Loading

அத்தியாயம் -16

கணவனுடைய வெறுப்பு படர்ந்த முகத்தைப் பார்த்த மீனா, தன்னிடம் மட்டும் இவன் கெட்டவனாக இருக்கும் காரணத்தை எப்படியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாள்.

‘இனியும் இத இப்படியே சும்மா விடக்கூடாது. என்ன ஏதுன்னு ஒன்னுமே தெரியாம இவன் கிட்ட நான் இப்படி எல்லாம் டார்ச்சர் அனுபவிக்கணும்னு எனக்கு என்ன தலையெழுத்தா?

இவனும் தானா சொல்லப்போறது கிடையாது. அதனால இவன் கிட்ட இனிமே காரணத்தச் சொல்லு சொல்லுன்னு கெஞ்சிட்டு இருக்கிறத விட்டுட்டு, நானா எப்படியாவது அதக் கண்டுபிடிக்க முயற்சி செய்யணும். அப்ப தான் என்னால வேற ஏதாவது இதுக்கு செய்ய முடியுமா என்றதே தெரியும்! காலம் முழுக்க இவன் கூட, இந்த முகத்தப் பாத்துட்டு இப்படியே இருக்க முடியுமா? என்ன பண்ணலாம்? எப்படி கண்டுபிடிக்கலாம்?’

சிந்தித்துக் கொண்டே இருந்ததில் வீடு வந்து சேர்ந்திருந்தது.

இருவரும் உள்ளே நுழையும் போதே மாலதி அவர்களை எதிர்கொண்டார்.

“என்ன, கோயில்ல கூட்டம் ரொம்ப இருந்ததாடா சபரி?”

“ஆமாம்மா, ஓரளவு இருந்துச்சு எப்பவும் போல”

தன் மாமியாரிடம் விபூதி, குங்குமத்தை எடுத்து நீட்டினாள் மீனா. அர்ச்சனை செய்த பிரசாதத்தையும் அவர் கையில் கொடுத்தாள்.

“இந்த அம்மன் ரொம்ப பிரசித்தம்மா மீனா. நாங்க எப்பவுமே இந்தக் கோயிலுக்குத் தான் போவோம். எந்த வேலையா இருந்தாலும் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி இங்கே போயி அம்பாள் கிட்ட வேண்டிட்டுத் தான் செய்வோம். இந்த அம்மன் கிட்ட நம்ம கோரிக்கைய வச்சோம்னா, நாம நினைச்சது பலிக்கும்னு சொல்வாங்க”

மருமகளிடம் கூறினார் மாலதி. அமைதியாகக் கேட்டுக் கொண்டு நின்றாள் மீனா.

“அப்புறம்டா சபரி!” உள்ளே செல்லும் மகனைத் தடுத்து நிறுத்தினார்.

“என்னம்மா?”

“மீனா வீட்டில இருந்து அவளோட அண்ணனும் அண்ணியும் வந்துருந்தாங்க”

“ஓ! என்னவாம்மா?”

மீனாவின் முகத்தில் ஆர்வமும் மகிழ்ச்சியும் எட்டிப் பார்த்தது.

“உங்க ரெண்டு பேரையும் விருந்துக்குக் கூப்பிடத் தான் வந்தாங்க”

“விருந்தா.. எதுக்கும்மா அதெல்லாம்?” சிறிது எரிச்சலுடன் கேட்டான் சபரி.

“இதென்னடா கேள்வி? இது எல்லாம் நம்ம வழக்கத்தில இருக்கிறது தானே சபரி? அதுக்கு ஏன் இவ்வளவு சலிச்சுக்குறே நீ?”

“திரும்ப அங்கே வேற போகணுமா?”

“இல்லேல்ல.. நான் நாளைக்கு அனுப்புறதா சொல்லிட்டேன். இன்னைக்கு இங்கேயே இருக்கட்டும்னு. அவங்களும், நாளைக்கு சனிக்கிழமை இல்லையா? அதனால நாளைக்கு வந்து ஒரு நாள் அங்கேயே தங்கிட்டு நாளைக்கழிச்சு திரும்பட்டுமேன்னு கேட்டாங்க. நானும் சரின்னு சொல்லிட்டேன்”

“என்னம்மா இது.. ஏம்மா?”

