
அத்தியாயம் -8
விடிந்து அவ்வளவு நேரம் ஆன பிறகும், அப்போது தான் நடு ராத்திரி ஆனது போல் படுத்துக் கிடந்த சபரியை எரிச்சல் மேலிட பார்த்தாள் மீனா.
‘பொணம் மாதிரி படுத்துக் கிடக்கிறதப் பாரு. இப்ப தான் பாதி ராத்திரி ஆனாப்புல எப்படி தூங்குது எருமை மாடு!’
மனதிற்குள் வெறுப்புடன் கூறிக் கொண்டவள், முறைப்போடு கூடிய ஒரு பார்வையை அவன் மேல் வீசி விட்டு அறைக் கதவைத் திறந்து வெளியே வந்தாள்.
மனம் முழுவதும் படபடப்பாக இருந்தது அவளுக்கு. மெல்ல சமையல் அறைக்குள் எட்டிப் பார்த்தாள்.
அங்கு சபரியின் அன்னை மாலதி, அடுப்பில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்.
‘இவங்க இப்ப என் மாமியார் இல்லையா?’ நினைத்தவாறு உள்ளே புகுந்தாள்.
காலடி அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார் மாலதி. மருமகளைக் கண்டதும் மெல்ல சிரித்தார்.
“வாம்மா மீனா, குளிச்சிட்டியா?”
“ம்ம்.. குளிச்சிட்டேன் அத்தே. சாரி அத்தே! கொஞ்சம் லேட் ஆயிடுச்சு!” தயக்கத்துடன் கூறினாள் மீனா.
“பரவாயில்லேம்மா. அதனால என்ன? எந்தப் பிரச்சினையும் இல்ல”
‘ஓ! கொஞ்சம் நல்ல மாதிரியா தான் தெரியுது. பிரியமா பேசுறாங்களே. எப்படியோ இவங்களாவது என் கிட்ட நல்லா இருந்தா சரி தான்’
மனம் சிறிது ஆறுதலாக உணர்ந்தாள்.
“உனக்கு காலையில டீ குடிச்சுப் பழக்கம் இருக்காம்மா? நீ குடிப்பியா இல்லையான்னு எனக்குத் தெரியலையா, அது தான் உனக்காக நான் போடல. நீ கொஞ்சம் போட்டுக்குறியாம்மா?”
“ம்ம்.. சரிங்கத்தே. நான் போட்டுக்குறேன். எனக்கு மட்டும் போட்டா போதுமா அத்தே?”
“இன்னொரு டம்ளரும் சேத்துப் போட்ரும்மா. சபரிக்கும் வேணும். அவனுக்குத் தூங்கி எழுந்தவுடனே டீ குடிக்கணும். அதுவும் சூடா ஆவி பறக்க பறக்கக் குடிப்பான். சூடு கொஞ்சம் குறைஞ்சு இருந்தாலும் பிடிக்காது அவனுக்கு. கத்துவான். குடிக்காம அப்படியே வச்சிருவான்.
அதனால நீ குடிச்சு முடிச்சிட்டு ஒரு கால் மணி நேரம் கழிச்சு அவனுக்குக் கொண்டு போயி குடுத்துட்டு வந்துரும்மா. மறக்காம நல்ல சூடு செஞ்சு கொண்டு போம்மா”
‘இது வேறயா? சாருக்கு டீயக் கொண்டு போயி கையில தரணுமாக்கும்? சூடா ஆவி பறக்க வேணும்னா எரியிற கரித் துண்ட தான் எடுத்துப் போட்டுக் குடுக்கணும் இவனுக்கு. நாக்கு பொசுங்கட்டும்.. அப்புறம் தெரியும் இவனுக்கு’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள், “சரிங்கத்தே”. என்று தன் மாமியாரிடம் கூறினாள்.
“இங்கே மேல் வேலைக்கு, பாத்திரம் கழுவ, வீடு கூட்டி துடைக்க மட்டும் தாம்மா ஆள் இருக்கு. சமையல் நான் தான் செய்வேன். அதுதான் இனிமே எனக்குத் துணையா நீயும் வந்துட்டேல்ல. ரெண்டு பேரும் சேந்தே பாக்கலாம்”
மீனா அதற்கு பதில் எதுவும் கூறாமல் தலையை மட்டும் அசைத்து வைத்தாள்.
