Loading

அத்தியாயம் -2

மீனா கூறியது அனைவருக்கும் மனதின் ஓரத்தில் ஒரு சிறு நம்பிக்கை தர, கடவுளை வேண்டியபடி நடந்தனர்.

சற்றுத் தள்ளி இருந்தது மணமகன் அறை. முன்னால் நின்று எட்டிப் பார்த்தான் நவீன்.

அங்கு மாப்பிள்ளை ஆகாஷின் அம்மா மேனகா, கட்டிலின் ஒரு புறத்தில் தலை கவிழ்ந்து அழுது கொண்டிருந்தார்.

அவரருகே, இடிந்து போன நிலையில் முகமெல்லாம் பொலிவிழந்து, சோர்வுடன் அழாத குறையாக அமர்ந்து இருந்தார் ஆகாஷின் தந்தை மாணிக்கம்.

“என்னங்க, ஆகாஷ் இப்படி ஒரு குண்டை நம்ம தலையில தூக்கிப் போட்டு போயிட்டானேங்க. இப்ப என்னங்க பண்றது நாம? பொண்ணு வீட்டுக் காரங்களுக்கு நாம என்னத்தங்க பதில் சொல்றது? இப்படி ஒரு நிலையில நம்மளத் தவிக்க விட்டுப் போயிட்டானே! நமக்கு இப்படி ஒரு அவமானத்தைத் தேடிக் குடுத்தாட்டானே!”

கணவரிடம் வாய் விட்டு அழுது அரற்றிக் கொண்டிருந்தார் மேனகா.

“ஒத்தப் புள்ளன்னு அவன் சொல்றத எல்லாம் கேட்டோம்ல. நம்ம வீட்டு ராஜான்னு அவனைத் தலையில தூக்கி வச்சு கொண்டாடினோம்ல. அவன் புத்திய மொத்தமா காட்டிட்டுப் போயிட்டான். என்ன பண்ணச் சொல்றே? அழுதா மட்டும் ஓடிப் போனவன் வந்துரப் போறானா என்ன?”

தன் துயரத்தை ஆதங்கமாக வெளியிட்டுக் கொண்டு இருந்தார் அவர்.

அறையின் வெளியே நின்றிருக்கும் தன்னை அப்போதைக்கு அவர்கள் கவனித்து, அவனை உள்ளே அழைப்பார்கள் என்று தோன்றவில்லை அவனுக்கு.

“மாமா” வெளியில் இருந்தவாறு அழைத்தான் நவீன்.

திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தனர் இருவரும். அங்கு மீனாவின் குடும்பமே அறைக்குள் நுழைவதைக் கண்டு, திகைத்து, செய்வதறியாது, வந்தவர்களை எதிர்கொள்ளும் துணிவு இல்லாமல் தலை குனிந்து நின்றனர்.

சுந்தரமும் ரேணுகாவும் பேசுவதற்குத் தயங்கி நின்றிருக்க, அவர்களிடம் பேசுவதற்குத் தைரியமாக முன் வந்து நின்றாள் மீனா.

“மாமா.. அத்தே.. நான் கேள்விப் பட்டது உண்மையா மாமா? ஆகாஷ் மண்டபத்தை விட்டு ஓடிப் போயிட்டாரா மாமா?”

வாய்க்கு வாய் மாமா என்று அழைத்து நிற்கும் மீனாவைப் பார்த்து, இனி அவள் தங்கள் மருமகள் அல்ல என்கிற நிதர்சனம் மனதைச் சுட, அவளைத் தவிப்புடனும் ஒருவித ஏக்கத்துடனும் பார்த்தார் மாணிக்கம்.

அவளுக்குப் பதில் கூறுவதற்கு சங்கடமாக இருந்தது அவருக்கு. குற்ற உணர்வு மனதை அரித்தது. தன் மகனால் இந்த அப்பாவிப் பெண்ணின் திருமணம் கேள்விக்குறியாகி நிற்கிறதே இப்போது! அவரால் எப்படி அவளின் முகம் பார்த்துப் பேச முடியும்? ஆனால் பேசித்தானே ஆக வேண்டும். உண்மையை சொல்ல வேண்டுமே! மறைக்க முடியாது அல்லவா!

வேறு வழியின்றி, எதிரில் நிற்கும் அந்த அழகிய அன்பான தேவதையை, தனக்கு மருமகளாக வர இருந்தவளை, ஒருவித கையாலாகத்தனத்துடன் பார்த்தார்.

“அம்மா மீனா, எங்களை மன்னிச்சிடும்மா. எங்க பையன் இப்படி ஒரு காரியத்தைச் செய்வான்னு நாங்க கொஞ்சம் கூட எதிர்பாக்கலேம்மா. சொல்றதுக்கே மனசு கஷ்டமா இருக்கும்மா. இந்தக் கல்யாணம் நடக்காதும்மா”

திகைப்புடன் அவரைப் பார்த்தாள் மீனா.

“ஏன் மாமா, அவர் ஃபிரண்ட்ஸ் கூட ஏதாவது அவசரமா வாங்கணும்னு கடைக்கு கிடைக்கு போயிருக்கலாம் இல்லையா மாமா? ஓடிப் போயிட்டார்னு எப்படி மாமா சொல்றீங்க நீங்க?”

கைகள் நடுங்க அவள் முன் கடிதம் ஒன்றை எடுத்து நீட்டினார் மாணிக்கம்.

“இந்தாம்மா, அந்த படுபாவிப் பய எழுதி வேற வச்சுட்டுப் போயிருக்கான்மா. இந்தா படி”

அதிர்ச்சி கலந்த முக பாவத்துடன் அவர் நீட்டிய கடிதத்தைக் கையில் வாங்கிக் கொண்டாள் மீனா.

மனதில் இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருந்த நேரத்தில், அவர் கடிதம் எடுத்து நீட்டியவுடன், மொத்த நம்பிக்கையும் குலைந்து போனவளாய், கடிதத்தைப் பிரித்தாள்.

இப்போது பயத்திலும் அதிர்ச்சியிலும் அவளுக்கும் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது.

அதிலிருந்த வாசகங்களை மனதிற்குள்ளேயே படிக்க ஆரம்பித்தாள்.

‘அன்புள்ள மீனுவுக்கு, நான் உன்னை இப்ப அப்படிச் சொல்லலாமான்னு தெரியல எனக்கு. ஆனா அப்படிச் சொல்றதால தப்பு எதுவும் இல்லேன்னு எனக்குத் தோணுச்சு. அதனால தான் சொல்றேன்.

ஏன்னா, நிஜமாவே நீ ரொம்ப அன்பானவ தானே. என் கிட்ட மட்டும் இல்ல எல்லார் கிட்டேயும் நீ அன்பு மட்டுமே தானே காட்டுவே. ஆனா எனக்குத் தான் அந்த அன்புக்கு அருகதை இல்ல.

ஆமா மீனு, நான் போறேன். என்னை விட நல்ல மாப்பிள்ளை உனக்கு கிடைப்பாரு மீனு. உன்னை மாதிரியே அன்பு மட்டுமே காட்டத் தெரிஞ்சவரு வருவாரு மீனு கண்டிப்பா. நீ அவனைக் கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கணும். அது தான் என் ஆசை.

அப்படின்னா எதுக்கு இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன்னு நீ கேக்கலாம். கண்டிப்பா கேப்பே. உன்னைக் கல்யாணம் பண்றதுக்கு நான் சம்மதம்னு சொல்றப்ப உண்மையா தான் ஒத்துகுட்டேன் மீனு. அந்த நேரத்தில, இப்படி கல்யாணத்துக்கு நாள் எல்லாம் குறிச்சு கல்யாணத்து அன்னைக்கு மண்டபத்தில இருந்து ஓடிப் போவேன்னு சத்தியமா நானும் நினைக்கல.

ஆமா மீனு, நான் இந்த முடிவை எடுத்தது நேத்து தான். இப்படி ஒரு முடிவு எடுக்குறதுக்குக் காரணம் என்னன்னு சொல்றேன் கேளு. அதைக் கேட்டா உனக்கு அதிர்ச்சியா தான் இருக்கும்.

என்னை மன்னிச்சிடு மீனா.
எனக்கு உன்னை மீனுன்னு சொல்லிக் கூப்பிடக் கூட தகுதி இல்லேன்னு நினைக்கிறேன். அதனால மீனான்னே சொல்றேன்.

ரெண்டு வருஷம் முன்னாடி நான் ஒரு பொண்ணைக் காதலிச்சேன். அவ பேர் ஆஷிகா. ரெண்டு பேரும் உயிருக்கு உயிரா காதலிச்சோம்.

