Loading

அத்தியாயம் 1

கௌசல்யா சுப்ரஜா ராம

பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே

உத்திஷ்ட நர ஸார்தூல

கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

என்று அதிகாலை நேரத்தில் நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள பிரமாண்டமான அந்த வீட்டில் தெய்வீக மணம் கமழ, பக்தி பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது..

பாடல் ஒரு பக்கம் ஒலித்துக் கொண்டிருக்க, சிறிது நேரத்தில் வேலையாட்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்..

பூஜை அறையில் இருந்து வெளிவந்த ஒருவரிடம், “வணக்கம் ம்மா “.. என்று வேலை செய்யும் வேலையாட்கள் அவரிடம் மரியாதையுடனும் பணிவுடனும் கூறி விட்டு, அன்றைய தினசரி வேலைகளை பார்க்கச் சென்றனர்..

அவர்தான் மங்களநாயகி.. அந்த வீட்டிற்கு ஆணி வேர் என்று கூறலாம்.

தன் கணவர் ராஜசேகரின் மறைவுக்கு பின், அந்த குடும்பத்தைத் தாங்கி இப்பொழுது இந்த நிலைமைக்கு கொண்டு வந்து சேர்த்ததில் அவருக்கு பெரும் பங்கு உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

அவர் எப்பொழுதும் அதிகாலையில் இது போல தெய்வ பக்தி பாடல்களை போடுவது தினசரி வழக்கமாக கொண்டுள்ளார்..

அப்பொழுது தான் வீடும் சரி.. நம் மனமும் சரி அமையாகவும் தெளிவாகவும் சாந்தமாகவும் இருக்கும் என்று நம்புபவர்..

அந்த நம்பிக்கையை, மற்றவர்கள் நம்புகிறார்களோ இல்லையோ, ஆனால் அவரது நம்பிக்கையை யாரும் கெடுப்பது இல்லை..

இங்கோ பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, அந்த சத்தத்தில் எழுந்து அமர்ந்து தன் உள்ளங்கையை தேய்த்து அதை முகத்திற்கு நேராக கொண்டு வந்து கண் விழித்து பார்த்தான் அவன்.. அவன் தான் இளம்பரிதி.. மங்களநாயகியின் மூத்த மகன்..

பின்னர் எழுந்து, காலை கடன்களை முடித்து விட்டு, வழக்கமாக செல்லும் நடை பயிற்சிக்கு கீழ் இறங்கி வந்தான்..

” குட் மார்னிங் ம்மா.. ” என்று தன் அன்னையை பார்த்து சொல்ல,

அவரும், ” குட் மார்னிங் கண்ணா.. ” என்றவர், ” நீ தினமும் காலையில சீக்கிரம் எந்திருச்சுற.. ஆனால் உன் தம்பி இருக்கானே.. அவன் உனக்கு தம்பியா இல்ல கும்பகரணனுக்கு தம்பியானு தெரியல.. ” என்றார் சலித்துக்கொண்டு..

அதை கேட்டு சத்தமாக சிரித்த பரிதி, ” அம்மா எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்கல்ல.. விடுங்க ம்மா… அவன் நைட் லேட்டா தான் வந்தான்.. அதான் இப்போ அசந்து தூங்குறான்.. இல்லனா இந்த சத்தத்துல, தூக்க கலக்கத்தோடயாவது எந்திருச்சு வந்து இருப்பான்.. ” என்றான் பரிதி..

” என்னமோ ப்பா.. அவன் கொஞ்சம் விளையாட்டு பையனாவே இருக்குறான். நீதான் பா அவனை பார்த்துக்கணும் ” என்று கூறினார்.

” அதை பத்தி நீங்க கவலை பட வேண்டாம். நான் பார்த்துகிறேன்.. இது நான் உங்ககிட்ட டெய்லியும் சொல்றது தான்… ” என்று கூறி விட்டு, தனது நடை பயிற்சியை மேற்கொள்ள கிளம்பி விட்டான்.

அவரும் சமையல் அறை சென்று, தனக்கான டீ யை போட்டுக் கொண்டு கூடத்திற்கு வந்து அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தார்..

என்னதான் வேலை ஆட்கள் இருந்தாலும், தானே போட்டுக் குடிப்பதில் அவருக்கு அது பிடித்தமான ஒன்று..

அதே நேரத்தில் மேல் மாடியில் உள்ள அறையில், தன் தூக்கம் கலந்து போன, சோகத்தில் புலம்பிக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி..

” இந்த அத்தை வேற.. தினமும் காலையில பாட்டு போட்டு விட்டுருறாங்க… தூங்கவே முடியுறது இல்ல.. நம்ம என்ன பிக் பாஸ் வீட்டுலயா இருக்கோம்.. பாட்டு போட்டதும் எந்திரிகிறதுக்கு.. ஐயோ.. படுத்துறாங்களே.. இதுக்கு எனக்கு முதல்ல எப்போ விமோச்சனம் கிடைக்கும்னு தெரியல.. ” என்று புலம்பிக் கொண்டிருந்தாள்..

