
அத்தியாயம் -22
“ஏன் மாலதி, நாம எல்லாருக்கும் ஃபோன்லேயே கூப்பிடலாம்னு நினைச்சிருக்கோமே.. நம்பர் இருக்கா எல்லாரோடதும்?” திடீரென நினைவு வந்தவராகக் கேட்டார் சீனிவாசன்.
“பாப்போங்க.. பேசிட்டே வருவோம். நம்பர் இல்லாதவங்கள பேர் எல்லாத்தையும் நோட் பண்ணி வச்சிட்டு, அப்புறம் விசாரிச்சுத் தான் செய்யணும். வேற என்ன செய்ய முடியும்?” பதில் கூறினார் மாலதி.
“ம்ம்.. ஃபோன்ல கூப்பிட்றது கூட பெரிய வேலை தான். இல்லையா?”
“ஆமா.. இல்லையா பின்னே? ஒரு தடவையில அவங்க எடுத்துப் பேசலேன்னா ஞாபகமா திரும்ப செய்யணும் அவங்களுக்கு. ஒரு நாள் அதுக்கு ஒதுக்கணுங்க. அப்புறம்..”
“என்னது?”
“சம்பந்தி அம்மா கிட்ட பேசுறப்ப, அப்படியே அவங்க பக்கத்துலேயும் எத்தனை பேர் வருவாங்கன்னு ஞாபகமா கேக்கணும்”
“ஆமாமா ஏகப்பட்ட வேலை இருக்கே!”
“நம்ம சபரிக்கும் மீனாவுக்கும் புதுத் துணி வாங்கணும் விசேஷத் தன்னைக்கு போட்டுக்க”
இப்படியே நீண்டு கொண்டு இருந்தது அவர்களுடைய பேச்சு. அவர்களின் பேச்சிலேயே தெரிந்தது அவர்களின் உற்சாகமும் சந்தோஷமும்.
கேட்டுக் கொண்டிருந்த மீனாவின் முகத்தில் இலேசான சிரிப்பு முகத்தில் இழையோடியது.
‘அப்பப்பா! ரெண்டு பேருக்கும் தான் எவ்வளவு சந்தோஷம்! வீட்டில விஷயம் தெரிஞ்சா அவங்களும் சந்தோஷப் படுவாங்க.
ஹும்ம்.. இந்த விசேஷத்தோட கதாநாயகியே நான் தான். ஆனா இங்கே என்னைத் தவிர மத்த எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க. சரியான வேடிக்கை தான்!’
இதற்குச் சிரிப்பதா அழுவதா என்று கூட அவளுக்குத் தெரியவில்லை. அழ நினைத்தாலும் அவளுடைய கண்களில் இருந்து கண்ணீர் வரவும் இல்லை.
‘அழுதழுது என்ன ஆகப் போகுது? ஏதாவது மாத்த முடியுமா என்னால? அதுக்குப் பதிலா, இந்த முட்டாள் என்னை இந்த அளவுக்கு அழ வைக்கணும்னு நினைக்கிற காரணத்த எப்படியாவது நான் தெரிஞ்சிக்கணும்.
அது தெரிஞ்சா போதும். ஒன்னு, அத எப்படியாவது சரி பண்ணி, என் வாழ்க்கையச் சரி பண்ணிக்கணும். அப்படி இல்லேன்னா, இந்த வாழ்க்கையே வேணாம்னு எல்லார் கிட்டேயும் உண்மையச் சொல்லிட்டு இதில இருந்து விலகிப் போயிட்டே இருக்கணும். ரெண்டில ஒன்னு. அவ்வளவு தான்!’
நன்றாகச் சிந்தித்துத் தீர்க்கமான ஒரு முடிவை எடுத்து இருந்தாள் மீனா.
அதற்கான முதல் வேலையாய், தங்கள் அறையில் இருந்த அந்த புத்தகங்கள் நிறைந்த ஷெல்ஃப்பை சோதிக்க வேண்டும் என்பது தான் அவளுடைய திட்டம்.
அதற்குச் சபரி, வீட்டில் இருக்கக்கூடாது. அதற்கான சந்தர்ப்பத்தை எதிர் நோக்கிக் காத்திருந்தாள்.
திருமணம் முடிந்த பிறகு, இன்னும் சபரி வேலைக்குச் செல்ல ஆரம்பிக்கவில்லை. அன்று அவன் சென்றதும் தன் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று யோசித்து வைத்திருந்தாள் மீனா.
