Loading

அத்தியாயம் -24

ஒரு வருடத்திற்குள் தனக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று தன் அப்பா அம்மா பேசிக் கொண்டதாக ஷோபனா கூறவும், அவளைக் கண்களில் குறும்பு மின்ன கிண்டல் செய்தாள் மீனா.

“ஓ! அப்படின்னா மேடம், சம்சார பந்தத்தில நுழையப் போறதா சொல்றீங்க. ம்ம்?”

“அதுசரி, நீ என்ன பண்ணப் போறே?”

“நான் வேலைக்குப் போவேன்டி. கேம்பஸ் இண்டர்வியூல வேலை கிடைச்சிட்டா ரொம்ப நல்லா இருக்கும். இல்லேன்னா மொதோ வேலையைத் தேட ஆரம்பிப்பேன். வேலைக்குப் போயி ஒரு நாலஞ்சு வருஷம் கழிச்சுத் தாண்டி கல்யாணம் எல்லாம். அதுவரை முடிஞ்ச வரை லைஃப நல்லா என்ஜாய் பண்ணப் போறேன்”

“ஓகே ஓகே என்ஜாய்!”

பிறகு நாட்கள் நகர்ந்து இரண்டாம் செமஸ்டர் முடிந்து இறுதிப் பரிட்சையும் நெருங்கிக் கொண்டு இருந்தது.

பரிட்சைக்கு இரண்டு மாதங்கள் இருக்கும் போது, அன்றும் எப்போதும் போல் இருவரும் சேர்ந்து சிறிது நேரம் படித்து விட்டு பிறகு பேசிக் கொண்டு அமர்ந்து இருந்தனர்.

மீனாவுக்கு என்னமோ, ஷோபனாவின் முகத்தில் எப்போதும் இருக்கும் சந்தோஷம் அப்போது இல்லை போல் தோன்றியது. முகம் வாடிய நிலையில் ஏதோ யோசனை செய்து கொண்டு உட்கார்ந்து இருந்தாள்.

“ஏய் ஷோபனா”

மீனா அழைத்ததைக் கூட கவனிக்கவே இல்லை ஷோபனா. ஒரே இடத்தை வெறித்துப் பார்த்தவாறு இருந்தாள்.

“ஏய் ஷோபனா.. ஷோபனா” அவளுடைய தோளைத் தட்டி அழைத்தாள். தூக்கத்தில் இருந்து எழுவது போல் திடுக்கிட்டுப் போய் மீனாவின் பக்கம் திரும்பினாள் ஷோபனா.

“எ..எ.. என்னடி.. கூப்பிட்டியா?”

“எத்தனை தடவை கூப்பிட்றேன்? நீ காதிலேயே வாங்காம எங்கேயோ வெறிச்சுப் பாத்துட்டு உக்காந்துட்டு இருக்கே? என்னடி.. ஏன் இப்படி ஒரு மாதிரியா இருக்கே?”

“என்ன மாதிரியா இருக்கேன்? அதெல்லாம் ஒன்னும் இல்லையே!” அவசரமாகக் கூறி, முகத்தில் வலிய சிரிப்பை வரவழைத்துக் கொண்டாள் ஷோபனா.

அவளுடைய அந்த முகத்தில் இருந்தது போலியான சிரிப்பு என்பது கூட மீனாவுக்கு புரியத்தான் செய்தது. ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு.

‘இவ ஏன் இப்படி இருக்கா, எதையோ பறி குடுத்த மாதிரி? நார்மலாவே தோணலையே! ஆனா எதுவும் இல்லேன்றாளே இவ!’

யோசித்துக் கொண்டே ஊடுருவிப் பார்த்தாள் தோழியை.

“ஏ.. ஏண்டி இப்படிப் பாக்குறே? என் முகத்தில என்ன இருக்கு?” மீண்டும் வேண்டுமென்றே சிரிப்புடன் கேட்டாள் ஷோபனா.

ஆனால் அவளால் மீனாவை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தோழியின் பார்வையைத் தவிர்த்தாள் ஷோபனா.

“ஏய் ஏண்டி.. ஏண்டி இப்படி? வராத சிரிப்பை எதுக்கு வரவழைச்சுக்குறே? தெரியாதா எனக்கு உன்னை? இத்தனை வருஷமா பழகுற எனக்கு உன்னைப் பத்தி தெரியாதாடி? சொல்லுடி, என்ன பிரச்சினை? எதுக்கு இப்படி இருக்கே?”

