நீல கண்களின் காதல் பயணம் 💙
காலையில் இருந்து நடந்தவை அனைத்தும் எதிர்பாராதது. நந்தினி சொன்ன வார்த்தைகள், அவளின் பேச்சு என ஏதும் அவனுக்கு புரியாத நிலை. கயல்விழி அனாதையா?… அவளின் தாய் தந்தை இல்லையா?.. அவர்களுக்கு என்ன ஆனது?..அப்படியெனில் அவள் யாரோடு இருக்கிறாள்?.. அவளின் அப்பா அப்பா என்ற கதறல், அதன் அர்த்தம் என்ன?.. யார் இவள்?.. இவளின் உடல்நிலை சரியில்லை என்று தன் போனுக்கு எப்படி மெசேஜ் வந்தது?…
” அடேய் என்ன டா நடக்குது இங்க”…என ஏதேதோ எண்ணத்தில் சுழன்ற தன் மனதை அமைதிப்படுத்தும் வழி தெரியாமல் தவித்தான் அர்ஜூன்.
அகிலன் வேறு ரிப்போர்ட் வரும்வரை காத்திருக்க சொன்னதும், கயல்விழி இன்னும் விழி திரவாமல் இருப்பதும் வேறு மேலும் பதட்டத்தை கொடுக்க, தன்னைப்போல் அவன் கைகள் போனில் அழைத்தது என்னவோ இசையின் எண்ணிற்குதான்.
அங்கே இசையோ நடந்தவை கனவா? இல்லை நிஜமா? என்ற குழப்பத்தில் அமர்ந்திருந்தாள். அவளை பெண் பார்க்க வருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து வந்த மணிகண்டன் அவளிடம்,
” உனக்கு நான் பார்த்த மாப்பிள்ளை ஓகே வா இல்லையான்னு தயங்காம சொல்லுமா. உன்னோட விருப்பம் ரொம்பமுக்கியம்.” என்றார்.
“ம்ம்… சரி ப்பா “. என்றாலே தவிர அவளின் மனதில் இருப்பதை தெரிவிக்காமல் சென்றுவிட்டாள் அவளின் அறைக்கு. மனதில் எழுந்த வருத்தத்தை வெளிக்காட்டிக் கொள்ளமல் இருக்கையில் சென்று அமர்ந்தார் மணி. ஏனெனில் அவருக்கு மகளின் விருப்பம் தெரியும். தன்னிடம் மகள் மனம் திறக்கவில்லை என்பதே அவரின் கவலை. இருப்பினும் தந்தையாக அவரின் கடமையாய் அவர் கனகச்சிதமாக செய்திருந்தார்.
மாப்பிள்ளைவீட்டார் வந்துவிட்டனர். கையில் காபி ட்ரே உடன் வள்ளி இசையை வெளியே அழைத்து வர இருவருக்கும் முதல்கட்ட அதிர்ச்சி. அங்கு மாப்பிள்ளை வீட்டாராக அமர்ந்திருந்தது கவினின் தாய் கனகா மற்றும் தந்தை ருத்ரன்.
“வாடி வாயாடி. என்ன காபி குடுக்குற ஐடியா இருக்கா இல்லயா? இரண்டுபேரும் சிலை மாதிரி நிக்கிறீங்க”
” அத்தை, நீங்க……” இசையின் தடுமாற்றம் கண்டு புன்னகைத்தவர்,
“இன்னும் எத்தனை நாள் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை ஆட போறிங்க.போதும். இதோட நிறுத்திக்கலாம். எனக்கும் சண்டை போட மருமகள் வேணுமே. அதான் சும்மா அத்தையை உறவுமுறை அத்தையா மாத்திக்கலாமுனு வந்துட்டோம்.”
” அத்தை….”கண்களில் கண்ணீருடன் அவர்களை ஏறிட்டு பார்த்தவள் தந்தையையும் திரும்பி பார்க்க, இத்தனை நாள் இருந்த கடுமையை ஒதுக்கி வைத்தவராக புன்னகை முகத்துடன் அமர்ந்திருந்தார்.
அழுகையினூடே ஓடி சென்று அவரை அணைத்தவள்
” சாரி பா.நான் சொல்லிருக்கணும். மன்னிச்சிடுங்க”.
