
நினைவுகள் – 1
அன்று…
” துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்” என்ற கந்த சஷ்டி கவசம் வழக்கம் போல டிவியில் ஒலித்துக் கொண்டிருந்தது…
மயில் வண்ண குர்தியில், தோகையென தலைமுடி விரிந்திருக்க, தனது அறையிலிருந்து வெளியே வந்தாள் ராதிகா. மெல்லிய உடல்வாகு. மாநிறம். களையான முகம். ஆனால் சிரிப்பைத் தொலைத்திருந்தது.
ஹாலில் யாருமில்லாமல் இருக்க, ‘டெய்லி டிவியை ஓடவிட்டு கந்தசஷ்டி கவசம் கேட்க வேண்டியது. அட்லீஸ்ட் தைரியமாவது இருக்காங்களா? அதுவும் கிடையாது.’ என்று தனக்குள் அலுத்துக் கொண்டவள், ரிமோட்டை எடுத்து சவுண்டை குறைத்து விட்டு கிச்சனுக்குள் நுழைந்தாள்.
” மா… நான் கோவிலுக்கு போயிட்டு வரேன்.” ராதிகா கூற.
மும்முரமாக சமையல் செய்துக் கொண்டிருந்த சுந்தரியோ, அடுப்பை அணைத்து விட்டு புன்னகையுடன் மகளிடம் திரும்பினாள். ” குளிச்சிட்டியா அம்மு.” என்றவள், தலையிலிருந்து நீர் சொட்டுவதை கவனித்து விட்டாள்.
” அம்மு! இங்கப்பாரு தலை ஈரமா இருக்கு. ஒழுங்கா தலையைத் துவட்டலைப் போல. இப்படி இருந்தால் அப்புறம் சளி, காய்ச்சல்னு அவஸ்தைப் படணும். இங்கே உட்காரு.” என டைனிங் டேபிள் சேரில் அமர வைத்து விட்டு பரபரப்பாக அவளது அறைக்குச் சென்றவர், டவலை எடுத்து கொண்டு விரைந்து வந்தார்.
தனது அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்த ராதிகா, அடுத்து என்ன நடக்கும் என்பதையும் யூகித்திருந்தாள். எல்லாம் வழமையான விஷயம் தான். தன்னால் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கும் நிலையை அறவே வெறுத்தவள், முகமெல்லாம் இறுக அமைதியாக அமர்ந்து இருந்தாள்.
வேகமாக வந்த சுந்தரியோ, மென்மையாக அவளது தலையை துவட்டியபடியே, ” அம்மு… கோவிலுக்கு போகணும்ன்னா முன்னாடியே சொல்லலாம்லடா. அம்மா சீக்கிரமே எழுந்துருச்சு கிளம்பியிருப்பேனே. இப்போ வரலாம்ன்னா இன்னும் டிஃபன் செய்யலை.
நீ ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுடா… நான் அப்பாவை எழுப்பி கூட்டிட்டு வரேன்.” என்றவர் அவர்களது அறைக்குச் செல்ல முயல.
” வேணாம் மா பக்கத்தில் உள்ள கோயில் தானே. நான் போய்க்கிறேன்.”
” சொல்றதை கேளுடா அம்மு. தனியாக எல்லாம் போக வேண்டாம்.” என்றவர், “ஆமாம் எந்த கோயிலுக்கு போகப் போற?” என அடுத்த கேள்வியை கேட்டார்.
தான் பதில் சொன்னால் அடுத்து என்ன வரும் என்பதை அறிந்துக் கொண்டவள், மெதுவான குரலில், “பெரிய கோவிலுக்கு தான் மா.” என்றாள் ராதிகா.
” அங்க வேண்டாம்டா. நீ அப்பாவோட மாரியம்மன் கோவிலுக்கு வேணும்னா போயிட்டு வா. அம்மா உன் நல்லதுக்கு தான் சொல்லுறேன். ” என்று வழக்கம் போல தடுக்க…
ஒரு விருப்பப்பட்ட கோவிலுக்கு போவதற்கு கூட தடை. அதுவும் அன்பு என்னும் ஆயுதத்தாலே அடக்கப்பட்டு வருகிறாள்.