அப்படி இப்படி என்று நேரம் ஆறு மணியை அடைந்த நேரம், ஒவ்வொருவராக தூங்கி எழுந்து கீழே வர ஆரம்பித்தனர்.

” என்ன க்கா.. எப்பவும் போல, காலை பிராத்தனை முடிஞ்சிருச்சா..” என்று கேட்டுக் கொண்டே அவரது அருகில் வந்து அமர்ந்தார் அவரது தம்பி விநாயகம்..

” ஆமா தம்பி.. உன் பொண்டாட்டி என்ன பண்றா.. ” என்று அவர் கேட்க,

” குளிச்சிட்டு இருந்தா க்கா. வந்துருவா.. ” என்றார் விநாயகம்.

சிறிது நேரத்தில் அவரது மனைவி மல்லிகா மங்களத்தை பார்த்து சிரித்துக்கொண்டே வந்தார்.

வந்தவர் நேராக சமையல் அறைக்குச் சென்று அவருக்கும் அவரது கணவருக்கு தேவையான டீ யை எடுத்துக் கொண்டு, விநாயகத்திடம் வந்து கொடுத்தார்.

நடைப் பயிற்சிக்கு சென்ற பரிதியும் வந்து சேர, அவனும் அவர்களுடன் சேர்ந்து வந்து அமர, வேலைக்கார பெண்மணி அவனுக்கு டீ யை  கொண்டு வந்து குடுத்து விட்டுச் சென்றார்..

அவனும் வாங்கி அதை பருக ஆரம்பித்தவன், டேபிளின் மீது இருந்த அன்றைய நாளிதழை விரித்து படிக்க ஆரம்பித்தான்..

” பரிதி..” என்று மங்களம் அழைக்க, அவனும் செய்தியை வாசித்துக் கொண்டே, தேநீரை ஒரு மிடறு விழுங்கியவன் ” சொல்லுங்க ம்மா.. ” என்றான்..

” இன்னைக்கு மீட்டிங் இருக்குனு சொன்னலப்பா…” என்று அவர் கேட்க,

” ஆமாம் மா .. இருக்கு  சீக்கிரம் கிளம்பனும்.. நேத்தே மேனேஜர் கிட்ட எல்லாத்தையும் சரியா ரெடி பண்ண சொல்லிட்டேன்… சரியான நேரத்துக்கு போகணும்.. அப்புறம் இனியனையும் வர சொல்லி இருக்கேன்.. ” என்றான்..

சிறிது நேரம் கீழே அமர்ந்து விட்டு, பின் தன் அறைக்குச் சென்று குளித்து கோட் சூட் சகிதம் கீழ் இறங்கி வந்தவன், சாப்பாட்டு மேசையில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தான்.

சிறிது நேரத்தில் அவனது தம்பி இனியன், அவனும் தயாராகி வர அவனுக்கு பின்னாலேயே வைஷ்ணவியும் வந்து சேர்ந்தாள்..

வைஷ்ணவி வேறு யாரும் அல்ல.. விநாயகம் மற்றும் மல்லிகாவின் ஒரே புதல்வி..

அவளும் படித்து முடித்து விட்டு, வெட்டியாக பொழுதை கழிக்காமல் தன் இரு மாமன்களுடன் இணைந்து கொண்டாள்..

மூவரும் சாப்பிட்டு முடித்து விட்டு, ஒரே காரில் தான் சென்றனர்.

டிரைவர் சீட்டில் பரிதி அமர, அதற்கு அடுத்த சீட்டில் இனியன் அமர்ந்து கொண்டான்..

பின் சீட்டில் வைஷு அமர்ந்து கொண்டாள்.

இனியனோ, ” வைஷு இன்னைக்கு மீட்டிங் க்கு தேவை படுற ஃபைல்ஸ் எல்லாம் எடுத்துகிட்டியா.. ” என்று சற்று பின்னால் திரும்பி கேட்டான்..

அவளும், ” ம்ம். எடுத்துக்கிட்டேன் மாமா ஒரு தடவைக்கு ரெண்டு தடவை நல்லாவே செக் பண்ணிட்டேன்.. எல்லாமே இருக்கு.. ” என்று கூறினாள் அவள்..

அவனும் ஒரு சின்ன தலை அசைப்புடன் முன்னாள் திரும்பி கொண்டான்..

கார் நெடுஞ்சாலையை நோக்கி சீறிப் பாய்ந்தது..

ஒரு அரை மணி நேர பயணத்திற்கு பிறகு, அந்த வெள்ளை நிற BMW கார் அடுக்கு மாடி கட்டிடம் தாங்கிய வளாகத்திற்குள் நுழைந்தது..