“என்னடா இது, ஏன் எதுக்குன்னு எல்லாத்துக்கும் கேள்வி கேட்டுட்டு இருக்கே? அவங்க பாசமா கூப்பிட்றப்ப முடியாதுன்னு எப்படிடா நான் சொல்ல முடியும்? போயிட்டு வாங்க ரெண்டு பேரும். ஒரு நாள் இருந்துட்டுத் தான் வாயேண்டா மாமியார் வீட்ல. அவங்களுக்கும் அவங்க பொண்ணு மாப்பிள்ளைய வீட்ல வச்சுக் கவனிக்கணும்னு ஆசையா இருக்குமில்ல? இது எல்லாம் எல்லா வீடுகளிலேயும் நடக்கிறது தான். பேசாம நீயும் மீனாவும் போயிட்டு வாங்க”

சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டார் மாலதி.

“ஆமா, இவ கூட ஜோடி போட்டுட்டு போக வேண்டியது தான் எல்லா இடத்துக்கும்” மெல்ல முணுமுணுத்தவாறு நடந்தான் சபரி. ‌

மீனாவுக்கோ மனம் முழுதும் சந்தோஷம் நிறைந்து கொண்டது. தன் குடும்பத்தினரைப் பார்க்கப் போகிறோம், அம்மாவின் கையால் சாப்பிடப் போகிறோம் என்கிற ஒரு துள்ளலுடன், முகம் நிறைய சிரிப்புடன் உள்ளே சென்றாள்.

ஆனால் அங்கு சென்றும், தன் கணவன், தன் திருவிளையாடலை நடத்தப் போகிறான் என்று சற்றும் அறிந்திருக்கவில்லை பெண்ணவள்.

மறுநாள் சனிக்கிழமை. மாமனார் வீட்டிற்குச் செல்வதற்கு, சலிப்புடனும் எரிச்சலுடனும் சபரி ஒரு புறம் தயாராகிக் கொண்டிருக்க, அதே அறையின் மற்றொரு புறம், தன் பிறந்த வீட்டிற்குப் போகப் போகிறோம் என்று பரபரப்புடனும் குதூகலத்துடனும் தயாராகிக் கொண்டு இருந்தாள் மீனா.

அவளுடைய சந்தோஷத்தையும் முகத்தில் இருந்த பரவசத்தையும் கண்டு, மனதில் கொந்தளித்துக் கொண்டிருந்தான் சபரி.

‘அவ்வளவு சந்தோஷமாடி உனக்கு? உன் அம்மா வீட்டுக்குப் போறோம் என்ற ஆனந்தமா? இருடி உன்னை, அங்கே போயி வச்சுக்கிறேன்’ மனதில் கறுவிக் கொண்டான்.

மீனாவோ அவன் பக்கம் திரும்பக் கூட செய்யாமல், எந்தப் புடவையை உடுத்தலாம் என்கிற ஆராய்ச்சியில் இருந்தாள்.

‘இவ என்ன லூசா? கொஞ்ச நேரத்துக்கு ஒரு தடவை எப்படி எப்படி எல்லாம் இவள வச்சு செய்றேன் நான்! ஆனா இவளுக்கு அந்தப் பயம் கொஞ்சமாவது மனசிலே இருக்கா? என்னமோ ரொம்ப தான் ஹாயா இருக்கா!

ஒருவேளை இவ அம்மா வீட்டிலேன்னா, நான் எதுவும் செய்ய மாட்டேன்னு நினைச்சாளோ? இருடி.. எவ்வளவுக்கு எவ்வளவு இப்ப நீ சிரிச்சிட்டே போறியோ அவ்வளவுக்கு அவ்வளவு அழ வைக்கிறேன் உன்னை. நொந்து போயி நீ வீடு திரும்பணும். அம்மா வீடா.. இனிமே வேண்டவே வேண்டாம், போகவே மாட்டேன்னு கதறணும்டி நீ!’

மனைவியின் மலர்ந்த முகத்தை வன்மத்துடன் பார்த்துக் கொண்டே இருந்தான் அந்த விஷமி.

இவை எவையும் அறியாது, பீரோவில் இருந்து தனக்குப் பிடித்த பட்டுப் புடவை ஒன்றைத் தேர்வு செய்து, அதை உடுத்தி வர உள்ளே இருந்த அறைக்குள் சென்றாள் அந்த அப்பாவிப் பெண்.

சிறிது நேரத்தில் வெளியே வந்தாள். ஆகாயத்தில் இருந்து இறங்கி நேராக பூலோகத்திற்கு வந்த தேவதை போல் பார்ப்பதற்கு கொள்ளை அழகுடன் வந்தவளைச் சட்டென்று தலையைத் தூக்கிப் பார்த்த சபரி, கண் இமைக்க மறந்து போனான் சிறிது நேரம்.

