Loading

அத்தியாயம் -23

சபரியின் டைரியில் தன் நெருங்கிய தோழி ஷோபனாவின் புகைப்படத்தைப் பார்த்து விட்டு ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த மீனா, அவனின் சந்தேகத்துடன் கூடிய கேள்வியைக் கேட்டு சட்டென்று பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாள்.

“என்னடி நீ, பேயக் கண்டா மாதிரி இப்படி ஒரு ரியாக்ஷன் குடுக்குறே? என்ன விஷயம்? என்ன மறைக்க நினைக்கிறே என் கிட்ட இருந்து?” மீண்டும் அதட்டினான் சபரி.

“அ.. அப்படி எல்லாம் எதுவும் இல்லையே! எனக்குத் தூக்கம் வருது. தூங்கணும் நான். தலை வேற வலிச்சுட்டே இருக்கு”

அவன் தன்னை நம்ப வேண்டுமே என்பதற்காகவே கொஞ்சம் சேர்த்துக் கூறினாள். ஆனால் அதுவே அவனுக்குச் சந்தேகத்தை இன்னும் அதிகமாக்கியது.

ஆனால் அதற்கு மேல் எதுவும் கேட்காமல் தோள்களைக் குலுக்கிக் கொண்டு படுக்கையில் சாய்ந்து கொண்டான்.

அவளும் அப்பாடா என்று நினைத்துக் கொண்டு, வேகமாகப் பாயைத் தரையில் விரித்து, தலை வரை போர்வையால் போர்த்திக் கொண்டு, தூங்குவது போல் நடித்தாள்.

தலையைக் கீழே வைத்ததும் அவளுடைய எண்ணங்கள் ஷோபனாவிடம் சென்றது.

‘ஷோபனாவோட ஃபோட்டோ எப்படி இவன் கிட்ட? அவளுக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை.. ஒருவேளை..’

அவளுடைய நினைவு கல்லூரி நாட்களுக்குச் சென்றது.

மீனாவும் ஷோபனாவும் நெருங்கிய தோழிகள். அவர்களுடைய நட்பு பள்ளிப் பருவத்தில் இருந்தே தொடங்கி விட்டிருந்தது.

இருவருடைய வீடுகளும் வெவ்வேறு பகுதிகளில் இருந்தாலும் ஒரே பள்ளியில் சேர்ந்து படித்தனர்.

பள்ளிக்கு இந்தப் பக்கம் மீனாவின் வீடு இருந்தது என்றால் ஷோபனாவின் வீடு பள்ளிக்கு அந்தப் பக்கமாக இருந்தது.‌

ஆனால் அதென்னவோ இருவருக்கும் பள்ளியின் முதல் நாளிலேயே ஒரு பிணைப்பு ஏற்பட்டு விட்டது. பள்ளியில் என்ன தான் மற்ற தோழிகளிடம் பழகினாலும், இவர்கள் இருவரும் மட்டும் ஒருவருக்கொருவர் இணை பிரியாது இருந்தார்கள்.

ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள் யாரிடமும். பள்ளி நேரத்தில் இருவரும் சேர்ந்தே படித்து, சேர்ந்தே சாப்பிட்டு, அவர்களின் நட்பு பார்க்கவே அழகாக இருந்தது.

வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்க இருவரும் போட்டி போட்டுப் படிப்பார்கள். படிப்பில் போட்டி போட்டாலும் ஒருவருக்கொருவர் பொறாமை இல்லாமல் இருந்தனர்.

அவர்கள் வளர வளர அவர்களுடைய நட்பும் சேர்ந்தே வளர்ந்தது. ஒருவருக்கொருவர் வீடு தூரம் என்பதால், பள்ளியளவில் மட்டுமே இருந்தது அவர்களின் நட்பு.

பெரும்பாலான விஷயங்களில் இருவருடைய மனமும் ஒத்துப் போனது. திறமையிலும் இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் இருந்தனர்.

ஓவியம் வரைவது, பழைய பொருட்களைக் கொண்டு விதவிதமான கலைப் பொருட்கள் செய்வது மற்றும் சிறு சிறு துணிகளை எல்லாம் வைத்து பூக்கள் செய்வது, சிறு பொம்மை செய்வது இப்படி எல்லாம் இருவருக்குள்ளும் திறமை இருந்தது.

பள்ளியிலும் அது ஒரு பாடப் பிரிவாக இருந்ததால், அவர்களுடைய ஆர்வம் வளர்ந்தது.