“ரெண்டு பேருக்கும் நம்ம சம்பிரதாயப்படி, பொண்ணு பார்த்து நிச்சயம் பண்ணி அப்புறம் கல்யாணத்துக்கு நாள் குறிச்சுன்னு எல்லாம் சரியா நடந்திருந்தா, உன்னைப் பத்தி நாங்களும், இந்த வீட்டைப் பத்தி, உன் புருஷனப் பத்தின்னு நீயும் கல்யாணத்துக்கு முன்னாடியே தெரிஞ்சிக்கிறதுக்கு கொஞ்சம் வாய்ப்பு கிடைச்சிருக்கும்.
இது எதுவுமே இல்லாம திடீர்னு உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சு இல்லையா? அது தான் இந்த வீட்டு வழக்கத்த உனக்குச் சொல்றேன். உன்னைப் பத்தியும், நீ எப்படி என்ன, உன் பழக்க வழக்கம் என்ன எதுவுமே தெரிஞ்சுக்க முடியாம போச்சு. சரி, அதுக்கென்ன இப்ப? அவசரம் இல்லாம ஒவ்வொன்னா தெரிஞ்சிக்கலாம். நீ இங்கே தானே இருக்கப் போறே?”
மீனாவிடம் இருந்து எந்தப் பதிலையும் எதிர்பார்க்காமல் அவரே எல்லாவற்றையும் கூறினார்.
ஆனால் மீனாவோ மனதிற்குள் புலம்பிக் கொண்டாள்.
‘ஆமா, என்னத்தப் புரிஞ்சுக்கிறது? அதுதான் உங்க பையன் திட்டம் போட்டுத் தானே எல்லா வேலையும் செஞ்சிருக்காரு. இனிமே புரிஞ்சாலும் என்ன? புரியலேன்னாலும் என்ன? அவ்வளவு தான் என் வாழ்க்கை அதோ கதி தான்! அது மட்டும் தான் நிஜம்! இதெல்லாம் உங்களுக்கே தெரியல்ல. என்ன பண்றது? ஹூம்ம்!’
இதெல்லாம் அவளால் வெளியே சொல்ல முடியுமா என்ன? மனதிற்குள் தானே நினைத்துக் கொள்ள முடியும்! புலம்பாலும் இருக்க முடியவில்லை அவளால்.
“என்னம்மா, நான் பாட்டுக்கு இவ்வளவு பேசிட்டு இருக்கேன். நீ எதுக்குமே பதில் சொல்லாம அமைதியாவே இருக்கே? அதுசரி.. எப்படிப் பேச முடியும் உன்னால? நேத்து கல்யாணத்தில என்னென்னமோ ஆகிப் போச்சு! அந்த அதிர்ச்சியில இருந்தே இன்னும் நீ வெளியே வந்துருக்க மாட்டே. இல்லையாம்மா?”
“ம்ம்.. ஆ.. ஆமாங்க அத்தே!”
‘எனக்கு இப்ப இருக்கிற ஒரே ஒரு அதிர்ச்சியான விஷயம் என்னன்னா, அது உங்க மகன் தான்! அவரோட எப்படி நான் காலத்தைத் தள்ளப் போறேனோ? அதிலே இருந்து இந்த ஜென்மத்தில என்னால வெளியே வர முடியுமா என்றதே தெரியல!’
இப்படியாக அவள் மாமியார் சொல்வதற்கு எல்லாம் அவளுடைய மனம் ஏதாவது ஒன்று புலம்பிக் கொண்டிருக்க, அவரோ இவள் மனம் அறியாமல் அடுத்தடுத்து பேசிக் கொண்டே இருந்தார்.
அவருடைய ஆர்வம் அவருக்கு. மகனுக்குத் திருமணம் முடிந்து புது மருமகள் வீட்டிற்கு வந்த சந்தோஷம் அவருக்கு.
“ஒரு வருஷமா நாங்களும் சொல்லிட்டே தாம்மா இருந்தோம் இவன் கிட்ட. கல்யாணத்துக்கு பொண்ணு பாக்குறதுக்குன்னு. பிடி குடுக்கவே இல்லையே இவன்! ஆக, இப்ப தானே புரியுது.. எதுக்காக அவன் கல்யாணப் பேச்சை எடுத்தாலே, வேண்டாம் வேண்டாம்னு தாக்களிச்சிட்டே இருந்தான்னு!
உன்னை மனசுல நினைச்சிட்டுத் தான் எங்க கிட்ட எதுவும் சொல்லாம, கல்யாணம் இப்போதைக்கு வேண்டாம்னு சொல்லிருப்பான் போல.
