Loading

நினைவுகள் -30

அனன்யாவிற்கு ஆகாஷ் கூறியதை யாரிடமாவது ஷேர் செய்து, ஒப்பினியன் கேட்க வேண்டும் என்று தோன்ற… விஸ்வரூபனிடம் சென்று பேசலாம் என்று எண்ணி, அவனது அறைக்குச் செல்ல‌… அவனோ, ராதிகாவிடம் ஃபோனில் பேசிக்கொண்டிருந்தான்.

இவளைப் பார்த்ததும் என்னவென்று சைகையால் விசாரித்தான்.

” பேசணும் மாமா.” என்று மெதுவாக வாயசைத்தாள்.

“ஐந்து நிமிடம்…” என்று கண்களால் கெஞ்சியவன், எத்தனை ஐந்து நிமிடங்கள் கழித்தும் ஃபோனை வைத்தபாடில்லை.

தனது மாமா, காதலியிடம் பேசும் அழகை ரசித்துப் பார்த்தவள், மனதிற்குள்ளோ,’ நாமும் ஆகாஷுக்கு ஓகே சொன்னா என்ன?’ என்று நினைத்தாள்.

  விஸ்வரூபனிடமும், ராதிகாவிடமும் கலந்து பேசி, பிறகு ஆகாஷிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தவள், விஸ்வரூபன் இப்போதைக்கு வருவதாக இல்லை எனவும் தன்னிச்சையாக முடிவெடுத்து, தன் காதலை ஆகாஷிடம் உடனடியாகத் தெரிவித்தாள்.

ஆகாஷ் வீட்டில் நிலையில்லாமல் தவித்ததுக் கொண்டிருக்க, அப்போது தான் உள்ளே நுழைந்த ஆதி, ” டேய் அண்ணா? என்ன இவ்வளவு சோகமா இருக்க?”

” நான் ஒன்னும் சோகமா இல்லை. ஆமாம் நீ எங்க போயிட்டு வர்ற?”

” நம்ம ஹாஸ்பிடலுக்குத் தான் போயிட்டு வர்றேன். நீ சாப்டியா ஆகாஷ்?”

” எனக்கு பசிக்கல. நீ சாப்பிடு.” என்றவன் தனது அறைக்கு செல்ல…

தன்னிடம் ஒழுங்கா பேசாமல் செல்லும் அண்ணனையே குழப்பத்துடன் பார்த்தான்.

அறைக்குள் சென்ற ஆகாஷ், அமைதியிழந்து தவிக்க. அவனது ஃபோன் அடித்தது.

யார் என்றுப் பார்க்க ‌… அழைத்ததோ அனன்யா.

அவனுக்கு நம்பமுடியாமல் இருந்தது.

ஆகாஷ் இன்று தனது காதலை அவளிடம் தெரிவிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. பேசிக் கொண்டிருக்கும் போது தானாக வந்து விட்டது. அவள் பதில் கூறாமல் சென்றதில் தான் வீட்டிற்கு வந்தவன், வருத்தத்தோடு சுற்றிக் கொண்டிருக்க…

 இப்பொழுது அவள் ஃபோன் செய்யவும் அவனுக்கு கொஞ்சம் படபடப்பைக் கொடுத்தது.

ஃபோனை ஆன் செய்தவன் ஒன்றும் பேசாமல் இருக்க…

” ஹலோ… ஹலோ… ஆக்ஸ் இருக்கீயா?” என்று அனன்யா படபட பட்டாசாகப் பொறிய.

” ம்… என்ன அனு?”

 ” அது வந்து…. நீ சொன்னதுக்கு எனக்கு ஓகே.” என சொல்ல…

 அவனுக்கோ ஒரே மகிழ்ச்சி. அதை மறைத்துக் கொண்டு, ” ஆமாம் நான் என்ன சொன்னேன்?” என.

அனுவோ, பல்லைக் கடித்துக்கொண்டு,” ம் அது தான். உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு , வாழ்நாள் முழுக்க இம்சை பண்ணலாம்னு முடிவு எடுத்துவிட்டேன்.” என்றுக் கூற‌…

” அதுக்கு தானே காத்திட்டுருக்கேன்.”

” ஓகே … லவ் அக்ஸப்ட் பண்ணியாச்சு. நெக்ஸ்ட்…” என்று ஏதோ அனு கூற வர…

” ஹேய் வெயிட்… விட்டா நாளைக்கே கல்யாணத்தை பண்ணிக்கிட்டு, குழந்தையும் பெத்துப்ப போல. கொஞ்சம் பொறு.”

