
அத்தியாயம் -30
தன் அத்தான் சபரியின் காதல் நிறைந்த பார்வைக்கு மெல்லிய ஒரு சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தாள் ஷோபனா.
“என்ன, நீ எப்பவும் போல இல்லையே! கொஞ்சம் டல்லடிக்கிறே! மூட் ஆஃப்ல இருக்கிற மாதிரி தோணுது? என்ன விஷயம் ஷோபி?”
“அப்படி எல்லாம் எதுவும் இல்லையே அத்தான்! நான் எப்பவும் போல தானே இருக்கேன்”
அவள் கண்களை ஒரு விநாடி உற்றுப் பார்த்தான் சபரி. அவனுடைய அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல், தலையைக் கீழே தாழ்த்திக் கொண்டாள் ஷோபனா.
அவளுடைய செய்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை சபரியால்.
“ம்ஹூம்.. சம்திங் இஸ் மிஸ்ஸிங் ஷோபனா!”
அதற்கும் அவளிடம் இருந்து பதில் இல்லை. பொதுவாக அனைவருக்கும் இருக்கும் பரிட்சை பயமாக இருக்குமோ என்று சட்டென்று தோன்றியது அவனுக்கு.
“ஒருவேளை உனக்கு எக்சாம் டென்ஷனோ? இதுக்கு எதுக்கு இவ்வளவு பயப்பட்றே ஷோபி? நீ தான் நல்லா படிக்கிற பொண்ணாச்சே! ஒரு பயமும் வேணாம். ஈசியா எழுதிடுவே நீ. ஓகே ஷோபி, நான் பேசி உன் டயத்த வேஸ்ட் பண்ண விரும்பல. நல்லா படி நீ. நான் கிளம்புறேன். சரியா?”
கிளம்பி அவளுடைய அறையில் இருந்து வெளியே வந்தான். சிறிது நேரம் தன் மாமா, அத்தையிடமும் பேசி விட்டுக் கிளம்பினான் சபரி. நாட்கள் ஓடின.
அன்று காலை பதினொன்று முப்பது இருக்கும். எப்போதும் போல் அந்நேரத்தில் அலுவலகத்தில் இருந்தான் சபரி.
மடிக்கணினியின் முன் அமர்ந்து மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய அலைபேசி கிணுகிணுவென சத்தம் எழுப்பி, அழைப்பு வந்திருப்பதை அறிவித்தது.
சபரியோ, வேலையில் கவனமாக இருந்ததால், அதன் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்காமல், அழைப்பைப் புறக்கணித்தான்.
அழைப்பின் சத்தம் முழுமையாக வந்து நின்ற அடுத்த விநாடி மீண்டும் ரீங்காரமிட ஆரம்பித்தது அது.
இம்முறை கொஞ்சம் சலிப்புடன், கைகள் இரண்டும் மடிக்கணினியைத் தட்டிக் கொண்டிருக்க, பார்வையை மட்டும் சிறிதுத் திருப்பி மேஜை மீதிருந்த அலைபேசியைப் பார்த்தான்.
உடனே ஆச்சரியமாகி விட்டான் சபரி. அதில் ஓடிக் கொண்டிருந்தது ஷோபனாவின் பெயர்.
‘என்ன அதிசயமா இருக்கு! ஷோபனா எதுக்குத் திடீர்னு கால் பண்றா? அதுவும் இந்த நேரத்தில? நான் ஆஃபிஸ்ல இருப்பேன்னு அவளுக்குத் தான் தெரியுமே! டிஸ்டர்ப் பண்ண விரும்ப மாட்டாளே! ஏதாவது அவசரமா பேச வேண்டி இருக்குமோ?’
மேஜையில் இருந்த அலைபேசியைக் கையில் எடுத்து, தொடர்புப் பட்டனைத் தட்டிக் காதில் வைப்பதற்குள் இத்தனையும் அவன் மனதில் ஓடியிருந்தது.
“ஹலோ ஷோபி, வாட் அ சர்ப்ரைஸ்! என்ன இந்த நேரத்தில கால் பண்ணிருக்கே?”
சந்தோஷத்தில் படபடவென உற்சாகமாகப் பேசினான்.
ஆனால் எதிர்முனையில் ஷோபனாவின் அழுகையுடன் கலந்த திக்கித்திணறி வந்த குரலைக் கேட்டு அதிர்ந்து போனான் சபரி.
“அ.. அத்தான், இந்த நேரத்தில நீங்க ஆ.. ஆஃபிஸ்ல இருப்பீங்க. தெ.. தெரியும். ஆனா உங்க கிட்ட நான் இப்ப பே.. பேசியே ஆக.. ஆகணும் அத்தான். உடனே இப்பவே எங்க வீட்டுக்கு வர்றீங்களா அத்தான், ப்ளீஸ்?”
அவள் பேசுவதைக் கேட்டு பதறி விட்டான் சபரி. மனம் முழுவதும் பயமும் பதட்டமும் நிரம்பியது.
“ஷோ.. ஷோபி, உன் குரல் ஏன் இப்படி இருக்கு? என்ன பிரச்சினை? என்ன ஆகுது உனக்கு? இப்ப நீ எங்கே இருக்கே?”
அவசரமாக அடுக்கினான் கேள்விகளை. கண்களில் கண்ணீர் தளும்பி நின்றது அவனுக்கு.
“ஃபோன்ல பே.. பேசிட்ருக்க இப்ப நேரமில்ல அத்தான்! நீங்க உடனே கிளம்பி வாங்க. லேட் பண்ணாதீங்க அத்தான் ப்ளீஸ். க.. கடைசியா ஒரு த.. தடவை உங்க கிட்ட நான் பே.. பேசணும் அத்தான். சீ.. சீக்கிரம் வாங்க. நா.. நான் வைக்கிறேன்”
உடனே அழைப்பைத் துண்டித்தும் விட்டாள் ஷோபனா.
“ஷோபி.. ஷோ..ஷோபி!” எதிர் திசையில் சத்தம் இல்லாததைக் கண்டு, அவள் வைத்து விட்டாள் என்று தெரிந்து கொண்ட சபரிக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. நெஞ்செல்லாம் படபடத்தது அவனுக்கு.
‘ஷோபி ஏன் இப்படி ஒரு மாதிரியா பேசினா? சரியாவே தோணலியே! க.. கடைசியா பேசணும்னு வேற சொன்னாளே! அ.. அப்படின்னா என்ன அர்த்தம்? என்ன சொல்ல வர்றா? அய்யோ கடவுளே!’
உடனே அருகில் இருந்த சக ஊழியரிடம் சொல்ல வேண்டியதை அவசரமாகச் சொல்லி விட்டு அங்கிருந்து ஓடினான்.வெளியே வந்து வண்டியைக் கிளப்பினான்.
‘வேகமாவே போனாலும் அவளோட வீட்டுக்குப் போயி சேர்றதுக்கு குறைஞ்சது ஒரு அரைமணி நேரமாச்சும் ஆகுமே! அதுவரை எந்தப் பிரச்சினையும் ஆகக்கூடாதே! ஏன் அப்படிப் பேசினா அவ? கடைசியா பேசணும்னு எதுக்கு சொன்னா? எந்த அர்த்தத்தில சொன்னா?’
சபரிக்கு எதுவுமே புரியவில்லை. குழப்பமான மனநிலையில் வேகமாக வண்டியைச் செலுத்தினான். நல்லவேளையாக அந்நேரம் வாகன நெரிசல் அவ்வளவாக இல்லை.
ஆனாலும் அங்கு போய்ச் சேரும் போது நேரம் பண்ணி ரெண்டு இருபது என்று காட்டியது.
வண்டியை நிறுத்தக் கூடச் செய்யாமல் அப்படியே போட்டு விட்டு ஓடிச் சென்று அழைப்பு மணியை அழுத்தினான்.
அவனுடைய மனம் பரிதவித்துக் கொண்டிருந்தது.
கதவின் மேல் கை வைத்தான். அது சட்டென்று உள்ளே சென்றது. கதவு தாழிடாமல் இருந்ததைக் கண்டு, நன்றாகத் தள்ளி உள்ளே நுழைந்தான் வேகமாக. முன்னறையில் யாரும் இல்ல.
“மாமா.. அத்தே..” அவனுடைய குரலுக்கு எந்தப் பதிலும் வரவில்லை. ஷோபனாவின் அறையைப் பார்த்தான். அதன் கதவு மூடியிருந்தது.