எப்பொழுதும் சரி, சரி என்று தன் அம்மாவின் போக்குக்கே போய் விடுவாள் ராதிகா. ஏனோ இன்று மனது அலைபாய பெரியகோயிலில் உள்ள பிரகதீஸ்வரரை தரிசித்தால் தான் மனம் அமைதியடையும் எனத் தோன்றியது. ஆனால் அதை அவளது அம்மா தடை செய்யவும், இயல்புக்கு மீறி கோபம் வர, “நான் எங்கேயும் போகலை போதுமா.” என்று விட்டு தனது அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு கண்கள் கலங்க சென்ற மகளைப் பார்த்த சுந்தரியின் கண்களும் கண்ணீரைப் பொழிந்தது.
” சுந்தரி… ” என்ற கணவனின் குரலில், கிச்சனிலிருந்து வெளியே வந்தவள், “கூப்பிட்டிங்களா ராதுப்பா.” என்றாள்.
கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு வந்த மனைவியின் முகத்தைப் பார்த்தே ஏதோ சரியில்லை என்று உணர்ந்தவர்,” ஏன் என்னாச்சு சுந்தரி.”
” அது ராதுப்பா…” என்று தயங்கியவள், பிறகு சற்று முன் நடந்ததைக் கூற.
” சுந்தரி… பிள்ளை ஆசைப்படுற மாதிரியே செய்ய விடு. இன்னைக்கு அவளுக்கு ட்வெல்த் ரிசல்ட் வருது. அதற்காக கோவிலுக்கு போகணும்னு ஆசைப்பட்டிருக்கும். நீ ஏன் காலையிலே மூட் அவுட் செய்யுற? நான் க்ரவுண்டுக்கு வாக்கிங் போகலை. பாப்பாக் கூடப் போறேன். பாப்பா சாமி கும்பிட்டு வரும் வரை, பக்கத்து பார்க்குல வாக்கிங் போறேன். அவளைத் தனியா அனுப்பலை போதுமா… நீ கவலைப்படாமல் போய் பாப்பாவை கூட்டிட்டு வா. நாங்க கிளம்புறோம்.” என்றவர் முடிவாகக் கூறி விட, ஒன்றும் கூற முடியாமல் தனக்குள் புலம்பிக் கொண்டே ராதிகாவை அழைக்கச் சென்றார்.
” அம்மு… ” என்ற குரலில் ஜன்னல் வழியே தோட்டத்தை வேடிக்கைப் பார்த்தவள் திரும்பினாள்.
” அப்பா துணைக்கு வரேன்னு சொன்னாரு. அவரோட போயிட்டு வந்துடு. சாயந்திரம் என்னோட திருப்திக்கு மாரியம்மன் கோவிலுக்குப் போயிட்டு வந்துடலாம்.” என.
“சரி மா.” என்றவள், வேகமாக ஷாலை எடுத்துப் போட்டு கொண்டு வெளியேறினாள்.
எங்கே இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் மனது மாறி தடுத்தாலும் தடுத்து விடுவாரோ என்று எண்ணினாள்.
அது உண்மையும் கூட. பேசிப் பேசியே ஒரு வழியாக்கி விடுவாள் சுந்தரி.
அவர்கள் வீட்டிலிருந்து பத்து நிமிட நடை தான், உலகமே வியந்து போற்றும் தஞ்சை பெரிய கோவில்.
அதற்கு போவதற்குத் தான் இந்த அக்கப்போர்.
ஒன்றும் பேசாமல் அமைதியாக வரும் மகளை வாஞ்சையாகப் பார்த்த சண்முகம், ” ஏன் டா? அம்மா சொன்னதையே நினைச்சுட்டு இருக்கீயா? அவ உன் நல்லதுக்கு தான் சொல்றா. அங்கே நீ போனால் வேண்டாத நினைவுகள் வரும். அது உனக்கு மன வருத்தத்தைத் தரும். அதுவும் இல்லாமல் அவளுக்கு சில சென்டிமெண்ட் அந்த கோயிலுக்கு போவதற்கு, அதற்காக தான் சொல்கிறாள்.”