தான் அவளை வெறுக்கிறோம், அவள் தனக்குப் பிடிக்காத மனைவி என்பதையே சிறிது நேரம் மறந்து போய் விட்டான். அவளிடத்தில் இருந்து கண்களை விலக்க முடியவில்லை அவனால்.

மீனாவோ, தாலி கட்டியதில் இருந்து இதுவரை தன்னை ஏறெடுத்துக் கூடப் பார்க்காத தன் கணவன், திடீரெனத் தன்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நிற்கிறான் என்றோ, தன் அழகை மெய் மறந்து ரசித்துக் கொண்டு இருக்கிறான் என்பதையோ கூட கவனிக்காமல், தன் அழகைக் கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டு இருந்தாள்.

மயில் கழுத்து நிறத்தில் பட்டுப் புடவையும் அதற்கேற்றவாறு எளிமையாக கழுத்துக்கும் கைக்கும் நகைகள் அணிந்து, காதுக்கு ஜிமிக்கி மாட்டி, நெற்றியில் அதே நிற பொட்டு வைத்து, கண்ணாடியில் தன்னைப் பார்க்க மிகவும் திருப்தியாக இருந்தது அவளுக்கு.

கடைசியாக கண்ணுக்கு மை போட்டுக் கொண்டு அவள் திரும்பியவுடன், சட்டெனத் தன்னிலைக்கு வந்தான் சபரி.

அவளிடம் இருந்து விலக்க முடியாத தன் கண்களை வலுக்கட்டாயமாக விலக்கிக் கொண்டான். மனம் படபடவென அடித்துக் கொண்டது அவனுக்கு.

‘இவ இவ்வளவு அழகா என்ன? சட்டுன்னு பார்த்தவுடனே கொஞ்சம் மயங்கிட்டேனே! இது கொஞ்சம் கூட சரியில்லையே! டேய் சபரி, இது உனக்கு கொஞ்சம் கூட நல்லதே இல்ல பாத்துக்கோ. இனிமே இப்படி அவள வச்ச கண்ணு வாங்காம பாக்குறது, அவளைப் பாத்து ஜொள்ளு விட்றது, இந்த வேலையெல்லாம் வச்சுக்காத. நீ ஒன்னும் அவ கூட வாழறதுக்காக தாலி கட்டல அவளுக்கு. அவளைப் பழி வாங்கத் தான் இங்கே வச்சிருக்கே அவள. மனசில நல்லா ஏத்திக்கோ இத. புரிஞ்சுதா?’

தனக்குத் தானே சொல்லிக் கொண்டு, தலையை உலுக்கிக் கொண்டான். அலை பாய்ந்த தன் மனதை அணை போட்டுத் தடுத்து நிறுத்திக் கொண்டான்.

அதற்குள் தயாராகி வந்தாள் மீனா.

“நான் ரெடி, கிளம்பலாம்” அவனுடைய முகத்தைப் பார்க்காமல் அவள் கூறினாலும், அந்தக் குரலில் இருந்த உற்சாகம் தந்த எரிச்சலில், கடுகடுவென ஆகியது அவன் முகம்.

அவனுடைய பதிலுக்குக் கூட காத்திருக்காமல், அறையின் வாசலுக்குச் சென்றிருந்தாள். வேறு வழியின்றி அவனும் அவளிடம் எதுவும் பேச விரும்பாமல் புறப்பட்டான். இருவரும் அறையை விட்டு வெளியே வந்தனர்.

மாலதியிடமும் சீனிவாசனிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினர்.

“ரெண்டு பேரோட ஜோடிப் பொருத்தம் பிரமாதமா இருக்கு! இல்லையாங்க?”

கணவரிடம் சந்தோஷத்திடம் கேட்டார் மாலதி. அதற்கு ஆமோதிப்பாய் தலையை மட்டும் ஆட்டினார் சீனிவாசன்.

இது சபரியின் காதிலும் விழுந்தது. தன்னருகே நடந்து வந்து கொண்டிருந்த மீனாவைப் பார்த்தான்.

‘அம்மா சொல்றது சரிதான்’ நினைக்காமல் இருக்க முடியவில்லை அவனால். ஆனால் மீனா தான் இதை எதையும் காதில் வாங்காமல், தன் வீட்டு நினைப்பில் சென்று கொண்டிருந்தாள்.

முதல் நாள், இவளோட ஜோடி போட்டுப் போயிட்டே இருக்கணுமா என்று சலித்துக் கொண்ட சபரிக்கு, அன்று என்னவோ மீனாவுடன் அவளருகில் ஜோடியாக நடக்கப் பிடித்து இருந்தது.