அவள் எதிர்பார்த்தது போலவே சபரி, அன்று காலை ஒன்பது மணிக்கெல்லாம் வேலைக்குக் கிளம்பி விட்டான்.
மீனாவின் மனம் முழுவதும், விரைந்து வேலையை முடித்துக் கொண்டு அறைக்குள் சென்று விட வேண்டும் என்பதாகத் தான் இருந்தது.
ஆனால் அவள் நினைத்தது போல், அது அவளுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.
மாலதி என்னவோ எப்போதும் விட பேசிக்கொண்டே இருப்பது போல் தோன்றியது அவளுக்கு. சபரி கிளம்பிய சிறிது நேரத்தில், சீனிவாசனும் ஏதோ வேலை விஷயமாக வெளியே கிளம்பிச் சென்று விட்டார்.
அதன் பிறகு மாமியாரும் மருமகளாக இருவரும் சேர்ந்து சாப்பிட்டு முடித்தனர்.
“இன்னைக்கு சாய்ந்தரமே நாம கடைக்குப் போயி உனக்குப் புடவை வாங்கிட்டு வந்துரலாம்மா மீனா. உன் வீட்டுக்கும் சொல்லணும். எல்லாருமாவே சேந்து போயிட்டு வந்துரலாம்”
“சரிங்கத்தே”
வேறு வழியின்றி அவரிடம் ஒப்புதல் தந்தாளே தவிர, தான் நினைத்ததை செய்ய முடியாது போல் உள்ளதே என்று எரிச்சலாக வந்தது அவளுக்கு.
“இந்த கல்பனா ஒரு வாரம் முன்னாடியே வந்திருந்தான்னா புடவை வாங்க அவளையும் அழைச்சிட்டுப் போயி வாங்கி இருக்கலாம். இவ என்னடான்னா, கால்ல சுடு தண்ணி ஊத்திகிட்டு வர்றா. விசேஷத்துக்கு முன்னாடி ரெண்டு நாள், முடிஞ்சு ரெண்டு நாள்னு எண்ணிட்டு வர்றா”
“ஏன் அத்தே, இப்பவும் என்ன ஆகப் போகுது? அவங்க வந்தவுடனேயே போகலாமே!”
“அதெப்படிம்மா முடியும்? அவ வெள்ளிக்கிழமை அன்னைக்குத் தானே வர்றா. நடுவில ஒரே ஒரு நாள் தானே இருக்கு விசேஷத்துக்கு. உனக்குப் புடவை வாங்கினா மட்டும் போதுமா? அதுக்கு பிளவுஸ் எல்லாம் தச்சு நீ ரெடி பண்ணிக்க வேணாம்? அதெல்லாம் சரிப்பட்டு வராதும்மா. நாம இன்னைக்கே போயிட்டு வந்துரலாம். சபரி கிட்ட காலையிலேயே கேட்டேன். வரல்லேன்னு சொல்லிட்டான் அவனும்”
வேலை முடிந்த பிறகும் மீனாவை அறைக்குள் செல்ல விடாமல் ஏதாவது ஒன்று சொல்லிப் பேசிக் கொண்டே இருந்தார் மாலதி.
“ஏம்மா மீனா, உனக்குத் தலை அலங்காரம் செய்ய யாராவது உனக்குத் தெரிஞ்சவங்க இருக்காங்களா? இல்லே கல்பனா கிட்ட கேக்கட்டுமா?”
“இல்லேத்தே, எங்க தெருவிலேயே ஒரு பியூட்டி பார்லர் இருக்கு. தெரிஞ்சவங்க தான். அவங்க கிட்டே சொல்றேன்”
சிறிது நேரம் கழித்து, தானாகவே மெல்ல எழுந்தாள் மீனா.
“நான் ரூமுக்குப் போறேன் அத்த”
“ஏம்மா, ரூமில போயி ஒத்தையில என்ன பண்ணப் போறே இப்ப? இங்கேயே இரு. இத்தனை வருஷம் நானும் தனியாவே ஒரு பேச்சுத் துணைக்குக் கூட ஆள் இல்லாம இருந்தேன். இப்ப நீ வந்தது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? ரெண்டு பேரும் சேந்து கொஞ்ச நேரம் டிவி பாக்கலாம். கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம். அப்புறம்.. இந்த பரமபதம் விளையாட்டு எல்லாம் உனக்குத் தெரியுமா மீனா?”
அவருடைய முகம் அப்படியே மகிழ்ச்சியில் பிரகாசமாக ஜொலித்தது. சின்னக் குழந்தை போல் ஆகி விட்டிருந்தார். இப்படியே ஏதாவது ஒரு காரணம் கூறி அவளை அவருடனே வைத்திருந்தார்.