அதுதான் நேத்து திடீர்னு சபரி ஃபோன் பண்ணி விஷயத்தச் சொன்னவுடனே எனக்கும் இவருக்கும் ரொம்ப சந்தோஷம். ஆனா என்ன, அவசரமா நடந்ததில சொந்தக்காரங்களுக்கு எல்லாம் சொல்ல முடியல. அதுதான் ரிசப்ஷனாவது வைக்கலாம்னு நானும் உன் மாமனாரும் பேசி இருக்கோம். சபரி கிட்ட பேசணும்”
‘ஓ! ரிசப்ஷன் வேற இருக்கா இன்னும்? என்னைப் பழி வாங்குறதுக்காகவே பேருக்கு ஒரு கல்யாணம். இதிலே இது வேற!’
மனதிற்குள் நினைத்தவாறு தேநீரை வடித்து, ஒரு டம்ளரில் சபரிக்கு என்று எடுத்து வைத்து விட்டு, அவளுக்காக ஒரு டம்ளரில் எடுத்துக் குடித்து முடித்தாள்.
“என்ன செய்யணும் அத்தே? சட்னிக்கு அரைக்கணுமா?”
“அரைக்கலாம்மா. நீ போயி மொதோ சபரிக்கு டீயைக் கொண்டு போயி குடுத்துட்டு வந்துரு. வந்து செய்யலாம்”
மெதுவாகத் தலை அசைத்தாள்.
“அவனை தயாராகி வரச் சொல்லும்மா. ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் கழிச்சு கோவிலுக்குப் போயிட்டு வரலாம். போறப்ப சொன்னா, ஏன் முன்னாடியே சொல்லலேன்னு கேப்பான். அதனால அவன் கிட்ட சொல்லிட்டு வந்துரு”
“சரிங்கத்தே” மாமியார் கூறுவதை செய்ய முடியாது என்று மறுக்க முடியுமா அவளால்?
வேறு வழியின்றி தயக்கத்துடனே பதிலளித்தாள்.
‘என் பேச்சைக் கேக்குற மாதிரியா உங்க பையன் இருக்காரு? நான் சொன்னாலும், அதுக்கும் ஏடாகூடமா ஏதாச்சும் பதில் சொல்வாரோ என்னமோ!’
வேண்டா வெறுப்பாக, அவனுக்கான தேநீரை சூடாக்கி டம்ளரில் ஊற்றி எடுத்துக் கொண்டு படபடத்த இதயத்துடன் தன் அறையை நோக்கி நடந்தாள்.
‘இதிலே நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து கோவிலுக்கு வேற போகணுமா? அதை அவர் கிட்ட நான் சொல்லணும் வேற. சுத்தம். கடவுளே!
எப்படி இருப்பாரோ? எந்த நிலையில இருப்பார்னே தெரியலையே! ஆனா அவர் எப்படி வேணா இருக்கட்டும். இப்பவே ஆகாஷைப் பத்திக் கண்டிப்பா கேக்கணும் அந்த ராட்சஷன் கிட்ட. அவர் என்ன ஆனாரு, எங்கே இருக்காருன்னு. பாவம் ஆகாஷ்!’
கொஞ்சம் பயத்துடன், மூடியிருந்த அறைக் கதவைத் தள்ளினாள். பயத்துடனே உள்ளே எட்டிப் பார்த்தாள்.
கட்டில் மேல் அமர்ந்து இருந்தான் சபரி. அவனுடைய பார்வை எங்கோ வெறித்துக் கொண்டு இருந்தது.
அவனுடைய அந்தப் பார்வையைப் பார்க்கும் போதே திக்திக்கென அடித்துக் கொண்டது மீனாவின் நெஞ்சு.
மானை வேட்டையாடக் காத்திருந்த புலியின் குகைக்குள் நுழைவது போன்று மெல்ல அச்சத்துடன் உள்ளே நுழைந்தாள் மீனா.
நடக்க மறுத்த கால்களை பெரும் பாடுபட்டு அசைத்து எடுத்து வைத்து அவன் முன்னே சென்றாள். கைகள் நடுங்க தேநீர் அடங்கிய கிளாசை அவன் முன் நீட்டினாள். சட்டென்று அவளை நிமிர்ந்து எரிப்பது போல் பார்த்தான் சபரி.
“ச்சேய்.. விடிஞ்சதுமே இந்த விளங்கா மூஞ்சியத் தான் பாக்கணுமா? உன்னை யாருடி இங்கே வரச்சொன்னா இப்ப?” கடும் வார்த்தைகளால் எரிந்து விழுந்தான்.
“அ..அத்த தான் உங்களுக்கு டீ கொண்டு போயி குடுத்துட்டு வரச் சொன்னாங்க”
இவ்வளவு நேரம் இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் இப்போது காணாமல் போயிருந்தது அவளிடம் இருந்து.
