
அத்தியாயம் -29
மகளை நினைத்து கவலையில் இருந்த போது தான் அந்த யோசனை தோன்றியது மீனாட்சிக்கு. உடனே அதைத் தன் கணவரிடம் கூற விழைந்தார்.
“ஏங்க, நம்ம ஷோபனாவுக்குப் பேசாம, உங்க தங்கச்சி மாலதியோட மகன் சபரிக்கே கட்டி வச்சுட்டா என்ன? வெளியே கட்டிக் குடுக்குறதுக்கு, நம்ம சொந்தத்திலேயே கட்டிக் குடுத்தோம்னா, நாமளும் கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம் இல்லேங்க.
வெளி ஆளுங்கன்னா, அவங்க எப்படி இருப்பாங்களோ, நம்ம ஷோபனாவ எப்படிப் பாத்துப்பாங்களோன்னு பயந்துட்டே இருக்கணும். இதுன்னா நமக்குப் பிரச்சினை இல்லேல்லேங்க.
மாலதியும், நம்ம ஷோபனாவ அவளோட பொண்ணு மாதிரி பாத்துப்பா. ஏற்கனவே அவளுக்கு நம்ம ஷோபனான்னா உயிர்.
சபரிக்கும் என்ன குறைச்சல் இருக்கு? படிச்சுட்டு நல்ல வேலையில இருக்கான். நல்ல அழகு. தங்கமான பையன். இத விட வேற என்னங்க வேணும்? அதனால எனக்கு இது ரொம்ப நல்ல யோசனையா படுது. உங்களுக்கு என்னங்க தோணுது?”
மனைவி இப்படிக் கூறியதும் உடனே வேல்முருகனும் யோசிக்க ஆரம்பித்து விட்டார். கணவனின் முகத்தையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் மீனாட்சி.
ஒரு நிமிடம் யோசித்தார் அவர். பின்னர், அவருடைய முகத்தில் ஒரு சந்தோஷச் சிரிப்புப் பரவியது.
“ஆமா மீனாட்சி, நீ சொல்றதும் சரி தான். இத்தனை வருஷம் நமக்கு இந்த மாதிரி ஒரு யோசனை நமக்கு தோணாம போச்சு பாரு! ரொம்ப நல்லா தான் இருக்கும் இப்படி செஞ்சா. ஆனா, மாலதி இதுக்கு என்ன சொல்வாளோ தெரியலேயே? அவ வீட்டுக்காரருக்கும் இந்த யோசனை பிடிக்குமோ என்னமோ? அப்புறம் சபரியும் நம்ம ஷோபனாவும் இதுக்கு ஒத்துக்கணும் இல்லையா?”
“அதெல்லாம் பேசலாங்க. மொதோ மாலதி கிட்ட விஷயத்தச் சொல்லலாம். அவ அவளோட புருஷன் கிட்ட கேக்கட்டும் மொதோ. அவருக்கு இதில சம்மதம்னா, மகனைக் கேக்கச் சொல்லி சொல்லுவோங்க. நம்ம ஷோபனா இதில என்னங்க சொல்லப் போறா? நாம சொன்னா சரின்னு சொல்லப் போறா”
“அப்படி எல்லாம் சொல்ல முடியாது மீனாட்சி. இதில எல்லாருக்குமே விருப்பம் இருந்தா மட்டும் தான் நாம மேக்கொண்டு எதுவும் செய்ய முடியும்”
“சரிங்க, எல்லார் கிட்டேயும் கேக்கலாம். ஷோபனா என்ன, இப்ப பத்து தானே படிக்கிறா? கேக்கலாங்க. மொதோ நீங்க உங்க தங்கச்சி கிட்ட பேசுங்க”
ஆனால், இவர்கள் நினைத்ததற்கு மாறாக, இந்த விஷயத்தை மாலதியாகவே தன் அண்ணனிடம் கேட்டுக் கொண்டு வந்து விட்டார்.
“அண்ணே.. என் பையன் சபரிக்கு உன் பொண்ணு ஷோபனாவைப் பாக்காலாமான்னு எங்களுக்கு ஒரு எண்ணம் இருக்குதுண்ணே. நீயும் அண்ணியும் என்ன நினைக்கிறீங்க?”
தங்கள் மனதில் உள்ளதை தங்கை அப்படியே கேட்டதும் வேல்முருகனுக்கும் மீனாட்சிக்கும் ஏகப்பட்ட சந்தோஷம்.