எங்க காதல் நல்லபடியா தான் போயிட்டு இருந்துச்சு. ஆனா அந்த சந்தோஷம் எங்களுக்கு நிலைக்கல. ஒரு நாள் அவ, அவளோட அப்பா, அம்மா, தங்கச்சின்னு எல்லாரும் சேந்து குடும்பத்தோட ஒரு கல்யாணத்துக்காக அவங்க கார்ல திருச்சிக்குப் போறப்ப கார் ஆக்சிடென்ட் ஆயிடுச்சு.

அங்கே இருந்த பள்ளத்தில உருண்டு விழுந்து கார் தீப்பிடிச்சுருச்சு. அதில எல்லாருமே இறந்துட்டாங்க, யாருமே உயிர் தப்பலேன்னு நியூஸ் வந்தது.

நான் அப்படியே இடிஞ்சு போயிட்டேன். அதில இருந்து வெளியே வர்றதுக்கே ஒரு வருஷம் ஆச்சு எனக்கு. அதுக்கு அப்புறம் தான் கொஞ்சம் கொஞ்சமா அவளை மறந்து பழைய நிலைமைக்கு வந்தேன்.

அப்புறம் அம்மாவும் அப்பாவும் சும்மா வற்புறுத்தினதால தான் உன்னைப் பொண்ணு பாக்க வர்றதுக்கே சம்மதிச்சேன்.

அவங்களுக்காகத் தான் மொதோ உன்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லி கல்யாணத்துக்கும் ஒத்துகிட்டேன். ஆனா உன் கூடப் பழக ஆரம்பிச்சப்புறம், உண்மையிலேயே நான் உன்னை விரும்ப ஆரம்பிச்சுட்டேன்.

சந்தோஷமா தான் கல்யாணத்துக்குத் தயாரானேன். உன் கூட வாழப்போற வாழ்க்கைய நினைச்சுக் கனவெல்லாம் கண்டுட்டு இருந்தேன்.

ஆனா பாத்தா, ரெண்டு நாள் முன்னாடி திடீர்னு ஆஷிகா வந்து நின்னா என் எதுக்க. அப்படியே ஷாக்காயிட்டேன் நான். என் மனசிலே நீ இல்ல, மீனா மட்டும் தான் இருக்கான்னு நான் அவ கிட்ட எவ்வளவோ சொன்னேன்.

ஆனா அவ என்னை மிரட்ட ஆரம்பிச்சுட்டா. நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கல்லேன்னா செத்துப் போயிடுவேன்னு சொல்லி பயமுறுத்தினா. அழுதா. புலம்பினா.

அதுக்கும் நான் மொதோ ஒத்துக்கல தான். கடைசியில நேத்து நைட், உன் கிட்ட பேசி முடிச்சதுக்கு அப்புறமா என் ஃபோனைப் பாத்தா, அதில அவளோட வீடியோ ஒன்னு வந்திருந்தது.

கையில தூக்க மாத்திரை வச்சிருந்தா. நாளைக்குக் காலையில நீங்க வரலேன்னா, இப்ப கையில இருக்கிற இந்தத் தூக்க மாத்திரை என் தொண்டைக்குள்ளே போயிடும் அப்படின்னு சொல்லி வீடியோ எடுத்து அனுப்பி இருந்தா.

நான் பயந்துட்டேன் மீனா. நிஜமாவே அவ அப்படி செஞ்சுட்டா, என்னால உன்னைக் கல்யாணம் பண்ணிட்டு உன் கூட கூட சந்தோஷமா வாழ முடியாதுன்னு தோணுச்சு. அந்த நிலைமையில என்னால இந்த முடிவு எடுக்கிறதைத் தவிர வேற வழி இல்லேன்னு தோணுச்சு. அது தான் கிளம்பிட்டேன்.

தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடு மீனா. எல்லாருமே என்னை மன்னிச்சிடுங்க’

இத்துடன் முடிவடைந்து இருந்தது அந்தக் கடிதம்.

படித்து முடித்து விட்டு, எந்த ஒரு சலனமும் இல்லாமல் கடிதத்தை மடித்து அவரிடமே கொடுத்தாள் மீனா.

ஆனால் மற்ற அனைவராலும் அவளைப் போல் இருக்க முடியவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர்.

“வாங்கப்பா போகலாம்” தன் குடும்பத்தினரைப் பார்த்துக் கூறினாள்.

மகளின் குரலைக் கேட்ட பிறகு தான் தன்னிலைக்கு வந்தனர் அவளுடைய தாய் தந்தையும், அண்ணனும் அண்ணியும்.