 ” ப்ச் ஆக்ஸ். உங்க வீட்ல யார், யார் இருக்காங்க சொல்லு என்று தான் கேட்க வந்தேன். ஸார் தான் ரொம்ப ஸ்பீடா இருக்கீங்க.” என்று கலாய்க்க…

 ” ஓ… அவ்வளவு தானா. நான் என்னவோ நினைச்சேன். என்னை ஏமாத்திட்ட… சரி விடு. அப்புறம் எங்க வீட்ல, எங்க அப்பா, அம்மா இரண்டு பேருமே டாக்டர்ஸ். தம்பியும் டாக்டருக்கு படிச்சுட்டு இருக்கான். அவன் தான் எனக்கு எல்லாமே. உனக்கு ஒரு நாள் அறிமுகப்படுத்துறேன்.” என்றவன் பிறகு ஸ்வீட் நத்திங்ஸாக பேசிவிட்டே வைத்தான்.

நாட்கள் வேகமாக செல்ல… ஒரு நாள் ஆகாஷ், ” அனு… நாளைக்கு நான் காலேஜுக்கு லீவ். என் தம்பியோட பிறந்தநாள். அன்னைக்கு முழுவதும் அவனோட தான் இருப்பேன்.

நீ நாளைக்கு ஈவினிங் எங்க வீட்டுக்கு வர்றீயா? தம்பியோட பர்த்டே பார்ட்டி இருக்கு.

எங்க ஃபேமிலியையும் இன்ட்ரொடியூஸ் பண்ணுறேன்.” என

” ம் சரி… அப்புறம் உங்க தம்பிக்கு என்ன சர்ப்ரைஸ் பண்ணப் போற.”

” சர்ப்ரைஸா அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.” என்று ஆகாஷ் கூற…

“இப்படியுமா ஒரு அண்ணன் இருப்பாங்க. ” என்று திட்டிய அனு, ” ஓகே… நாளைக்கு நானும் காலேஜுக்கு லீவ் போட்டுறேன். அட்ரெஸ்ஸ ஷேர் பண்ணு. காலையிலே வர்றேன். உங்க வீட்ல எதுவும் சொல்ல மாட்டாங்கள்ல…”

” அதெல்லாம் எந்த பிரச்சனையும் கிடையாது. மகாராணியின் வரவுக்காகத்தான் நான் காத்திருக்கிறேன்.” என்ற ஆகாஷ் புன்னகைக்க…

அவளும் புன்னகைத்தாள்.

மறுநாள் கோலாகலமாக ஆதியின் பிறந்த நாளை கொண்டாடினார். ஆதிக்கும் அவளை ரொம்ப பிடித்து விட்டது.

 இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே சொல்லியிருந்தான் ஆகாஷ்.

 ஆனால் இன்று தான் இருவருக்கும் ஒருவரை, ஒருவர் அறிமுகம் செய்து இருந்தான் ஆதவன்.

” அனு… இவன் தான் என்னுடைய தம்பி, ஃப்ரெண்ட், வெல்விஷர் எல்லாமே இவன்தான்.”என்று ஆதியைக் கட்டிப்பிடித்துக் கொண்டுக் கூற…

அனுவோ, ” எனக்குத் தான் தெரியுமே ஆக்ஸ்.” என்றாள்.

” ஆதி… இவ தான் என்னோட சரிபாதி. உன்னோட அண்ணி.” என.

” என்னது அண்ணியா? பார்க்க பேபியாட்டாம் இருக்காங்க. நான் பேபினு தான் கூப்பிடப் போறேன்.” என்ற ஆதி அதே மாதிரி தான் கூப்பிட்டான்.

மூவரும் காலையிலிருந்து உற்சாகமாக இருந்தனர்.

மாலை பார்ட்டியில் தன் பெற்றோரிடமும், அனன்யாவை காதலி என அறிமுகம் செய்ய…

அவர்களும் பெரியதாக எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

உற்சாகமாக இருந்த காதல் ஜோடிகளோடு, ஆதவனும் சேர்ந்துக் கொள்ள, மூவரும் அடிக்கடி வெளியே சென்றனர்.

இப்படியே மகிழ்ச்சியாக சென்ற அவளது வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்தது.