முதலில் இறங்கிய பரிதி முன்னே நடக்க, அவனுக்கு பின்னால் இனியனும் வைஷுவும் வந்தனர்..

அவனது மாநிறமும், ஆறடிக்கு சற்றே குறைவான உயரமும்..
முன் நெற்றியில் அலை மோதும் கேசமும்..
கூர்மையான பார்வையும்..
கூரிய நாசியும்..
அழுத்தமான உதடுகளும்..
உறமேறிய உடம்பும்..

என, ஒரு முறை பார்த்தால் மறு முறை பார்க்க தூண்டும்  என்று கூறலாம்..

அவனுடைய பார்வையில் எப்பொழுதும் ஒரு கண்ணியம் இருக்கும்.

மற்றவர்களை அவன் நடத்தும் விதத்தில் ஒரு மரியாதை இருக்கும்..

அவன் வருவதை கவனித்த, ஊழியர்கள் எழுந்து வணக்கம் தெரிவிக்க, ஒரு சின்ன தலை அசைப்புடன் ஏற்றுக் கொண்டு முன்னால் நடந்து கொண்டிருக்க,

இனியனோ, அங்கே வேலை செய்யும் பெண் ஊழியர்களிடம் எல்லாம் சிரித்துக்கொண்டே ஹாய் சொல்லிக் கொண்டு வந்தான்..

பெண்களும் அவனைப் பார்த்து சிரிக்க, இவனும் தலையை கோதிக் கொண்டே வைஷுவுடன் நடந்து கொண்டிருந்தான்..

“டேய்.. அமைதியா வா டா… எப்போ பாரும் பொண்ணுங்கள பார்த்து பல்லை காமிச்சுகிட்டு..” என்று பல்லைக் கடித்துக் கொண்டு வைஷு கூற, அவனோ ” உனக்கு பொறாமை டி.. அதான் நான் பேசுறது பிடிக்காம இப்படி சொல்ற.. ” என்று இனியன் கூறினான்..

அவனை பார்த்து முறைத்து விட்டு வைஷு பரிதியின் பின்னால் செல்ல அவனோ மீட்டிங் அறைக்குள் நுழைந்தான்..

இனியனும் வந்து சேர்ந்து கொண்டான்.

சிறிது நேரத்தில் மீட்டிங் நடக்க இருப்பதால், அவன் அதற்கு தேவையான எல்லா கோப்புகளையும் எடுத்து முன் வைத்தான்…

சிறிது நேரத்தில் அவனது கம்பெனியில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் வந்து சேர்ந்தனர்..

வந்தவர்களை வரவேற்று, உபசரித்தவன் பின் தனது கம்பெனியில் உற்பத்தி செய்யும் பொருட்களை பற்றி ஒவ்வொன்றாக விளக்க ஆரம்பித்தான்.

தங்கள் கம்பெனியில் தோலினால் செய்யப்படும் பொருட்கள் அனைத்தையும் பற்றி கூறியவன் அதை  காணொளியாக பட விளக்கம் காட்டினான்..

அதாவது அவர்கள் பேக்டரியில் உற்பத்தி செய்யப்படும் முறையை அவர்களுக்கு காட்டியவன், பின்பு தாங்கள் தயாரிக்கும் அழகு சாதன பொருட்களை பற்றியும் விளக்கினான்..

இவர்கள் தயாரிக்கும் அழகு சாதன பொருட்கள் பெரும்பாலும், இயற்கையிலேயே கிடைக்கும் மூலிகை பொருட்கள் கொண்டு தோல் பராமரிப்பு, முடி பராமரிப்பு, தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள், கால் மற்றும் கை நக பராமரிப்பு மற்றும் இதர பராமரிப்பு பொருட்கள் என தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களையும் அதற்கு எந்த வகை மூலிகைகள் பயன்படுத்த படுகின்றன என்பதையும் அவன் அவர்களுக்கு பட விளக்கம் காட்டினான்..

அவர்களும் அதை பார்த்து விட்டு, கலந்தாலோசித்து, ” ஓகே.. பரிதி.. நீங்க சொன்ன வரைக்கும் எங்களுக்கு திருப்தி தான். ஆனாலும் நாங்க உங்க பேக்டரில எப்படி மேனுபேக்ட்சர் பண்றாங்கனு நேரடியா பார்த்துட்டு அதுக்கு அப்புறம் நாங்க பைனாலா சொல்றோம்.. ” என்றனர்.

” ஓ.. ஷுயர் லெட்ஸ் கோ டு அவர் பேக்டரி ” என்று அவர்களுடன் கூறியவன், வைஷு வை பார்த்து, ” நானும் இனியனும் அவங்க கூட பேக்டரிக்கு போய்ட்டு வரோம். நீ இங்க பார்த்துக்கோ..” என்று கூறி விட்டு,
அவர்களை அழைத்துச் சென்றான்…

நித்தமும் வருவாள்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
20
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment