
அத்தியாயம் -3
மகளின் திருமணம் மண்டபம் வரைக்கும் வந்து, திடீரென அது நின்று போன கவலையில் சுந்தரமும் ரேணுகாவும் வாடிய முகத்துடன் நின்றிருந்தனர்.
நடந்ததை இன்னமுமே நம்ப இயலாமல் திகைத்துப் போய் நின்றிருந்தாள் மீனா.
‘ஆகாஷா இப்படி செஞ்சாரு? என்னைத் தவிக்க விட்டுப் போக எப்படி அவருக்கு மனசு வந்தது? என் கிட்ட உண்மையச் சொல்லி இருந்திருக்கலாமே! ஏன் இப்படிப் பண்ணார்?’
நினைத்து நினைத்து பரிதவித்துப் போனாள் பெண்ணவள்.
ஒரு சிலர் அவளையே பார்த்தபடி இருந்தனர்.
“ஏய், மணப்பொண்ணு இவ தான். இவளைத் தான் விட்டுட்டுப் போயிட்டான் மாப்பிள்ளை. யாருக்குத் தெரியும்? உள்ளே என்ன நடந்ததுன்னு நமக்கு எப்படித் தெரியும்? இவ சரியா இருந்திருந்தா அவன் ஏன் ஓடிப் போயிருக்கப் போறான்? தாலி கட்ற நேரத்தில போயிருக்கான்னா விஷயம் எதுவும் இல்லாமேயா இருக்கும்? ம்ம்.. அந்த கடவுளுக்குத் தான் வெளிச்சம்!”
“ம்ம்.. இருக்கும்.. இருக்கும்! இவ கழுத்தில தாலி கட்டப் பிடிக்காம பையன் ஓடிப் போயிருக்கான்னா, இவ மேலே தப்பு எதுவும் இல்லாமேயா இருக்கும்?”
“இவ தான் சரி இல்லையோ என்னவோ! அது தெரிஞ்சதும் இவ கழுத்தில தாலி கட்டப் பிடிக்காம மாப்பிள்ள எஸ்கேப் ஆயிட்டான் போல!”
இப்படி எல்லாம் வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டனர். நாக்கிற்குத் தான் நரம்பே இல்லையே! அது எப்படி வேண்டுமானாலும் புரண்டு புரண்டு பேசும் அல்லவா?
அது என்னமோ, பொதுவாக ஒரு பெண் ஓடிப் போனாலும் சரி, ஆண் ஓடிப் போனாலும் சரி, அவதூறு பேச்சு வருவது என்னவோ முதலில் அந்தப் பெண்ணிற்குத் தான்.
ஆண் பிள்ளை ஓடிப் போனால், உடனே அந்தப் பெண் மீது தான் தவறு இருக்கும் என்று அவளைக் குறை சொல்லும் இந்தச் சமூகம், அதுவே அந்தப் பெண் ஓடிப் போனாள் என்றால் அந்த மாப்பிள்ளை ஒருவேளை சரியில்லையோ? அதனால் தான் இப்படி நடந்ததோ என்று ஏன் சொல்வதில்லை இந்த மக்கள்? அப்போதும் அந்தப் பெண் மீதே பழி போடுவது ஏன்?
அதிலும் நடுத்தர வர்க்கத்தில் பிறந்த பெண்கள் மிகவும் பாவம் தான். பெரும்பாலும் அவர்கள் தான் இப்படியான ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் கேட்க நேரிடுகின்றது.
இப்போது இங்கும் அதே தான் நடந்து கொண்டிருந்தது.
இத்தகைய பேச்சுகளைக் கேட்க நேர்ந்த பிறகு, அதற்கு மேல் அங்கு நிற்கவே முடியவில்லை மீனாவால்.
“வாங்கப்பா, நாம இங்கே இருந்து போகலாம். மொதோ இடத்தைக் காலி பண்ணலாம் வாங்க!” என்று அழைத்தாள்.
மீனாவின் அண்ணன் நவீன் மட்டும் தான் கோபத்தில் வெகுண்டு கொண்டு இருந்தான். ஆனால் என்ன செய்ய இயலும் அவனாலும்?
சுந்தரம் தான் மிகவும் மனமுடைந்து போயிருந்தார். தன் மனைவி ரேணுகாவிடம் வாய் விட்டுப் புலம்பிக் கொண்டிருந்தார்.
“இனிமே நம்ம மீனாவுக்கு எப்படி கல்யாணம் நடக்கும் ரேணுகா? மாப்பிள்ளை கிடைப்பாங்களா? கல்யாணம் எதுக்கு நின்னுச்சுன்னு ஆயிரம் கேள்வி கேப்பாங்களே! இந்த ஊர் உலகம், நம்ம மீனாவ, இல்லாத கதை எல்லாம் திரிச்சுப் பேசுமே ரேணுகா! நான் என்ன பண்ணுவேன்? என் பொண்ணோட வாழ்க்கை இப்படி ஆயிடுச்சே!”