விஷயம் இவ்வளவு எளிதாக இருக்கும் என்று அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“சபரியோட சம்மதத்தைக் கேக்க வேணாமா மாலதி?” தங்கையிடம் கேட்டார் வேல்முருகன்.
“ஆமாண்ணே, கண்டிப்பா கேக்கணும். நாங்க சொன்னா அவன் எதையும் மறுத்துப் பேச மாட்டாண்ணே”
மாலதி கூறி முடிப்பதற்குள் சீனிவாசன் இடை புகுந்தார்.
“அதுக்கென்ன மச்சான், கேட்டுட்டாப் போச்சு. என்ன இருந்தாலும் கல்யாணம் பண்ணி வாழப் போறது அவங்க ரெண்டு பேரும் தான். அவங்க சம்மதம் ரொம்ப முக்கியம் இல்லையா? கேட்டுச் சொல்றோம் மச்சான்!”
“ஆமாங்க மாப்பிள்ள, அது தான் நல்லது!”
அடுத்த இரண்டு நாட்களில் பதில் வந்து விட்டது மாலதியிடம் இருந்து, தங்கள் மகனுக்கும் இதில் சம்மதம் என்று.
வேல்முருகனுக்கும் மீனாட்சிக்கும் ஒரே ஆனந்தம். தாங்கள் நினைத்த ஒரு விஷயம் இவ்வளவு எளிதில் கை கூடும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
ஆனால், ஷோபனாவிடம் இப்போது எதுவும் சொல்லிக் கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்தனர். கல்லூரிக்குப் போகும் வயதில் விஷயத்தைக் கூறி அவளுடைய சம்மதத்தைப் பெறலாம் என்று நினைத்து இந்த விஷயத்தில் அமைதி காத்தனர்.
மாலதியிடமும் சொல்லி வைத்தனர் இதை.
“ஆமாண்ணே, நீ சொல்றதும் சரி தான். இப்ப இருந்து சொல்லி எதுக்குப் படிக்கிற பொண்ணோட மனச நாமளா கெடுக்கணும். சபரி கிட்டேயும் நான் சொல்லி வைக்கிறேண்ணே. இப்போதைக்கு ஷோபனா கிட்ட எந்தப் பேச்சும் வச்சுக்கக் கூடாதுன்னு சொல்லிட்றேன்”
சபரி, தன்னுடைய படிப்பின் கடைசி வருடத்தில் இருந்தான். தன் அப்பாவும் அம்மாவும் கூறுவது அவனுக்கும் சரியென்றே பட்டது. உண்மையிலேயே அவன் நல்ல பிள்ளை ஆயிற்றே!
நாட்கள் வேகமாக நகர்ந்தது. சபரி படிப்பை முடித்து விட்டு நல்ல வேலையில் சேர்ந்திருந்தான். ஷோபனா கல்லூரிக்குச் செல்லும் நேரமும் வந்தது. அவள் பிரியப்பட்ட படிப்பு, அவள் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைத்தது.
மகிழ்ச்சியில் மிதந்தாள் ஷோபனா. கோவைக்குச் செல்வதற்கு ஒரு மாதம் இருக்கும் போது தான், வேல்முருகனும் மீனாட்சியும் சேர்ந்து மகளை அருகில் உட்கார வைத்து, அவளிடம் விஷயத்தைக் கூறினார்கள்.
“ஷோபிம்மா, நீ ஆசைப்பட்ட மாதிரியே கோயமுத்தூர் போயி படிக்கப் போறே. ரொம்ப சந்தோஷம்டா! ஆனா, அங்கே போயி நீ உண்டு, உன் வேலை உண்டுன்னு இருக்கணும். எந்த வம்பு தும்புக்கும் போகக்கூடாது. புரிஞ்சதா?”
“சரிங்கப்பா, அதெல்லாம் என்னால உங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராதுப்பா. நான் உங்களுக்கு டெய்லி நைட் ஃபோன் பண்ணிப் பேசிட்றேன். சரிங்களாப்பா?” என்று கொஞ்சும் குரலில் கேட்டாள்.
வேல்முருகன், மகளின் கொஞ்சல் பேச்சில் மனம் நெகிழ, அவளுடைய தலையைக் கோதி விட்டார் அன்புடன்.
“சரிடா, அப்பா உன் கிட்ட இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும். சொல்லட்டுமா?”
“சொல்லுங்கப்பா” கண்களைச் சிமிட்டியவாறுக் கூறினாள் ஷோபனா.
“உன் அத்தை பையன் சபரி இருக்கான்ல, அவனைப் பத்தி என்ன நினைக்கிறே நீ?”
“ம்ம்.. அத்தான் ரொம்ப நல்லவர்பா. ரொம்ப அன்பா பேசுவாரு. எனக்கு சபரி அத்தான ரொம்ப பிடிக்கும்பா. எதுக்குக் கேக்குறீங்க?”
“அதொன்னும் இல்லேடா, நானும் அம்மாவும் ஒரு முடிவு பண்ணிருக்கோம்”
“என்ன முடிவுப்பா அது?”
“உனக்கு மூணு வருஷப் படிப்பு முடிஞ்சதுக்கு அப்புறமா, கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பாக்கணும் இல்லையா? அந்த மாப்பிள்ளை நம்ம சபரியா இருந்தா ரொம்ப நல்லா இருக்குமே அப்படின்னு நினைக்கிறோம். நீ என்ன நினைக்கிறேடா? சபரியக் கல்யாணம் பண்ணிக்க உனக்கு இஷ்டம் இருக்காடா?”
ஷோபனா திகைத்தாள் முதலில். பிறகு இலேசாக முகம் சிவந்தது அவளுக்கு.
“போங்கப்பா, இதெல்லாம் போயி என் கிட்ட கேக்குறீங்க? உங்களுக்கும் அம்மாவுக்கும் பிடிச்சிருக்குன்னா எனக்கும் ஓகே தாம்பா”
மகள் இப்படிக் கூறியதும் முகம் மலர்ந்தது இருவருக்கும்.
“சரிடா, அப்படின்னா உன் அத்தை கிட்ட உன்னோட சம்மதத்தச் சொல்லிட்றோம். சரியா?”
“அப்பா”
“என்னடா?”
“இது அ.. அத்தானுக்குத் தெரியுமாப்பா? என்னைக் கட்டிக்க அவருக்குச் சம்மதமாப்பா?”
“கேட்டாச்சுடா. அவனுக்கும் இதில சம்மதம் தான்”
“சரிங்கப்பா” சொல்லிக் கொண்டே வெட்கத்துடன் உள்ளே ஓடி விட்டாள் ஷோபனா.
இவள் ஊருக்குச் செல்ல ஒரு வாரம் இருக்கும் போது மாலதி குடும்பத்துடன் வந்தாள், தன் அண்ணன் வீட்டிற்கு.
பொதுவாக சபரி, தன் தாயும் தந்தையும், தன் மாமா வீட்டிற்குச் செல்லும் போது, சில சமயங்களில் மட்டுமே தான் அவர்களுடன் சேர்ந்து வருவான். பல நேரங்களில் வேலை அதிகம் இருக்கிறது என்று கூறி வர மாட்டான்.
ஆனால், இம்முறை என்னவோ, ஷோபனாவைப் பார்க்கும் ஆசையில், மாலதி கூப்பிடாமலேயே, அவர்களுடன் கிளம்பி விட்டான்.
ஷோபனாவும், தன் அத்தையின் குடும்பம் வருகிறது என்று தெரிந்ததும், தன் அத்தானைப் பார்க்கப் போகிறோம் என்கிற ஆவலில் எப்போதும் விட உற்சாகம் ஆகி விட்டாள்.
இருவரும் அப்போது தான் தனிமையில் பேசிக் கொண்டனர். இதுவரையில் இருந்தது போல் அல்லவே இப்போது. வருங்கால கணவன் மனைவி என்கிற ஒரு புது பந்தம் உண்டாகி விட்டது அல்லவா அவர்களுக்குள்!
முதலில் இருவருமே சிறிது தயக்கத்துடன் பேசிக் கொண்டாலும், சிறிது நேரத்தில் தயக்கம் குறைந்து சகஜமாகி விட்டனர்.
ஷோபனா தான் வாயை மூடாமல் வழவழவென்று வாயாடி போல் பேசிக் கொண்டிருந்தாள். பேசும் அவளைக் காதல் நிறைந்த கண்களால் விழுங்குவது போல் பார்த்தான் சபரி.