” அப்பா… எதுப்பா வேண்டாத நினைவுகள்.” என்ற ராதிகா கண் கலங்க.
“அப்படி சொல்லல டா. மனசுக்கு சங்கடம் தருவதை, மறக்கிறது தானே நல்லது.”
” அதை விடுங்கப்பா. அதை பத்திப் பேசினால் நமக்குள்ள வாக்குவாதம் தான் வரும். அதுவுமில்லாமல் ஒரு சில விஷயங்களை நான் மறக்க நினைத்தாலும் நீங்களும், அம்மாவுமே மறக்க விடாமல் நினைவுபடுத்திக் கொண்டே தான் இருக்கிறீங்க. அதற்காக பயந்துகிட்டு நான் கோயிலுக்கு போகாமல் என்னால இருக்க முடியாது.
அந்த கோயிலை பார்க்கும் போது, எனக்குள் தோன்றும் உத்வேகம், உங்கக் கிட்ட சொன்னாலும் உங்களுக்கு புரியாது.
ஒவ்வொரு முறை போனாலும் நானே அந்தக் கோவிலை கட்டிய மாதிரி பெருமைப்படுறேன். ஆனால் நீங்க இப்படி பேசுறது எனக்கு கஷ்டமா இருக்கு. என்ன படிச்சி இருந்தாலும், நீங்களும் அம்மா மாதிரியே ஒரு வட்டத்துக்குள்ளே இருக்கீங்க.” என்றவள் தனது தந்தையைப் பார்த்து முறைக்க.
” அதே தான் மா நானும் சொல்றேன்.எவ்வளவு படிச்சிருந்தாலும், புள்ளைங்க என்று வரும் போது, சென்டிமெண்டலா தான் யோசிப்போம். அது உனக்கு புரியாது. சரி மா… நேராமாயிடுச்சு.
நீ போய் சாமி கும்பிட்டு வா… நானும் பார்க்குக்கு போறேன்.”
” சரிப்பா. நீங்க எதையும் நினைச்சுட்டு இருக்காதீங்க பா. அங்கே போய் வேடிக்கைப் பார்க்காமல், நடங்க. நான் வர வரைக்கும் நீங்க நடந்துட்டு தான் இருக்கணும். உங்க சுகர் லெவல் வேற அதிகமா இருக்கு.” என்று தன் தந்தையிடம் கண்டிப்புடன் கூறியவள், இவ்வளவு நேரம் இருந்த சுணக்கம், எரிச்சல் எல்லாம் மறந்து உற்சாகமாக கோயிலுக்குள் நுழைந்தாள்.
எப்போதும் போல அந்த கம்பீரமான விமானத்தை பார்த்தவள் வழக்கம் போல இராஜராஜ சோழரை எண்ணி பெருமிதம் கொண்டாள். எந்த வசதியும் இல்லாத அந்த காலத்தில் எப்படி இவ்வளவு பெரிய கோவிலைக் கட்டினார். எத்தனையோ போர்களையும், இயற்கை பேரழிவையும் கடந்து இன்றளவும் கம்பீரமாக வீற்றிருந்து அவரது பெருமையை உலகுக்கு பறைசாற்றிக் கொண்டு இருப்பதை பெருமையுடன் எண்ணிக் கொண்டிருந்தாள்.
பிறகு வந்த வேலையைப் பார்ப்போம் என்று நினைத்து கோவிலை வலம் வந்தாள்.
பிரகதீஸ்வரரை கண்மூடி வணங்கியவள், ‘ இறைவா! எனது விருப்பத்தை நிறைவேற்று. நான் ஆசைப்படுவது எல்லாமே நிறைவேற்றும் என் பெற்றோர், இதற்கு தடை தான் கூறுவார்கள் என்று நன்கு தெரியும் . அவர்களை எதிர்த்து போராடுவதற்கு, எனக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையும் கொடு கடவுளே! ‘ என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டாள்.