மீனாவின் பின்னே நடந்தபடி தன் வேதனைப் பேச்சுகளை கண்ணீர் விட்டு அரற்றிக் கொண்டிருந்தார்.
“அப்பா, பேசாம வர்றீங்களாப்பா கொஞ்சம்? இதெல்லாம் வீட்டில போயி புலம்பலாம்பா ப்ளீஸ்!”
தன் தந்தையை மெல்லமாக அதட்டினாள் மீனா.
அப்போது அவர்களை நோக்கி இளைஞன் ஒருவன் வந்தான்.
“சார், கொஞ்சம் நில்லுங்க!” சுந்தரத்தைப் பார்த்துக் கூறினான்.
திடுக்கிட்டு நின்றார் சுந்தரம். ஏறிட்டுப் பார்த்தார் அந்த இளைஞனை.
‘யாரு இவன்? எதுக்குப் போறவங்களத் தடுக்குறான்?’
யோசனையுடன் அவனைப் பார்த்தனர் சுந்தரமும் ரேணுகாவும்.
“யார் தம்பி நீங்க?” என்று அவனிடமே கேட்டார்.
தந்தையின் குரலைக் கேட்டு முன்னால் சென்று கொண்டிருந்த மீனாவும் நவீனும் நின்றனர். அர்ச்சனாவையும் நிற்கச் செய்தான் நவீன்.
தன் தந்தையின் அருகே இளைஞன் ஒருவன் நிற்பதைக் கண்டு அனைவரும் வியப்புடன் பார்த்தனர் அவனை.
“சார், என்னை உங்களுக்குத் தெரியாது. ஆனா உங்களை எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும் சார். உங்களன்னா நீங்க இல்ல சார். உங்க பொண்ணைத் தெரியும் சார் எனக்கு”
அவன் அப்படிக் கூறியவுடன் அவர்கள் அனைவருமே திகைத்தனர். மீனாவோ யோசனைக்குத் தாவி இருந்தாள்.
‘இவரை நான் இது வரைக்கும் பாத்த ஞாபகமே இல்லையே! இவர் என்னன்னா என்னை நல்லா தெரியும்னு சொல்றாரே! எங்கே பாத்துருப்பாரு?’
சுந்தரமும் ரேணுகாவும் மகளைத் திரும்பிப் பார்த்தனர் கேள்விக் குறியுடன். அதற்குள் அந்த இளைஞனே மீண்டும் பேசினான்.
“சார், எனக்குத் தான் அவங்களத் தெரியும்னு சொன்னேன். அவங்களுக்கு நான் யாருன்னே தெரியாது சார். சார், சுத்தி வளைக்காம நான் சொல்ல வந்த விஷயத்தை மொதோ சொல்லிட்றேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா உங்க பொண்ணை இப்பவே இங்கேயே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் சார்”
உடனே குடும்பமே அதிர்ந்து போய் அவனைப் பார்த்தனர்.
“என்ன தம்பி சொல்றீங்க நீங்க? நீங்க யாரு என்னன்னு எதுவுமே எங்களுக்குத் தெரியாது. என் பொண்ணு பத்தியும் உங்களுக்கு எதுவும் தெரியாது. அப்படி இருக்கிறப்ப திடீர்னு வந்து கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்றீங்க?”
குழப்பத்துடன் வினவினார் சுந்தரம்.
“சார், நான் தான் சொன்னேனே.. உங்க பொண்ணை நான் டெய்லி பாப்பேன் சார். அவங்க வேலை பாக்குற ஆபிசுக்கு எதிரில தான் என்னோட ஆஃபிஸ் இருக்கு.
ஆனா இதுவரை அவங்க கிட்ட நான் பேசினது இல்ல. கொஞ்ச நாளா பேசணும்னு நினைச்சுத் தயங்கி தயங்கி பேசாமயே இருந்துட்டேன்”
கூறியவன் , சிறிது நிறுத்தி விட்டு மீண்டும் தொடர்ந்தான் சிறிது தயக்கத்துடன். மீனாவுக்கோ, அவன் பேசுவதைக் கேட்க கேட்க மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
“சார், இப்ப நான் சொல்லப்போறதைக் கேட்டு உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கலாம். உங்களுக்கு அது பிடிக்குமா இல்லையான்னு கூட எனக்குத் தெரியல. தயவு செஞ்சு கோபப்படாம கேளுங்க சார்”
அங்கு ஒவ்வொருவர் முகத்திலும் குழப்ப ரேகைகள் வரிவரியாக ஓடிக் கொண்டிருந்தன.