வழக்கம் போல காலேஜ் முடிந்ததும் ஆகாஷுடன் வெளியே போய்விட்டு, ஆதியையும் பார்த்து விட்டு லேட்டாக தான் வீட்டுக்கு வருவாள்.

அவளுக்காக காத்திருந்த ருக்குமணியோ, ” அனு… சாப்பிட வா.” என்றுக் கூப்பிட…

” ஃபிரண்ட்ஸ் கூட சாப்பிட்டேன். நீங்க சாப்பிடுங்க பாட்டி.” என்று அவரை அமர வைத்து, சாப்பாடு எடுத்து வைத்து விட்டு, உற்சாகமாக பாடிக் கொண்டே தனது அறைக்குச் சென்று விட்டாள்.

ருக்குமணியோ, தன் பேத்தியை ஆராய்ச்சியாகப் பார்க்க… அவரது பார்வையை கூட கண்டுக் கொள்ளவில்லை அனன்யா.

 அவள் தான் காதல் என்னும் மாயலோகத்தில் அல்லவா சுற்றிக் கொண்டிருக்கிறாள்.

மறுநாள் குடும்பத்தோடு எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, விஸ்வரூனைப் பார்த்து, ” டேய் ரூபா… யாரும் அனுவைப் பத்தி கவலைப்படுவதே இல்லை. அவ வீட்ல ஒழுங்காவே சாப்பிடுவதில்லை. எப்பப் பாரு ஃப்ரெண்ட்ஸோட படிக்கிறேன். சாப்டுட்டேன் என்று சொல்றா.” என…

எல்லோரும் அவளைப் பார்க்க… அவளோ, திருதிருவென முழித்தாள்.

 கிருஷ்ணனும், ரஞ்சிதமும் ‘ முன்னை விட அழகாக தானே தெரியுறா!’ என்று யோசிக்க.

 கௌரியோ, ‘ இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்லை.’ என்று திட்டிக் கொண்டிருந்தாள்.

‘ அனு… என் கிட்ட எதையோ மறைக்கிறாளோ?’ என்று யோசித்தப்படியே அவளை ஆராய்ச்சியாகப் பார்த்தான் விஸ்வரூபன்.

அனுவின் முகத்தில் தெரியும் அதிகப்படியான தேஜஸ்ஸை பார்த்தவன், ‘ ஏதோ சரியில்லலையே…’ என்று எண்ணியவன், ” யார் அந்த ஃப்ரெண்ட்ஸ். சண்டே வீட்டுக்கு கூட்டிட்டு வா.” என்றான்.

” ம்… சரி மாமா.” என்றவளின் முகமோ மலர்ந்தது. ‘ எப்படியோ முதலில் ஆகாஷை அழைத்து வந்து நண்பன் என்று அறிமுகப்படுத்த வேண்டும். அவன் எல்லோரிடமும் நன்கு பழகிய பின்பு, தங்கள் காதலை சொல்லி பர்மிஷன் வாங்க வேண்டும்.’ என்று எண்ணினாள்.

அது மட்டுமா,’ எப்படியும் பாட்டி தனக்குத்தான் சப்போர்ட்டாக இருப்பார்கள்.’ என்று நினைத்தவள் பாட்டுப் பாடிக் கொண்டே அங்கிருந்து அகன்றாள்.

ஆனால் நினைப்பதெல்லாம் நடப்பதில்லை என்பதை அனன்யா அறியவில்லை.

இன்று…

கௌரியும், ரஞ்சிதமும் வாஞ்சையாக அவளைப் பார்த்து சிரித்தனர். டெய்லி காலேஜில் நடக்கும் கலாட்டாக்களை தான் கிருஷ்ணன் வந்து கூறிவிடுவாரே…

இதையெல்லாம் வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்த விஸ்வரூபன், ராதிகாவை வைத்த கண் வாங்காமல் ரசித்துக் கொண்டிருந்தான். தன்னுடைய ஹாஸ்பிடல் பேக்கை வைத்து விட்டு சென்றிருக்க. அதை எடுப்பதற்காக உள்ளே வந்தவன் ராதிகா பேசிய எல்லாவற்றையும் கேட்டு பெருமூச்சு விட்டுக்கொண்டான்.

 நாட்கள் விரைந்தோட இவர்கள் ஹனிமூனுக்கு செல்லும் நாளும் வந்தது. விஸ்வரூபன் வேண்டுமென்ற கேராளாவுக்கு அழைத்துச் சென்றான்.