அருகில் சென்று கதவைத் தள்ளினான். திறந்து கொண்டது. அங்கு அவன் கண்ட காட்சியில் திகைத்து நின்று விட்டான்.
பாதி மயங்கிய நிலையில் கண்கள் சொருக கட்டிலில் கிடந்தாள் ஷோபனா. பாதி கண்கள் திறந்த நிலையில், அவளுடைய பார்வை அறையின் வாசலை நோக்கியவாறு இருந்தது.
வாசலில் சபரியைக் கண்டதும், அந்த நிலையிலும் முகம் மலர்ந்தது அவளுக்கு. வேகமாக ஓடிக் கட்டிலருகே சென்றான் சபரி.
“ஷோ.. ஷோபி.. ஷோபி, என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி இருக்கே?”
அவசரமாய் அமர்ந்து கொண்டு, கண்களில் கண்ணீர் வழிய, அவளுடைய தலையை எடுத்து தன் மடியில் கிடத்திக் கொண்டான்.
“என்னாச்சு ஷோபி? ஏன் இப்படி இருக்கே?” பதறிய குரலில் கேட்டான்.
“அ.. அத்தான்.. வந்துட்டீங்களா? ந.. நல்லவேளை வந்தீங்க!”
பேச முடியாமல் திக்கித் திணறிப் பேசினாள். அவளுடைய கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது.
“அத்தை மாமா எங்கே ஷோபி? நீ ஏன் இப்படி இருக்கே?” படபடவென நெஞ்சு அடித்துக் கொண்டது அவனுக்கு.
“அ.. அம்மாவும் அப்பாவும் க.. கல்யாணத்துக்கு போ.. போயிருக்காங்க. நா.. நான் ம.. மருந்து சாப்டுட்டேன் அத்தான்!”
அதிர்ச்சியில் உறைந்தான் அவன்.
“எ.. என்ன சொல்றே ஷோபி? மருந்து சாப்பிட்டியா? மருந்து சாப்பிட்ற அளவுக்கு என்ன பிரச்சினை உனக்கு? எதுக்கு இப்படி செஞ்சே? முட்டாளா நீ? படிச்ச பொண்ணு தானே நீ? என் கிட்டேயாவது நீ சொல்லி இருக்கலாமில்ல? கொஞ்சம் கூட யோசிக்கவே செய்யாம இப்படிப் பண்ணிட்டியே ஷோபி!”
குரல் கமறப் பேசிவிட்டு நிறுத்தியவன் மீண்டும் தொடர்ந்தான் அவசரமாக.
“சரி வா, இப்ப பேசிட்டு இருக்க எல்லாம் நேரமில்ல. ஹாஸ்பிடல் போகலாம் உடனே” என்று அவளைக் கைகளால் தூக்கச் சென்றான்.
“இருங்க அத்தான், ஆஸ்பத்திரிக்குப் போற வரைக்கும் எல்லாம் என் உயிர் தாங்காது அத்தான். நான் உங்க கிட்ட பேசணும் கொஞ்சம். சொல்ல வேண்டியத சொல்லி முடிச்சுட்றேன் அத்தான் ப்ளீஸ்!”
அவளுடைய கெஞ்சலில் வேறு வழியின்றி அப்படியே உட்கார்ந்து கொண்டு, அவளுடைய முகத்தையே பார்த்தவாறு, குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
‘அன்னைக்கு இவ டென்ஷனா இருந்தப்பவே நான் கொஞ்சம் கவனிச்சுக் கேட்ருக்கணுமோ இவ கிட்ட? சாதாரண எக்சாம் டென்ஷனா இருக்கும்னு நினைச்சு விட்டுட்டேனே! அப்பவே விடாம கேட்ருந்தா நடந்தது என்னன்னு அப்பவே ஷோபி சொல்லி இருப்பாளோ என் கிட்ட? இப்படி ஒரு விபரீதம் நடக்காம இருந்து இருக்குமே! இப்படி ஆயிடுச்சே இப்ப!’
அவனுடைய கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக வழிந்து கொண்டிருந்தது.
“அ.. அத்தான், கா.. காலேஜ்ல ஒரு பெரிய சிக்கல்ல மாட்டிக்கிட்டேன் அத்தான் நான். அதில இருந்து வெளியே எப்படி வர்றதுன்னு தெரியல. ரொம்பப் பயமா இருந்துச்சு அத்தான். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தெரிஞ்சா உயிரையே விட்ருவாங்க அத்தான். அது தான் எனக்கு இதைத் தவிர வேற வழி தெரியல அத்தான்!”
