Loading

நினைவுகள் – 40

குழந்தையை சுந்தரியின் கையில் கொடுத்து விட்டு கிளம்பிய ஆதவனையும், விஸ்வரூபனையும் பார்த்து முறைத்தாள் ராதிகா.

” ஹே! ராதா நான் என்ன பண்ணேனு முறைக்குற. உன் ஃப்ரெண்டை யார் இப்போ போக சொன்னா. ஓவரா பண்றான். அவனை வந்து ஒழுங்கா சாப்பிட சொல்றதை விட்டு என் கிட்ட எகிற வேண்டியது.” என்று விஸ்வரூபன் சத்தமாக முணுமுணுக்க.

அதைக் கேட்டதும் ஆதவனின் முகம் மலர ராதிகாவின் மறுபக்கத்தில் அமர்ந்தான்.

ராதிகாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

தனக்காக, தன்னவன் இறங்கி வந்திருக்க. ராதிகாவிற்கும் தான் வேற என்ன வேண்டும்.

ஒருபக்கம் உயிரானவனிருக்க மறுபக்கம் உற்ற தோழனிருக்க நிறைவுடன் உணவருந்தினாள் ராதிகா.

சுந்தரியும், சண்முகமும் தன் மகளின் முகத்தில் தெரிந்த நிறைவிலே நெகிழ்ந்துப் போயினர்.

இவர்களது மகிழ்ச்சி என்றும் குன்றாமலிருக்க தஞ்சை பெருவுடையார் அருள் புரிவார்.

***********

இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவந்திகாவின் பிறந்தநாள்… சென்னையில் இருந்து ராதிகாவின் குடும்பத்தார் தஞ்சாவூருக்கு வந்திருந்தனர்.

 சுந்தரி, சண்முகமும் பரபரப்பாக இருந்தனர்.

 இறந்து போன மகளின் நினைவாக ஆரம்பித்த அன்னதானத்தோடு, இப்போது பேத்தியின் பிறந்தநாளுக்காக அபிஷேகமும் ஏற்பாடு செய்தனர்.

ஆம் அனன்யாவின் மகள் அவந்திகாவின் பிறந்தநாள். அவந்திகா தான் அவர்களுடைய முதல் பேத்தி. ராதிகாவிற்கு பிறந்த பெண் கூட அடுத்து தான். அந்த குழந்தைக்கு அனன்யா என்று பெயர் வைத்தனர். மீண்டும் அந்த வீட்டிலே வந்து பிறந்து விட்டாள் அந்த வீட்டு இளவரசி.

போன வருடம் தான் அனன்யா பிறந்திருந்தாள். அதனால் கோவிலுக்கு ஆதவனும், அவந்திகாக் குட்டியும் மட்டுமே வந்தனர்.

இந்த வருடம் மொத்த குடும்பமும் வந்து அபிஷேகம் ஆராதனை பார்த்தனர்.

 பிறகு பெரியவர்கள் அன்னதானம் வழங்க சென்று விட …

குழந்தைகள் ஓடி விளையாடினர்.

 ஒரு வயது குழந்தையான அனன்யா, ” அக்கா… அக்கா…” என்று அவந்திகாவின் பின்னேயே தத்தக்கா, பித்தக்காவென ஓடியது.

” பாப்பா… ” ஓடக் கூடாது. கீழே விழுந்தால் வலிக்கும் என அந்த பெரிய மனுஷி அவந்திகா, தன் மழலைக் குரலில் கூறிக் கொண்டிருந்தாள்.

 அவர்கள் இருவரையும் கவனமாக பார்த்துக் கொண்டிருந்தான் ஆதவன்.

இப்போது ஆதவனும் அவர்கள் வீட்டில் ஒருவனாக மாறிவிட்டான்.

அவனுடைய அப்பா, அம்மா உருவாக்கிய ஹாஸ்பிடலைப் பார்த்துக் கொண்டாலும், இவர்களது சுகம் ஆஸ்பத்திரியிலும் வந்து கேஸ்களை கவனிப்பான்.

அவனுடைய பெற்றோர்கள் வழக்கம் போல, “உன் இஷ்டம்.” என்று ஒதுங்கிக் கொண்டனர். அவர்கள் மாறவே இல்லை அதை அவன் எதிர்பார்க்கவும் இல்லை.