“ஏய் லூசு, அதெல்லாம் எதுவுமே இல்ல. நீயா எதுக்கு தேவையில்லாத கற்பனை எல்லாம் பண்ணிக்கிறே?”

“அப்புறம் எதுக்கு உன்னோட மூஞ்சி இப்படி இருக்கு? நார்மலாவே இல்லேடி நீ. ஏதோ இருக்கு. என்னன்னு சொல்லு. வீட்ல ஏதாவது பிரச்சனையா? உன் கல்யாணத்தில ஏதாவது பிரச்சனையா? என்னன்னு சொல்லுடி ப்ளீஸ்!”

“ஏய், நிஜமாவே எதுவும் இல்லேடி. இப்ப ஒரு வாரம் போனா ஸ்டடி ஹாலிடேஸ் ஆரம்பிச்சிடும். அதுக்கு அப்புறம் எக்சாம் ஸ்டார்ட் ஆனப்புறம் தான் வருவோம் இங்கே. அதுக்கு அப்புறம் எக்சாம் முடியிற வரைக்கும் தான் நாம சேந்து இருக்க முடியும். அப்புறம் நீ ஒரு பக்கம், நான் ஒரு பக்கமா பிரிஞ்சு போயிருவோம். அந்தக் கவலை ஒரு பக்கம்! இன்னொரு பக்கம் எக்சாம் டென்ஷன்! எல்லாம் சேந்து ஒரு மாதிரி ஆயிட்டேன். அவ்வளவு தான். வேற ஒன்னும் இல்ல”

“நிஜமா தான் சொல்றியா? இது மட்டும் தானே? வேற எந்தப் பிரச்சினையும் இல்லையே?”

அவளுடைய கண்களையே பார்த்தவாறு கேட்டாள் மீனா.

“வேற என்னடி இருக்கப் போகுது? நான் எதுக்கு உன் கிட்ட மறைக்கப் போறேன் எதையும்? எதுவுமே இல்ல. போதுமா? நீ டென்ஷன் இல்லாம இரு. நான் நல்லா தான் இருக்கேன்”

அவளுடைய அந்தப் பேச்சில் ஆறுதல் அடைந்தாள் மீனா.

“நானும் உன் முகத்தைப் பாத்துட்டு என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன் தெரியுமா? இப்ப தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு!”

சிரிப்புடன் ஷோபனாவை அணைத்துக் கொண்டாள் மீனா.

ஷோபனா கூறியது போல், அடுத்த பத்து நாட்களில் அவர்களுக்கு ஸ்டடி ஹாலிடேஸ் ஆரம்பித்தது.

அனைவரும் தத்தம் ஊர்களுக்குக் கிளம்பினர்.

“ஏய், அடிக்கடி ஃபோன் பண்ணுடி ஷோபி.. சரியா?”

“கண்டிப்பா பண்ணுவேன்டி மீனு. உன் கிட்ட பேசாம என்னால மட்டும் இருக்க முடியுமா சொல்லு? நான் பேசலேன்னாலும் நீ பேசணும். சரியா?”

“கண்டிப்பா பேசுவேன் ஷோபி. சரிடி, வரட்டுமா? அப்படியே எக்சாமுக்கு நல்லா பிரிப்பேர் பண்ணிட்டு வரணும்டி”

“ஆமாமா.. அதுதானே ரொம்ப முக்கியம்!”

கலகலவெனச் சத்தமாகச் சிரித்தனர் இருவரும். கையசைத்து விடைபெற்றுக் கொண்டுக் கிளம்பினர்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இருவரும் அலைபேசி வழியாகப் பேசிக் கொண்டனர். விடுமுறை முடிவதற்கு இரண்டு நாட்கள் இருக்கும் போது, அன்று மீனா, ஷோபனாவை அலைபேசியில் அழைத்தாள்.

ஆனால் அது அடித்துக் கொண்டே இருந்தது. ஷோபனா அழைப்பை ஏற்கவில்லை. பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் செய்து பார்த்தாள். அப்போதும் அழைப்பு சென்று கொண்டு தான் இருந்தது. எடுக்கவே இல்லை ஷோபனா.

அவளாவது திருப்பி அழைப்பாள் என்று எதிர்பார்த்தாள் மீனா. ஆனால் அவளாகவும் அழைக்க இல்லை.

‘இதென்ன, ரொம்ப கொழுப்பு தான் இவளுக்கு! என்னோடது எப்படியும் மிஸ்டுகால்ல இருந்திருக்கும் தானே! அதையாவது பாத்திருக்க மாட்டாளா? பண்றாளா பாரு!’

கோபத்துடன் மூன்றாவது முறையும் அழைப்பு விடுத்தாள் மீனா. இம்முறை அது சுவிட்ச் ஆஃப் என்று வந்தது. மீனாவுக்கு எதுவும் புரியவில்லை.

‘ஷோபனா ஏன் இப்படி பண்றா? ஒருவேளை ஃபோன் ஏதாவது ரிப்பேரா இருக்குமோ? வேற யாருக்காவது செய்யலாம்னாலும் யாரோட நம்பரும் தெரியாதே எனக்கு! சரி, எப்படியும் இன்னும் ரெண்டு நாள்ல காலேஜ்ல மீட் பண்ணத்தானே போறோம். பாப்போம்!’ என்கிற நினைப்புடன் தன் வேலையைக் கவனித்தாள்.

விடுமுறை முடிந்து மீனா கல்லூரிக்கு வந்து விட்டாள். மறுநாளில் இருந்து பரிட்சை ஆரம்பம். ஆர்வத்துடன் ஷோபனாவின் வருகைக்காக காத்திருந்தாள். ஆனால் மாலை நேரம் ஆகியும் வரவில்லை ஷோபனா.

அவளுடைய எண்ணிற்கு அழைத்தாலும் அது சுவிட்ச் ஆஃப் என்கிற பதில் தான் வந்தது.

மற்ற தோழிகளிடமும் விசாரித்துப் பார்த்தாள் மீனா. அவர்களுக்கும் எந்த விவரமும் தெரியவில்லை. மிகவும் குழப்பமாக இருந்தது மீனாவுக்கு.

யோசனையுடனே தூங்கினாள் அன்று இரவு. மறுநாள் கல்லூரியில் பிரேயருக்காக அனைவரும் கூடி விட்டனர்.

இன்னும் சற்று நேரத்தில் பரிட்சை தொடங்கி விடும். ஆனால் ஷோபனா அதுவரையில் வரவே இல்லை. மீனாவுக்கு மனமே சரியில்லை. ஒரு விதமான குழப்பமும் பதட்டமும் கலந்த மனநிலையில் இருந்தாள்.

அப்போது திடும்மென அங்கு வந்த அறிவிப்பைக் கேட்டு சப்த நாடியும் ஒடுங்கி, அதிர்ந்து நின்று விட்டாள் மீனா.

“அமைதி, அமைதி, அனைவரும் அமைதியாக இருங்கள். ஒரு திடுக்கிடும் தகவல் இப்போது தான் கிடைத்தது எங்களுக்கு”

ஆசிரியர் ஒருவரின் குரலைக் கேட்டவுடன் சட்டென்று அரங்கமே அமைதியானது அங்கு.

“நம் கல்லூரியில் ஃபேஷன் டெக்னாலஜி கடைசி வருடம் படிக்கும் ஷோபனா என்னும் மாணவி நேற்று முன்தினம், திடீர் உடல்நலக் குறைவால் இறந்து விட்டார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகவும் வருந்தத்தக்க ஒரு விஷயம். அவருடைய ஆன்மா சாந்தியடைய அனைவரும் ஒரு நிமிடம் கண் மூடி வேண்டிக் கொள்ளவும்”

அந்த ஆசிரியர் சொல்வதைக் கேட்க கேட்க, கால்கள் இரண்டும் தள்ளாடியது மீனாவுக்கு.

‘எ.. என்ன சொல்றாங்க இவங்க? ஷோ.. ஷோபனா இறந்துட்டாளா? உயிரோட இல்லையா? ஏன்.. என்னாச்சு அவளுக்கு?’

அடக்க முடியாமல் கண்களில் இருந்து சரசரவென கண்ணீர் வழிந்தது அவளுக்கு.

‘ஷோ.. ஷோபனா இறந்துட்டாளா? என் உயிர் தோழி ஷோபனாவ இனிமே பாக்கவே முடியாதா?’ நினைக்க நினைக்க மனம் தாளவில்லை அவளுக்கு.

திகைப்பின் உச்சத்திற்கே போய் விட்டாள் மீனா.

அவளால் நம்பவே முடியவில்லை இந்தச் செய்தியை. ஆனால் மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே அவளுடைய அலைபேசி இறந்து விட்டதே! தொடர்பு கொள்ள முடியவில்லையே அவளிடம்.