“இதென்ன அநியாயமா இருக்கு? மீனா, இரும்மா நீ. இவங்க கிட்ட நியாயம் கேக்காம இங்கே இருந்து போகப் போறதில்ல. அப்பா வாங்கப்பா கேக்கலாம்”

கோபத்தில் வெகுண்டான் நவீன்.

“இவங்க கிட்ட கேட்டு என்னப்பா ஆகப் போகுது. அவ்வளவு தான் வா” மகனை அழைத்தார் மாணிக்கம்.

மீனாவோ அங்கிருந்து வெளியே நடக்க ஆரம்பித்து இருந்தாள்.

அதற்குள் அறைக்கு வெளியே மண்டபத்தில் சூழ்ந்திருந்த உற்றார் உறவினர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.

“ஏங்க, இங்கே கல்யாணம் நடக்கப் போகுதா இல்லையா? இங்கே அவ்வளவு பேரும் கல்யாணத்தை வேடிக்கை பாக்குறதுக்கு உக்காந்து இருக்கோம். நீங்க என்னன்னா உங்களுக்குள்ளேயே இங்கிட்டும் அங்கிட்டும் போயிட்டும் வந்துட்டும் குசுகுசுன்னு பேசிட்டும் இருக்கீங்க. என்னய்யா நடக்குது இங்கே? நாங்க எல்லாரும் இருக்கவா போகவா?”

பெரியவர் ஒருவர் சத்தமாகக் கேட்டார்.

உடனே மாணிக்கம் ஓடி வந்து மேடையில் ஏறினார். அனைவரையும் பார்த்துக் கைகளைக் கூப்பினார்.

“எல்லாரும் எங்களை மன்னிச்சிடுங்க. என் பையன் எங்களை ஏமாத்திட்டு மண்டபத்தை விட்டுப் போயிட்டான். இந்தக் கல்யாணம் நடக்காது. எங்களை நம்பி வந்த பொண்ணு கிட்டேயும் பொண்ணு வீட்டுக்காரங்க கிட்டேயும் நான் கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டுக்குறேன்”

கூறியவர், சாஷ்டாங்கமாக விழுந்து விட்டார் கைகளைக் கூப்பி வணங்கியபடி.

அவரைப் பார்க்கப் பாவமாக இருந்தாலும் யாரும் அவரைத் தடுக்கவும் இல்லை. தூக்கி விடவும் இல்லை.

யார் யாரைப் பார்த்து பரிதாபப் பட முடியும் என்பது போல் தான் இருந்தனர் மீனாவின் குடும்பத்தினர்.

ஏனெனில் இதில் பாதிப்பு எல்லாமே அவர்களுக்குத் தானே.

ஒரு ஓரமாக நின்றவாறு கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார் மீனாவின் தந்தை சுந்தரம்.

“இனிமே என் பொண்ணுக்கு எப்படி கல்யாணம் பண்ணுவேன் நான்? எங்கே போயி மாப்பிள்ளை தேடுவேன்?”

அதற்கு மேல் அங்கு நிற்கப் பிடிக்காமல் தன் தந்தையிடம் வந்தாள் மீனா.

“இங்கே இருந்து வெளியே போகலாம் வாங்கப்பா ப்ளீஸ்!”

‌தன் தந்தையிடம் கெஞ்சி அழைத்தாள்.

அவரும் குடும்பத்தை அழைத்துக் கொண்டு நகர முற்பட்டார்.

அப்போது ஒரு இளைஞன் சுந்தரத்திடம் ஓடி வந்தான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments

  1. ஆகாஷ் வந்துட்டானா? தெரியலையே அடுத்த என்ன ஆகப் போகுது 😳

  2. கதையின் தலைப்பை போல நடப்பவையும் கூட விசித்திரமாக உள்ளது. கல்யாணத்திற்கு ஒரு நாள் முன்னர் முன்னாள் காதலியின் வருகை, அவளது தற்கொலை மிரட்டல் என்று ஆகாஷ் வெளியேறி விட்டான்.
    அது உண்மையோ? பொய்யோ? 🤔
    அன்பே உருவானவளாக சொல்லபடும் மீனாவின் நடவடிக்கைகள் மிகவும் நிதானமாக உள்ளதே!
    இனி என்ன நடக்குமோ?
    பொருத்திருந்து பார்ப்போம்.