 அவனுக்கு தேவையான அன்பு இப்பொழுது திகட்டத், திகட்ட கிடைக்கும் போது அவனுக்கு வேறு என்ன தான் வேண்டும்.

அவன் எதிர்ப்பார்த்த தாயன்பு, கௌரியிடம் கிடைக்கிறது. கௌரிக்கும், அவனுக்கும் அப்படி ஒரு பிணைப்பு. அவர்களுக்கிடையே உள்ள பாசத்தை எல்லோரும் வியந்து தான் பார்க்கின்றனர்.

இரண்டு வருடத்திற்கு முன்பு ஆதவனுக்காக ராதிகா கௌரியிடம் பேசுவதாக, விஸ்வரூபனிடம் சொல்லியிருந்தாள். ஆனால் அவள் பேசுவதற்கு முன்பே ஆதவனே சென்று பேசியிருந்தான்.

இவர்கள் தஞ்சாவூருக்கு மறுவீட்டுக்கு போய் விட்டு வந்த அடுத்த நாளே கௌரியை ஹாஸ்பிடலில் சென்று சந்தித்தான் ஆதவன்.

‘ ஆதவனைப் பார்த்த கௌரி முகம் வெளுக்க நின்றாள்.

” அத்தை… இப்படி உங்களை கூப்பிடலாமா என்றுக் கூடத் தெரியலை. ஆனால் என் பேபிமாவோட அம்மா என்ற உரிமையில் கூப்பிடுறேன்.” என்று அவன் கூறியதுமே, மகளின் நினைவில் கண் கலங்கினார்.

“அத்தை அழாதீங்க. உங்களை கஷ்டப்படுத்துறதுக்காக நான் வரலை. ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ஃப்.” என்றவன் சுற்று முற்றும் பார்த்தான்.

எங்கே தான் பேச வந்ததை முழுவதும் கூறுவதற்குள் யாராவது வந்து விடப் போகிறார்கள் என்று பயந்தான்.

கௌரி ஹாஸ்பிடலில் இருப்பதால் விரைவிலே சுதாரித்துக் கொண்டு கண்களைத் துடைத்துக் கொண்டார்.

அதைப் பார்த்து நிம்மதியடைந்த ஆதவனோ,”எங்க வீட்டு ஆளுங்க பண்ணது தப்பு தான். அதுவும் எங்க அத்தை பண்ணியது மன்னிக்க முடியாத குற்றம். அதுக்காக தண்டனையையும் அனுபவிச்சிட்டாங்க.” என்று அவன் ஏதோ கூற வருவதற்குள்,

கை நீட்டித் தடுத்த கௌரி, “ அவங்க ரெண்டு பேரும் இறந்துட்ட காரணத்தால எனக்கு பண்ணத் துரோகம் இல்லைன்னாகாது.” என்று இறுகிய குரலில் கூறினார் கௌரி.

“தெரியும் அத்தை. அதை நான் நியாப்படுத்தவும் இல்லை. உங்க வாழ்க்கையைத் தட்டி பறிச்சுட்டு, வெளிநாட்டுல செட்டிலாகணும்னு நினைச்சாங்க. உங்கக் கண்ணீருக்கு கடவுள் விமான விபத்து மூலமா தண்டிச்சுட்டாரு.

அதெல்லாம் பாஸ்ட். அவங்களை வச்சு எங்களை ஜட்ஜ் பண்ண வேண்டாம். ஏன்னா நாங்க எந்த தப்பும் செய்யலை. அதுவும் எங்க ஆகாஷ் ரொம்ப நல்லவன். அனு யாருன்னு தெரியாமலே தான் விரும்ப ஆரம்பிச்சான்.

அவங்க ரெண்டு பேரும், கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம். அவசரப்பட்டு கடவுள் கிட்ட போயிட்டாங்க.

எனக்கு இருந்த உண்மையான உறவு அவன் தான். அவனும் என்னை விட்டு போகவும், ரொம்பவே மனதளவுல நொறுங்கி போயிட்டேன்.

ஏனோ தானோ என்று வாழ்க்கை போயிட்டு இருக்கும் போது தான், மாசமா இருக்குற பேபிமாவைப் பார்த்தேன்.

என் அண்ணன் குழந்தை தான் எனக்கு நன்றாக புரிந்தது.

அவங்க ரெண்டு பேரையும் என்னை நம்பி எங்க அண்ணன் விட்டுட்டு போயிருக்கான். அவங்களை நல்லா பார்த்துக்கணும்னு நினைச்சேன்.