‘அழகான தேவதை போன்ற ஒரு பெண்ணுடன் நடந்து போவது எந்த ஒரு ஆணுக்கும் கசக்குமா என்ன? அதுதான் எனக்கும் அப்படி இருக்கு’

இப்படி நினைத்துத் தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டான். ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் அவனுடைய மற்றொரு முகம் எட்டிப் பார்த்தது அவனுக்குள்.

‘என்ன இது? நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்? போயும் போயும் இவள, இந்தத் துரோகியப் போயி ரசிக்கிறேனே! இவ எத்தனை அழகா இருந்தா தான் என்ன? எனக்கு அது தேவையே இல்ல. என்னை அது ஒன்னும் பண்ணாது!

பழி வாங்கத் தானே நான் இவளக் கல்யாணமே பண்ணேன். இவளோட அழகை ஆராதிக்கவோ ரசிக்கவோ இல்ல. இவ பாட்டுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கா! நானும் முட்டாளாட்டம் இவள ரசிச்சுட்டு இருக்கேன். அந்த சந்தோஷம் இருக்கலாமா இவ கிட்ட? கூடாது.. கூடவே கூடாது! ஏதாவது செய்யணும். அவ முகத்தில இருக்கிற இந்த சந்தோஷத்த அழிக்கணும்!’

சிறிது நேரம் மறைந்து இருந்த அந்த குரூரமும் வஞ்சகமும் மீண்டும் குடி கொண்டன அவன் முகத்திலும் மனத்திலும்.

அரைமணி நேரப் பயணத்தில் சென்று சேர்ந்தனர் அங்கு. காரை நிறுத்தி விட்டு சபரி இறங்கி வெளியே வருவதற்குள் காரை விட்டு வேகமாக இறங்கினாள் மீனா.

இவர்களுக்காகவே காத்திருந்தது மீனாவின் குடும்பம். வெளியே கார் நிற்கும் சத்தம் கேட்டவுடன் வெளியே வந்தான் மீனாவின் அண்ணன் நவீன்.

“வாங்க மாப்பிள்ள, வாம்மா மீனா”

என்ன தான், முன்னால் தங்கை நின்றிருந்தாலும், முதல் வரவேற்பு இப்போது வந்த புது மாப்பிள்ளைக்குத் தான். பொதுவான நியதி தானே அது!

பெண்களும் அதற்கு பெருமை கொள்ளத்தான் செய்கின்றனர். தாய் வீட்டில், தன் கணவனுக்குத் தான் முதல் வரவேற்பு தர வேண்டும் என்பது தான் அவர்களின் விருப்பமாகவும் இருக்கிறது. ஆனால் மீனாவால் அப்படி நினைக்க முடியுமா?

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
11
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

8 Comments

  1. வில்லன் என்ன செய்ய காத்திருக்கானோ …சபரி நீ பழிவாங்கு ப்பா … ஆனா காரணம் சொல்லிட்டு பழிவாங்கு ப்பா …

    1. Author

      மிக்க நன்றிகள் சிஸ் 😊

  2. மனதுக்குள் சந்தோஷம் இருந்தாலும் அவன் முன் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது. இந்த மீனா என்னவென்றால் அவன் முன்பு குதூகலமாக தயார் ஆகின்றாள்.

    ஏற்கனவே வெறுப்பில் இருப்பவன் இப்போது எழும் கடுப்பில் இன்னும் என்ன என்ன செய்ய காத்திருக்கின்றானோ.

    துரோகம் செய்தவள், பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் தூர ஓடி போய் ரசனையில் வந்து நின்று விட்டதே.

    திருமணம் ஆன பிறகு அம்மாவின் வீடு என்பது விருந்தினர் வீடு போல் தானே பெண்களுக்கு.

    1. Author

      ரொம்ப சரியா சொன்னீங்க சிஸ். உங்கள் ஆர்வமிக்க விமர்சனத்திற்கு மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் 😊

  3. நடிகர் திலகம் அவரின் வீட்டில் மட்டும் தான் மிரட்டுவாரா இல்லை இல்லை அவள் வீட்டிலும் கூடத்தான் மிரட்ட போகிறார்.

    அப்படி என்ன தான் செய்ய போறார் பார்ப்போம்.

    மீனா, என்ன இருந்தாலும் முதல் மரியாதை உன் மாப்பிள்ளைக்கு தான். இதில் கூட போட்டி பொறாமை வேண்டாமே…

    1. அடுத்த பிரச்சினையை கிளப்ப போறானா?

    2. Author

      மிக்க நன்றி சிஸ் 😊 மிக்க நன்றி சிஸ் 😊