அந்த ஆர்வம் தான் இருவருக்குள்ளும் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, ஃபேஷன் டெக்னாலஜி அதுவும் கோவையில் இருக்கும் வி எஸ் சி கல்லூரியில் தான் படிக்க வேண்டும் என்கிற ஆசை துளிர் விடுவதற்கு காரணமாக அமைந்து விட்டது.

இருவருடைய வீடுகளிலும் பெற்றோர்கள் அதற்கு துணை நின்றனர். அவர்களிடம் இருந்து எந்தவித எதிர்ப்போ முட்டுக்கட்டையோ இல்லாததால் அவர்களுடைய அந்த ஆர்வம் இன்னும் அதிகமாகிப் போனது.

அதையே இலட்சியமாகக் கொண்டு படித்ததில், இருவருக்கும் அவர்கள் ஆசைப்பட்ட படி அதே படிப்பு, அதுவும் அவர்கள் எதிர்பார்த்த அதே கல்லூரியில் இடமும் கிடைத்தது.

மனம் நிறைய சந்தோஷத்துடனும் உற்சாகத்துடனும், நிறைய கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடனும் கல்லூரியில் அடியெடுத்து வைத்தனர்.

தங்குவதற்கு கல்லூரி விடுதியில் முதலிலேயே சொல்லி வைத்திருந்தனர். ஆனால் அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது, இருவருக்கும் ஒரே அறையாக ஒதுக்காமல், வெவ்வேறு அறைகளாக அமைந்து விட்டது என்பது.

இதில் அவர்களுக்கு மிதமிஞ்சிய வருத்தம் தான். விடுதி நிர்வாகத்தினரிடம் தங்கள் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஆனால் நிர்வாகம் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. தெரிந்தவர்கள் ஒரே அறையில் இருப்பதை எல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது என்று கூறி விட்டனர்.

தெரிந்தவர்கள் வெவ்வேறு அறைகளில் இருந்தால் தான் அனைவரிடமும் பழக முடியும், தேவையில்லாத சங்கோஜமும் பயமும் மறையும் என்று கூறி அவர்களுடைய கோரிக்கையை மறுத்து விட்டனர்.

மீனாவும் ஷோபனாவும் வேறு வழியின்றி ஒத்துக் கொண்டு அவரவர்க்கு என்று ஒதுக்கிய அறைக்குச் சென்றனர்.

அது மூன்று பேர் தங்கக்கூடிய அறைகளாக இருந்தது. மீனாவின் அறைக்கு நான்கு அறை தள்ளி இருந்தது ஷோபனாவின் அறை. நன்கு வசதியுடன் தான் இருந்தது.

உணவுக்கூடம் அவர்கள் தங்கியிருந்த அறைகளின் எதிர்ப்புறத்தில் இருந்தது. அதன் வெளியே பெரிய கூடம் ஒன்று இருந்தது. அறையில் இருந்து அந்தக் கூடத்தைத் தாண்டித் தான் உணவு அறைக்குச் செல்ல வேண்டும்.

கூடத்தில் அனைவருக்காகவும் தொலைக்காட்சி பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அங்கேயே உட்கார்ந்து பார்ப்பதற்கு என்று இருக்கைகளும் போடப்பட்டு இருந்தன. படிப்பதற்கு செய்தித்தாள்கள் என்று அனைத்து வசதிகளும் இருந்தன.

தோழிகள் இருவருக்கும் தனித்தனியாக இருக்கும் ஒரே ஒரு குறையைத் தவிர மற்ற எல்லாமே மிகவும் பிடித்து விட்டது அங்கு.

தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் சேர்ந்தே இருந்தனர் இருவரும். இருவரின் அறைகளில் இருந்த மற்ற பெண்களும் நன்றாகப் பழக ஆரம்பித்தனர்.

உணவு நேரத்தில் அனைவரும் சேர்ந்து சாப்பிட வந்தால், உணவை முடித்துக் கொண்டு அந்தப் பொதுக் கூட்டத்தில் அனைவரும் குழுமி விடுவார்கள். பாட்டும் பேச்சும் என்று நன்றாகவே பொழுது கழிந்தது அவர்களுக்கு.

மாதத்திற்கு ஒரு முறை வாரக்கடைசி நாட்களில் இருவரும் சேர்ந்து தங்கள் ஊருக்குச் சென்று வருவர்.