” இல்ல மா இசை. நான்தான் உன்கிட்ட அன்பா பேசுனதே இல்லையே.அப்புறம் எப்படி உனக்கு என்கிட்ட பேச மனசு வரும். சாரி மா. “
“ஐயோ அப்பா . நீங்க போய் சாரிலாம்…… பிளீஸ் ப்பா சொல்லாதீங்க.”
“அர்ஜூன் மட்டும் இல்லனா நான் உன்னை புரிஞ்சிக்கிட்டு இருக்க மாட்டேன் மா. அவன் சொன்னதால் தான் மாப்பிள்ளை வீட்டாளுங்களை வரவேண்டாம்னு சொல்லிட்டு கனகாவை வர சொன்னேன். அவனுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும். சந்தோஷமா இரும்மா” என்றிட அடுத்தகட்ட அதிர்ச்சி அவளுக்கு. அர்ஜூன் தான் இதற்கு காரணமா? தனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் அவனுக்கு என்ன கைமாறு செய்வது என மனதோடு பேசிக்கொண்டாள் இசை.
அடுத்து என்ன?… அத்தை மாமாவுடன் அரட்டை தான். அதனிடையே இந்த விஷயம் கவினுக்கு தெரியுமா என்றும் கேட்டு தெரிந்துகொண்டாள். இவர்கள் திருமணம் பேசியது கவினுக்கு தெரியாததால் அவன் இப்பொழுது என்ன செய்து கொண்டிருப்பான் என அவள் கற்பனை குதிரையை ஓட விட , அதில் கவின் தேவதாஸ் போலவே சுற்றிக்கொண்டு இருந்தான் என்றால் இசைக்கோ சிரிப்பு தாங்கவில்லை.
அனைவரும் அமர்ந்து பேசி சிரித்து கொண்டிருக்க இசைத்தது இசையின் அலைபேசி.
அர்ஜூன் என திரை ஒளிர்ந்திட, அழைப்பை ஏற்றவள்,
” பங்கு இப்போவே உன்னை பார்க்கணும் போல இருக்கு டா”
” அதையே தான் நானும் சொல்ற. சீக்கிரமா கெளம்பி அகிலன் ஹாஸ்பிடலுக்கு வா. இட்ஸ் எமர்ஜென்சி இசை, குயிக் பாஸ்ட்.”
” என்னடா சொல்ற? எமர்ஜென்சியா?… யாருக்கு டா?. கயல்… கயலுக்கு ஏதாவது ஆபத்தா……. அர்ஜூன். Please சொல்லு டா பயமா இருக்கு.”
” நீ நேர்ல வா பங்கு சொல்றேன்.” என அழைப்பை துண்டித்தவனுக்கு இசை, கயலுக்கு ஆபத்தா என வினவியது மேலும் குழப்பத்தையே கொடுத்தது.
” யாருமா போன்ல? கயல் நல்லா இருக்கா தான” என பதட்டமாக மணி வினவ,
“தெரியல ப்பா அர்ஜூன் சீக்கிரமா அண்ணாவோட ஹாஸ்பிடலுக்கு வர சொல்றான். ‘எமர்ஜென்சி இசை’ன்னு சொன்னான்.நான் போய் பார்த்துட்டு வந்துடுறேன் ப்பா.”
“சரி மா. போயிட்டு கால் பண்ணு ” ஒரு தலை அசைப்புடன் வெளியேறினாள் இசை.
” யாருங்க அந்த கயல்? நீங்க ஏன் இவளோ பதட்டமா இருக்கீங்க?.” என வள்ளி கேட்ட கேள்விக்கு மௌனமே பதிலாக அவரை பார்த்திருந்தார் மணி.
அவரின் பார்வையிலேயே அவருக்கு புரிந்துவிட்டது இது முக்கியமான மறைக்கப்படவேண்டிய ரகசியம் என்று. மேலும் எதையும் கேட்காமல் அவர் உள்ளே சென்றிட மணிக்கு தான் நிலைக்கொள்ளவில்லை.
தனது இருசக்கர வாகனத்தில் மருத்துவமனை வந்தவள் நேராக அர்ஜுனிடம் சென்றிட அவன் கலங்கிய கண்களும் கசங்கிய சட்டையுமாக நின்றிருந்தான்.