அவள் இருந்து இருந்தால் இப்படி மீனாவிடம் பேசாமல் எல்லாம் இருக்க மாட்டாளே! அதனால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை அவளால்.

ஷோபனா தற்போது உயிருடன் இல்லை என்பதை மீனாவால் ஜீரணிக்கவே முடியவில்லை.

‘ஏன் இறந்தா? எப்படி இறந்தா அவ? என்னாச்சு அவளுக்கு?’ மீண்டும் மீண்டும் இதே தான் ஓடிக் கொண்டிருந்தது அவள் மனதில்.

இன்னும் சிறிது நேரத்தில் பரிட்சை தொடங்கி விடும். ஆனால் அவளோ அது கூட நினைவில் இல்லாதவளாய், பைத்தியம் பிடித்தவள் போல் கல்லூரி முதல்வர் அறைக்கு ஓடினாள்.

அங்கு உள்ளே நுழைவதற்கு முன்பே, உள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருந்த ஆசிரியை ஒருவர் தடுத்து நிறுத்தினார் அவளை. கண்களில் கண்ணீருடன் நின்றவளைப் பார்த்துத் திகைத்தார் அவர்.

“என்னம்மா என்ன வேணும்? இந்நேரத்தில இங்கே என்ன வேலை உனக்கு?”

“மே.. மேடம்!” பேச முடியவில்லை அவளால்.

“எதுக்கு அழறே நீ? ஏதாவது பிரச்சனையா?”

“மேடம், ஷோ.. ஷோபனா பத்தி கே.. கேக்க வந்தேன். அவளப் பத்தி சொன்னது உண்மையா மேடம்? ப்ளீஸ், சொல்லுங்க.. அவளுக்கு என்னாச்சு மேடம்? கொஞ்சம் சொல்லுங்க மேடம்!” பேசி முடிவதற்குள் அழுகையில் தொண்டை அடைத்துக் கொண்டது அவளுக்கு.

“ஏம்மா, எக்சாம் ஸ்டார்ட் ஆக இன்னும் அஞ்சே நிமிஷம் தான் இருக்கு. இந்த நேரத்தில நீ அங்கே போகாம எதுக்கும்மா இதையெல்லாம் கேட்டு இங்கே வந்து நிக்குறே?”

“மேடம் ப்ளீஸ், அவ இங்கே இருந்து போறப்ப கூட நல்லா தான் இருந்தா. இறந்து போற அளவுக்கு அவளுக்கு என்ன மேடம் ஆச்சு? தயவு செஞ்சு சொல்லுங்க மேடம்!”

“ஏதோ ஃபுட் பாய்சன் ஆகி தாங்க முடியாத வயித்து வலியாம்மா. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போற வழியில இறந்துட்டாளாம்மா. அவ பேரண்ட்ஸ் இப்படித்தான் சொன்னாங்க. நம்மளால என்னம்மா பண்ண முடியும்? நீ போம்மா, எக்சாம் ஹாலுக்குப் போ. எல்லாரும் உள்ளே போயிட்டாங்க பாரு. இதையே நினைச்சு நீ எக்சாமக் கோட்டை விட்ராதே. போம்மா!”

அவர் கூறியதைக் கேட்டு இடிந்து போன நிலைக்குச் சென்று விட்டாள் மீனா.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
13
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

6 Comments

  1. ஷோபனா எப்படி இறந்தா .. சபரி எதுக்கு மீனாவை பழி வாங்குறான் ..

  2. என்ன நடந்துச்சுன்னே தெரியலையே

  3. ஷோபனாவிற்கு என்ன மன வருத்தமாக இருக்கும்? நெருங்கிய தோழியிடம் கூட பகிர முடியா அளவுக்கு!

    என்ன ஆனது ஏன் ஆனது என்று எதுவும் தெரியாமல் அதிர்ச்சி, வருத்தம், குழப்பம் என்ற குழப்ப மனநிலையில் எங்கனம் தேர்வை எழுதுவாள் அவள்.

    கல்லூரியில் அறிவிப்பு வழங்குவது எல்லாம் சரி. ஆனால், தேர்வுக்கு தயாராக இருக்கும் மாணவர்களிடம் இது போன்ற செய்தியை வழங்குவது சரியா?

    அவர்களுக்கு ஏதோ ஒரு மாணவி அவ்வளவே. ஆனால் அவள் தோழிகளுக்கு?

    1. Author

      உங்கள் ஆர்வமிக்க விமர்சனத்திற்கு மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் சிஸ் 😊