ஒருவழியாக கோயிலை வலம் வரலாம் என்று எண்ணியவள், பிரகாரத்தை வலம் வர… இடப்புறம் உள்ள ஓர் இடத்தைப் பார்க்கவும், மனம் துடிக்க ஆரம்பித்தது. பழைய நினைவுகளெல்லாம் மனதில் முட்டி மோதியது. அந்தப் பக்கமே பார்க்காமல் வேகமாக வெளியே வந்து விட்டாள்.
நான்கு வருடங்களுக்கு முன்பெல்லாம் அந்த இடத்தைப் பார்ப்பதற்காகவே தினமும் வருவாள். அந்த இடம் இருப்பதே பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது.
‘அந்த பகுதியில் தான் சோழர்களின் பொக்கிஷம் இருக்கிறது. அது தான் ஓவியம். காலத்தால் அழியாத ஓவியம் இருக்கிறது. இரு சுவர்களுக்கு இடையே வரைந்து வைத்திருந்த ஓவியத்தை தனியாக எடுத்து வைத்து பாதுகாத்து வருகின்றனர். கோவில் பற்றிய முக்கிய தகவல்களும் அங்கிருக்கிறது. சோழர்களைப் பற்றி அறிய வேண்டும் என்றால் மணிமண்டபத்தில் அவர்களைப் பற்றிய தகவல்கள் இருக்கிறது. ராஜராஜரை பற்றி தெரிந்துக் கொள்ள, இந்தக் கோவிலில் உள்ள கலைக் கூடமே போதும்.
முதல் தடவை இங்கு வந்தப் போது, அவ்வளவு பிரமிப்பு! அங்கு காவலுக்கு இருந்தவர்கள், இவளுடைய ஆர்வத்தைப் பார்த்து, அவர்களுக்குத் தெரிந்த தகவல்களை கூறினர். அதெல்லாம் அழகிய பொற்காலம். அதோடு சேர்ந்த பழைய நினைவுகள் இவளது மனதை வருத்தச் செய்யும். அதனாலே இப்போதெல்லாம் அங்கு செல்வதில்லை.’ அந்த இடத்தைக் கடந்தவள் தந்தைக்கு ஃபோன் செய்து கோவிலுக்கு வெளியே காத்திருப்பதாக சொல்லி விட்டு தனக்குள் யோசனையில் ஆழ்ந்தாள். ‘ எப்படி இவர்கள் இருவரையும் கன்வின்ஸ் செய்வது.’ என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.
அங்கு வந்த சண்முகம் தன் மகளின் முகத்தில் கவலை தெரிகிறதா எனப் பார்க்க … அங்கு குழப்பம் இருப்பதை பார்த்து அவருக்கு ஆச்சரியம்.
” ஏன் பாப்பா? ரிசல்ட்ட நினைத்து பயமா இருக்கா? என்ன படிக்கிறது என்று குழப்பமா இருக்கா? மார்க் எவ்வளவு இருந்தாலும் பரவால்ல டா. நீ ஆசைப்பட்டதை அப்பா படிக்க வைக்குறேன். நீ கவலைப்படாதே.”
“அப்பா… பேச்சு மாற மாட்டீங்கள்ல. ப்ராமிஸா? ” என்று அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ராதிகா வாக்குறுதி கேட்க.
” உன் விருப்பப்படி தான் படிக்க வைப்பேன் டா.” என.
உற்சாகமாக தந்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டு வீடு திரும்பினாள் ராதிகா.
இதற்கு நேர்மாறாக சென்னையின் விஜபிகள் வசிக்கும் பகுதியான போயஸ்கார்டனில் உள்ள ஒரு மாளிகையில் ஒரே களேபரமாக இருந்தது.
அந்த வீட்டின் இளவரசி கண்ணீர் விட்டுக் கொண்டிருக்க… அவளைச் சுற்றி எல்லோரும்
அமர்ந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தனர்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
2
+1
+1