” பங்கு என்னடா ஆச்சி? நீயேன் டா இப்படி இருக்க?. பங்கு அழுதியா ?”
அடுத்தகட்ட அதிர்ச்சி அவளுக்கு. இதுவரை அர்ஜூன் யாருக்காகவும் அழுதோ கண்கள் கலங்கியோ இசை பார்த்ததில்லை. ஏதேனும் ஆபத்தாக இருப்பினும் கலங்கி அமர்பவன் அல்ல அர்ஜூன். அதிலிருந்து எப்படி வெளியே வருவது என யோசித்து செயல்படுபவன். ஆனால் இன்று இந்த தோற்றம் இசைக்கு வேறு செய்தியை புரியவைத்திட , நீயே சொல் என்பதை போல அவனையே பார்த்து நின்றாள் இசை.
” இசை விழி….. விழிக்கு என்னமோ ஆயிடுச்சு. அப்பா அப்பான்னு சொல்லிட்டே மயங்கிட்டா. எனக்கு என்ன பண்றதுனே தெரியல இசை” என்றவனுக்கு அவளின் கதறல் இப்போதும் அவன் கண்களை கலங்க செய்தது.
கண்களில் நீர் கோர்த்திருக்க அவன் அணிந்திருந்த ஐ லென்ஸ் சிறிது நகர்ந்து கண்களை உறுத்த “இஸ்” என லென்ஸ் இருப்பதை மறந்து கண்களை அவன் தேய்த்திட, அது அவன் கையோடு வெளியே வந்து கீழே விழுந்துவிட்டது.
அதை பார்த்தவன் மருகண்ணில் இருந்த லென்ஸ் ஐயும் கழட்டி போட்டுவிட, அவனின் நீல நிற கண்கள் கடலை போல் காட்சியளித்தது.
ஆம்.
அர்ஜுனுக்கு அவனின் தாயை போல நீல நிற கண்கள். மற்றவர்களிடமிருந்து அவன் மட்டும் எப்போதும் தனித்து தான் தெரிவான்.
பல நேரங்களில் எல்லோரும் அவனின் கண்களை கண்டு ஆச்சர்ய படுவது அவனுக்கு அசூசையாக இருக்கும். இருப்பினும் எவ்வித அலட்டலும் இல்லாமல் அனைவருடனும் சகஜமாகதான் இருப்பான். அவனின் கண்களுக்காகவே காதலை சொன்ன பெண்கள் பலர். அவ்வளவு அழகு அவனின் கண்கள்.
அவன் விரும்பும் சில நேரம் மட்டுமே இவ்வாறாக லென்ஸ் அணிவதை பழகியவன்,கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து லென்ஸ் அணிந்திட அவனின் கண்கள் புதிதாய் வந்த மாணவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது.
இசைக்கு இப்பொழுது தான் ஒன்று நினைவு வந்தது. அது கயலின் வீட்டில் அவள் கண்ட நீல கண்களை உடைய சிறுவனின் போட்டோ.
இசையை பார்த்தவன் அவள் ஏதேனும் ஆறுதல் சொல்வாள் என அவன் நினைக்க அவளோ அசைவின்றி நின்றிருந்தாள்.
“இசை….” என அவள் முன் சொடுக்கிட்டதில் நிகழ் உணர்ந்தவள்,
” அர்ஜூன் நீ கயலை எங்கயாவது பார்த்திருக்கியா? உன்னோட சின்ன வயசுல. ஐ மீன் உனக்கு ஒரு எட்டு வயசு இருக்கும்போது”
” இல்லையே பங்கு.எனக்கு அப்படியேதும் ஞாபகம் இல்ல.அதுவும் இப்போ சம்மதமே இல்லாம ஏன் கேட்கிற?.”
” கண்டிப்பா நீ அவள பார்த்திருக்க பங்கு. நல்லா யோசிச்சு பாரு. நீங்க பேசியிருக்கீங்க. ”
” எப்படி இவளோ ஸ்ட்ராங் ஆ சொல்ற “.
“அது அவளோட வீட்டுல….” என அவள் சொல்லும்போதே அகிலன் வந்துவிட சொல்ல வந்ததை பாதியில் விட்டு அவன் பக்கம் திரும்பினாள் இசை.
