனையும் தாக்கியதோ, கடிவாளம் இட்ட தன் மனதின் கட்டினை அவிழ்த்து விட்டவன், நொடியும் யோசிக்காது இழுத்து அணைத்திருந்தான் அவளை.
கன நேர மின்னல் இருவரிலும் வெட்டி செல்ல அதிர்ந்து நின்றாள் கயல்.