“இந்த சாக்கில என் எதுக்க மினுக்கிகிட்டு வந்து என் மனசை மாத்திரலாம்னு மட்டும் எந்த ஒரு தப்புக் கணக்கும் போட்றாதே. புரிஞ்சதா? உன் மூஞ்சியப் பாத்தாலே பத்திகிட்டு வருது எனக்கு! அங்கே டேபிள் மேலே வச்சிட்டு, போடி இங்கே இருந்து”
“நா.. நான் உங்க கிட்ட ஒரு விஷயம் கே.. கேக்கணும்”. கொஞ்சம் விட்டால் அழுது விடுவாள் போல் இருந்தது அவளின் குரல்.
“என்ன கேக்கணும்? எந்த பதிலும் உனக்கு நான் சொல்ற மாதிரி இல்ல. இல்லே.. நான் தெரியாம தான் கேக்குறேன். உனக்கும் எனக்கும் நடுவில எதுவுமே இல்லேன்னு தான் நான் சொல்லிட்டேனே. அப்புறம் என் கிட்ட கேள்வி கேக்குறதுக்கு உனக்கு என்ன அவசியம் வந்துச்சு அப்படி?”
இப்போது மீனாவின் கண்களில் இருந்து கண்ணீர் எந்நேரமும் தெறித்து விழுவதற்குத் தயாராக முன்னாடி வந்து நின்றிருந்தது.
“ஆ.. ஆகாஷை என்ன பண்ணீங்க? என்னைப் பழி வாங்குறேன்னுட்டு அவரை என்ன பண்ணீங்க? நானே உங்களுக்கு என்ன பண்ணேன் ஏது பண்ணேன்னு எனக்கு எவ்வளவு யோசிச்சும் எதுவுமே புரிய மாட்டேங்குது. இதிலே அவரை என்ன செஞ்சு வச்சுருக்கீங்க நீங்க? அவர் இப்ப எங்கே இருக்காரு? அவரை நீங்க எதுவும் பண்ணல தானே? நல்லா இருக்காருல்ல?”
“ஓ! ஆகாஷ்.. உனக்குப் புருஷனா வர இருந்தவன், அதாவது உன்னோட பழைய காதலன்!”
அவன் இப்படிக் கூறியதும் அவனைத் திடுக்கிட்டுப் பார்த்தாள் மீனா.
“கூல்.. கூல்.. கூல் பேபி! எப்படியும் மேரேஜ் ஃபிக்ஸ் ஆனவுடனே ரெண்டு பேரும் சேந்து ஊரெல்லாம் சுத்தி இருப்பீங்கல்ல! சுத்தினீங்க.. அது தான் நான் என் கண்கூடா பாத்துருக்கேனே உங்க ரெண்டு பேரையும்”
என்று கூறி அவளையே பார்த்தான். அவளோ முறைத்தாள் அவனை.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


இவன் கண்காணிச்சுகிட்டே இருந்திருக்கான்.
விமர்சனத்திற்கு மிக்க நன்றி சிஸ் 😊
அவளே கவலையா இருக்கா அவ கிட்ட போய் “என் பையன் சுட சுட தான் டீ குடிப்பான் சுட சுடனு அழுத்தி சொல்லணுமா?” 🤣🤣 இருக்குற கடுப்பில் முகத்துல ஏதும் ஊத்திட போறா பார்த்து.
அவனோட முழு கண்காணிப்பு வளையத்துக்குள்ள தான் இருந்தோம்னு தெரியாம ஆகாஷ் பத்தி கேட்டுட்டாலே.
கல்யாணம் நிச்சயம் ஆனவன் கூட தானே சுத்தினா. அதில் இவனுக்கு என்ன அவ்ளோ கடுப்பு.
உங்களின் இந்த ஆர்வமிக்க விமர்சனத்திற்கு மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் சகோதரி ❤️
நல்ல பையனா பேசி கல்யாணம் பண்ணிட்டு வந்து பேசியே டார்ச்சர் பண்றான்
விமர்சனத்திற்கு மிக்க நன்றி 😊
அதான் எல்லாம் தெரிஞ்சு தானே கட்டிக்கிட்டு வந்தே
பிறகும் என்னடா சுத்தி இருப்பீங்கல்ல… சுத்துனீங்க.
ஆமாம். சுத்தினாங்க அதுக்கு இப்ப என்னங்கிறே
அம்மாடியோவ்… உங்க மகன் பண்ற கூத்துக்கு சூடு காபி அடுத்து கோவிலா
சரிதான், அவனைப் பற்றி தெரியாம தான் பேசுறீங்க 😏😏😏
உங்கள் விரிவான விமர்சனத்திற்கு மிக்க நன்றி சிஸ் 😊