மாலையில் அனைவரும் சேர்ந்து கடைக்குச் சென்று அவளுக்காக புடவை வாங்கினர். அவர்களே சேர்ந்து புடவையைத் தேர்வு செய்தனர்.
மீனாவிடம் கேட்டதற்கு பிடித்திருக்கிறது என்று தலையசைத்து வைத்தாள்.
இப்படியே அடுத்த நாளும் பரபரப்புடன் நகர்ந்தது. கல்பனா வருவதற்கு இன்னும் இரண்டே நாட்கள் தான் இருந்தன. அதற்குள் எப்படியாவது, அந்த ஷெல்ஃபை ஆராய்ந்து விட வேண்டும் என்று துடித்தது அவள் மனம்.
அடுத்த நாள் மாலை நேரம், மாலதி வெளியே செல்வது போல் தயாராகி இருந்தார்.
“நான் கோவிலுக்குப் போயிட்டு வர்றேன் மீனா. உன்னையும் கூட்டிட்டுப் போகத்தான் நினைச்சேன். ஆனா ரிசப்ஷன் முடியட்டும். எல்லாருக்கும் எங்க மருமகன்னு உன்னை அறிமுகப் படுத்திட்டு அதுக்கு அப்புறமா தான் உன்னை எங்கேயும் கூட்டிட்டுப் போகணும்னு நினைச்சுட்டேன்”
‘அப்ப்பாடா! ரொம்ப நல்லது’ மனதிற்குள் நினைத்தாள் மீனா.
“நீ வீட்டைப் பூட்டிக்கோ. உன் மாமா கிட்டேயும் சபரி கிட்டேயும் சாவி இருக்கு. அவங்களாவே வந்துருவாங்க”
அவர் கிளம்பிச் சென்றவுடன் அவசரமாக வீட்டைப் பூட்டிக் கொண்டு அறைக்குள் வேக வேகமாக நுழைந்தாள்.
ஞாபகமாக கதவைத் தாழிட்டாள். எப்போது வேண்டுமானாலும் சபரி வந்து விடலாமே என்கிற பதட்டமும் தொற்றிக் கொண்டது அவளுக்கு.
வேக வேகமாக அந்த ஷெல்ஃபில் இருந்த புத்தகங்கள் ஒவ்வொன்றாக எடுத்து ஆராயத் தொடங்கினாள்.
பெரும்பாலானவை ஆங்கில புத்தகங்களாகவே இருந்தன. அதுவும் எல்லாமே நேர்மறையான மோட்டிவேஷன் சம்பந்தப்பட்ட புத்தகங்களாக இருந்தன.
‘பரவாயில்லையே! புத்தகம் படிக்கிற பழக்கம் எல்லாம் இருக்கா இவருக்கு? அதுவும் நல்ல நல்ல புத்தகங்களா வச்சிருக்காரே!’
மிகவும் வியப்பாக இருந்தது மீனாவுக்கு.
‘இவருக்குள்ளே நல்ல குணங்கள் நிறையவே இருக்கு. ஆனா எதுக்காக என் கிட்ட மட்டும் இப்படி நடந்துக்கணும்? ச்சே.. எதுவுமே கிடைக்க மாட்டேங்குதே! ஏதாவது ஒரு க்ளூ கிடைச்சாலும் போதுமே! அதை வச்சு கண்டுபிடிக்க ட்ரை பண்ணலாமே!’
மேல் அடுக்கு முழுவதும் முடிந்து அடுத்த அடுக்கும் முடிந்தது. மூன்றாவது அடுக்கில் வரிசையாக பார்த்துக் கொண்டே வந்தாள். அதில் ஒரு புத்தகம் மட்டும், நடுவில் வெளியே தெரியாத அளவுக்கு உள் கூடி தள்ளி வைத்தது போல் இருக்கவும், முதலில் அதை எடுத்தாள் வெளியே.
பார்த்தால் அது புத்தகம் அல்ல. ஒரு டைரி. உடனே மனம் முழுவதும் படபடக்க, கண்டிப்பாக அதில் ஏதாவது தனக்குத் தேவையானது கிடைக்க வேண்டுமே என்று கடவுளை மனதில் நினைத்தபடி பிரித்தாள் அதை.
பிரித்தவுடன் முதல் பக்கத்தைப் பார்த்ததும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டாள். அவளுடைய கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
ஆம்.. அதில் இருந்ததுஅவளுடைய உயிருக்கு உயிரான தோழி ஷோபனாவின் புகைப்படம்.