“நான் மட்டும் அப்பவே தயங்காம பேசி இருந்தேன்னா, இந்த நேரம் உங்க பொண்ணுக்கு நான் தான் மாப்பிள்ளையா இருந்துருப்பேன்”
அவன் கூறியதைக் கேட்டு இன்னும் திகைப்பில் ஆழ்ந்தாள் மீனா. தொடர்ந்து பேசினான் இளைஞன்.
“ஆமா சார்.. நான் உங்க பொண்ணைக் காதலிக்கிறேன். கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன். என் மனசில இருக்கிற என்னோட காதல நான் உங்க பொண்ணு கிட்ட சொல்றதுக்குள்ள அவங்களுக்குக் கல்யாணம் முடிவாயிடுச்சுன்னு கேள்விப்பட்டேன்.
அதனால தான் வேற வழி இல்லாம, என் ஆசைய மனசிலேயே புதைச்சிகிட்டேன். எங்கே இருந்தாலும் அவங்க நல்லா இருக்கணும்னு மனசார நினைச்சேன். அவங்களக் கட்டிக்கப் போற மாப்பிள்ளையப் பாக்க ஆசையா இருந்துச்சு.
அது தான் கல்யாணத்தைப் பாத்துட்டு அப்படியே அவங்களுக்கும் ஒரு வாழ்த்து சொல்லிட்டுப் போகலாம்னு தான் சார் வந்தேன் நான்.
ஆனா இங்கே வந்தா, இப்படி என்னென்னமோ நடந்து போச்சு. மனசு எனக்கு ரொம்ப கஷ்டமாப் போச்சு சார். அதுதான் இப்பவாவது என் மனசில இருக்கிறத உங்க கிட்ட சொல்லலாம்னு தான் வந்தேன்.
உங்க கிட்ட எல்லா உண்மையும் சொல்லிட்டேன் சார். உங்க பொண்ணு கூட என்னைச் சேத்து வைக்க வேண்டியது உங்க பொறுப்பு சார். ப்ளீஸ், முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க சார்”
கடைசியில் கெஞ்சியவாறு தன் பேச்சை நிறுத்தினான் அந்த இளைஞன்.
அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் முகங்களை ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர்.
அவற்றில் ஆச்சரியமும் குழப்பமும் தான் படிந்து இருந்தது.
அவர்களின் குழப்பத்தைக் கண்டு மீண்டும் அவனே தொடர்ந்து பேசினான்.
“சார், அதுக்காக நான் ஒன்னும் எதுவும் இல்லாதவன் எல்லாம் கிடையாது சார். எனக்கு சொந்த வீடு ஒன்னு இருக்கு. கை நிறைய சம்பாதிக்கிறேன் சார். எனக்கும் அம்மா அப்பா எல்லாரும் இருக்காங்க சார்.
எனக்காக பொண்ணு எல்லாம் பாத்துட்டு இருக்காங்க சார் அவங்க. நான் தான் அவங்களுக்குப் பிடி குடுக்காம இருக்கேன். நாங்களும் நல்ல குடும்பம் தான் சார்.
நீங்க மட்டும் சரின்னு சொன்னீங்கன்னா உடனே அவங்களுக்கு ஃபோன் பண்ணி இப்பவே வரச் சொல்லிட்றேன். சொல்லுங்க சார், இந்தக் கல்யாணத்துக்கு உங்களுக்குச் சம்மதமா?”
படபடவெனப் பேசி விட்டுக் கேள்வி கேட்டு நின்றவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்து நின்று விட்டார் சுந்தரம்.
அப்போது நவீன் தான் முதலில் சுதாரித்துக் கொண்டுத் தன் தந்தையைப் பார்த்தான்.
“அப்பா, கொஞ்சம் இந்தப் பக்கம் வாங்க. பேசணும் உங்க கிட்ட”
என்று அவரைத் தனியே அழைத்துச் சென்றான்.
“என்னடா நவீன்? இந்தப் பையன் திடீர்னு இப்படி வந்து கேக்குறாரு? என்ன சொல்றது?”
“அப்பா, எனக்கென்னமோ இந்தப் பையனைப் பாத்தா நல்ல பையனாட்டாம் தான் தெரியுதுப்பா. அவர் சொல்ற மாதிரி நாம ஏன் இப்பவே இந்தக் கல்யாணத்தை நடத்தக் கூடாது? நமக்கும் நல்லது தானேப்பா. மீனாவோட ஆஃபிஸ் எதுக்க இருக்கிற ஆஃபிஸ்ல தான் வேலை பாக்குறதா சொல்றாரு. அவர் வெளிப்படையா பேசுறதுலேயே அவரோட நல்ல குணத்தை புரிஞ்சுக்க முடியுது. மீனாவுக்கு இது நல்ல வரனா தாம்பா எனக்குத் தோணுது. நீங்க என்ன சொல்றீங்க?”