பிடித்த படிப்பு வேறு! அதனால் படிப்பிலும் சக்கை போடு போட்டனர். வழக்கம் போல் நல்ல மதிப்பெண்கள் பெற்று வகுப்பில் முதலிடம் இரண்டாமிடம் என்று எப்போதுமே இவர்கள் இருவருமே மாறி மாறி இருந்தனர்.

இப்படியே நாட்கள் நன்றாக நகர்ந்தன அவர்களுக்கு. இரண்டு வருடங்கள் முடிந்து மூன்றாவது வருடத்திற்குள் நுழைந்து இருந்தனர்.

அன்று ஒரு நாள் மதிய உணவை முடித்துக் கொண்டு இருவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்தபடி பேசிக் கொண்டு இருந்தனர்.

“ஏண்டி மீனு, நமக்கு இன்னும் ரெண்டு செமஸ்டர் தான் இருக்கு ஸ்டடீஸ் முடிய. அதுக்கு அப்புறம் இங்கே இருந்து நாம அவங்கவங்க வீட்டுக்குப் போகணும். இல்லையாடி? ரெண்டு பேரும் பிரியப் போறோம். அப்படித் தானே?”

“என்னடி பண்ணச் சொல்றே அதுக்கு? பிரியப் போறத நினைச்சா கஷ்டமா தான் இருக்கு. ஆனா என்ன செய்ய முடியும் அதுக்கு? வீட்டுக்குப் போகாம இங்கேயே உக்காந்து இருக்க முடியுமாடி ஷோபி?”

“எனக்கு அப்படியே அழுகை அழுகையா வருது தெரியுமா?”

“அது சரி, நமக்கு படிப்பு முடியப் போகுது. ஃபேஷன் டெக்னாலஜி முடிச்சிட்டு நீ என்னடி பண்ணப் போறே அப்புறம்?” பேச்சை மாற்றினாள் மீனா.

“ம்ம்.. நானா?” நெளிந்து கொண்டே ஒரு சின்ன சிரிப்புடன் அவளைப் பார்த்தாள் ஷோபனா.

அவளுடைய குரலில் இருந்த குழைவைக் கண்டு ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தாள் மீனா. பார்த்தவளுக்கு மேலும் வியப்பாகி விட்டது.

ஷோபனாவின் கன்னங்கள் இரண்டும் குங்குமம் போல் சிவந்து விட்டிருந்தது.

“ஏய்ய்.. என்னடி இது? வெக்கம் எல்லாம் பட்றே? அப்படின்னா இதுக்கு அர்த்தம் என்னடி?”

“போடி.. அதெல்லாம் சொல்ல முடியாது!”

“கல்யாணம் பண்ணிக்கப் போறியா என்ன?”

“ம்ம்.. ம்ம்” கூச்சத்துடன் தலையை மட்டும் அசைத்தாள் ஷோபனா.

“பார்றா.. கல்யாணம் பண்ணிக்கப் போறாளாம் இல்ல? மாப்பிள்ள எல்லாம் பாக்க வேணாமாடி அதுக்கு? மாப்பிள்ளை இல்லாம எப்படி கல்யாணம் பண்ணிப்பே?”

“அதெல்லாம் பார்த்தாச்சு.. ரெடியா இருக்காரு. படிப்பு முடியணும்னு தான் வீட்டில வெயிட் பண்ணிட்டு இருக்காங்க”

“அடிப்பாவி! சொல்லவே இல்ல பாரேன்! ஏண்டி, கல்லுளிமங்கி மாதிரி இருந்துட்டு, மாப்பிள்ளையப் பார்த்தாச்சுன்றே! கள்ளி! எப்போடி பாத்தே? எங்கேடி பாத்தே? யாருடி அவரு?”

கேலியும் கிண்டலுமாக அதட்டுவது போல் கேட்டாள் மீனா.

“ஏய், நான் எல்லாம் ஒன்னும் பாக்கலேடி. எனக்கு முறைப்பையன் தான் அவரு. என்னோட அத்தைப் பையன். எப்போதோ, நான் அவருக்குத் தான், அவர் எனக்குத் தான்னு முடிவு பண்ணி வச்சுட்டாங்க!”

“ஓ! பெரிய எமகாதகிடி நீ! எப்பவோ தெரிஞ்ச விஷயம்னு சொல்றே. இதுவரை மூச்சு விட்ருக்கியாடி நீ இதைப்பத்தி? கொழுப்பு தாண்டி உனக்கு! மூஞ்சியப் பாரு! போ.. உன் கிட்ட பேச மாட்டேன் போ!” வேண்டுமென்றே முகத்தைத் திருப்பிக் கொண்டாள் மீனா.