கோபப்படாமல் அமைதியாக இருப்போம் என்று ராதிகா நினைத்தாலும் அவளால் கோபத்தை கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. இறுக்கமாக அமர்ந்திருந்தாள்.

அவளை ஓரக்கண்ணால் பார்த்த விஸ்வரூபனோ, ‘ எதுக்கு இவ்வளவு டென்ஷனா இருக்கா? அவ ஆசைப்பட்ட மாதிரி கல்யாணத்தை தான் நடத்தலை. அட்லிஸ்ட் அவ போகணும்னு நினைச்ச கேரளாவுக்காவது அழைச்சிட்டு போவோம்னு, இங்க கூட்டிட்டு வந்தா, எதுக்கு முகத்தை தூக்கி வைச்சிட்டு இருக்கா?’ என தனக்குள் கேட்டுக்கொண்டான்.

 ஒரு வழியாக கேரளா வந்திறங்கினர்.

ட்ராவல் முழுவதும் குழந்தை தூங்கிக்கொண்டே வந்ததால் விஸ்வரூபனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

 அவர்கள் தங்குவதெற்கென ஏற்பாடு செய்திருந்த ரிவர்ஸ் ரெஸார்டு வந்து சேரும் போது, இரவாகி இருந்தது.

இருவருக்கான உணவை விஸ்வரூபன் ஆர்டர் செய்ய…

ஒன்றும் கூறாமல் இருவரும் உணவருந்தினர்.

பிளைட்டில் நன்றாக உறங்கி இருந்த குழந்தை விளையாட … அவனுக்கு உடம்பு அசதியாக இருந்தாலும்

குழந்தைக்காக, அவள் பின்னே ஓடிக் கொண்டிருந்தான்.

ராதிகாவோ, அவர்கள் இருவரையும் கண்டுக்கொள்ளாமல் தன்னுடைய வேலைகளை பார்த்து விட்டு வந்து படுத்தாள்.

 குழந்தையோ, விஸ்வரூபனை நன்றாக வச்சு செய்து விட்டு, உறக்கம் வரவும் அழ ஆரம்பித்தது.

குழந்தை எதற்காக அழுகிறாள் என்பதை புரிந்துக் கொண்ட விஸ்வரூபனோ என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்க…

 குழந்தையோ அவனது ஃபோனை எடுத்துக் கொடுத்து, ” பா… மா…” என்று மழலையில் கூறி விட்டு, அழ…

ராதிகாவை பார்த்தவாறே, ஃபோனை எடுத்து ஆன் செய்தான்.

” யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே” என்று இவளது குரலில் பாடல் ஒலிக்க…

குழந்தையோ சமர்த்தாக படுத்துக் கொண்டது.

ராதிகவோ, ‘அடப்பாவி.’ என்று மனதிற்குள் திட்டிக் கொண்டே பார்க்க…

அவனோ அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு, லைட்டை ஆஃப் செய்து விட்டு உறங்க முயன்றான்.

ஃபோனில் ராதிகா பாடிய பாடல் முடிந்தவுடன், மீண்டும் குழந்தை சிணுங்கிக்கொண்டே போட சொல்ல…

அவனை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே, “மேய்க்கிறது எருமை… இதுல என்ன பெருமை வேண்டி இருக்கு.” என்று கூறிக்கொண்டே குழந்தையை தூக்கினாள்.

 அவன் எதையோ கூற வர…

 கையால் நிறுத்துமாறுக் கூறியவள், ” அவந்திகா… என் அனுவோட குழந்தை. நான் தூக்குவதற்கு யாரோட அனுமதியும் தேவையில்லை.” என.

” அம்மு… அனுவோட குழந்தை மட்டும் இல்லை. என்னோட குழந்தையும் தான்.” என்று அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே கூறினான்.

அவளோ அவனது பார்வையை அலட்சியம் செய்து, ” எனக்கு உங்களையும் தெரியும், அனுவையும் தெரியும்.” என்றுக் கூறிவிட்டு,

ஃபோனை எடுத்து கூகிளில் தாலாட்டு பாடல் செலக்ட் செய்து பாடினாள்.

 குழந்தை சமத்தாக தூங்கியது.

குழந்தையை மெதுவாக கட்டிலில் படுக்க வைத்தவள், குழந்தையை அணைத்தவாறு உறங்கினாள்.

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்