“அது தாண்டா நானும் அதையே தான் யோசிக்கிறேன். எவ்வளவு செலவு பண்ணி மண்டபம் எல்லாம் புக் பண்ணி கடைசியிலே இப்படி ஆயிடுச்சேன்னு கவலையா இருந்துச்சு. அந்தக் கடவுளா தான் இந்தப் பையன நம்ம மீனாவுக்காகன்னு அனுப்பி வச்சிருப்பார்னு நினைக்கிறேன் நவீன். அப்படின்னா கல்யாணத்த நாம இப்பவே முடிச்சிடலாமா?”
“ஆமாப்பா.. கல்யாணம் நின்னத வச்சு எப்படி எல்லாம் ஊரு கதை கட்டி விடுவாங்கன்னு நமக்குத் தெரியாதா? மீனாவை ஏற்கனவே மனசிலே நினைச்சதா வேற சொல்றாரு. சொல்லப் போனா எனக்கு என்னமோ நம்ம மீனாவுக்கு அந்த ஆகாஷ விட இவர் தான் பொருத்தமா இருப்பார்னு தோணுதுப்பா”
“சரிப்பா, மீனாவையும் உன் அம்மாவையும் அர்ச்சனாவையும் கூப்பிடு. அவங்க கிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுப்போம்”
சுந்தரம் இவ்வாறு கூறவும் நவீனும் தன் குடும்பத்தை அழைத்தான்.
சுந்தரமும் நவீனும் அவர்களிடமும் பேசினர். ரேணுகாவுக்கும் அர்ச்சனாவுக்குமே அவர்கள் சொல்வது தான் சரியெனப் பட்டது.
ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு தலை அசைத்தனர்.
“ஆமாங்க, நீங்க சொல்றது சரிதான். பையன் நல்லவனா தான் தெரியிறான் பாக்க. முடிக்கலாங்க” ரேணுகாவும் பச்சைக் கொடி காட்டினார்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


இவன் தான் ஹீராவா? மீனாவுடைய மனநிலை எப்படி இருக்கப் போகுதோ 😐
நாளைய அத்தியாயத்தில் தெரிந்து விடும் சகோதரி. மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் 😊
மீனா என்ன சொல்வான்னு தெரியல… இவன் தான் ஹீரோவா
நாளைய அத்தியாயத்தில் தெரிந்து விடும் சகோதரி. மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் 😊
கல்யாண செலவு, உறவினர்களின் பேச்சு என்று யோசித்து அவசர அவசரமாக திருமணம் செய்வது எவ்வகையில் சரிவரும்? 🤔
ஏனோ அது போல் நிகழும் திருமணங்களின் மேல் ஒரு பிடித்தமின்மை. அதற்காக மற்ற திருமணங்கள் நல்வகையில் செல்லுமா என்றால் அதற்கு பதில் உறுதியில்லை என்பது தான். ஆனால் இது போல் திருமணங்களில் யாரோ ஒருவரோ இல்லை இருவருமோ சூழ்நிலை காரணிகளால் நெருக்கடிக்கு ஆளாகின்றனர் அதுவும் வாழ்வின் அடுத்தக்கட்ட அடியை எடுத்து வைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த சமயத்தில் என்பது உண்மை.
திடீர் என்று வந்து காதலிக்கிறேன் கரம்பிடிக்கிறேன் என்கிறானே. இவன் நல்லவனா? கெட்டவனா?
மீனாவின் முடிவு என்னவாக இருக்க போகின்றதோ?
பொருத்திருந்து பார்ப்போம்.
உங்களின் நீண்ட விமர்சனத்திற்கு மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் சகோதரி 😊
இதென்ன புதுசா வருபவன் கல்யாண மாப்பிள்ளையாக மாறி விடுவான் போலிருக்கே…
அப்ப இவன் தான் ஹீரோவா?
காதலித்தானாம் ; அவளுக்கு கல்யாணம் பேசி முடித்ததால் அமைதியாக இருந்தானாம் ; இப்போது அவனுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்க பெற்றதாக நினைத்து வந்து விட்டானாம்.
என்னங்கடா நடக்குது இங்கே ?
மீனா இதற்கு சம்மதம் தெரிவிப்பாளா?
இருவரின் திருமணமும் நடக்குமா பார்ப்போம்…
அதானே! கல்யாணம்னா விளையாட்டா போச்சா இவங்களுக்கு? நல்லா கேளுங்க சகோதரி 😄 உங்களின் இந்த அருமையான விமர்சனத்திற்கு மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் சகோதரி ❤️