” அண்ணா என்னடா ஆச்சி கயலுக்கு ? அவ இப்போ எப்படி இருக்கா?”
” ஹே வாலு. ஜெஸ்ட் கூல். நீ இவன விட டென்ஷன் ஆகுற. சரி அந்த பொண்ணு யாரு?.”
” இந்த இயர் தான் எங்க கிளாஸ்ல ஜாயின் பண்ணிருக்கா”.
” ம்ம்…. அவளோட பேரண்ட்டுக்கு இன்ஃபோம் பண்ணிட்டீங்களா?”
” இல்ல டா. அவளுக்கு யாரும் இல்ல. அப்பா அம்மா இறந்துட்டங்களாம். சித்தப்பா சித்தி தான். அவங்களும் இங்க இல்ல. அமெரிக்கால இருக்காங்களாம். அவங்களோட பி.எ தான் குடும்பத்தோட இவ கூட இருந்தாங்களாம். அப்புறம் சுவேதான்னு ஒரு ஃப்ரெண்ட் இருக்கிறதா சொன்னா. அவ்ளோதான் தெரியும்.ஏன்டா” இசை சொன்னதை கேட்ட அர்ஜுனுக்கு என்ன உணர்வென புரியாத ஒரு மாயை. தான் ஏன் இவ்வாறு உணர்கிறோம் என்று குழம்பியவன் அகிலன் பேச்சில் மீண்டும் கவனத்தை அவன் பக்கம் திருப்பினான் அர்ஜூன்.
” அந்த பொண்ணுக்கு உடம்புல எந்த பிரச்சனையும் இல்ல. மனசுல தான் பிரச்சனை. அதிகமான ஸ்ட்ரெஸ் ஆல தான் மயங்கியிருக்காங்க. அண்ட் ரொம்ப வீக்காவும் இருக்காங்க. அப்புறம்,….. “
” சொல்லுடா….”
“ஏதோ ஒண்ணு அவங்கள எஃபெக்ட் பண்ணிருக்கு, அந்த ஒரு விஷயத்துல அவங்க ரொம்ப பயந்திருக்காங்க. அது அவங்க ஆழ்மனசுல பதிஞ்சிருக்கு.
மே பீ அவங்க அப்பா சம்மந்தப்பட்ட விஷயமா கூட இருக்கலாம். ஏன் சொல்றேன்னா அவங்க அப்பா அப்பான்னு சொல்லிகிட்டே தான் மயங்கிருக்காங்க. அந்த பியர் மேல வந்து அவளோட ஸ்ட்ரெஸ்ஸ அதிகமாக்கி இருக்கலாம். பெட்டர் அவங்கள கவுன்சிலிங் அனுபுறது தான்.
சுவாதி கிட்ட அனுப்புங்க. சுவாதி பார்த்துபாங்க” என்றான் அகிலன்.
” பட் அகி, அவளோட அந்த எக்ஸ்பிரஸ்ஷன் அண்ட் எமோஷன் எல்லாம் ஒரு மாதிரி வய்லெண்ட்டா இருந்துச்சு, அதை எப்படி சொல்றதுன்னு தெரியல.”
” அர்ஜூன் எதுவா இருந்தாலும் அந்த பொண்ணு வாய்திறந்தால் தான் சொல்ல முடியும். சோ கவுன்சிலிங் அனுப்புங்க மத்ததெல்லாம் சுவாதி பார்த்துபாங்க. உங்க தங்கச்சி கிட்ட அனுப்புறத்துல உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா?.” என அகிலன் கேட்டிட இப்போது தான் மெல்லிய தெளிவும் மெல்லிய சிரிப்பும் அவனின் முகத்தில் எட்டி பார்த்தது.
“என்ன அர்ஜூன் ரொம்ப டென்ஷன் ஆகிட்ட போல. ரிலாக்ஸ் மேன். நீங்க போய் பேஷன்ட்ட பார்க்கலாம். பட் டிஸ்ட்ரப் பண்ண வேண்டாம்” என அவன் அடுத்த நோயாளியை பார்க்க சென்றிட இவர்கள் கயல்விழியை பார்க்க சென்றனர்.