நிறுத்தி நிறுத்தி மூச்சிரைக்க சொல்லி விட்டு மீண்டும் நிறுத்தினாள்.
“ஏன் ஷோபி, நீ என் கிட்ட சொல்லிருந்தா, நான் ஏதாவது செஞ்சிருப்பேன்ல. அதை விட்டுட்டு இப்படிச் செய்றதுக்கு உனக்கு எப்படி மனசு வந்துச்சு ஷோபி? கொஞ்சமாவது எங்கள எல்லாம் நினைச்சுப் பாத்தியா நீ?”
அழுகையில் குரல் கமறியது அவனுக்கு.
“என்ன நடந்ததுன்னு சொல்லு ஷோபி?”
தன் உள்ளங்கையில் மடித்து வைத்திருந்த ஒரு காகிதத்தை அவனிடம் நீட்டினாள் ஷோபனா.
“எல்லாத்தையும் இதிலே விவரமா எழுதி இருக்கேன் அத்தான். அப்புறம் மெதுவா படிங்க. தயவு செஞ்சு நான் மருந்து குடிச்சேன்ற விஷயத்த அப்பா அம்மா கிட்ட சொல்லாதீங்க அத்தான். உங்களத் தவிர இந்த விஷயம் வேற யாருக்கும் தெரியக்கூடாது அத்தான் ப்ளீஸ். யாரு கிட்டேயும் சொல்ல மாட்டேன்னு எனக்குப் பிராமிஸ் பண்ணுங்க!” என்று கையை அவன் முன் நீட்டினாள்.
சபரியும் அவள் கையில் அடித்து சத்தியம் செய்தான்.
“சரி ஷோபி, ஏதாச்சும் சொல்லி சமாளிச்சுக்கிறேன். சொல்ல மாட்டேன் யாரு கிட்டேயும். இப்ப நாம ஹாஸ்பிடலுக்குப் போலாம் ஷோபி. எப்படியாச்சும் நான் காப்பாத்துவேன் உன்னை. என்னால உன்னை இழக்க முடியாது ஷோபி. அப்படியே உன்னை விட மாட்டேன்” கூறியவாறே அவளைக் கைகளில் தூக்கினான்.
அவனைப் பார்த்துச் சிரித்தாள் காதலுடன்.
“நீங்க என்னைத் தூக்கிட்டு வெளியே போறதுக்குள்ளேயே என் உயிர் பிரிஞ்சிடும் அத்தான். அதனால வேண்டாம் அத்தான் விடுங்க. என் உயிர் பிரியிற வரைக்கும் உங்க முகத்த நான் பாத்துட்டே இருக்கணும் அத்தான் ப்ளீஸ்! என்னை எங்கேயும் கூட்டிப் போகாதீங்க”
கைகளில் அவளைத் தூக்கியவாறு அப்படியே மீண்டும் கட்டிலில் சோர்ந்து உட்கார்ந்து விட்டான் சபரி. அழுதவாறு அவளைப் படுக்க வைத்து அவளுடைய தலையைத் தன் மடியில் வைத்துக் கொண்டான்.
“தயவு செஞ்சு என்னை மன்னிச்சிருங்க அத்தான். உங்கள நான் ஏமாத்திட்டேன்” அவளுடைய கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


பிரச்சினைகளை பற்றி நண்பர்களிடமோ, பெற்றோரிடமோ அல்லது நமக்கு நெருக்கமானவர்களிடமோ பகிர்ந்து கொள்ள வேண்டும்.
நாம் மட்டும் பிரச்சினைகளை அணுகும் போது நமது பார்வையில் மட்டுமே பார்த்து செயல்படுவோம்.
அடுத்தவரிடம் சொல்லும் போது அவர்களது பார்வையில் பிரச்சினையை யோசித்து கருத்து கூறுவர்.
ஷோபி எடுத்த ஒரு நொடி அவசர முடிவு எத்தனை பேருக்கு மன காயத்தை அளித்துவிட்டது.
மருத்துவமனைக்கும் செல்லாமல் அவனையும் உணர்வுகளால் கட்டிப் போட்டுவிட்டாள்.
மிக்க நன்றி சிஸ் 😊