படபடவென பேசியவள், திடீரென சபரியின் பார்வையைக் கவனித்ததும் வெட்கம் வந்து விட்டது அவளுக்கு.
“என்ன அத்தான் இப்படி என்னையே பாக்குறீங்க?”
“நீ ரொம்ப அழகா இருக்கே ஷோபி! ரொம்ப அழகா பேசுறே. கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கு. ஐ லவ் யூ ஷோபி!” சட்டென்று தன் காதலைக் கூறினான் சபரி.
அவனுடைய கண்களை நேருக்கு நேராக காண முடியாமல் தலை குனிந்தாள் ஷோபனா.
“இங்கே பாரு ஷோபி ப்ளீஸ்! இங்கே பாரேன்”
நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“நீ சொல்ல மாட்டியா என் கிட்ட காதலிக்கிறேன்னு?”
தன் அத்தானின் ஆசையைத் தட்ட முடியவில்லை ஷோபனாவால்.
“நானும் அத்தான்.. ஐ லவ் யூ அத்தான்!” கூறினாள் வெட்கத்துடன்.
அவளுடைய விரல்களைப் பிடித்து, அதில் மென்மையாக முத்தமிட்டான்.
“நல்லபடியா உன் ஸ்டடீஸ் முடிச்சுட்டு வா ஷோபி. இப்போதைக்கு உனக்கு உன்னோட ஸ்டடீஸ் தான் முக்கியம். சரியா? எனக்கு என்னோட வேலை முக்கியம். அதனால மொதோ அதைக் கவனிப்போம். நீ முடிச்சிட்டு வா. அப்புறம் காதலிப்போம். சரியா?”
“ஆமா அத்தான். நானே உங்க கிட்ட சொல்லணும்னு நினைச்சேன். மனசை அலைபாய விடாம இப்போதைக்கு ஸ்டடீஸ்ல கான்சண்ட்ரேட் பண்ணனும் அத்தான். அது வரை வெயிட் பண்ணுவோம்”
இருவரும் இப்படி ஒரு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். பிறகு ஷோபனா தான் சிறிது நேரம், தான் ஊருக்குச் செல்லப்போவதை, கல்லூரியைப் பற்றி, தன் உயிர்த்தோழி மீனாவைப் பற்றி என்று சபரியிடம் கூறினாள்.
இருவரும் அப்போது சந்தித்துக் கொண்டது தான். மாதத்திற்கு ஒரு முறை சபரி அலைபேசியில் பேசுவான். அதுவும் ஐந்து நிமிடங்கள் மட்டும் தான்.
கடைசியில், ஷோபனாவின் இறுதித் தேர்வுக்கு முன்பு, ஸ்டடி ஹாலிடேஸ் என்று ஊருக்கு வந்திருந்த நேரத்தில் தான் சபரி அவளைச் சந்தித்தான்.
ஷோபனா, ஊரிலிருந்து வந்த மறுநாளே சபரி வந்து விட்டான் அவளைக் காண.
“வாங்க அத்தான்” வரவேற்றாள் ஷோபனா.
“என்ன ஷோபி, எப்ப வந்தே?”
“நேத்தே வந்துட்டேன் அத்தான். இப்ப ஒரு ட்வெண்டி டேஸ் வரை லீவு இருக்கு. எக்சாமுக்கு படிக்கிறதுக்காக லீவு விட்ருக்காங்க அத்தான்”
“ஓ! படிக்க ஆரம்பிச்சாச்சா?”
“இல்ல அத்தான் இனிமே தான்”
“சரி ஷோபி, ஆல் தி பெஸ்ட்! நல்லா பிரிப்பேர் பண்ணு எக்சாமுக்கு. நல்லபடியா படிப்பை முடி. சரியா? அப்புறம் வந்ததுக்கு அப்புறம்..”
அவளைப் பார்த்துக் கண்ணடித்தான் சபரி.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


சபரியின் அத்தை பெண் தான் ஷோபனாவா.
அன்பான அமைதியான குடும்பம் இருவருக்கும். குடும்பத்தின் சம்மதத்துடன் உறவை பிணைத்து கொண்டு நேசம் கொண்டுள்ளனர் இருவரும்.
படிப்பு முடிய காத்திருந்த இடைவெளியில் என்ன நடந்திருக்கும்?
எத்தனை உறுதியான கனவுகளுடன் வலம் வந்திருப்பர்.
மிக்க நன்றி சிஸ் 😊