உடனே அவளருகே வந்து மீனாவை ஒட்டி உட்கார்ந்து கொண்டாள் ஷோபனா. அவளுடைய முகத்தைத் தன் பக்கமாகத் திருப்ப முயன்றாள்.

“ஏய்.. ஏய்.. கோச்சுக்காதேடி ப்ளீஸ்! இதுவரை நானே அதைப் பத்தி யோசிச்சதே இல்ல. இவ்வளவு ஏன்? நான் என் அத்தானை இதுவரை நினைச்சுப் பாத்தது கூட இல்ல. நமக்குள்ள இதுவரையில இந்த மாதிரியான ஒரு டிஸ்கஷன் வந்ததே கிடையாதேடி. அப்புறம் எப்படி சும்மா இருக்குறப்ப சொல்லுவேன் நான்? இங்கே பாருடி ஆமா!”

மீனாவோ மீண்டும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“ஒன்னும் வேணாம் போ!”

“ஏய் ஏண்டி இப்படி? அதுதான் இப்ப சொல்லிட்டேனே மீனு. சாரிடி! நான் பாவம்லே! பாரு, என் முகத்தப் பாரு”

முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு கேட்டாள் ஷோபனா. அவளுடைய அந்த முகத்தைப் பார்த்ததும் சிரிப்பு வந்து விட்டது மீனாவுக்கு.

அவளுடைய சிரிப்பைக் கண்டு, ஷோபனாவும் சிரித்தாள். அவளுடைய தலையில் செல்லமாகக் கொட்டினாள் மீனா.

“ஹாஆஆஆ..!” வலிப்பது போல் தலையைத் தேய்த்துக் கொண்டாள் ஷோபனா.

“ஏய், வலிக்குதுடி ராட்சசி! ஆளு பாக்கத் தாண்டி நீ ஒல்லிப்பாச்சா மாதிரி இருக்கே! ஆனா எவ்வளவு பலம் இருக்கு பாரு உனக்கு! ஒரு கொட்டுக்கே இவ்வளவு வலிக்குது. போடி!”

“ஏய்.. போதும்டி போதும். நம்பிட்டேன் நம்பிட்டேன்”

“ஏய் நிஜமா தாண்டி சொல்றேன்”

“அத விடுடி. அப்படின்னா நிஜமாவே நமக்கு காலேஜ் முடிஞ்சவுடனே நீ கல்யாணமா டி பண்ணப் போறே? அவ்வளவு அவசரமாடி உனக்கு?”

“உடனேன்னா உடனே எல்லாம் இல்லேடி. வேலைக்குப் போக எல்லாம் வீட்டில அப்பா என்ன சொல்லுவார்னு தெரியல. போன தடவை ஊருக்குப் போயிருந்தப்ப அப்பாவும் அம்மாவும் பேசிட்டு இருந்ததைக் கேட்டேன்”

“என்ன பேசினாங்க?”

“படிப்பு முடிஞ்சு ஒரு வருஷத்துக்குள்ள கல்யாணத்த முடிக்க வேண்டியது தான்னுட்டு”

“ஓஓஓஓ..!” குறும்பு தாண்டவம் ஆடியது மீனாவிடம்.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
12
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

6 Comments

  1. அப்புறம் ஷோபனா க்கு என்ன ஆகியிருக்கும் .. 😳😳

  2. ஷோபனாக்கு எதாவது ஆகிடிச்சோ

  3. சும்மா இருந்தாலே அவன் கண்காணிப்பில் தீவிரமாக இருப்பான். இதில் அவனிடம் சாதாரணமாக இருப்பதை போல் காட்டிக்கொள்கின்றேன் பேர்வழியாக நடித்தால் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவானா?

    ஷோபனா மீனா நட்பு அழகு. 🌟

    பள்ளி முதல் கல்லூரி வரை எத்தனை புரிதலுடன் தொடர்ந்திருக்கின்றது அவர்களது நட்பு.

    ஒரே போல் விருப்பம், ஒரே போல் கலையார்வம் என்று ஒற்றுமையாக அன்புடன் இருந்துள்ளனர்.

    ஷோபனாவை திருமணம் செய்ய போகும் அந்த அத்தை மகன் யாரோ? 🤔