பேபிமாவும் என்னை ஏமாத்திட்டா.

எனக்குன்னு மீதி இருக்குற ஒரே உறவு குட்டிப் பாப்பா தான். பழசை மனசுல வைச்சுக்கிட்டு, குட்டிப்பாப்பாவை பார்க்க மறுத்துடாதீங்க. எனக்குன்னு வேற யாரும் இல்லை. நான் வேணும்னா அவங்க செஞ்சதற்காக மன்னிப்பு கேட்குறேன்.” என்று கண் கலங்க.

‘ யாரோ செய்த தவறுக்கு இவன் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். இவனுக்கு உள்ள பக்குவம் எனக்கு ஏன் வராமல் போனது.’ என்று தனக்குள் எண்ணியவள், ” நீ ஏன் பா மன்னிப்பு கேட்குற… எனக்கு என் பிரச்சினை மட்டுமே பெரிசா தெரிஞ்சது. என் பொண்ணைப் பத்தி நினைக்கலை. ” என்றவரும் அழ.

ஆதி தான் அவரை சமாதானம் செய்தான்.’

அதற்குப் பிறகு இருவருடைய நெருக்கத்தைப் பார்த்து மற்றவர்கள் வாயில் விரல் வைக்காத குறை தான்.

 இதோ இன்றுக் கூட ஆதவனுக்கு ஏத்த பொண்ணு கிடைக்கவில்லை என்று கவலையில் கடவுளை படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறார் கௌரி.

விளையாடிக் கொண்டிருந்த அனன்யா திடீரென்று அழ…

” பேபிமாக்கு என்னாச்சு ஏன் அழறீங்க.” என்றான் ஆதவன்.

” அம்ம்மா…. ” என.

” அம்மாக் கிட்ட போகணுமா… சரி அழாதே பேபி மா. வாங்க அம்மாக் கிட்ட போகலாம்.” என்ற ஆதவன் இரு குழந்தையையும் இரண்டு பக்கம் தூக்கிக் கொண்டு நடந்தான்.

அவந்திகா வழக்கம் போல அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். அவள் செய்வதைப் பார்த்து, ” நானு … ” என்று அழுதுக் கொண்டிருந்த அனன்யாவும் முத்தமிட…

சிரித்துக் கொண்டே எல்லோரும் இருக்குமிடம் வந்தான்.

” எங்க இவங்க அம்மா? அழ ஆரம்பிச்சுட்டா.” என்றான் ஆதவன்.

” உன் கூட இல்லையா? அவங்க ரெண்டு பேரும்…” என்று வினவினார் ரஞ்சிதம்.

” இல்லை மா.”

” எங்க அண்ணனைக் கூட்டிட்டு போய், ஃபோட்டோ எடுக்க சொல்லிப்படுத்தி எடுக்கப் போறா. இந்தக் கோவிலுக்கு வந்தா, கோபுரம் பிண்ணனியில் அழகாத் தெரியணும். நானும் அழகாத் தெரியணும் என்று அவ செய்யுற அலப்பறை தாங்க முடியாது.” என்று ஸ்வேதா சொல்லி சிரிக்க.

” ஆமாம். அப்படித்தான் பண்ணுவா.” என்று ஒத்து ஊதினார் சுந்தரி.

” என் பொண்ணை வம்பிழுக்கலைண்ணா உனக்குக் தூக்கமே வராதே.”என்று சப்போர்டுக்கு வந்தார் சண்முகம்.

” அதான… இவங்க ரெண்டு பேருக்கும் இதே வேலை.” என்றான் விக்ரம்.

இவர்கள் பேசுவதையெல்லாம் புன்சிரிப்புடன் கேட்டுக்கொண்டிருந்தார் கிருஷ்ணன்.

“நான் ஒன்னும் சும்மா சொல்லை. வேணும்னா போய் பார்ப்போமா.” என்றாள் ஸ்வேதா.

” பாப்பா இல்லாமல், நீ சரி இல்லை. அவ இருந்திருந்தா, அவளோட ஸ்வீட்டியை கிண்டல் பண்றதுக்கு உன்னை வைக்க மாட்டா.”

” நல்லவேளை, அவ அவங்க ரெண்டு பாட்டிக்கிட்டேயும் இருந்துட்டு வரேன் என்று போயிருக்கா. இல்லைன்னா என்பாடு அவ்வளவு தான்.” என்றாள் ஸ்வேதா.