“ஷோ..ஷோ.. ஷோபனா..!”
அவளால் நிற்கக்கூட முடியவில்லை. இடிந்து போய் அப்படியே அங்கேயே தலையைக் கவிழ்த்துக் கொண்டு உட்கார்ந்து விட்டாள்.
கண்ணீர் ஆறாய் பெரூக்கெடுத்தது வழிந்து கொண்டிருந்தது அவளுடைய கண்களில்.
‘இ.. இங்கே ஷோபனா ஃபோட்டோ எ.. எப்படி வந்துச்சு? ஷோபனா.. டி ஷோபி..’
அப்போது தடதடவென கதவு தட்டும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக பலமாகியது.
அவசரமாகக் கண்களை அழுந்தத் துடைத்துச் சமாளித்துக் கொண்டு, கையில் இருந்த டைரியை, தான் எடுத்த இடத்தில் அதே போல் வைத்து விட்டு நெஞ்சம் படபடக்க வேகமாகச் சென்று கதவைத் திறந்தாள்.
கோபத்துடன் உள்ளே நுழைந்தான் சபரி.
“மேடம் கதவு தாப்பா போட்டுகிட்டு என்ன பண்றீங்க இந்த நேரத்தில?”
“இ.. இல்ல, பாத்ரூம் போயிருந்தேன்”
“ஏன் கதவு சும்மா சாத்தினா பத்தாது? எதுக்கு தாப்பா போடணும்?”
“அது.. அது.. பாத்ரூம் போயிட்டு வந்து புடவை மாத்திக்கலாம்னு தாப்பா போட்டேன்”
தன்னுடைய அதிர்ச்சியை கணவனிடம் காட்டாமல் இருக்க, மிகவுமே பிரயத்தனப்பட வேண்டியதாக இருந்தது அவளுக்கு.
ஷோபனாவைப் பார்த்த அதிர்ச்சியில் இருந்து இன்னமுமே வெளியே வரவில்லை அவள்.
நல்லவேளையாக அதற்கு மேல் எதுவும் பேசாமல் உடை மாற்றிக் கொள்ளச் சென்று விட்டான் சபரி.
அதன் பிறகு மாமியார் வந்த போதும் சரி, இரவு உணவு தயார் செய்த நேரத்திலும் சரி, வேலைகளை முடித்துக் கொண்டு தூங்க வரும் வரைக்கும் ஒரு நிலையில் இல்லை அவள்.
ஒரு இயந்திரம் போல் இயங்கி விட்டு, பேருக்குச் சாப்பிட்டு முடித்து அறைக்கு வந்ததும் தூங்கத் தயாரானாள்.
சபரி தான் அவளுடைய வித்தியாசமான நடவடிக்கைகளைக் கண்டு அவளையே ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
ஆனால் அதைக் கூட கவனிக்கும் நிலையில் இல்லை பெண்ணவள்.
‘இவ என்ன எப்பவும் போல இல்லையே? நார்மலா இருக்கிற மாதிரி தோணலையே!’ கேள்விக்குறியுடன் அவளைப் பார்த்தான்.
“என்ன, மேடம் இன்னைக்கு நடந்துக்குறது எல்லாம் கொஞ்சம் கூட சரியில்லையே! ரொம்ப வித்தியாசமா இருக்கே! என்ன விஷயம்?”
சந்தேகப் பார்வையுடன் கேட்டான் அவளை.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நிகழ்வின் நாயகி நாயகனை தவிர மற்ற அனைவரும் உற்சாகமும் மகிழ்வுமாக ஏற்பாடுகளை செய்கின்றனர்.
நாயகன் நாயகிக்கு நாடகம் போல் தானே அந்த நிகழ்வில் கலந்து கொள்வதும்.
மீனாவே இப்பொழுது தான் தெளிந்து சபரியின் நடவடிக்கைக்கான காரணத்தை அறிய முயலுகிறாள். அதற்கும் தடை விதிப்பதை போல அவள் மாமியார் பேச்சுதுணைக்கு உடன் அமர்த்திக்கொண்டாரே.
மீனாவின் தோழி சோபனாவினது புகைப்படம் சபரியிடம் எப்படி வந்தது?
மூக்கு வேர்த்தை போல் சரியாக வந்து விட்டான் சபரி.
மிக்க நன்றி சிஸ் 😊
பிளாஷ்பேக் பக்கத்துல வந்துட்டோம்னு நினைக்கிறேன் .. சொல்லுப்பா சபரி
Thank you 😊
என்னன்னு தெரியலையே
Thank you 😊