விக்ரம் ஸ்வேதா வீட்டில் அவர்கள் காதலை ஏற்றுக்கொள்ள, விகர்தணா அவர்கள் பாட்டி வீட்டிற்குச் சென்றிருக்கிறாள்.

” சரி நேரமாயிடுச்சு… வாங்க நாம அப்படித் தானே போகணும். அவங்க ரெண்டு பேரும் என்ன தான் செய்யுறாங்கன்னு பார்த்துடுவோம்.” என்றார் ரஞ்சிதம்.

” சரி… ” என தலையாட்டிய மொத்த குடும்பமும், வெளியே வந்து பார்த்தால் ஸ்வேதா சொன்னது போல் ஃபோட்டோ தான் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

ராதிகாவைப் பார்த்து சுந்தரி தான் கடிந்துக் கொண்டார். ” ராது மா… கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா… புள்ளைங்களையும் விட்டுட்டு, வேலையும் பார்க்காமல் இருக்கீயே.” என.

விஸ்வரூபன் சிரிப்புடன், “விடுங்கத்தை… இங்கே வந்ததான் அவ ஃப்ரீயா இருப்பா. அங்கே அவ பிசியான கார்டியாலஜிஸ்ட். ” என.

” அதுவும் சரிதான்.” என தலையாட்டினார் சுந்தரி.

தன் அம்மா திட்டியதையெல்லாம் காதிலே வாங்காமல், ” இங்கே பாருங்க. நாங்க ரெண்டு பேரும் கோவில் பிண்ணனியில தெரியுற மாதிரி ஃபோட்டோ எடுத்திருக்கோம் நல்லா இருக்கா?” என்று சின்னப்பிள்ளை போல வினவ.

எல்லோரும் அவளைப் பார்த்து சிரித்தனர்…

” எதுக்கு சிரிக்கிறீங்க?” என்றாள் ராதிகா

” அதை விடு‌ மா. அவங்களுக்கு வேலை இல்லை. சும்மா உன்னை கேலி செய்யுறாங்க. நீ என்னைக்கும் இதே மாதிரி சந்தோஷமா இருக்கணும். இந்த கோவில் எப்படி காலத்தால் அழியாமல் கம்பீரமாக இருக்குதோ, அதே மாதிரி நீயும், என் பையனும் மகிழ்ச்சி குன்றாமல், சந்தோஷமாக வாழணும். எங்க எல்லோருடைய ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு.” என்று ரஞ்சிதம் வாழ்ந்த.

எல்லோரும் அமோதித்தனர்.

சுந்தரியும், சண்முகமும் மனம் நிறைய மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

ராதிகாவோ, வெட்கத்துடன் விஸ்வரூபனைப் பார்க்க… அவனோ எல்லையில்லா காதலுடன் பார்த்தான்.

இதைப் பார்த்து கிருஷ்ணனோ மனதிற்குள் அனன்யாவிற்கு நன்றி கூறினார்.

அனன்யாவிற்காக தன் அன்னை செய்த மாபெரும் தவறை, அனன்யா சரி செய்திருந்தாள். தான் உயிரோடு இருக்கப் போவதில்லை என்று உணர்ந்தவளோ, யாரும் அறியாத விஸ்வரூபனின் காதலியை இங்கு வர வைத்தது மட்டும் அல்லாமல், தன்னிடமும் தெரிவித்ததால் தான், இன்று தன் மகன் மனைவி, குழந்தை என சந்தோஷமாக இருக்கிறான் என்று நினைத்துப் பார்த்தவரது கண்கள் அனன்யாவை நினைத்து கண்ணீர் சிந்தியது.

அதை யாரும் அறியாமல் துடைத்தவாறோ,

‘என் மகனும், மருமகளும் என்றும் இதே மகிழ்வுடன் இருக்க நீதான் அனுமா துணையாக இருக்கணும்.’ மனதிற்குள் வேண்ட, இதமான தென்றல் மெல்ல அவரைத் தழுவி, அவருக்கு துணை இருப்பதை உறுதி செய்தது.

முற்றும்.

                  ************************

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அருமையான கதை…அனைவருமே ஏதோ ஒரு வகையில் மனம் நிறைய செய்து விட்டனர்.. வாழ்த்துகள் 💐💐💐💐💐